Abstract: The present article discussing convicted principles and compatibility procedures.

அறிமுகம்

எப்போது ஒரு தனிமனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்தானோ அப்போதே அவன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நியமங்களும் தோற்றம் பெறத் தொடங்கியதுடன் இவ்விதிகளுக்கு உட்பட்டு வாழவேண்டிய கடமையுணர்வு தோன்றியது. எழுதப்படாத சட்டங்கள் நிலவிய காலத்தில் இருந்து இன்றுவரை சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கருவியாகச் சட்டங்களும், தண்டனைகளும் நடைமுறையில் காணப்படுகின்றன. ஆரம்பகால மனிதன் இயற்கைச் சீற்றங்களைக் கடவுளுக்கு எதிரான செயலுக்கான தண்டனையாகவே கருதினான். இங்குக் குற்றங்களுக்குத் தண்டனை என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டுள்ளது நாம் காணக்கூடியதாக உள்ளது. உலக நாடுகள் அனைத்துமே தனது வரலாற்றுப்பாதையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகத் தண்டனைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீ பிறருக்குத் தீங்கிழைத்தால் அந்தத் தீங்கு பன்மடங்கு பெருகி மீண்டும் உன்னிடமே தண்டனை உருவில் வந்தடையும் என்ற எண்ணம் குற்றவாளியின் மனத்தில் நன்கு பதியும்வண்ணம் சட்டம் அவனுக்குத் தண்டனையை வழங்குகின்றது. குற்றமான செயல்களை அரசு தடைசெய்வதால் மட்டுமே பயன்விளைவது இல்லை. எனவேதான் சட்டம் தண்டனை முறையைக் கையாள்கின்றது. இதன் காரணமாகவே குற்றவியல் சட்டமானது குற்றங்களை மட்டும் இன்றி அதற்கான தண்டனைகளையும் எடுத்துரைக்கின்றது. தண்டனை முறையானது பிறருக்குத் துன்பம் விளைவித்தவருக்குத் தாமும் அத்துன்பத்தை அனுபவிக்கும் பொருட்டுச் செய்வதாக அமைகின்றது. இதனையே திருவள்ளுவர் தன் குறளில் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.

“நோயல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்”

அறங்கள் அனைத்திற்கும் தண்டனைகளே சிறந்த புகலிடம் என சுக்கிரநீதி குறிப்பிடுகின்றது. இவ்வாறே சமூகத்தில் தண்டனையானது முக்கியமான நீதிமுறையாக அமைகின்றது. ஒழுக்க வழியில் ஒரு செயல் தவறு என்பதைக் குறிக்க எழுந்த சமூகநிறுவனமே தண்டனை ஆகும். மேலும் ஒருவர் செய்த குற்றத்தை மீண்டும் அவர் செய்யாமல் இருப்பதற்கும் ஏனையவர்கள் அதனைச் செய்ய முன்வருவதனைத் தடை செய்யவுமே தண்டனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது உடல் அளவில் ஓர் வலியை மட்டுமன்றி உள்ளத்திலும் வடுவை உருவாக்குவதாக உள்ளது. குற்றவாளி ஒருவன்  தன்னுடைய அறிவோடும், செயலாற்றும் திறமையோடும், விருப்பத்தோடும் சமூகத்தினால் அனுமதிக்கப்பட்ட அறவிதிகளை மீறுகின்றான். இதனை அவன் வேண்டும் என்றே செயகின்றான். எனவே குற்றவாளியின் தவறான செயலுக்காகத் தண்டனை அளிப்பது அறவழியான செயலாகவும், நேர்மையான செயலாகவும் அமைகின்றது.

நீதிமன்றம் ஒருவனுக்குத் தண்டனையை வழங்குவதற்கு முன் முக்கியமான மூன்று விடயங்களை நோக்குகின்றது. அவையாவன குற்றத்தின் தன்மை, குற்றம் இழைக்கப்பட்டதன் நோக்கம், குற்றவாளியின் பண்புநிலை என்பனவாகும். மேலும் சந்தர்ப்ப சாட்சிகள் நன்கு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகும் பட்சத்தில் மட்டுமே ஒருவனுக்குச் சட்டம் தண்டனையை வழங்குகின்றது. எனினும் தண்டனை என்பது நடைமுறையில் தாமதமாகவும், சிக்கலானதுமாகவே அமைந்துள்ளது. இங்குக் குற்றத்தைக் கண்டுகொள்ளல், குற்றவாளியை இனங்காணுதல், தேடிப்பிடித்தல், நீதிமன்றத்தில் நிறுத்துதல், தண்டித்தல் என நீண்ட வரிசையில் செல்கின்றது. எனவே தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பையும் இத்தாமதமான வாய்ப்பு ஏற்படுத்தி விடுகின்றது. தண்டனை வழங்கப்படும் போது தண்டனையின் அளவு என்பது முக்கியமானதாகும். அதாவது ஒருவன் செய்த குற்றத்தை நன்கு ஆராய்ந்து அவன் அதை மறுபடியும் செய்யாதிருக்கும்படி தகுந்த முறையில் தண்டனை அமைய வேண்டியது அவசியமாகின்றது.

தண்டனைக் கொள்கைகள்

ஆரம்பகாலங்களில் தனியாக வாழ்ந்த மக்கள் குழுக்களாக வாழ ஆரம்பிக்கும்போது தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் அக்குழுவினருக்கு ஏற்பட்டது. இதனால் ஏனைய குழுவினர் தங்களுக்குத் தீங்கினை விளைவிக்கும்போது பதிலுக்குத் தாங்களும் தீங்கையே விளைவிக்க வேண்டும் எனும் நோக்கிலேயே பழிதீர்த்தல் என்ற அடிப்படையில் குற்றத்திற்கு மரணத்தைப் பரிசளித்தனர். ஆனால் இது தண்டனை என்ற அமைப்பினுள் உள்ளடங்கவில்லை. இது பழிதீர்ப்பதையே நோக்காகக் கொண்டிருந்தது. இப் பழிதீர்க்கும் முறையினைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டைச் சமூகம் உணர்ந்தபோதே சட்டங்களும், தண்டனை முறைகளும் சமுதாயத்தில் எழுந்தன. இத்தகைய தண்டனை முறைகள் பிரதானமாக நான்குவகைக் கொள்கைகளை கொண்டுள்ளன.

 1. பழிக்குப் பழி வாங்கும் தண்டனைக்கொள்கை
 2. தடுத் தண்டனைக்கொள்கை
 3. எச்சரிக்கை தண்டனைக்கொள்கை
 4. சீர்திருத்தத் தண்டனைக்கொள்கை

இத்தகைய தண்டனைக் கொள்கைகள் தொடர்பாக விரிவான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகின்றது. எனவே அவற்றினை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

 1. பழிக்குப் பழிவாங்கும் தண்டனைக்கொள்கை

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதன்படி தண்டனை என்பது குற்றம் இழைத்தவன் பெறவேண்டிய கடன் ஆகும். ஒரு சிறுவன் தன்னை அடித்தவனைத் திருப்பி அடிப்பதும், கல்லால் எறிந்தவனைத்“ திருப்பிக் கல்லால் எறிவதும் ஓர் இயல்பாக அமையும் விடயமாகும். தனக்கு இழைக்கப்பட்ட அதே தீங்கை அவரும் அனுபவிக்க வேண்டும் என்பது மனித மனத்தின் இயல்பான போக்காகும். இதனால் ஒருவர் தனிநபர் ஒருவருக்கு இழைத்த தீங்காயினும் அது சமூகத்திற்கு எதிரான செயல் என்பதனால் அது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட தீங்கு எனக் கருதிச் சமூகம் தண்டனையூடாகப் பழிதீர்க்க முனைகின்றது. இத்தகு தண்டனை பற்றியதாகவே இக்கொள்கை அமைகின்றது. இத்தண்டனை முறையானது மிகவும் பழமை வாய்ந்ததாகும். இம்முறையானது உணர்வுகளின் அடிப்படையில் எழுந்ததாகும். அதாவது மனிதமனமானது பழிவாங்கும் உணர்வை அடிப்படையில் கொண்டுள்ளது. தகுந்த தீர்ப்புக்காகக் காத்திராமல் கருமங்களைத் தாங்களே செயற்படுத்த விளையும் நிலை இன்றும்கூட மக்களிடம் காணப்படுகின்றது. இதனடிப்படையிலேயே பழிக்குப் பழிவாங்கும் தண்டனையானது தோற்றம் பெற்றது.

