(தொடர்ச்சி…)

தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது

          பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்துப்

 

படைவீரர்களுக்கும் உதியஞ்சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் அப்பெரும்போர் முடியுமளவும் பெருஞ்சோறு கொடுத்து உதவினன். முரஞ்சியூர் முடிநாகராயர்[1] என்னும் புலவர் இவ்வேந்தனை முன்னிலைப்படுத்து வாழ்த்திய பாடலொன்று புறநானூற்றிற் கடவுள் வாழ்த்தினையடுத்து முதலாவதாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. அப்பாடலில்,

அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ

          நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

          ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

          பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என முடிநாகராயர் உதியஞ்சேரலாதனை முன்னின்று அழைத்துப் போற்றியுள்ளார். அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே  கொண்ட பொற்பூந் தும்பையினையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெறுஞ்சோறாகிய மிக்கவுணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

பாரதப்போர் கி.மு.1500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்ததென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். உதியஞ்சேரல் என்பான் பாரதப் போரில் இருதிறத்துப்படை வீரர்களுக்கும் பெருஞ்சோறளித்தமையால் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பிக்கப்பெற்றான். எனவே இச்சேரமன்னன் பாரதப்போர் நிகழ்ந்த காலை உடனிருந்து உதவிபுரிந்தவன் என்பது நன்கு புலனாம். சேரர் குடியினராகிய இளங்கோவடிகளும்,

பிரைவர் ஈரைம்பதின்மர் உடன்றெழுந்த

          போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

சேரன்                                                          (சிலப். வாழ்த்துக்.24)

எனத் தம் குல முதல்வனாகிய இவ்வேந்தர் பெருமானது பெருங்கொடையை உளமுவந்து போற்றியுள்ளார். உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறளித்த சேரன், என அடிகள் குறிப்பிடுதலால் இவன்  பெருஞ்சோறளித்த நிகழ்ச்சி பாரதப்போர் நிகழ்ந்த நாளிலேயே உடன் நிகழ்ந்த தென்பது தெளிவாக விளங்குதல் காணலாம்.

இங்ஙனம் உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ்சோற்று நிகழ்ச்சி பாரத காலத்தில் நிகழ்ந்ததன்றெனவும்,  பிற்காலத்தில் பாரதக் கதையை நாடகமாக நடித்துக் காட்டிய விழாவின் முடிவில் நாடகப் பொருநர் முதலியோர்க்கு உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ்சோற்று விழாவாகவோ அன்றிப் பாண்டவர் பொருட்டும் நூற்றுவர் பொருட்டும் அவ்வேந்தன் செய்த சிரார்த்தமாகவோ அதனைக்கொள்ளல் வேண்டுமெனவும் P.T.சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர் (History of the Tamils, p.492).

                உதியஞ்சேரலாதன் என்பான் பாரதப்போர் நிகழ்ந்த காலத்திலேயே பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கும் இன்னார் இனியாரென்னாது நடுநின்று பெருஞ்சோறு வழங்கிய வரையாவண்மையினை இவன்காலப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனார் முன்னின்று பாராட்டுதலானும், இவ்வேந்தனது குடியிற்றோன்றிய இளங்கோவடிகள் தம் குல முதல்வனாகிய இவனது ஈகைத் திறத்தை யெடுத்துரைத்தலானும் இவ்வேந்தன் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து உதவியவன் என்பதிற் சிறிதும் ஐயமில்லையென்க (மாணிக்கவாசகர் காலம், ப.79).

