Abstract: Ainkurunuru entailed presentation to showing verity flowers. The classical literature Ainkurunuru showing the flowers by Thamarai, Sivathai, Neithal, Venkai, Sengkarunkali, Ambal, Kuvalai, Ngalal, Serunthi, Thumbai, Punnai, Suzhimullai, Malaimallikai, Senkanthal, Ilavam, Kongam, Vembu, Mullai, Kaya, Kondrai, Biirkkam, Kuruntham, Karuvilai etc. It is important to note, not mentioned the flower name also included. So, the present paper aims to describe the Imagery and elements of seven flowers Thamarai, Paganrai, Neithal, Mullai, Vengai, Ambal and  Kuvalai.

ஐங்குறுநூற்று ஐந்திணைகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகி நிலங்களை அழகுறக் காட்சிப்படுத்துகின்றன. ஐங்குறுநூற்றில் தாமரை மலர், சிவதை மலர், நெய்தல் மலர், வேங்கை மலர், செங்கருங்காலிப் பூ, ஆம்பல் மலர், குவளை மலர், குரவமலர், ஞாழல்மலர், செருந்திமலர், தும்பை மலர், புன்னை மலர், கழிமுள்ளி மலர், மலை மல்லிகை, செங்காந்தள் பூ, இலவ மலர், கோங்கமலர், வேம்பின் பூ, முல்லைப்பூ, காயா மலர், கொன்றை மலர், பீர்க்கமலர், குருந்தம் பூ, கருவிளை மலர் என்று பலவகை மலர்கள் இடம்பெற்றுள்ளன. இம்மலர்களைத் தவிர, குறிப்பிட்டுப் பெயர் சுட்டப்படாத பல மலர்களும் நிலங்களின் செழுமையைக் காட்டுகின்றன. இம்மலர்களில் தாமரை, பகன்றை, நெய்தல், முல்லை, வேங்கை, ஆம்பல், குவளை ஆகிய ஏழு மலர்களின் வருணனைக் காட்சிகளையும், கூறுகளையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தாமரை மலர் வருணனை

தாமரை மலரானது, ‘மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை’ ஐங்.6:4-5, ‘அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் …வேழம்’ ஐங்.20:1-3, ‘சிறைஅழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும்’ ஐங்.53:2-3, ‘கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல் தாமரை போல மலரும்’ ஐங்.68:1-2, ‘கழனித் தாமரை மலரும்’ ஐங்.94:4-5, ‘தெண்நீர்ப் போதுஅவிழ் தாமரை அன்னநின் காதல்அம் புதல்வன்’ ஐங்.​424:1-4 என்னும் அடைகளுடன் ஐங்குறுநூற்றுப் பாடல்களில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் மருதநிலப் பகுதியில் செழிப்பாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகின்றது.

மேற்காணும் பாடல்களில் குளிர்ந்த நீர்த்துறையில் தாமரையின் மொட்டு, இதழ், இதழின் எண்ணிக்கை, பூ, பூக்களிலுள்ள வண்டின் முட்டை, வண்டின் இறகு, தாமரைப் பூ புதல்வனுக்கு உவமையாதல், கழனியில் தாமரை மலர்தல், தாமரை மற்றும் ஆம்பல் மலர்கள் அதிகாலைப்பொழுதில் மலருகின்ற அறிவியல் செய்தி, தாமரை மலருதல் ஆம்பல் மலருதலுக்கு உவமையாதல் ஆகிய வருணனைக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வண்டினைத் தலைவனாகவும் வேழத்தைப் பரத்தையாகவும், தாமரை மலரைத் தலைவியாகவும், ஆம்பல் மலரைப் பரத்தையாகவும் உள்ளுறைச் செய்தியாகக் கூறப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. இவ்வுள்ளுறைச் செய்தியில் தலைவனின் பரத்தமை ஒழுக்கமும், பரத்தையின் தோற்றமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பகன்றை அல்லது சிவதை மலர் வருணனை

சிவதை மலர் என்னும் பெயருடையது பகன்றை மலர் ஆகும். இவை, பகன்றைக் கண்ணி பல்ஆன் கோவலர் ஐங்.87:1, பகன்றை வால்மலர் ஐங்.97:1-2, வெள்இதழ்ப் பகல்மதி உருவின் பகன்றை மாமலர் வெண்கொடி ஈங்கைப் பைம்புதல் அணியும் அரும்பனி அளைஇய கூதிர் ஐங்.​456:1-4 என்னும் அடைகளுடன் இம்மூன்று பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. பகன்றை மலரை முல்லைநிலத்துக் கோவலர் அணிதல், மலரின் வெண்மை நிறம், எருமையின் கொம்பில் சுற்றியிருத்தலின் மூலம் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தை உள்ளுறையாகச் சுட்டுதல், கூதிர்காலத்தில் இம்மலர் மலருகின்ற அறிவியல் செய்தி, தலைவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற காலம், மலரின் அளவு, மலரின் உருவத்திற்கும் நிறத்திற்கும் பகலில் தோன்றும் நிலவு உவமையாதல்  ஆகிய வருணனைக் கூறுகள் காணப்படுகின்றன.

