பேராசிரியர் சுந்தர சண்முகனார் 1965இல் எழுதி வெளியிட்ட ‘தமிழ் அகராதிக்கலை’ எனும் நூல் 2014இல் சந்தியா பதிப்பகத்தின் வழி வெளியிடப்பெற்றுள்ளது. அந்நூலின் விவரம் வருமாறு :

  • 2014 : சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை, புதிய எண்.77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600 083, விலை ரூ.

இந்நூல் 1965 முதல் இன்றுவரைத் தமிழ் அகராதிக்கலை வரலாற்றின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. இது, தமிழ் அகராதிக்கலை வரலாறு, முதல் நிகண்டு – சேந்தன் திவாகரம், பிற நிகண்டுகள், தமிழ் அகராதிகள், சொல்லும் மொழியும் எனும் ஐந்து பாகங்களையும் நிகண்டு நூல்களின் அட்டவணை, நிகண்டுகளின் அகரவரிசை, அகராதிகளின் அகரவரிசை, மேற்கோள் நூல்கள் ஆகிய பிற்சேர்க்கைகளையும் கொண்டமைகிறது.

தற்காலத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்பெறும் ஆய்வுரைகள் எத்தகு தன்மைகளில் அமைகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. சுந்தர சண்முகனார் புதுவைக் கல்விக் கழகத்தில் ஆற்றிய உரையே ‘தமிழ் அகராதிக்கலை’ எனும் நூலாக விரிந்துள்ளது. அது குறித்த கருத்து வருமாறு :

புதுச்சேரி பிரெஞ்சு இந்தியக் கலைக்கழகத்தின் (Institute Francais D’ Indologie) முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் புதுவைக் கல்விக் கழகத்தின் சிறப்புத் தலைவருமாகிய ‘மொழியாக்கச் செல்வர்’ உயர்திரு ரா.தேசிகப்பிள்ளை, பி.ஏ., பி.எல். அவர்கள், 1961ஆம் ஆண்டு ஒருநாள் என்னிடம் வந்து, கல்விக் கழகத்தில் ‘நிகண்டு நூல்கள்’ என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்ற வேண்டும் எனக் கூறினார்கள். பேசுவதாக இசைவு தந்தேன் நான். சொற்பொழிவிற்குப் போதுமான அளவு ஒரு திங்கள் பொழுது இருந்தது.

‘நிகண்டு நூல்கள்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றுவதற்கு வேண்டிய குறிப்புகளைத் திரட்டத் தொடங்கிய நான், செய்யுள் வடிவில் சொற்கட்குப் பொருள்கூறும் நிகண்டு நூல்களோடு நின்றுவிடாமல், சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அகரவரிசையில் அடுக்கிப் பொருள்கூறும் இக்கால அகராதிகளிலும் கூடக் கண் செலுத்தினேன்…………….. சொற்பொழிவிற்காகத் திரட்டிய குறிப்புகள் மலையாக வளர்ந்துவிட்டன. கூட்டத்தில் இரண்டரை மணிநேரம் தொடர்ந்து பேசியும் பத்தில் ஒரு பங்கும் தீர்ந்த பாடில்லை. எனவே, பாடுபட்டுத் தேடிய குறிப்புகளைப் பாழாக்கக்கூடாது என்று கருதி இந்நூல் வடிவத்தில் எழுதியமைத்து விட்டேன் (பக்.7-9).

இப்பதிவு இந்நூல் உருவாக்கத்தின் வரலாற்றைப் புலப்படுத்துகிறது. சொற்பொழிவிற்காகப் பெருமுயற்சி எடுத்துத் தரவுகளைத் திரட்டி நூலை உருவாக்கியிருக்கும் சுந்தர சண்முகனாரின் புலமைத்திறம் போற்றத்தக்கதாகும்.

