தகவலைப் பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்லப் பயன்படும் கருவியே ஊடகமாகும்.  ‘ஊடகம்’ என்ற சொல்லும், ஊடகங்களும் தோன்றும் முன்னே தகவல் பரிமாற்றப் பணியினை நாட்டுப்புறக் கலைகள் செய்துவந்தன என்றால் அது மிகையாகாது.

சமிக்ஞைகளும் சப்தங்களும் மெருகூட்டப்பட்டு, செம்மையாக்கப்பட்டு, நாட்டுப்புறப் பாடலாகவும், கதைகூறல்களாகவும், கதைப்பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன.  இதன்வழி தன் எண்ணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.  பிற்காலத்தில் இதனை நாட்டுப்புற ஊடகங்கள் என்றும் அழைத்து வந்தனர்.  இவையே நவீன ஒலி, ஒளி ஊடகங்களின் தோற்றுவாய் எனலாம்.

இவ்வாறாக ஊடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நாட்டுப்புறக் கலைவடிவில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் ஊடகங்களில் பங்கு பெறும் விதம் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நாட்டுப்புறவியலும் நாட்டுப்புறப் பாடல்களும்

கிராமப்புற மக்களால் படைக்கப்பட்ட கலை வடிவமே, கலை இலக்கியமே நாட்டுப்புறவியல் எனப்படும். இதனை ‘FOLK LORE’ என்றழைப்பர். ‘A NEW DICTIONARY’ இதற்குப் பொருள் கூறுகிறது.  அதாவது, “மரபுவழிப்பட்ட நம்பிக்கைகளையும், புராணங்களையும் பழக்க வழக்கங்களையும், பொதுமக்களிடமிருந்து அறிந்து கொள்வதாகும். அத்துடன் பண்டைக்காலப் பழக்க வழக்கங்களையும், பொதுமக்களின் இலக்கியங்களையும், கற்பதாகும்1 என்பதே அதன் தமிழாக்கம். இதோடு மட்டுமல்லாது, கிராம மக்களின் கவித்திறத்தையும், கற்பனை வளத்தையும், காதல் உணர்வினையும் நாட்டுப்புறவியலில் காணலாம்.

நாட்டுப்புறவியலிலிருந்து நாட்டுப்புறப்பாடல்கள் பிரிக்க முடியாத பிணைந்த நிலையை அடைந்துள்ளன. ஏனெனில் நாட்டுப்புற இயலின் சாராம்சம் அனைத்தும் நாட்டுப்புறப்பாடலில் அடங்கியுள்ளது கண்கூடு. மக்களின் மனப்பண்பைத் தெரிந்து கொள்ள, பழக்க வழக்கங்களைத் தொகுத்தறிய நாகரீகச் சார்புகளை ஆய்ந்தறிய உள்ளத்து உணர்ச்சிகளின் உருவத்தைப் படம் பிடிக்க நாட்டுப்புறப் பாடல்கள் மிகச் சிறந்த துணை புரிவன2 என்கிறார் தமிழண்ணல் அவர்கள்.

நாட்டுப்புறப்பாடலை மக்கள் தங்கள் வாழ்வோடு இணைத்துத் தாலாட்டு, விளையாட்டு, திருமணம், ஒப்பாரி போன்ற நேரங்களில் பாடுகின்றனர்.

நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றம்

மனிதன் என்று தோன்றினான்? மொழி எப்படித் தோன்றியது? யாரால் படைக்கப்பட்டது? என்ற வினாவிற்கு விடைகாண முயலுவோமானால் அது சரிவர விடைகாண முடியாத ஒன்றாகிவிடும். அதுபோலவே நாட்டுப்புறப்பாடல் எப்போது தோன்றியது? யாரால் தோற்றிவிக்கப்பட்டது என்பது அறிய முடியாத ஒன்றாகும். நம் முன்னோருக்கும் முன்னோர் வழிவழியாகப் பாடப்பட்டது எனலாம்.

