முனைவர் மு.ஜெகதீசன் / Dr.M.Jegatheesan[1]

Abstract: Aingurunuru in Division of weaving is the Kiḻavaṟku uraitta pattu; is eight Songs in the titles Moll, Hero and Friend the three Speeches is one Concept. Punaladutal the Hero is Udal Moll, She Solace explained how to the Hero definitions by Friend. This Concealing Speech. Telling the Friend is Heroine of the Crazy in nature is Solace.  This Article is about to describe the fiction of these deftly songs.

Keywords:   Sangam Literature, Aingurunuru, Kiḻavaṟku uraitta pattu, Punaladutal, nature, சங்க அகப்பாடல், களவு, கற்பு, தனித்தன்மைகள், கற்பியல், தொல்காப்பியம், குறிஞ்சித்திணை, திணை, கிழவற்கு உரைத்த பத்து.

சங்க அகப்பாடல்களில் ஐந்திணைகளிலும் களவு கற்புத் தன்மைகள் பொதுவாக அமைந்தபோதிலும், திணைவாரியாக சிறப்பம்சம் பெற்றதும் உண்டு. களவு, கற்பு என்பது அனைத்துத் திணைகளிலும் பொதுத்தன்மையாக இருந்தபோதிலும் குறிஞ்சித்திணைப் பாடல்களில் களவுத் தன்மைகள் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. பாலைத்திணைப் பாடல்களில் உடன்போக்குத் தொடங்கிய களவு வாழ்வும், பொருள்வயிற் பிரிதலான கற்பு வாழ்வும் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. முல்லைத்திணைப் பாடல்களில் தலைவன் தலைவிக்கு உண்டான கற்பு வாழ்வில் வரவிற்காகக் காத்திருத்தல் மையமாக அமைந்துள்ளன. மருதத்திணைப் பாடல்களில் பரத்தை விரும்புதலில் தோன்றிய ஊடல் உணர்வுகளே மிகுதி. நெய்தல்திணைப் பாடல்களில் களவு, கற்பு ஆகிய இருதிறமும் இரங்கல் பின்புலத்தில் பாடப்பட்டுள்ளன. என்ற போதிலும் அதன் தனித்தன்மைகள் அலாதியானவை. இவ்விருதிறத் தன்மையை ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையில் ஒரு பத்தில் காணமுடிகிறது. அது கிழவற்கு உரைத்த பத்து. இப்பத்தில் இறுதி இரு பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை (129, 130). எஞ்சிய எட்டுப் பாடல்கள் இருநிலை வாசிப்புத் தன்மை பெற்றுள்ளன. இத்தகைய வாசிப்புக்கு வழிகோலுவது தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் கற்பியலில் தோழியின் செயல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

“அடங்கா ஒழுக்கத் தவன்வயின் அழிந்தோளை

அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்“ (தொல். பொருள். கற்.9)

என்றொரு கருத்தினைக் குறிப்பிடுகிறார். அடங்காத ஒழுக்கத்தை உடைய தலைவனின் செயல்களால் தலைவிக்குத் துன்பம் நேர்கையில், அவ்வொழுக்கத்தின் புரிதல் தவறானது என்று அடங்கக் காட்டி அதற்கு ஏதுவான பொருளைச் சுட்டுதல் தோழியின் பண்பு என்பதே இந்நூற்பா சுட்டுவது. ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையில் “கிழவற்கு உரைத்த பத்து“ என்ற தலைப்பிலமைந்த பாடல்களில் வரும் தலைவனின் செயல் அடங்காத ஒழுக்கத்தை உடையது. தலைவி அது கண்டு வருந்துகிறாள். புலக்கிறாள். இப்பாடல்களில் வரும் பரத்தையே இங்குத் தலைவியாக அமைகிறாள். காரணம் பரத்தையை விரும்பிச் சென்ற தலைவன் அவளோடு புனலாடச் செல்கிறான். அப்போது அவளை விடுத்து வேறு பெண்ணுடன் புனலாடுகிறான். அதுகண்டு அவள் தலைவன் மீது ஊடல் கொள்கிறாள். அவளைத் தேற்றும் விதமாகப் பொருளுரைக்கும் தோழியின் கூற்று பொருள்நுட்பம் வாய்ந்ததாகவும் ஊடலைத் தவிர்க்க முனைவதாகவும் அமைகிறது என்பதை நிறுவுவதாக இக்கட்டுரை அமைகிறது.

