சங்க இலக்கிய நூல்களில் அகவாழ்க்கையைப் பற்றி செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன. குறிப்பாக, தொகைநூல்களுள் ஐந்து நூல்கள் அகநூல்களாக அமைந்துள்ளன. தமிழர்களின் அகவாழ்வில் குடும்பத்தில் உள்ள உறவுநிலைகளையும் அதனால் ஏற்படும் உணர்வுநிலையையும் மகிழ்ச்சியையும் காணமுடிகிறது. இந்நிலையில், அகநானூற்றுப் பாடல்கள் காட்டும் தமிழரின் அகவாழ்க்கைச் சிறப்புகளை விளக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.       

குடும்பம்

ஒரு சமூக அமைப்பின் அடிப்படை குடும்பம் ஆகும். குடும்பம் என்பது உறவுநிலை, திருமணம், சட்டப்பிணைப்பு இவற்றில் தொடர்பு கொள்ளும் குழுவினரைக் கொண்ட சமூக அங்கீகாரம் பெற்ற ஓர் காகும் என்று ஆண்டர்சன் பார்க்கர் குறிப்பிடுகிறார்.

சங்ககாலச் சமூகத்தில் குடும்பம் சீரும் சிறப்புற்றும் விளங்கியதை அகநானூறு இயம்புகின்றது. தந்தை குடும்பத்திற்குத் தலைமை தாங்கியவராகவும் இருந்ததையும் தாய் வழிநடத்தியதையும், குடும்ப அமைப்பில் தாய், தந்தையர் குழந்தை வளர்ப்பதில் செலுத்தும் அக்கறையையும்

யாயே கண்ணினும் கடுங்காத லோளே

                        எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப

                        எவனில குறுமகள் இயங்குதி                      (அகம்.12:1-3)

எனும் கபிலரின் பாடலடிகள்  காட்டுகின்றன. மேலும்,

யாய்

                        ஓம்பினள் எடுத்த தடமென் தோளே (அகம்.18:17-18)

என்ற அடி தாய் தன் குழந்தையைப் பேணி வளர்த்தமையைப் புலப்படுத்துகின்றது. குடும்பம் என்பது பெரும்பாலும் கணவன், மனைவி அவர்களுடைய குழந்தைகள் என்ற உறவில் தான் எண்ணப்படுகிறது. ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக இணைகிறபொழுது தோன்றும் குடும்பத்தை மணவாழ்க்கைக் குடும்பம் எனலாம் என்று வாழ்வியற்களஞ்சியம் குறிப்பிடுகின்றது.

தெய்வக் கற்புடன் குடிக்கு விளக்கமாகிய மகனைப் பெற்றுப் புகழ்மிக்க சிறப்பும் நலமும் வாய்க்கப்பெற்று நன்கு குடும்பம் நடத்தும் தலைவியை,

கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய

                        புதல்வன் பயந்த புகழ்மிகு சிறப்பின்

                        நன்னீ ராட்டி …                                (அகம்.184:1.3)

எனும் அடிகள்வழியாக மருதன் இளநாகனார் எடுத்துக்காட்டுகின்றார்.

எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்

                        புதுவது புனைந்த திறத்தினும்

                        வதுவை நாளினும் இனியனால் எமக்கே (அகம்.352:15-17)

எனும் அடிகள் தலைவன் தலைவியர் அன்பு மிகுந்த மகிழ்வாக இல்லறம் வாழ்க்கை அமையப் போவதை எண்ணி மகிழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன.

