Month: November 2017

தனித்தமிழ்ச் சிறுகதைகள்

உரைக்களம் மறைமலையடிகளால் ஊட்டப்பட்ட தனித்தமிழ் உணர்ச்சியும், தனித்தமிழ்ப் படைப்புக்களும் தமிழ் இலக்கியப் பெருவெளியில் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை. தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கிவைத்த பெருமைக்குரிய மறைமலையடிகளே, தனித்தமிழ்ப் படைப்புக்களைத் தந்து, அதன் இலக்கிய வரலாற்றுக்கும் முன்னோடியாக விளங்குகின்றார் என்பர். எனினும், தற்காலத்தில் கிடைக்கின்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் தனித்தமிழ் இலக்கியங்களின் வரலாறு கூறப்படுகின்றதா? என்ற வினாவுக்கு விடை இல்லை என்பதே. பிற மொழிக்கலப்புடைய இலக்கியங்களுக்கு எழுதப்படுகின்ற வரலாறுகளைவிடத் தனித்தமிழ் இலக்கியங்களுக்கு எழுதப்படுகின்ற வரலாறே மெய்யான தமிழ் வரலாறாக அமையும் பெற்றியுடையதென்பதனை மறுப்பார் உண்டோ?. எனினும், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுவாருக்குத் தனித்தமிழ் உணர்வின்மையானே இத்தகைய நிலைகள் தொடர்கின்றன என்றே கருதத் தோன்றுகின்றது. இனியாகிலும் இத்தகைய நிலைகள் நீக்கப்பட வேண்டும். இனி எழுதப்படுகின்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் தனித்தமிழ் இலக்கியப் படைப்புக்களின் வரலாறு இடம்பெற வேண்டும் என்பதே நம் விழைவு. இது நிற்க. தனித்தமிழ்ச் சிறுகதைகள் என்னும் பெயரிய இந்த ஆய்வுரை, தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளை அறிமுகம் செய்வதுடன், அச்சிறுகதைகளின் இயல்பினை எடுத்துரைக்க முயலுகின்றது. அத்தோடு, பிற சிறுகதைகளுக்கும் தனித்தமிழ்ச் சிறுகதைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்குவதும் இவ்வுரையின் நோக்கமாகும். இம்முயற்சிக்கு, க. தமிழமல்லன் வெளியிட்டுள்ள விருந்து, வந்திடுவார், மஞ்சளுக்கு வேலையில்லை, வழி, வெல்லும் தூயதமிழ் சிறுகதைச் சிறப்பிதழ் (2014, 2015, 2016) ஆகிய நூல்களும் இதழ்களும் அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், க. தமிழமல்லனின் தனித்தமிழ் வளர்ச்சி, தனித்தமிழ் ஆகிய ஆய்வுநூல்களும், இரா. இளங்குமரனின் தனித்தமிழ் இயக்கம், கு. திருமாறனின் தனித்தமிழ் இயக்கம் ஆகிய ஆய்வுநூல்களும் பிறவும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. ஒரோவழித் தமிழ் இலக்கண; இலக்கியங்களும், அவற்றின் உரைகளும், ஆய்வுகளும் பயன்கொள்ளப்பட்டுள்ளன. தனித்தமிழின் வரலாற்றுத் தொன்மை தமிழ் இலக்கண; இலக்கிய வரலாற்றைப் படித்தறிந்துள்ள பலருக்குத்  தனித்தமிழ் வரலாறு புதுமையாகவும் மருட்கைக்குரியதாகவும் தோன்றலாம். தனித்தமிழ் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் பலரும் (க. தமிழமல்லன் 1978:  4; இரா. இளங்குமரன் 1991: 16; கு. திருமாறன் 2003: 35) வடமொழியெழுத்துக்களைத் தமிழாக்கி எழுதுவதற்குத் தொல்காப்பியர் கூறியுள்ள கருத்துக்களை எடுத்துக்காட்டி, அவர் காலத்திலேயே மொழித்தூய்மைச் சிந்தனைகள் இருந்துள்ளதை விளக்கியுள்ளனர். கிடைத்துள்ள நூல்களில் தமிழின் முதல்நூல் எனக் கூறத்தகும் தொல்காப்பியம் மொழித்தூய்மைச் சிந்தனையுடையதாதலை அறியும்போது, தமிழர்தம் மொழிக்காப்புச் சிந்தனைகளை உணரமுடிகின்றது. தொல்காப்பியமும் மொழிக்காப்பும்...