அகராதிக்கலை என்பதற்கு விளக்கம் கூறும் சுந்தர சண்முகனார் 15 வகையான அகராதித் தன்மைகள் இருப்பதை இந்நூலில் பட்டியலிட்டுள்ளார் (பக்.17-18). தொல்காப்பிய உரியியல் தொடங்கி நிகண்டு நூல்களென விரிந்து அகராதிகளாக உருவாகியிருக்கும் இத்தன்மை தமிழின் தொன்மைச் சிறப்பிற்குச் சான்று பகர்வதாகும் என்பதை நூல் முழுதும் வலியுறுத்துகிறார்.

அகராதியியலின் வரலாறு பற்றிக் கூறும் சுந்தர சண்முகனார், சிதம்பர இரேவண சித்தர் என்பவரால் 1594ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற ‘அகராதி நிகண்டு’ என்பதே உலகின் முதல் அகராதி என்று கூறுகிறார்.

அகராதி நிகண்டு தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி மட்டுமன்று; இதுவரைக்கும் தெரிந்துள்ள ஆராய்ச்சி முடிவின்படி, உலகத்தின் முதல் அகராதியும் இதுவேதான். தொல்காப்பியமே போல, இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன் அசிரிய மக்கள் சொற்பொருள் கூறும் துறைநூல் இயற்றினரெனினும், மேலைநாட்டில் முதன்முதலாக அகர வரிசையில் அகராதி நூல் தோன்றியது பதினேழாம் நூற்றாண்டில்தான். அஃதாவது, 1612ஆம் ஆண்டில் இத்தாலி மொழியில் முதல்முதலாக அகரவரிசையில் அகராதி தோன்றியது. இந்த இத்தாலி அகராதிக்குப் பதினெட்டாண்டுகட்கு முன்பே – 1594 (நூலில் 1595 என்று அச்சுப்பிழையாக உள்ளது.) ஆம் ஆண்டிலேயே     தமிழில் அகராதி நிகண்டு தோன்றிவிட்டதன்றோ? எனவேதான் அகராதி நிகண்டு உலக முதல் அகராதி என இங்கே சிறப்பித்து எழுதப்பட்டது (ப.33).

அகரவரிசைக்கு முக்கியத்துவம் அளித்து அகராதிக்கலையைத் தொடங்கி வைத்தவர்களே தமிழர்கள்தான் என்பதைச் சான்றுடன் எடுத்துரைக்கும் இத்திறம் போற்றத்தக்கதாகும்.

இருப்பினும் அகராதி நிகண்டு முதலிய நிகண்டு நூல்கள் அனைத்தும் செய்யுள் நடையில் இருந்ததால் படிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் அரிதாக மாறியிருந்திருக்கிறது. இந்நிலையில்தான் மேல்நாட்டாரின் அகராதிக்கலை தமிழகத்தில் செல்வாக்குப்பெற்று வளர்ந்திருக்கின்றது. இதனால், தமிழரின் அகராதிக்கலை அறிவு மறைக்கப்பெற்றிருக்கிறது. மேல்நாட்டாரின் அகராதிக்கலைப் பதிவுகள் தமிழ் நிகண்டுகளை வெளியில் தெரியவிடாது மறைத்தாலும் பிற்கால அகராதி வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளது. மேல்நாட்டாரின் அகராதிகளிலிருந்து தமிழுக்குக் கிடைத்த நன்மைகளாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் சுந்தர சண்முகனார்.

