இப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை ஐந்திரத்தில் வல்லவராவார் எனக் குறித்துள்ளமையேயாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். பாணினீயம் கற்று வல்லவர் என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்1.

ஐந்திரம்

          இக்காரணத்தை நாம் ஊன்றி நோக்கினால் அது வலிமையுடையதாகாது என்பது விளங்கும். ஏனெனில் ஐந்திரம் பாணினீயத்திற்குப் பின் வழங்கவில்லை என்று ஒரு தலையாகத் துணியமுடியாது. மேலும், ஐந்திரம்2 ஒரு தனிப்பட்ட இலக்கணமாக எப்பொழுதாவது இருந்தது உண்டா என்பதும் ஐயப்பாட்டிற்கு இடனாயுள்ளதே. பாணினீயினுடைய இலக்கண முறை ஸமிஜ்ஞை முதலியவற்றால் நிறைந்து இயற்கையான முறைகளோடு பெரிதும் மாறுபட்டுள்ளது. இதற்கு மாறாக ஓர் எளிய, இயற்கையான – யாவருக்கும் விளங்கும்படியான – வகையில் இலக்கண அமைப்பு முறை ஒன்று உளதாயிருத்தல் வேண்டும். பிராதிசாக்கியத்தில் இந்த எளிய முறை காணப்படுகிறது. இம்முறையை நமது புராணங்களில் கூறப்படும் இந்திரன் தோற்றுவித்தான் என்று நம்பினர். இவன் இந்த எளிய முறையை அமைத்து இலக்கண நூல் ஒன்று செய்தான் என்றும் கற்பித்தனர். எளிதாயிருந்தபடியாலே இம்முறையைப் பலர் கையாண்டார்கள். தனியான ஓர் இலக்கண மதமாகவும் இது கொள்ளப்பட்டது. இந்த மதம்தான் ஐந்திரம் எனப் பெயர் பெறலாயிற்று. பாணினி ஆசிரியர், பதஞ்சலி ஆசிரியர், காசிகாவிருத்தி ஆசிரியர் இவர்களுள் ஒருவரேனும் இம்மதத்தை ஐந்திரம் என்ற பெயரால் அழைத்ததில்லை. வடமொழி இலக்கணங்களை ஆராய்ச்சி செய்த கீல்கார்ண் (Kiwelhorn), பெல்வெல்க்கர் (Belvalkar) என்ற இரு பேராசிரியரும், ஐந்திர மதத்தில் கூறப்பட்டுள்ள பொருள்கள் பாணினீயத்திற்கு முற்பட்டதாயினும், ஐந்திரமதமும் அதன் பெயரும் ஏற்பட்டமை அதற்குப் பிற்பட்ட காலத்தேதான் என்று கருதுகிறார்கள்3. ஸர்வவர்மன் சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றிய காதாந்த்ரம் ஐந்திர மதத்தைச் சார்ந்தவற்றுள் சிறந்தது என்பர். இந்த இலக்கணம் கௌமாரம் அல்லது காலாபம் என்றும் வழங்கப்பெறும்.

மேற்கூறியவற்றால் ஐந்திரம் என்னும் பெயர்வழக்கும் மதமும் பாணினீயத்துக்குப் பிற்பட்டனவே என்பது விளங்கும். தற்காலத்துள்ள ஒருவன் வில்லிபாரதத்தில் வல்லவன் என்று கூறப்படுவானாயின் அவன் பெருந்தேவனார் காலத்திற்கு முற்பட்ட காலத்தவன் என்பது அமைதியுடைத்தாகுமா? மேற்குறித்த தமிழறிஞர்களது கொள்கையும் இது போன்றது தான்.