சிறிது சிந்தித்தால் இசை தோன்றியபோதே நாட்டுப்புறப் பாடலும் தோன்றிவிட்டது எனலாம். மொழி எழுத்துவடிவம் பெறுவதற்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். எழுத்து வடிவம் தோன்றியிருந்தாலும் அதை அறியாத, அதாவது எழுத்தறிவு இல்லாத கிராம மக்களிடையே தோன்றியிருக்க வேண்டும். எனவே தான் நாட்டுப்புறப் பாடல்கள் காகிதத்திலோ ஓலையிலோ எழுதப்படவில்லை.  வாய்மொழியாகவே தலைமுறை தலைமுறையாக இன்று வரை பாடப்பட்டு வருகின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள் விளக்கம்:

     நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல் நாட்டுப்புறப்பாடல் எனப்படும். இதனையே,

படிப்பு இல்லாத கிராமவாசிகள், வயலில் உழுகிறவர்கள், நாற்று நடுகிறவர்கள், வாய்க்கால் வெட்டுகிறவர்கள், கிணறு வெட்டுகிறவர்கள், தண்ணீர் இறைக்கிறவர்கள், மீன் பிடிப்பவர்கள், ஓடம் விடுகிறவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் முதலிய மக்கள் பாடுகின்ற பாட்டுதான் நாட்டுப்பாடல்3 என்கிறார் சதாசிவ ஐயர். மேலும், மனித சமுதாயத்தின் தொடக்க காலம் தொட்டு மக்களின் உணர்ச்சிப் பெருக்காகக் கொந்தளித்தோடும் நதிப்பிரவாகமே நாட்டுப்பாடல்4 என்று அன்னகாமு அவர்களும் நாட்டுப்புறப்பாடலுக்கு விளக்கம் தருகின்றார்.

நாட்டுப்புறப் பாடல்கள்  நாட்டின் பல்வேறுபட்ட சூழலிலும், குழந்தை முதல் பெரியவர் வரை, வயது வேறுபாடு இல்லாது அனைவராலும் பாடப்படுவன. இவற்றைத் தனக்குரியதுதான் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஏனெனில் இவை ஏட்டில் எழுதாக் கவிதைகள், வாய்மொழிப் பாடல்கள். இவை மனிதனின் கற்பனையில் என்னவெல்லாம் தலைகாட்டுகிறதோ அவற்றையெல்லாம் தனது பாட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்துவிடும். அக்கற்பனையும் தன்னால் பயன்படுத்தப்பட்டதாகவும் தான் கண்டதாகவுமே பெரும்பாலும் இருக்கும். புதுவரவுப் பொருட்களும் பாடல்களில் இடம்பெறுவதுண்டு.

கலைக்களஞ்சியமோ நாட்டுப்புறப்பாடல்கள் தாமாக மலர்ந்து மணம் வீசும் காட்டு மலருக்கு ஒப்பானவை. செயற்கை அரண் இன்றி பெருகித் தழைத்தவை, இயற்கையோடு இயந்து வாழ்க்கை நடத்தும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் தன்மை வாய்ந்தவை. நாட்டுப்புறத்து மக்களினாசை, நம்பிக்கை, கனவு, காதல் ஆகிய எல்லாவற்றையும் அவை பொன்னொளி வீச போற்றுகின்றன5 என விளக்கம் தருகிறது.

வகைகளும் விளக்கங்களும்

நாட்டுப்புறப் பாடல்கள் இவைதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இவை அளவற்றன. எனினும் இதனைப் பிறப்பு முதல் இறப்பு வரை என்ற வரையறையை அளவாகக் கொண்டு

 1. தாலாட்டுப் பாடல்கள்
 2. குழந்தைப் பாடல்கள்
 3. காதல் பாடல்கள்
 4. தொழிற்பாடல்கள்
 5. கொண்டாட்டப் பாடல்கள்
 6. வழிபாட்டுப் பாடல்கள்
 7. ஒப்பாரிப் பாடல்கள்
 8. பன்மலர்ப் பாடல்கள்

என்று எண்வகையாகப் பிரிக்கின்றார் சு.சக்திவேல்6 அவர்கள்.

