உரைக்களம்

சங்கத் தொகைகளில் பத்துப்பாட்டின் முதல் நூலாகவும், நாயன்மார்கள் பாடிய பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையின் பதினேழாம் நூலாகவும் முன்னோர்களால் தொகை பெற்றுள்ள திருமுருகாற்றுப்படை ஆறுமுக நாவலரால் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டது என்றும், அப்பதிப்பே பத்துப்பாட்டின் முதற்பதிப்பு என்றும் தமிழாய்வுலகில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இக்கருத்துக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து விளக்குவது இவ்வுரையின் நோக்கமாகும்.

நாம் ஒரு பதிப்பை / நூலை எப்படி எடுத்துக்கொள்கின்றோம் என்பது வேறு; அந்நூலின் பதிப்பாசிரியர் அந்நூலை எந்த நோக்கத்தோடு பதிப்பிக்கின்றார் என்பது வேறு. ஒரு பதிப்பாசிரியர் ஒரு நூலைப் பதிப்பிக்க முனைவதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் மறைந்து நிற்கின்றன. அவற்றை அறிவது அப்பதிப்பின் பின்புல அரசியலை உணர்வதற்கு அடிப்படையாகும். ஒவ்வொரு பதிப்பின் பின்னும் நிற்கின்ற இவையே, அப்பதிப்பை ஒரு பதிப்பாசிரியர் உலகிற்குத் தருவதற்குக் காரணிகளாக அமைகின்றன. மேலும், ஒரு பதிப்பாசிரியரைக் கட்டமைக்கும் பின்புலங்களாகவும் இவையே அமைகின்றன. ஒருவர் சிறந்த பதிப்பாசிரியராக உலகில் நிலைபெற அவர்தம் உழைப்பும் திறனும் அடிப்படைகளாக இருப்பினும், இப்பின்புலங்களும் உதவுகின்றன என்பதை மறுக்க இயலாது. அவ்வகையில் ஒரு பதிப்பாசிரியரின் நோக்கத்தை அறிவதே அப்பதிப்பின் புரிதலுக்குப் பெருந்துணையாகும். எனவே, இம்முயற்சி இன்றியமையாததாகின்றது. ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு இவ்வுரைக்கு முதன்மைத் தரவாகும். திருமுருகாற்றுப்படை / நாவலர் பதிப்புப் பற்றிய கட்டுரைகளும் நூல்களும் பிறவும் இம்முயற்சிக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

திருமுருகாற்றுப்படைப் பதிப்பாளர் / பதிப்புப் பற்றிய கருத்துக்கள்

திருமுருகாற்றுப்படையின் பதிப்பாசிரியர் / பதிப்புக் குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ள கருத்துக்களை இவண் தொகுத்துக் காணலாம்.

”சங்க இலக்கியப் பதிப்பு நூல்களுள் முதன்முதலில் திருமுருகாற்றுப்படை (1851, ஆறுமுக நாவலர்) அச்சிடப்பெற்றது” (ச. சிவகாமி 2009: IX) என்றும், “திருமுருகாற்றுப்படையை முதன்முதலில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலர்” (ச. சிவகாமி 2009: 392) என்றும் கூறுவர்.

“முதன்முதலில் முழுமையாகப் பத்துப்பாடல்களுக்கும் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரையுடன் 1889-இல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் பத்துப்பாட்டைப் பதிப்பித்தார். அதற்கு முன்பே திருமுருகாற்றுப்படை 1851- இல் ஆறுமுகநாவலரால் பதிப்பிக்கப் பெற்றதாக அறிகிறோம்” (ச.வே. சுப்பிரமணியன் 2003: 62) என்று கூறுவர்.

”பத்துப்பாட்டில் முதற்பாட்டாகிய திருமுருகாற்றுப்படை சமயப் போற்றுதலும், ஓதுதலும் உடைய நூலாகலின் அது மட்டும் தனியே மிக முற்பட்டே வெளிப்போந்தது. அதன் பலப்பல பதிப்புகளும் வந்தன.

திருமுருகாற்றுப்படை – 1839 – இவ்வாண்டில் வந்த இப்பதிப்பே முதற்பதிப்பு ஆகலாம். இதற்கு முன்னே ஏதேனும் பதிப்பு உண்டா என்பது தெரியவில்லை” (இரா. இளங்குமரன் 2001: 211; 1991: 241) என்றும்,

பத்துப்பாட்டு நூல்களில் முதலில் பதிப்பிக்கப்பெற்றது திருமுருகாற்றுப்படையே ஆகும் என்றும், 1834, 1850களில் திருமுருகாற்றுப்படை மூலபாடம் வெளிவந்துள்ள செய்தியை இரா. ஜானகி தம் பதிப்பு விவரப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுவர் (கோ. நித்தியா அறவேந்தன் 2011: 1).

