Month: November 2016

வெள்ளியங்காட்டானின் வாழ்வும் இலக்கியப் பணியும்

கோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான். எளிய விவசாயக் குடிமகனான இவர், பாவலராகவும், பகுத்தறிவாளராகவும், சிறிதுகாலம் ஆசிரியராகவும், தையல் கலைஞராகவும், மெய்ப்புத் திருத்துநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பல தளங்களில் பயணித்திருக்கிறார். தமக்கென வீடோ, நிலமோ எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர். வறுமையிலும் செந்நெறி பிறழாதவர். எளியவர்பால் மிகுந்த அன்பு கொண்டவர். கவிஞர் வெள்ளியங்காட்டான் கோவையின் தாகம் தணிக்கும் பில்லூர் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள வெள்ளியங்காடு என்ற அழகிய கிராமத்தில், திரு.நாராயணசாமி், காவேரிஅம்மாள் அவர்களின் மகனாக 21.8.1904 இல் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் மூத்தமகனாகப் பிறந்த இவருக்கு, உடன்பிறந்தவர்கள் பத்துச் சகோதரிகள் ஆவர். இராமசாமி என்பது இவரது இயற்பெயர். தான் பிறந்த கிராமத்தின் எழில் கொஞ்சும் இயற்கை அழகும், அங்குள்ள மக்களின் உழைப்பும், அன்பும் இவரைக் கவர்ந்ததால், அவ்வூரின் பெயரையே தமதாக்கிக் கொண்டார். திண்ணைப் பள்ளியில் மூன்றாண்டு மட்டுமே கல்வி பயின்றவர் எனினும் தாமே அரிதின் முயன்று நூல்களைத் தேடி விரும்பிக் கற்றார். இலக்கிய நூல்களான புறநானூறு, வள்ளுவம், இராமாயணம் போன்றனவும், இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றையும் ஆழ்ந்து கற்றார். இவற்றோடு கன்னட மொழியையும் கற்றுத் தெளிந்தார். சமஸ்கிருதப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். தமிழ்மீதும் தமிழ்நாட்டின் மீதும் தீராக்காதல் கவிஞரின் தாய்மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அவருக்கிருந்த பற்றை அவரது பாடல்கள் மூலம் அறியலாம். நான் பிறந்த தமிழ்நாடு போன்ற வொரு நல்ல நாடுலகி லில்லையே… தேன்பிறந்த தமிழ் போன்றினிக்கும் ஒரு தெளிவு தந்த மொழி இல்லையே… என்கிறார்.  மேலும் தமிழ் மொழியால் தன்னால் தலைநிமிர்ந்து நிற்க முடியும். நான் ஒரு தமிழன் என்று உரத்து முழங்குகிறார். சங்கத் தமிழ் நூல்களைக் கவிஞர் ஆழ்ந்து விரும்பிக் கற்றதினால், புறநானூற்றையும் வள்ளுவத்தையும் வானளாவப் புகழ்கிறார். இவை ஒப்பற்ற இலக்கியம் என்கிறார். நான்கு நூறு புறம் நான்கு நூறு அகம் நனியும் நல்ல திருக் குறளொடும் வான்கண் மீன்களென வைகி யொளிருகிற வகையில் சங்கத் தமிழ் நூல்களே என்று இவரால் பாடமுடிகிறது என்றால் அந்நூல்கள் மீது அவர் கொண்ட அளவற்ற காதலே காரணம் எனலாம். படிப்பதிலும், எழுதுவதிலும் பாக்கள் புனைவதிலும் பெரும் விருப்பங் கொண்டார். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்தவர். உலகில் இன்று வரை...

