அக இலக்கியங்கள் அக்காலத் தமிழரின் அகவாழ்வியலை எடுத்தியம்பும் தன்மையன.  அக இலக்கியங்களில் மிதவை மாந்தர் என்போரின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிலையில், மிதவை மாந்தர்கள் ஆற்றிய பணிகளையும், தலைவன் தலைவியரிடையே கொண்ட உறவு நிலைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

தலைவன், தலைவி, பரத்தை ஆகியோரிடையே தூது செல்லும் வாயில்கள் பட்டியலில் மிதவை மாந்தர்களுக்கும் இடம் உண்டு. இவ்வாயில்களில் மிக நீண்ட தொலைவு பயணம் செய்து செய்தி உரைப்பதற்கு உரியவராகக் கூத்தரும் பாணரும் குறிக்கப்படுகின்றனர் என்பதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.

தலைவனின் பரத்தமை ஒழுக்கம் காரணமாகச் சினம் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களாக மிதவை மாந்தர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். மருதத்திணைப் பாடல்கள் பலவற்றில் இத்தகைய சூழலில் மிதவை மாந்தர்களைச் சந்திக்க முடிகிறது. பெரும்பாலும் தலைவியின் சின மொழிகளுக்கும், இகழ்ச்சிக்கும் உள்ளாகின்றவர்களாகவும், சில நேரங்களில் பரத்தையரால் கடியப்படுகின்றவர்களாகவும் மிதவை மாந்தர்கள் காட்சி தருகின்றனர். தலைவன் பொருள் தேடவோ வேறு வினை காரணமாகவோ வேற்று நிலங்களுக்குப் பிரிந்து சென்றிருக்கும் சூழலில், தலைவி தலைவனுக்கிடையில் தூதுவராக மிதவை மாந்தர்கள் செயலாற்றி உள்ளனர். முல்லை, நெய்தல் திணைப் பாடல்கள் இத்தகைய சூழல்களில் மிதவை மாந்தர்களைச் சித்திரிக்கின்றன. மேலும், தலைவன் தன் அகவாழ்வு அனுபவங்களை நெருங்கிய நண்பனிடம் பகிர்ந்து கொள்வதைப் போல், பாணனுடன் பேசி மகிழும் காட்சிச் சித்திரங்களையும் அகப்பாடல்களில் காண முடிகிறது. எனவே, மிதவை மாந்தர்கள் தலைவனிடம் கொண்ட உரிமையையும் உறவையும், தலைவியிடம் கொண்ட பணிவையும் இடைவெளியையும், தலைவியின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆட்பட்ட நிலையையும், அச்சூழலில் மிதவை மாந்தர்தம் எதிர்வினையையும் பற்றி எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தலைவனுக்கும் மிதவை மாந்தர்களுக்கும் உள்ள உறவுநிலை

வினைவயிற் பிரிந்துறையும் தலைமகன், தலைமகள் விட்ட தூதாய் வந்த பாணனிடம், ‘அவள் சொல்லிய திறம் கூறு” (ஐங்.478), ‘நீ சொல்லும் போதெல்லாம் எனக்கு இனிமையாக உள்ளது” (ஐங்.479) என்று கூற, அது கேட்ட பாணன், ‘இளவேனில் வந்துவிட்டது. அவனோ பரத்தையரின் இன்பத்தை உண்பவனாக என்னை மறந்து அங்கேயே தங்கி இருப்பானோ? கூடிக் கழித்திருப்பானோ? என்று புலம்பி வருந்துகின்றாள். பணிந்து நின் அடிசேராத பகைவர் நீ அவருக்கு அளிக்கும் தண்டனையை எண்ணி எண்ணி நடுங்குவதைப் போல அவள் தன் உள்ளம் நடுங்குகின்றாள். எனவே அவளைக் காக்க நீயும் விரைந்து செல்வாயாக” (கலி.29) என்று கூறுகிறான்.

