இதழ் 5இன் தொடர்ச்சி…

தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்

தொல்காப்பிய விதிக்கு மாறான சொல்வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நுல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே, கொள்வழி  யுடைய பலவறி சொற்கே, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனாம். பூரியர்கள் (919), மற்றையவர்கள் (263) எனத் திருக்குறளிலும், தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர்திணைப் பெயரையடுத்துக் கள் விகுதி பயின்று வழங்குவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். இவ்விதிக்கு மாறாக இரப்பன் இரப்பாரை யெல்லாம் என வருந் திருக்குறளில் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்குகின்றது. இவ்வாறே கைவிடுக லேனே (அகம்-193), உதவியோ வுடையன் (அகம்-186), நினைக்கியான் கிளைஞ  னல்லனே (அகம்-343), யான் வாழலனே (அகம்-362), உள்ளா ராயினு முளனே (அகம்-378), மிகுதிகண் டன்றோ விலனே (அகம்-379), னியறிந்தன்றோ விலனே (அகம்-384), அமளி தைவந் தனனே, அளியன் யானே (குறுந்-30), நீயலன் யானென (குறுந்-36), யான் இழந் தனனே (குறுந்-43), விடல்சூ ழிலன்யான் (குறுந்-300), யான்கண் டனனோ விலனே  (குறுந்-311), உளனே  (குறுந்-316), உரைத்தனன் யானாக (புறம்-136), அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறம்-201), கூறுவன் வாழி தோழி (நற்-233), உள்ளின னல்லனோ யானே (நற்-326), யான்தொடங் கினனாற் புரந்தரவே (ஐங்-428) என இவ்வாறு எட்டுத்தொகை நூல்களிலும் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்கப் பெற்றுளது.[1]

இவ்வாறே  தொல்காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகள் சில சங்க நூல்களிலும் திருக்குறளிலும் காணப்படுகின்றன. அல்லால் (குறள்-377), சூழாமல் (1024), செய்யாமல் (101, 343), அல்லனேல் (386), இன்றேல் (556), செய்வானேல் (655), வேபாக் கறிந்து (1128) எனத் திருக்குறளிலும், பொருளல்லாற் பொருளு முண்டோ (14), கூறாமற் குறித்ததன் மேற்செல்லும் (1), முற்றாமல் (19), தீராமல், தெருளாமல் (38) காணாமல் (39), கேளாமை (108), காணாமையுண்ட கடுங்கள்ளை (115), நில்லாமை நனிவௌவி (138) எனக் கலித்தொகையிலும் ஆல்ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியையுடைய வினையெச்சங்கள் பயில வழங்கப்பெற்றுள்ளன. இவை தொல்காப்பியத்திற் கூறப்படவில்லை. மாரைக்கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக் கிளவியொடு முடியுமென்ப என்ற சூத்திரத்தால் பலர்பாற் படர்க்கையில் வழங்கும் மாரீற்று முற்றுச்சொல் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியுமெனத் தொல்காப்பியர் விதித்துள்ளார். இவ்விதிக்கு மாறாக உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே (புறம்-362) என மாரீறு பெயர் கொண்டு முடிந்துள்ளது. நிலவன் மாரே புலவர், பாடன்மார் எமர் (புறம்-375) காணன்மார் எமர் (நற்-64) என எதிர்மறையாய் நின்று பெயர்கொண்டு முடிந்தமையும் இவண் கருதற்குரியதாம். அன்றியும் மார் என்னும் இவ்விகுதி தொல்காப்பியர் காலத்தில் வினை விகுதியாகவே வழங்கப்பெற்றுள்ளது. இவ்விகுதி தோழிமார் (அகம்-15) எனப் பெயர் மேல் விகுதியாக அகநானூற்றில் ஆளப்பெற்றுள்ளது. இவ்வழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இல்லை.

