ஒரு மொழியின் இலக்கணக்கூறுகள் அம்மொழி வழங்கும் சமூகத்தைச் சார்ந்தே அமைகின்றன. ஓர் இலக்கணக்கூறிற்கான சொற்றொகுதி மற்றும் அமைப்பு நிலைகளிலான மாற்றங்கள் அவற்றின் சமூகப் பின்னணியிலேயே நிகழ்கின்றன. தமிழில் காணப்படும் வியங்கோள் வினைமுற்றுக் குறித்த காலந்தோறுமான கருத்தாக்கங்களை உற்றுநோக்கினால் சமூக மாற்றத்திற்கேற்ப, இவ்அமைப்பு மாற்றம் பெற்று வந்திருப்பதும் அம்மாற்றங்களை இலக்கணவியலாளர் முன்னெடுத்துச் சென்றிருப்பதும் தெளிவாகின்றன.

இவ்வியங்கோள் வினையினைச் சமூக அடிப்படையில் ஆராய்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி,

‘வியங்கோளுக்குரியனவாகக் கொள்ளப்படும் வாழ்த்தல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல் ஆகியன உயர்மட்டமக்களின் நிலைகொண்டு வகுக்கப்பட்டுள்ளவையே. வியங்கோள் உயர்நிலை வழக்காக, கீழ்நிலைப்பட்டோரை ஏவற்கடுமையுடன் ஆணையிடுவது ஏவல்வினையாயிற்றென்ப. நெருங்கிய உறவுள்ளோரிடத்தும் இம்முறையைப் பயன்படுத்தலாமெனினும், ஏவல் வினையின் சமூக முக்கியத்துவம் மரியாதையற்ற ஏவலுக்கு இலக்கணங்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளமையையே எடுத்துக்காட்டுகின்றன. அதாவது சமூக ஏற்றத்தாழ்வினை இலக்கணம் பிரதிபலிக்க வேண்டியதாயிற்று’ (1942:45)

என்கிறார்.

பொருண்மை அடிப்படையில் மட்டுமன்றி, வரலாற்று நோக்கில் வியங்கோளின் அமைப்பு ஆராயப்படும்போதும் சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் வளர்ச்சி நிலை அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

தொல்காப்பியம் வியங்கோள் வினை குறித்துப் பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறது.

 1. அகர ஈற்று ‘ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி ’ இயல்பாகப் புணரும் (உயிர் மயங்கியல், 8)
 2. வாழிய என்னும் கிளவியின் இறுதி யகரம் புணர்ச்சியில் கெட்டும் வரும் (உயிர் மயங்கியல், 9)
 • ஒரு தொடரில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் எண்ணி வரும்போது வியங்கோள் வினைமுற்று வரும் (கிளவியாக்கம், 43)
 1. எழுவாய் வேற்றுமை வியங்கோள் வினையைப் பயனிலையாக ஏற்று வரும் (வேற்றுமையியல், 4)
 2. இருதிணைக்கும் உரிய திணை (வினையியல், 25)
 3. தன்மை, முன்னிலையில் மன்னாது, படர்க்கையிலேயே வரும்(வினையியல், 29)
 • மா என்னும் இடைச்சொல் வியங்கோட்கண் அசையாக வரும் (இடையியல், 24)

வியங்கோள் குறித்த இக்கருத்துக்களைஅடிப்படையாகக் கொண்டு உரையாசிரியர்களும், பின்வந்த இலக்கண நூலாரும் தத்தம்கருத்துக்களைக் கட்டமைக்கின்றனர்;வியங்கோள் வினைமுற்றின் அமைப்பினை அதன் விகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வரையறுக்கின்றனர்.     திணை பால் உணர்த்தாத நிலை மாறி,  பால் உணர்த்தும் அமைப்புகளுடன் விகுதிகள் இணைவது அவற்றின் அமைப்பு நிலையில் காணும் வளர்ச்சிப் போக்காகும்.

தொல்காப்பியர் வியங்கோளுக்கான விகுதிகள் எனத் தனியாக எவற்றையும் கூறவில்லை. அகர ஈற்றுப் புணர்ச்சியில் வியங்கோளைக் குறிப்பிட்டுள்ளார் என்பதால் வியங்கோள் விகுதியாக ‘க’ என்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வியங்கோளிற்கான விகுதிகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

இளம்பூரணர்   – க

நச்சினார்க்கினியர்      – க, ய, அல், ஆல், அர், மார், உம், ஐ

சேனாவரையர்        – க, ய, அல்

கல்லாடர்           – க, அர், ய, அல், ஆல், மார்

தெய்வச்சிலையார்     – க திரிந்து உருவான இ, ய, அர், ஆல், அல்

எ.கா.