தலைவனிடத்து உரிமை கொண்டு, ‘தலைவ! உனக்கு நான் பாணனும் இல்லை. எமக்கு நீர் தலைவனும் இல்லை. ஏனெனில் நின் மீது மிகுந்த அன்பு கொண்ட நின் மனைவியின் புலம்பலைக் கேட்டும் நீ அருளாதிருக்கின்றாய்” (ஐங்.480) என்று பாணன் சினந்து கொள்கின்றான். தலைவனிடத்து அவர் தம் தவற்றைச் சுட்டிக்காட்டி உண்மை நிலையை உரைக்கும் பாணனின் பண்பானது தம் முன்னோர்வழி வந்ததாகவே தெரிகிறது.

தலைவியின் தனிமைத் துயரை நீக்குதற் பொருட்டுத் தலைமகன் பாணனைத் தூது விடுத்ததோடு, துயர்வுறும் தலைவிக்குப் பேச்சுத் துணையாகச் சிறிது பொழுது அங்குத் தங்கியிரு என்று கூறுவதோடு (ஐங்.477) தலைவியின் ஊடல் தணிக்கத் தனக்கும் தன் தலைவிக்குமான அகவாழ்வு அனுபவங்களைப் பாணனிடம் சொல்லி நகையாடும் காட்சிகள் நற்றிணையில் காணக் கிடக்கின்றன. ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருந்த அவளை நெருங்கி, “இப்படித் துயல்கிறாயே இளம்பெண் பருவம் கடந்து முதியவள் ஆகிவிட்டாயோ?” எனக் கேட்க, சிந்தனை வயப்பட்டு நின்ற என்னைக் கண்டு குறுநகையினைத் தோற்றுவித்து, தன் கண்களைக் கைகளால் மறைத்து மூடிக் கொண்டனள். அதை நினைத்து எப்போதும் நான் மகிழ்ந்து நகையுடையவனாவேன்; இப்போதும் நகுகின்றேன். ‘வாராய் பாண நகுகம்” என்று பாணனிடம் சொல்லி மகிழ்கிறான்(நற்.370). மேலும், தலைமகளுக்கு ஒப்பானவரை இம்மண்ணுலகில் காண்பதற்கு இல்லை. நடுகல்லில் பெயர் சேரப் பெறாதவளாய் மேலுலகத்தில் பொருந்தியுள்ள பெண்பாலருள் யாரேனும் இருப்பாராயின் இவளுக்கு நேராவர் என்றும் தலைமகன் பாணனிடம் கூறுகின்றான்.

இங்ஙனம் தலைவன் மிதவை மாந்தரிடத்துத் தன் அகவாழ்வு நிகழ்வுகளைக் கூறித் தலைவியைக் குறித்து நகையாடுவதும் உயர்த்திக் கூறுவதும், பாணன் தலைவிக்காகத் தலைவனிடத்து உரிமையுடன் சினந்து கொள்வதும், தலைவன் தலைவியரிடையே ஊடல் தீர்த்துதவுவதும் ஆகிய நிகழ்வுகள் தலைவனுக்கும், மிதவை மாந்தர்களுக்கும் இடையே உள்ள உறவு நிலையையும் அதன் ஆழத்தையும் முக்கியத்துவப்படுத்துவதாய் அமைகின்றன.

தலைவிக்கும் மிதவை மாந்தர்களுக்கும் உள்ள உறவுநிலை

தலைவன் பரத்தமை மேற்கொண்டதால் வாயில் நேர்ந்த பாணனிடம் தலைவியானவள் தன் மறுப்பைப் பலவகைகளில் எடுத்தியம்புகின்றாள். தலைவன் பரத்தையோடு இணைந்ததால் பழிச்சொல் மிகுதியாயிற்று (ஐங்.131); புதல்வனைப் பெற்றதால் ஆடையானது மாசுபடிந்து, பால்நாற்றம் உடையதாயிருக்கும். அதனால் நாம் இயைந்தவர் ஆக மாட்டோம். தூய அணிகளணிந்த பரத்தையர் சேரிக்கே கொண்டு போய் விடுப்பாயாக. அதனால் பொன் பெற்று நீயும் உவப்பாயாக(நற்.380); உடுக்கையின் இடப்பக்கத்தைப் போல் பயன்படாமல் இருக்கிறோம் (நாலடி.388); கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையற்று இருக்கின்றோம் (நாலடி.390) முதலானவை தலைவி முன்வைக்கும் கருத்துக்களாகும். இக்கருத்துக்களைக் கூறி, தலைவனைப் பரத்தையரிடமே கொண்டுப் போய்ச் சேர்ப்பாயாக எனத் தலைவி பாணனிடம் சினந்து கூறுகிறாள்.

