வைணவ சமய முதன்மைக் கடவுளான திருமாலை ஆழ்வார்கள் பன்னிருவர் சேர்ந்து பாடிய நாலாயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகும். இப்பாடல்களை இசையுடன் அபிநயம் செய்து பாடும் அரையர்களைப் பற்றியும் அரையர் சேவையைப் பற்றியும் இக்கட்டுரை விளக்க முற்படுகின்றது.

வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை (தமிழும், வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ள உரைகளை வியாக்யானம் என்பர்) அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க் கலை ‘அரையர் சேவை’ எனப்படும்.

ஆழ்வார் பாசுரங்களை ஓதும்முன் தனியன் சொல்லிவிட்டு, பாசுரம் பாட வேண்டும் என்பது வைணவ மரபு. அரையர் மட்டுமே தனியன் பாடாமல் நேரடியாகப் பாசுரங்களைப் பாடும் உரிமை உடையவர். எனவே, இவர்கள் பாசுரங்களுக்கு அரசர்(1) (அறையர் என்று வல்லினமாக எழுதும் மரபும் உண்டு).

ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லுவதால் (அறைதல் – சொல்லுதல்) இக்கலைஞர் அறையர் (அரையர்) என்று அழைக்கப்பட்டனர். திருவரங்கத்தில் உள்ள இறைவன் நம்பெருமாள், இவர்களுக்கு அரையர் என்ற பட்டத்தை முதன் முதலாக அளித்தான் என்று கோயிலொழுகு என்ற நூல் கூறுகிறது(2).

அரையர்களை விண்ணப்பஞ் செய்வார், நம்பாடுவார், இசைக்காரர், தம்பிரான்மார் என்று பல்வேறு பெயர்களில் வைணவ வியாக்யானங்கள், குருபரம்பரை, ஆசார்ய ஹ்ருதயம், கல்வெட்டுக்கள் ஆகியன கூறும்.

அரையர் சேவை என்னும் இந்த முத்தமிழ்க் கலைக் கொண்டாட்டம் ஆழ்வார்களின் பாசுரத்தைப் பண்ணுடன் பாடுதல், பாசுரத்திற்கேற்ப அபிநயஞ்செய்தல், பாசுரத்தின் உரை கூறுதல், கொண்டாட்டம் என்று அமையும்.

தோற்றம்

அரையர் சேவை, கலை வடிவின் தோற்றம் பற்றிய இரு செய்திகளை வைணவ மரபில் காணலாம். இக்கலையைத் திருமங்கையாழ்வார் தோற்றுவித்தார் என்று கோயிலொழுகு பின்வருமாறு கூறுகிறது(3)

இக்கலையின் தோற்றம் பற்றி மற்றுமோர் வரலாற்றை வைணவ குருபரம்பரை நூல்கள் கூறும். இதன்படி இக்கலையைத் தோற்றுவித்தவர் நாதமுனிகள், தமிழ் வேதமான பாசுரங்களை வேதம் போல ஓதும் முறை, அரையர் சேவை ஆகியவற்றை உருவாக்கினார் இவர்.

 நிகழ்ச்சி நடைபெறும் முறை

உற்சவரின் முன் மட்டுமே அரையர் சேவை நிகழ்கிறது. மார்கழி மாதத்தில் பகல்பத்து, இராப்பத்து ஆகிய நாட்களில் மட்டுமே மூன்று தலங்களிலும் இக்கலை ஒருசேர நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்துhரில் மட்டும் வேறு சில நாட்களிலும் ஆடி மாதம், மார்கழி மாதம், மை மாதம்(4) அரையர் சேவை நிகழ்கிறது.

ஒருகாலத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள வைணவக் கோயில்களில் நடைபெற்ற இக்கலை இப்போது ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்றிடங்களில் மட்டும் நடைபெறுகிறது. மைசூரில் உள்ள மேல்கோட்டையில் அரையர் இசையுடன் பாடுவது மட்டும் உண்டு. அபிநயம் இல்லை.