ஆ செல்க, வாழிய, செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல், மரீயதொராஅல்,வாழியர், காண்மார் எமர், வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல், அஞ்சாமை அஞ்சுவதொன்றின், வாழி

இவற்றின் அமைப்பு

– வினையடி + விகுதி

– வினையடி + இடைநிலை + விகுதி

என்றவாறு அமைந்து பால் உணர்த்தாத நிலையில் உள்ளன.

இலக்கண நூல்களில் வீரசோழியமும்(9), நேமிநாதமும்(69), ‘க’ விகுதியை மட்டும் குறிப்பிடுகின்றன. நன்னூல்(338), க, ய, ர் என்று மூன்று விகுதிகளையும்குறிப்பிட, இலக்கண விளக்கம்(239) இவற்றுடன் அல், ஆல், உம், மார், ஐ என்ற விகுதிகளையும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பிய உரையாசிரியர்கள், இலக்கண நூல்கள் என எவரும் பால் உணர்த்தும் வியங்கோள் அமைப்புகளைக் கூறாதிருக்க, இடைக்கால சாசனங்களை ஆராய்ந்த ஆ.வேலுப்பிள்ளை (2002:148)அவ்வமைப்புகளை எடுத்துக்காட்டுகிறார்.அவை:

நடக்கக்கடவது, நடக்கக்கடவன், நடக்கக்கடவேன், நடக்கக்கடவோம், நடப்பதாக, நடப்பனவாக, நடப்பேனாக,  நடப்போமாக, செய்யப்பெறாதோமாக, செய்யப்பெறாதாராக, செய்யப்பெறாததாக.

இவ்வியங்கோள் வினைமுற்றுகள்

 • செயவெனெச்சம் + கட + பால், இடம் காட்டும் விகுதி
 • திணை,பால் உணர்த்தும் வினைமுற்று + ஆக

என்ற அமைப்புகளில் உள்ளன.

இவ்வமைப்புகளைத் தனது இலக்கண நூலில் எடுத்துரைக்கும் ஆறுமுக நாவலர், சிறுபான்மை அவை இக்காலத்து உலக வழக்கிலே வருவன  என்கிறார்(1993:128). அட்டும் என்ற விகுதியை வியங்கோளுக்கு உரியதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது(எ.கா.செய்யட்டும்). இவ்வமைப்பு முன்னிலையில் வராததாலும் வசவுப் பொருளில் வராததினாலும் இதனை வியங்கோள் அமைப்பு அல்ல என மறுக்கிறார் கு.பரமசிவம் (2011:235). தற்காலத்துத் தமிழில் உள்ள வியங்கோள் விகுதிகளைக் குறிப்பிடும் ச.அகத்தியலிங்கம், அவை வருமிடங்களையும் குறிப்பிடுகிறார்.அவைபின்வருமாறு :

-க >வினையடிக்குப் பின்

(எ.கா. வாழ்க, வளர்க, செய்க)

– அட்டும், – வேண்டும், – வேண்டாம், – கூடாது, -உம்

>செயவென் எச்சத்திற்குப் பின்

(எ.கா.  வரட்டும், நன்றாய் வாழ வேண்டும், நீ / அவன் / நான்

வாழ வேண்டாம், நீ / அவன் / நான் வாழக்கூடாது, ஊற்றவும்) (2002அ:258,259).

இவ்அமைப்புகள் மூவிடங்களிலும் பயின்றுவருகின்றன. விகுதிகள்வழி வளர்ந்துள்ள வியங்கோள் வினைமுற்றின் அமைப்புகள், அதன் படர்க்கையில் வரும், பால் காட்டாது என்ற அடிப்படை வரையறையிலிருந்து விலகி, மூவிடத்திலும் வழங்கப்படும் பால் உணர்த்தும் அமைப்புகள் வியங்கோள் வினைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பதை உணர்த்திநிற்கின்றன.

காலந்தோறும் வியங்கோள் வினைகளுக்கு வேறுபட்ட வடிவங்கள் உருவாகியிருப்பது அவற்றின் பொருண்மை நிலைகளை முன்னிறுத்தியே. பால் காட்டும் அமைப்பை வியங்கோள் வினைமுற்று வடிவமாகக் கொண்டதும், அதன் பொருண்மையை மையப்படுத்தித்தான்.