வியங்கோள் வினை, முன்னிலை தன்மையாகிய இரண்டிடங்களிலும் நிலைபெறாதென்பது தொல்காப்பிய விதி. இவ்விதிக்கு மாறான சொன்முடிபுகள் சில சங்கத்தொகை நூல்களில் வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் முன்னிலை யசையாகக் குறிக்கப்பட்ட மதியென்பது திருமுருகாற்றுப்படையில் நல்குமதி எனப் படர்க்கையில் வழங்கப்பெற்றுள்ளது. முன்னிலைக்குரியதெனச் சொல்லப்பட்ட மோ என்னும் அசை, புறநானூற்றில் சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென (புறம் – 381) எனத் தன்மைக்கண் ஆளப்பெற்றது.

வருக மாள வென்னுயிர் (அகன்-16), யாழநின் (அகம்- 39, 86), பாடித்தை (கலி.131), பலரே தெய்ய வெம்மறை யாதீமே (ஐங்-64),  நும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ (ஐங் -236), நிலீஇயரத்தை நீ நிலமிசை யானே  (புறம் -166), அஞ்சுவதோரும் அறனே (குறள்-366), காதல் நன்மரநீ மற்றிசினே (புறம் -272), பணியுமா மென்றும் பெருமை (குறள்-978), ஈங்காயினவால் என்றிசின் யானே (நச்சினார்க்கினியர் உரை மேற்கோள்), குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே (திருமுருகு-217) என இத்தொடர்களில் வழங்கியுள்ள மாள, யாழ, இத்தை, தெய்ய (தெய்யோ) அத்தை, ஓரும், இசின், ஆம், ஆல், தொறு என்பன தொல்காப்பியத்திற் சொல்லப்படாத அசை நிலைகளாம். இவை தொல்காப்பியனார்க்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றி வழக்கில் இடம்பெற்றனவாகும். இவற்றை மேற்கொண்டு வழங்கிய சங்கச் செய்யுட்கள் தொல்காப்பியத்திற்கு நெடுங்காலத்திற்குப் பின் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஒருவன், ஒருத்தி என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்குகின்றன. இவை முறையே ஒத்தன், ஒத்தி எனப் பிற்காலத்தில் திரிந்து வழங்கியுள்ளன. இஃதொத்தன் (கலி-103), இஃதொத்தி (கலி-143) என வழங்குதல் காண்க.

சகரமெய் அ, ஐ, ஔ என்னும் மூன்றுயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வாராது என்பது தொல்காப்பிய விதி. சகடம் (புறம்-102, அகம்-136), சடை (புறம்-1), சதுக்கம் (முருகு-25), சந்து (மலைபடு -392), சமம் (புறம்-14, குறள்-99), சமன் (குறள்-118), சலம் (மதுரைக்காஞ்சி -112,  குறள்-660), சவட்டி (பெரும்பாண்-217), சவட்டும் (பதிற்-84) எனச் சகர மெய் அகரத்துடன் முதலாகும் சொற்கள் சங்கச் செய்யுட்களில் பயின்று வழங்கியுள்ளன.

யகரமெய் ஆகார வுயிரோடல்லது ஏனைப் பதினோருயிர்களோடும் மொழிக்கு முதலாகாதெனத் தொல்காப்பியங் கூறும். இவ்வரையறைக்கு மாறாக யவனர் என்னும் சொல் சங்கச் செய்யுட்களிற் பெருக வழங்கியுளது.

ஞகர மெய் ஆ, ஏ, ஓ என்னும் மூன்றுயிரோடு மட்டுமே மொழிக்கு முதலாம் என்பது விதி. இதற்கு மாறாக ஞமலி (புறம்-74, அகம்-140, 388, பட்டினப்-140), ஞரல  (திருமுருகா-120, பதிற்-30), ஞமன்  (புறம்-6) என ஞகரமெய் அகரத்தொடு முதலாகும் சொற்களும் ஞிமிறு (புறமட-93, அகம்-59) என இகரத்தோடு முதலாகிய சொல்லும் சங்க நூல்களில் வழங்கப் பெற்றுள்ளன.