சேவைக்காகத் தனியான ஒப்பனை, உடை, எதையும் அரையர் அணிவதில்லை. கூம்பு வடிவில் அமைந்த குல்லாய் ஒன்றைத் தலையில் அரையர் தரிக்கிறார். இறைவன் சூடிக் களைந்த இரு மாலைகளைக் கழுத்தில் அணிகிறார். குல்லாவைச் சுற்றி இறைவன் சூடிக் களைந்த பரிவட்டம் ஒன்றை அணிந்துகொண்டு, தம் கைகளில் வைத்துள்ள இரு தாளங்களைத் தட்டி ஒலியெழுப்பி அரையர் சேவையைத் தொடங்குகிறார்.

இத்திருநாள் மார்கழி மாதம் வளர்பிறையில் முதல் நாளான பிரதமையில் தொடங்கும். திருவரங்கத்தில் மட்டும் அதற்கு முந்தைய நாளான அமாவாசை அன்று இரவில் திருநெடுந்தாண்டகச் சேவையுடன் தொடங்கும்(5).

சேவையில் இடம்பெறும் பாசுரங்கள்

இன்று சேவைக்கென அரையர் எடுத்துக் கொள்ளும் பாசுரங்கள் பின்வருவன:

1) பகல்பத்திற்கு உரியன: திருப்பல்லாண்டு(6), அடியோமோடும்(7), சென்னியோங்கு(8), ஆற்றிலிருந்து(9), தன் நேர் ஆயிரம்(10) ஆகிய பெரியாழ்வார் பாசுரங்கள், ஆண்டாளின் திருப்பாவை முதற்பாடல்(11) (மார்கழித் திங்கள்) மட்டும், நாச்சியார் திருமொழி “கண்ணன் என்னும்” (12) என்ற பாசுரம், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் ஊனேறு செல்வம்(13, ‘இருள் இரிய(14) என்ற பாசுரம், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலையில் “காவலில் புலனை”(15) மதுர கவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு(16) முதல் பாசுரம் மட்டும், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் ‘வாடினேன் வாடி’(17) தூவிரிய மலர்(18), பண்டைநான் மறை(19), தெள்ளியீர்(20), அக்கும் புலியின்(21), முந்துற உரைக்கேன்(22), திருநெடுந்தாண்டகம் முதல் பதினொரு பாசுரங்கள்(23) (‘மின்னுருவாய்’ தொடங்கி ‘பட்டுடுக்கும்’ முடிய) ‘இரக்கம் இன்றி(24) ஆகியன பகல்பத்தில் இடம்பெறுகின்றன.

      2) இராப்பத்திற்குரியன:

இராப்பத்து முழுவதிலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் சேவிக்கப்டுகின்றன. உயர்வற உயர்நலம்(25) (முதற்பாசுரம் மட்டும்) ‘கிளரொளி இளமை(26) (முதற் பாசுரம் மட்டும்), ‘ஒழிவில் காலம்’(27) (முதற் பாசுரம் மட்டும்) ஒன்றும் தேவும்(28) (முதற் பாசுரம் மட்டும்) ‘எத்தனையோ’(29) (முதற்பாசுரம் மட்டும்) உலகம் உண்ட பெருவாயா(30) (முதற் பாசுரம் மட்டும்), ‘கங்குலும் பகலும்(31), (முதற் பாசுரம் மட்டும்), ‘நெடுமாறிகடிமை’(32), (முதற் பாசுரம் மட்டும்), மாலை நண்ணி(33) (முதற்பாசுரம் மட்டும்)‘தாள தாமரை(34), முனியே நான்முகனே(35) (ஆழ்வார் மோட்சம் – இன்று சாற்றுமுறை) ஆகியன இராப்பத்திற்குரிய பாசுரங்கள்.

அரையர் பரம்பரை

இன்று ஆழ்வார் திருநகரியில் அரையர் குடும்பம் ஒன்று தான் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அரையர் குடும்பம் இரண்டு உள்ளது. திருவரங்கத்திலும் இதே போல் இரு அரையர் குடும்பங்கள் உள்ளன. சேவை நிகழ்த்தும்போது அரையர் இருவர் (தந்தையும், மகனும்) பாடுகின்றனர். ஒருவர் மட்டுமே அபிநயிக்கிறார்.(36)

இக்கலையை  நிகழ்த்தத் தலைப்படுமுன் அரையர் 12 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் முடியப் பயிற்சி பெறுகிறார். கோயில்களில் இறைவனின் திருமுன் மட்டுமே நடைபெறும். கலையாதலால், தூய்மையும் புனிதமும் கருதிப் பெண்களுக்கு இக்கலையில் பயிற்சி அளிப்பதில்லை.