“பத்துப்பாட்டினுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள திருமுருகாற்றுப்படையை முதன்முதலில் 1834இல் பதிப்பித்துத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டிய பெருமை இவரையே (சரவணப் பெருமாளையர்) சேரும்” (இரா. ஜானகி 2011: 16)  என்றும்,

“பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களின் முதற்பதிப்புகள் (செம்மொழித் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 41 நூல்களின் பதிப்பு விவரங்கள்)” என்னும் கட்டுரையில், பத்துப்பாட்டின் முதற்பதிப்பாக, “பத்துப்பாட்டு – 1. திருமுருகாற்றுப்படை மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய மதுரைக் கடைச்சங்கத்து மகாவித்துவானாகிய நக்கீரனார் அருளிச் செய்தது. நச்சினார்க்கினியாருரைப்படியே பரிசோதித்துச் சென்னபட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராகிய சரவணப்பெருமாளையரால் கல்வி விளக்க வச்சுக்கூடத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. சய வருஷம் ஆவணி மாசம் (1834)” (பா. இளமாறன் 2008: 30) என்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

மேற்பத்திச் செய்தி ‘செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு’ என்னும் நூலிலும் (கா. அய்யப்பன் 2009: 254) சொற்றொடர்களின் சந்திப் பிரிப்பு முறையால் நேர்ந்த சில வேறுபாடுகளுடன் தரப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இதன்மூலம், ஒரு பதிப்பின் முகப்புப் பக்கத்தை எடுத்துத் தருவோர் தம் மனக்கருத்துக்குத்தக சந்திப்பிரிப்பு முதலான பணிகளைச் செய்தே தருகின்றனர் என்பதை அறியமுடிகின்றது.

’ஆறுமுகநாவலர் 1851இல் சென்னை, வித்தியாநுபாலன யந்திரசாலை மூலமாகத் திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும் என்னும் பதிப்பொன்றை வெளியிட்டார். அதன் 10ஆம் பதிப்பு 1930இலும், 15ஆம் பதிப்பு 1935இலும், 16ஆம் பதிப்பு 1947இலிலும் வெளிவந்துள்ளன’ (சு. அமிர்தலிங்கம் 2000: 360) என்பர்.

இரா. ஜானகி (2011: 196) தொகுத்த ‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ என்னும் நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள சங்க இலக்கிய பதிப்புகள் பற்றிய அடைவு என்னும் பகுதியில் “1851 திருமுருகாற்றுப்படை ஆறுமுக நாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை” என்னும் குறிப்புத் தரப்பட்டுள்ளது.

கரு.அழ. குணசேகரன் பதிப்பித்த ‘ஆறுமுகநாவலர்’ என்னும் நூலில் ஆ. முத்துச் செல்வன் (2008: 42) எழுதிய ‘நாவலரின் சுவடிப்பதிப்பு நூல்கள் பதிப்பு வரலாறு’ என்னும் கட்டுரையில் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள நாவலரின் சுவடிப்பதிப்புகள் (கிடைக்கக் கூடியவை) என்னும் பகுதியில் “6. திருமுருகாற்றுப்படை – 1857” எனப் பதிப்பாண்டு குறிக்கப்பட்டுள்ளது.

மயிலை சீனி. வேங்கடசாமி (2012: 160; 266 – 273) ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ என்னும் பெருநூலைத் தந்தவர். அரிய தகவல்கள் பலவற்றைக் கொண்ட அவர்தம் நூலில் ஆறுமுக நாவலர் எழுதிய பிற நூல்களின் உரைகள் கூறப்பட்டுள்ளபோதும், திருமுருகாற்றுப்படை உரையோ, பதிப்போ இடம்பெறவில்லை. அதுபோன்றே, அவர் தந்துள்ள 19ஆம் நூற்றாண்டில் அச்சான இலக்கிய நூல்கள் என்னும் பகுதியிலும் ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படை உரைப்பதிப்புப் பற்றிய எந்தவொரு குறிப்பும் இல்லை.