புனலாடுதல்

புனலாடுதல் என்பது சங்க மரபு. இது விளையாட்டும்கூட. மகளிர் மட்டும் ஆடும் விளையாட்டாகவும் உள்ளது. ஆண் பெண் இணைந்து ஆடும் விளையாட்டாகவும் உள்ளது. இறைவனுக்காகவும் புனலாடுதல் உண்டு. இவ்வாறு சங்கப்பாடல்களில் புனலாடுதல் பன்முகத்தன்மை பெற்றதாக அமைகிறது. அச்சமூக நிகழ்வும்கூட. களவுக்காலத்தில் தலைவி தன் தோழியுடன் புனலாடுகிறாள். அத்தகைய சூழல்களில் தலைவனைச் சந்திக்கிறாள். கற்பில் தலைவனும் தலைவியும் இணைந்து புனலாடுகின்றனர். இங்கே கற்பின் திறம் நிலைநிறுத்தப்படுகிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையுடன் புனலாடுகிறான். இதில் பரத்தை தலைவனைத் தன்பால் இறுத்தி வைத்துக் கொண்டுள்ளேன் என்பதை உணர்த்து வதாகவும் அமைகிறது. ஆயினும் தலைவன் பிற பெண்டிருடன் புனலாடுதலைத் தலைவியும் ஏற்றுக்கொள்ளவில்லை. பரத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தலைவனுடன் பிணக்கம் கொள்கின்றாள். பிணக்கம் என்பது ஊடலில் ஒருவகை. இத்தகைய செயல் கிழவற்கு உரைத்த பத்துப் பாடல்களில் பாடப்பட்டுள்ளன.

பாடல்களின் சூழல்

பரத்தை விரும்பிச் சென்ற தலைவன் அவளுடன் புனலாடுகிறான். பின்பு வேறொரு பெண்ணுடன் புனலாடுகிறான். இச்செயல் பரத்தைக்கு ஊடலைத் தோற்றுவிக்கிறது. அவனைக் கடிகிறாள். ஊடல் கொள்கிறாள். அவனிடம் ஊடலைப் புலப்படுத்துகிறாள். இதன் பின்புலத்தில் எட்டுப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஆயினும் அப்பாடல்களுக்காக அமைந்த கொளு,  “பரத்தை தலைமகற்குச் சொல்லியது. பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான் என்பது அறிந்து தலைவி புலந்துழி, இத்தவறு என் மாட்டு இல்லை. நீ இப்புலவியை நீக்க வேண்டும் என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவியை நீக்கக் கருதிய தோழி, அவள் இளமை கூறி, நகையாடிச் சொல்லியதூஉம் ஆம்” (கல்யாணசுந்தரையர், 1944 (மூ.ப.), ப. 57). என்றிவ்வாறு கூறுகிறது. இக்கொளுவில் மூவர் கூற்றுகள் உண்டு எனத் தெரிகிறது. பரத்தை தலைவனுக்குச் சொல்வதாக அமைந்த பரத்தை கூற்று என்பது ஒன்று. பரத்தை சொல்வது தவறு என்று தோழியிடம் கூறும் தலைவன் கூற்று மற்றொன்று. அதைக் கேட்ட தோழி பரத்தையிடம் கூறிய தோழி கூற்று மூன்று.