இக்கலையின் நோக்கமே எளிய மக்களும் உணருமாறு ஆழ்வார் பாசுரங்களைப் பண்ணும் கூத்துமாக வெளியிடுவதாகும். இக்கலையைப் பழமை குன்றாமல் போற்றிப் பாதுகாத்தல் இன்றியமையாத செயலாகும்.

முடிவுரை

ஆழ்வார் பாசுரங்களில் எந்தெந்தப் பாடல்கள் அரையர் சேவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதையும் இச்சேவை எங்கெங்கு நடைபெறுகின்றது என்பதையும் அரையர் பரம்பரை பற்றியும் இக்கட்டுரை உணர்த்தி நிற்கின்றது.

அடிக்குறிப்புகள்:

1) நாலாயிர திவ்யப் பிரபந்த அகராதி, ப.96

2) கோயிலொழுகு, ப.34.

3) மேலது, பக்.7-9

4) ஆடி மாதம் (பிரும்மோற்சவத்தில் ஆடிப்பூர விழாவில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்த மறுநாள்) மார்கழி மாதம் (எண்ணெய்க் காப்பு உற்சவத்தில் தை மாதம் பொங்கலின் மறுநாள் காணும்பொங்கல் அன்று) ஆகிய மும்முறை நடைபெறும்.

5) வைணவமும் தமிழும், ப.115

6) பெரியாழ்வார் திருமொழி, 1 – 1

7) மேலது, 1 – 2

8) மேலது, 5 – 4 – 1

9) மேலது, 2 -10 – 1

10) மேலது, 3 – 1 – 1

11) திருப்பாவை, 1

12) நாச்சியார் திருமொழி, 13 – 1

13) பெருமாள் திருமொழி, 3 – 1 -1

14) மேலது, 1 -1

15) திருமாலை, 1

16) கண்ணி நுண் சிறுத்தாம்பு, 1

17) பெரிய திருமொழி, 1 – 1 – 1

18) மேலது,  3 – 6 -1

19) மேலது, 5 – 7 – 1

20) மேலது, 8 – 2 – 1

21) மேலது, 9 – 6 – 1

22) மேலது, 9 – 8 – 1

23) திருநெடுந்தாண்டகம், 1 – 11

24) பெரிய திருமொழி, 10 –  2 – 1

25) திருவாய் மொழி, 1 – 1 – 1

26) மேலது, 2 – 10 – 1

27) மேலது, 3 – 3 – 1

28) மேலது, 4 – 10 – 1

29 மேலது, 5 – 5 – 1

30) மேலது, 6 – 10 – 1

31) மேலது, 7 – 2 – 1

32) மேலது, 8 – 10 – 1

33) மேலது, 9 – 10 – 1

34) மேலது, 10 – 1 – 1

35) மேலது, 10 – 10 – 1

36) திருவரங்கத்தில் மட்டும் அரையர் ஒருவர் முதலிலும் அடுத்து ஒருவரும் ஆக இருவர் அபிநயிக்கும் மரபு உள்ளது. அதே போல் தந்தையும் பிள்ளையுமாக அனைவரும் பாடும் மரபு.

துணைநூற்பட்டியல்

  • அண்ணங்காரம்சாரியார் பி.ப(பதி.), 1969, பெரியாழ்வார் திருமொழி வியாக்யானம், காஞ்சிபுரம்.
  • கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். எஸ்., 1976, கோயிலொழுகு, திருச்சி.
  • சுப்புரெட்டியார் ந., 1998, வைணவமும் தமிழும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • பார்த்தசாரதி ஐயங்கார்(பதி.), 1963, நாலாயிர திவ்யப் பிரபந்த அகராதி, தேவத்தான பத்திரிக்கை வெளியீடு, ஸ்ரீ ரங்கம்.
  • வேங்கடசாமி ரெட்டியார் கி. (பதி.), 1973, நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை.

. தேவி

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17.

[email protected]