பாணினீயம் முற்பட்டதாயின், அதனை விடுத்து ஐந்திரத்தைத் தொல்காப்பியர் கைக்கொண்டதற்குக் காரணம் என்னவென்று கேட்கலாம். காரணம் மிக வெளிப்படையாக உள்ளதே. பாணினி ஆசிரியர் குறியீடுகளையும் தாமாகப் படைத்துக் கொண்ட சொற்களையும் ஆண்டிருக்கிறார். இவை, பீஜகணிதத்தில் குறியீடுகள் போல, பாணினீய இலக்கணத்திற்கு உதவின. இவற்றைப் பயன்படுத்தத் தெளிவாகவும் மிகச் சுருக்கமாகவும் மொழி பற்றிய பீஜகணித நூலை இவர் இயற்றினார் என்று தான் நாம் சொல்ல வேண்டும். உதாரணமாக, நிலைமொழியீற்றில், இ, உ, ஜ, ஸ என்ற இவ்எழுத்துகள் குறிலாகவேனும் நெடிலாகவேனும் நின்று வருமொழி முதலில் உயிர்வருமாயின் நிலைமொழியீறு ய், வ், ர், ல் என முறையே திரியும். இவ்விதியை, இகோயணசி என்ற சூத்திரத்தால் பாணினி குறித்துள்ளார். இங்கே இக் என்பது இ, உ, ஜ, ஸ என்பவற்றையும் யண் என்பது ய், வ், ர், ல் என்பவற்றையும் அச்  என்பது உயிரெழுத்துக்களையும் குறிக்கும். இவர் இலக்கணத்தை உணர்ந்து கொள்வதில் ஞாபக சக்தி பெரிதும் வேண்டப்படும். ஒரு விதியின் பொருளை உணர வேண்டுமாயின், அவ்விதிக்கு முன்னருள்ள அனைத்து விதிகளையும் ஞாபகத்தில் வைத்தலோடு தாதுபாடத்தையும் கணபாடத்தையும் மனனம் பண்ணியிருத்தல் வேண்டும். தாதுபாடம் வினைப்பகுதிகளையெல்லாம் ஒருசேரத் தொகுத்துக் கூறும். கணபாடம் என்பது சொல் – தொகுதிகளின் இயல். இத்தொகுதி ஒவ்வொன்றிலும் முதலாவது வரும் சொல்லையே ஓர் இலக்கண விதியில் பாணினியாசிரியர் குறித்திருப்பர். அங்ஙனம் குறித்த அளவில், அச்சொல்லோடு தொடங்கும் அனைத்துச் சொற்களும் அவ்விதியினையே பின்பற்றும் என்பது ஆசிரியரது கருத்தாகும். இவ்வாறாக பிரத்தியாகாரம் முதலிய சுருக்கங்களினாலும், பல்வேறு குறியீடுகளினாலும், பிற குறிப்புக்களாலும் வடமொழி முழுவதையும், அதன் சிதைவு வடிவம் முதலிய அனைத்தையும் ஒரு சிறு நூலாகப் பாணினி ஆசிரியர் மிக்க திறமையோடு அமைத்திருக்கின்றார்4.

இவ்வகையாய் அமைந்த பாணினீயமுறை வடமொழியோடு யாதொரு தொடர்புமற்ற பிறிதொரு மொழியின் இலக்கணத்தை அமைப்பதற்குச் சிறிதும் பயன்படமாட்டாது என்பது தெளிவு. அன்றியும் வேறொரு காரணமும் உளது. தொல்காப்பியர் ஜைனர் என்பதற்குத் தக்க சான்றுகள் உள்ளன; ஆதலால் அவர் ஓர் புறச்சமயி ஆவர். தம்போன்ற புறச்சமயிகளால் கற்றுப் போற்றப்பட்ட ஓர் இலக்கண முறையையே அவர் பின்பற்றுதல் இயற்கை, ஐந்திரம் அவ்வகை இலக்கணமுறையுள் ஒன்று.

தற்காலத்துள்ள ஓர் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார்: சாந்திர வியாகரணம் முதலியன பாணினீயத்திற் கூறியுள்ள முறையையே பெரிதும் பின்பற்றின. எனினும், புதுமுறைகளும் தோன்றத் தொடங்கின. இவற்றின் விளைவாகக் காதாந்த்ரம் என்னும் பெயருடைய ஓர் இலக்கணத்தை ஸர்வ்வர்மன் இயற்றினார். அது அவர் காலத்தில், பெரிதும் பயன்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், மத்திய ஆசியா வரையிலும் அது வழக்கில் இருந்தது எனத் தெரிகிறது. தென்னிந்தியாவிலும் திராவிட மொழிகளின் இலக்கணங்களுக்கு அது முன் மாதிரியாகவும் பயன்பட்டது5.

