1.0 முகப்பு

 ‘‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் சங்க இலக்கிய அடியைப் பாடிய கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும்  பிறந்த மண்ணான பறம்பு மலையில் (தற்போது பிரான்மலை) உதித்த மற்றொரு சான்றோர் வ.சுப.மா. ஆவார். தொன்றுதொட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்த சான்றோர்களின் வரிசையில் புகழோடு தோன்றித் தமிழுக்கு அழகு சேர்க்கும் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இளம் வயதில் தன் பெற்றோரை இழந்தார். அவ்வப்போது தாய்வழிப் பாட்டி மீனாட்சி ஆட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாரும் கண்ணும் கருத்தாய் வளர்த்ததற்கு நன்றி மறவாது தன்னுடைய முதல் படைப்பில்

 ‘‘என்னை உடனையார் ஏங்காதே வாழ்வளித்த

அன்னை முதல்வர் அடிப்பணிந்தோம்

உறவினர் வாழ உவந்தளிந்தார்; ஆயுள்

 நிறையினர் நின்ற நெறி  (மனைவியின் உரிமை)

எனும் அடிகளின் மூலம் வள்ளுவர் கூறும் நன்றி மறவாமையைப் புலப்படுத்துகின்றார்.

தமிழாய்வு எனும் களத்தில் வ.சுப.மா. ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. முனைவர்’,  ’மூதறிஞர்’, ’செம்மல்’, ’தமிழ்க் காந்தி’, ’தமிழ் இமயம் எனும் பல்வேறு புகழ்ப் பெயர்களைப் பெற்று விளங்கியவர். 1917ஆம் ஆண்டு இவ்வுலகக் காற்றினைச் சுவாசிக்கத் தொடங்கி, 1989ஆம் ஆண்டு சுவாசித்த காற்றை நுகர மறந்தார். பன்முகப் பரிமாணங்களில் தடம் பதித்த வ.சுப.மா. எழுத்துப்பணியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் இக்கட்டுரையானது, எழுத்துத் துறையில் தன்னைப் பதித்ததன் விளைவாயெழுந்த (அச்சேறிய) நூல்களையும், எதிர்காலத்தில் இன்ன பணி செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டு நிறைவேறா ஆசைகளையும் எடுத்து இயம்புவதாக அமைகின்றது.

2.0 பன்முகக் கல்வியாளர்

வ.சுப.மா தனது தொடக்கக் கல்வியைத் தனது ஊரில் நடேச ஐயரிடம் கற்றார். பின்பு சன்மார்க்கச்சபை தொடர்பினால் பண்டிதமணியிடம் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் படிக்க வேண்டுமெனும் தன் வேட்கையைப் பண்டிதமணியிடம் புகுத்தினார். அவரது ஆர்வத்தைக் கண்டு காரைக்குடி சொக்கலிங்க ஐயா தில்லையில் நிறுவிய வித்தியாசாலையில் புலவர் புகுமுக வகுப்பிற் சேர்ந்து உணவோடு தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். நான்காண்டுகள் பயின்று புலவரானார். பின்னர் 1940ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். தமிழிலக்கண வரலாறு தொடர்பான ஆய்வு செய்தமையால் அங்கேயே விரிவுரையாளர் ஆனார். தாமாகவே ஆங்கிலம் பயின்று 1945ஆம் ஆண்டு பி.ஓ.எல் புகுமுக வகுப்புத் தேர்வெழுதி வெற்றி பெற்றார். வினைச்சொற்களை ஆராய்ந்து சென்னைப் பல்கலைக்கழத்தில் எம்.ஓ.எல் 1948ஆம் ஆண்டு ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். பிஓஎல் பட்டம் பெற்றோர்க்கு அதனையே எம்.ஏ பட்டமாக மாற்றித் தந்தது. பி.ஏ ஆனர்சு பட்டம் பெற்றார். ஓராண்டு கழித்து எம்.ஏ பட்டம் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு சங்க இலக்கியத்தில் அகத்திணைக் கொள்கை எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர் பட்டத்தை (டி.லிட்.) 1979ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவின் போது வழங்கியது. மேலும் இந்தி, சமசுகிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் கற்றறிந்தார்.

3.0 பன்முகப் படைப்பாளர்

ஆராய்ச்சி, உரை, பதிப்பு, நாடகம், கவிதை, கடித இலக்கியம், ஆங்கில நூல்கள் எனப் பன்முகப் படைப்புகளைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் அதிகமான நூல்களைப் படைக்க வேண்டுமென எண்ணம் கொண்டவராய்த் திகழ்ந்துள்ளார். தமிழ்மீது கொண்டுள்ள அன்பின் விழைவால்தான் நூல்கள் உருப்பெற்றன எனக் கூறினாலும் அது மிகையாகா. இனி அவரால் படைக்கப் பெற்ற நூல்களைக் காணலாம்.