தொல்காப்பியம் ‘ஏவல் கண்ணிய வியங்கோள்’ (உயிர்மயங்கியல்,8) என்று குறிப்பிட்டுள்ள தொடரை வியங்கோளுக்கான பொருண்மை விளக்கமாகக் கொள்ளலாம். இத்தொடரின்வழி உரையாசிரியர்கள் வியங்கோளை ஏவல்கண்ணிய வியங்கோள், ஏவல்கண்ணாத வியங்கோள் என இருவகைப்படுத்தினர். வகைகளை ஒன்றாகக் கொண்டாலும் அவற்றிற்கான விளக்கங்களை உரையாசிரியர்கள் வெவ்வேறு விதங்களில் கொண்டனர்.

இளம்பூரணர் :

 1. ஏவல் கண்ணிய வியங்கோள் (ஏவல் உடனே நிகழ்தல்,எ.கா. செல்க குதிரை)
 2. ஏவல் கண்ணாத வியங்கோள் (ஏவல் உடனே நிகழாதது, எ.கா. மன்னிய பெரும)

நச்சினார்க்கினியர்:

 1. ஏவல் கண்ணிய வியங்கோள் (ஏவலை முற்ற முடிப்பன – உயர்திணை)
 2. ஏவல் கண்ணாத வியங்கோள் (ஏவலை முற்ற முடிக்காதன – அஃறிணை)

கல்லாடர் :

 1. ஏவல் கண்ணியது (உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க என விதித்தல்)
 2. ஏவல் கண்ணாதது (இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்யப்பெற வேண்டிக்கோடல்)

கல்லாடர் அளித்திருக்கும் விளக்கத்திற்கு மாறான கருத்தை நச்சினார்க்கினியர் வினையியலில் ‘அவைதாம் கூறுகின்றவர் கருத்தான், ஏவல் கண்ணியே வரும். உயர்ந்தான் இழிந்தானை ‘இன்னது செய்க’ என விதித்தல்ஏவல் கண்ணியது. இழிந்தான் உயர்ந்தானை ‘இன்னது செய்ய வேண்டும்’ என வேண்டிக்கோடலும் ஏவல் கண்ணிற்று’(2017:188) எனக் கூறுகிறார்.

வியங்கோளுக்கு உரியதாக விதித்தல், வேண்டிக்கோடல் என்னும் பொருண்மைகளைக் கல்லாடரும் தெய்வச்சிலையாரும் குறிப்பிட,சேனாவரையர் வாழ்த்துதல், வேண்டிக்கோடல் பொருண்மைகளைக் குறிப்பிடுகிறார். கல்லாடரின் விளக்கத்தின்வழி உயர்ந்தான்,இழிந்தான் என்ற வர்க்கப் பாகுபாடு நிலைபெற்று வலுவூன்றிய சமூகச்சூழலும், அவர்களது சமூகச் செயற்பாட்டு நிலையும் தெளிவுறுத்தப்படுகின்றன.  விதித்தல், வேண்டிக்கோடல் என வர்க்கப் பாகுபாடு பிரதிபலிக்கும் வினைகளை வேறுபடுத்த வியங்கோள் வினை வடிவம் பயன்பட்டிருப்பதும் அறிய முடிகிறது.

மேலும், எம்.ஏ.நுஃமான் வியங்கோளின் பயன்பாடாக ‘ இவ்வினை வடிவம் ஒருவரை வாழ்த்துதற்கு, அல்லது அவர் மீதுள்ள எதிர்ப்பை அல்லது வெறுப்பைத் தெரிவிப்பதற்கு, அல்லது ஒருவரிடம் ஒரு காரியத்தைச் செய்யுமாறு வினயமாக வேண்டிக் கொள்வதற்குப் பயன்படுகிறது’(2007: 132,133) என்பனவற்றைக் கூறுகிறார்.

இப்பொருண்மை விளக்கங்களை வரலாற்றடிப்படையில் நோக்கினால் விழைதல், வாழ்த்துதல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல், எதிர்ப்பு, வெறுப்பு என்ற வரிசைமுறையில் வளர்ச்சி அடைந்து நிலைபெறுகின்றதனைஅறியலாம். பொருண்மைகளாக வெளிப்படும் உணர்வுகள் நீட்சி அடையும் சூழலில் யாரை நோக்கி இவ்வடிவம் ஆளப்படுகிறது என்பதை அறிதல் இன்றியமையாததொன்றாகும்.