மருதத்திணையில் நெய்தல் மலர் வருணனை

நெய்தல் மலரானது நெய்தல் நிலத்திற்குரியதாகும். ஆனால், இங்கு மருதத் திணையில், பல்இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் ஐங்.2:4-5, மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் ஐங்.96:1-2 என்னும் அடைகளுடன் இவ்விரண்டு பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. நீலம் என்பது மருதநிலத்தில் மலரக்கூடிய கருங்குவளை மலராகும். கருங்குவளை மலரைப்போன்று நெய்தல் மலர் ஒத்திருக்குமென்று ஆசிரியர் கூறும் ஒப்புமை, நெய்தல் மலர் ஆம்பல் மலரோடு வளர்ந்திருக்கின்ற காட்சி, நெய்தல் மலரின் நீல நிறம் ஆகிய வருணனைக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு, ஒரு நிலத்திற்குரிய பூவும் புள்ளும் வேறு நிலத்தில் வந்தால் அந்நிலத்திற்குரியதாகவே கொள்ளவேண்டும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இதனை,

எந்நில மருங்கின் பூவும் புள்ளும்

அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

வந்த நிலத்தின் பயத்த வாகும் (தொல்.பொருள்.21)

என்னும் நூற்பாவின்மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

நெய்தல் மலர் வருணனை

நெய்தல் மலரானது நெய்தல், புதுமலர் என்னும் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இவை, நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள் பூப்போல் உண்கண் ஐங்.​101:1-5, நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு ஐங்.​109:1-2, நெய்தல்அம் கண்ணி ஐங்.​135:1-3, கண்போல் நெய்தல் கள்கமழ்ந்து ஐங்.​151:1-4, நெய்தல் ஐங்.​155:1-4, சிறுவெண் காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்கும் ஐங்.​170:1-2, தொண்டித் தண்நறு நெய்தல் நாறும் ஐங்.​173:2-3, நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழும் ஐங்.​182:1-2, கையறு மாலை கொடுங்கழி நெய்தலும் கூம்பக் காலை ஐங்.​183:4-6, நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி மீன்உண் குருகினம் கானல் அல்கும் ஐங்.​184:1-3, அலங்குஇதழ் நெய்தல் ஐங்.​185:1-3, பொங்குகழி நெய்தல் ஐங்.​186:3-4, நெய்தல்அம் பகைத்தழை பாவை புனையார் உடலகம் கொள்வோர் இன்மையின் ஐங்.​187:1-5, வைகறை மலரும் நெய்தல் ஐங்.​188:1-4, புன்னை நுண்தாது உறைத்தரு நெய்தல் பொன்படுமணியின் பொற்பத் தோன்றும் ஐங்.​189:1-2, தண்நறு நெய்தல் தளைஅவிழ் வான்பூ ஐங்.​190:1-3, நெய்தல்….. பூஅணி கொன்டன்றால் புறவே ஐங்.​412:1-3, நிலன் அணி நெய்தல் மலர ஐங்.​435:1-3, தொண்டித் தண்கமழ் புதுமலர் நாறும் ஐங்.​176:1-4 என்னும் அடைகளுடன் மொத்தம் பத்தொன்பது பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்திலும் முல்லை நிலத்திலும் நெய்தல் மலர் மலர்ந்துள்ளதை அறியமுடிகின்றது. நெய்தல் திணையில் பதினேழு பாடல்களிலும், முல்லைத்திணையில் இரண்டு பாடல்களிலும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது. நெய்தல் மலர் தலைவியின் கண்ணிற்கு உவமையாதல், கண்ணைச் சிறப்புச் செய்யும் பொருட்டு நெய்தல் மலருக்குக் கண்ணை உவமையாகக் கூறுதல், நெய்தல் மலரில் தேன் மணம் வீசுதல், சிறுவெண்காக்கையைத் தலைவனாகவும், நெய்தலைப் பரத்தையாகவும் உள்ளுறையாக்கியமை, மலரின் மணம், குளிர்ச்சித்தன்மை, புன்னை மலரைப் பொன்னிற்கும் நெய்தலை் மலரை நீலமணிக்கும் உவமையாகக் கூறுதல், புன்னையும் நெய்தலும் ஒரே சமயத்தில் மலரும் அறிவியல் செய்தி, புன்னை மலரும் காலத்தில் நெய்தல் நிலத்தவர் திருமணம் செய்து கொள்ளும் நற்காலம், நெய்தல் மலர் செருந்தியோடு மணம் வீசுதல், இதழ், வைகறைப் பொழுதில் நெய்தல் மலர்ந்து மாலையில் கூம்புகின்ற அறிவியல் காட்சியும் சிறுபொழுதும், முல்லைநிலம் அழகுபெற நெய்தல் மலர் மலர்தல் ஆகிய வருணனைக் கூறுகள் காணப்படுகின்றன.