  1. நிகண்டு என்னும் பெயரில் செய்யுள் நடையில் இருந்த அகராதித்துறை, எல்லோரும் எளிதில் படித்துணருமாறு தனித்தனிச் சொல்நடையில் வந்தது.
  2. சொற்களின் முதல் எழுத்து – இரண்டாவது எழுத்து வரைக்கு மட்டுமே இதற்குமுன் அகரவரிசை கவனிக்கப்பட்டது. வெள்ளையர் வந்தபின் இறுதி எழுத்து வரைக்கும் அகரவரிசை பின்பற்றப்பட்டது.
  3. பழைய நிகண்டுகளில் அருஞ்சொற்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால், வெள்ளையர்கள் புதிதாகத் தமிழ் கற்றுக்கொண்டதனால் அவர்கட்கு அருஞ்சொற்கள் இவை – எளிய சொற்கள் இவை என்ற பாகுபாடே தெரியாமற் போயிற்று. எனவே, அவர்கள் அருஞ்சொற்கள் – எளிய சொற்கள் ஆகிய எல்லாச் சொற்களையும் தொகுத்துத் தமிழ்ச் சொல்வளத்தை முழு உருவத்தில் காட்டினர்.
  4. கிறித்துவம் பரப்புவதற்காக அவர்கள் கல்லாத எளிய மக்களோடும் பழகியதால் அம்மக்கள் வாயிலாக அறிந்து கொண்ட எளிய பேச்சு வழக்குச் சொற்களையும் சேர்த்து அகராதிகளின் வடிவத்தை முழுமைப்படுத்தினர்.
  5. வினைச்சொற்களின் வேர்ச்சொற்களைத் தனி அடையாளமிட்டுக்காட்டி, அவ்வேர்ச் சொற்களிலிருந்து மற்ற வினையுருவங்கள் தோன்றுமாற்றை எடுத்துக்காட்டியுள்ளனர்.
  6. தமிழ்ச் சொற்களுக்கு நேரான இலத்தீன் – போர்ச்சுகீசியம் – பிரெஞ்சு, ஆங்கிலம் – ஆகிய மொழிச்சொற்களை அறிந்துகொள்ள வாய்ப்பு ஈந்தனர் (ப.37)

காலனி ஆதிக்கத்தால் தமிழ் அகராதியியலுக்கு நன்மையே நிகழ்ந்துள்ளது என்பதனை இக்கருத்துகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

இந்த வகையில் தொல்காப்பிய உரிச்சொல், நிகண்டுகள், அகராதிகள் என்று வளர்ந்த தமிழ் அகராதிக்கலை நாளடைவில் தனிநூல் அகராதி, தனித்துறையகராதி, கலைச்சொல் அகராதி, கலைக்களஞ்சியம், ஒப்பியல் மொழியகராதி, பழமொழியகராதி, புலவர் அகராதி, தொகையகராதி, தொடையகராதி, சொல்லடைவு என்று பல்வேறு அகராதிகளாக வளர்ச்சியடைந்துள்ளது.

அகராதியியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முதல் இயலில் பதிவுசெய்த சுந்தர சண்முகனார் தொடர்ந்து நிகண்டுகள், அகராதிகளின் வரலாற்றை விளக்குகிறார். முதல் நிகண்டான ஆதிதிவாகரம் என்பதும் சேந்தன் திவாகரம் என்பதும் ஒன்றே என்றும் ஒன்றல்ல வெவ்வேறானவை என்றும் முரண்பாட்டுடன் இருந்த கருத்து வேறுபாடுகளைப் பதிவுசெய்து, அவற்றை விளக்கி வெவ்வேறு என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கும் (ப.61) திறம் குறிப்பிடத்தக்கதாகும்.

சேந்தன் திவாகரம் பற்றி அதன் உட்பிரிவுகளோடு விளக்கமாக எழுதும் சுந்தர சண்முகனார் பிற நிகண்டுகளைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறார். இவ்வகையில் நிகண்டுகள், நிகண்டுத் தன்மையுடைய நூல்கள் என 38 நூல்களைத் தொகுத்தளித்து அவற்றின் வரலாறுகளையும் சுருக்கமாக விளக்குகிறார். நன்னூல் எனும் இலக்கணநூலின் இடையியல் பகுதியை ஒரு நிகண்டாகக் கருதுகிறார். மேலும், இவை தவிர்ந்து திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டுகளுக்கும் சூடாமணி நிகண்டிற்கும் இடையில் குறைந்தது,

இரண்டு மூன்று நூற்றாண்டு காலமோ – அல்லது நான்கைந்து நூற்றாண்டு காலமோ – அல்லது ஏழெட்டு நூற்றாண்டு காலமோ – அஃதாவது ஒருசில நூற்றாண்டு காலமாயினும் இடைவெளியிருந்திருக்க வேண்டும் (பக்.160-161).