Read More

தொல்காப்பியனார் காலம்

(தொடர்ச்சி…) தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது           பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்துப்   படைவீரர்களுக்கும் உதியஞ்சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் அப்பெரும்போர் முடியுமளவும் பெருஞ்சோறு கொடுத்து உதவினன். முரஞ்சியூர் முடிநாகராயர்[1] என்னும் புலவர் இவ்வேந்தனை முன்னிலைப்படுத்து வாழ்த்திய பாடலொன்று புறநானூற்றிற் கடவுள் வாழ்த்தினையடுத்து முதலாவதாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. அப்பாடலில், அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ           நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை           ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்           பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என முடிநாகராயர் உதியஞ்சேரலாதனை முன்னின்று அழைத்துப் போற்றியுள்ளார். அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே  கொண்ட பொற்பூந் தும்பையினையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெறுஞ்சோறாகிய மிக்கவுணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். பாரதப்போர் கி.மு.1500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்ததென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். உதியஞ்சேரல் என்பான் பாரதப் போரில் இருதிறத்துப்படை வீரர்களுக்கும் பெருஞ்சோறளித்தமையால் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பிக்கப்பெற்றான். எனவே இச்சேரமன்னன் பாரதப்போர் நிகழ்ந்த காலை உடனிருந்து உதவிபுரிந்தவன் என்பது நன்கு புலனாம். சேரர் குடியினராகிய இளங்கோவடிகளும், பிரைவர் ஈரைம்பதின்மர் உடன்றெழுந்த           போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்                                                          (சிலப். வாழ்த்துக்.24) எனத் தம் குல முதல்வனாகிய இவ்வேந்தர் பெருமானது பெருங்கொடையை உளமுவந்து போற்றியுள்ளார். உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறளித்த சேரன், என அடிகள் குறிப்பிடுதலால் இவன்  பெருஞ்சோறளித்த நிகழ்ச்சி பாரதப்போர் நிகழ்ந்த நாளிலேயே உடன் நிகழ்ந்த தென்பது தெளிவாக விளங்குதல் காணலாம். இங்ஙனம் உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ்சோற்று நிகழ்ச்சி பாரத காலத்தில் நிகழ்ந்ததன்றெனவும்,  பிற்காலத்தில் பாரதக் கதையை நாடகமாக நடித்துக் காட்டிய விழாவின் முடிவில் நாடகப் பொருநர் முதலியோர்க்கு உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ்சோற்று விழாவாகவோ அன்றிப் பாண்டவர் பொருட்டும் நூற்றுவர் பொருட்டும் அவ்வேந்தன் செய்த சிரார்த்தமாகவோ அதனைக்கொள்ளல் வேண்டுமெனவும் P.T.சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர் (History of the Tamils, p.492).                 உதியஞ்சேரலாதன் என்பான் பாரதப்போர் நிகழ்ந்த காலத்திலேயே பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கும் இன்னார் இனியாரென்னாது நடுநின்று பெருஞ்சோறு வழங்கிய வரையாவண்மையினை இவன்காலப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனார் முன்னின்று பாராட்டுதலானும், இவ்வேந்தனது குடியிற்றோன்றிய இளங்கோவடிகள் தம் குல முதல்வனாகிய இவனது ஈகைத்...

Read More

தொல்காப்பிய வாசிப்பு வரலாறும் பதிப்புகளின் உருவாக்கமும்

தொல்காப்பியம் உருவானதன் பின்புலம் தமிழ் இலக்கண வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த பனுவலாகவும், தொன்மைத் தன்மை உடைய பனுவலாகவும் இன்றுவரை நிலைபெற்றிருப்பது தொல்காப்பியமாகும்.தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்னதான தரவுகள் என்பது இன்று முழுமையற்ற தன்மையில் இருக்கக்கூடிய நிலையில் தொல்காப்பியம் யாருக்காக எழுதப்பட்டது? எதற்காக எழுதப்பட்டது? என்ற கேள்வியைப் பலரும் முன்னிலைப்படுத்தி அது குறித்த விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர். வரலாற்றுப் பார்வையுடனும், மொழியையும் இலக்கியங்களையும் பன்முகத் தளங்களில் ஆராய்ந்தும் எழுதப்பட்டுள்ள தொல்காப்பியம் ஒரு நீண்ட காலத் தமிழ்ச் சமூகத்தின் ஆவணம் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. தொல்காப்பியர் வகுத்தளித்த பல இலக்கணக் கூறுகளுக்குத் தரவுகளையும் சான்றுகளையும் தேடித் தேடி ஓய்ந்துபோன உரையாசிரியர்தம் கூற்றுகளின் வழியே தொல்காப்பியத்தின் தொன்மையை மதிப்பிட்டறிந்து கொள்ளமுடியும். இன்றைக்குத் தொகுக்கப்பட்டு நம் கையில் கிடைக்கின்ற பாட்டும் தொகையுமான பனுவல்களைக் கடந்து ஒரு மாபெரும் இலக்கிய இலக்கணப் பரப்பை நுண்ணிதின் மதிப்பிட்டறிந்து தமது தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் வகுத்தளித்துள்ளார் என்பதை அவரின் இலக்கண உருவாக்க முறையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரும் தொல்காப்பியத்திற்குப் பின்னரும் வரலாற்றில் மறைந்து போன இலக்கண நூல்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இத்தனை நூல்களும் மறைந்து போனதற்குக் காரணங்கள் பலவாக இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை காலம் கடந்து வந்ததற்கும் காரணங்கள் பல உண்டு. தொல்காப்பியத்தின் தொடர்ச்சியான பயணங்களையும் அப்பயணங்களின் வழியாக அந்நூல் அச்சுவாகனமேறிய வரலாற்றையும் பல படிநிலைகளில் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. தொல்காப்பியத்தைப் பின்பற்றிய வழிநூலாசிரியர்கள் தமிழ் இலக்கண வரலாற்றில் முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மரபில் தொல்காப்பியம் அகத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட வழிநூல் என்று கூறப்பட்டது. அகத்தியம் இன்றுவரை கிடைக்காத நூலாக இருப்பதாலும் தொல்காப்பியத்திற்கு முன்னர்த் தோன்றிய வேறுபல நூல்கள் பற்றிய தரவுகளை அறிய இயலாததாலும் தொல்காப்பியமே இன்று நமக்கு முதல்நூலாக விளங்குகின்றது. இத்தன்மையில் இருக்கக்கூடிய தொல்காப்பியத்தின் வழிநூல்களாக இன்று ஏராளமானவற்றைச் சுட்டமுடியும். தொல்காப்பியத்திலிருந்து மாற்று மரபை முன்வைத்த இலக்கண ஆசிரியர்கள்கூட தொல்காப்பியரின் இலக்கணக் கூறுகளைப் பல இடங்களில் உள்வாங்கியே தமது இலக்கண நூல்களை உருவாக்கியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இத்தகைய வழிநூலாசிரியர்களே தொல்காப்பிய வாசிப்பு மரபில் முதன்மை இடம்பெறத்தக்கவர்கள் என்பதைச் சுட்டிச்சொல்ல முடியும். தொல்காப்பியம் தமிழ் மொழியின் அமைப்பையும், தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியலையும் செறிவான தன்மைக்குள் முழுமையாகப் பிரதிபலித்ததால் பின்வந்த இலக்கணிகள் பெரும்பாலும் தொல்காப்பிய இலக்கணத்தை...