பழிக்குப் பழி வாங்கலை ஆங்கிலத்தில் “Retribution” என்கின்றனர். இது “retribuere” என்ற இலத்தீன் சொல்லின் அடியாகத் தோற்றம் பெற்றது ஆகும். இதன் பொருள் திருப்பிக் கொடு என்றமைகின்றது. இங்குத் திருப்பிக்கொடுத்தல் என்பது புராதன பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்டதாக அமைகின்றது. இங்குக் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற முறையில் தண்டனை வழிநடத்தப்படுகின்றது. மேலும் பழிக்குப்பழி வாங்கும் தண்டனையின் மூலமாக குற்றத்திற்குரிய நிகழ்வொன்றைச் சுவடுகள் இல்லாமல் அழித்துவிடலாம் என நம்பப்படுகின்றது. பழிக்குப் பழி வாங்கும் தண்டனையானது திருப்பிக்கொடுத்தல், வெகுமானம் அளித்தல், அபராதம், திருப்திப்படும் மனநிலை, நியாயம், பயமுறுத்தல், செல்லாதது ஆக்குதல் போன்ற பல்வேறு அடிப்படைகளில் நோக்கப்படுகின்றது. இவ்வடிப்படைகளிலே இக்கொள்கையானது தன் ஏற்புத்தன்மையை நியாயமானதாக்க முயற்சிக்கின்றது. திருப்திப்படும் மனநிலையானது ஏதோவோர் வகையில் பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக அமைதிப்படுத்த முயற்சிக்கின்றது. இதனால் மேலும் குற்றங்கள் ஏற்படாமல் இது தடுத்து நிற்கின்றது.

சமம் செய்யும் முறையாக இப்பழிக்குப் பழி வாங்கும் தண்டனை அமைவதாகக் கருதப்படுகின்றது. அதாவது இழைக்கப்பட்ட குற்றத்திற்கு சமமானதாக தண்;டனை வழங்குவதன் மூலம் அவற்றை சமப்படுத்துவதாக இம்முறை அமைந்துள்ளது. எனினும் இச்சமப்படுத்தல் நடைமுறையில் வார்த்தை ரீதியாக வடிவம் பெற்றிருந்ததே அன்றி உணர்வு ரீதியான மாற்றங்களில் செல்வாக்கு பெறவில்லை. இக் கொள்கை பிறிதொரு முறையிலும் நோக்கப்படுகின்றது. அதாவது ஆரம்பகாலங்களில் மக்கள் பழியுணர்வால் கட்டுப்பாடற்ற முறையில் சமூகத்தையே அடியோடு அழிக்கும் நடவடிக்கைகளிற்கு வழிகோரினர் இதனால் மனித குலமே அழியும் அச்சநிலை ஏற்பட்டது. ஆகவே அதனை தடுத்துநிறுத்த வேண்டிய கட்டாயநிலை மக்கள் சமூகத்தில் ஏற்பட்டது எனவேதான் சமூகம் பழிக்குபழிவாங்கும் தண்டனை முறையை அறிமுகம் செய்து கட்டுப்பாடற்ற பழிவாங்கலினை தடைசெய்தது.

இங்கு ஒருவன் செய்த குற்றத்திற்கு அதே அளவான தண்டனையை விதிப்பதன் ஊடாக நீதியை நிலைநாட்டுவதாகவும், குற்றத்தின் தாக்கத்தை உணரச் செய்வதாகவும், ஏனையோர் அக்குற்றத்தைச் செய்ய முன்வருவதை அச்ச உணர்வின் மூலம் தடை செய்வதாகவும் இக்கொள்கை அமைகின்றது. இது சமூகத்தின் ஆரம்பகால கட்டங்களிலே பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தது. எனினும் இன்றும் சில நாடுகளில் மரண தண்டனை அணுகுமுறை காணப்படுகின்றது. இது ஒரு பழிக்குப் பழி வாங்கும் தண்டனை முறையாகவே அமைகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் முக்கியமான விடயம் யாதெனில் திருப்பிக்கொடுத்தல் ஆகும். அதாவது ஒருவர் சமூகத்தில் ஏற்படுத்திய தீங்கினால் விளைந்த கடனைத்திருப்பிக்; கொடுத்தல் ஆகும். அதாவது தான் செய்த தவறினால் விளைந்த இழப்பிற்குப் பதிலாக இழப்பினை அடைதல் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது கண்ணுக்கு கண்ணைப்பெறுவதே நீதியானது என கருதப்படுகின்றது. எனினும் இது எல்லாக்குற்றங்களிற்கும் அமைக்க முடியாதது ஆகும். உதாரணமாக பார்க்கும் போது கற்பழிப்பு குற்றத்திற்கோ, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றங்களிற்கு இம்முறையில் எவ்வாறு தண்டனை வழங்குவது என்பது சர்ச்சைக்குரிய விடயமாகையால் இங்கு இது தொடர்பான மாற்றங்களை உள்வாங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

இக்கொள்கையே மனித சமுதாயத்தின் முதல் தண்டனை முறையாக அமைந்து நீதியை பிரதிபலித்தது. மேலும் தண்டனைக்கொள்கைகளுள் முதன்மையானதாகவும் மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் முதல்வழிமுறையாகவும் அமைந்துள்ளது.

 1. தடுத்தண்டனைக் கொள்கை

சட்டம் தண்டனைகளை அறிமுகம் செய்தமைக்கு காரணம் குற்றங்களைத்தடுப்பதற்காகவே ஆகும். எனவே இப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் குற்றவாளி மீண்டும் குற்றம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை தடுக்கும் பொருட்டும் மேற்கொள்ளப்படும் தண்டனைகளே தடுத்தண்டனைகள் ஆகும். உதாரணமாக நோக்கும் போது திருடிய ஒருவனை சிறிது காலம் சிறையில் அடைப்பதனால் அங்கு அவன்பெறும் அனுபவமானது அவனது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மேலும் அவன்குற்றம் செய்வதைத் தடுக்கின்றது. தடுத்தண்டனையானது பழிக்குப்பழிவாங்கும் கொள்கையினால் ஏற்பட்ட கடின நிலையினை தவிர்க்கும் நோக்குடனும், மதநிறுவனங்களின் ஆட்சேபனையாலும், அறவியலுக்கு ஓரளவு உடன்படத்தக்க வகையில் தண்டனை பயன்உடையதாக அமைய வேண்டும் என்ற நோக்கிலும் முன்வைக்கப்பட்டதே இக் கொள்கையாகும்.

வான்டன்ஹாக் என்பவர் மரணதண்டனை குற்றம் புரிவதில் இருந்து மற்றவரைத் தடுக்காது என்றும், தண்டனையானது குற்றம் செய்பவரை தடுப்பதோடு ஏனையவரையும் தடை செய்வதாக அமைய வேண்டும் என்றார். இக்கோட்பாடு எதிர்காலத்தை நோக்கி செயற்படுவதாக உள்ளது தண்டனை வழங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் விளைவுகள் எதிர்காலத்தில் குற்றத்தை தடுப்பதாகவும், குறைப்பதாகவும் அமைகின்றன. குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையானது அதனைக்கேட்பவர் மத்தியிலும் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இத்தகு குற்றங்கள் விளைவதைத் தடுக்க ஓர் கருவியாக இத்தண்டனைக் கொள்கை பயன்படுகின்றது.

தடுத்தண்டனையானது தனிநபரின் குற்றத்தை சிறிது காலத்திற்கு தடுத்து நிறத்துவதாகவும், எதிர்காலத்தில் குறைப்பதாகவும் அமைவதுடன் பெரும்பான்மையான மக்களுக்கு குற்றம் தொடர்பான விளிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனினும் இங்கு புதிய சட்டங்கள் உள்வாங்கப்படும் போது எதனைக்கையாண்டு தடுத்து வைப்பது என்பது கேள்விக்குறியாகின்றது.  (வாகனங்களின் வேகம் தொடர்பான சட்டம்) மற்றும் தடுத்தண்டனை முறையாகவே தண்டப்பணம் கட்டும் முறையானது அமைந்துள்ளது. பெரும்பாலும் குற்றங்களில் இது கையாளப்படும் போது மக்கள் தண்டனையைவிட பணத்தையே செலுத்துகின்றனர். இதனால் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகவே பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது. இது பெரும்பாலும் வீதி விதிகளை மீறும் இடங்களிலே கையாளப்படுகின்றன.

தடுத்தண்டனையானது தனிமனிதனுடைய விருப்பத்தின் படியான செயல்களைத் தடுப்பதாயினும் இயன்றளவு இன்பத்தையும், குறைந்தளவான துன்பத்தையும் தர முயற்சிக்கின்றது. அதாவது முழுமையாக மனிதனை துன்பத்தில் தள்ளிவிடாது அவன் மறுபடியும் நன்முறையில் வாழ்வதற்கான வாய்ப்பினை அளிப்பதற்கான முயற்சியை வழங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கான மறுவாழ்வை அளிப்பதற்கான விடயங்களை இக்கொள்கை உள்ளடக்கியுள்ள போது அதற்கான கட்டமைக்கப்பட்ட தெளிவான வழிமுறைகளை இது உள்ளடக்கவில்லை. குற்றம் ஒன்றினைத்தடுக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் இத் தடுத்தண்டனைக் கொள்கை எதிர் காலத்தில் குற்றம் செய்யாமல் திருந்தி வாழ்வதற்கானதோர் வழிமுறையாக அமைவதுடன் சமூகத்தை சிறந்ததோர் கட்டுக்கோப்பினுள் பேணவும் வழியமைக்கின்றது. எனினும் இங்கு குற்றவாளி ஒருவன் தன் கரங்களை இழக்க நேரிடின் பிற்காலத்தில் அவன் மனம் திருந்திய போதும் அதனைப்பெறுவது இயலாதது ஆகின்றது. எனவே இங்கு பல்வேறு விடயங்கள் குற்றத்தை தடுத்தல் என்ற நோக்கில் முக்கியத்துவப்படுத்தப்பட்டு சில தனிமனித நிலைகள் புறம்தள்ளப்படுவதை காணமுடிகின்றது.