3.1 ஆராய்ச்சி நூல்கள்

வ.சுப.மா. ஆய்வுத் தேடலில் பரந்த எல்லைகளை வகுத்துக் கொண்டவர். ஆய்வுப் பொருள், ஆய்வு எல்லை தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டு விடுதலைக் கவிஞர் பாரதி பாடல்கள் வரை விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர்தம் ஆராய்ச்சிப் பகுதியினை ஏழு வகைகளில் பகுக்கலாம். அவை: இலக்கணம், சங்க இலக்கியம், தமிழின் முதல் அற இலக்கியம், காப்பியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், இன்றைய இலக்கியம் என்பன.

இலக்கண ஆராய்ச்சிப் பகுதியில் தொல்காப்பியக் கடல் (1987) எனும் நூலினைப் படைத்துள்ளார். இந்நூலில் தொல்காப்பியம் தொடர்பான 31 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய ஆராய்ச்சிப் பகுதியில், ’தமிழ்க் காதல்’ (1962) மற்றும் ’சங்க நெறி’ (1987) ஆகியன உள்ளன. இதில் தமிழ்க் காதல் எனும் நூல் அறிஞர் (டாக்டர்) பட்டத்திற்காக (சென்னைப் பல்கலைக்கழகத்தில்) எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமாகும். சங்கநெறி எனும் நூலானது சங்க இலக்கியம் தொடர்பான 24 கட்டுரைகளின் தொடர்பாகும்.

காப்பிய ஆராய்ச்சிப் பகுதியில், கம்பர்’ (1987),காப்பியப் பார்வை (1987) எனும் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. கம்பர் எனும் நூல் அறக்கட்டளைச் சொற்பொழிவின் சாரம் ஆகும். இதனைக் கீழ்க்காணும் கருத்துவழி அறியலாம்.

தமிழ்ப் பேராசிரியர் மூதறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை தம் அன்னையார் நினைவாகச் சொருணாம்பாள் நிதிச் சொற்பொழிவு எனும் அறக்கட்டளையை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவினார். இவ்வமைப்பின்கீழ் கம்பர் என்ற புலவர் பெருமான் தலைப்பில் 1964 பிப்ரவரி 21, 22, 23 ஆம் நாட்களில் காப்பியப் பார்வை, காப்பியக் களங்கள், காப்பிய நேர்மை என்ற முத்திறப் பொருள் பற்றிச் சொற்பொழிந்தேன் ( கம்பர்:முன்னுரை)

காப்பியப் பார்வை எனும் நூல் 20 கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதியில், ’வள்ளுவம் (1993)திருக்குறட் சுடர்’ (1987) எனும் இரு நூல்கள் வெளியாகியுள்ளன. வள்ளுவம் எனும் நூல் 12 கற்பனைப் பொழிவுகளின் தொகுப்பு நூலாகவும், திருக்குறட் சுடர் எனும் நூல் திருக்குறள் பற்றிய 18 கட்டுரைகளின் தொகுப்பு நூலாகவும் காணப்படுகின்றது.

சமய இலக்கிய ஆராய்ச்சிப் பகுதியில், திருவாசகம், திருக்கோவை, திருப்பாவை, திருவெம்பாவை, தாயுமானவர் கவிதை போன்றவை இடம்பெறுகின்றன. சிற்றிலக்கிய ஆராய்ச்சியில் கோவை, தைப்பாவை ஆகியவற்றையும், படைப்பிலக்கிய ஆராய்ச்சியில், பாரதி கவிதை, காந்தி கவிதை, பாடுவார் முத்தப்பர் படைப்புகள் ஆகியவற்றையும் ஆராய்ந்துள்ளார்.