Read More

இரா.க.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பில் தமிழுணர்ச்சி

உரைக்களம் இந்திய விடுதலைக்குப் பின்னர்ப் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர். இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர். தனது அரசியந்திரத்தில் நேர்ந்த தவறுக்காக உயிர் துறந்த சிலப்பதிகாரப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்று, தமது அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் செய்த விதிமீறல்களுக்குப் பொறுப்பேற்றுப் பதவியை துறந்தவர். தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஆகிய பெருமைகளுக்கு உரிய இரா. க. (ஆர்.கே.) சண்முகம் செட்டியார் (சண்முகனார்) சிலப்பதிகாரப் புகார்க்காண்டத்திற்கு உரை எழுதிய பெற்றியர். பலராலும் அறியப்படாத பதிப்பாகிய சண்முகனாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பு உணர்த்தும் தமிழுணர்ச்சியை எடுத்துக் காட்டுவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். இம்முயற்சிக்குச் சண்முகனாரின் சிலப்பதிகாரப் புகார்க்காண்ட உரை முதன்மைத் தரவாகும். சிலப்பதிகாரப் பழையவுரைகள், புத்துரைகள், ஆய்வுநூல்கள் போல்வன துணைத்தரவுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. முதற்கண் சிலப்பதிகார உரைகளின் தோற்றம்; வளர்ச்சி ஆகியவற்றை அறிவோம். சிலப்பதிகார உரை வரலாறு சிலப்பதிகாரத்தின் முதல் உரையாசிரியர் அரும்பதவுரையாசிரியர் என்பர். அவருரை அரும்பதங்களுக்கும் ஒரோவிடங்களில் பொருள்கோள் கூறுதலுமாக அமைந்த உரையாகும். அரும்பதவுரையிலுள்ள சில குறிப்புக்களால் அவ்வுரைக்கு முன்னரும் வேறு பழையவுரையொன்று இருந்திருக்கலாம் என்றும், அவ்வுரை இக்காலத்தில் கிடைக்கவில்லை என்றும் கூறுவார் உ. வே. சாமிநாதையர் (2008: XI). அரும்பதவுரைக்குப் பின்னர்ப் பழங்காலத்திலேயே மற்றொரு உரையைப் பெற்றுள்ள சிறப்பு சிலப்பதிகாரத்திற்கு உண்டு. இப்பழையவுரைகள் கடின நடையில் உள்ளன என்பது ஒரு பொதுக்கருத்தாகும். இவ்வுரைகளைப் பற்றிப் புத்துரைகாரராகிய சண்முகனாரின் கருத்து வருமாறு: ” மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பித்த புத்தகம் ஒன்றை வாங்கி வெகு ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன். மனச்சோர்வு உண்டாயிற்று. பொருள் சரியாய் விளங்கவில்லை. பதங்களின் சந்தியைப் பிரித்துப் படிக்கப் போதுமான இலக்கண அறிவு எனக்கு இல்லை. அடியார்க்குநல்லார் உரையைத் திருப்பினேன். நூலைவிட உரை கடினமாய்த் தோன்றியது. மூன்று தடவை இம்மாதிரியே முயற்சி செய்தேன். ஒன்றும் பயன்படவில்லை.           தமிழ்ப் பண்டிதர் ஒருவரை உடன் வைத்துக் கொண்டு படிப்பதென்று கடைசியாய் முடிவு செய்து, எனது நண்பர் வித்வான் அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் வீட்டிலே வந்து தங்கி நாள்தோறும் ஒரு மணி நேரம் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். இவருடன் படிக்கும்போது நூல் வெகு சுலபமாய்த் தோன்றியது. பாட்டைப் பதம் பிரித்துப் படிக்கும்போதே ஏறக்குறைய பொருள் விளங்கி விட்டது. இப்படியாகச் சிலப்பதிகாரம்...