 

அதே பாணனிடம் அவன் தூதாகிச் செல்ல வேண்டும் என்னும் குறிப்பினளாகிய தலைமகள் அவளிடம் தன் மெலிவு காட்டி என் முன்கையின் வளையல்கள் நெகிழ்ந்து நீங்கின. அந்நிலையைக் கண்ட நீ தலைவனிடம் உரைப்பாயாக எனவும் (ஐங்.140) தலைவன் பொறுக்க இயலாத துன்பத்தைச் செய்துள்ளான். அவன் ஊருக்கு அவனைக் காணச் செல்வாயானால் எம்மையும் மறவாது கூறுவாயாக (ஐங்.473) என்றும் கூறுகிறாள்.

வினைவயிற் பிரிந்த தலைவனது தேரைக் கண்ட தலைமகள் பாணனிடம், பாணனே தலைவனது தேர் வந்ததால் அவனோடு என் மேனியழகும் திரும்ப வந்தது அதைக் காண்பாயாக (ஐங்.134) என்றும் கூறுகிறாள்.

மிதவை மாந்தர்கள் தலைவியால் புகழப்பெறுதலும் இகழப் பெறுதலும்

பிரிவினால் ஆற்றாது வருந்தும் என் நிலை கண்டு அவனைக் கொண்டு வருவேன் என்று கூறும் உன் அறிவைப் பாராட்டுகிறேன் என்றும் (ஐங்.474) நான் அணிந்திருந்த தோள்வளைகள் நீங்கித் தோள்கள் வாடின நிலையையும், கண்கள் நலம் இழந்ததையும் கண்ட பாணன் மிகவும் வருந்தினான். அவன் பேரன்பினை உடையவன் (ஐங்.475) என்றும் தலைவி பாணனைப் புகழ்கின்றாள்.

பாணனுடன் தலைவனும் சென்று வாயில் வேண்ட, பாணன் குறித்துத் தலைவி, ‘பல பொய்யான உறுதிமொழிகளைக் கூறுபவன்” என்றும் (ஐங்.43) தலைவனை இடித்துரைத்துத் திருத்தி எம்மிடம் கொண்டு வந்து சேர்க்காதவனான பண்பற்றவன் என்றும் (ஐங்.138) தலைவனது புகழ்பாடித் திரிவதால் பித்தேறியவன் என்றும் (கலி.74: 6-7) கூறுகின்றாள். தோழியும், தூதாக வந்த விறலியை, இவள் தலைவனுக்குப் பரத்தையைக் கூட்டுவித்து நலம் செய்பவள். இவள் செயலை ஒழிக்க வேண்டும். தலைவனுக்கு ஆக்கம் தேடுவோம் என்று கூறுகின்றாள் (நற்.170).

தலைவியின் ஆற்றாமை கண்டு தூதாகிச் சென்றவிடத்துத் தலைவியால் புகழப் பெறுபவர்களாகவும் தலைவனின் கூடா ஒழுக்கத்திற்குத் துணைபுரிந்த விடத்து இகழப் பெறுபவர்களாகவும் மிதவை மாந்தர்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர்.

தலைவி பரத்தைமை மேற்கொண்ட தலைவனை ஏற்காத நிலையும் மிதவை மாந்தர்கள் அந்நிலைக்குக் காரணமாதலும்

தலைவனது பரத்தைமை ஒழுக்கத்தால் சினந்த தலைவி தலைவனிடம், உன் பரத்தை செய்த நகக்குறி பற்குறியோடும், பரத்தையரொடு ஆடிய துணங்கைக் கூத்தினால் கரை கிழிந்து போன ஆடையோடும் இங்கு வரவேண்டாம் என்று கூறுவதோடு, யாழ்மீது ஆணையிட்டுப் பலவற்றையும் கூறிய பாணனைக் காணவில்லையே(கலி.71), அப்பாணன்தான் இவற்றையெல்லாம் என்னிடம் வந்து காட்டுக என்று உனக்குச் சொன்னானோ(கலி.72)  என்றும் சினக்கிறாள்.

