படைப்பிலக்கியம் என்பது மனித மனவுணர்வுகளின் உந்துதலால் வடிவமைக்கப்படுகிறது. இந்த உணர்வுகள் உரிமை வேட்கையின் தூண்டுதலால் எழும்போது இலக்கியவெளியில் பேரதிர்வை ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில் இன்றைய தமிழிலக்கிய வெளியில் தலித்தியம் குறித்த படைப்புகள் விளிம்புநிலை மக்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை ஒடுக்கப்பட்ட பெருந்திரள் மக்களின் கலகக்குரலாக அமைந்துள்ளன. சமூகத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வலிகளை வீரியத்துடன் எடுத்துரைக்கும் நோக்கில் பூமணி, கரு.அழ.குணசேகரன், சோ.தர்மன், சிவகாமி, பிரதிபா ஜெயச்சந்திரன், சுதாகர் கதக், சந்துரு, தய்.கந்தசாமி, மதிவண்ணன், ஸ்ரீதர கணேசன், பாப்லோ அறிவுக்குயில், பெருமாள் முருகன், ரவிக்குமார், விழி பா.இதயவேந்தன், அழகிய பெரியவன், உஞ்சைராசன், ராஜ்கௌதமன், அன்பாதவன், ஆதவன் தீட்சண்யா, அன்பழகன், பாரதி வசந்தன் எனப் பல்வேறு தலித் எழுத்தாளர்கள் சிறுகதை, புதினம், புதுக்கவிதை, நாடகம் என அனைத்துத் தளங்களிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.

இவர்களுள் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனது அனுபவ மொழியால் புதிய செல்நெறியை உருவாக்கியவர் எழுத்தாளர் பாமா. இவரின் தவுட்டுக் குருவி எனும் சிறுகதைத் தொகுப்பின்வழி, தலித் மக்கள் எழுப்ப வேண்டிய கலகக்குரலைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

தலித்பொருள் விளக்கம்

“தலித் என்ற சொல் மராட்டிய மொழியிலிருந்தும் இந்தியிலிருந்தும் நேரடியாகத் தமிழுக்குப் பெறப்பட்டது. இது ‘தல்’ என்ற எபிரேய மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. பைபிளை இந்தியில் மொழியாக்கம் செய்தபோது எடுத்தாளப்பட்ட சொல். இந்தத் ‘தல்’ என்ற சொல்லைத் தமிழ் பைபிளில் ‘ஏழைகள்’ என்றே மொழியாக்கம் செய்துள்ளனர்” (க.பஞ்சாங்கம், 2011:244).

தமிழகத்தில் திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் உருவான நேரத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பண்டைய திராவிட இனத்தினரை பஞ்சமர் என்ற சொல் தலித் மக்களிடையே மிகவும் இழிவாகக் கருதப்பட்ட நேரத்தில் தாழ்த்தப்பட் வகுப்பினர் அட்டவணை இனத்தவர் என்றும் ஆந்திராவில் ஆதி ஆந்திரர் என்றும் கர்நாடகாவில் ஆதி கர்நாடகர் என்றும் தமிழகத்தில் ஆதி திராவிடர் என்ற வழக்கும் வழங்கலாயிற்று (விழி பா.இதயவேந்தன், 2009:10).

எனும் கூற்றுத் தமிழகத்தில் தலித் என்பவர் யார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. பொதுவாக,

தலித் என்பவர் யார் என்ற கேள்விக்கு, தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், நிலமற்றவர்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படும் அனைவருமே தலித்துகள் தான் என 1972 ஆம் ஆண்டு தலித் பேந்தர்கள் பம்பாயில் அறிவித்ததைக் கெயல் ஓம்வெத் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார் (மேலது, 2009:11)