திருமணம்

ஆண் பெண் இணைந்து வாழும் இயல்பினைக் கொண்ட ஒரு குழுவைக் குடும்பம் என்பர். இக்குடும்ப அமைப்பிற்கு ஆண் பெண் இணைவாழ்க்கை அடிப்படையாக அமைகின்றது. திருமணம் என்பது பாலினத் திருப்திக்கு அப்பாற்பட்ட ஒரு ஈடு இணையற்ற குடும்ப வாழ்க்கையைக் குறிப்பதாகும் என்று இராபர்ட் ஹெச்.லூயி குறிப்பிடுகிறார்.   திருமணம் என்பது ஏறக்குறைய ஒர் ஆண் ஒரு பெண் பல ஆண்கள் அல்லது பல பெண்களுக்கிடையே ஏற்படும் ஒரு நிலையான அமைக்கப்படும் இது உயிர்ப்பிறப்புக் கடமை அல்லது இனப்பெருக்கம் மற்றும் சமூகத் தேவைகளின் நிறைவுக்காக ஏற்பட்டதாகும் என்று சர்மா குறிப்பிடுவதனை, கே.பி.அழகம்மை தமது ‘சமூக நோக்கில் சங்க மகளிர்’ எனும் நூலில் எடுத்தாண்டுள்ளார்.

சமூக ஊடாட்டத்தில் மனிதர்களிடம் பொய் கூறலும், பிழைபட நடத்தலும் தோன்றிய பின்னர், சான்றோர்கள் கூடித் திருமணம் நடத்தினர் என்பர். தொல்காப்பியர் இதனை,

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                        ஐயர் யாத்தனர் கரணம் என்ப        (தொல்.கற்பு.4)

என வெளிப்படுத்துகிறார். சங்க இலக்கியக் காலத் திருமணம் பத்து வகைகளாக நிகழ்ந்ததாகச் சசிவல்லி குறிப்பிடுகிறார். அவை, 1. உடன்போக்கு மணம் 2. களவுமணம் 3. மடலேறுதல் 4. தொன்றியல் மரபின் மன்றல் 5. பரிசங்கொடுத்து மணத்தல் 6. சேவை மணம் 7. ஏறுதழுவி மணமுடித்தல் 8. சேவை மணம் 9. துணங்கையாடி மணத்தல் 10. பலதார மணம் என்பனவாகும். (சசிவல்லி, தமிழர் திருமணம், ப.54)

சுரம்பல கடந்தோர்க் கிரங்குப என்னார்

                        கேளவை மேவல ராகி இவ்வூர்

                        நிரையப் பெண்டிர் இன்னா கூறுப

                        புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ

                        நம்முணர்ந் தாறிய கொள்கை

                        அன்னை முன்னர்யாம் எண்ணிதற் படலே           (அகம்.95:10-15)

எனும் பாடலடிகள் இற்செறிப்பு, உடல்மாற்றம், பெண்களின் பழிச்சொற்கள், அன்னை தெய்வத்தை வழிபடல் போன்ற காரணங்களால் களவு மணத்தைத் தொடர்ந்து ஒழுகல் இயலாது என்று கருதிய தலைவி உடன்போக்கிற்கு உடன்பட்டதைக் காட்டுகின்றன. இதன்மூலம் வேறு ஓர் ஆண்மகனை மணம் முடித்து வாழ விரும்பாத பெண், தன்னால் விரும்பப்பட்ட ஆணோடு வாழ்வதற்குச் சுற்றத்தார் அறியாமல் இல்லத்தை விட்டு நீங்குவர் எனும் சமூகச் சூழல் இருந்ததை ஒரோடகத்துக் கந்தரத்தனார் பாடலடிகளில் அறியமுடிகின்றது.

குழந்தைப்பேறு

குடும்பம் குழந்தைகளைச் சமூகப்படுத்துகிறது. பெற்றோர்கள் தம் நடத்தைக் கோலங்களைச் செம்மைப்படுத்திக் கொண்டு, அதன்மூலம் குழந்தைகளுக்குத் தம்மை முன் மாதிரியாக அமைத்துக் கொள்ளுகின்றனர். குழந்தைகள் அவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தமது நடத்தைக் கோலங்களையும் அமைத்துக்கொள்ளுகின்றனர். வயது வந்ததும் அவர்கள் கணவர் (அல்லது மனைவியாக), தந்தையராகப் (அல்லது தாயர்களாக) பங்காற்ற இப்பயிற்சி கைகொடுக்கிறது (வாழ்வியற் களஞ்சியம். தொகுதி -ஏழு, ப.595)