Read More

வியங்கோள் வினை வடிவ வளர்ச்சியும் சமூகப் பின்புலமும்

ஒரு மொழியின் இலக்கணக்கூறுகள் அம்மொழி வழங்கும் சமூகத்தைச் சார்ந்தே அமைகின்றன. ஓர் இலக்கணக்கூறிற்கான சொற்றொகுதி மற்றும் அமைப்பு நிலைகளிலான மாற்றங்கள் அவற்றின் சமூகப் பின்னணியிலேயே நிகழ்கின்றன. தமிழில் காணப்படும் வியங்கோள் வினைமுற்றுக் குறித்த காலந்தோறுமான கருத்தாக்கங்களை உற்றுநோக்கினால் சமூக மாற்றத்திற்கேற்ப, இவ்அமைப்பு மாற்றம் பெற்று வந்திருப்பதும் அம்மாற்றங்களை இலக்கணவியலாளர் முன்னெடுத்துச் சென்றிருப்பதும் தெளிவாகின்றன. இவ்வியங்கோள் வினையினைச் சமூக அடிப்படையில் ஆராய்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி, ‘வியங்கோளுக்குரியனவாகக் கொள்ளப்படும் வாழ்த்தல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல் ஆகியன உயர்மட்டமக்களின் நிலைகொண்டு வகுக்கப்பட்டுள்ளவையே. வியங்கோள் உயர்நிலை வழக்காக, கீழ்நிலைப்பட்டோரை ஏவற்கடுமையுடன் ஆணையிடுவது ஏவல்வினையாயிற்றென்ப. நெருங்கிய உறவுள்ளோரிடத்தும் இம்முறையைப் பயன்படுத்தலாமெனினும், ஏவல் வினையின் சமூக முக்கியத்துவம் மரியாதையற்ற ஏவலுக்கு இலக்கணங்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளமையையே எடுத்துக்காட்டுகின்றன. அதாவது சமூக ஏற்றத்தாழ்வினை இலக்கணம் பிரதிபலிக்க வேண்டியதாயிற்று’ (1942:45) என்கிறார். பொருண்மை அடிப்படையில் மட்டுமன்றி, வரலாற்று நோக்கில் வியங்கோளின் அமைப்பு ஆராயப்படும்போதும் சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் வளர்ச்சி நிலை அமைந்துள்ளதை அறியமுடிகிறது. தொல்காப்பியம் வியங்கோள் வினை குறித்துப் பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறது. அகர ஈற்று ‘ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி ’ இயல்பாகப் புணரும் (உயிர் மயங்கியல், 8) வாழிய என்னும் கிளவியின் இறுதி யகரம் புணர்ச்சியில் கெட்டும் வரும் (உயிர் மயங்கியல், 9) ஒரு தொடரில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் எண்ணி வரும்போது வியங்கோள் வினைமுற்று வரும் (கிளவியாக்கம், 43) எழுவாய் வேற்றுமை வியங்கோள் வினையைப் பயனிலையாக ஏற்று வரும் (வேற்றுமையியல், 4) இருதிணைக்கும் உரிய திணை (வினையியல், 25) தன்மை, முன்னிலையில் மன்னாது, படர்க்கையிலேயே வரும்(வினையியல், 29) மா என்னும் இடைச்சொல் வியங்கோட்கண் அசையாக வரும் (இடையியல், 24) வியங்கோள் குறித்த இக்கருத்துக்களைஅடிப்படையாகக் கொண்டு உரையாசிரியர்களும், பின்வந்த இலக்கண நூலாரும் தத்தம்கருத்துக்களைக் கட்டமைக்கின்றனர்;வியங்கோள் வினைமுற்றின் அமைப்பினை அதன் விகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வரையறுக்கின்றனர்.     திணை பால் உணர்த்தாத நிலை மாறி,  பால் உணர்த்தும் அமைப்புகளுடன் விகுதிகள் இணைவது அவற்றின் அமைப்பு நிலையில் காணும் வளர்ச்சிப் போக்காகும். தொல்காப்பியர் வியங்கோளுக்கான விகுதிகள் எனத் தனியாக எவற்றையும் கூறவில்லை. அகர ஈற்றுப் புணர்ச்சியில் வியங்கோளைக் குறிப்பிட்டுள்ளார் என்பதால் வியங்கோள் விகுதியாக ‘க’ என்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வியங்கோளிற்கான விகுதிகளைப் பட்டியலிட்டுள்ளனர்....