வியங்கோள் இருதிணை, ஐம்பாலில் வரும். மேலும் படர்க்கையிலேயே வரும் எனத்தொல்காப்பியம்கூறுகிறது(வினையியல்.25,29). உரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாவில் வரும் ‘மன்னாதாகும்’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தன்மையிலும், முன்னிலையிலும் வியங்கோள் வருவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுவருகின்றனர்.எனினும் தெய்வச்சிலையார் படர்க்கையில் மட்டுமே வருமெனக் கூறுகிறார். நிலைத்த ஆட்சி அமைப்புகள் உருவான காலச்சூழலில்இலக்கண அமைப்புகளிலும் நிலைத்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. நன்னூல்(338) மூவிடங்களிலும் வியங்கோள் வினைமுற்று வரும் என்கிறது. இடைக்காலச் சாசனங்களில் படர்க்கை, முன்னிலைகளில் வியங்கோள் வினைமுற்றுக் காணப்படுவதை ஆ.வேலுப்பிள்ளை எடுத்துக்காட்டுகிறார். இவ்அமைப்பு பின்வந்த காலங்களில் நிலைபேறு அடைகிறது.

தொல்காப்பியர் கருத்துப்படி, படர்க்கையில் பால் வேறுபாடு அற்றுக் குறிப்பிடப்படும் வினை வியங்கோள் வினை ஆகும். பால் வேறுபாடு நிலவாத சமூகநிலை குறித்து ‘மக்களின் தனிப்பட்ட உறவுகளின்பொழுதே, சம்பந்தப்பட்டவர்களின் பால் வேறுபாடு முக்கியமானதாக அமைகிறது. மக்களைத் தொகுதியாக நோக்கும்பொழுதுஅப்பால்வேறுபாடு முக்கியமற்றதாகின்றது. அதாவது அவர்கள் முழுக் குழுவாகவே கருதப்பட்டார்களேயன்றிக் குழுவின் பிரிநிலைக் கூட்டங்களாக எண்ணப்படவுமில்லை,கருதப்படவுமில்லை’(1982:27)என்கிறார் கா.சிவத்தம்பி. மேலும்,கண வாழ்க்கையிலிருந்து நிலமானிய அமைப்புக்கு மாறும், மாறிய நிலையினைத் தொல்காப்பியம் சுட்டுகிறதெனக்(1982:25) கூறும் அவர்,‘திணை பால் பாகுபாடற்ற நிலை, முற்றுமுழுதான கண வாழ்க்கையைக் குறிக்கிறதெனலாம்’(1982:25)என்கிறார். பால்பேதமற்ற சொல்லாடல் நிலை கணவாழ்க்கைக்கு உரித்தானது என்ற இக்கருத்தின் அடிப்படையில் வியங்கோள் வினையை அணுக வேண்டியதாகிறது.

தொல்காப்பியர் ஏவல் வினையைத் தனித்துக் கூறவில்லை. முன்னிலை வினை அமைப்புகளில் ஏவல் அடங்கிவிடுகிறது. ஆனால் ‘தொல்காப்பியர் காலத்தில் ஏவல் வினையும் வியங்கோளில் அடங்கியிருக்கலாம்’(2002ஆ:138)என ஆ.வேலுப்பிள்ளை கூறுகிறார். தற்காலத் தமிழிலும் ஏவலுக்கும், வியங்கோளுக்கும் ஒரே அமைப்புக் காணப்படுகிறது(2002அ:257). முன்னிலை ஏவலிலேயே மரியாதைப் பண்பு வந்துவிட்ட காரணத்தினால் வியங்கோள் வினையின் தேவை தற்காலத் தமிழுக்கு இல்லை என்கிறார் சண்முகதாஸ்(1997:181).

ஏவலைத் தனித்து விளக்காத தொல்காப்பியர் வியங்கோள் வினைமுற்றை அணுகியுள்ள விதம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

 1. படர்க்கைக்கான விகுதிகளில் வியங்கோள் விகுதிகளைச் சேர்க்கவில்லை
 2. வியங்கோளுக்கான பொருண்மைகளையும் அமைப்பையும் கூறவில்லை

தொல்காப்பியர் காலத்தில் படர்க்கைக்கான பால்வேறுபாட்டுடன் கூடிய விகுதிகள் வந்துவிட்டன. பால்வேறுபாடற்ற வியங்கோள் விகுதிகளைத் தொல்காப்பியர் தனித்துக் குறிப்பிடவுமில்லை, படர்க்கையுடன் இணைக்கவுமில்லை.