இத்தகைய தலித் மக்கள் தலைமுறை தலைமுறையாகச் சமுதாயக் கட்டமைப்பால் பொருளாதார ரீதியாகவும் கல்வி மற்றும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட நிலையினை எடுத்துரைப்பதாக மட்டுமல்லாமல் அம்மக்கள் தம் அடிமைவாழ்வைத் தகர்த்தெறியச் செய்ய வேண்டிய செயல்பாடுகளை ஆழமாக, வலிமையாக, கலகக்குரலாக எழுப்பியுள்ள பாமாவின் தவுட்டுக் குருவி சிறுகதைத் தொகுப்பானது இருபத்தைந்து சிறுகதைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. தனது 31 ஆண்டு ஆசிரிய அனுபவத்தில் தான் சந்தித்த மனிதர்கள் தனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களே இக்கதைகளின் களம் என ஆசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலானவை குழந்தைகளின் உலகினைக் காட்சிப்படுத்துவனவாக அமைக்கப்பட்டுள்ளன. மனித வாழ்வில் குழந்தைப்பருவம் என்பது மெழுகில் பொம்மை செய்வது போன்றது. மெழுகை நெகிழச்செய்து விரும்பும் வடிவம் கொடுப்பது போல இப்பருவத்தில்தான் மனிதன் இச்சமூகத்தில் வாழ்வதற்குத் தகுந்தபடியான பண்புகள் பெற்றவனாக உருவாக்கப்படுகின்றான். இப்பண்புகள் குழந்தையின் மறைவுள்ளத்தில் (Unconscious mind) பதிவாக அமைந்து பிற்காலத்தில் அதன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன எனும் உளவியல் ஆய்வாளர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இச்சிறுகதைத் தொகுப்பை அணுகும்போது மேல், கீழ் வர்க்க அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சமூக அமைப்பில் சாதி வேற்றுமை என்பது குழந்தைப்பருவம் முதலே கற்பிக்கப்படுவதைக் கொண்டாட்டம்சிறுகதையில் மங்களம் டீச்சர், கரோலின் மேரி ஆகியோருக்கிடையேயான பின்வரும் உரையாடல் இனம் காட்டுகின்றது.

என்ன, மழ பேயவும் இதாஞ் சாக்குன்னு பாதிப் பேருக்கு மேல நின்னுட்டானுக போல டீச்சர் கேட்டாங்க.

ஆமா டீச்சர். இந்தச் சேரிப் பசங்கல்லாம் நின்னுட்டாங்க டீச்சர் கரோலின் சொன்னா.

நாங்கள்ளாம் ஊர்ப்பசங்க டீச்சர்எங்கம்மா அப்படித்தான் சொல்லுவாக

      இவுங்கெல்லாம் காலனிப் பசங்க டீச்சர்

      அவுங்கள்ளாம் தலித்துங்க டீச்சர் ரோஸலின் ரொம்ப அழுத்தந் திருத்தமாகச் சொன்னா.

இந்த வயசுலே ஒங்களுக்குத் தலித்துகள்ளாம் தெரியுமா?

      ஆமா டீச்சர். தலித்துங்கன்னா கீச்சாதிப் பசங்களாம் டீச்சர்; நாங்கள்ளாம் மேச்சாதிப் பசங்க டீச்சர்

      இப்பதிவானது குழந்தைப்பருவம் முதலே சாதிவெறியை ஊட்டி வளர்க்கின்ற மேல்வர்க்கத்தினரின் போக்கு, காலங்காலமாக எத்தகைய கட்டமைப்பை உருவாக்கினார்களோ அதனைத் தக்கவைக்க அவர்கள் கைக்கொள்ளும் உத்தியைத் தெளிவாக்குகின்றது.

தலித் பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று மேல்சாதியினர் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்தாக்கத்தை வயிறும் வாழ்க்கையும் எனும் சிறுகதை எடுத்துரைக்கின்றது. இச்சிறுகதையில் மேல்சாதிப் பெண் ஒருத்தி தன் பிள்ளையை வேறு பள்ளியில் சேர்க்கக் காரணம் சொல்லும்போது, சுந்தரி டீச்சரிடம் கீழ்க்காணும் முறையில் உரையாடுகிறாள்.

அதுவந்து டீச்சர் இந்த ஸ்கூல்ல பாதிக்குமேல சேரிப்பசங்க படிக்கிறாங்களா. எங்க பிள்ளைக அதுங்களோட சேந்தா, அதுங்களோட கெட்ட பழக்கம் எங்க பிள்ளைங்களுக்கும் வந்துரும் பாருங்க. அதனாலதான்அந்தச் சாதியப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது டீச்சர். திருட்டு பசங்க, சுத்தமில்லாத பசங்கதிருடித் திங்கிற பசங்க டீச்சர்.

என்று பாமா பதிவு செய்திருப்பது, மேல்சாதியினரின் மனநிலை கீழ்சாதி மக்களை எந்த அளவுக்குத் தாழ்வாகக் கருதுகிறது என்பதை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கல்விநிலையங்களில் தலித் பிள்ளைகள் ஆசிரியரால் சாதியின் அடிப்படையில் அடையாளம் காட்டப்படும் அவலத்தையும் அந்த…’ எனும் சிறுகதையில் குறிப்பிட்டுள்ளார்.