முடிவாகப் பாணினியின் பேரிலக்கணத்தைத் தொல்காப்பியர் கையாண்டுள்ளார் என்பதையும் நாம் மறக்க முடியாது. யாஸ்கரது நிருக்தத்தில்,

சத்வாரி பதஜாதாநி நாமாக்யா தோசோபஸர்க்க நிபாதச்ச

எனச் சொற்களின் பாகுபாடு வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நாமம், ஆக்யாதம், நிபாதம் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பது இதன் கருத்து. ஆனால் பாணினீயத்தில் ஸீப் – திங் – அந்தம் பதம் (1, 4, 14) என்று வருகின்றது. இதனையே தொல்காப்பியர்,

சொல்லெனப் படுப பெயரே வினையென்று

ஆயிரெண் டென்ப அறிந்திசி னோரே     (தொல்.சொல்.158)

எனச் சூத்திரம் செய்தனர்.

இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்

அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப    (தொல்.சொல்.159)

என நிருத்தம் கூறியுள்ளதனையும் அவர் அடுத்தபடியாக உடன்பட்டனர். பாணினி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் சிக்ஷைங்யுங் கூடத் தொல்காப்பியருக்குப் பயன்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. சிக்ஷையில்,

அஷ்டௌ ஸ்தாநாநி வர்ணாநாம் உர: கண்ட சிரஸ்ததா:

ஜிஹ்வாமூலஞ்ச தந்தாஸ்ச நாசி கோஷ்டௌச தாலுச.

என வந்துள்ளது. இதனையே,

உந்தி முதலா முந்துவளித் தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற் றமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்துஞ் சொல்லும் காலை

பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல

திறப்படத் தெரியுங் காட்சி யான          (தொல்.எழுத்.83)

என்ற சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே தொல்காப்பியர் பாணினி முனிவர்க்கு முற்பட்டவர் என்ற கொள்கை சிறிதும் ஒப்புக் கொள்ளத்தக்கதன்று. பிற்பட்டவர் என்றே நாம் கொள்ளுதல் வேண்டும்.

பாணினியின் காலம்

இவ்வாறு சொல்லிய அளவில், தொல்காப்பியரது காலத்தை வரையறை செய்தவர்களாக மாட்டோம். பாணினியின் காலம் இன்னும் அறுதியிடப்படவில்லை. R.G. பண்டர்க்கர் கி.மு.8ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பர். கோல்ஸ்டக்கர் என்ற பேராசிரியர் தவிர, மற்றைய மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கி.மு. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டினராக அவரைக் கொண்டுள்ளார்கள். வடமொழியிலுள்ள பூர்வ இலக்கியங்களின் காலம் பெரும்பாலும் ஊகமாகவே உள்ளன. மாகாபாஷ்யத்தை இயற்றிய பதஞ்சலியின் காலம் ஒன்றே ஐயத்திற்கிடமின்றித் திட்டமாக அறியப்படுவது. வடமொழி இலக்கியத்தின் சரித்திரத்திற்கு அது ஒரு முக்கியமான, அறுதியான எல்லைக் கல்லாக உள்ளது. இப்பதஞ்சலி முனிவர் தம்முடைய மாகாபாஷ்யத்தை கி.மு. 150இல் இயற்றினார். இவருக்கும் தொல்காப்பியருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நாம் நோக்குதல் வேண்டும்.

