முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் பல்வேறு கருத்தரங்கநிகழ்வுகளுக்குச் செல்லும்போது தமிழன்பர்கள்வழியும் என் பேராசிரியர்வழியும் தமிழறிஞர் ச.வே.சு.வின் ஆளுமையைப் பற்றிக் கூறக் கேட்டு அறிந்த நான்,  நேரில் கண்டு உணர்ந்த ஆளுமைத்திறத்தை மட்டும் இவ்வுரையின்வழி வெளிப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.

அறிஞர் பெருமகனாரை நான் நேரில் கண்டதோ முத்தாய்ப்பாக நான்கு முறைதாம்.   முதற்காட்சி (2009, மார்ச்) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில். மூன்றாம் காட்சி (2012, திசம்பர்) கோவை – கற்பகம் பல்கலைக்கழகத்தில். நான்காம் காட்சி (2012, திசம்பர்) அறிஞர் ஆண்டுதோறும் (தன் வாழ்நாள் வரை) மெய்யப்பன் தமிழாய்வகத்துடன் இணைந்து தன் இல்லத்தில் நிகழ்த்திய கருத்தரங்கில். இம்மூன்று நிகழ்விலும் அறிஞர் ச.வே.சு. விழா நாயகராய்!.. நான் பார்வையாளனாய்!.. இடைப்பட்ட இரண்டாம் காட்சியே அறிஞரின் ஆளுமையை அருகிலிருந்து கண்டுணரச் செய்தது. நிகழ்ந்த இடம் – உலகத் தமிழ்க்கல்வி இயக்கம், தமிழூர்.

தென்னக நூலகங்கள் நூலுருவாக்கத்திற்கான தரவுதிரட்டலின்போது (ஏரியா வரையறை செய்தலின்போது) அறிஞரின் இல்ல நூலகத்தையும் குற்றாலம் பராசக்தி கல்லூரி நூலகத்தையும் பற்றி எழுத வேண்டிய பணிப்பகிர்வு இயல்பாகவே எனக்கு அமைந்தது. மதுரையைத்தாண்டிச்சென்ற்றியாதநான், மனத்துள் குதூகலத்தை மறைத்துக்கொண்டு இயல்பாகவே ஒப்புக்கொண்டேன் (குதூகலத்துக்குக் காரணம் குற்றாலமன்றி வேறன்று!).

2012 ஏப்ரல்மாதம்… கற்பகம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த நேரம்… வெள்ளி, சனி என இருநாள் தரவுதிரட்டும் பணி எனத் திட்டமிட்டுக் கொண்டேன். முதல் நாள் கல்லூரி நூலகத்தை முடித்துவிட்டு, அன்றிரவு பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் என் நண்பன் அ.ஜான்பாலின் அறையில் தங்கி, மறுநாள் காலையில் திருநெல்வேலியிலிருந்து சென்றேன் தமிழூர் நோக்கி…

வெளியுலகப் பழக்கவழக்கத்தில் நான் காட்டும் தயக்கத்தை நன்குணர்ந்திருந்த என் பேராசிரியர், எனது வருகையின் நோக்கம் குறித்துத் தமிழூரறிஞரிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தமை தைரியமாய் நான் பயணிக்க ஏதுவாக அமைந்தது.

தமிழறிஞர் கால்கோளிட்ட தமிழூரில் நான் தடம் பதிக்கும்போது மணி 10.15 இருக்கும். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விசாரித்தபோது எல்லோரும் ஒரே திசையை நோக்கிக்கை நீட்டினர். சிறிது தூரம் கடந்து சென்றபோது மூன்று கடைகள் கொண்ட நீண்ட வணிகக் கட்டிட அமைப்புத் தோன்றியது. முதல் அறையின் முகப்பில் பெரிய எழுத்துக்களில் “உலகத் தமிழ்க்கல்வி இயக்கம் – தமிழூர் – 627 808” என எழுதப் பெற்றிருந்தமை கண்டேன்; உவகை கொண்டேன். அலுவலகத்தில் அப்பொழுது யாரும் இல்லை. அருகிலிருந்த கடையாளரிடம் கேட்டேன். எட்டு வைக்கும் தூரத்தில் உள்ள இல்லத்தைக் காட்டினார் அவர். கடந்தேன்.. விரைவாய் நடந்தேன் 10 மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்த காரணத்தால்…

மீண்டும் வழக்கமான தயக்கம் தொற்றிக்கொள்ள, உள்ளே சென்றேன் (இதுநாள் வரை விழா அரங்கங்களில் பத்து மீட்டர் இடைவெளியில் மட்டுமே பார்த்த பெருமகனாரை அருகிருந்து பார்ப்பதென்றால் தயக்கம் வராமல் என்ன செய்யும்). இல்லத்தின் முகப்பறையில் கணீர் குரலொன்று கேட்டது. சாய்வு நாற்காலியில் அறிஞர் அமர்ந்திருக்க, அருகில் அவர் முகம் நோக்கியவாறு அவரது அகவையொத்த பெரியவரும் அமர்ந்திருக்க, பப்பாளிப் பழத்துண்டுகள் அடங்கிய தட்டொன்றும் இருவர்க்குமிடையே ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தது.  சிற்றிலக்கியங்கள் தொடர்பான விவாதம் போய்க் கொண்டிருந்ததை என்னால் உள்வாங்க முடிந்தது.