இத்தகைய கொளு அமைக்கப்பட்ட பாடல்கள் மூன்று அடிகளில்தான் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் அடி வரும் எட்டுப் பாடல்களின் தொடக்கமாக அமைந்த பொதுஅடியாகும். “கண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே” (ஐங்.121-128) என்பது அவ்வடி. இவ்வடி மூவர் கூற்றிற்கும் பொதுவான அடியாகும். எனினும் “கொண்க” என்பது நெய்தல் தலைவனைக் குறிப்பதாகக் கொள்ள முடிகிறது. “கேள்” என்பதற்குக் காதல் கேண்மையை உடையவள் என்பது பொருள். மூன்று கூற்றுகளுக்கும் பொதுவாக கேள் என்ற சொல் அமைந்தபோதிலும், ‘கொண்க’ என்பது தலைவனைக் குறித்ததாகையால் தலைவனிடம் உணர்த்தும் கூற்றாகிறது. கேள் என்பது பரத்தையைக் குறித்ததாகிறது. இவ்விடத்தில் பரத்தைதான் தலைவி என்றாகிறாள். பரத்தை தலைவனுக்குக் கூற்று நிகழ்த்துகிறாள். தலைவன் தோழியிடம் கூற்றுரைக்கிறான். தோழியும் தலைவன் சார்பாகப் பரத்தைக்குக் கூற்று நிகழ்த்துகிறாள்.

பாடல்களின் கருத்துநிலை

“கண்டிகும் அல்லமோ” என்பது தலைவனைக் கண்டாயா என்று தலைவன் செயலை உணர்த்தும் கூற்றாகத் தெரிகிறது. இவ்வடி உரிப்பொருள் உணர்த்திற்று. இதனைத் தொடர்ந்து எட்டுப் பாடல்களிலும் அடுத்த அடிகள் முதற்பொருளையும், கருப்பொருளையும் உரைக்கின்றன. இப்பொருள்கள் உரிப்பொருளின் பொருண்மையை இருநிலையில் உணர்த்துகின்றன. ஆசிரிய யாப்பில் இயைபுத் தொடையில் அமைந்த அப்பாடலடிகள் வருமாறு:

“முண்டகக் கோதை நனைய

தெண்திரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே”  (ஐங்.121)

“ஒள்இழை உயர்மணல் வீழ்ந்தென

வெள்ளாங் குருகை வினவு வோளே”  (ஐங்.122)

“ஒண்நுதல் ஆயம் ஆர்ப்ப,

தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே”      (ஐங்.123)

“வண்டற் பாவை வௌவலின்

நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே”            (ஐங்.124)

“தெண்திரை பாவை வௌவ

உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே”            (ஐங்.125)

“உண்கண் வண்டினம் மொய்ப்ப

தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே”            (ஐங்.126)

“தும்பை மாலை இளமுலை

நுண்புண் ஆகம் விலங்கு வோளே”                  (ஐங்.127)

“உறாஅ வறுமுலை மடாஅ

உண்ணாப் பாவையை ஊட்டு வோளே”            (ஐங்.128)

எனவரும் பாடலடிகளில், நின்றோளே (ஐங்.121, 125), பாய்வோளே (ஐங்.123), மூழ்குவோளே (ஐங்.126) ஆகிய சொற்கள் தலைவன் பெண்ணுடன் புனலாடுதலை உணர்த்துவன. வினவுவோளே (ஐங்.122), தூர்ப்போளே (ஐங்.124), விலங்குவோளே (ஐங்.127), ஊட்டுவோளே (ஐங்.128) என்பனவான சொற்கள் தலைவன் புனலாட்டத்தில் பெண்ணுடன் ஆடும் விளையாட்டைக் குறிப்பனவாக அமைகின்றன.