                இனி, உதியஞ்சேரலென்பான் பாரதப் போரில் இறந்த வீரா்களைப் போற்றுமுகத்தான் அவர் பொருட்டுப் போர்க்களத்தில் பெரும் பலியாகிய பிண்டங்களை வழங்கினானெனவும், அது குறித்துப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனென்று அழைக்கப் பெற்றானெனவும்,

மறப்படைக் குதிரை மாறா மைந்தின்

          துறக்க மெய்திய தொய்யா நல்லிசை

          முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்

          பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை யிரும்பல்

          கூளிச் சுற்றம் குழீஇ யிருந் தாங்கு                            (அகம்.233)

எனவரும் மாமூலனார் பாடலைக்கொண்டு முன்னர்க்காட்டிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலுக்குப் பொருள் காணும்பொழுது, ஈரைம்பதின்மரும் பொருதுளகத்தொழிந்த அளவில், இவ்வுதியஞ்சேரலென்பான், ஆண்டு இருபடையினும் இறந்தார் பொருட்டுப் பெருஞ்சோறு கொடுத்தான் என்று துணிவதே பொருந்தியதாகுமெனவும், இருபெரும் படையுங் கலகப்பட்டுத் தடுமாறுதற்குரிய பெரும்போர் நிலையில் அவ்விருபடைக்கும் நடுநின்று ஒருவன் சோறு வழங்கினன் எனக் கூறுவதில் முட்டுப்பாடு பலவாகுமெனவும் இம்முட்டுப்பாடு தீர்ந்து உள்ளவாறு இதுவென்று தெளிவிப்பது மாமூலனார் பாடிய 233ஆம் அகப்பாட்டெனவும் மகாவித்துவான் ரா.இராகவையங்காரவர்கள் கூறியுள்ளார்கள் (தமிழ் வரலாறு – முதற்பதிப்பு, பக்.231 – 232). பாண்டவரும்  நூற்றுவரும் பொருத போர்நிகழ்ச்சியிலேயே இருதிறத்தார்க்கும் உதியஞ்சேரல் பெருஞ்சோறளித்தானென்பது இளங்கோவடிகள் கருத்தாதலானும், முடிநாகனார் பாடலில் ‘ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய‘ எனவருந் தொடர்க்கு ‘நூற்றுவர் பொருது இறக்குமளவும்‘ என்றே புறநானூற்றுரையாசிரியர் உரை கூறியிருத்தலானும் உதியஞ்சேரலென்பான் பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நடந்த போர்நிகழ்ச்சியில் நடுவாக நின்று  பெருஞ்சோறளித்தான் எனக் கொள்ளுதலே முன்னோர் கருத்துக்கு ஏற்புடையதாகும். போர்க் காலத்தில் இருதிறத்தார்க்கும் நடுநிலையில் நின்று படையிற் புண்பட்டோர்க்கு மருந்து முதலியனவளித்து நலஞ்செய்யும் பெருந்தொண்டினை ஒரு குழுவினர் (Red cross society) மேற்கொண்டுழைத்தலை இக்காலத்துங் காண்கின்றோம். இவ்வாறே  நம் தமிழ் வேந்தனாகிய உதியஞ்சேரலாதனும் பாரதப்போரில் பகைநட்பென்று பாராது இருதிறத்துப் படை வீரா்களுக்கும் பசிப்பிணி மருத்துவனாகி நடுநின்று உதவிபுரிந்தான் எனக் கொள்வதிற் சிறிதும் தடை நிகழக் காரணமில்லை. முரஞ்சியூர் முடிநாகனாராற் பாடப்பெற்ற இவ்வேந்தனும் 233ஆம் அகப்பாடலில் மாமூலனாராற் குறிக்கப்படும் மற்றொரு சேர வேந்தனும் உதியஞ்சேரல் என்னும் ஒரு பெயரினையுடையராதலும் பெருஞ்சோறு வழங்கிய சிறப்பினை ஒருங்குடையராதலும் கருதி வெவ்வேறு காலத்தவராகிய, இவ்விரு வேந்தர்களையும் ஒருவர் என்று துணிதல் கூடாது. முன்னோர் பெயரைப் பின்னோர் புணைந்துகொள்ளும் வழக்கமுடைமை பற்றி ஒரு குடியில் ஒரு பெயருடையார் பலராதரியல்பு. உதியஞ்சேரல்  என்னும் பெயர் வருமிடமெல்லாம் அப்பெயர் ஒருவனையே குறிக்குமெனக் கொள்ளுதற்கில்லை. இடமும் காலமும் பிற செயல் முறைகளும் ஆகியவற்றைக் கூர்ந்துநோக்கி இப்பெயர் இன்னாரைக் குறிக்குமெனத் துணிதலே பொருத்தமுடையதாகும். 