நீலகேசிநூல் வரலாறு

நீலகேசி நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும். பௌத்த சமயக் காப்பியமாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம். இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.  இது ஒரு சமயக்கருத்து நூல். யாப்பருங்கல விருத்தியுரை இதனை நீலம் எனச் சுருக்கிக் கூறுகின்றது. சமயதிவாகர வாமன முனிவர் எழுதிய சமயதிவாகரவிருத்தி எனும் சிறந்த உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது.  இந்நூல் 10 சருக்கங்களையும் 895 செய்யுட்களையும் கொண்டுள்ளது. குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலையுடையவள் என்று பொருள்படுவதைப் போல நீலகேசி என்பது கருத்த கூந்தலையுடையவள் என்று பொருள்படும். குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதற்கே நீலகேசிக் காப்பியம் எழுந்தது என்பதை உறுதி செய்யும் விதமாக இதில் குண்டலகேசி வாதச் சருக்கம் என்ற பகுதி காணப்படுகிறது.

நீலகேசி கதைச்சுருக்கம்

நீலகேசி கதை வேறு எந்த நூலிலும் காணப்படாதது. நீலகேசி ஆசிரியர் ஒருநாள் தன் கனவில் கண்ட கதையை அப்படியே நூலாக்கியதாகக் கூறப்படுகின்றது. பாஞ்சால நாட்டில் புண்டவர்த்தனம் எனும் நகரருகே உள்ள சுடுகாட்டில் இடப்படும் உயிர்க்கொலையை முனிச்சந்திரா் எனும் சமண முனிவர் தம் தவ வலிமையால் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சுடுகாட்டுக்காளி, பழையனூர் நீலகேசி எனும் பேயரசியை முனிவரின் தவத்தைக் கலைக்க ஏவியது. ஆனால் முயற்சியில் தோற்ற நீலகேசி முனிவரின் மாணவியாகி, சமண சமயக் கருத்துக்களைத் தெளிவாக உணர்ந்து தடுக்க வாதத்திறமையும் கைவரப் பெற்றவளாகிறாள்.  பிற சமயவாதிகளோடு வாதிட்டுச் சமண சமயத்தின் பெருமையை நிலைநாட்டுகிறாள். பௌத்த சமயத்தைச் சார்ந்த குண்டலகேசியுடனும் வாதிட்டு வென்று சமண சமயத் தலைவியான வரலாறே நீலகேசிக் காப்பியம் கூறும் கதை.

நீலகேசியில் அரவாணிகள் சித்திரிப்பு

சமணர்களின் தமிழ்த்தொண்டு மிகவும் போற்றத்தக்கதாகும்.  சமணர்கள் இயற்றியுள்ள இலக்கண, இலக்கியங்கள் அனைத்தும் சமணக் கொள்கையைப் பின்பற்றி எழுதியுள்ளமையைக் காணமுடிகிறது. ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களையும், கடந்து ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் இடைநிலையில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்களின் வேதனைகளையும் கூறுவதாக நீலகேசி என்னும் காப்பியம் அமைகிறது. இவர்களுள் ஒரு பிரிவினரையே தற்போது அரவாணிகள் என அழைக்கின்றார்கள். அரசு “மூன்றாம் பாலினம்”, “மாற்றுப் பாலினம்” (TRANS GENDER) எனக் குறிப்பிடுகின்றது. இத்தகைய இயல்பிலி மனிதர்களை நீலகேசி அலி, பேடி என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் காலத்திலும் இவ்வியல்பிலி மாந்தர் வாழ்ந்துள்ளமையைத் தொல்காப்பியர் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், அலி, பேடி, பேடு என்பன போன்ற சொற்களை அவர் பயன்படுத்தவில்லை என்பதும்  தொல்காப்பிய உரையாசிரியர்கள் இச்சொற்களைப் பயன்படுத்தியே இக்கருத்தியலை விளக்கிச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. தொல்காப்பியத்தில் இடம்பெறும்

“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்”