 

 1. எச்சரிக்கைத் தண்டனைக் கொள்கை

ஒரு குற்றவாளியின் குற்றத்திற்காக மட்டும் இன்றி ஏனையோரை எச்சரிக்கும் முகமாகவும் மேற்கொள்ளப்படும் தண்டனை முறையே எச்சரிக்கைத் தண்டனையாகும். இங்கு ஓர் எச்சரிக்கைக்கு உட்படுவதன் மூலமாக பிறிதொரு தருணத்தில் அக்குற்றம் இடம்பெறாது இருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு தண்டனை குற்றச்செயலைவிட மிதமானதொன்றாக இருக்கவேண்டியது அவசியமானதாகின்றது. உதாரணமாக பாடசாலையில் ஆசிரியர்; வழங்கும் பொது மேடைத்தண்டனை, மின்கம்பத்தண்டனை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு மனிதன் ஓர் மாதிரி வடிவமாகக் கொண்டு தண்டனையை ஏற்க வேண்டியவன் ஆகின்றான். சமூக நலன்கருதி ஏனையோரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத்தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் ஓர் நடவடிக்கையாகவே இவ் எச்சரிக்கை தண்டனையானது செயற்படுகின்றது. உடல் ரீதியாக ஏற்படுத்தப்படும் கடும் வலியானது மனத்தில் ஓர் அச்ச உணர்வையும், பயத்தையும் தோற்றுவிப்பதன் ஊடாக குற்றவாளியிடத்திலும், பொது மக்களிடமும் ஊர் எச்சரிக்கையை ஏற்படுத்த முனைவதாகவே இவ் எச்சரிக்கை கொள்கையானது அமைந்துள்ளது.

எச்சரிப்பதையே முதன்மை நோக்காகக் கொண்டு குற்றவாளிளை ஓர் கருவியாகக் கையாளும் நிலையானது குற்றவாளியிடத்து கடுமையான போக்கினை உருவாக்குகின்றது. இதனால் இங்கு மனிதத்தன்மையற்ற வன்மையான நடவடிக்கையாக தண்டனை அமைகின்றது. குறிப்பாக கைகளை வெட்டுதல், மரணதண்டனை என தனிமனித பாதிப்புக்களை இது அதிகமாக உள்ளடக்கியுள்ளது. மக்கள் மத்தியில் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இக் கொள்கையானது முயற்சிக்கின்றது. குற்றச்செயலை செய்ததற்காக அல்ல எதிர்காலத்தில் இத்தகைய செயல் செய்யப்படாமல் இருப்பதற்காகவே இத்தண்னை என்ற தொனியில் இவ் எச்சரிக்கை தண்டனை அமைகின்றது. அதாவது “ஆடு திருடியதற்காகவில்லை எதிர் காலத்தில் ஆடுகள் திருடுபோவதைத் தடுப்பதற்காகவே இத் தண்டனை” என அமைகின்றது. இவ்வாறாக சமூகத்தின் நலனை மையப்படுத்தி செயற்படும் ஓர் கொள்கையாக இது அமைகின்றது.

குற்றச்செயல்களின் மீது மக்களுக்கு ஓர் வெறுப்பை ஏற்படுத்தும் முகமாக இத் தண்டனையானது மிகவும் கடுமையான வெறுக்கத்தக்க வகையிலான முறைகளை கையாளுகின்றது. மீண்டும் அக்குற்றத்தை நாடுவதற்கான தன்மையினைக் குறைத்து குற்றவாளியை குறுகிய காலத்திற்கு மட்டும் இன்றி எதிர்காலத்திலும் இத்தகு செயலை ஆற்றாமல் தடுப்பதே இக்கொள்கையின் நோக்கமாகும். இங்கு குற்றத்தைவிட தண்டனைதான் அதிகளவினைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும் ஏனெனில் அப்போது தான் மக்களிடையே அச்ச உணர்வு தோற்றம் பெறும் இதனூடாகவே அவர்கள் ஓர் எச்சரிக்கையையும் ஏற்படுத்த முடியும். எனவே தான் அதிகளவிலான தண்டனை இங்கு கையாளப்படுகின்றது. இவ்வாறாக இக் கொள்கையானது குற்றவாளியையும், மக்களையும் குற்றத்திலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கின்றது. இங்கு தனிமனிதன் ஒருவன் மற்றவர்களுடைய நலனுக்காக கருவிநிலையில் கையாளப்படுவதுடன் ஒருவருடைய தவறான செயலை முன்மாதிரியாகக் கொண்டு ஏனையவர்கள் செயற்படக் கூடாது என்பதற்காகவே இத் தண்டனையானது மிகவும் கடுமையான முறையில் ஓர் எச்சரிக்கையை வழங்குவதாக அமைகின்றது.

 1. சீர்திருத்த தண்டனைக் கொள்கை

இத்தண்டனை முறையானது, குற்றவாளிக்கான தண்டனையானது அவனது உடலை வருத்துவதாக இல்லாமல், உள்ளத்தை திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்தது ஆகும். குற்றங்களுக்கு குற்றமனமே காரணமாக அமைகின்றது. எனவே தண்டனையும் அக் குற்றமனத்தை திருத்துவதாகவே அமையவேண்டும் என்பதையே இக்கொள்கை எடுத்துரைக்கின்றது. குற்றவாளிகள் அனைவருமே தீயவர்கள் இல்லை சிலர் சூழ்நிலைகளாலும் குற்றவாளிகளாயிருக்க முடியும் எனவே குற்றவாளியின் மனத்தை செம்மைப்படுத்துவதாகவே தண்டனை அமைய வேண்டும் என இக் கொள்கை வலியுறுத்துகின்றது. குற்றவாளியும் ஓர் சமூக உறுப்பினர் என்றவகையில் அவனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவேதான் தண்டனை சீர்படுத்துவதாகவே அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

சிந்தனை வளர்ச்சி காரணமாக தோற்றம் பெற்றதோர் கருத்துமாற்றமாகவே இத்தண்டனை அமைகின்றது. இங்கு நிரந்தரமானதோர் மனநிலை மாற்றத்தையும் அதனால் விளையும் சமூக சீர்ப்படுத்தலையுமே இத்தண்டனைமுறை வேண்டிநிற்கின்றது. இது தண்டனைக்கோர் புதிய ஒழுக்கப் பெறுமானத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை சீர்திருத்தும் நோக்கிலேயே இத்தண்டனை செயற்படுகின்றது. குற்றவாளிகள் விடுதலை அடையும் போது மீண்டும் இச்சமூகத்தையே வந்தடைகின்றான். எனவே அவன் சமூகத்திற்கு மீண்டும் வருகைதரும் போது சிகிச்சை, பயிற்சி, கல்வி என்பவற்றின் ஊடாக மீள் ஒழுங்குபடுத்தப்பட்டவனாக அவனை மாற்றி அமைத்து சமூகத்தில் பொருத்துவதாக இக் கொள்கை அமைகின்றது. தண்டனைகளின் போது குற்றவாளிகளை தண்டிப்பதுடன் மட்டும் இன்றி அவன் சமூக அங்கத்தவன் எனும் முறையில் அவனை திருத்தியமைக்க வேண்டியதும் அரசின் கடமை என்ற அடிப்படையிலேயே இக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது.

அத்துடன் குற்றவாளி குற்றத்தை செய்வதற்கான முக்கிய தூண்டியாக அமைவது சமூக காரணிகளே. எனவே தண்டனை அளவுக்கு மீறியதாக அமைவது என்பது மனிதாபிமான அடிப்படையில் ஏற்கமுடியாதது. எனவேதான் சீர்திருத்த முறையானது தண்டனையில் உள்வாங்கப்பட்டது. மேலும் குற்றவாளி சமூகத்தில் எவ்வித பாராபட்சமும் இன்றி விடுதலையின்பின் நல்வாழ்வை அமைத்துக்கொள்ள உதவுவதற்கான ஓர் அடிப்படை முயற்சியாகவே அத்தண்டனைக்கொள்கை அமைகின்றது. சிறைச்சாலையில் மேற்கொள்ப்படும் சில நடவடிக்கைகளும் இதனுள் உள்ளடங்கப்படுகின்றன. அதாவது கல்விகற்கும் வாய்ப்பினை வழங்கல், போதிய வசதிகளை வழங்கல், கைத்தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கல், திறந்தவெளி சிறைச்சாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம் மேலும் விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள், அடிப்படை வசதிகளின் ஒழுங்குமுறைகள், உளச்சிகிச்சைகள் என்பனவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

உடல் ரீதியான துன்பத்தைவிட உளரீதியான திருத்தமே அதிகளவில் குற்றச்செயல்களை குறைக்கவல்லது எனவே அதனை சீர்திருத்த கொள்கையின் மூலம் சமூகத்தை மேம்படுத்தும் முயற்ச்சியில் இக் கொள்கை செயற்படுகின்றது. எனினும் இச்சீர்ப்படுத்தல்கள் குற்றவாளிகளை குற்றம் செய்யத் தூண்டுவதாகவும் அமைகின்றன. ஏனெனில் வசதிகள் அதிகமாக காணப்படும் போது சமூகத்தில் வறுமையில் வாடும் நபர் குற்றத்தை மேற்கொள்ளத் தூண்டப்படும் விதமாகவே இக்கொள்கை அமைந்துள்ளது எனலாம்.