233ஆம் அகப்பாடலில் மாமூலனாராற் குறிக்கப்பெற்ற உதியஞ்சேரல் என்பான் பகைவரை வென்று வீரசுவர்க்கமடைந்த தன் முன்னோரை நினைந்து வழிபடும் நிலையில் அம்முன்னோரைக் குறித்துப் பெருஞ்சோறு வழங்கினானென்றும், அவன் வழங்கிய சோற்றுத் திரளை வீரர் திரளாகிய கூளிச் சுற்றங்கள்[2] கூடியிருந்து உண்டனவென்றும் அப்பாடலால் அறிகின்றோம். தமிழர்கள் தம் குடியிலிருந்த முன்னோரை வழிபடுதலை முதற்கடைமையாகக் கொண்டொழுகினமை ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங், கைம்புலத்தா றோம்பல் தலை‘ எனவும், ‘தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும், பொன்போற் புதல்வர்‘ எனவும், வருந் தொடர்களாற் புலனாம். சேரமன்னர்கள் தம் குடியில் இறந்த முன்னோரை வழிபடுதலை முதற் கடமையாகக் கருதிப் போற்றினமை ‘இளந்துணைப் புதல்வரின் முதியோர்ப் பேணித் தொல்கடனிறுத்த வெல்போரண்ணல்‘ (பதிற்.70) எனவருந் தொடரால் நன்கு விளக்கப்பட்டது. இங்ஙனமே மாமூலனாராற் போற்றப்பெற்ற உதியஞ்சேரலும் தன்குடியிற் றோன்றிப் போர் வலியால் துறக்க
ம் எய்திய தன் முன்னோரை வழிபட்டுப் பெருஞ்சோற்று விழா நிகழ்த்தினான் எனத் தெரிகிறது. உதியஞ்சேரல் என்னும் இவ்வேந்தனால் வணங்கப்பெற்ற ‘மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கமெய்திய தொய்யா நல்லிசைமுதியர்‘ என்போர், இவ்வேந்தனது குடியிற் பிறந்து போர் வலியாற் பகைவரை வென்று வீரசுவர்க்கமெய்திய இவனுடைய குடிமுதல்வரேயாவார். இவர்களைப் பாரதப் போரில் இறந்த நூற்றுவர் முதலிய வடநாட்டு மன்னர்களாகக் கொள்ளுதற்கு மாமூலனார் பாடலில் எத்தகைய சொற் குறிப்பும் இல்லை. தமிழ் மன்னனாகிய உதியஞ்சேரலென்பான் துரியோதனன் முதலிய வடவேந்தர்களைத் தன் குலமுதல்வராகக் கருதிப் பிண்டம் வழங்குதற்கு யாதொரு தொடர்புமில்லை. அன்றியும் துரியோதனன் முதலியோர்க்குப் பிண்டங் கொடுத்தற்குரிய உறவின் முறையினர் பாண்டவர்களேயாவா். அங்ஙனமாகவும் வடவேந்தர்களோடு குடிவகையால் தொடர்பில்லாத உதியஞ்சேரல் பிண்டங் கொடுத்தானென்றல் முறையாகாது. ஆகவே இரண்டாம் புறப்பாடலில் வாழ்த்தப்பெற்ற உதியஞ்சேரலும், அகம்.233ஆம் பாடலிற் குறிக்கப்பட்ட உதியஞ்சேரலும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்தவர்களாகவே கொள்ளல் வேண்டும். இவ்விருவருள்ளும் முன்னவன் பாரதக் காலத்தவன்; பாரதப்போரில் இருதிறத்துப் படை வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கி ஊக்குவித்தமை காரணமாகப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பித்துப் போற்றப்பெற்றவன். இனி, மாமூலனாராற் குறிக்கப்பட்ட  உதியஞ்சேரலென்பான் பாரதப் போரில் தொடர்பு கொள்ளாதவன்; தன் குடியில் இறந்த முன்னோர்களைக் குறித்துப் பெருஞ்சோற்று விழா நிகழ்த்தி வழிப்பட்டவன். இவன் பாரத காலத்தவன் அல்லன். இவ்வேந்தன் மாமூலனார் காலத்தை யொட்டிச் சிறிது முற்பட்டிருதவனாதல்  வேண்டும்.