Read More

வங்காளத் திரைப்பாடலின் செவ்வியல் தன்மை

“செம்மொழியின் அடிப்படையான பதினொரு பண்புகளும் (தொன்மை, தனித்துவம், பொதுமை, நடுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலையறிவு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்துவம், மொழிக் கோட்பாடு) நவீனத் தமிழ்க் கவிதையில் பொருத்துவது சாத்தியமற்றது. இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் எல்லாவிதமான அடையாளங்களும் அழிக்கப்பட்டு ஒற்றைத்தன்மை வலியுறுத்தப்படுகின்றது. இன்னொருபுறம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை, பாரம்பரியமான வாழ்க்கை முறையில் சிதிலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைக்குத் தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய நிலையில் சங்க இலக்கியத்தில் காணப்பெறும் செம்மொழிப் பண்புகள்  அல்லது மரபின் தொடர்ச்சி நவீனக் கவிதையில் எங்ஙனம் வெளிப்படுகின்றன என்பது முக்கியமானது. மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கும் என்பது நவீனத் தமிழ்க் கவிதைக்கும் பொருந்தும்.” (ந.முருகேசபாண்டியன் (2014):நவீன தமிழ்க் கவிதைகளும் செம்மொழிக் கூறுகளும், உயிர்மை, நவம்பர் மாத இதழ்) வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் தாண்டிய ஆடம்பரமான  பிற தேவைகளுக்கான தொடர் ஓட்டத்தில் கலை-இலக்கியங்கள் பொருட்படுத்தப் படுவதில்லை. கலையும் இலக்கியமும் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய நிலை இல்லாமல் போய்விட்டது. நேரத்தைக் கடத்த வேறு எதுவுமே இல்லாத நிலையில் அவ்விடத்தை நிரப்பக் கலை-இலக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையும் முழுக்க முழுக்க கேளிக்கைத் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும் என்பதே மனிதர்களின் இன்றைய மனநிலையாக இருக்கிறது. அதற்கு முற்றிலும் எதிர்த்தன்மையானதாக அறிவுரை பரப்பும் பிரச்சார கலை-இலக்கிய வடிவங்கள் இருக்கின்றன. இதற்கு இடையில் இயங்கும் அகநிலை உணர்வுகள் சார்ந்த கலை-இலக்கியங்கள், கீழே விழுந்த பொருளை எடுத்துக் கொடுத்த ஒருவனுக்குத் தரும் ஒரு வெற்றுப் புன்னகையின் மதிப்பைத்தான் பெறுகின்றன. மனிதனின் அகமனத்தேவை, சிக்கலை உணர்தல், தனிமனித ஒழுக்கம், சகமனிதனிடத்துக் கொண்டுள்ள உறவு ஒழுக்கம், கலைந்திருக்கும் மனித வாழ்க்கையின் நேர்க்கோவை போன்றவற்றைத் தாமாகவே உணர வைக்கும் தன்மை கொண்டவை மேற்கூறிய இரண்டிற்கும் இடையில் கலை-இலக்கியங்களே. இதனைக் காலந்தோறும் கலை இலக்கியங்கள் செய்து கொண்டே வருகின்றன. ஆனால் அதனைத் தனது தேவைகள் தாண்டிய ஆடம்பரமான  பிறதேவைகளைப் பெறுதலுக்கான தொடர் ஓட்டத்தில் மனிதர்கள் கண்டுகொள்வதில்லை; அல்லது அதனைக் கலை-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டவில்லை என்றும் கூறலாம். இதனைச் செய்யாததன் விளைவுதான் இன்று பல சாமியார் மடங்களின் செல்வாக்கு மிக்க, செலவுமிக்க ஆன்மீக வணிகத்திற்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இக்கட்டுரையானது வங்காளத் திரைப்பாடலொன்றின்* உள்ளுறைந்திருக்கும் அகமன...