உரையாசிரியர்கள் கூறியதுபோல் குறிப்பிட்ட பொருண்மைகளில், குறிப்பிட்ட விகுதிகளில் மட்டும்தான் வியங்கோள் வரும் எனில், அவற்றை வரையறுப்பது தொல்காப்பிய எடுத்துரைப்பிற்கு முரணானது அன்று. ஆனால் முந்தைய காலச்சமூகச்சூழலின் வழக்கான இவ்வினை அமைப்பை விவரித்துக் கூறாமலும் தன் காலத்து வினைநிலை அமைப்புகளுடன் வியங்கோள் வினை அமைப்புகளை இணைக்காமலும் விடுகிறார்.ஆனால் உரையாசிரியர்கள் ஏவல் கண்ணிய வியங்கோள் என்னும் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு வியங்கோள் வினைமுற்று வடிவத்தை வரையறுக்கத் தொடங்கினர். பால் காட்டாது என்ற அடிப்படைத்தன்மையே மாறி, பொருண்மை அடிப்படையாகக் கொண்ட பால் காட்டும்வியங்கோள் வடிவங்களைஇடைக்காலசாசனங்கள்முதல் அறியமுடிகின்றன.

ஏவலின் கடுமை வியங்கோளில் இருக்காது. கடுமையற்ற ஏவலும் பால் பாகுபாடற்ற நிலையும்இனக்குழு வாழ்க்கைக்கு உரித்தானவை. எனில், வியங்கோள் வினைமுற்று இனக்குழு வாழ்க்கைக்கு உரித்தான ஒரு வினை அமைப்பு ஆகும்.

இனக்குழுச் சமூகத்திற்கு ஏற்ற ஒரு வடிவம், தனக்குரிய மதிப்பை இழந்துவிடாமல் காலத்திற்கேற்பஅமைப்பையும், பொருண்மையையும்மாற்றிக்கொண்டு நிலைபெற்றிருப்பதைக் கூறும் இலக்கணநூல்கள், அவ்வாறு நிலைபெறவைக்க முயன்று வந்துள்ளமையை வரலாற்று நிலையிலான நோக்கு வெளிப்படுத்திநிற்கிறது.

துணைநூற்பட்டியல்

 • அகத்தியலிங்கம் ச., தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம்,சென்னை, 2002.
 • ஆறுமுக நாவலர், தமிழ் இலக்கணம், முல்லை நிலையம், சென்னை,1993.
 • இளவழகன் (ப.ஆ.),தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
 • இளவழகன் (ப.ஆ.),தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – கல்லாடம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை,2003.
 • இளவழகன் (ப.ஆ.), தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சேனாவரையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
 • இளவழகன் (ப.ஆ.), தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
 • கோபாலையர் தி.வே.(ப.ஆ.), இலக்கணவிளக்கம், சொல்லதிகாரம், சரசுவதி மகால் நூல் நிலையம், தஞ்சாவூர், 1971.
 • கோவிந்தராச முதலியார் கா.ரா. (உ.ஆ.), நேமிநாதம், கழகவெளியீடு, சென்னை, 1970.
 • —, வீரசோழியம், கழகவெளியீடு, சென்னை, 1970.
 • சங்கர நமச்சிவாயர் (உ.ஆ.), நன்னூல், கழக வெளியீடு,சென்னை, 1956.
 • சண்முகதாஸ் அ., தமிழ்மொழி இலக்கண இயல்புகள், குமரன் பதிப்பகம், சென்னை, 1997,
 • சிவத்தம்பி கார்த்திகேசு, இலக்கணமும் சமூகஉறவுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982.
 • நுஃமான் எம் ஏ., அடிப்படைத் தமிழ் இலக்கணம், அடையாளம் வெளியீடு, திருச்சி, 2007.
 • பரமசிவம் கு., இக்காலத் தமிழ் மரபு, அடையாளம் வெளியீடு, திருச்சி, 2011.
 • வேலுப்பிள்ளை ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம்,கொழும்பு-சென்னை, 2002.
 • …, தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை, அமராவதிவெளியீடு, சென்னை, 2017.
 • Tamil lexicon, vol.1-6, University of Madras, 1982.

முனைவர் மா.ஆசியாதாரா

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

காவேரி மகளிர் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி – 18.