ஐகாரத்தின் பின் இயல்பாய் வரும் நகரத்துடன் ஞகரம் போலியாய் நிற்கும் மரபு பைஞ்ஞிலம் (31) என பதிற்றுப்பத்திலும் பைஞ்ஞிணம் என 177 –ஆம் புறப்பாடலிலும் காணப்படுகின்றது. பிற்காலத்திற்  பெருகி வழங்கும் இவ்வெழுத்துப் போலியைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இல்லை. நான்கு என்னும் சொல் 104-ஆம் அகப்பாடலில் நால்கு எனத் திரிந்து வழங்கியுள்ளது [நன்னால்கு  பூண்ட கடும்பரி நெடுந்தேர் (அகம்-104)]. நான்கு, நால்கு எனவருந் திரிபு தொல்காப்பியத்திற் சொல்லப்படவில்லை.

ஒன்று முதல் பத்து, நூறு , ஆயிரம் , நூறாயிரம் வரையுள்ள எண்களுக்குத் தொல்காப்பியர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நூறுநூறாயிரமாகிய  கோடியென்னும் எண்ணினைக் குறித்த புணர்ச்சி விதியைப்பற்றி இகரவீற்றுப் புணர்ச்சியில் குறிப்பிடுதல் முறையாகும். அங்ஙனமாகவும் தொல்காப்பியனார் இவ்வெண்ணினைப்பற்றி யாண்டும் குறிப்பிடாது போயினார். எனவே கோடியென்னும் எண் அவர் காலத்தில் தோன்றி வழங்கவில்லையெனத் தெரிகிறது. ஒன்றுபத்  தடுக்கிய கோடி கடையிரீஇய, பெருமைத் தாகநின் ஆயுள்தானே (புறம்-18) எனவும், கோடியாத்து நாடு பெரிது நந்தும் (புறம்-184) எனவும், கோடி தொகுத்தார்க்கும் (குறள்-377) எனவும், கருதுப கோடியுமல்ல பல (குறள்-337) எனவும் கோடி என்னும் எண் கடைச்சங்க காலத்திற் பயின்று வழங்கக் காண்கின்றோம். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் கோடி என்னும் இகரவீற்று எண்ணுப்பெயர் வழங்கியிருக்குமானால் ஏனைய எண்ணுப் பெயர்களுக்குப் புணர்ச்சி விதி கூறியது போன்று இதற்கும் விதி கூறியிருப்பர். தொல்காப்பியனார் இவ்வெண்ணுப் பெயரினைக் குறிப்பிடாமையால் அவர் காலத்துக்குப் பின்வந்த தமிழறிஞர்களாலேயே இவ்வெண்ணுப் பெயர் படைத்து வழங்கப்பெற்றதென்பது உய்த்துணரப்படும்.

சங்கச் செய்யுட்களில் அருகிக் காணப்படும் சமய விகற்பங்களைப் பற்றிய குறிப்புக்கள், தொல்காப்பியத்தில் அறவே காணப்படவில்லை. மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களுடன் வெற்றி விளைக்குங் கொற்றவையும், நிலப்பாகுபாடின்றி எல்லா நிலத்திற்கும் உரியதாகிய கடவுளும் தமிழர்களால் வழிபடப்பெற்ற தெய்வங்களாகத் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். கடைச்சங்க நாளில் காரியுண்டிக் கடவுள் எனவும், மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் எனவும், முக்கண்ணான் எனவும், எல்லாம்வல்ல இறைவனை உருவநிலையில் வைத்துப் போற்றும் வழிபாடு பெருகிக் காணப்படுகின்றது. திருமால் வழிபாட்டில் செங்கட்காரி (வாசுதேவன்), கருங்கண் வெள்ளை (சங்கருடணன்) பொன்கட் பச்சை (பிரத்தியும்நன்), பைங்கண்மால் (அநிருத்தன்) எனவரும் நால்வகை வியூகமும் பரிபாடலிற் சொல்லப்பட்டுள்ளன.