தலைவன், கடல் அலையில் பாய்ந்து புனல் விளையாடியதால் முண்டகக் கோதைமலர் நனைந்தது (ஐங்.121), உயர்ந்த மணல் மேட்டில் விழுந்து வெள்ளாங்குருகை வினவியது (ஐங்.122), தன் தோழியருடன் பேரிரைச்சலுடன் குளிர்ந்த பெருங்கடலில் பாய்வது (ஐங்.123), வண்டல் பாவை கவர்ந்து கடலில் வீசியது (ஐங்.124), அலையில் வரும் பாவையைக் கவர்ந்து அதனைக் கண்டு அழுது நின்றது (ஐங்.125), சுற்றிலும் தோழியராகிய வண்டுகள் சூழ கடல் அலையில் மூழ்குவது (ஐங்.126), தும்பை மாலையைத் தன் மார்பில் சாற்றியது (ஐங்.127), பாவைக்கு உணவு ஊட்டியது (ஐங்.128) போன்ற காட்சிகளைக் கண்ட பரத்தை அவனிடம் புலவி கொள்கிறாள். தலைவனைக் கடிகிறாள். தன் தோழியிடம் காட்டுகிறாள்.

தோழி பரத்தையைத் தேற்றுதல்

தலைவியின் கோபத்தை உணர்ந்த தோழி தலைவியைத் தேற்றுகிறாள். தலைவன் பிற பெண்ணுடன் விளையாடவில்லை. மாறாக அவன் ஒரு சிறுமியுடன் விளையாடுகிறான் என்று கூறித் தேற்றுகிறாள். முண்டகமலர் என்பது கொடியில் மலர்வது. அதைப் பெண்கள் அணியமாட்டார்கள். அதனைச் சூடிக்கொண்டு கடலில் பாய்ந்து ஆடுவது சிறுமியின் பண்பு (ஐங்.121). உயர்ந்த மணலில் நின்று கொண்டிருக்கும் வெள்ளாங்குருகிடம் பேசுகிறாள் (ஐங்.122). பேதைப் பருவத்தில் உள்ள பெண் தன் ஆயத்தாரின் நகைக்காக அலையில் பாய்கிறாள் (ஐங்.123). விளையாடும் பொம்மையைக் கவர்ந்த கடலலையை வசைபாடும் நோக்கில் மணல்வாரித் தூர்க்கிறாள் (ஐங்.124). கண்கள் சிவக்கும்படி அழுகிறாள் (ஐங்.125). வண்டுகள் மொய்த்ததால் அஞ்சி கடலில் சிற்றலை, பேரலை என்று பாராமல் மூழ்குகிறாள் (ஐங்.126). போர்க்களத்தில் அணியும் தும்பை மாலையைத் தலையில் அணியாமல் தன் மார்பில் அணிந்துள்ளாள் (ஐங்.127). உணவு உண்ணும் தன்மையில்லாத பொம்மைக்கு உணவு ஊட்டுகிறாள் (ஐங்.128) என்பனவான காரணங்கள் பேதையின் அறியாமையைக் குறிப்பதாகின்றன. இக்கருத்துநிலை தலைவன் பிற பெண்ணுடன் புனலாடவில்லை, சிறுமியுடன் தான் விளையாடுகிறான் எனக் கூறித் தோழி தலைவியைத் தேற்றுவதாக அமைகிறது. தோழியின் இக்கூற்று தலைவன் கூறிய கூற்றாகும்.