பதஞ்சலி

தொல்காப்பியத்தில் ஒரு சூத்திரம் பதஞ்சலியின் கூற்றை மொழிபெயர்த்து வைத்திருப்பது போல் உள்ளது. அது வருமாறு:

அவைதாம்,

முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்

இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்

அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்

அந்நான்கு என்ப பொருள்நிலை மரபே            (தொல்.சொல்.419)

இங்கே தொகைச் சொற்களின் பொருள் – நிலை கூறப்படுகிறது. முன்மொழியிலே பொருள் சிறந்து நிற்றலும், பின் மொழியிலே பொருள் சிறந்து நிற்றலும், இரு மொழிகளிலும் பொருள் ஒருங்கே சிறந்து நிற்றலும் இரு மொழிகளிலும் பொருள் நில்லாது வேற்றுமொழியிலே பொருள் சிறந்து நிற்றலும் என இங்ஙனம் நான்கு வகை என்று சொல்லுவர். பொருள் நிற்கும் நிலையின் மரபு என்பது பொருள். இதனை,

இஹகஸ்சித ஸமாஸா: பூர்வ பதார்த்த ப்ரதாந:

கஸ்சித் உத்தர பதார்த்த ப்ரதாந:

கஸ்சித் அந்ய பதார்த்த ப்ரதாந:

கஸ்சித் உபய பதார்த்த ப்ரதாந:

என்ற பதஞ்சலியின் வாக்கியங்களோடு6 ஒப்பிட்டு ஒப்புமையை அறிந்து கொள்ளலாம். இரண்டும் பொருளில் சிறிதும் வேறுபடவில்லை என்பது தெளிவு. பாணினியாசிரியரும் காத்தியாயனரும் இவ்வாறு நான்கு கூறாகத் தொகைச் சொற்களைப் பகுத்துக் கூறவில்லை. பதஞ்சலி தாம் தமது மகாபாஷ்யத்தில் இப்பாகுபாட்டை முதன்முதலாக எடுத்துக் கூறுகிறார். ஆகவே இப்பெருநூலிலிருந்து தொல்காப்பியர் இப்பாகுபாட்டினை எடுத்தாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. தொல்காப்பியர் அந்நான்கு என்ப எனத் தமது சூத்திரத்தில் கூறுதலால், அவர் தாமே படைத்துக் கொண்டார் என்று கூறுதற்கும் இடமில்லை. மயிலைநாதர் உரையால் (நன்.369) அவிநயரும் இப்பொருள்படச் சூத்திரம் ஒன்று இயற்றியிருத்தல் வேண்டும் எனக் கருதலாம். அவிநயர் தொல்காப்பியரோடு ஒருசாலை மாணாக்கர் என இப்பொழுது கூறி வருகின்றனர். இதற்கு ஆதாரம் அறியக்கூடவில்லை. பிற்பட்டவர் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன.

பதஞசலி முனிவர்க்குத் தொல்காப்பியர் கடப்பட்டுள்ளார் என்பது வேறொரு சான்றாலும் அறியக் கிடக்கிறது. தொல்காப்பியர் இலக்கணம் என்ற சொல்லை வியாகரணம் என்ற பொருளில் வழங்கி இருக்கின்றனர்.

இலக்கண மருங்கில் சொல்லா றல்ல

எனச் சொல்லதிகாரம் 27ஆம் சூத்திரத்தில் வருகிறது. இலக்கணம் என்பது லக்ஷண என்ற வடமொழியின் பிராகிருதத் திரிபு. லக்ஷண என்பதை வியாகரணம் என்ற பொருளில் முதன்முதலாக வழங்கியவர் பதஞ்சலி முனிவரேயாவர். இவருக்கு முற்பட்டு வார்த்திகத்தை இயற்றிய காத்தியாயனர் இப்பொருளை ஒருவாறு குறிப்பித்துள்ளார்.

லக்ஷய லக்ஷணே சூத்ரம் லக்ஷணம்

எனப் பதஞ்சலி முனிவர் எழுதினார். வேறோரிடத்தும் லக்ஷணம் என்பதனை இப்பொருள்பட இவர் எழுதியுள்ளார்.

ந லக்ஷண பதகார அனுவர்த்யா: பதகாரை

நாம லக்ஷணம் அநுவர்யம்.

எனக் கீல் ஹார்ண் பதிப்பில் இரண்டாவது ஸம்புடத்தில் 85ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது7. இதுமட்டும் அன்று. லக்ஷணம் என்பது வடமொழியில் குறி என்றும் பொருள்படும். இக் குறி என்ற சொல்லையே ஆசிரியர் தொல்காப்பியர் இலக்கணம் என்ற பொருளில் வழங்கியுள்ளார்.