‘உரையாசிரியர்கள்’ என்னும் அரிய நூலைச் செய்த மு.வை. அரவிந்தன் (2008: 658) ஆறுமுக நாவலர் இயற்றிய உரைகள்: என்னும் பகுதியில் திருமுருகாற்றுப்படையுரையைக் குறித்துள்ளார். ஆனால், பதிப்பாண்டு எதுவும் அவரால் குறிக்கப்படவில்லை.  இக்கருத்துக்களைத் தொகுத்து நோக்கும்பொழுது, பின்வரும் செய்திகளை அறியமுடிகின்றது. அவை வருமாறு:

 1. பத்துப்பாட்டு நூல்களில் முதல் பதிப்புக் கண்ட நூல் திருமுருகாற்றுப்படை.
 2. திருமுருகாற்றுப்படையின் முதல் பதிப்பை வெளியிட்டவர் சென்னபட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராகிய சரவணப்பெருமாளையர் என்பர் சிலர்.
 3. திருமுருகாற்றுப்படையின் முதல் பதிப்பை வெளியிட்டவர் ஆறுமுகநாவலர் என்பர் சிலர்.
 4. சரவணப் பெருமாளையரின் பதிப்பு வெளிவந்த ஆண்டு
 5. ஆறுமுக நாவலரின் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1851 என்றும் 1857 என்றும் வேறுபடக் குறிக்கப்பட்டுள்ளது.
 6. பதிப்பாசிரியர் பெயர் குறிக்கப்படாத 1839 ஆம் ஆண்டுப் பதிப்பே திருமுருகாற்றுப்படையின் முதற்பதிப்பாகலாம். முன் பதிப்புக்களும் இருக்கலாம்.
 7. நாவலரின் திருமுருகாற்றுப்படையுரைப் பதிப்பைக் குறிக்காதோரும்; பதிப்பாண்டு குறிக்காதோரும் உண்டென்பதைக் காணமுடிகின்றது.

திருமுருகாற்றுப்படை குறித்த மேற்செய்திகளைக் காணும்போது திருமுருகாற்றுப்படையை முதற்கண் பதிப்பித்தவர் யார்? என்பதிலும், பதிப்பாண்டு எது? என்பதிலும் கருத்துவேறுபாடுகள் இருப்பதை உணரமுடிகின்றது.  இவ்வேறுபாடுகளைக் களைவது தனி ஆய்வாகும். அதனை உரிய தரவுகள் கிடைக்குமிடத்துக் காணலாம். இவண் ஆறுமுக நாவலர் வெளியிட்ட திருமுருகாற்றுப்படைப் பதிப்பின் ஆண்டு இன்னதெனத் தெளிவதும், அப்பதிப்பு பத்துப்பாட்டுப் பதிப்பா? என்பதை அறிந்து, உரிய சான்றுகளின்வழி அதனை நிறுவுவதும் இவ்வுரையின் நோக்கமாதலால், அதனைக் காண்போம்.

நாவலர் பதிப்பின் ஆண்டு 1853 –

ஆறுமுக நாவலர் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டாகப் பான்மையான ஆய்வாளர்கள் 1851 என்றும், ஒருவர் மட்டும் 1857 என்றும் குறித்துள்ளதை மேலே கண்டோம். இவ்விரு ஆண்டுகளும் நாவலர் பதிப்பு வெளிவந்த ஆண்டுகளல்ல என்பதை இக்கட்டுரையாளரின் ஆறுமுக நாவலரின் “திருமுருகாற்றுப்படைப் பதிப்பு: கருத்துமுரண்களும் தெளிவும்” என்னும் கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது. அக்கட்டுரையின் ஒரு பகுதியை இவண் காணலாம். “நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பில் “பிரமாதீச ஐப்பசி” எனப் பதிப்பாண்டு நாவலரால் குறிக்கப்பட்டுள்ளது. பிரமாதீச ஆண்டுக்குச் சரியான ஆண்டு 1853 – 1854 ஆகும். ஐப்பசித் திங்களுக்குச் சரியான மாதங்கள் அக்டோபர் – நவம்பர் ஆகும். ஆகவே, பிரமாதீச ஐப்பசி என்பது 1853 ஆம் ஆண்டின் அக்டோபர் – நவம்பர் மாதங்களைக் குறிக்கும். எனவே, நாவலரின் பதிப்பு வெளிவந்த ஆண்டாக 1853ஐக் குறிப்பதே பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது” (விரிவுக்கு: ஆ.மணி ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு: கருத்துமுரண்களும் தெளிவும் கட்டுரைப்படி ப. 5). எனவே, நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1853 – ஏ என்பது தெளிவாகின்றது. இனி, அப்பதிப்புப் பத்துப்பாட்டுப் பதிப்பா? என்பதைக் காண்போம்.

நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்புபத்துப்பாட்டுப் பதிப்பா?

ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு, பத்துப்பாட்டின் முதற்பதிப்பு என்றே ஆய்வாளர் பலர் கருதியுள்ளனர் என்பதை முன்னர்க் கண்டோம்.  அதன் பொருத்தத்தை அறிவோம். ஆறுமுக நாவலர் திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதி 1853இல் பதிப்பித்தபோதும், அதனைப் பத்துப்பாட்டின் முதல் பாட்டு எனக் கருதித்தான் நாவலர் பதிப்பித்தார் எனக் கூறுவதற்கு அவர்தம் பதிப்பில் இடமிருப்பதாகத் தெரியவில்லை. அதனை விளக்குவோம்.

திருமுருகாற்றுப்படை சமயநூலாகவே அறிமுகமாதல்

திருமுருகாற்றுப்படை திருமுறை நூலாகவே நாவலருக்கு அறிமுகமானது என்பதைப் பின்வரும் பகுதிகள் உணர்த்துகின்றன. ”.. .. ஏறத்தாழ 57 ஆண்டுகளே வாழ்ந்த நாவலர் தம் ’இருபது இருபத்திரண்டு வயதில் திருமுருகாற்றுப்படையைப் பாராயணமாகக் கற்றுவந்தார்’ (கைலாச பிள்ளை 1919: 10*). சௌமிய ஆண்டில் (1849 – 1850) வண்ணார்பண்ணையில் தம் அச்சகத்தைத் தொடங்கிய நாவலர் (கைலாச பிள்ளை 1919: 62*) 1844ஆம் ஆண்டு முதலே தாம் பாராயணமாகக் கற்று வந்த திருமுருகாற்றுப்படையை அச்சகசாலை நிறுவிய (1849 – 1850) பின்னர்த் தான் பதிப்பித்தார் என அறிகின்றோம் என்பர் (ஆ.மணி ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு: கருத்துமுரண்களும் தெளிவும் கட்டுரைப்படி ப. 1 – 2). இதன்மூலம், திருமுருகாற்றுப்படை நாவலருக்கு அறிமுகமானது 1844 இலில் என்பதையும், நாவலர் உரையோடு அந்நூல் அச்சானது 1850 – களுக்குப் பின்னர்த்தான் என்பதையும் உணரமுடிகின்றது. மேலும், பத்துப்பாட்டின் எந்தவொரு நூலையும் பாராயணமாகக் கற்கும் வழக்கமில்லை; சமய நூல்களே பாராயணத்துக்கு உரியனவாகத் தமிழர்களிடையே வழங்கி வருகின்றன என்பதை அறியும்போது, திருமுருகாற்றுப்படை ஒரு சமய நூலாகவே நாவலருக்கு அறிமுகமானது; அந்த உணர்வோடுதான் அவர் அந்நூலைக் கற்று வந்தார் என்ற உண்மை புலனாகின்றது.

நூலாசிரியர் பெயரைக் குறிக்கும் முறை

“இஃது பெரும்பான்மையும் நச்சினார்க்கினியார் (நச்சினார்க்கினியர் பெயரை நச்சினார்க்கினியார் என்றே நாவலர் குறித்துள்ளார்) உரைக்கருத்தைத் தழுவி, யாழ்ப்பாணத்திற் சைவப்பிரகாச வித்தியாசாலைக் கதிபதியாகிய நல்லூர் ஆறுமுக நாவலர் செய்த உரையுடன்” என்ற குறிப்புடன் நாவலரின் திருமுருகாற்றுப்படை உரை வெளியிடப்பட்டபோதும், அது பத்துப்பாட்டின் முதல் நூலுக்கு எழுதப்பட்ட உரையன்று; பதினோராம் திருமுறையாகிய திருமுருகாற்றுப்படைக்கு எழுதப்பட்ட உரை என்பதை நக்கீரர் பெயரை நக்கீரதேவர் என நாவலர் குறிப்பதால் உணர முடிகின்றது.

