திருமாலின் திருவருளைப் பெற்ற பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய தமிழ்ப் பாசுரங்களே நாலாயிர திவ்வியப் பிரபந்தம். இப்பாசுரங்களைத் திரட்டித் தந்தவர் வியாசர். இதனுள் திகழும் பாசுரங்கள் சொற்சுவை, பொருட்சுவைகளில் சிறந்தவை. இத்தகு ஆழ்வார் பாசுரங்களில் இடம்பெற்றுள்ள அணிநலன்கள் குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அணி

கவிஞனின் அழகு உணர்ச்சியை வெளிப்படுத்தும் உத்தியே அணியின் தோற்றத்திற்குக் காரணம். அணி செய்யுள் இடையே அமைந்து, செய்யுளை அழகுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், கற்றவரை மகிழச் செய்யும் பயனையும் அளிக்கின்றது.

தமிழில் அணி இலக்கணம்

தமிழில் அணியினை முழுமைபடக் கூறும் முதல் நூலாகத் திகழ்வது வீரசோழியம். வீரசோழியத்திற்குப் பின் தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திரலோகம், குவலயானந்தம், தொன்னூல் விளக்கம், இலக்கண விளக்கம் எனப் பல நூல்கள் உள்ளன.

தண்டியலங்காரம்

இந்நூல் 35 பொருளணிகளைக் கொண்டது. இந்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். இக்கட்டுரையில் தண்டியலங்காரத்தை அடியொற்றி ஆழ்வார் பாசுரங்களிலுள்ள அணிகள் விளக்கப் பெற்றுள்ளன.

1.தன்மை அணி

ஒரு பொருளின் இயல்புத் தன்மையை நேரில் கண்டாற் போல உள்ளபடி விளக்குவது தன்மையணி ஆகும். தன்மை என்பதற்கு இயல்பு என்பது பொருள். இதனைத் தன்மை நவிற்சி என்றும் குறிப்பிடுவர். வடநூலார் இதனைச் சுவபாவோக்தி அலங்காரம் என்றும் கூறுவர்.

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்

                        எத்திசையும் சய மரம் கோடித்து

                        மத்த மாமலை தாங்கிய மைந்தனை

                        உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே        (இரண்டாம் திருமொழி, 20)

இப்பாடலில் பன்னிரண்டாம் நாள் கண்ணனுக்குப் பெயரிடு விழா நடந்ததையும், அனைத்துத் திசைகளிலும் தோரணம் கட்டப்பட்டு இருந்ததையும், கூர்ம அவதாரம் எடுத்து மந்தார மலையினை முதுகில் தாங்கி அமிர்தம் கிடைக்க உதவிய பாலகனை இடையர்கள் கையில் எடுத்துக் கொஞ்சி மகிழ்ந்ததையும் இயல்பாகவே கூறப்பட்டுள்ளதால் இது தன்மை நவிற்சி அணி ஆயிற்று. இதுவல்லாமல் 16, 19, 281, 174, 338, 475, 481, 485, 487, 488, 489, 490, 492, 493, 501, 502, 503, 135, 282, 1158, 1232, 1260, 1499, 1152, 1166, 1280 ஆகிய பாடல்களிலும் தன்மை அணி அமைந்துள்ளது.

2.உவமை அணி

ஒருவன் தான் கூறக் கருதிய பொருளை அதனோடு ஒப்புமை உடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவது உவமை அணியாகும்.