சிவன், பலதேவன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் ஞாலங் காக்கும் காலமுன்பின் தோலாநல்லிசை நால்வர் எனக் கடைச் சங்ககாலத் தமிழர் பரவிப் போற்றினர். இந்நாற்பெருந் தெய்வங்களுக்குரிய கோயில்கள் தமிழ்நாட்டுப் பேரூர்களில் அமைக்கப் பெற்றிருந்த இயல்பினை இளங்கோவடிகளும் சாத்தனாரும் தம் நூல்களில் விளக்கியுள்ளார்கள். பலதேவன், ஞாயிறு, காமன், சேயோன், சிவன் ஆகிய தெய்வங்களைத் தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் எனப் பெருங்கடுங்கோ பாராட்டுகின்றார். காமன் வழிபாடு கடைச்சங்க காலத்திற் சிறப்புற்று விளங்குகிறது. காமன் தொல்காப்பியத்திற் சொல்லப்படாத புதுத் தெய்வமாவான். சமண புத்த சமயங்களைப் பற்றிய குறிப்புக்கள் கடைச்சங்க நூல்களில் இடம்பெற்றுள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன் சமணர்களும் புத்தர்களும் தமிழ்நாட்டில் இடம்பெறவில்லை. எரிவலஞ் செய்தல் முதலிய ஆரிய நாகரிகத்தினை ஒரு சிலர் மேற்கொண்டொழுகினமை சங்கத்தொகை நூலில் விரித்துரைக்கப் பெறுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் வடவர் நாகரிகம் தமிழ் மக்களால் அறிந்து மதிக்கப்பட்டதேயன்றித் தமிழ் மக்களால் அது மேற்கொள்ளப்படவில்லை. எழுத்துஞ் சொல்லும் பொருளும் எனத் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் இலக்கணமெல்லாம் தமிழிலக்கணமே என நச்சினார்க்கினியர் கூறுதல் இவண் கருதத்தகுவதாகும்.

தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுப் பிற்றைநாளில் வழக்கொழிந்தனவும் சிலவுள. சுட்டு முதலாகிய இகர விறுதியும் எனத் தொடங்கும் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட அதோளி முதலிய சொற்கள், சங்கச் செய்யுட்களில் வழங்கப்பெறவில்லை. இரு திணைக்கும் பொதுவாய் வழங்கிய செய்ம்மன என்னும் வாய்பாட்டு வினைச்சொல் இப்பொழுது வழக்கரிது என இளம்பூரணர் கூறியுள்ளார். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுதியாகக் கூறப்பட்ட அகப்பொருள், நாடக வழக்கும் உலகியல் வழக்கும் விரவப் புலனெறி வழக்கஞ் செய்யுங்கால் கலியும், பரிபாடலும் ஆகிய இருவகைப பாவினாலும் பாடுதற்குச் சிறப்புரிமையுடையதெனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சங்கத் தொகை நூல்களில் அகப்பொருள் பற்றிய செய்யுட்கள் பெரும்பாலும் அகவல் நடையிலமைந்தனவாகவே காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்துக்குப்பின் அகப்பொருட் பாடல்களுக்கு அகவல் நடையும் சிறப்புரிமையுடையதாகக் கருதப்பட்டமை இதனாற் புலனாம்.

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால், ஆசிரியர் தொல்காப்பியனார் இயற்றிய இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்கச் செய்யுட்களுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்துக்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மையுடையதென்பது இனிது புலனாதல் காணலாம்.

[1] எதிர்காலம் பற்றி வரும் அல் விகுதியினையே பிற்காலத்தார் அன் ஈறாக வழங்குவர் என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். எனவே தொல்காப்பியனார் காலத்தில் அன் விகுதி தன்மைக்கண் வழங்கப்பெறவில்லை யென்பதும் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே அன்னீறு தன்மையொருமையில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் தெளிவாதல் காண்க.

க.வெள்ளைவாரணனார்