தலித் குழந்தைகள் வளர்க்கப்படும் சூழலில் அவர்கள் மேல்சாதியினருக்கு அடங்கிப் போகும்படி அறிவறுத்தப்படுவதை, கோடை மழை கதையில் வரும் மக்காளி, தன் மகன் தங்கராசு பள்ளிக்கூடத்தில் அடிவாங்கி வரும்போது,

யாராச்சும் ஒனிய அடிச்சாக்கூட நீயித் திருப்பி அடிக்கக் கூடாதுடா. நம்மளால அவுகள எதுத்துச் சண்ட போட முடியாது. பெசாரியாரியா மூர்க்கத்தனமா இருக்கலாம். நம்மளப்போல ஆளுகளுக்கெல்லாம் கோவமே வரக்கூடாதுடாவாத்தியார் ரொம்ப அடிச்சார்னா கையெடுத்துக் கும்புட்டு அடிக்காதிங்க சார்னு சொல்லுடா. வேற நம்ம என்னடா செய்ய முடியும்? சொல்லு

என்று தலித் குழந்தைகள் வளர்கின்றபொழுதே எதிர்க்கும் தன்மை தவறு எனும் கற்பிதம் புகுத்தப்பட்டு வளர்க்கப்படுவதைப் பாமா பதிவு செய்துள்ளார்.

மனிதனின் உள்ளார்ந்த மனஆற்றல்களை, அறிவுத்திறன்களை வெளிப்படுத்தி அதனை வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் செய்வது கல்வி. மனிதனின் சுயத்தை அறிந்துகொள்ளச் செய்வது கல்வி. இத்தகைய கல்வியானது ஆண்டைகளால் தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருப்பதை விட்டு விடுதலையாகி  கதையில் அனந்தம்மாள் தன் மகன் எளையராசாவிடம், தான் ஆண்டைகளுக்கு அடிமையான வாழ்வு குறித்துக் கூறுகையில்,

நம்மள ஒத்த எழுத்து படிக்க உடாமெ கெடுத்ததே அந்தாளு தான். சின்னதுல இருந்தே அவரோட ஆடுமாடுகள் மேச்சு அவருக்குச் சொத்து சேத்து வச்சிட்டு இன்னைக்கு நாம முட்டாக் கழுதைகளா அலைறோம்

என்று குறிப்பிடுவதன்வழி அறிய இயலுகிறது.

தஞ்சை மாவட்டப் பண்ணையார்களின் நிலங்களில் பண்ணையாள் என்ற உழைக்கும் மக்கள் பட்ட அவலத்தை கா.வீரையன் ‘தமிழ்நாடு விவசாய இயக்கத்தின் வீர வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடுவதாக ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடும் செய்தி பின்வருமாறு:

ஒரு மிராசுதாரிடம் வேலை செய்யும் பண்ணையாள் அந்த மிராசதாரின் இடத்தில்தான் குடிசை போட்டுக் குடியிருக்க வேண்டும்அவன் உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு வராமல் இருந்தால் மாட்டுச்சாணத்தைத் தண்ணீரில் கரைத்து அவனுக்குக் கொடுக்கப்படும். அதை அவன் குடிக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளைகளும் மிராசுதார் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். மாடு மேய்க்க வேண்டும். பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது; படிக்க வைக்கக் கூடாது (2015:54).

என்பது குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது.

தலித்துகள் வாழ்வு முன்னேற்றம் பெற அடிப்படைக் கல்வி பெறுவது அவசியம். அவர்கள் உயர்கல்வி கற்று, தங்களுக்குள் இணைத்து, சமூகச் சிந்தனையுடன் சாதியத்தை எதிர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்தார் அம்பேத்கார். அவர் கூற்றுப்படி, கல்வி கற்க முனையும் தலித் பிள்ளைகள் கல்வி நிலையங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தனது படைப்பில் வெளிப்படுத்தியுள்ள பாமா, தலித்துகளின் முன்னேற்றத்திற்கான அடுத்தகட்ட நகர்வாக, “கற்க! இணைக! கலகம் செய்!” எனும் அம்பேத்காரின் பொன்மொழிகளை முன்மொழியும் மருதமுத்துவை ஏடாகூடம் எனும் கதையில் பேசவைத்துள்ளார். நன்றாகப் படிக்கும் திறமை பெற்ற மாணவன் மருதமுத்து சாதியின் அடிப்படையில் அடையாளம் காட்டப்படும்போது அவனது மனவோட்டத்தை,

