பெண்களின் தோற்றப் பொலிவினையும் உறுப்பு நலனையும் உவமை கூறிப் புனைந்துரைப்பது மரபு. காதலா் இன்பத்துக்கு ஏதுவாகும் கூற்றுக்களில் நலம்புனைந்துரைத்தல் சிறந்ததொன்று தலைவியினுடைய கண், முகம், இடை, அடி முதலிய உறுப்புகளின் அழகைத் தலைவன் பாராட்டிக் கூறுவான். சங்க இலக்கியத்தில் இத்தகைய பாடல்கள் பல காணக்கிடைக்கின்றன. இவைதவிர அரசமகளிர் பற்றிய வருணனைப் பகுதிகளும் மிதவை மகளிர் பற்றிய வருணனைப் பகுதிகளும் இடம் பெறுகின்றன.

ஏவல் மகளிர் வருணனைகள் இடம்பெற்றிருந்தாலும் அவை மிக அரிதாகவே (பொருநா் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு) இடம்பெறுகின்றன. மேற்குறித்த வா்ணனைகளின் வழி மிதவை மகளிர் பற்றிய சமூக நிலையை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மிதவை மகளிர்

சங்க காலச் சமூகத்தில், கலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு, நிலையான வாழிடமுமின்றி, தமக்கான சமூக நிலைத்திறனுமின்றி வாழ்ந்த பாணா் முதலானோரை மிதவை மாந்தர் என்று அழைக்கலாம்.

அத்தகைய குலத்தைச் சார்ந்த பெண்கள் பாடினியர், விறலியர், ஆடுகளமகளிர் அகவன் மகளிர் என்று அழைக்கப்பட்டனா். பாணர் குலத்தில் பாடல்களைப் பாடிய பெண்பாலார் பாடினியர் என்றும், உணர்ச்சிகளை ஆடல் வழி அழகாகப் புலப்படுத்திய பெண்கள் விறலியா் என்றும், விழாக் களங்களில் ஆடிய மகளிர் ஆடுகள மகளிர் என்றும், அகவிக் கட்டுரைத்த மகளிர் அகவன் மகளிர் என்றும் அழைக்கப்பெற்றனர். பாடினியர், விறலியர் போன்றோர் பெரிதும் கலைஞா் கூட்டத்துடன் இயங்கியவராகவும், சில வேளைகளில் தனியே இயங்கியவராகவும் இலக்கியங்களில் சித்திரிக்கப் பட்டுள்ளனா். மேலும் பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ, பாடுமகள், கிணைமகள், பாணிச்சி என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இக்கலை மகளிரையே மிதவை மகளிர் என்று இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

அறிந்த ஒன்றைக் கொண்டு அறியாத ஒன்றை விளக்குவதே உவமை. இதன் அடிப்படையில் இலக்கியங்கள் உடல் உறுப்புகளுக்கு மலா்களையும் அணிகலன்களையும் உவமையாகக் கூறியுள்ளன.

கூந்தல்

மகளிர் தம் கூந்தலைப் பலவாறாக அழகு செய்தனா். ஓதி என்று கூறும் ஒருவித தலைக்கட்டு வாழைப்பபூவின் வடிவில் அமைந்திருந்தது. (நற்:225) தழைத்து அடா்ந்த கூந்தலைக் கொன்றை, மை ஆற்றின் அறல் என்பவற்றிற்கு உவமையாகவும் கூறியுள்ளனா் (குறுந்:209,286).

முகம்

முகத்திற்கு மலா்ந்த தாமரை, குவளை மலா்களை ஒப்பிட்டுக் கூறுவா் (பரி.8:13; கலி.31, 64, 73).

கண்

பெண்களின் கண்களுக்கு உவமைகளாக நீலம், நெய்தல், குவளை, கருவிளை, கழுநீா், தாமரை, நறவம், பித்திகம், ஆகிய மலா்களும் அவற்றுள் நீலம், குவளை, நெய்தல், தாமரை ஆகிய மலா்கள் மையூட்டப்பட்ட அழகிய கண்களுக்கும், கருவிளையும் பித்தகமும் நீா் நிறைந்த கண்களுக்கும், குவளை, நெய்தல், நீலம் ஆகிய மலா்கள் பசலை அடைந்த கண்களுக்கும், நெய்தல் மலரின் கூம்பு உறங்கும் கண்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன (நற்.111,317,632; பரி.2:53; 7:64; அகம்.269,294,295; புறம்.144).