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்

கொள்ளும் என்ப குறியறிந் தோரே        (தொல்.பொருள்.50)

என்பது பொருளதிகாரச் சூத்திரம். இவ்வாறாக, தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர்க்குக் கடப்பட்டுள்ளார் என்பது நன்கு தெளிவாகிறது. எனவே, அவர் கி.மு. 150க்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறுதியான முடிபாகும்.

தொல்காப்பியர் கி.மு.150-க்குப் பிற்பட்டவரென்று மேலே துணிந்தோம். இவர் காலத்தை இன்னுந் திட்டமாக அறுதியிடுவதற்கு வேறு சான்றுகள் உளவோ என்று நோக்குவோம்.

பூப்பின் புறப்பா டீரறு நாளும்

நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்

என்ற தொல்காப்பியர் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தில் (III, 46, 47) காணப்படுகிறது. இந்த ஸ்மிருயின் காலத்திற்குப் பின் – எல்லை கி.பி.200 என்பர் ஆசிரியர் காணே (P.V.Kane). எனவே தொல்காப்பியர் கி.பி.200க்குப் பிற்பட்டவர்.

கௌடில்யர்

தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் இறுதியில் முப்பத்திரண்டு வகை உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உத்திகள் கௌடில்யரது அர்த்தசாஸ்திரம், சுசுருதம் முதலான நூல்களிலும் உள்ளன. கௌடில்யரது காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதன்று என்பர் ஆசிரியர் உவிண்டர் நீட்ஸ்8. எனவே தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளைப் பற்றிக் கூறியுள்ளமை நன்கறியப்பட்டதே.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப               (மெய்ப்பாட்.3)

என்பது சூத்திரம் . இங்கே என்ப என்ற சொல் கவனத்தற்குரியது. தொல்காப்பியர் தாமே வகுத்துக் கொண்ட மெய்ப்பாடுகள் அல்ல இவை. பிறர் கூறியனவற்றையே இவர் எடுத்துச் சொல்கிறார். சூத்திரத்தில் வரும் என்ப எனும் சொல் இதனை நன்கு புலப்படுத்துகிறது. இப்பிறர் யார்? இளம்பூரணர், வியப்பெனினும் அற்புதம் எனினும் ஒக்கும்; காமம் எனினும் ஒக்கும்; அவலம் எனினும் கருணை எனினும் ஒக்கும்; உருத்திரம் எனினும் வெகுளி எனினும் ஒக்கும் என்று எழுதினர். பேராசிரியரும் இங்ஙனமே எட்டு மெய்ப்பாடுகளுக்கும் உரிய வடமொழிப் பெயர்களைக் குறித்தனர். இவ்வாறு வடமொழிப் பெயர்களைத் தருதலினால் இவ்வடமொழிப் பெயர்களே பெருவழக்கென்பதும் இக்கருத்துகள் வடமொழியிலுள்ளனவே என்பதும் ஊகிக்கத் தக்கதாகும். ஆகவே முன்கூறிய பிறர் ஒரு வடமொழியாசிரியர் என்பது பெறப்படும். வடமொழியில் இப்பொருள்களைக் குறித்து முதன்முதல் நூல் இயற்றியவர் பரத முனிவர்.

ச்ருங்கார ஹாஸ்ய கருணா ரௌத்ர வீர பாயநகா:

பீபத்ஸாத்புத ஸம்ஸ்ஞௌ சேத்ய நாட்யேரஸா: ஸ்ம்ருதா: (VI – 15)

எனத் தமது நாட்டிய சாஸ்திரத்தில் கூறினர். தொல்காப்பியர் இவரது நூலினையே பின்பற்றியுள்ளார் என்பது வெளிப்படை. இம்முனிவருக்குப் பின்வந்த வடமொழி ஆசிரியர்களுள் சிலர், சுவைகள் ஒன்பதென்றும், வேறு சிலர் ஒன்பதுக்கும் மேலாக உள்ளன என்றும், இன்னும் சிலர் சுவைகளை வரையறைப்படுத்தல் இயலாது என்றும் கொண்டனர். முனிவர் மட்டுமே சுவை எட்டு எனக் கொண்டுள்ளார்; இவரது மதத்தினையே தொல்காப்பியர் மேற்கொண்டனர்.