மாமூலனார் தம் காலத்தை யடுத்து நிகழ்ந்த வரலாறுகளைக் குறித்துச் செல்லும் வழக்கமுடையவரென்பது அவர் பாடிய பாடல்களால் நன்கு விளங்கும்.

நாடுகண் ணகற்றிய  உதியஞ் சேரற்

          பாடிச் சென்ற பரிசிலர் போல

          உவவினி வாழி தோழி                         (அகம்.65)

என மாமூலனார் இவ்வுதியஞ் சேரலின் வண்மையை உவமை முகத்தாற் சிறப்பித்துப் போற்றுதலால் இவனது வண்மையாலுளதாம் பயனை இப்புலவர் நேரில் நன்கறிந்தவராதல் வேண்டும். இதனால் இவ்வேந்தன் மாமூலனார் காலத்தில் வாழ்ந்தவனெனத் தெளியலாம். உதியஞ்சேரல் என்னும் இவ்வேந்தன் (இந்நூலிற் கிடைக்காத பதிற்றுப்பத்தின் முதற்பத்து) பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாற் பாடப்பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தையும் செங்குட்டுவனுக்குப் பாட்டனுமாவான். செங்குட்டுவன் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். ஆகவே செங்குட்டுவனுக்குப் பாட்டனாகிய இவ்வுதியஞ்சேரல் என்பான் கி.பி.முதல் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனாதல் வேண்டுமென்பது நன்கு தெளியப்படும். எனவே கி.பி.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவனாகிய இவ்வுதியஞ்சேரலையும் பாரதகாலத்தவனாகிய பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனையும் ஒருவனைக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாமை வெளிப்படை.

பாரத காலத்தில் வாழ்ந்த சேரவேந்தனாகிய பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை நோக்கி முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய புறப்பாடலில், ‘நடுக்கின்றி நிலீ இயரோ‘ என அவனை முன்னிலையாக்கி வாழ்த்துகின்றார்[3]. இத்தொடரில் முன்னிலையிடத்தில் வியங்கோள்வினை ஆளப்பெற்றுளது.

அவற்றுள்

          முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும்

          மன்னா தாகும் வியங்கோட் கிளவி                      (வினையியல் – 29)

என்பது தொல்காப்பிய விதி. ‘வியங்கோள்வினை முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தோடும் நிலைபெறாது‘ என்பது மேற்கூறிய தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருளாகும். முரஞ்சியூர் முடிநாகனார் பாடலில் இவ்விதிக்கு மாறாக வியங்கோள் வினை முன்னிலையிடத்தில் நிலைபெற்று வழங்கியுளது. தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் உள்ள சான்றோர் பாடல்களில் இச்சொல்  வழக்கு நிலைபெற்று வழங்கியிருக்குமானால் தொல்காப்பியனார் இதனை வழுவென்று விலக்கியிருக்கமாட்டார். ஆசிரியர் இதனை வழுவென விலக்கியிருத்தலால் அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் முன்னிலை, தன்மை என்னும் ஈரிடங்களிலும் வியங்கோள்வினை நிலைப்பெற்று வழங்கவில்லையென்பது நன்கு பெறப்படும். தொல்காப்பியனார் காலத்தில் வழுவென்று விலக்கப்பட்ட சொல் வழக்கு அவர்க்குப் பின் வந்த முரஞ்சியூர் முடிநாகனார் காலத்தில் வழுமைதியாக அமைத்துக்கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. எனவே முடிநாகனார் வாழ்ந்த பாரத காலத்துக்குத் தொல்காப்பியர் மிகவும் முற்ப்பட்டவரென்பது நன்கு புலனாதல் காண்க.