உருவார் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து

                        திரிவாயென்று சிந்தித்தி என்றதற் கஞ்சி

                        இருபாடெரி கொள்ளியினுள் எறும்பேபோல்

                        உருகாநிற்கும் என்னுள்ளம், ஊழி முதல்வா!         (எட்டாம் திருமொழி,2025)

திருமாலே! பிரளய காலத்தில் உலக முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுக்காக்கிற தலைவனே! பலவகைப் பிறப்புக்களில் இன்னமும் என்னைப் பிறக்க வைத்துத் திரியக் கடவாய் என்று எண்ணுகின்றாயோ என்று பயந்து இருபுறத்திலும் நெருப்புப் பற்றி எரியும் மரக்கட்டையின் நடுவில் தவிக்கும் எறும்பு போல் என் உள்ளம் உருகித் தவிக்கின்றது என்று ஆழ்வார் சொல்கிறார். இப்பாசுரத்தில் ‘போல’ என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளதால் இது உவமை அணி ஆயிற்று.

மேலும், கீழ்க்கண்ட பாசுரங்களில் இதுபோன்ற உவம உருபுகள் இடம் பெறுகின்றன. அந்தப் பாசுர எண்கள்: 24, 30, 36, 93, 94, 86, 108,271, 273, 477, 478, 494, 495, 496.

3.உருவக அணி

உவமானம், உவமேயம் என்னும் இரண்டுக்கும் வேற்றுமை இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும். ரூபகம் என்னும் சமற்கிருதச் சொல்லே உருவகம் என்றாயிற்று.

பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப்

                        பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா

                        செவ்வி மாதிர மெட்டும் தோளா, அண்டம்

                        திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்               (திருவிருத்தம்,2550)

திருமாலுக்குக் கடல்நீரே உடையாகவும், உலகப் பரப்பளவு பாதங்கள் ஆகவும் காற்றே திருமேனியாகவும் எட்டுத் திசைகள் திருத்தோள்கள்களாகவும் அண்டமே திருமுடியாகவும் உருவகப்படுத்தியுள்ளார் ஆழ்வார். மேலும் இதுபோன்ற உருவகம் பின்வரும் பாடல்களிலும் காணப்படுகின்றன. அவை : 2946, 2724, 269, 2182, 2134, 2546.

4.விரோத அணி

இவ்வுலகத்தில் ஒன்றற்கொன்று மாறுபட்ட சொற்களும் உண்டு; பொருள்களும் உண்டு. அவற்றைக் கொண்டு மாறுபாட்டுத் தன்மையின் விளைவு தோன்றக் கூறுவது விரோத அணியாகும். இதற்கு ‘முரணனி’ என்னும் வேறு பெயரும் உண்டு.

நல்குரவும் செலவும் நரகும் சுவர்க்கமுமாய்

                        வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் (மூன்றாம் திருவாய்மொழி, 3365)

இதில் வறுமை, செல்வம், நரகம், சொர்க்கம், பகை, நட்பு என்பன ஒன்றோடு ஒன்று மாறுபட்டு நிற்பதால் இது விரோத அணி ஆயிற்று. மேலும் இதுபோன்ற முரண்பாடான சொற்கள் கீழ்க்கண்ட பாடல்களில் காணப்படுகின்றன. 3366, 3367, 3368, 3369, 3370, 3374, 3535.

5.அதிசய அணி

கவிஞன் தான் கூறக் கருதிய ஒரு பொருளின் உண்மைத் தன்மையினை உள்ளபடி கூறாமல் உயர்த்திக் கூறுதலை விரும்புவான். அக்கவிஞனின் கூற்றானது சான்றோருக்கும் வியப்பைத் தருவதாய் உலக இயல்புக்கு மாறானதாய் அமைவதே அதிசய அணி ஆகும். இது உயர்வு நவிற்சி அணி என்றும் அழைக்கப்படும்.