பரத முனிவரின் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டென்பர்9. ஆகவே தொல்காப்பியரின் காலம் நான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகும். தலைவனைக் கண்டு பிரிந்த தலைவிக்குப் பத்து அவத்தைகள் உளவெனத் தொல்காப்பியர் கூறுவர். இது,

வேட்கை யொருதலை யுள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப (களவியல். 9)

என்ற சூத்திரத்தாலும் அதன் உரையாலும் விளங்கும். மொழிப என்று சூத்திரத்தில் வருவதனால் இவ்அவத்தைகள் தொல்காப்பியர் தாமே படைத்துக் கொண்டன அல்ல என்பது தெளிவு. இவற்றை தசாவஸ்தை என்பர் வடநூலார். இந்த அவத்தைகள் வாத்ஸாயனாரது காமசூத்திரத்தில் ஐந்தாம் அதிகரணத்தில், முதல் அத்தியாயத்தில் காணப்படுகின்றன. இக்காமசூத்திரமானது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்பது வடமொழியாராய்ச்சியாளர்10 கருத்து. எனவே, தொல்காப்பியர் காலமாக நாம் மேலே கண்ட முடிவு வலியுறுதல் காணலாம்.

வர்ணனைக்குரிய மரபுகளில் ஒன்று வண்டே இழையே (களவியல் – 3) என்ற சூத்திரத்தில் காணப்படுகின்றது. இம்மரபு சங்கச் செய்யுட்களில் காணப்பெறவில்லை. தொல்காப்பியம் இம்மரபினைக் கூறுவதால், அச்செய்யுட்களுக்கு இவ் இலக்கணம் பிற்பட்டதாகும்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை             (களவு.45)

என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் ஓரை என்ற சொல் வந்துள்ளது. இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வடமொழியிற் புகுந்ததெனறும், இதனை வழங்கிய தொல்காப்பியம் 4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்றும் ஆசிரியர் பெரிடேல் கீத் கூறியுள்ளார். இங்ஙனமாக எவ்வகையால் நோக்கினும், ஆசிரியர் தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதலே பொருந்துமெனத் தோன்றுகிறது.

குறிப்புகள்

  1. Sreenivasa Iyengar, Tamil Studies, P.17.
  2. பூஜ்யபாதர் இயற்றிய ஜைனேந்த்ர வியாகரணத்தை ஐந்திரம் என்று சிலர் கூறுவர். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
  3. Systems of Sanskrit Grammar, P.11
  4. History of Civilization: Ancient India and Indian Civilization, P.247.
  5. History of Civilization: Ancient India and Indian Civilization, P.248.
  6. Kielhorn i. pp.379 – 380, 382, 392.
  7. C. Chakravarthi : Linguistic Speculations of the Hindus, P.409.
  8. Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.523.
  9. R. Bhandarker: Indian Antiquary Vol.41 (1912), P.158. Jacobi : Bhavasatte of Dhanavala, P.84. Probably 3rd Century A.D.
  10. Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.540.

.வையாபுரிப்பிள்ளை

        இக்கட்டுரை ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில் உள்ள “தொல்காப்பியர்” என்னும் கட்டுரையின் ஒரு பகுதியாகும். இது பா.இளமாறன் பதிப்பித்த தொல்காப்பியம் பன்முக வாசிப்பு (திசம்பர் 2008) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டு ஆய்வுலக வாசகர் பார்வைக்குத் தரப்படுகின்றது. அப்பதிப்பாளருக்கு இனம் நன்றி நவில்கின்றது.

இதன் தொடர்ச்சியாக இனி, ஒவ்வொரு இதழிலும் தொல்காப்பியர் காலம் குறித்த பதிவுகள் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.