முல்லைப்பூ வருணனை

முல்லைப்பூவானது முல்லை என்னும் பெயரில் இடம்பெற்றுள்ளது. இவை, சுடர்இழை வாள்நுதல் அரிவை முல்லை ஐங்.​408:1-2, முல்லை…..அலர்ந்து கவினிப் பூஅணி கொண்டன்றால் புறவே ஐங்.​412:1-3, நெடுங்கொடி முல்லை ஐங்.​422:1-4, முல்லை ஐங்.​437:1-3; 446:1-2, முல்லை பூப்பப் பொங்கு பெயல் கனைதுளி கார்எதிர்ந் தன்றே ஐங்.​448:3-4, நிலவின் அன்ன நேர்அரும்பு பேணி கார்நயந்து எய்தும் முல்லை ஐங்.​454:1-3, கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப பருவம் செய்தன பைங்கொடி முல்லை ஐங்.​476:1-2, அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப மென்புல முல்லை மலரும் ஐங்.​489:1-2, நல்நுதல்நாறும் முல்லை மலர ஐங்.​492:1-2, தண்கமழ் புறவின் முல்லை மலர ஐங்.​494:1-2 என்னும் அடைகளுடன் இந்த பதினோரு பாடல்களில் வருணனைக்காட்சி அமைந்துள்ளது.

வேங்கை மலர் வருணனை

வேங்கை மலரானது, பசுமலர் ஐங்.76:1-3, பொன்வீ மணி அரும்பு ஐங்.201:1-4, வேங்கைப் பொன்மலி புதுவீ ஐங்.208:1-3, வேங்கைப் பொன்மருள் நறுவீ ஐங்.217:1-3, வேங்கை மாத்தகட்டு ஒள்வீ ஐங்.219:1-3, வேங்கை மலர் ஐங்.259:1-4, வேங்கை ஐங்.324:4-5, விரியிணர் வேங்கை ஐங்.367:1-4, வேங்கைப் பென்னிணர் ஐங்.396:1-2 என்னும் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. வேங்கை மலரானது மருதம், குறிஞ்சி, பாலை என்னும் இம்மூன்று திணைகளில் வருணிக்கப்பட்டுள்ளது. இவற்றில், பசுமலர், பொன்வீ மணிஅரும் பினவே, கானவர் கிழங்குஅகழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன்மலி புதுவீதாஅம், பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ மான்இனப் பெருங்கிளை மேயல் ஆரும், கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ இருங்கால் வியல்அறை விரிப்பத் தாஅம், மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலைஉறை கடவுள் குலமுதல் வழுத்தி, வேங்கை வென்ற சுணங்கின்…..மாஅயோளே, விரிஇணர் வேங்கை, புலிப்பொறி வேங்கைப் பொன்இணர் என்னும் அடைகளுடன் இந்த ஒன்பது பாடல்களில் வருணனைக்காட்சி அமைந்துள்ளது. இங்கு, பொன்னை வேங்கை மலருக்கு உவமையாகக்கூறுதல், வேங்கைப் மலர் மான்கூட்டத்தின் உணவாதல், நிலத்தின் வளம் ஆகிய கூறுகள் காணப்படுகின்றன.

ஆம்பல் மலர் வருணனை

ஆம்பல் மலரானது ஆம்பல், பொய்கைப்பூ என்னும் இரண்டு சொல்லாட்சிகளில் இடம்பெற்றுள்ளது. இவை, புள்ளிக்கள்வன் ஆம்பல் அறுக்கும் ஐங்.21:1-2, பொய்கையில் பூத்த புழைக்கால் ஆம்பல் ஐங்.34:1-2, பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால் நிறத்தினும் நிழற்றுதல் ஐங்.35:1-3, கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டுபிணி ஆம்பல் ஐங்.40:4-5, பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பல் ஐங்.57:1-2, கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் ஐங்.65:1-2, கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஐங்.68:1-2, வயல்மலர் ஆம்பல் ஐங். 72:1, வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் ஐங்.91:1-2, எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென பசுமோ ரோடமொடு ஆம்பல் ஐங்.93:1-2, அணிநடை எருமை ஆடிய அள்ளல் மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் ஐங்.96:1-2, பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே ஐங்.97:1-4 என்னும் அடைகளுடன் இப்பன்னிரண்டு பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளன.