எனும் சொல்லதிகாரம் – கிளவியாக்க நூற்பாவில் (4) சுட்டப்பெற்றுள்ள ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவிஎன்னும் தொடர் பேடியைக் குறிப்பதாகவே உரையாசிரியர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

அலி பற்றிய செய்தி

தமிழ் இலக்கியத்தில் சைவமும், வைணவமும் தத்தம் முழுமுதற் கடவுளை ஆணாய், பெண்ணாய், அலியாய்க் குறிப்பிடுகின்றன.  ஆனால் எந்த அடியவரும் இறைவனைப் பேடியாய்க் குறிப்பிடவில்லை. பேடி என்ற சொல்லை வீரமற்றவன், கோழை, பயனற்றவன் என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளனர்.

பேடி பற்றிய செய்தி

எதற்கும் பயனற்ற, கோழை, வீரமில்லாத நபர்களைச் சித்திரிக்கவே பேடி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலை தான் நீலகேசியிலும் பிரதிபலிக்கிறது. இருந்தாலும் அவர்களின் மனவேதனையை, உணர்வுகளைப் புரிந்து முதன்முதலில் இலக்கியமாகப் பதிவு செய்த காப்பியமாக இலக்கிய நூலாகவும் நீலகேசி திகழ்கிறது.

நீலகேசியில் அலி, பேடி பற்றிய செய்தி

நீலகேசியில் மூன்று இடங்களில் அலி என்ற சொல்லும் இரண்டு இடங்களில் பேடி என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. பேடிகளின் மனவேதனையையும் அவர்கள் படும் துன்பங்களையும் பேசிய முதல் நூல் நீலகேசி என்று கூறலாம்.  இந்தக் காப்பியத்திற்கும் முன் தோன்றிய எந்த இலக்கியத்திலும் பேடியின் வாழ்வியல் வேதனையைப் பற்றியோ, அவர்களைப் பற்றிக் கவலை கொண்டதாகவோ எங்குமே பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையைக் கடந்து அவர்களின் மனவேதனைகளையும், உணர்வுகளையும், சமணர்கள் நீலகேசியில் பதித்து இருக்கிறார்கள்.  இதன்மூலம் சமண சமயக் கொள்கையாகிய பிற உயிருக்குத் தீங்கு செய்யக்கூடாது, திருடக்கூடாது, துறவு, அவாவுறுத்தல், நன்மை, தீமை, இன்பம், துன்பம், உயர்வுதாழ்வு இன்றி அனைவரையும் சமமாக நோக்கும் தன்மை என்ற கொள்கை அடிப்படையில் பேடிகளையும் அவர்களின் வேதனைகளையும் கூறுவனவாகப் பின்வரும் செய்யுள் அடிகள் அமைகின்றன.

“பேடி வேதனை பெரிது தோடி யூரு மாதலாற்

சேடி யாடு வன்மையிற் கூடி யாவ தில்லையே”  (தருமவுரைச் சருக்கம் – 96)

சமூகத்தில் பேடிகளை வேடிக்கை மனிதர்களாகவும் கேலிப் பொருளாகவும் பார்த்தார்களே தவிர அவர்களின் மனவேதனையைப் புரிந்து கொள்வோர் யாரேனும் இல்லை.  பேடிகள் ஆணாகப் பிறந்து உணர்வால் பெண்ணாகவும் பெண்களுக்கான உடைகளை அணிந்து கொள்வதுமாகிய செயல்கள் மிகுந்த வேதனையானது என்றும், இத்தகைய பேடிகள் படும் மனவேதனையைப் பேடி வேதனை எனவும் பதிவு செய்கிறது.

இயற்கையில் தோன்றிய ஆணும், பெண்ணும் இணைந்து உருவாவது குழந்தைப் பேறு. ஆனால் ஆணாய்ப் பிறந்து உணர்வால் பெண்ணாக இருப்பவர்க்குக் குழந்தை பிறக்காது என்பதைத் தெளிவுபடக் கூறியுள்ளது நீலகேசி.