தண்டனைக் கொள்கைகளின் நடைமுறைப் பொருத்தப்பாடு

ஒவ்வொரு நாளும் இந்த உலகில் குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், நாட்டின் நலன் எனும் போர்வையில் அரசு நடத்தும் ஒடுக்குமுறைகள் இவை அனைத்தும் மானிடவாழ்வின் மதிப்பை கேள்விக்குறியாக்குவதுடன் இது நாகரீக உலகுதானா என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகின்றது. இன்றைய நவீன சமூகமானது உண்மையில் எதனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பது பெரும் குழப்பத்தினையே கொண்டுள்ளது. மனித உரிமைகளும், மனிதாபிமானங்களும், சமமான நீதியும் என்ற குரல் உலகம் எங்கும் ஒலிக்கின்ற போதும் அவை வெறும் கூச்சல்களாகவே அடையாளம் இடப்படுகின்றன என்றே கூறவேண்டியுள்ளது நாகரீக உச்சத்தையும், அறிவுவளர்ச்சியினையும் கொண்டுள்ள இன்றைய சமூகம் இன்னும் பயங்கரமான குற்றங்களுக்கும், தண்டனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய நிலையே இன்றும் காணப்படுவது மனித சமூக வளர்ச்சி நிலையை பெரும் கேள்விக்குறியாக்குவதாக அமைகின்றது.

ஒருபுறம் சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்துச் செல்கின்றதுடன் இன்றும் பண்டைய காலத்தின் கொடுமையான, மனிதத்தன்மையற்ற தண்டனைகள் நடைமுறையில் காணப்படுவதையும் எம்மால் அறியமுடிகின்றது. உண்மையான அறிவார்ந்த வளர்ச்சியானது சமூகத்தில் தண்டனைகள் வழங்கப்படும் முன்னரே குற்றங்களைக்குறைக்கும் திறனைக்கொண்டிருக்க வேண்டும். அதுவே உறுதியான சமூக வளர்ச்சியாகவும் அமையும் எனினும் இன்று நாம் பாரிய குற்றங்களையும், அதற்கான கடுமையான தண்டனைகளையுமே காணவேண்டியதாக உள்ளது.

சமூகத்தின் இரு முனைகளில் காணப்படுகின்ற குற்றங்களும், தண்டனைகளும் ஒரு சமூகத்தின் தன்மைகளுக்கு ஏற்றவாறு அமைகின்றன. ஒவ்வொரு நாட்டின் அரசும் தன் மக்களின் நலன்கருதி குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகளை வழங்க முனைகின்றன. எனினும் குற்றங்களை சமூகத்தில் இருந்து களைவது என்பது மிகவும் சிக்கலான விடயமாகவே அமைந்துள்ளது. இதனால் தண்டனைகளின் நடைமுறைப் பொருத்தப்பாடு என்பது ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகின்றது. இதன் அடிப்படையில் இவ் அத்தியாயத்தில் தண்டனைக் கொள்கைகளின் நடைமுறைப் பொருத்தப்பாடானது இன்றுவரை விமர்சன ரீதியான ஒன்றாகவே உள்ளது.

பழிக்குப் பழிவாங்கும் தண்டனைக் கொள்கையின் நடைமுறைப் பொருத்தப்பாடு

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வானது மனித இயல்பால் அமைந்த விடயமாகும். இதனால் சமூகத்தில் நீதிகள் தவறவிடப்பட்டு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு எதிரான ஓர் நீதியான நடவடிக்கையாகவே தண்டனை அமைகின்றது. ஆரம்பத்தில் சட்டபூர்வமானதோர் அமைப்பு தோற்றம் பெறும் முன் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழ்வினை நடாத்திய போது சட்டமானது அவர்களை கட்டுப்படுத்தியது என்ற எண்ணக்கரு பல்வேறு அரசியல் அறிஞர்களாலும் முன்மொழியப்பட்டது. அடிப்படையில் மனிதன் தவறுகளை இழைப்பவர்களை தண்டிக்கும் உரிiமையுடையவன் என்ற எண்ணக்கருவும் இதனால் முன்வைக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு மனிதனும் தான் பாதிக்கப்படும் போது தான் பெற்றிருந்த வலிமயைக்கொண்டு அவர்களை தண்டிக்க முனைந்தான் இதனால் சமூகத்தில் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கொண்டு பழிவாங்கும் எண்ணம் மேலெழுந்து தன் சார்பான எண்ண அடிப்படையில் காட்டுமிராண்டித்தன்மையான குற்றங்களை செய்யவும், தண்டிக்கவும் ஆரம்பித்தான் வலிமையானவன் இவ்வாறு அமைய இன்னொரு நிலையில் வலிமையற்றவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் அநீதிக்கும் ஆளாகினர். இதனால் சமூகத்தல் ஓர் சமநிலை குழப்பம் ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்;காக மக்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய உருவாக்கப்பட்ட அமைப்பே பழிக்குப்பழி வாங்கும் தண்டனைக் கொள்கையாகும்.

தண்டனையின் பயனைவிட தண்டனைக்கான காரணத்தை மட்டுமே இக்கொள்கையானது கருத்தில் கொள்கின்றது. ஆரம்பத்தில் குற்றங்கள் அனைத்திற்குமே இம்முறை கையாளப்பட்டது. உதாரணமாக ஒருவன் கையை வெட்டிவிட்டால் அவனுடைய கையும் வெட்டப்பட்டது. இங்கு பாதிக்கப்பட்டவரின் மனநிiயை கருத்தில் கொண்டு அவரது உளக்காயத்தினை ஆற்றுவதாக இச் செயல் அமையும் என்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டது. எனவே ஓர் உணர்வற்ற சமூகத்தின் அடையாளமாகவே இக் கொள்கை அமைந்தது எனலாம். தவறான எண்ணங்களின் பிரதிபலிப்பையே இக் கொள்கை குறத்து நிற்கின்றது.

இன்றைய சூழலில் இத்தண்டனைக் கொள்கையானது நடைமுறையில் பொருத்தப்பாடுடையதா என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது. தனிமனிதன் என்பவன் உடல், உளம் என்ற இரு அமைப்புகளையும் கொண்ட ஓர்முழுமையான மனிதனைக் குறிக்கின்றது. தண்டனைகள் பொதுவாகவே உடலில் வலியையும் உளத்தில் வருத்தத்தையும் எற்படுத்துகின்றது. எனவே பழிக்குப்பழிவாங்கும் தண்டனையானது இன்றைய உலகில் கொலைக்கான தண்டனையாக மரண தண்டனை என்ற விதத்திலேயே அமைந்துள்ளது.

இதில் ஒருவரது உயிரைப்பறிப்பதற்கான உரிமை எக்காரணத்தைக் கொண்டும் எமக்கானது அல்ல ஆனால் சட்டம் எனும் போர்வையில் இவ் மனித உரிமை மீறலானது இன்றும் இடம்பெறுவது வருத்தத்திற்குரியதாகும். ஒரு மனிதனின் அங்கங்களை துண்டாடுபவருக்கு அதே போல் கைகளையோ, கால்களையோ வெட்டும் போது தான்; செய்த குற்றத்தால் ஏற்பட்ட அதே வலியையும், பாதிப்பையும் காலம்தோறும் அவர்கள் அனுபவிக்க நேரிடுகின்ற போதும் இங்கு இளப்புக்கள் அதிகரிக்கின்றனவே அன்றி எவ்வித திருத்த நிலையும் பாதிக்கப்பட்டவருக்கு எந்த நன்மையும் அமைவதாக தெரியவில்லை. அதுமட்டுமன்றி குற்றவாளியின் உறவினர்கள் அவரது நிலையை கண்டு தாங்கமுடியாது மேலும் புதிய குற்றங்களை புரியவும் வாய்ப்புள்ளது.

கொலைக் குற்றங்களுக்காக வழங்கப்படும் மரணதண்டனையானது ஆரம்பத்தில் தெரு வீதிகளில் இடம்பெற்றது. இதனால் அம் மனிதன் அனுபவிக்கும் ஒவ்வொரு வலியும் உணர்வு ரீதியாக அங்குள்ள ஒவ்வொரு மனிதனையுமே தாக்கியது. இதனால் தனிப்பட்ட ரீதியில் ஒரு தனிமனிதனின் வலியானது ஒட்டுமொத்த சமூகத்தையுமே பாதிக்கும் நிலை உருவானது. இதனால் குறிப்பிட்ட பொதுவான தண்டனையளிக்கும் நிலையானது உருவாக்கப்பட்டது. எனினும் தூக்கில் இடப்படும் போது உடலளவில் அதிகளவான வலியையும், மனதளவில் தாங்க முடியாத பதட்ட நிலையையும் ஒருவன் அடைகின்றான். ஓர் மனிதன் இத்தகு துன்பத்தை அனுபவிப்பது என்பது இன்றும் எம் உலகில் இடம்பெறுவது மனிதத் தன்மைற்ற எமது நிலையையே வெளிப்படுத்துகின்றது. மேலும் இங்கு நீதவான், மருத்துவர், தண்டனை நிறைவு செய்பவர், சிறைச்சாலை அதிகாரி என இவர்கள் முன்னிலையிலேயே இன்றும் தண்டனைகள் வழங்கப்படுகின்றது. இங்கு இவர்கள் ஒவ்வொருவருமே உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவதை காணமுடிகின்றது.