ஆம்பல்மலர் பொய்கையில் பூத்தல், ஆம்பல் மலர்தல், ஆம்பல் மலரின் நிறம், சூரியக் கதிர்களோடு ஒப்புமைப்படுத்துதல், பூவின் குளிர்ச்சி ஆகிய வருணனைக் கூறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்பல் பூவைப் பரத்தைக்கு உள்ளுறையாகக் கூறுதல். ஆம்பல் மலரின் மூலமாகத் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் சுட்டப்படுதல். ஆம்பல் மலரானது மருதத்திணையில் மட்டும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மலரின் மூலமாக மருதத்திணையின் ஊடல் உரிப்பொருள் எடுத்தாளப்பட்டுள்ளது.

 குவளை மலர் வருணனை

குவளை மலரானது குவளை, பல்லிதழ் நீலம், மாரி மலர் என்னும் சொல்லாட்சிகளில் இடம்பெற்றுள்ளது. இவை, குவளை உண்கண் ஐங்.72:3, கள்நறும் குவளை ஐங்.73:1-4, பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை ஐங்.225:1-3, கயத்துவளர் குவளையின் அமர்த்த கண் ஐங்.277:5, பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளை ஐங்.299:1-2, நீல இருங்கழி நீலம் கூம்பும் மாலை ஐங்.​116:1-4, பல்இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் ஐங்.2:4-5, மாரி மலரின் கண்பனி உகுமே ஐங்.19:2-5 என்னும் அடைகளுடன் இந்த எட்டுப் பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. தலைவியின் கண்ணிற்குக் குவளை மலர் உவமையாதல், குவளை மலரின் மணம், நீல நிறம், இம்மலர் மலரும் இடங்கள், மலர் குவியும் மாலை நேரம், குவளை மலர் நெய்தல் மலரோடு  ஒப்புமைப்படுத்துதல் ஆகிய வருணனைக் கூறுகள் இடம்பெற்றுள்ளன.

ஐங்குறுநூற்றில் தாமரை மலரானது மருதத்திணையில் ஐந்து பாடல்கள், முல்லைத்திணையில் ஒரு பாடல், மொத்தம் ஆறு பாடல்களில் வருணனைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தாமரை மலர் வருணனையில் அடை, சினை, முதல், உவமை உருபுகள், உள்ளுறை ஆகிய உத்திமுறைகளை ஆசிரியர்கள் கையாண்டுள்ளதை அறியமுடிகின்றது. காலங்களைக் காட்டுவதில் மலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதேபோல் மலர்கள் பெண்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் உவமைப் பொருளாகவும் உள்ளுறைப் பொருளாகவும் வருணிக்கப்பட்டுள்ளன. மலர்கள் நிலங்களின் வளத்தினை எடுத்துரைக்கின்றன. மலர்கள் வருணனையில் திணைமயக்கம் அதிக அளவில் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

துணைநின்றவை

  • சாமிநா​தையர்,​ உ.வே. (ப.ஆ), 1980(ஆ.ப.), ஐங்குறுநூறு, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நி​லைய ​வெளியீடு, சென்​னை.
  • சோமசுந்தரனார், ​பொ.​வே. (ப.ஆ), 1972(மு.ப.), ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், தென்னிந்திய ​சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்​னை.
  • தட்சிணாமூர்த்தி, அ.& பரிமணம், அ.மா. (உ.ஆ.), 2004, ஐங்குறுநூறு மூலமும் உரையும், (தொகுதி-1,2), நியூ​செஞ்சுரி புக் ஹவுஸ், சென்​னை.
  • து​ரைசாமிப்பிள்​ளை ஔ​​வை.சு.(உ.ஆ.), 1957(மு.ப.), ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், முதல்​தொகுதி: மருதம்&​நெய்தல், அண்ணாம​லைப் பல்க​லைக்கழகம், அண்ணாமலைநகர்.
  • …………….., (உ.ஆ.), 1957(மு.ப.), ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், இரண்டாம் தொகுதி: குறிஞ்சி& பாலை, அண்ணாம​லைப் பல்க​லைக்கழகம், அண்ணாமலைநகர்.
  • …………….., (உ.ஆ.), 1958(மு.ப.), ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், மூன்றாம் தொகுதி: முல்லை, அண்ணாம​லைப் பல்க​லைக்கழகம், அண்ணாமலைநகர்.
  • புலியூர்​க்கேசிகன், (உ.ஆ.), 2010, ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், சாரதா பதிப்பகம்,​சென்​னை.
  • மாணிக்கனார், அ. (உ.ஆ.), 2001(ம.ப.), ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், சென்​னை.
  • ராஜம் மர்ரே எஸ்.(பதி.), 1957, ஐங்குறுநூறு, மர்​ரே அண்டு கம்​பெனி, ​சென்​னை.

முனைவர் பா. ஈஸ்வரன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கிருஷ்ணன் கோவில், விருதுநகர் மாவட்டம் – 626 126.

[email protected]