Read More

நீலத்திமிங்கல (Blue Whale) விளையாட்டும் அறிவுசார் விழிப்புணர்வின் தேவையும்

அறிமுகம் புதுமை நிறைந்த விஞ்ஞான உலகத்தின் பரப்பு விசாலமானது. வியக்க வைக்கும் நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் தொடர்பால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகையே உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்ட ஆக்கப் பூர்வமான படைப்புக்களான திறன்பேசிகள் தினந்தோறும் ஆச்சரியப்பட வைத்தாலும் மறுபுறம் மனிதகுலத்தின் அழிவுக்கான பாதையினையும் உருவாக்கிட வழிசமைக்கின்றன. உலகமானது தொழில்நுட்பத்தினுடைய வரலாற்றுக்காலத் தொடக்கம் முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தே வந்துள்ளது. திறன்பேசி உருவாக்கமானது எண்ணில் அடங்காத பயன்களை உலகிற்குக் குறைவின்றி வழங்குகின்றது. இணையத்தின் துணையுடன் திறன்பேசிகள் ஆற்றும் சேவைகளுக்கு அளவே இல்லை. அந்த வகையில்தான் பொழுதுபோக்கான சுவாரசியமான அம்சங்கள் கொண்ட பல விளையாட்டு நிகழ்ச்சி வடிவங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கேற்ற வகையில் திறன்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணையத்தோடு இணைந்ததான திறன்பேசிகளின் ((Smart Phone) பயன்பாட்டில் பொழுதுபோக்கான அம்சங்கள் கொண்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிப் போகாதவரே இல்லை எனலாம். இவ்விதமே இன்று திறன்பேசிகளிலும் கணினியிலும் எல்லோரது கவனத்தினையும் ஈர்த்துள்ள விளையாட்டாக “நீலத் திமிங்கலம்”(Blue Whale) காணப்படுகிறது. சவால் நிறைந்த உணர்வுகளுடன் விளையாடப்படுகின்ற “நீலத்திமிங்கலத் தற்கொலை விளையாட்டு” உலகையே அச்சுறுத்துகின்றது. நீலத்திமிங்கல விளையாட்டானது பொழுதுபோக்கான விளையாட்டாக அல்லாமல் உயிரை மாய்க்கும் தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டாகத் திகழ்வதுடன் சமூகத்தில் பல மோசமான விபரீத விளைவுகளையும் உருவாக்கியுள்ளது. சிறுவர்களையும் இளைஞர்களையும் அடிமைப்படுத்துகின்ற இந்த விளையாட்டானது இன்றைய மனிதகுலத்திற்கு மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பாரிய நோயாக உருமாறியுள்ளது. இவ்விதமே விரும்பியோ விரும்பாமலோ பல காரணங்களால் இவ்விளையாட்டிற்குப் பலர் அடிமையாகித் தங்கள் உயிரினையும் மாய்த்துக் கொள்கின்றனர். இணைய விளையாட்டாகிய நீலத்திமிங்கல விளையாட்டு, தரவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்படுவது சவால் நிறைந்த உணர்வினை விளையாடும் நபருக்கு ஏற்படுத்தினாலும், மறுபுறம் இவ்விளையாட்டின் இறுதியில் அந்நபரை மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்வதோடு இது மனித உயிரைக் குடிக்கும் உயிர்க் கொல்லியாகவும் மாறியுள்ளது. நீலத்திமிங்கல விளையாட்டின் தோற்றம் திறன்பேசிகளின் வருகைக்குப் பின்னர் அவற்றில் பயன்படுத்தக்கூடிய வகையில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிநிரல்கள் (Programmes) நாளுக்குநாள் தொழில்நுட்பச் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் இணைய விளையாட்டாக அடையாளப்படுத்தப்படும் நீலத்திமிங்கல விளையாட்டானது உலக அளவில் இன்று பேசப்படுவதனைக் காணலாம். இந்த விளையாட்டினை “நீலத் திமிங்கல சவால்”(Blue Whale Challenge) எனவும் கூறலாம். நீலத்திமிங்கலம் என்ற சொற்பதமானது கடல் திமிங்கலங்களின் தற்கொலை என்னும் பதத்தோடு தொடர்புடையது. இவ் விளையாட்டானது...