இந்த இடைவெளியில் சில நிகண்டுகள் தோன்றி மறைந்திருக்க வாய்ப்புண்டு. இக்கருத்தையும் சுந்தர சண்முகனார் சான்றுடன் தெளிவுபடுத்துகிறார்.

தொல்காப்பியச் சொல்லதிகார உரியியலின் இறுதியிலுள்ள “அன்ன பிறவும் கிளந்த  அல்ல” (தொல்.சொல்.391) என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் இளம்பூரணர் தம் உரையில்,

இருமை பெருமையும் கருமையும் செய்யும்

தொன்று என்கிளவி தொழிற்பயில்வு ஆகும்

எனும் இரண்டு பாக்களை எடுத்தாண்டுள்ளார். ஆனால், இவை எந்த நூலிலிருந்து எடுக்கப்பெற்றவை என்பதை அறிய இயலவில்லை. இந்நிலையில்,

இவையிரண்டும், ஏதோ ஒரு நிகண்டின் – அல்லது – எவையோ இரண்டு நிகண்டுகளின் ஒரு சொல் பல்பொருள் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்” (ப.161)

என்று பதிவு செய்கிறார். இதுமட்டுமின்றி யாப்பருங்கல விருத்தியுரையில் “குறள்சிந் தின்னிசை” எனும் நூற்பா உரையில் காணலாகும்,

நேர் என்பது மாறாதற்கண்ணும், ஒத்தற்கண்ணும், தனிமைக்கண்ணும், மிகுதிக்கண்ணும், நுட்பத்தின்கண்ணும், சமனாதற்கண்ணும், உடம்படுதற்கண்ணும், பாதிக்கண்ணும், தலைப்பாட்டின்கண்ணும், நிலைப்பாட்டின்கண்ணும், கொடைக்கண்ணும் நிகழும்”

என்பதை எடுத்திக்காட்டி,

இந்தப் பதினொருபொருளும் ஏதேனும் ஒரு நிகண்டிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்” (ப.162)

என்கிறார். இக்கருத்துகளை மறுக்க இயலவில்லை. இவை, இவரின் புலமைத்திறத்தைப் பறைசாற்றுகின்றன.

நிகண்டுப் பகுதிகள் நிறைவு பெற்றவுடன் அகராதிப் பகுதிகளை விளக்குகிறார் சுந்தர சண்முகனார். அகராதிகளை நூற்றாண்டு வாரியாகத் தெளிவுபடுத்துகிறார். பதினேழாம் நூற்றாண்டு அகராதிகள் (4), பதினெட்டாம் நூற்றாண்டு அகராதிகள் (11), பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதிகள் (41), 20ஆம் நூற்றாண்டு அகராதிகள் (146) என்ற காலவரிசை மட்டுமின்றி இலக்கியப் பதிப்புகளின் அகராதிகள் (2) என்ற தன்மையையும் சேர்த்து மொத்தம் 204 அகராதிகளின் வரலாற்றையும் அவை தரும் செய்திகளையும் விளக்குகிறார். இவ் அகராதிகள் அனைத்தையும் அகரவரிசைப்படிப் பிற்சேர்க்கையிலும் அளித்துள்ளார்.

இவ் அகராதிகள் தமிழ் – பிறமொழி, பிறமொழி – தமிழ், தமிழ் – தமிழ் என்ற தன்மைகளில் அமைகின்றன. ஒரு அறிஞர் வெளியிட்ட பல்வேறு அகராதிகள் இருப்பின் அவையும் இப்பகுதியில் விளக்கப்பெற்றுள்ளன. சில முதன்மையான அகராதிகளுக்கு மிகுதியான அளவில் விளக்கமும் அளிக்கப்பெற்றுள்ளன. சதுரகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேராகராதி (Tamil Lexicon) ஆகியவற்றை இதற்குச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.