வணக்கஞ் செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கற்பகம் பல்கலைக்கழகம் என்றதும், “இராச.வசந்தகுமார் நல்லா இருக்கிறாரா?” என்று வாஞ்சையோடு நிறுவன வேந்தரை நலம் விசாரித்தார் அறிஞர். அருகில் நின்ற உதவியாளர் திரு.ஆறுமுகம் அவர்களை அழைத்து, “நூலகத்தைத் திறந்துவிடு, இவர் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, எல்லா உதவிகளையும் அருகிலிருந்து செய்து கொடு” என்று ஆணையிட்டார். இதற்கிடையில் ஒரு நிகழ்வு. அந்நிகழ்வின் ஆரம்பம்தான் என்னைத் தூக்கிவாரிப் போட்டது…

“பதிப்பு வரலாற்றில் நீ எந்த நூலுக்குப் பதிப்பு வரலாறு எழுதினாய்?” என (ஒருமையில்) கேட்டார் அவர். துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்ற தன் மாணவரையே அவர் இவ்வாறு ஒருமையில் பேசுவதை (அவையில் அவ்வாறு பேசிக் கண்டதில்லை!) நான் பின்னாளில் கவனித்திருக்கின்றேன். பவ்வியமாய், “கலித்தொகைக்கு எழுதினேன் ஐயா” என்றேன் நான். இல்லத்தின் மைய அறையைக் காட்டி, “அங்கே காவ்யா பதிப்பகம் வெளியிட்ட பதிப்பு வரலாற்று நூல்கள் எல்லாம் உள்ளன. உன் நூலை எடுத்து வா!”என்றதும் எனக்கு வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது. உள்ளே சென்று என் நூலைக் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்ததும் வயிற்றுக் கலக்கம் அதிகரித்தது. கலித்தொகைப் பதிப்பு வரலாற்று நூலில் நான் எந்த இடத்தில் அறிஞர் ச.வே.சு. எழுதிய கலித்தொகை உரையில் உள்ள குறையைச் சுட்டியிருந்தேனோ சரியாக அந்தப் பக்கத்தில் அடையாளத்துக்காக ஒரு தாள் மடித்து வைக்கப்பட்டிருந்ததே என் வயிற்றுக் கலக்க அதிகரிப்புக்குக் காரணம். மனுசன் என்ன கேட்கப் போறாரோ தெரியலையே என மனத்துக்குள் எண்ணியவாறே தயங்கி வெளியில் வந்து நூலைக் கொடுத்தேன். வாங்கியவர், “தொடர்ந்து புத்தகங்கள் எழுத வேண்டும். ஆராய்ச்சிப் புத்தகங்களாகவே எழுத வேண்டும். கவிதைப் புத்தகம், கதைப் புத்தகம் எழுத நாட்டுல ஆள் நிறைய இருக்கானுக…” என்றவர் கடைசிவரை நான் எதிர்பார்த்துக் கலங்கியிருந்த அந்தக் குறையைப் பற்றிக் கேட்கவே இல்லை. உத்தரவு வாங்கிக்கொண்டு இல்லத்தின் மாடியில் உள்ள நூலகத்துக்குச் சென்றேன் திரு.ஆறுமுகத்தின் பின்னால்.

சரியாக 1 மணி இருக்கும். காலையில் கீழே கேட்ட குரல் இப்பொழுது மாடியில் கேட்டது. உள்ளே வந்தார் அறிஞர். ஆறுமுகத்தை அழைத்து, “இவரை உணவகத்துக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்து நீயே பணம் கொடுத்து, சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்து கூட்டி வருவது உன் பொறுப்பு” என்றார். “சரிங்கையா, நான் பாத்துக்கிறேன்” என்றார் ஆறுமுகம்.

தரவு திரட்டலில் மனநிறைவு பெற்று மாலையில் நன்றி கூர்ந்து விடைபெற்றேன். நூலகத்தில் உள்ள சில நூல்கள் அன்பளிப்பாக அளிக்கப்பெற்ற நூல்களாகத் திகழ்ந்தமை கண்ட நான், இனி நாம் எழுதும் நூலின் ஒரு படியை அறிஞருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உறுதி கொண்டேன். அந்த ஆண்டில் நான் எழுதிய சமூகவியல் நோக்கில் கலித்தொகை வாசிப்பு எனும் நூலை அனுப்பியிருந்தேன். மறுவாரத்தில் எனக்கு வந்த கடிதத்தில் ஒன்று தமிழூரில் இருந்து வந்திருந்தது நூல்மதிப்புரையாய்.. என் நூலைப் பாராட்டி வந்த முதல் கடிதம் அதுதான். அடுத்த ஆண்டில் தென்னக நூலகங்கள் தொகுப்புநூலை அனுப்பியிருந்தேன். ஆறுமுகம்வழிக் கடிதம் வந்தது. இன்றும் நூல் அனுப்புகின்றேன்.

பாராட்டிப் பதில் எழுத ‘அவர்’ இல்லையே…!

 

முனைவர் மு.முனீஸ்மூர்த்தி

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

பிசப் ஹீபர் கல்லூரி

திருச்சி