நாவலரின் முன்னுரை குறிக்கும் உண்மைகள்

ஆறுமுக நாவலர் தம் பதிப்புக்களில் நூல்கள்தோறும் முன்னுரை எழுதும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. எனினும், திருமுருகாற்றுப்படையுரைக்குப் ”பிரபந்த வரலாறு” என்னும் பெயரில் முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அம்முன்னுரையின் தலைப்பே நமக்குச் சில கருத்துக்களை உணர்த்துகின்றது. அதில் முதற்கருத்து, திருமுருகாற்றுப்படை ஒரு பிரபந்த நூலாகும் என்பதே. பத்துப்பாட்டு நூல்களைப் பிரபந்த நூல் (சிற்றிலக்கிய நூல்) எனக் குறிக்கும் வழக்கம் தமிழில் இல்லை. ஆசிரியப்பாவில் அமைந்த நெடும்பாடல்களான பத்துப்பாடல்களும் ஒரே நூலாகத் தொகைநிலை பெற்றுள்ளபோதிலும், அவை தனிப்பாடல்களே. ஆற்றுப்படை என்பது பிரபந்த வகைகளுள் ஒன்றாகப் பிற்கால இலக்கணிகளாலும் அறிஞர்களாலும் கூறப்பட்டாலும், பத்துப்பாட்டு என்ற தொகையில் உள்ளபோது திருமுருகாற்றுப்படையைப் பிரபந்தம் எனக் கூறுவதில்லை. பதினோராம் திருமுறையில் மட்டுமே திருமுருகாற்றுப்படையைப் பிரபந்தம் எனக் குறிக்கும் வழக்கமுண்டு. மேலும், பத்துப்பாட்டில் உள்ள பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகியவை எவ்விடத்தும் பிரபந்த நூல்களாகக் குறிக்கப்படாமையால், அத்தொகையில் உள்ள திருமுருகாற்றுப்படையையும் பிரபந்தம் எனக் குறிப்பது பொருத்தமுடையதாகாது என்பது வெளிப்படை. அப்படியாயின், திருமுருகாற்றுப்படையைப் பிரபந்தம் எனக் குறித்தால், அது பத்துப்பாட்டில் ஒன்றாகக் கருதப்படவில்லை என்பது தெளிவாகும்.

தலைப்பிலேயே தாம் பதிப்பிக்கும் நூலின் தன்மையை அதாவது, நூலின் வகைமையை உணர்த்திய ஆறுமுக நாவலர் (1853: ப.எ.இ.) அம்முன்னுரைக்கண்ணும், “.. .. நக்கீரதேவர் அதுகண்டு, மனமிரங்கி, முருகக்கடவுளைக் குறித்துத் திருமுருகாற்றுப்படை என்கிற இப்பிரபந்தத்தைப் பாடினார். உடனே முருகக்கடவுள் எதிர்வந்து அவ்வாபத்தை நீக்கி, அவர்களெல்லாரையும் காப்பாற்றியருளி, நக்கீரரைப் பார்த்து, இப்பிரபந்தத்தைத் தினந்தோறும் அன்புடனே ஓதுபவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து வருவேன் என்று வாக்குத்தத்தஞ் செய்தருளினார்” எனத் திருமுருகாற்றுப்படை ஒரு பிரபந்த நூல்; பதினோராம் திருமுறை நூல் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றார். அதன் பின்னரும் உரையின் தொடக்கத்திலும், “திருமுருகாற்றுப்படையென்பது திருமுருகனிடத்தே ஆற்றுப்படுத்தலை உடையதென ஏழாம் வேற்றுமைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய் இப்பிரபந்தத்திற்குக் காரணப்பெயராயிற்று” (ஆறுமுக நாவலர் 1853: 1*) என எழுதுகின்றார். மேலும், “.. .. இப்பிரபந்தத்தில் .. ..”, “.. .. இப்படிப் பிரபந்தஞ் செய்தற்கு விதி.. ..” “.. .. ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமியிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக”, “.. .. முருகக் கடவுளிடத்தே வழிப்படுத்ததாக இப்பிரபந்தம் செய்யப்பட்டமை தெளிக”  (ஆறுமுக நாவலர் 1853: 2, 3, 5, 83*) என வாய்ப்பு நேருழியெல்லாம் தாம் உரையெழுதிப் பதிப்பிக்கும் நூல் ஒரு பிரபந்த நூலே / பதினோராம் திருமுறை நூலே என்பதை அழுத்தந் திருத்தமாக நாவலர் குறித்துள்ளார். பன்முறையும் அந்நூல் பிரபந்த நூல் எனக் குறித்த நாவலர் ஓரிடத்தும் அது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று என்பதைக் குறிக்கவில்லை என்பதனால், நாவலரின் முதன்மை நோக்கம் பதினோராம் திருமுறையுள் ஒன்றாகத் தாம் நாள்தோறும் பாராயணம் செய்த நூலாகிய திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்து வெளியிடுவதே என்பதை உணரமுடிகின்றது. திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றென அறியும் வாய்ப்பு அவருக்கு இருந்தாலும், அந்நூலைப் பத்துப்பாட்டு நூலாகப் பதிப்பிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதும் மேற்கண்ட கருத்துக்களால் தெளிவாகின்றது. இவ்வுண்மையை வேறு சில சான்றுகளாலும் நாம் உறுதிப்படுத்த இயலும். அவற்றையும் காண்போம்.