வாய், பல்

பெண்களின் இதழ்களின் சிவப்பு நிறத்திற்குச் செவ்வாம்பல் மலரும், முருக்க மலரும் (பரி.8:16; அகம்:3) பற்களின் வெண்ணிறத்திற்கும், கூா்மையான அமைப்பிற்கும் முல்லை முகையும், மௌவல் முகையும் கூறப்படுகின்றன (கலி:22, அகம்:21).

மார்பு

மகளிரின் மார்பகங்களுக்குக் கோங்க முகையையும், தாமரை முகையையும் உவமைகளாகக் கூறுவா் (கலி:117, சிறுபாண்:72).

 கை

கைக்கும், கை விரல்களுக்கும் காந்தள் முகையையும், காந்தள், நறவம், கோடல் ஆகிய மலா்களையும் காட்டுவா் (புறம்:144; சிறுபாண்:67; முல்லைப்.95; கலி.84; பரி.18:33; பட்டின.153)

அடி

தலைவியின் பாதங்கள் தாமரை மலரின் இதழ் போன்று மென்மையாக இருப்பதாகத் தலைவனுக்குத் தோன்றுகிறது (கலி.13)

உடலின் நலமும் உறுப்புகளின் மணமும்

தலைவியின் மேனி நலத்திற்குத் தாமரையும் ஆம்பலும் கூறப்படுகின்றன. வேனிற் காலத்தில் ஆம்பல் மலரினும் தண்ணியளாகவும் குளிர் காலத்தில் தாமரையின் வெம்மை போலவும் இருக்கின்றாள். (குறுந்.84, 376) முல்லை, வேங்கை போன்ற மலா்களின் நாற்றம் போன்று கூந்தலும் (அகம்.208,365), காந்தள், குளவி, குவளை போன்ற மலா்களின் நாற்றம் போன்று நுதலும் (அகம்.338; குறுந்.59) மணக்கின்றன.

குறிஞ்சி மலரின் நிறம் போன்று, தலைவியின் மேனி நிறம் அமைந்திருந்தது (நற்.301). பசலை ஏற்பட்ட போது பீரமலா், கொன்றை மலா் பொன்றும் இருந்தது (நற்.326; அகம்.398). மாமை நிறத்திற்குத் தாமரைப் பூவின் கோங்கினையும், சுணங்கிற்கு வேங்கை, ஞாழல் போன்ற மலா்களையும் உவமையாகக் காட்டுவா் (அகம்.319; நற்.191). மகளிரின் மென்மைத் தன்மைக்கு அனிச்சப்புபூவையும் கூறுவா் (குறள்.1111).

தொய்யில்

மகளிர் மணச்சாந்தினால் மார்பிலும் தோளிலும் அழகுறப் பூங்கொடி வடிவில் தொய்யில் எழுதினா் (கலி:18-3, 24:15, 64:8, 76:15; அகம்.389:6; நற்.225:7; குறுந்.276:4).

மேற்குறித்த உவமைகளின் வழி அரச மகளிர் திணைமகளிர், மிதவைமகளிர் ஆகியோரின் தோற்றப் பொலிவானது விளக்கப்படுகின்றது.

அரசமகளிர் பற்றிய வருணனை

சேரமாதேவி வான்மகளிர் தம்மிற்கூடிப் பிணங்குதல் கொள்ளும் அளவிற்கு அழகுடையவள். வண்டு மொய்க்கும் கூந்தலும், வளைந்த குழையும், ஆறிய கற்பும், அடக்கம் பொருந்திய மென்மையும், இன்மொழியே பகரும் இனிய முறுவலும், அமுதம் நிரம்பிய சிவந்த வாயும், குளிர்ந்த கண்களும், மூங்கிலை நிகா்க்கும் பெரிய தோளும், அசைகின்ற மாலையும், பரந்த தேமலும் உடையவள். மேலும் இளமுகை போன்ற மார்பினையும், வரிகளையுடைய அல்குலினையும், அசைந்த நடையினையும், ஒளி பொருந்திய நெற்றியினையும், செவ்விய அணிகளையும், ஓவியத்தில் எழுதியது போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும் பாவை போன்ற நல்ல அழகு நலத்தையும் உடையவள் என்று  பதிற்றுப்பத்து(14:13-15, 16:10-13; 21:33-37; 52:17-18; 55:1; 61:3-4; 65:6-10; 70:14-15; 81:27-31; 89:16-20; 90:48-50) குறிப்பிடுகிறது.