தாலாட்டுப் பாடல்கள்  

தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு தாலாட்டு7. தாலாட்டுப் பாடல்கள் தாயின் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர்வதாகும். நடை அழகில் ஜெயங்கொண்டாரையும் இனிமையில் இளங்கோவையும் கற்பனையில் கம்பனையும் சொல்லாட்சியில் மணிவாசகரையும் நாகரீக விளக்கத்தில் சங்கப்புலவர்களையும் ஒப்பு உவமையாகப் பெற்று பெருமையாக விளங்குகிறது தாலாட்டு8

குழந்தைப் பாடல்கள்

குழந்தைகள் பேசத்தெரித்து கொண்ட பிறகு இப்படித்தான் பேச வேண்டும் என்பதை அறியும் முன் ஏதோ தனக்குத் தெரிந்ததைப் பாடுகின்றனர். இவர்களின் பாடல்களில் எந்தவொரு பொருளையும் முழுமையாகக் காண முடியாது. தொடரும் அங்கங்கு தனித்து நிற்கும். அவர்களுக்கே உரிய மொழிபோல அர்த்தமற்ற சொற்களும் ஒலிக்குறிப்புகளும் அதிகமாக இடம்பெற்றிருக்கும்.

காதல் பாடல்கள்

அன்போடு இணைந்த ஆண், பெண் இரு உள்ளங்கள் மகிழ்ச்சியில் முழ்கும்போது காதல்ப்பாடல்கள் உருப்பெறுகின்றன. இப்பாடல் வழி காதலன் பெயரை வாய்குளிர உச்சரிப்பதுண்டு. மேலும் இப்பாடல்களில் மாமன், மச்சான் என்ற முறைப்பெயர்களும் பயன்படுத்தப்படுகின்றன. தனது காதல் மறைமுகமாக இருக்கும்படி புதிர் முறையைக் கையாளுவோரும் உண்டு.

தொழிற் பாடல்கள்

தொழிலாளிகள் தொழில் செய்யும் போது பாடப்படும் பாடல்கள் தொழிற்பாடல் எனப்படும். “மனிதன் கூடித் தொழில் செய்யும் போது அக்கூட்டுறவிலே பிறப்பது தொழிற்பாடல்.”9 தனது வேலையில் கவனம் தெரியாமல் இருக்கவும் சிறிது நேரமேனும் தங்கள் வறுமையை மறந்திருக்கவும் விரைவில் எளிதில் தொழில் முடிப்பதற்காகவுமே இப்பாடல் பாடப்படுகிறது.

கொண்டாட்டப் பாடல்கள்

உழைத்து உழைத்து சளைத்துப்போன மனிதன் மனதிற்கு மகிழ்ச்சிதர கொண்டாட்டப்பாடல் பாடப்படுகிறது. ஏதேனும் விழாக்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாட்டப்பாடலைப் பாடி மகிழ்கிறான் மனிதன். கும்மி, கோலாட்டு, ஒயிலாட்டம் என பூப்பு, நழுங்கு, அம்மானை, வளைகாப்பு, காதுகுத்து போன்ற அனைத்து விழாக்களிலும் உறவினர் பலரால் கூடி பாடப்படுகிறது. இது சடங்குப்பாடல் எனவும் அழைக்கப்படும்..

வழிபாட்டுப் பாடல்கள்

தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் மனுதன் இறைவனை வேண்டுதல், வழிபடுதல், நன்றி செலுத்துதல் உண்டு. இதோடுமட்டுமல்லாது பாடல் முழுவதும் தெய்வத்தைப் பற்றியே அமையுமானால் இறைவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுமானால் அஃது பக்திப்பாடல் எனப்படும்.

ஒப்பாரிப் பாடல்கள்

உயிர் இழப்பு ஏற்படும் போதுதான் ஒப்பாரி உயிர் பெற்று எழுகிறது. இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களே ஒப்பாரி. “தமிழ் அகராதி ஒப்பாரிக்கு ஒப்பு+ஆரி, ஒப்புச்சொல்லி அழுதல்10 எனப் பொருள் தருகிறது. இது கவிஞர்களால் ‘இரங்கற்பா’ என அழைக்கப்படுவதுண்டு.