வேறு சான்றுகள்

திருமுருகாற்றுப்படையுரையின் நிறைவில் ‘நேரிசை வெண்பா’ எனப் பெயரிட்டு ஏழு வெண்பாக்கள் நாவலரால் தரப்பட்டுள்ளன. இவை பத்துப்பாட்டுச் சுவடிகளில் இல்லாதவை; திருமுருகாற்றுப்படை மட்டும் தனியே எழுதப்பட்ட சுவடிகளில் மட்டுமே இருந்தவை என்ற உண்மையை “அடியிலுள்ள பாடல்கள், பத்துப்பாட்டும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப்பிரதிகளிலில்லாமல் திருமுருகாற்றுப்படை மட்டுமுள்ள புதிய ஏட்டுப்பிரதிகளிலும் அச்சுப்பிரதிகளிலும் இருந்தமையால் தனியே பதிப்பிக்கப்பெற்றன” என வரும் உ.வே. சாமிநாதையரின் (1931: 80*) கருத்துப் புலப்படுத்துகின்றது. (நாவலர் பதிப்பில் உள்ள ஏழு வெண்பாக்களோடு, மேலும் மூன்று வெண்பாக்கள் ஆக, மொத்தம் பத்து வெண்பாக்கள் உ.வே.சா. (1931: 80 – 83*) பதிப்பில் இடம்பெற்றுள்ளன என்பது தனிச்செய்தி). திருமுருகாற்றுப்படை பாராயண நூலாகையால், அதனைத் தனியே எழுதிக்கொள்ளும் வழக்கமிருந்ததையும் இதனால் அறியமுடிகின்றது. இதன்மூலமும் நாவலர் பதிப்பு, பத்துப்பாட்டுப் பதிப்பன்று என்பது உறுதியாகின்றது.

திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் முதலிய பிரபந்தங்கள் அடங்கிய பதினோராந் திருமுறை என்னும் பெயரிய பதிப்பு பரிதாபி ஆண்டு மார்கழித் திங்களில் (1913) சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தரும பரிபாலகர் பொன்னம்பல பிள்ளையால் சென்னப்பட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இப்பதிப்பு ‘பல பிரதிரூபங்களைக் கொண்டு ஒருவாறாராய்ந்து ஆறுமுக நாவலர்’ கொணர்ந்த பதிப்பின் இரண்டாம் பதிப்பாகும் என்பதை அதன் முதற்பக்கம் தெளிவுபடுத்துகின்றது. இதன் ‘சூசிபத்திர’ப் (பொருளடக்கப்) பகுதியில் ‘நக்கீரதேவர்’ பாடிய பிரபந்த வரிசையில் ஒன்பதாம் பிரபந்தமாகத் திருமுருகாற்றுப்படை தரப்பட்டுள்ளது. இது பத்துப்பாட்டினைப் பதிப்பிக்காத நாவலர் பதினோராம் திருமுறையைப் பதிப்பித்திருப்பதன்மூலம், திருமுருகாற்றுப்படையை அவர் சமய நூலாகவே கருதிப் பதிப்பித்தார் என்னும் நம் கருத்துக்குத் துணையாகின்றது.