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்

                        தாதின் அல்லி அயலிதழ் புரையும்

                        மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்

                        நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்

                        யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை  (அகம்.16:1-5)

எனும் பாடலடிகளில் சாகலாசனார் தாமரை மலரின் இதழைப் போன்ற உள்ளங்கையையும் பவளச் செவ்வாயையும் உடைய நாவால் பயின்று பேசப்படாத கேட்பார் விரும்பும் பொற்றொடி அணிந்த புதல்வன் எனத் தலைவி கூறுமிடத்துக் குழந்தையின் சிறப்பு வெளிப்படுகிறது.

ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலை      (அகம்.5:22)

புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே            (அகம்.54:22)

உவருணப் பறைந்த ஊன்றலைச் சிறாஅரொடு (அகம்.387:4)

எனும் அடிகள் குடும்பத்தில் குழந்தை இருந்தமையையும், தாய் தன் குழந்தையைப் பாதுகாத்து வளர்த்ததையும் இயம்புகின்றன.

இம்மை யுலகத் திசையொடும் விளங்கி

                        மறுமை யுலகமும் மறுவின் றெய்துப

                        செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சி

                        கிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்

                        பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

                        வாயா யாகுதல் வாய்த்தனர்            (அகம்.66:1-6)

எனத் தலைவி, பகைவரும் விரும்பும் சிறந்த அழகுடைய பிள்ளைகளைப் பெற்ற தலைமைப் பண்புடையோர், இவ்வுலகத்தே இம்மையில் புகழுடன் விளங்கி, மறுமை உலகு வாழ்வையும் குற்றமின்றிப் பெறுவர் என்று பலர் கூறிய பழைய மொழிகள் எல்லாம் உண்மையாதலைக் கண்கூடாக அறிந்தோம் என்று தோழியிடம் கூறுகிறாள். இதன்மூலம் குழந்தைப்பேறு பெற்றவர்கள் மறுமை வாழ்வை அடைவர் எனும் கருத்துப் பண்டைய காலத்தில் நிலவியதை அறிய முடிகிறது.

ஈகை

சமூகத்தளத்தில் வறியோருக்குப் பொருள் கொடுத்தல் சிறந்த அறச்செயலாகக் கருதப்படுகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை வறியோருக்கு ஈதல் எனும் நற்செயல் நடைமுறையில் உள்ளது. ஈதல் எனும் தனிமனிதனின் நடத்தை பிறரால் தூண்டப்பட்டதை,

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்

                        கோளுற விளியார்பிறர் கொளளிந் தோரெனத்

                        தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்           (அகம்.61:1-3)

எனத் தலைவன் தன் நெஞ்சிடம் தலைவியினும் நமக்கு ஈதலே சிறந்தது என்று கூறுமிடத்து ஈதலால் வரும் புகழ்ச்சிறப்பு வெளிப்படுகிறது. அறநெறி தவறாமல் இல்வாழ்க்கை நடத்துவதற்கும். சுற்றத்தாரின் துன்பம் நீங்கிக் காக்கவும், வறுமையுற்றோருக்குப் பொருள்களை வழங்கி மகிழவும், நல்ல புகழை நிலைநாட்டவும் தலைவன் பொருள்தேடிச் சென்றுள்ளார். இரப்பவர்களுக்குக் கொடுக்காத பொருள் அழியும் என்பதை,

ஆர்வுற்று

                        இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்

                        பரந்து வெளிப்படா தாகி

                        வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே          (அகம்.276:12-15)

எனும் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் அடிகள் உணர்த்துகின்றன.