பெரிபிளஸ் நூலாசிரியர் குறிப்பில் இக்காலத்திலுள்ள மதுரையுங் கொற்கையுமே பாண்டியர் தலைநகரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்திலும் சங்கச் செய்யுட்களிலும் இவ்விரு நகரங்களே பாண்டியர்க்குரிய தலைநகரங்களாகப்   பேசப்படுகின்றன வியாசரியற்றிய மாபாரத நூலில் பாண்டியரது தலைநகர் மணலூர் எனக் குறிக்கப்பெற்றுளது. வடமொழி ஆதிகாவியம் எனப் போற்றப்பெறும் வான்மீக ராமாயணம் பாண்டியர்க்குரிய தலைநகரம் கபாடம் எனவும் அது தாமிரபரணிக்குத் தெற்கேயுள்ள தெனவும் கூறுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவரென்பது முன்னர்ச் சிறப்புப் பாயிர ஆராய்ச்சியில் விளக்கப் பெற்றதாதலின், அவர் காலத்தில் பாண்டியர் தலைநகராகத் தோற்றுவிக்கப்பெற்ற கபாடபுரம், பிற்றைநாளிற் குமரியாற்றைக் கடல்கொண்ட பொழுது ஒருங்கழிந்ததென்பது நன்கு புலனாம். வியாசமுனிவர்  பாண்டியர்க்குரிய தலைநகர் மணலூர் எனக் குறிப்பிடுதலால் அவர் காலத்துக்கு முன்னரே பாண்டியர் கபாடபுரத்தின் சிதைவறிந்து மணலூர் என்னும் மற்றொரு பேரூரினைத் தமக்குரிய தலைநகராகப் படைத்துக் கொண்டனர் எனத் தெரிகிறது. கபாடபுரமும் குமரியாறும் கடல்கோளால் அழிந்துபடுவதன் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர் என்பது தொன்றுதொட்டு வழங்கும் வரலாறாதலால் அவ்வாசிரியர் பாரத காலத்துக்கு மிகவும் முற்பட்டவரென்பது நன்கு தெளியப்படும்.

வடவேங்கடந் தென்குமரி யெனத் தொடங்கும் பனம்பாரனார் பாயிரத்தில் நான்மறை யெனக் குறிக்கப்பட்ட தைத்திரியமும் பௌடிகமுந் தலவகாரமும் சாமவேதமும் ஆம் எனவும், தொல்காப்பியனார் இந்நூல் (தொல்காப்பியம்) செய்த பின்னர், வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு இவற்றை இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என நான்கு கூறாகச் செய்தாராதலின், பனம்பாரனார் பாயிரத்தி்ல் நான்மறையெனக் குறிக்கப்பட்டன. இருக்கு முதலிய நான்கென்றல் பொருந்தாதெனவும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் சிறப்புப் பாயிரவுரையி்ல் இனிது விளக்குகின்றார். எனவே வடமொழி வேதங்களை வகுத்த வேதவியாதர் காலத்துக்கு மிகவும் முற்பட்டவர் ஆசிரியர் தொல்காப்பியனார் என்னும் உண்மையினை நச்சினார்க்கினியரும் உடன்பட்டு விளக்கினாராவர்.