பழைய மருதத் திணைப்பாடல்களில் மனைவி மாதவிடாயான நாட்களிலும், கருவுயிர்த்துக் குழந்தை ஈன்று பாலூட்டிய காலங்களிலும் வசதி படைத்த கணவன் தேரில் குதிரை பூட்டிப் பரத்தையரிடம் சென்றனன் என்று ராஜ்கௌதமன் குறிப்பிடுகிறார்(2006:284). இக்கருத்தையே அ.செல்வராசு அவர்களும் வலியுறுத்திக் கூறுகின்றார். மேலும் ராஜ்கௌதமன், மனைவியை மனையுறை வாழ்க்கைக்குள் பூட்டியதால் அவளிடம் காணமுடியாத ஒப்பனை, சரச சல்லாபப் பேச்சு, விளையாட்டு, ஆடல், பாடல், கலவிக் கலைவண்ணங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பரத்தையர் வசமாயின. ஆட்சியாளர்கள் பரத்தையர் இருக்கைகளைத் தங்கள் சுகத்திற்காக ஏற்படுத்தினார்கள். மருதத்திணைப் பரத்தையரைவிட ‘மதுரைக் காஞ்சி” கூறிய ‘கொண்டி மகளிர்” வள்ளுவர் விலக்கிய ‘வரைவின் மகளிரை” ஒத்துள்ளார்கள். கொண்டி மகளிர் தம் கொண்டையில் கோதை சூடி, கைகளில் மாட்டிய அவிர்தொடி விளங்க வீசி, இரவில் தெருக்களில் நடந்து சென்று ஆடவரை வசப்படுத்தினார்கள். அவர்களது வாழ்க்கை ‘பழம் தேர் வாழ்க்கைப் பறவை” போன்றது. இவர்களது மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல் இல்லங்களுக்குக் கொழுங்குடிச் செல்வரும் பிறரும் வந்து போயினர். வானவ மகளிரைப் போன்ற கொண்டி மகளிரைக் கண்டோர் நெஞ்சு நடுக்குற்றனர் (ராஜ்கௌதமன், ப.284).

‘கொண்டி மகளிர்” என்றால் கொள்ளையடிக்கப்பட்ட பெண்கள் என்று பொருள். தோற்ற மன்னரின் உரிமைப் பெண்களைக் கொள்ளையடித்து வந்து, வென்ற மன்னர் தம் போகப் பொருட்களாக்கி, செல்வர்களின் விலை மகளிராக்கினார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலைக் காவியங்களில் சித்திரமாகியுள்ள கணிகையர் இக்கொண்டி மகளிரின் விரிவாக்கமே. வள்ளுவர் ‘வரைவின் மகளிர்” என்று எச்சரித்தவர்கள் இத்தகையோர் என விளங்கும். பழைய மருதப் பாடல்களில் பரத்தையர் வசமானவன் மணமானவன். மணமாகாத ஆடவர் பரத்தையர் வசம் சென்றதாக அன்றைய அகமரபு குறிக்கவில்லை. ஆனால் ‘மதுரைக் காஞ்சி” குறிப்பிடும் கொண்டி மகளிரிடம் வேற்றூர்களிலிருந்தும் செல்வர்கள் வந்து சுகம் கண்டதாகத் தெரிகிறது. மருதத் திணைப் பரத்தையரும், வள்ளுவர் காலக் கணிகையரும் பொது மகளிர் என்றாலும் வெவ்வேறு நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். உடைமையாளரின் சுகத்திற்காக உருவாக்கப்பட்டவர்கள்(ராஜ்கௌதமன், பக்.258).

பரத்தையர்களாகச் சுட்டப் பெற்றுள்ளோரின் முழுநேரத் தொழில் அதுவன்று. அவர்கள் வேறு தொழிலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்துள் உள்ளன. அதுபோல இவர்கள் பல ஆடவர்களோடு தொடர்புடையவர்களாகவும் காட்டப்பெறவில்லை என்று அ.செல்வராசு குறிப்பிடுகிறார் (2007:79).