Read More

மின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள்

ஒரு நூலைப் பதிப்பித்து வெளியிடுவதென்பது, ஒரு தாய் பத்துமாதம் கருவைச் சுமந்து பெற்று எடுப்பதற்கு இணையானது எனக் கருதப்பட்ட காலமும் இருந்தது. அது அச்சு வரவிற்கு முந்தைய காலம். அச்சு இயந்திர வருகைக்குப் பின்பும் பதிப்பித்து நூலை வெளிக்கொணர்வதற்குப் பல மாதங்கள் ஆகின. அவ்வாறிருந்தும் எளிதில் ஒருவர் தம் படைப்பையோ,  ஆய்வையோ வெளியிட்டுவிட முடியாது. அதற்குப் பொருாளதாரம் மிக முக்கியம். பொருளாதாரம் இல்லையென்றால், சிறந்த எழுத்தாளனாக அடையாளம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நூல் எளிமையாக அனைவரின் பார்வைக்கும் ஒரு பதிப்பகத்தின்வழி வெளிவரும். அதனை இவ்விருபத்தோராம் நூற்றாண்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி எளிமையாக்கியுள்ளது. யார் வேண்டுமானாலும்  பதிப்பிக்கலாம் வெளியிடலாம் என்றொரு நிலையே அதுவாகும். இதனை உலகளாவிய வலைதளம் மூலம் சாத்தியப்படுத்தி விட்டன சில இணைய தளங்கள். குறிப்பாக, எந்தவித பொருளாதாரம் இன்றியும், வெறும் தட்டச்சு, இணையப் பயன்பாட்டுச் செலவுகளுடன் மட்டும் முடிந்து விடுகின்றது. இதனை குறித்து இக்கட்டுரை அறிமுகப்படுத்துகின்றது. மின்னூல் (EBOOKS) என்றால் என்ன?           மின்னூல் மின்கருவிகளால் உருவாக்கப்படுவது. இதனைப் பதிவிறக்கம் செய்தும் இணையத்தின் மூலமும் வாசிக்க இயலும். அதற்குரிய மின்படிப்பானைக் (E – Reader) கணினியிலும் செல்பேசிகளிலும் திறன்பேசிகளிலும் பொருத்தி இருத்தல் வேண்டும் (Amazon kindle, Kobo, Apple ipad, iphone, Barnes, noble’s Nook, Android tablet, Computer). ஒவ்வொரு நாளும் மில்லியன் மின்னூல்களை வாசிப்பாளர்கள் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. தங்களுடைய சிந்தனைகளை எளிய முறையில் உலகத்தாருக்குக் கொண்டு செல்ல மின்னூல் பதிப்பு உதவிபுரியும்.     இணையமும் பதிப்பும் உலகத்தின் தொடர்புமொழி ஊடகம் என இணையத்தை அழைக்கலாம். அந்தளவிற்கு உலக மக்களின் கருத்துக்களைப் பரவலாக்கும் பணியைச் செய்து வருகின்றது. இப்பணியின் ஊடே படைப்புகளை வெளியிடவும் சில  நிறுவனங்கள் முனைந்துள்ளன. அவற்றுள் www.bookrix.com, www.booktango.com, www.createspau.com, www.lightswitchpress.com, www.lulu.com, www.tongkiat.com, www.pressbooks.com, www.freetamilebooks.com, www.foboko.com போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். ஆசிரியரோ பதிப்பாசிரியரோ பதிப்பித்துக் கொள்ள இவை அனுமதி நல்கியுள்ளன. அவற்றுள், Pressbooks.com, LuLu.com ஆகியவற்றின் பதிப்பு நெறிகளும் பதிப்பிக்க வேண்டிய வழிமுறைகளும் இங்கு விளக்கப்படுகின்றன. முதலில் Pressbooks.com வழங்கும் இணையப் பதிப்பு நெறிகள் குறித்துக் காண்போம். பதிவுநூல் (Pressbooks.com) பதிப்புநெறி பதிவுநூல் (Pressbooks) வலைதளத்தின் மூலம் நூலை...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website