“கூடியுமாக குணத்தின நீயவட் பாடியுரைத்த உயிரும் பகுதியும்

பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை

நாடியுங் காணென்று நண்ணுத நக்கான்”  (சாங்கியவாதச் சருக்கம் – 764)

பேடிகள் இணைந்து குழந்தை பெற முடியாது. இவ்வேதனை கொடுமையிலும் கொடுமையானது. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் இணைகிறபோதுதான் இத்தகைய பேடிகளும் பிறக்கிறார்கள். இது இயற்கையில் ஏற்படும் தவறு என்பதைச் சமூகம் மறந்து விடுகிறது. அரவாணிகளுக்கு அரவாணிகளே ஆதரவாக உள்ளனர். அரவாணிகளை அரவாணிகளே தத்தெடுத்து வளர்க்கும் முறை பழங்காலத்திலும் இருக்கிறது. என்பதை நீலகேசிக் காப்பியத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

நீலகேசியில் அலி பற்றிய செய்தி

நீலகேசியில் அலி என்ற சொல்லும் இயற்கையில் பிறப்பால் ஏற்படும் தவறு என்பதை,

“கீழா அலிகண் முழச்செவி கிண்ணர்க ளெண்ணிகந்த

ஏழாம் பிறப்பு முவ்வாதமல் லாருக  வெப்பினரே”        (தருமவுரைச் சருக்கம் – 76)

என்ற பாடலடிகள் அவர்களின் நிலை பற்றிச் சித்திரிக்கின்றன. நீலகேசியில் புத்தவாதச் சருக்கம் 588வது பாடலிலும் அலிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

“ஆரம்பிச்சி அலி விலங்கு அவ்வுருச் சீரிற்கு

ஒத்தாள் கணிகை தெருண்டாள் பெண்”   (தருமவுரைச் சருக்கம் -79)

என்ற பாடலில் பாலியல் உறவு கொள்வதற்கான பெண்களாக அலிப்  பிறப்பையும் நீலகேசி குறிக்கின்றது. அலிகள் பெண் தன்மை நிறைந்தவர்கள் என்பதையும் குறிப்பாகச் சுட்டுகின்றது.

“வலிசெய்து பீசத்தின் மாண்பு மழிந்திட்ட

அலிசெய்து விட்டே  னமையும் மதன்மேற்”      (புத்தவாதச் சருக்கம் – 598)

என்ற பாடல் அடிகள் அலியின் உணர்வு, மனவேதனைகளைப் பற்றிப் பேசுகின்றன. அலிகளின் அவலநிலையை இவ்வளவு தெளிவாக வேறு எந்தவொரு இலக்கியமும் கூறவில்லை எனலாம்.

நிறைவுரை

தற்காலத்தில் அலி, பேடிகளைச் (அரவாணிகளை) சமூகத்தில் நல்ல நிலைக்குக் கொண்டுவர அரசும், சமூக ஆர்வலா்களும் போராடி வருகின்றனா்.  ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நீலகேசி அரவாணிகளின் உணர்வுகளை, வேதனைகளை உணர்ந்து கூறியுள்ளது.  இதன்மூலம் எல்லா உயிரினங்களையும் சமமாகப் போற்றும் சமணக் கொள்கையின் உயரிய சிந்தனையின் வெளிப்பாட்டில் உருவானதே நீலகேசி காப்பியம் என்பதைத் தெளிவாக அறியலாம்.

துணை நின்றவை

  1. நீலகேசி,   அ. சக்கரவர்த்தி நயினார் பதிப்பு, கழகப் பதிப்பு. இரண்டாம் பதிப்பு – 2007
  1. இந்தியத் தத்துவ ஞானம், கி. லஷ்மணன், பழனியப்பா பிரசுரம், முதற்பதிப்பு – 2005
  1. சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி  கழகப்  பதிப்பு. முதற்பதிப்பு – 2008
  1. சமணம் (ஜைனம்) ஆர். பார்த்தசாரதி முதற்பதிப்பு – அக்டோபர் 2009 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,  அம்பத்தூர், சென்னை – 600098.

இரா.சங்கீதா

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத்துறை

பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 017.