மருதத் திணைப் பாடல்களில் தலைமக்களுக்கு இடையேயான ஊடல் என்பது பரத்தமையால் மட்டுமே நிகழ்வதன்று. ஊடலுக்குப் பரத்தமையும் ஒரு காரணமே தவிர முற்று முழுதும் அதுவே காரணமன்று. வேறு சில காரணங்களாலும் ஊடல் நிகழலாம். சான்றாக, பதிற்றுப்பத்து 52-ஆவது பாடலில் மன்னன் கூத்தாடும் மகளிர்க்குக் கை கொடுத்து ஆடியதால் அவன் மனைவி ஊடல் கொண்டாள் என்று தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.

பரத்தமை ஒழுக்கம் உடைமையாளரின் ஒழுக்கமாகக் காணப்படுகிறது என்பதை மருதப் பாடல்களில் காண முடிகிறது. மேலும் பரத்தையர் உறவால் கணவனுக்கு நோய் வரும், செல்வம் போகும், ஊர் சிரிக்கும், கேடு வரும், பாவம் என்றெல்லாம் மருதப் பாடல்களில் தகவல்கள் இல்லை. மனைவி, அவனது பரத்தைமையால், தான் இவ்வாறு துயர் உற்றதாக, தன் இளமை கழிந்து விட்டதாகச் சொல்லிப் புலம்புவதோடு சரி. வேறு அறமதிப்பீடுகள் எவையும் ஊடாடவில்லை (ராஜ்கௌதமன், ப.284).

கலைஞர்களைப் போற்றுவோராக வாழ்ந்த மன்னர்கள் அவர்களது கலையில் மையல் கொண்டு அக்கூட்டத்திலிருந்த ஆடல் மகளிரோடு உறவு கொண்டிருக்க வேண்டும். இப்பெண்டிரொடு தலைவர்களைக் கூட்டுவிக்கும் வேலையில் தான் பாணர்கள் ஈடுபட்டுள்ளனர். பாண் சமூகப் பெண்கள் பரத்தையர்களாக, அப்பரத்தையர் தூதுவராகப் பாணர்கள் செயல்பட்டிருகின்றனர் என்ற தி.ச.சத்தியம் (2003:48) கூற்றும் இங்குச் சுட்டிக்காட்டத் தக்கதாகும் (அ.செல்வராசு, ப.84).

மிதவை மகளிர் எல்லாரும் இவ்வாறுதான் இருந்தார்கள் என்றோ, எல்லாத் தலைவர்களும் அப்பெண்டிரோடு உறவு கொண்டிருந்தனர் என்றோ கூற முடியாது. இவர்களில் ஒரு சிலர் மட்டும் அவ்வாறு இருந்ததால்தான் ‘பரத்தை” என்ற சொல் சங்க இலக்கிய மருதத்திணைப் பாடல்களில் 6 இடங்களில் மட்டும் குறிப்பிடப் பெற்றுள்ளது என்று அ.செல்வராசு கூறுகிறார்.

மிதவை மாந்தர்கள், கூத்தாடும் தொழில் இல்லாக் காலங்களில் மருத நில நீர்த்துறைகளில் மீன் பிடித்துள்ளனர். அவற்றை உணவுக்காகவும், விற்பதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர் (அகம்.126, பெரும்.283-4, ஐங்.48, ஐங்.47, ஐங்.49). எனவே, நெய்தல் நில மீன்பிடித் தொழில் செய்த பெண்டிர் பரத்தி, பரத்தை என அழைக்கப்பெற்றது போன்றே, பாணர் கூட்டத்து மீன் பிடிக்கும் பெண்களும் பரத்தை, பரத்தி என அழைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. இதுவே பரத்தை என்ற சொல்லுருவாக்கத்திற்கான காரணமாக அமைகிறது எனலாம். கலையின் மீதும் கலைஞர்கள் மீதும் ஈடுபாடு கொண்ட தலைவர்கள் அப்பெண்களை நாடிச் சென்று உறவு கொண்டதால் அவர்களது ஒழுக்கம் பரத்தமை ஒழுக்கம் எனப்பட்டுள்ளது. மீன் பிடிக்கும் பெண்டிர் பரத்தை எனப்பட்டது போலவே அவர்கள் தங்கியிருந்த இடமும் பரத்தையர் சேரி என அழைக்கப்பெற்றிருக்க வேண்டும்.