இம்முறையினால் குற்றவாளி அதிகளவு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றார். அங்கு மரண தன்டனையை நிறைவேற்ற தூக்கில் இடுவது மட்டுமல்லாமல் விச ஊசி, மின்சார நாற்காலி, துப்பாக்கியால் சுடுதல் போன்ற முறைகளுக்கூடாகவும் தற்காலத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. மின்சார நாற்காலியில் மரணம் உடனடியாக நிகழ்வதே ஆயினும் இத் தண்டனையானது அறிவிக்கப்படும் நொடியில் இருந்து நிறைவேற்றும் வரை குற்றவாளியின் மனநிலை தாங்க முடியாத அளவிற்கு வேதனையை அனுபவிப்பதாக உள்ளது. அதுபோலவே விஷஊசி மற்றும் துப்பாக்கி சூடு போன்ற முறைகளும் காணப்படுகின்றன. அவை மனிதனின் அடிப்படை உரிமை மீறலை வெளிப்படுத்;துகின்றது. இவ்வாறான பழிக்குப்;பழி வாங்கும் தண்டனை சமூகத்திற்கு பொருத்தமானதல்ல. ஒரு குற்றத்தை நிறுத்த மீண்டும் இன்னுமொரு குற்றத்தினை புரிவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இருப்பினும் இன்று உலகையே அச்சுறுத்தும் பயங்கரவாத கொலைக் குற்றங்கள், யுத்தக் குற்றங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் போன்ற மனித குலத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்களைத் தண்டிக்க பழிக்குப்பழிவாங்கும் தண்டனையே சிறப்பானதாகின்றது. ஏனெனில் பாரிய குற்றங்களை செய்தால் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். தற்போது சிரியாவில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இளம் பிஞ்சுகள் உட்பட அந்நாட்டு மக்கள் பலர் காவுகொள்ளப்பட்டனர். இவ்வாறான சூழ்நிலைகளில் மரண தண்டனையின் அவசியம் உணரப்படுகின்றது. இருப்பினும் எல்லாக் குற்றங்களிற்கும் நாம் இத் தண்டனையினை பிரயோகிக்க முடியாது. சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு போன்ற குற்றங்களிற்கு நாம் எவ்வாறு பழிக்குப்பழி வாங்கும் தண்டனையினை உபயோகிப்பது முடியாததாகின்றது. இங்கு பழிக்குப்பழி வாங்கும் தண்டனையின் நோக்கம் அடையப்படாதுள்ளது.

ஒழுக்கவியலானது தண்டனை அமைய வேண்டிய ஒழுக்க நியமங்களை வலியுறுத்துகின்றது. இவ் அடிப்படையில் நோக்குகின்ற போது தண்டனை வழங்கப்படவேண்டிய முறைகள், அளவு, தன்மை, நீதி எனும் விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. இவ் அடிப்படையில் அமையும் போது இத் தண்டனை முறையானது குற்றத்தினை விட அதிகளவான போக்கினை கொண்டிருக்கின்றது. மேலும் இது வழங்கப்படும் முறையானது குற்றவாளியை மட்டுமன்றி அதனை வழங்கும் தண்டிப்பாளரையும் பாதிப்பதாக உள்ளது. ஆயினும் ஆழ்ந்து யோசிக்கும் போது குற்றம் சூழ்நிலை காரணமாகவும் அமைந்திருக்கலாம். எனவே தண்டனையை சமப்படுத்துவது என்ற நோக்கில் குற்றவாளியின் நிலையை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவது எவ்விதத்திலும் நீதியானதாக அமையாது. எனவே மக்கள் மத்தியில் ஒழுக்கத்தை வலியுறுத்துவது அவசியமானதே எனினும் அதற்கென குற்றவாளியை கடுமையான முறையில் தண்டிப்பது எவ்வகையிலும் நடைமுறையில் ஏற்புடையதாகாது.

எச்சரிக்கைத் தண்டனைக்கொள்கையின் நடைமுறைப்பொருத்தப்பாடு

குற்றவாளியை மட்டுமன்றி குற்றத்தின் வழியில் ஏனையவர்கள் ஈடுபடுவதையும் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவரையும் எச்சரிக்கும் வகையில் அமைந்த தண்டனைக்கொள்கையே எச்சரிக்கைக் கொள்கையாகும். இது மக்களை ஓர் ஒழுக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அவர்களை எச்சரிக்கும் வகையில் உருவாககப்பட்டு தண்டனையின் நோக்கை நிறைவுசெய்யும் வகையில் அமைந்ததோர் கொள்கையாகும். தண்டனைகள் குற்றவாளியை எச்சரிப்பதாக மட்டுமன்றி சமூகத்தையும் எச்சரிப்பதாக அமையும் போது மட்டுமே சமூகத்தில் காணப்படும் தவறுகளை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். குற்றத்தை நீக்குவதற்காக அனைத்து மக்களுமே எச்சரிக்கப்பட வேண்டிய அவசியப்பாடு சமூகத்தில் காணப்பட்டமையினால் அரசு தண்டனைகளை எச்சரிக்கும் அடிப்படையில் அமைத்துக் கொண்டது. இவ்வடிப்படையில் கல்லால் எறிந்து கொள்ளல், கசையடி, மரணதண்டனை, பிரஜா உரிமையை பறித்தல் (நாடுகடத்தல்), சிலுவையில் அறைதல், கைகளை வெட்டுதல் போன்றவை பண்டைக்காலத்திலும் இன்றும் பேணப்பட்டு வருகின்ற தண்டனை முறைகளாகும். இது மக்கள் மத்தியில் பயத்தை அல்லது அச்சத்தை தோற்றுவிப்பதன் மூலம் தன் நோக்கை அடைய முயலுகின்றது. இக் கொள்கையானது பெரிதும் சமூக நலனையே முதன்மைப்படுத்தி செயற்படுகின்றது.

இவை சமூகத்தின் மீதும் பிரதிபலிப்பதனால் மக்கள் குற்றத்தினை மேற்கொள்ள தயங்கும் நிலை உருவாகியது. இதனால் குற்றங்கள் ஓரளவிற்கு குறைவடையும் தன்மை ஏற்பட்டது. எனினும் அதிகளவில் ஏனையவர்களை எச்சரிப்பது என்ற கருப்பொருளில் தனியொருவன் அதிகளவான சித்திரவதையை அனுபவிப்பது ஏற்படையதாக அமையவில்லை இந்தவகையில் எச்சரிக்கைத் தண்டனைக் கொள்கையானது நடைமுறையில் பொருத்தப்பாடுடையதா என்பது ஆய்விற்குரிய விடயமாகின்றது. இங்கு குற்றவாளி, குற்றம் என்ற நிலையை விட சமூகத்தை எச்சரித்தல் என்பதே முக்கியத்துவப்படுவதனால் தனிமனிதனது ஒட்டுமொத்தமான உரிமைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் நலனை பாதிப்பதாக இத் தண்டனை அமைந்துளது. குறிப்பாக ஒருவர் கைகளை இழக்க நேரிடின் அது அவனுடைய எதிர்கால வாழ்வையே கேகள்விக்குறியாக்கிவிடும். அவன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையே இத் தண்டனை ஊடாக இடம்பெறுகின்றது. சமூகத்தை எச்சரிக்கும் வகையில் ஒரு தனிமனிதனை மாதிரியாக கையாளப்படல் என்ற அடிப்படையில் தனிமனித நிலை பொருட்படுத்தப்படாமலும் தனிமனிதனுக்கான மதிப்பினை குறைப்பதாகவுமே காணப்படுகின்றது. இங்கு மாதிரியாக கையாளப்படல் என்ற அடிப்;படையில் தனிமனிதன் கடுமையாக தண்டனைக்கு ஆளாகுவதுடன் எச்சரிக்கையே முக்கியமானதாக உள்ளமையினால் நிரபராதிகளும் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

சமூகத்தின் மத்தியில் தெருக்களில் இத் தண்டனைகள் ஆரம்பத்தில் இடம்பெற்ற போது குற்றவாளி மிகவும் மன உழைச்சலுக்கு உள்ளாகினார். சிலர் தங்களைத் திருத்திக் கொண்டனர். சமூகத்திற்கும் அது ஓர் எச்சரிக்கையை விடுப்பதாகவே அமைந்திருந்தது. ஆனால் சிலர் இவ்வாறு பாதிப்படைந்தவர்கள் பெரிதும் அவமானத்திற்கு உள்ளாகுவதுடன் தங்களை சமூகம் குற்றவாளியாகவே பார்க்கின்றது என்ற எண்ணத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது. இங்கு கவனிக்க வேண்டிய மற்றுமோர் விடயம் யாதெனில் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு ஒவ்வொரு தனிமனிதனும் தண்டிக்கப்பட்டால் அதனால் மறைமுகமாக பாதிக்கப்படுவதும் சமூகமே ஆகும். குற்றங்கள் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றதோ அத்தகைய அளவு தண்டனையும் சமூகத்தைப் பாதிப்பதாகவே உள்ளது. தண்டனை என்பது நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது என்பதை சமூகம் மறந்து தண்டனை என்பது பயங்கரமான விடயம் என்ற நிலையினை தோற்றுவித்துவிடுகின்றது. குற்றச்செயல்களை தடுப்பதற்காக வன்முறையினை கையாளும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கல்லால் எறிந்து மரணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மனிதனது தவறுக்காக அவனை அணுஅணுவாக சித்திரவதைக்கு உள்ளாக்குவது மனிதனின் காட்டுமிராண்டித் தன்மையையே காட்டுகின்றது.