சைவ சமய எழுச்சிக்காகவே கல்விக்கூடங்களை நாவலர் நிறுவினார்; அச்சகம் அமைத்தார் என்பதை “சைவ சமயத்தை வளர்க்க வேண்டுமென்னும் பேராசை சிறுவயதிலேயே இவருக்கு (நாவலருக்கு) உண்டாயிற்று”; “.. .. .. சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்” (கைலாசபிள்ளை 1919: 17, 20*) என வரும் தொடர்கள் உணர்த்துகின்றன. எனவே, சைவப் பரவலுக்காகவே நாவலர் திருமுகாற்றுப்படையைப் பதிப்பித்தார் எனக் கொள்வதே பொருத்தமுடையதாகவும், நாவலரின் உள்ளக்கருத்தை அறிவிப்பதாகவும் தோன்றுகின்றது.

முடிபுகள்

 1. ஒரு பதிப்பாசிரியர் ஒரு நூலைப் பதிப்பிக்க முனைவதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் மறைந்து நிற்கின்றன. அவற்றை அறிவது அப்பதிப்பின் பின்புல அரசியலை உணர்வதற்கு அடிப்படையாகும். ஒவ்வொரு பதிப்பின் பின்னும் நிற்கின்ற இவையே, அப்பதிப்பை ஒரு பதிப்பாசிரியர் உலகிற்குத் தரக் காரணிகளாக அமைகின்றன. மேலும், ஒரு பதிப்பாசிரியரைக் கட்டமைக்கும் பின்புலங்களாகவும் இவையே அமைகின்றன. ஒருவர் சிறந்த பதிப்பாசிரியராக உலகில் நிலைபெற அவர்தம் உழைப்பும் திறனும் அடிப்படைகளாக இருப்பினும், இப்பின்புலங்களும் உதவுகின்றன என்பதை மறுக்க இயலாது. அவ்வகையில் ஒரு பதிப்பாசிரியரின் நோக்கத்தை அறிவதே அப்பதிப்பின் புரிதலுக்குப் பெருந்துணையாகும்.
 2. திருமுருகாற்றுப்படை குறித்த மேற்செய்திகளைக் காணும்போது திருமுருகாற்றுப்படையை முதற்கண் பதிப்பித்தவர் யார்? என்பதிலும், பதிப்பாண்டு எது? என்பதிலும் கருத்துவேறுபாடுகள் இருப்பதை உணரமுடிகின்றது.
 3. ஆறுமுக நாவலர் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டாகப் பான்மையான ஆய்வாளர்கள் 1851 என்றும், ஒருவர் மட்டும் 1857 என்றும் குறித்துள்ளதைக் கண்டோம். இவ்விரு ஆண்டுகளும் நாவலர் பதிப்பு வெளிவந்த ஆண்டுகளல்ல.
 4. ஆறுமுக நாவலர் திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதி 1853இல் பதிப்பித்தபோதும், அதனைப் பத்துப்பாட்டின் முதல் பாட்டு எனக் கருதித்தான் நாவலர் பதிப்பித்தார் எனக் கூறுவதற்கு அவர்தம் பதிப்பில் இடமிருப்பதாகத் தெரியவில்லை.
 5. பத்துப்பாட்டின் எந்தவொரு நூலையும் பாராயணமாகக் கற்கும் வழக்கமில்லை; சமய நூல்களே பாராயணத்துக்கு உரியனவாகத் தமிழர்களிடையே வழங்கி வருகின்றன என்பதை அறியும்போது, திருமுருகாற்றுப்படை ஒரு சமய நூலாகவே நாவலருக்கு அறிமுகமானது. அந்த உணர்வோடுதான் அவர் அந்நூலைக் கற்று வந்தார் என்ற உண்மை புலனாகின்றது.
 6. ஆறுமுக நாவலர் தம் பதிப்புக்களில் நூல்கள்தோறும் முன்னுரை எழுதும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. எனினும், திருமுருகாற்றுப்படையுரைக்குப் ”பிரபந்த வரலாறு” என்னும் பெயரில் முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அம்முன்னுரையின் தலைப்பே நமக்குச் சில கருத்துக்களை உணர்த்துகின்றது. அதில் முதற்கருத்து, திருமுருகாற்றுப்படை ஒரு பிரபந்த நூலாகும் என்பதே. பத்துப்பாட்டு நூல்களைப் பிரபந்த நூல் (சிற்றிலக்கிய நூல்) எனக் குறிக்கும் வழக்கம் தமிழில் இல்லை.
 7. வாய்ப்பு நேருழியெல்லாம் தாம் உரையெழுதிப் பதிப்பிக்கும் நூல் ஒரு பிரபந்த நூலே என்பதை அழுத்தந் திருத்தமாக நாவலர் குறித்துள்ளார். பன்முறையும் அந்நூல் பிரபந்த நூல் எனக் குறித்த நாவலர் ஓரிடத்தும் அது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று என்பதைக் குறிக்கவில்லை என்பதனால், நாவலரின் முதன்மை நோக்கம் பதினோராம் திருமுறையுள் ஒன்றாகத் தாம் நாள்தோறும் பாராயணம் செய்த நூலாகிய திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்து வெளியிடுவதே என்பதை உணரமுடிகின்றது. திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றென அறியும் வாய்ப்பு அவருக்கு இருந்தாலும், அந்நூலைப் பத்துப்பாட்டு நூலாகப் பதிப்பிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதும் தெளிவாகின்றது.
 8. திருமுருகாற்றுப்படையின் இறுதியில் உள்ள வெண்பாக்கள், பத்துப்பாட்டுச் சுவடிகளில் காணப்படாமை; பத்துப்பாட்டினைப் பதிப்பிக்காத நாவலர் பதினோராம் திருமுறையைப் பதிப்பித்ததமை; சைவப் பரவலுக்கான கருவியாகவே திருமுகாற்றுப்படையைப் பதிப்பித்தமை ஆகியனவும் நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு பத்துப்பாட்டுப் பதிப்பன்று என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன.