முடிவாக

வீரநிலைக் காலமான சங்க காலத்தில் போரே முக்கியத்துவம் வாய்ந்த சமுதாயச் செயல்பாடாய் இருந்துள்ளது. ஓர் ஆண்மகன் தனது வீரத்தை வெளிப்படுத்தி மறுமைப்பேறு அடைய வேண்டும் என்பதே அச்சமூகத்தின் குறிகோளாகவும் இருந்துள்ளது. ஆண்மகனின் வாழ்நாள் என்பது வரையறைக்குட்பட்டதாக இல்லை. வாழ்நாள் குறைவும், பெண்களின் வரையரையற்ற எண்ணிக்கையும், கலைமீது கொண்ட ஆர்வமும் பரத்தமைக்கு வழிகோலியது எனலாம். மேலும் கலையை மட்டும் தொழிலாகக் கொண்ட மிதவை மாந்தர்கள் அரசியல் மாற்றங்களாலும், தொடர்ந்த போர்களாலும் நிலைத்த வாழ்விற்கும் தொழில் இன்மைக்கும் ஆளாகினர். இந்நிலையில் மன்னர்களின் புற வாழ்வில் தூது சென்ற மிதவை மாந்தர்கள் அக வாழ்விலும் ஊடல் தீர்த்தும் தூது சென்றும் அதனால் வளம் பெற்று வாழ்ந்தனர்.

தலைவனது பரத்தமை ஒழுக்கத்திற்குத் துணை புரிந்ததால் தலைவியினது சினத்திற்கும் இகழ்ச்சிக்கும் ஆளான மிதவை மாந்தர்கள், வினையின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவனிடத்துத் தூது சென்றும், தலைவியின் நிலை குறித்து எடுத்துரைத்தும், தவறுணர்த்தித் தலைவனைக் கொணர்ந்தவிடத்தும், தன் நிலை கண்டு வருந்தியவிடத்தும் தலைவியால் புகழப் பெற்றுள்ளனர். தலைவனது வாயிலாக வந்த மிதவை மாந்தரிடத்துத் தலைவி சினந்து தன் உள்ள உணர்வுகளையும் உடல் குறிப்புகளையும் வெளிப்படுத்துவதோடு ஆற்றாமையையும் மறுப்பையும் தெரிவிக்கிறாள்.

பாணன் தலைவியிடம் பேசுவது போன்ற நேரிடையான கூற்றுகள் இல்லையெனினும் தலைவி பாணனிடம் பேசுவது போன்ற கூற்றுகள் அக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. தலைவனுடன் பாணனும் பாணன் தலைவனிடமும் பேசுவது போன்ற கூற்றுகளும், அக்கூற்றுகளில் நெருங்கிய நண்பனிடம் கூறுவது போல் தலைவன் பாணனிடம் தன் அகவாழ்வு அனுபவங்களைக் கூறுவதும் தலைவியின் பிரிவினை எண்ணாது இருக்கும் தலைவனிடத்துப் பாணன் உரிமையுடன் சினந்து கொள்வதுமான காட்சிகளை அக இலக்கியங்களில் காண முடிகிறது. எனவே, மிதவை மாந்தர்கள் அகவாழ்வில் தலைவன் தலைவியருக்கிடையே தவிர்க்கவியலா உறவுகளாகச் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

துணை நின்றவை

செல்வராசு அ., சங்க இலக்கியத்தில் குடிமக்களும் தலைமக்களும், முதற்பதிப்பு, 2007, எழில், திருச்சி-621 012.

மாதையன் பெ., சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், நான்காவது பதிப்பு, டிசம்பர் 2012, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 014.

ராஜ்கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியரும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், முதல் பதிப்பு, நவம்பர் 2006, தமிழினி, சென்னை-14.

ஜெனிபாமேரி, இ., மகளிர் வர்ணனைவழி மிதவை மகளிரின் சமூக நிலை, இனம் – பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், ஆகஸ்ட் 2016.

இ.ஜெனிபாமேரி

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

தமிழாய்வுத்துறை,

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 023.