Read More

பத்துப்பாட்டு உயிரினங்கள் உணர்த்தும் உலக உண்மைகள்

தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழ்மக்களின் பண்பாட்டு மரபையும் உலகறியச் செய்ததோடு, உலகத்தார் கவனத்தையும் ஈர்த்து, பரந்துபட்ட ஆய்வுக் களங்களைக் கற்போருக்கு வழங்கும் சிறப்பிற்குரிய இலக்கியமாகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழரின் வாழ்வானது உயர்ந்த நற்சிந்தனை, வாழ்வறம், வீரம், கொடை, விருந்தோம்பல், உயர் ஒழுக்கத்தின் ஊற்று, போர் மறம் என்பன போன்ற எண்ணற்ற ஒழுகலாறுகளைக் கொண்டது. இத்தகைய நெறிசார் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாகப் ‘பாட்டும் தொகையும்’ விளங்குகின்றது. எட்டுத்தொகை என்பது தொகைநிலைச் செய்யுளாகவும், பத்துப்பாட்டு என்பது தொடர்நிலைச் செய்யுளாகவும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகையில் அகம், புறம் சார்ந்து மக்களின் காதல், வீரம், பிரிவாற்றாமை, கையறுநிலை, நிலையாமை, மன்னர்களின் போர்த்திறம், படைச்சிறப்பு போன்ற பண்டையத் தமிழரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் புலவர்கள் தங்களின் பாடல் அடிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். தொகை இலக்கியமானது பல்வேறு புலவர்களால் பல்வேறு காலச் சூழலில் பாடப்பட்ட தனிப்பாடலின் தொகுப்பு ஆகும். பத்துப்பாட்டு – அமைப்புமுறை பத்துப்பாட்டு தொடர்நிலைச் செய்யுள் ஆகும். நூறடிச் சிறுமையும் ஆயிரமடிப் பெருமையும் கொண்டது பத்துப்பாட்டு என்பதைப் ‘பன்னிருபாட்டியல்’ என்னும் இலக்கண நூல் இலக்கணமாய் வகுத்துள்ளது. பத்துப்பாட்டில் ஒவ்வொரு பாடலையும் ஒருவரே இயற்றியிருப்பதால், நாடகப் பாங்கோடு திகழ்கின்றது. பக்தி நெறி, ஆற்றுப்படுத்துதல், பிரிவாற்றாமை, திணைசார்ந்த நிலங்களின் சிறப்பு, இயற்கை வளம் போன்ற அமைப்பு முறைகளை நம் கண்முன்னே காட்சி நிகழ்வுகளாக விரித்துக்காட்டி, இன்பமடையச் செய்யும் புலவர்களின் கவித்துவம் எண்ணி வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ‘பத்துப்பாட்டு’ சங்ககால மக்களின் செழிப்பான வாழ்க்கை, தன்மானம், தொழில் மேம்பாடு, நாகரிகத்தின் உச்சநிலை போன்ற நல்லறங்களின் விளைநிலம் என்பதைக் கற்றுணர வைத்துள்ளது. பொருநராற்றுப்படை சுட்டும் சோழ நாட்டின் வளம் சோழநாட்டு மக்கள் வறுமையின் தாக்கமின்றி இன்பமொன்றையே நுகர்ந்து வாழ்ந்துள்ளனர். சோழநாடு இயற்கை எழிலோடும், விளைந்த நிலப்பரப்போடும், வற்றாத நீர் வளத்தோடும் பரந்துபட்ட நிலப்பரப்பைக் கொண்டு காட்சியளித்துள்ளது. பண்டைய சோழநாட்டோடு தற்காலச் சோழநாட்டை ஒப்பிட்டுக் காணும் போது, பொறாமையும் ஏக்கமும் மேலோங்குவதை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. என்னதான் நவநாகரிகத்தின் வளர்ச்சியில் நம் தலைமுறை பயனித்தாலும் இயற்கையை அழித்து, நம் அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். “மாமாவின் வயின்வயின் நெல் தாழ்தாழைத் தன் தண்டலை கூடு கெழீஇய, குடிவயினான் செஞ்சோற்ற பசி மாந்திய கருங்காக்கை கவவு முனையின்” (பொருந. 180-184) கரிகாற்வளவனின்...

Read More

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website