3.2 உரை நூல்கள்

வ.சுப.மாவின் நடை தூய செந்தமிழ் நடையாகும். பழைய உரையாசிரியர்களின் நடைப் போக்கைப் பின்பற்றியும் பழந்தமிழ்ச் சொற்களுக்கு முன்னுரிமை அளித்தும், தூய செந்தமிழ் நடையில் நூல்களைப் படைத்துள்ளார். ‘.சுப.மா எல்லோருக்கும் விளங்கும் வகையில் எல்லோரும் விரும்பும் வகையில் சிறுசிறு தொடர்களான வாக்கியங்களைக் கையாண்டு எழுதுவது உண்டு; சிந்தனை நீளத்திற்கு ஏற்றவாறு உம்மைகளும் எச்சங்களும் அமைய, நீண்ட தொடர்களால் ஆன வாக்கியங்களைக் கையாண்டு, ஆற்றொழுக்காக எழுதிச் செல்வதும் உண்டு( வ.சுப.மாணிக்கம், பக். 29-30). எளிமை ( Simplicity) சுருக்கம் (Brevity) தெளிவு (Clarity) ஆகிய முப்பண்புகள் இவரின் நடையில் காணப்படுகின்றன. “நடையழகு இல்லா இலக்கியமும் நிறவண்ணம் இல்லாச் சோலையையும் மெய்ப்பாடில்லா நடிகனையும் வெள்ளாடை உடுத்திய பெண்ணையும் ஒக்கும்’’ (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை, ப.19) என நடையின் கருத்தினைக் கூறுகின்றார். வ.சுப.மா.வின் நடையில் கருத்து, வெளிப்படுத்தும் அழகு போன்றவை ஒருங்குகூடி அமைந்திருக்குமெனத் தமிழ் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். வ.சுப.மாவின் உரையில் வெளிவந்த நூல்களாவன: திருக்குறள் தெளிவுரை(1989), நீதி நூல்கள் உரை (1991),  தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும், மாணிக்க உரை (1989).

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் நூன்மரபு, மொழிமரபு நூற்பாக்களுக்கு உரை வரையும்பொழுது வ.சுப.மா. பின்பற்றியுள்ள உரைநெறிகளாக, 1.இயல் முன்னுரை, 2.இயல் கருத்து, 3.அகலவுரை, 4.வழக்கு, 5.திறனுரை, 6.இயல் முடிவுரை ஆகியன அமைந்துள்ளன.

3.3 பதிப்பு நூல்கள்

வ.சுப.மா. பதிப்பாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். தம்மால் இயன்ற பங்களிப்பைப் பதிப்புத் துறைக்குச் செய்துள்ளார். அவர் பதிப்பித்த நூல்களாவன: இரட்டைக் காப்பியம் (1958), நகரத்தார் அறப்பட்டயங்கள் (1961). இவர் பதிப்பித்த நூல்களை .வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிற்கு இணையான சிறப்பினையும் சீர்மையினையும் கொண்டு வ.சுப.மா வின் ‘‘இரட்டைக் காப்பியங்கள்’’ பதிப்பு விளங்குகின்றது’ (வ.சுப.மாணிக்கம், பக்.152-153) எனும் கருத்துச் சுட்டிக்காட்டுகின்றது.

3.4 கவிதை நாடக நூல்கள்

வ.சுப.மா. சிறந்த ஆய்வாளர் மட்டுமல்லர். ஒரு நல்ல படைப்பாளியுங்கூட. மிகுந்த ஆர்வத்தோடு கவிதை, நாடகம் ஆகிய இரு துறைகளில் கால்பதித்துள்ளார். கவிதைத் துறையில், கொடை விளக்கு (1957), மாமலர்கள் (1978), மாணிக்கத் தமிழ் (1991) ஆகிய மூன்று நூல்களைப் படைத்துள்ளார். நாடகத் துறையில் மனைவியின் உரிமை (1947), நெல்லிக்கனி (1962), உப்பங்கழி (1972) ஒரு நொடியில் (1972) ஆகிய நான்கு நாடகங்களைப் படைத்துள்ளார்.

தனது படைப்பில் உணர்ச்சி வெளிப்பாடு, கற்பனை வளம், உவமைநயம், தொடக்கமும் முடிவும் நயமுற அமைதல், நவில்தொறும் வெளிப்படும் நயம், நோக்குத் திறன், அளவுகோலில் பாட்டு அமைத்தல் திறன் போன்றவற்றினை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். கொடை விளக்கு எனும் நூலில், வள்ளல் அழகப்பரின் வாழ்வைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். இந்நூல் 171 வெண்பாக்களால் அமையப் பெற்றுள்ளது. மாமலர்கள் எனும் நூலினைப் பல்வகைச் செய்யுளோடு பல்வகைப் பொருள் சார்ந்ததாகப் படைத்துள்ளார். அதேபோல் மாணிக்கத் தமிழ் எனும் நூலினை ஐந்நூறு குறட்பாக்களைக் கொண்டு அமைத்து, அந்தாதிப் போக்கில் காணச் செய்துள்ளார். இது இவரின் கொள்கை  விளக்க நூலாகத் திகழ்கிறது.