சாறுகொண்ட மென்கரும் பிளங்கழை தகைவிசும்புற மணிநீழல்

                        சேறு கொண்ட தண்பழனத் தெழில்திகழ் திருவயிந் திரபுரமே

(பெரிய திருமொழி – முதல் திருமொழி,1157)

இப்புனிதத் தலம் ஒன்றோடொன்று நெருங்கி, சாறு நிறைந்து கரும்புகள் தடை செய்யும் ஆகாயத்தைத் தொட்டு வளர்ந்திருப்பதால் அதன் சாறு வழிந்து கழனிகள் சேறு நிறைந்ததாய்க் காணப்படுவதால் இது உயர்வு நவிற்சி அணி எனப்படும். இவையல்லாமல் 1179, 341, 1153, 1231, 1235, 1243, 1297, 1362, 2356, 2370, 2484 ஆகிய பாடல்களிலும் அதிசய அணியின் கற்பனைத் திறன்கள் மிக்குக் காணப்படுகின்றன.

6.தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பது தற்குறிப்பேற்றணியாகும்.

சோலைத்தலைக் கண்மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து

                        எங்கும் ஆலைப்புகை கமழும் அணியாளம்மானே

(பெரிய திருமொழி – ஐந்தாம் திருமொழி.1189)

மயில்கள் மேகங்களைக் கண்டு தோகை விரித்துக் கூத்தாடுவது இயல்பு. ஆனால் ஆழ்வார் கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு அடுவதனால் விசேசமாகப் புகைகிளம்பி எங்கும் பரவியிருப்பதைக் கண்ட மயில்கள் அப்புகைத்திரளை மேகத்திரளாக மயங்கிக் களித்துக் கூத்தாடுகின்றனவாம் என ஏற்றிக் கூறியதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆகும். இவையல்லாமல் 1154, 1752, 2529, 2484, 2515, 2519 ஆகிய பாடல்களிலும் தற்குறிப்பேற்ற அணி காணப்படுகின்றது.

7.சொற்பொருள் பின்வரு நிலையணி

முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடத்தும் வருவது சொற்பொருட் பின்வரு நிலையணி ஆகும்.

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்

                        கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்…          (ஆறாம் திருமொழி, 3288)

கடல்களால் சூழப்பட்ட இந்த உலகத்தைப் படைத்த்தும் நானே என்றும், இந்த உலகமாக இருப்பதும் நானே என்றும் ‘நானே’ என்ற சொல் பலவிடத்தும் வந்து ஒரே பொருளைத் தருவதாக அமைந்துள்ளது. இவையல்லாமல் 3289, 3290, 3291, 3292, 3293, 3294, 3295, 3296, 3297, 3507, 3474, 3408, 3536 ஆகிய பாடல்களிலும் சொற்பொருள் பின்வரு நிலையணி வந்துள்ளது.

முடிவுரை

படைப்பாளனின் அறிவுச் சிறப்பையும், கற்பனைத் தன்மையையும் வெளிப்படுத்தக் கிடைத்த களமே படைப்பு. அப்படைப்பில் தான் கூறவந்த பொருளை வாசகர்க்குக் கொண்டுசேர்க்க வருணனை, கற்பனை உள்ளிட்ட புலமைநலங்களைத் தாண்டி அணிநலன்களை இடம்பெறச் செய்வதும் படைப்பாளனின் படைப்புத் திறனைக் காட்டுவதாக அமையும். அவ்வகையில், திருமாலின் அருட்சிறப்புகளைப் பாசுரங்களாகப் பாடிய ஆழ்வார்கள் பல்வேறு அணிகளைக் கையாண்டு சிறப்பித்துள்ளனர். இதனை அவர்கள் பாடிய நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின்வழிக் கண்டுகொள்ள முடிகின்றது.

துணைநின்றவை

  • கண்ணன் இரா., 2003, அணியிலக்கண வரலாறு, கூத்தன் பதிப்பகம், சென்னை.
  • பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ சுவாமிகள் (பதி.), 2013, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், வனிதா பதிப்பகம், சென்னை.
  • பிரஸில்லா அ., 2007, ஆழ்வார் தாலாட்டு, சேகர் பதிப்பகம், சென்னை.
  • ……………………, 2002 (21ஆம் பதி.), தண்டியலங்காரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

க.ரேவதி

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17

[email protected]