மனிதன் உணர்வுகளுக்கு உட்பட்டவன் ஆகின்றான் சில வேளைகளில் அறிவினைவிட அவனது உணர்வுகள் அவனை ஆட்கொண்டு விடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சமூக கட்டுப்பாடுகளை இவன் மீறிவிடுவதுடன் குற்றங்களையும் ஆற்றிவிடுகின்றான். இவ்வாறு இருக்கும் நிலையில் நாம் அவனது உணர்வுகளை மாற்றியமைப்பதற்கும், குற்றங்களை திருத்துவதற்குமான வாய்ப்புக்களையும், சிகிச்சைகளையும் கையாளக்கூடிய முறையாகவே தண்டனைகள் அமைய வேண்டும் அதனைத் தவிர்த்து அவனை ஒட்டுமொத்த சமூகத்தில் இருந்தும் வேறுபடுத்தக்கூடிய தண்டனைகளை வழங்குவது என்பது சமூகத்தை மேலும் குழப்பமடைய செய்வதாகவே அமைகின்றது.

தடுத்தண்டனைக் கொள்கையின் நடைமுறைப் பொருத்தப்பாடு

தண்டனையின் தன்மையானது அதிகளவில் மனிதத்துவத்தை மீறுவதாக அமைவதால் அதனை சற்றேனும் சரிசெய்யும் வகையிலும் சிறிய குற்றங்களை வேறு வழிகளில் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட முயற்சியுமே தடுத்தண்டனையாகும். தண்டனையின் நோக்கம் குற்றத்தை தடுத்து நிறுத்துவதே என்ற நோக்கின் அடிப்படையில் குற்றவாளிகளை தடுத்து வைப்பதன் ஊடாக அவர்களின் எண்ணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அத் தடுத்தண்டனையானது முயற்சிக்கின்றது.

ஆரம்பகாலத்தில் குற்றவாளியை சிறிது நேரத்திற்கோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ தடுத்து வைக்கும் தன்மை காணப்பட்டது. இதுவே பிற்பட்ட மன்னர் ஆட்சி காலத்தில் சிறைவைத்தலாக மாற்றம் அடைகின்றது. இதுவே பின் மன்னராட்சி காலத்திலும் பாதாளச்சிறை, இருட்டறைகள், சிங்கங்களின் குகைகள் போன்றவை அமைந்திருந்தன. தற்காலத்தில் குறுங்கால சிறைத்தண்டனை, நெடுங்காலச்சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை பெறும் கைதிகளும், தண்டனை பெறுவதற்கு முன்னரான சந்தேக நபர்களும் மரணதண்டனைக்கைதிகள் என அனைவரும் அரசினால் வடிவமைக்கப்பட்ட சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படுகின்றனர். இவ்வாறு தடுத்துவைக்கும் தண்டனையானது குற்றவாளியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவனை மீண்டும் அக் குற்றத்தினை செய்யாமல் தடுக்க வழிசமைக்கின்றது. இது ஏனைய தண்டனைக் கொள்கையை விட வலுவானதாக காணப்படுகின்றது. இங்கு சமூக நலன் மட்டுமல்ல தனிமனித நலனும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இங்கு குற்றவாளி சிறையில் அடைக்கப்படும் காலம் அவனது குற்றத்தின் அளவிற்கேற்ப வேறுபடுகின்றது.

குறுங்கால தண்டனையின் மூலம் குற்றவாளி தன் வாழ்வில் குறிப்பிட்ட காலத்தையே இழக்க நேரிடுகின்றது. அவன் சிறையில் இருந்து திரும்பும் சந்தர்ப்பத்தில் தன் குற்றத்iதை திருத்திக் கொள்ள இது வாய்ப்பாக அமைகின்றது. ஆனால் நீண்டகால சிறைத்தண்டனையானது மனதளவில் பெரும் காயத்தினை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. ஒருவன் தன் குடும்பத்தில் இருந்தும் சமூக வாழ்வில் இருந்தும்தனிமைப்படுத்தப்படும் போது அதிகளவான துன்பத்தை உளரீதியாக அனுபவிக்க நேரிடுகின்றது. இதனால் மனநிலை பாதிப்பு அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு அவனது உடல், உளம் இரண்டும் ஓர் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்பட்டு தன் சுதந்திர உரிமையை மனிதன் இழக்க நேரிடுகின்றது. சுற்றுச்சூழல், சகமனிதர்கள், சுதந்திரமான நடவடிக்கைகள் என்ற நிலை மாற்றமடைகின்றது. இங்கு குற்றவாளி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டவனாகவே உள்ளான். இவ்வாறான கட்டுப்பாடு தேவையானதே ஆயினும் மனித உரிமை அடிப்படையில் நோக்கும் போது இது பொருத்தமற்றதாகின்றது.

இங்கு நோக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் சிறையில் அனைத்து குற்றவாளிகளும் ஒன்றிணைவதே ஆகும். ஒரு குற்றத்திற்கு ஒரு சிறைச்சாலை என்று அமைக்க முடியாது அனைத்து குற்றவாளிகளும் ஒரே இடத்திலேயே தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் சிறிய குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டவன் பாரிய குற்றவாளியாகவோ, கூட்டுக்குற்றவாளியாகவோ வெளிவர வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மேலும் சிறை அனுபவம் ஏற்படுத்திய வெறுப்புணர்வால் வலுவான குற்றங்களை அவன் செய்வதற்கும் காரணமாக அமைகின்றன. இதனடிப்படையில் சிறையிலேயே அக்குற்றவாளி உருவாகின்றான் என்ற கருத்து தோன்றுகின்றது.

நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவனும் இச்சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்படுகின்றான். இதனால் குற்றவாளிகளின் பழக்கவழக்கங்களினை அவன் அடைந்துவிடவோ அல்லது தூண்டப்பட்டு குற்றவாளியாக மாறவோ வாய்ப்புள்ளது. மேலும் சிறையில் இருந்து தப்பியோடும் முயற்சிகளில் ஈடுபட்டு மேலும் ஓர் குற்றத்தை ஆற்றவும் இத்தண்டனை வழியமைத்து விடுகின்றது. இதனால் குற்றத்தை தடுப்பதைவிட அதை அதிகரிப்பதற்கன வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே தடுத்தண்டனை அமைகின்றது. இதனால் இது நடைமுறையில் பொருத்தப்பாடு அற்றதாகின்றது.

தடுத்தண்டனையானது பல விரும்பத்தகாத முடிவினைநோக்கி நகர்வதாகவும் உள்ளது. உதாரணமாக பார்க்கும் போது சிலவேளைகளில் இங்கு தண்னையை அனுபவிப்பதாகவே குற்றவாளிகள் கருதுவதில்லை இதனால் விடுதலையாகிய அடுத்த கணமே குற்றம் செய்யத்  துணிகின்றனர். இன்றைய சூழலில் குற்றவாளியின் நலன் கருத்தில் கொள்ளப்படுவதால் மூன்றுவேளை நன்கு உணவுண்டு வாழும் நிலை காணப்படுகின்றது. ஆனால் ஏழையொருவன் ஒருவேளை உணவிற்கே திண்டாட வேண்டி ஏற்படுகின்றது. இந்நிலையில் குற்றவாளிகள் சுகமான வாழ்வை அனுபவிப்பதால் அவர்கள் குற்றத்தை உணர்வதில்லை மற்றொருபுறம் ஏழைகள் கூட குற்றம் செய்ய முன்வரும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. மேலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றத்தை செய்துள்ள போதும் இலஞ்சம் கொடுத்து சிறையில் கூட சுகமாக வாழும் நிலையே இன்று காணப்படுகின்றது. இவ்வகையில் நோக்கும்போது இத்தண்டனை முறையானது மேலும் குற்றவாளிகளை உருவாக்கவே விளைகின்றது. இது நடைமுறையில் பொருத்தமற்றதாகவே உள்ளது.

சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதில் இக்கொள்கை புதிய முறையைக் கையாண்டது எனலாம். குற்றவாளி சிறிது காலம் தண்டனையை அனுபவிப்பதுடன் அவன் திருந்துவதற்கான வாய்ப்பும் அமைவதனால் சமூகம் பெரும் நலனை அடைவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. இதனால் மீண்டும் ஓர் குற்றவாளி உருவாகும் நிலை தடுக்கப்பட்டு சமுதாய நலனும், பாதுகாப்பும் சரியான முறையில் பேணப்படும். இது நடைமுறைக்கு பொருத்தமானதாகவே உள்ளது. இவ்வகையில் தடுத்தண்டனையினை நோக்கும் போது குற்றவாளிகளை குறுகிய காலத்திற்கு தடுத்து நிறுத்துவதன் ஊடாக மக்களுக்கு நன்மை பயப்பதன் மூலம் தன் நோக்கினை சிறந்த முறையில் கடைப்பிடிப்பதாக அமைந்த போதும் நீண்டகால சிறை வாசமானது மனதளவில் நீங்காத வடுவை உருவாக்குவதுடன், குற்றவாளிகளை பேணிப்பாதுகாப்பதும் இங்கு பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது.

சீர்திருத்த கொள்கையின் நடைமுறைப் பொருத்தப்பாடு

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் குற்றத்தை மட்டுமன்றி குற்றவாளியும் கவனத்திற்குரியவனே என்ற நோக்கில் தண்டனையின் உயர்தர வடிவமைப்பாக அமைவது சீர்திருத்த கொள்கையே ஆகும். குற்றங்கள் தடுக்கப்பட வேண்டியதே ஆயினும் குற்றவாளியும் வாழ்வதற்கான உரிமையைப்பெற்றவனே என்ற அடிப்படையில் குற்றவாளிக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டதே சீத்திருத்தக் கொள்கையாகும். தண்டனையின் தன்மையானது துன்பமானதாகவும், கொடுமையானதாகவும் அமையும் போது அது குற்றங்களை அழிப்பதைவிட குற்றவாளியையே அழித்துள்ளது. அவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினையே அகற்றிவிடுகின்றது. இதனால் குற்றவாளியின் வாய்ப்பினைப் பாதிக்காத வகையில், தண்டனைகள் அவனை திருத்துவதாகவும் அமைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்துப்பட்டு மாற்றுவழிகளில் மக்களை திருத்துவதற்காக எடுக்கப்பட்ட புதிய முயற்சியாகவே இக் கொள்கை அமைகின்றது.

சீர்திருத்த தண்டனையானது ஆரம்ப காலங்களில் சிறுவர்களின் குற்றச்செயல்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட தண்டனையாக அமைந்தது. சிறுவர்கள் தவறு செய்யும்போது முற்றாக அவர்களை அழிக்கும் வகையில் தண்டனைகள் வழங்குவது என்பது ஏற்கமுடியாதது. அதனால் அவர்களை சீர்திருத்த மீள்வாழ்வு அளிக்கவேண்டிய கடமை அரசிற்கு உண்டு அதனால் இக் கொள்கை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு அதிகளவில் மக்களின் நலனைப் பாதுகாப்பதே முக்கியமானதாக கருதப்பட்டாலும் குற்றவாளியின் நலனும் அவசிமானதாக நோக்கப்படுகின்றது. தண்டனை வழங்கப்படல் அவசியமானது ஆயினும் அது மக்களை திருத்துவதாக அமைவதே மிக முக்கியமானது கடுமையாக அமைவது அல்ல என்ற நோக்கு இங்கு காணப்படுகின்றது. பிணையில் விடுதலை செய்தல், நன்மதிப்பு விடுதலை செய்தல், திறந்தவெளி சிறைச்சாலை, பயிற்சிகள், திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள், கல்வி முறைகள் என்பன இங்கு அமைக்கப்பட்ட சீர்திருத்த வடிவங்களாக அமைகின்றன. ஆரம்பத்தில் சிறுவருக்கான நிலையிலிருந்து இன்று பெருமளவில் இம் முறையை கையாள்வதே சிறந்ததாக கருதப்படுகின்றது. இதுவே சமூகத்தில் மனிதத் தன்மையினை அழிக்காத நியாயமான தண்டனையாக இது அடையாளப்படுத்தப்படுகின்றது.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவனைச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது. எனினும் சீர்திருத்த தண்டனையின் மூலம் அவனுடைய கெட்ட குணம் திருத்தப்படுவதனால் மீண்டும் சமூகம் அவனை ஏற்றுக் கொள்கின்றது. இது அவனுக்கு மறு வாழ்வை வழங்குகின்றது. அதாவது சீர்திருத்த தண்டனையானது பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்குகின்றது. இவற்றினூடாக ஓர் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளவோ அல்லது சுயதொழிலை மேற்கொள்ளவோ இவை உதவுவதுடன் அவனுடைய அன்றாட வாழ்விற்கு வழியமைப்பதாகவும், பிறர் மத்தியில் நன் மதிப்பை பெற மீண்டும் வழியமைத்துக்  கொடுப்பதாகவும் இது அமைந்துள்ளது. இதனால் அவன் வாழ்வினையே திருத்தி அமைத்துக் கொடுப்பதுடன் மேலும் அவன் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினைத் தடுப்பதாக இது அமைந்துள்ளது.

உடலுக்கு அல்ல தண்டனை உள்ளத்திற்கே என்ற முறையில் அமையும் தண்டனையாகவே இக்கொள்கை அமைந்துள்ளது. உள்ளத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றமே நிரந்தரமானது ஆகையால் சீர்திருத்த தண்டனை இதனையே வலியுறுத்துகின்றது. எனினும் உடலுக்கு ஊறுவிளைவிக்காத தண்டனையால் பயன்கிடைப்பது குறைவானதாகவே அமையும் என்பதால் இக் கொள்கையைப்பற்றி ஆலோசிக்க வேண்டிய தேவையுள்ளது. உள்ளத்திற்கு மட்டும் தண்டனை என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் உள்ளத்தை திருத்துவது முக்கியமானதே ஆயினும்; இங்கு வலியை உணருதல் என்பதே முழுமையான திருத்தத்iதை தரவல்வது.

சீர்திருத்த தண்டனையானது ஒருவருடைய குற்றத்தை குறைப்பதாக வெளிப்படையில் அமைந்திருந்தாலும் உண்மையில் நோக்கும் போது குற்றத்தை குறைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதில் தாமதமாகவே உள்ளது. நடைமுறையில் பார்க்கும் போது இது குற்றவாளியை திருத்துவது போல் அமைந்திருந்தாலும் இதன்மூலம் சமூகத்தில் மற்றயவர்களின் குற்றம் குறையும் என்பதற்கில்லை. அது மட்டும்லாமல் அங்கு கல்வியும், உணவும், தொழிலும் வழங்கப்படுவதனால் குற்றவாளி தன் குற்றத்தை உணர வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. அவன் அதனை ஓர் சொர்க்க வாழ்வாகவே எண்ணுகின்றான். மற்;றும் குற்றவாளி தான் விடுதலை அடைந்த பின்னரும் அத்தகைய குற்றத்தை மீண்டும் செய்யவும் இத்தகைய சௌகரியம் துணைநிற்பதாகவே உள்ளது.

ஒட்டுமொத்தமாக தண்டனைக்கொள்கைகளின் நடைமுறைப் பொருத்தப்பாட்டை நோக்கும்போது சமூகத்தினை கட்டுப்படுத்துவதற்காக சட்டங்கள் உருவாக்கப்படுகின்ற போதும் அது பொது விருப்பினையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே அதனைப்பேண தவறுகின்றவர்களை தண்டிப்பது அவசியமே. இவ்வகையில் குற்றத்திற்கு ஏற்ப நீதியான முறையில் தண்டனையை வழங்குவது அவசியமானதே ஆகும். இவ்அடிப்படையில் நோக்கும் போது ஒவ்வொரு தண்டனைக் கொள்கையுமே நீதியான முறையில் தண்டனைக் கொள்கை நிறைவு செய்து கொள்ளும் போது ஏற்புடையதாக அமைகின்றது.

பரிந்துரைகள்

உடலைத் தாக்கும் நோயைப்போல் சமூகத்தை அணுஅணுவாக அழிக்கும் ஓர் தொற்று நோயாகவே குற்றங்கள் அமைகின்றன. எனவே இது தண்டனை எனும் மருந்துகொண்டு அடியோடு அழிக்கப்பட வேண்டிய நோயாக இன்றைய உலகில் காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை தண்டனைகள் பல மாற்றங்களை உள்வாங்கி தன் தலையாய கடமையினை நிறைவேற்ற பெரும்பாடுபட்டுள்ள போதும் அவற்றின் பணி ஓர் குறுகிய அளவிலேயே சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. எனவே குற்றங்களை குறைப்பதற்கு எவ்வாறு நாம் தண்டனைக் கொள்கைகளை சரியான முறையில் மாற்றியமைப்பது என்பது இன்றைய சூழலில் அதிகளவில் வேண்டப்படுவதாக உள்ளது.