கருங்கூந்தலையும், முல்லைமுகை போன்ற சிரிப்பையும் உடையவா் என்று பாரிமகளிரும் (புறம்.117,120), கற்பின் மடமொழி எனத் திருமுடிக்காரியின் மனைவியும் கபிலரால் புகழப்படுகின்றனா். பேகனின் மனைவி செவ்வரி படா்ந்த குளிர்ந்த கண்ணையும், அழகிய மாமை நிறத்தையும் உடையவள் என்றும் (புறம்.147) பாண்டியனின் மனைவி அருவி தாழ்ந்த பெரிய மலைபோல ஆரம் பொலியும் மார்பினையும், தெய்வத்தன்மை அமைந்த கற்பினையும் அழகிய அணிகலன்களையும் அணிந்தவள் என்றும் (புறம்.198) போற்றப் பெறுகின்றனா்.

ஒளிபொருந்திய கூந்தலையும், நெற்றியையும், மயில் போன்ற சாயலையும் கொண்டு சீறூா்த் தலைவியா் மனைக்கு விளக்காக விளங்கினா் என்றும், கரிய கண்களையும், கூரிய பற்களையும் பருத்த தோள்களையும் சுணங்கு படா்ந்த மார்பினையும் நல்ல பொற்கொல்லா் செய்த பொன்னாலாகிய மேகலையையும் மாலையையும் அணிந்து அழகிய மாமை நிறத்துடன் முதுகுடி மன்னரின் பெண்கள் காணப்பட்டனா் என்றும் வருணிக்கப்படுகின்றனா்.

பூவேலை செய்யப்பட்ட ஆடையை உடுத்தி அணிகலன்களை அணிந்து அழகிய உந்தியையும், கற்பையும் உடையவள் அவியனின் மனைவி என்று புறநானூறும், தளிர் போன்ற மேனியையும், பரந்த சுணங்கையும், மூங்கில் போன்ற தோளையும், தாமரை முகை போன்ற மார்பினையும், நுடங்கும் இடையையும் உடையவள் கோப்பெருந்தேவி என்று நெடுநல்வாடையும் கூறுகின்றன.

திணைமகளிர் பற்றிய வருணனை

தலைவியானவள் கரிய பலவாகிய கூந்தலையும் திருந்திய அணிகலன்களையும் ஒளிமிக்க நெற்றியையும், தாமரை போன்ற மையுண்ட கண்களையும் முளை போன்ற ஒளிமிக்க பற்களையும், பவளம் போன்ற வாயினையும், மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற தோளினையும் கொண்டவள். அரும்பிய முலையள், கொடியையும் மின்னலையும் போன்ற இடையினைக் கொண்டவள். நாயினது நாவைப் போன்ற சிறிய அடிகளை உடையவள். அழகிய மயில் போல அசைந்து நடக்கும் இயல்பினள். மென்பிணியவிழ்ந்த தண்கமழ் காந்தள் போல நாறும் நுதலையும் தளிரை யொத்த மேனியையும் கொண்டவள். வரையரை மகளிரைப் போன்ற சாயலைப் பெற்றவள் என்று தலைவியின் தோற்றப்பொலிவு வருணிக்கப் படுகின்றது.