முற்கால அகராதிகளான நிகண்டுகள், அகராதிகள் ஆகியவற்றின் வரலாற்றைக் கூறும் இவ் அரிய நூல் சொல், சொல்லின் பொருள் ஆகியன தோன்றிய தன்மைகளையும் விளக்குகிறது இந்நூல். தொடர்நிலையாகப் பேசிய பின்னரே சொல் உருவாகியிருக்க வேண்டும் என்பதும் இந்நூலில் தெளிவுபடுத்தப் பெற்றுள்ளது.

மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள் எனும் நூலை முதன்மையாகக் கொண்டு இன்று உரைகள், உரையாசிரியர்கள் தொடர்பான பல்வேறு நூல்கள் தோன்றிவிட்டன. வி.செல்வநாயகம் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு எனும் நூலை முதன்மையாகக் கொண்டு உரைநடை வரலாறு தொடர்பான பல்வேறு நூல்களும் எழுதப்பெற்றுவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாகச் சுந்தர சண்முகனாரே எழுதிய தொகுப்புக் கலை எனும் நூலை முதன்மையாகக் கொண்ட தொகை இயல் போன்ற நூல்களும் பல்வேறு கட்டுரைகளும் தோன்றியிருக்கின்றன. ஆனால், அகராதிக்கலை தொடர்பாகச் சுந்தர சண்முகனாரின் இந்நூலைத் தவிர குறிப்பிடத்தக்க வேறு எந்த நூலும் கட்டுரையும் இதுவரை உருவாகவில்லை. அத்தகைய கருத்துச் செறிவும் புலமைச்சிறப்பும் மிக்க நூலாக இந்நூல் திகழ்கிறது.

இத்தகைய சிறப்புவாய்ந்த இந்நூலைப் பதிப்பித்திருக்கும் சந்தியா பதிப்பகத்தார் பாராட்டிற்குரியவர்கள். இருப்பினும் மெய்ப்புத் திருத்தத்தில் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. மிகுதியான அச்சுப்பிழைகள் காணுப்பெறுகின்றன; அவை பொருள் மயக்கத்தைத் தோற்றுவிக்கும் அளவிற்கும் உள்ளன. இரேவண சித்தர் அகராதி நிகண்டை 1594இல் எழுதி வெளியிட்டார். இது 32ஆம் பக்கத்தில் காணப்பெறுகிறது. ஆனால், 33ஆம் பக்கத்தில் 1595 என்று காணப்பெறுகிறது. அதன் அருகில் இருக்கும், ‘1612 இக்கு(ப்)…… பதினெட்டாண்டுகட்கு முன்பே’ எனும் குறிப்பைக் கொண்டே 1595 என்பது அச்சுப்பிழை என்று கண்டறியப்பெற்றது. இதுபோன்று பல இடங்களில் கருத்துப்பிழையை உருவாக்கும் அச்சுப்பிழைகள் காணப்பெறுகின்றன. இத்தவறுகள் நீக்கப்பெறும் தறுவாயில் இந்நூலுக்கு மேலும் சிறப்புகள் சேரும். இந்நூல்போல் சுந்தர சண்முகனாரின் தொகுப்புக்கலையும் மறுபதிப்புச் செய்யப்பெற வேண்டிய நூலாகும்.

தொகுப்புக்கலையை மறுபதிப்புச் செய்வதும் அகராதிக்கலை தொடர்பான பிற நூல்களை உருவாக்குவதும் சுந்தர சண்முகனாருக்கு நாம் செய்யும் பெருமதிப்பாக அமையும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

துணைநின்றவை

  • கோபாலையர் தி,வே., அரணமுறுவல் ந. (பதி.), தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (இளம்பூரணம்), தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை, 2003.
  • சுந்தர சண்முகனார், அகராதிக்கலை, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை, 2014

முனைவர் மா.பரமசிவன்,

தமிழ் – உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி),

சிவகாசி – 626 130.