தமிழரது பழைய வரலாற்றினைப்பற்றிய முடிபுகள் சில, இறையனார் களவியலுரையிலும் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் எழுதிய உரைப் பகுதிகளிலும், சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரையிலும் காணப்படுகின்றன. இம்முடிபுகள் வரலாற்றாராய்ச்சியாளர் ஆராய்ந்து கண்ட முடிபுகளோடு ஒருபுடையொத்து நிற்கின்றன. எனவே இவையெல்லாவற்றையும் கட்டுக் கதைகளெனத் தள்ளிவிடுதற்கில்லை. ஆசிரியர் தொல்காப்பியனார் காலம் இஃதெனத் துணிதற்கு இவ்வுரை நூன் முடிபுகள் பெரிதும் பயன்படுமென்பது உறுதி.

பாண்டிய மன்னர்கள் கல்வி வளர்ச்சி குறித்து மூன்று முறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்த வரலாறு, இறையனார் களவியலுரையினுள்ளே விரித்துக் கூறப்பெற்றது. தென்மதுரையில் நிறுவப்பெற்ற முதற் சங்கம் 4440 ஆண்டுகளும் கபாடபுரத்தில் நிறுவப்பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுகளும் இப்பொழுதுள்ள மதுரையாகிய கூடல் நகரத்தில் நிறுவப்பெற்ற கடைச்சங்கம் 1850 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தனவெனக் களவியலுரை கூறுகின்றது. களவியலுரைகூறும் இக்கொள்கையினைப் பின்வந்த உரையாசிரியரெல்லாரும் உடன்பட்டு ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கடைச்சங்கம் கி.பி.230–க்குள் முடிந்துவிட்டதென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். இக்குறிப்பின்படி நோக்கினால் தலைச்சங்கம் இற்றைக்கு 11,716 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது புலப்படும். தொல்காப்பியனார் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவரென்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. களவியலுரையிற் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்கினால் இடைச்சங்கம் கி.மு.5320இல் தொடங்கியதெனக் கொள்ளலாம். எனவே ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தின் மேலெல்லை கி.மு.5320 என்பது தெளிவாதல் காணலாம்.

அறிஞர் M.சீனிவாசையங்காரவர்கள் தாம் எழுதிய Tamil Studies என்னும் நூலில் நிலந்தரு திருவிற் பாண்டியன் கி.மு.350–ல் இருந்தவனென்றும் அக்காலமே தொல்காப்பியனார் வாழ்ந்த காலமென்றும் குறிப்பிடுவர். அறிஞர் T.R.சேஷையங்காரவர்கள் பாணினி முனிவர் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டென்றும் பாணினிக்குக் காலத்தால் பிற்பட்டவரே தொல்காப்பியனாரென்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் பிற்காலத்தே செய்து சேர்க்கப்பட்டதென்றும் கூறுவர். மேற்குறித்த அறிஞர்கள் தம் கொள்கையினை நிறுவுவதற்குத்தக்க சான்றுகளைக் காட்டவில்லை . எனவே அவர் தம் கொள்கைகளை ஊகமாகவே கருதுவதன்றி உண்மையெனக் கொள்ளுதற்கு இடமில்லை. (தொடரும்…)

[1] முடிநாகனார் என்னும் பெயரே ஏடெழுதுவோரால் முடிநாகராயர் எனப் பிற்றைநாளில் திரித்து எழுதப்பட்டிருத்தல் வேண்டும். புறத்திணை நன்னாகனார், கண்ணனாகனார், நன்னாகனார் பெட்டனாகனார் என வழங்கும் பண்டை இயலிசைப் புலவர் பெயர்கள் ஈண்டு ஒப்புநோக்குதற்குரியன.

[2] கூளிச் சுற்றம் – ஏவல் செய்யும் போர் வீரர் குழு.

சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்

கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்  (புறம்.23)

எனக் கல்லாடனார் கூறுதல் இவண் ஒப்புநோக்குதற்குரியதாம்.

[3] இவ்வுதியஞ் சேரலாதன்மீது பாடப்பட்டதாதல் வேண்டுமென்பது திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தாரவர்கள் கருத்தாகும்.

க.வெள்ளைவாரணனார்