நாம நல்லாப் படுச்சாக்கூட அத ஏத்துக்க முடியல. இவுகளுக்கு எஸ்சி ன்னா கருப்பா இருப்பான்; முட்டாளா இருப்பான்; படிக்க லாயக்கில்லாதவனாகத்தான் இருப்பான்; அசிங்கமா இருப்பான்; அசுத்தமா இருப்பான், இப்படியே சொல்லிச் சொல்லி இப்ப நாம நல்லாப் படிச்சாலோ, சுத்தமா வந்தாலோ இவுகளால சீரணிச்சுக்க முடியல. அம்பேத்கார் சரியாத்தான் சொல்லி இருக்காரு. முதல்ல நல்லாப் படிக்கணும். அப்புறம் எல்லாரும் இணைஞ்சு இந்த சாதி அமைப்ப ஒழிக்கிறதுக்குக் கலகம் செய்யணும். ஆமா, அதுனால மொதல்ல இந்த கல்விங்ற ஆயுதத்தக் கைல எடுத்துக்கணும்

என்று காட்சிப்படுத்தியிருப்பதன்வழி உணர முடிகின்றது. விட்டு விடுதலையாகிஎனும் கதையில் ஆண்டைகளிடம் அடிமைப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் எளையராசா ஆண்டையை எதிர்க்கும் துணிவு பெறுவதை,

ஏங்கிட்ட வேல செஞ்ச, கூலி வாங்கித் தின்ன காலமெல்லாம் மறந்தா போச்சு? ஏ முன்னாலயே சவுடாலா நாற்காலியில் ஒக்காந்துக்கிட்டு, ஏங்கிட்டயே பழத்துக்கு ரூவா கேக்குற நாயி? எல்லாம் நேரம்டா!

      நேரந்தான் அருப்புக்கோட்ட வண் வார நேரந்தான். சட்டுனு நாலு ரூவாய எடுங்க. குப்ப(எளையராசா) சொன்ன தோரணயப் பாத்து பரசுராமரு அசந்து போனாரு

என்று தலித் மக்கள் கலகக்குரல் எழுப்பும் காலம் வந்துவிட்டது எனும் தனது உரத்த சிந்தனையினைப் பாமா தலித் சமூகத்தின் முன்னால் வைத்துள்ளார்.

தலித் இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாய்க் குறுகிப் போகாமல் பரந்துபட்ட, ஒடுக்கப்படும் எல்லா தேசிய இன மக்களின் குரலாகவும் ஒலிக்க வேண்டும். தலித் படைப்புகள் என்பது ஏதோ ஏழ்மையை, வறுமையைச் சித்திரிக்கிற படைப்பாக மட்டுமே உள்ள பார்வை அகல வேண்டும். அடிமைவாழ்வைச் சித்திரிப்பதோடல்லாமல் அதன் விலங்குகளை நொறுக்குகிற முற்போக்கான அம்சமாக அதன் போக்கு அமைய வேண்டும்

எனும் விழி பா.இதயவேந்தனின் கருத்திற்கேற்ப, பாமாவின் இச்சிறுகதைத் தொகுப்பானது தலித் மக்களின் வாழ்வியலைச் சித்திரிப்பதோடு அம்மக்களின் மேம்பாட்டிற்கான வழிமுறைகளையும் இனங்காட்டியுள்ளது. மேலும், குழந்தைகளை மையப்படுத்திக் கதைக்களத்தை அமைத்து, இனிவரும் காலங்களில் தலித் மக்களின் வாழ்வு மேம்பட எங்கிருந்து சிக்கலைக் களைய வேண்டும் என்பதை அறிவுறுத்தியிருப்பது தலித் படைப்புவெளியில் புது முயற்சியாக அமைந்துள்ளது.

துணைநூற்பட்டியல்

  • இதயவேந்தன் விழி பா., 2009, தலித் எனும் கலகக்குரல், ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர்.
  • சிவசுப்பிரமணியன் ஆ., 2015, தமிழகத்தில் அடிமை முறை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
  • தூரன் பெ., 2012, குழந்தை உள்ளம் உளவியல் நூல், சாரதா பதிப்பகம், சென்னை.
  • பஞ்சாங்கம் க., 2011, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர்.
  • பாமா, 2015, தவுட்டுக் குருவி, விடியல் பதிப்பகம், கோவை.
  • மல்லிகா அரங்க., 2011, தலித் அறம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  • வாசுகி சி., 2014, தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

முனைவர் வீ.மீனாட்சி

உதவிப் பேராசிரியர்

முதுகலைத் தமிழாய்வுத்துறை

பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 17

[email protected]