3.5 கடித இலக்கியங்கள்

கடித வடிவில் கருத்துக்களைச் சுவைபட விளக்கிச் செல்வது ஒரு கலையாகும். அறிஞர் அண்ணா, மு.வ. போன்றவர்கள் எழுதிய கடிதங்களில் உயிரோட்டமும் எழுச்சியும் அமைந்தன. அதேபோல் வ.சுப.மா.வின் கடிதங்களும் விளங்கின. ‘தலைவர்களுக்கு’ (1965) எனும் நூல் 25 கடிதங்கள் பெற்றுத் திகழ்கின்றது. கடித இலக்கியத்தின் நோக்கானது, ‘’நாட்டு நலமே நம் அறிவின் நோக்கம், எது நாட்டுக்கு நல்லதோ அதுதான் என் கடிதங்களில் இடம்பெறும்’’ (வ.சுப.மாணிக்கம், ப.138) என்பதாக அமைதல் வேண்டுமென்ற சிந்தையுள்ளவராகத் திகழ்ந்துள்ளார். மொழிக்கு முதன்மையும், மொழிக் கருத்துகளின் சாரமும், மொழிக் கொள்கையும் இவரது கடிதங்களில் காணலாகின்றன. கடிதங்களைப் படிப்பவருக்கு மூன்று தகுதிகள் வேண்டுமெனக் கூறுகிறார். அவை வருமாறு:

 • வன்முறைகளை எதற்கும், என்றும், எவரும் கையாளக் கூடாது.
 • பாரதத்தின் ஒருமைப்பாடு பாழ்படக்கூடாது.
 • அடிப்படையுரிமையில் ஏற்றத் தாழ்வு கூடாது.

3.6 ஒரு பொருட் கட்டுரைகள்

எழுத்துச் சீர்திருத்தம், எங்கே போய் முடியும்?, தமிழ்வழிக் கல்வியியக்கம்: மொழியறிக்கை (1989), தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம் (1988) ஆகிய மூன்று ஒருபொருட் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

3.7 ஆங்கில நூல்கள்

வ.சுப.மா. ஆங்கில மொழியறிவுமிக்கவர் என்பதற்கு The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected  Papers, Tamilology ஆகிய ஆங்கில நூல்கள் சான்றாக  உள்ளன.

4.0 .சுப.மா.வின் ஆளுமையை அடையாளம் காட்டும் நூல்கள்

          ஆராய்ச்சி மாணவராய்த் தொடங்கி, பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவியேற்றுத் தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும், புதிய ஆராய்ச்சி வழிகளையும் வித்திட்ட வ.சுப.மா.வைப் பற்றிப் பல ஆய்வு நூல்களும், ஆய்வேடுகளும், கட்டுரைகளும் எழுந்துள்ளன. அதில் மாணிக்கக்குறள் தெளிவுரை (இரா.இளங்குமரன்:1992), .சுப.மாணிக்கனாரின் சொல்லாக்கம்  (பழ.முத்துவீரப்பன்:1988) .சுப.மாணிக்கனாரின் வாழ்வும் பணியும் (மெய்யப்பன்:1989), மாணிக்கக் குறள் ஓர் அறிமுகம் (1993) இந்திய இலக்கியச் சிற்பிகள்.சுப.மாணிக்கம் (இரா.மோகன்:1999), மாணிக்கச் செம்மல் (இரா.சாரங்கபாணி:1997), மாணிக்கத் தமிழ் (தமிழண்ணல்) ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன.

5.0 .சுப.மா.வின் நிறைவேறா ஆசைகள்

             வாழும்போது எண்ணற்ற படைப்புகளைப் படைத்துத் தமிழ்மொழி ஆய்வுக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியுள்ள வ.சுப.மா.வின் அயராத உழைப்பும் ஆழ்ந்த தேடலும் அவரைத் தமிழுலகில் அடையாளப்படுத்தின. தமிழர்கள் நெஞ்சில் அழியாத் தடம் பதித்தன.

தன் வாழ்நாள் முழுவதும் மட்டுமின்றி எதிர்கால ஆய்வினைக் குறித்துப் பரந்த திட்டங்களைக் கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார். இதனை ‘‘செம்மல் எண்பத்தைந்தாம் அகவை வரை வாழலாம் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே தம் எழுபதாம் ஆண்டில் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளை மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களாக வகுத்துக் குறித்து வைத்துள்ளார்’’ (மாணிக்கச் செம்மல், ப.144) எனும் கருத்து மூலம் அறியமுடிகின்றது.