பழையா் மகளிர், தழையுடை அணிதலால் பொலிவுற்ற பக்கங்கள் உயா்ந்து விளங்கும் அல்குலினை உடையவா் (அகம்.201) எனவும் கள்விலை மகளிர், வரிகள் விளங்கும் பணைத்த தோள்களையும் தேமல்  விளங்கும் வயிற்றினையும் உடையவா் (அகம்.245) எனவும் நுளைமகள், பெருந்தோளையும் மதிமுகத்தையும் வேல் நோக்கையும் உடையவள் (சிறுபா.156-158) எனவும் பட்டினமகளிர், மணிகள் கோத்த வடங்களை அல்குலில் அணிந்தும் மயில் போலக் கால்களில் பொற்சிலம்பு ஒலிக்கவும் கைகளில் குறிய வளையல்கள் அணிந்தவராகவும் காணப்பட்டனா் (பெரும்.328-336) எனவும் உழவப் பெண்கள், மூங்கில் போன்ற தோளையும் பிடியினது கையை ஒத்த பின்னல் கிடக்கும் முதுகினையும் தொடிக் கையினையும் மயில் போன்ற சாயலையும் உடையவா் (சிறுபா.191-192; புறம்.395) எனவும் இடையா் மகள், அறல் போன்ற கூந்லையும், குழை அசையும் காதையும் மூங்கில் போன்ற தோளையும் நல்ல மாமை நிறத்தையும் உடையவள் (பெரும்:160-162) எனவும் மதுரை நகர மகளிர், சங்கு வளையல்கள் இறுகின முன்கையையும் மூங்கில் போன்ற தோளையும் மெத்தென்ற சாயலையும் முத்துப்போன்ற பல்லையும் மகரக்குழைக்கு ஏற்ற குளிர்ந்த கண்களையும் மடப்பத்தையும் உடையவா் (நெடுநல்:36-40) எனவும் திணை மகளிர் வர்ணிக்கப் பெறுகின்றனா்.

ஏவல் மகளிர்

ஏவல் மகளிர் முகில் போன்ற கருமையான கூந்தலுடன், இழையணிந்தும் இனிய முறுவல் பூப்பவராயும் மேனிலை மாடத்து உறைவாராயும் (பொருநா்.84-85) காணப்பட்டனா். போர்க்களப் பாசறையில் உள்ளவா், கூந்தல் கிடக்கின்ற சிறிய முதுகுடன், ஒளியுடைய வாளைக் கச்சோடு சோ்த்துக்கட்டியவர்களாய்க் காணப்பட்டனா் (முல்லை.45-47).

மிதவை மகளிர் பற்றிய வருணனை

          புறநானூறும், பதிற்றுப்பத்தும், ஆற்றுப்படைகளும் மிதவை மகளிர் பற்றிய வருணனைகளை அதிகமாகத் தருகின்றன. ஐங்.47; பதிற்.49:1-3; 51:19-21; 54:3-6; கலி.79:4; புறம்.64, 70, 89, 105, 111, 133, 135, 139, 280; பொருநர்.25-47; சிறுபாண்.13-40 ஆகிய நூற்கருத்துக்களின் அடிப்படையில் மிதவை மகளிர் பற்றிய வர்ணனை பின்வருமாறு அமைகின்றது.

ஆற்றின் அறல் போன்ற கூந்தலையும், வாழைப்பூ போன்ற பனிச்சையையும், பிறை போன்ற நுதலையும் வில் போன்ற புருவத்தையும், குளிர்ந்த  கண்களையும், இலவிதழ் போன்ற இன்மொழி பேசும் வாயையும், நுங்கின் இனிய நீரினை ஒத்த ஊறலையும், முத்துக்கள் போன்ற பற்களையும் கத்திரிகையின் குழச்சை ஒத்த அழகிய மகரக்குழை கிடந்து அசையும் காதையும், நாணத்தால் கவிழ்ந்த கழுத்தையும், அசைகின்ற மூங்கிலை ஒத்துப் பருத்த தோளையும் மெல்லிய மயிரையுடைய முன் கையையும் காந்தள் போன்ற மெல் விரலையும், கிளியின் வாயை ஒத்த உகிரையும், பிறர்க்கு வருத்தமெனத் தோன்றும் மார்பையும் நீரின் கண் சுழி போன்ற இலக்கணம் நிறைந்த கொப்புழையும் உண்டென உணரா வருந்தும் நுண்ணிடையையும், நிரலாக வண்டுகள் இருந்தாற் போன்று மணிகள் கோக்கப்பட்ட மேகலை அணிந்த அல்குலையும், நெருங்கித் திரண்ட தொடைகளையும், கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த நாயின் நாக்கை ஒத்த சிற்றடியையும் மயில் போன்ற சாயலையும் உடையவா் என மிதவை மகளிர் கேசம் முதல் பாதம் வரை வருணிக்கப்படுகின்றனா்.