தண்டனைகள் மற்றும் தீர்ப்புக் கொள்கைகளில் நேர்மை முக்கியமானதாகும். அதாவது எவ்விதமான அதிகாரம், ஊழல் என்பவற்றிற்கும் இடமளிக்காது நீதியான முறையில் நன்கு வழக்கை விசாரித்து குற்றம் உறுதியாகும் போது மட்டுமே தண்டனையை வழங்;க வேண்டும். மற்றும் தண்டனை குற்றத்தின் அளவை மீறாததாகவும் தண்டனையின் பிரதான நோக்கினையும் நிறைவு செய்வதாக அமைய வேண்டும். தண்டனை குற்றத்;தை திருத்துவதாக அமைய வேண்டும். இவை கருத்தளவில் மட்டுமன்றி நடைமுறையிலும் அமைய வேண்டியது அவசியமானதாகும்.

பொதுமக்களுக்கு வெளிப்படையாக சட்டங்கள் பற்றியும் அதற்காக வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் மிகத் தெளிவாக அறியத்தருவதுடன் அவர்களை எச்சரிப்பதாகவும், சட்ட ஒழுங்கு பற்றிய விடயங்களை அவர்கள் அறிந்து கொள்ளவும் ஏதுவாக அமைய வேண்டும். கிராமங்களில் பல சிறியளவிலான குற்றங்கள் ஏற்பட இதுவே காரணமாக அமைகின்றது எனவே இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கடுமையான குற்றவாளிகளுக்கும், தொடர்ச்சியான குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குவதுடன், தகுந்த மேற்பார்வையின் கீழ் அவர்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் குற்றவாளி தண்டிக்கப்படுவது அவசியமானதே எனவே அதனை வழங்கவே வேண்டும். ஆனால் அவன் திருந்துவதற்கான வாய்ப்புக்களை சரியான முறையில் அமைத்துக் கொடுப்பதே குற்றவாளிகளை தடுக்கவும், திருத்தவும் உதவும்.

இத்தண்டனைகளைக் கையாளும் போது தண்டனையின் பயன்கள், உணர்வுரீதியான விடயங்கள் என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. உணர்வு ரீதியான திருத்தங்களை ஏற்படுத்துவதே சிறந்த பயனைப் பெற்றுத் தரும். எனவே பொது நிறுவனங்களை இதற்காக கையாள்வது அரசிற்கு மேலும் உதவியளிப்பதாக அமையும். அதாவது உளநல நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், சீர்திருத்த கல்வியை மேற்கொள்ளவதற்கான பொது நிறுவனங்களை கையாள்வது உணர்வு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வழகோலும்.

தண்டனைகள் தற்போதைய சூழல் தேவையை பிரதிபலிப்பதாக அமையவேண்டும். அதாவது இன்றைய மக்களின் விருப்புக்களின் மனநிலைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்றவகையில் தண்டனைகளை அமைக்க வேண்டும். மற்றும் பொதுமக்களிடையே தோன்றக் கூடிய பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதன் மூலமாக மக்களிடையே கலவரங்கள் ஏற்படுவதை தடுத்து மேலும் குற்றங்கள் ஏற்படுவதை குறைக்க உதவும். அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் வடிவமைத்தல், கண்காணிப்பு நடவடிக்கைகளை பேணல், தொழில்நுட்ப வசதிகளை சரியான முறையில் பாதுகாப்பிற்காக கையாளுதல், சிறந்த பயிற்சிகளை காவல் துறையினருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் வழங்குதல், அவர்களுக்கான ஒழுக்கங்களை அமைப்பதோடு மட்டுமன்றி அது கடைப்பிடிகக்ப்படுகின்றதா என்பதை நன்கு கவனித்தல். இவை குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் உதவும்.

இவற்றைவிடவும் குற்றங்கள் இடம்பெற்ற குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தினை எடுத்து நோக்கும் போது குற்றம் இளைக்கப்பட்டு பல வருடங்களின் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளி தண்டிகக்படுகின்ற நிலையும் காணப்படுகின்றது. அதனால் மக்கள் மத்தியில் அத் தண்டனை தொடர்பான எச்சரிக்கை சென்றடைவதும் குறைவாகவே உள்ளது. அதே நேரம் ஒரு குற்றம் இடம்பெற்று தண்டனை கிடைப்பதற்கு இடையில் அதுபோன்ற பல குற்றங்கள் இடம்பெற்று விடுகின்றது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நீதிமன்றங்களும் வினைத்திறனுடன் இயங்க வேண்டும்.

சில இஸ்லாமிய நாடுகளில் உதாரணமாக சவுதிஅரேபியா போன்ற நாடுகளில் மனித உரிமைகளை மீறும் வகையிலான தண்டனைகள் வழங்கப்படுவதனைக் காண முடிகின்றது. திருடியவனுக்கு கையை வெட்டுவது போன்ற இரக்கமற்ற செயல்கள் இடம்பெறுகின்றது. மனிதனின் சிறப்புமிக்க குணமே இரக்க குணமாகும் அதனால் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படும் முன் திருடியவனுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும். இத்தகைய தண்டனை முறைகள் குறித்து இறுக்கத்தன்மையினை பேண வேண்டியது அவசியமானதாகும். மற்றும் தண்டனைக் கொள்கையில் காணப்படுகின்ற தளர்வு நிலையினையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கைதிகளை திருத்துதல் என்ற நோக்கில் அவர்களுக்கு போதிய அளவு வசதிகளையும் அதாவது கல்வி, விவசாயம், கைத்தொழில், இறைவழிபாடு, உணவு தயாரிப்பு என பல விதங்களில் இங்கு பல விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. எனினும் தண்டனைகளை தரக்குறைவாக நோக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குற்றம் செய்பவர்கள் தண்டனையை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தவறிவிட்டனர். இதனால் குற்றங்கள் சாதாரணமாகவே இடம்பெற ஆரம்பித்துவிட்டன. சீர்திருத்த தண்டனையினை இறுக்கமாகவும் செயற்படுத்தப்பட வேண்டும்.

குற்றவாளிகளைக் கொண்டே சமூக முன்னேற்றத்திற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்களை சமூகத்தோடு ஒன்றிணைத்தவாறு நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும், கற்றவாளிளின் திறன்களை வளர்க்கும் வகையிலும் அவர்களிடையே மறைந்திருக்கும் இரக்க குணத்தினை வெளிப்படுத்தவும் தக்கதான செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். இவை அவர்களை ஊக்கப்படுத்துவதுடன் குற்றங்கள் புரிவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவும் வழிசெய்யும்.

முடிவுரை

மேற்கூறியவாறு பல்வேறு விடயங்களின் ஊடாகக் குற்றங்களைக் குறைப்பதற்கு ஏதுவான வகையில் தண்டனைக் கொள்கைகளை மாற்றயமைப்பதன் ஊடாகவும் பல புதுவிதமான வழிகளின் ஊடாகவும் குற்றங்களைக் குறைக்கப் பல வழிமுறைகளைக் கையாள்வதுடன் அவ் வழிமுறைகளை எவ்வாறு நாம் இன்னும் அதிகரிக்கலாம் என மேலும் ஆராய்ந்து அதற்கான சரியான வழிமுறையைக் கையாள்வது பொருத்தமானதாக அமையும். எனினும் சட்டத்தைப் பேணுவது நம் கடமை என்ற உணர்வை மக்கள் மத்தியில் பதியச்செய்வதும், சட்டம் தங்களைப் பாதுகாக்கவே என்ற உணர்வினை ஏற்படுத்துவதாலுமே குற்றங்களைக் குறைக்கமுடியும்.

மேலும் நீதியினைப் பேணுவது என்பது தண்டனைக் கொள்கைகளில் அனைத்து முறைகளிலும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் அமைந்துள்ளது. இதுவே குற்றங்களைக் குறைப்பதற்கு மிகவும் ஏதுவானதாக அமையும். மேலும் தண்டனைக் கொள்கைகள் நடைமுறையில் பொருத்தமானது என்பது நிரூபிக்கப்படல் வேண்டும். இதனை நடைமுறையில் உண்மையில் தண்டனையின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடையாளமிடுவதுடன் மேலும் இழப்புக்களை சமப்படுத்துவதன் மூலம் இலக்குகளை அடையமுடியும் என்பதையும், வேறு வழிகளில் அவர்களைத் திருத்த முடியாது என்பதையும் நிரூபிக்கும்போதே தண்டனைக் கொள்கைகள் நடைமுறையில் ஏற்புடையதாக அமையும்.

துணைநின்றவை

 • அனஸ் எம்.எஸ்.எம்., 2006, மெய்யியல், குமரன் புத்தக இல்லம், சென்னை- கொழும்பு.
 • இராதாகிருஷ்ணன் சர்வபள்ளி, 1979, கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
 • சிவஞானமூர்த்தி எம்., 2006, மெய்யியல், அட்மிரல் கிராபிக்ஸ்.
 • ஜமாஹிர்.பீ.எம்., 2010, மெய்யியல் பிரச்சினைகளும் பிரயோகங்களும், நதா வெளியீடு, கண்டி.
 • Mark Priesty, 2001, Introduction to philosophy, Cambridge University Press.
 • //www.en.wikipedia.org
 • //www.beatsviews.wordpress.com

அரியரெத்தினம்அனேஜா

கலைமாணி மாணவர்

மெய்யியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறை

கலை கலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை

இலங்கை.

nironiru03@gmail.com