இலக்கியமும் இலக்கணமும் முழுதும் கற்றாய்;

            எல்லையிலாப் பெரும்புலமை இனிதே பெற்றாய்;

கலங்காமல் மயங்காமல் ஆய்வின் மூலம்

கவின்தமிழ்க்கே மணிமுடிகள் சூட்ட லானாய்;

நலம்சேர்த்தாய்; தமிழ்க்காதல் வள்ளு வத்தை

நற்றமிழ்த்தாய் கண்ணிரண்டாய் நல்க லானாய்!

பலருக்கும் வாழ்வளித்தாய்; பண்பால் அன்பால்

பயின்றோரின் உள்ளமெலாம் மகிழச் செய்தாய்!

சங்கநெறிச் சால்புகளைச் சாற்றி வந்தாய்;

சலியாத உழைப்பாலே பனுவல் தந்தாய்;

மங்காத மாத்தமிழின் மேன்மைக் காக

மாணிக்கக் குறள்தந்த மாணிக் கம்நீ!

வெங்கொடுமை தமிழுக்கே இழைத்தோர்வீழ

வீறார்ந்த புதுவிளக்கம் அளிக்க லானாய்;

எங்கும்வாழ் தமிழினத்தார்எழுச்சி கொள்ள

இனியபல கருத்துவிதை ஊன்றி வந்தாய்!

தமிழாய்வில் தனிக்கவனம் செலுத்தி வந்தாய்

தக்கோரை உருவாக்கிப் பெருமை கொண்டாய்!

‘தமிழ்த்தாத்தா’ என்றழைக்கும் சாமி நாதர்

தனிச்சிறப்பை உளமகிழப் பாடி நின்றாய்;

தமிழ்க்காதல் எனும்தலைப்பில் முனைவர்ஆய்வைத்

தகவுறவே ஆங்கிலத்தில் அளித்துப் பெற்றாய்!

தமிழ்நலமும் தமிழ்வளமும் சிறக்க வாழ்ந்தாய்;

தாம்பிறந்த சிவபுரிக்கே புகழைச் சேர்த்தாய்!

சொல்லாய்வுச் சுடரானாய்; ‘ஈனில்’ என்றாய்

சுவையாக உரையாற்றும் கலையில் தேர்ந்தாய்!

தில்லையிலும் மதுரையிலும் பணியை ஆற்றித்

தேமதுரத் தமிழ்காத்தாய்; தமிழி னத்தார்

தொல்மரபை, பெருமையினைத் துலங்கச் செய்தாய்!

துணைவேந்தர்பதவிக்கே பெருமை சேர்த்தாய் ;

நல்லியல்பால் இளையோரை வழிந டத்தி

நற்றமிழின் ஆர்வத்தைத் தூண்டி வந்தாய்!

அழகப்பர்கல்லூரி மேன்மை எய்த

ஆளுமையால் தமிழ்த்துறையைச் சிறக்கச் செய்தாய்!

அழகப்பர்அளவற்ற கொடையின் மாண்பை

அழகொளிரும் பாக்களிலே நிலைக்கச் செய்தாய்!

குழல்யாழும் தோற்கின்ற வண்ணம் காரைக்

குடியினிலே கம்பர்சீர்பரவச் செய்தாய்;

முழக்கமிட்டாய் அரிமாவாய்! அறிஞர்போற்றும்

மூதறிஞர்வ.சுப.மா என்றும் வாழ்வாய்!.

முனைவர் கடவூர் மணிமாறன்