ஒப்பீடு

அரசமகளிரின் அழகோடு வானுறைமகளிர் தங்கள் அழகை ஒப்பிட்டுத் தமக்குள் கூடிப்பிணங்குதல் கொள்ளும் அளவில், உயர்குடிப்பிறப்பின் பண்புகளோடு அறக்கற்பும் புகழும் சார்த்திய நிலையில் அரசமகளிர் பற்றிய வருணனை அமைகின்றது.

தலைவன் தலைவியின் மீது கொண்ட அன்பினையும், அன்பின் வழிவந்த காமத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும், இல்வாழ்விற்கான பண்புகளோடும் கற்பு நெறிகளோடும் திணைமகளிர் பாராட்டப்படுகின்றனா்.

தொல்காப்பியா் பெண்மைக்கான பண்புகளாக உயிரினும் மேலான நாணத்தையும் நாணத்தினும் மேலான சிறந்த கற்பையும் அச்சம், மடம் ஆகியவற்றையும் கற்பும் காமமும் நல்ல ஒழுக்கமும் பெண்மைத் தன்மை பொருந்திய பொறுமையையும் நிறையுடைமையையும் விருந்து போற்றும் மனநலமும் சுற்றத்தினரை ஓம்பலும் பிறவும் ஆகிய பண்புகளையும் குறிப்பிடுகின்றார்.

அரசமகளிர், திணைமகளிர் ஆகியோரது வா்ணனைகள் தொல்காப்பியா் கூட்டும் பண்புகளோடு பிணைக்கப் பெற்றுள்ளமையை உணரமுடிகின்றது. ஆனால் மிதவைமகளிர் பற்றி வருணனைகள் காமம் சார்ந்தே பெரிதும் கூறப்பட்டுள்ளன. எனவே அக்கால மக்களின் பார்வை மிதவை மகளிரைப் பொறுத்தவரை வேறுபட்டே இருந்தமை புலனாகின்றது.

அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தால் வீரயுகத்தின் பெண்குலக் கலைஞா்கள் நிலவுடைமைக் காலத்தில் பரத்தையர்களாக மாறினார்கள் எனும் கார்த்திகேசு சிவத்தம்பியின் கூற்று எண்ணுதற்குரியது.

சங்க இலக்கியங்களில் மிதவை மகளிராக வலம் வரும் பாடினியர், விறலியர், ஆடுகள மகளிர் போன்றோர் இசையையும் கூத்தையுமே தம் வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருந்ததால் அக்கால இல்வாழ் மகளிரைப் போன்ற வாழ்க்கைமுறை இவா்களுக்கு வாய்க்கவில்லை. நிலவுடைமையோடு ஆணாதிக்கமும் வளா்ச்சி பெறத் தொடங்கிய அக்காலத்தில் இக்கலை மகளிர் பிற மகளிரைக் காட்டிலும் உரிமையோடு உலவி வந்தாலும் ஆணாதிக்கச் சமூகத்தின் விளைவுகளுக்கு அவர்களும் ஆட்பட வேண்டியிருந்தது. இது அவா்களது வாழ்வையே புரட்டிப்போடுமாறு அமைந்துவிட்டது எனலாம்.

பார்வை நூல்கள்

  • தாணம்மாள் இல., சங்க இலக்கியத்தில் மலா்கள் வானதி பதிப்பகம், சென்னை, டிசம்பா் 1981 (முதற்பதிப்பு).
  • பாலசுப்பிரமணியன் சி., சங்க கால மகளிர் நறுமலர்ப் பதிப்பகம், பாரிநிலையம், சென்னை, டிசம்பா் 1983 (முதற்பதிப்பு).
  • புலியூர்க் கேசிகன், தொல்காப்பியம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, சூன் 2010 (முதற்பதிப்பு).
  • மாயாண்டி இரா., சங்க இலக்கியத்தில் கற்பனை, எழிலகம், சென்னை, 1980 (முதற்பதிப்பு).

.ஜெனிபா மேரி

முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதி நேரம்),

தமிழாய்வுத்துறை

பெரியர் ஈ.வெ.ரா கல்லூரி (தன்னாட்சி),

திருச்சிராப்பள்ளி – 620 023

தமிழ்நாடு, இந்தியா.