இக்கூற்றுப் பாடல்கள் இரண்டாம் நிலையில் பொருளுணர்த்துவதாக அமைகின்றன. பாடலின் கொளுவே இத்தகைய புரிதலுக்கு இடமளிக்கிறது. மாறாக, சில சொல்லாடல்கள் இக்கொளு அமைப்பதற்கு வழிவகுக்கிறது என்றே உணரமுடிகிறது. கோதை மலரை அணிதல், வெள்ளாங்குருகை வினவுதல், கடலைத் தூர்த்தல், பாவைக்காக அழுதல், பெருந்திரையில் மூழ்குதல், தும்பை மாலையை மார்பில் அணிதல், பாவைக்கு உணவு ஊட்டுதல் ஆகிய கருத்துநிலைகள் மறுவாசிப்பிற்கு உள்ளாகின்றன; பாடல்களின் பொருள் புரிதலை வேறுவிதமாக அர்த்தப்படுத்துகின்றன. இவ்எட்டுப் பாடல்களும் ஒரே தன்மையில் இரு மாறுபட்ட கருத்துநிலையைப் புலப்படுத்துவதாக அடையாளம் காணமுடிகின்றன. புலனாடுதலில் உண்டான புலவியை அதே பாடல்களில் மறுவாசிப்புக் கருத்து அப்புலவி நீக்கத்திற்குத் துணைபுரிகிறது. இப்பொருள்புரிதல் பாடலைத் தனித்திறம் மிக்கதாகக் காட்டுகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் வரையறைக்குள் தோழி அமையும் திறம் விளங்குகிறது. ஒரே பாடலடி தலைவியின் நிலையிலான புரிதல் அடங்கா ஒழுக்கமாகவும், தோழி நிலையிலான புரிதல் அடங்க உரைக்கும் பொருளாகவும் அமைகின்றதைக் காணமுடிகிறது.

தலைப்புப் பொருத்தம்

இத்தகைய புரிதலின் தன்மையில், “கிழவற்கு உரைத்த பத்து” என்ற தலைப்பு பொருத்தமுடையதா என்பதில் ஐயமுண்டு. இப்பாடல்கள் மூவர் கூற்றில் அமைந்த போதிலும் அக்கூற்றுக்களில் ஒன்றான தலைவனையே முன்னிறுத்தி, கிழவற்கு உரைத்த பத்து என்று அமைத்திருப்பது எண்ணத்தக்கது. தலைப்பின்படி மூவர் கூற்றில் பரத்தை கூற்றே முதன்மை பெறுகிறது. பரத்தை கூற்றே ஊடலின் தொடக்கநிலை. பிற கூற்றுகள் அதனையடுத்த புரிதலே! அத்தகைய புரிதலுக்குக் கொளு தான் இடமளிக்கிறது. ஆக, முதன்மைக் கூற்றான தலைவி கூற்றே பாடலின் மையப்பொருளாகவும் ஏனைய கூற்றுக்கள் அதனைத் தொடர்ந்த இரண்டாம் தன்மையிலான புரிதல் என்பதும் எண்ணத் தோன்றுகிறது. எனினும் பல்வேறு நிலையில் பொருள் புரிதலுக்கு இடமளிக்கும் கவிதைகளே தனித்துவம் மிக்கவை என்ற இலக்கிய நயத்தினை இப்பாடல்களில் அடையாளம் காணமுடிகிறது. அதற்குத் தொல்காப்பிய விதிகள் இடமளிக்கின்றன.

முடிவுரை

சங்கப்பாடல்கள் குறிப்பிட்ட வாழ்வியல் கட்டமைப்பில் அமைந்தபோதிலும் அவை பல்வேறு விதமான வாசிப்பிற்கும் பொருள்புரிதலுக்கும் இடமளித்துக் கொண்டே வருகின்றன. தொல்காப்பிய விதிகளும் அத்தகைய புரிதலுக்கு மீண்டும் மீண்டும் இடமளித்துக் கொண்டே இருக்கின்றன. பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கொளுவானது பாடல்களின் சூழலை விளக்குவதோடு பாடல்களின் பொருளை அறிவதற்குத் திறவுகோலாக அமைந்துள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

துணைநூற் பட்டியல்

இளம்பூரணர் (உ. ஆ.)., (1969), தொல்காப்பியம் பொருளதிகாரம், சென்னை: கழக வெளியீடு.

கல்யாணசுந்தரையர், எ., 1944 (மூ.ப.), ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும், சென்னை: கபீர் அச்சுக்கூடம்.

……………

[1] உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார், பல்கலைக்கழகம், திருநெல்வேலி – 12. [email protected]

……

Date of submission: 2019-03-20

Date of acceptance: 2019-03-25

Date of Publication: 2019-05-02

Corresponding author’s

Name: முனைவர் மு.ஜெகதீசன்

Email: [email protected]