 • உலகப் போக்குகள், ஒழுக்க நெறிகள், மக்களின் உளப்பாங்கு முதலியவற்றை ஆராய்ந்து, தமிழகம், பாரதம், உலகம் எல்லாவற்றிற்கும் பயன்படும் வகையில் நூல் ஒன்று செய்ய வேண்டுமென்பது அவர் எண்ணமாயிருந்தது.
 • படைப்பிலக்கியம், படைப்பிலக்கணம் செய்தல், பண்டைய இலக்கண இலக்கியங்களைத் திறனாய்வு செய்து எழுதுதல், மனைவியின் உரிமை, நெல்லிக்கனி போல மேலும் சமுதாயத்திற்கு உதவும் வகையில் நாடக நூல்கள் இயற்றல் போல்வன எதிர்கால எண்ணங்கள்.
 • பாரதீயம் எனும் தலைப்பில் கற்பனைப் பொழிவுநூல் படைத்தல்.
 • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பற்றிப் பாரதச் செருக்குஎனும் நாடகநூல் எழுதுதல்.
 • தொல்காப்பியம் என்னும் நூல் போல மாணிக்கம் எனும் பெயரில் ஓர் இலக்கண நூற்பா யாப்பில் படைத்தல்.
 • நாட்டுமறை என்ற பாரத நூல், பெண்ணுரிமை, வறுமை நீக்கம், தமிழ்வளம், மூடப் பழக்கவழக்கங்களை ஒழித்தல் முதலிய நூல்கள் படைத்தல்.
 • வான் வாழ் உயிரினங்கள் (பறவைகள்) கடல்வாழ் உயிரினங்கள் (மீன்,நண்டு, ஆமை), வானம் போன்றவைகள் வ.சுப.மாவின் எதிர்காலத் திட்டங்களாகும். இவையெல்லா நூல்களையும் உரைநடையில் எழுதாமல் பாவகையிலும், பாவுடன் உரைநடை விரவிய வகையிலும், வினாவிடை நடையிலும் எழுத வேண்டுமெனத் திட்டம் தீட்டியிருந்தார்.

5.1 நூல் ஒன்று படைக்க வேண்டுமெனத் தலைப்புகளை நிர்ணயித்தல்

 

 • திருக்குறள் நேருரை – செயலுரை (வாழ்வுரை).
 • திருவாசகம் என்னும் உயிர் வாசகம்.
 • இராமலிங்கம் அல்லது உயிர் இரங்கல்.
 • வாய்மை வாழ்வு (தனி வரலாறு)
 • தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவைதானா?
 • தமிழ்வழிக் கல்வி இயக்கம்
 • திருக்குறள் இலக்கியம்
 • சங்க இலக்கியங்களின் புதுமை
 • சங்ககாலநிலைக் கொள்கைகள்
 • சிலப்பதிகாரம் – காதை வளர்ச்சி
 • கம்பனியம்
 • தமிழ்க் காப்பிய உலகம்
 • தமிழ் மொழி வரலாறு
 • தமிழிலக்கிய வரலாறு
 • மதுரைப் பணிகள்
 • மக்கள் கீதை

 

ஆகிய தலைப்புகளைக் கொண்டு ‘’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’’ எனும் நோக்கில் நூல் ஒன்றைப் படைக்க வேண்டுமென விரும்பினார்.

6.0 முடிப்பு

வ.சுப.மா. தமிழிலே பிறந்து தமிழிலே வளர்ந்து தமிழிலே வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். காலம் அவரை நேசித்ததால், அவரின் எழுத்து எனும் உயிரோட்டமான சுவாசத்தை நம்மால் தொடர்ந்து சுவாசிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வாண்டு வ.சுப.மா.வின் நூற்றாண்டு விழாவாய் அரங்கேறினாலும் அவர் எழுதிச் சென்ற தமிழாய்வுகள் பல நூற்றாண்டுகள் வாழும்; வளரும்.

 பார்வை நூல்கள்

 1. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை, சக்திவேல்.சு, 2005, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
 2. கம்பர், மாணிக்கம் வ.சுப., 1990, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
 3. மாணிக்கச் செம்மல், சாரங்கபாணி இரா., 2016, நூற்றாண்டு வெளியீடு.
 4. .சுப.மாணிக்கம், மோகன் இரா., 1999, சாகித்ய அகாதெமி, டெல்லி.

சேது.முனியசாமி

முனைவர் பட்ட ஆய்வாளர்,

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,

தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்