நட்பு

தம்மிடம் நட்புடையவர் செல்வம் சிதைந்து வறுமையுற்ற காலத்தும், அவ்வறுமை காரணமாக நல்லோர் நட்புத் தன்மையினின்றும் வேறுபட மாட்டார் என்பதை,

            நன்றல் காலையும் நட்பிற் கேடார் (அகம்.113:1)

எனும் பாடலடி குறிப்பிடுகிறது. இப்பாடல் நட்பு எனும் குழுநடத்தையில் புரிதல் எனும் ஒத்துணர்வு காணப்படுகிறது என்பதைக் காட்டுவதை,

உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பில்

                        செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்

                        தையல் நின்வயின் பிரியலம் யாமென      (அகம்.205:1-3)

எனும் அடிகள் தலைவன் தலைவியிடம், ‘உயிருடன் கலந்து பொருந்திய பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் நட்பினால், குற்றமற்ற நெஞ்சத்தால் கலந்தவர் போல உன்னைவிட்டுப் பிரியோம்’ எனக் கூறியதைக் காட்டுகின்றன. இதன்மூலம் தலைவன் தலைவியரின் அன்புகலந்த நடத்தையை நக்கீரர் தம் பாடலில் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

விழா

விழா என்பது சமூகத்தளத்தில் மக்கள் பொதுவானக் குறிக்கோளைக்கொண்டு நடத்தும் நிகழ்வாகும். விழாவில் குழு நடத்தைகள் வெளிப்படுகின்றன.

வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்

                        பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன (அகம்.187:7-8)

எனும் அடிகள் மழவர் பூந்தொடை விழாவினைப் பொலிவுடன் கொண்டாடியதைப் பகர்கின்றன. உறையூரில் பங்குனி உத்தரவிழா சிறந்து நடைபெற்றதை,

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்

                        வீஇலை அமன்ற மரப்பியல் இலும்பில்

                        தீயில் அடுப்பின் அரங்கம்   (அகம்.137:9-11)

என்ற அடிகள் உரைக்கின்றன.

கொங்கர்

                        மணியரை யாத்து மறுகின் ஆடும்

                        உள்ளி விழவின் அன்ன

                        அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே (அகம்.368:15-18)

எனும் அடிகள்வழி, கொங்கர் மணியினை இடையில் கட்டிக்கொண்டு ஆடும் உள்ளி விழாவினை அறியமுடிகிறது. விழாக்களில் குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே ஒற்றுமைத் தன்மைகள் இடம்பெறுகின்றன.

முடிவுரை

பழங்காலத் தமிழர்களின் சிறப்புகளைச் சங்கநூல்களின் மூலமாகத் தெள்ளத் தெளிவாகக் காணமுடிகிறது. சடங்குகளின் வழியாக நம்பிக்கை கொண்டு திருமணமுறை நடத்தும் பழக்கவழக்கங்கள் இருந்ததையும், களவு வாழ்க்கையில் மேற்கொள்ள வரைவுகடாதலும் இருந்ததையும், நன்னடத்தையை வளர்த்துக் கொள்ள தாயின் வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டுள்ளதையும், தாயின் வழியாக குடும்பம் இருந்ததையும், தந்தை தலைமையேற்றதையும், நட்பின் மேன்மையையும் வறியோருக்குப் பொருள் உதவிச்செய்வதை வலியுறுத்துவதையும் சங்கப் பாடல்கள் – அகநானூற்றுப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

துணைநூற்பட்டியல்

  • அழகம்மை கே.பி., 2002, சமூக நோக்கில் சங்க மகளிர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  • சசிவல்லி, 2009, தமிழர் திருமணம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  • கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2009, தொல்காப்பியம் – பொருளதிகாரம் –இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
  • வேங்கடசாமி நாட்டார் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை இரா.(உரை.), 1972(ம.ப.), அகநானூறு (மூன்று பகுதிகள்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • சிவசுப்பிரமணியம் மயிலம் வே.(உரை.), 2009, அகநானூறு, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
  • ……………, 1992, வாழ்வியற் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை.

சி. யுவராஜ்

முனைவர்பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன் உயராய்வு மையம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி -24.

palaicyuvan@gmail.com