துணைநூல்கள்

 • அமிர்தலிங்கம் சு., 2000 (முதல் பதிப்பு). சங்க இலக்கியக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
 • அய்யப்பன் கா., 2009 (முதல் பதிப்பு). செம்மொழித் தமிழ் நூல்களின் பதிப்புரைத் தொகுப்பு. சென்னை: காவ்யா.
 • அரவிந்தன் மு.வை., 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
 • ஆறுமுக நாவலர் (உரைஆ.)., பிரமாதீச – ஐப்பசி (1853). திருமுருகாற்றுப்படை. –: வித்தியாநுபாலன யந்திரசாலை.
 • இளங்குமரன் இரா., 1991 (முதல் பதிப்பு). சுவடிக்கலை. சேலம் : அரிமாப் பதிப்பகம்.
 • …………., 2001. சுவடிப் பதிப்பியல் வரலாறு. சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
 • இளமாறன் பா., 2008 (முதல் பதிப்பு). தொல்காப்பியம் பன்முக வாசிப்பு. சென்னை: மாற்று.
 • கைலாசபிள்ளை த., காலயுத்தி – தை (1919). ஆறுமுக நாவலர் சரித்திரம். சென்னபட்டணம்: வித்தியா நுபாலன யந்திரசாலை.
 • சாமிநாதையர் உ.வே.(பதி.ஆ.), 1931 (மூன்றாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: கேஸரி அச்சுக்கூடம்.
 • சிவகாமி ச. (பதி.ஆ.), 2009 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பதிப்பும் பதிப்பாளரும். சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
 • சுப்பிரமணியன் ச.வே. (உரைஆ.), 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு. கோவிலூர் : கோவிலூர் மடாலயம்.
 • சுப்பிரமணியன் ச.வே. (உரைஆ.), 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு. கோவிலூர் : கோவிலூர் மடாலயம்.
 • நித்தியா அறவேந்தன் 2011 (முதல் பதிப்பு), முல்லைப்பாட்டு : பதிப்பு வரலாறு (1889 – 2011). சென்னை: காவ்யா.
 • மணி ஆ.. 2015 (முதல் பதிப்பு), குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள். சென்னை: லாவண்யா பதிப்பகம்.
 •  முத்துச்செல்வன் ஆ. (க.ஆ.) 2008 (முதல் பதிப்பு), ஆறுமுக நாவலர். கரு. அழ. குணசேகரன் & த. பூமிநாதன் (பதி.ஆ.). சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
 • வேங்கடசாமி மயிலை.சீனி. 2012 (முதல் பதிப்பு), பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். சென்னை: பரிசல்  புத்தக நிலையம்.
 • ஜானகி இரா. (தொகு.ஆ.), 2011 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியப் பதிப்புரைகள். சென்னை: பாரதி புத்தகாலயம்.

முனைவர் ஆ.மணி,

துணைப்பேராசிரியர் – தமிழ் &

இணைத் தேர்வாணையர்,

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,

புதுச்சேரி – 605 003,

பேச: 9443927141,

மின்னஞ்சல்: manikurunthogai@gmail.com