பன்மலர்ப் பாடல்கள்

இந்த ஏழு வகையிலும் அடங்காத, அடக்க முடியாத எஞ்சியுள்ள தனிப்பாடல்கள் அனைத்தும் பன்மலர்ப்பாடல்களாகும்.

ஊடகங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் பங்கு

ஆரம்ப கால கட்டத்தில் மக்களுக்கு தகவலைக்கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல் பட்ட நாட்டுப்புறப் பாடல்கள் இன்று நவீன ஊடகங்களின் வழி தன்னுடைய பணியினைச் செய்து வருகின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள் உணர்ச்சிபூர்வமானவை. எனவே இதனை அதிக அக்கறையுடனும், கண்ணும் கருத்துமாகவும், ஒருமுகப்படுத்தி வெளியீடு செய்தல் வேண்டும். அதேநேரத்தில் இதன் வழிப் பெறப்படும் செய்திகள் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைச் சிதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தகுந்தாற் போலவே செய்திகள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு ஊடகங்கள் வெளியிடும் செய்திக்கு துணைபுரிவதாக நாட்டுப்புறப் பாடல்கள் அமைகின்றன. இன்று மனிதனுடைய வாழ்வில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகம் என்று சொல்லப்படும் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், ஆகிய அனைத்திலும் நாட்டுப்புறப்பாடல்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளன.  இவ்வூடகங்கள் கலைஞர்களைத் தேடிச்சென்று நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து மக்களிடத்துக் கொண்டு சேர்க்கின்றன.

அச்சு ஊடகங்களில் நாட்டுப்புறப் பாடல்கள்

அச்சு ஊடகங்கள் என்று சொல்லப்படும் நாளிதழ்கள், பருவ இதழ்கள், சுவரொட்டிகள் எனப் பலவற்றிலும் நாட்டுப்புறப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அச்சு ஊடகங்களே ஆதிகாலத்தில் ஏட்டில் எழுதாக் கவிதையாக இருந்த நாட்டுப்புறப் பாடல்களை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தன. அதனைத் தொடர்ந்து கிராமபுற மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டது. மேலும் முழு எழுத்தறிவு பெற்ற நாட்டை உருவாக்கும் பணியினையும் செய்து வந்தது.

நாட்டுப்புறப் பாடல்கள், கலைகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் நாட்டுப்புறவியல் ஆர்வளர்கள் இதழ்களை நாடினர். நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வினை வெளிப்படுத்தவும் இதழ்கள் தேவைப்பட்டன. நாட்டுப்புறவியல் சார்ந்த் செய்திகளைத் தரும் முதல் இதழாக சங்கர் சென் குப்தா அவர்களால் கல்கத்தாவிலிருந்து ‘FOLK LORE’ என்ற இதழ் வெளிவரத் தொடங்கியது. தமிழில் கலைமகள், மஞ்சரி, தென்றல், தாமரை, செம்மலர், புலமை, ஆராய்ச்சி போன்ற ஆய்விதழ்கள் நாட்டுப்புறப் பாடல்கள் சார்ந்த கருத்துக்களை வெளியிடுகின்றன. குறிப்பாக லூர்து அவர்களைச் சிறப்பு ஆசிரியராகக் கொண்டு ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற இதழ் இன்று வரையிலும் நாட்டுப்புறவியல் சார்ந்த அரிய கருத்துக்களையும், கோட்பாடுகளையும், தமிழாக்கங்களையும், புதிய கோணத்தில் படம் பிடித்துக்காட்டுகிறது.11 இவ்வாறு ஊடகங்களில் தன்னிலை விளக்கமாக இடம்பெற்ற நாட்டுப்புறப்பாடல்கள் காலப்போக்கில் தன்னைக்கொண்டு மக்களுக்குச் செய்தியைத் தருவதாகவும் இடம்பெறலாயின.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்ட பத்திரிகையில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. ‘மங்கையர் மலர்’ இதழில் ‘வாழ்க்கை நெய் மணக்கும்’ என்ற தலைப்பில் மஞ்சுளா ரமேஷ் என்பவர் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தார்.  அதில் அன்று மக்களிடையே காணப்பட்ட பிரச்சனைகளையும் அதை நீக்கும் வழிகளையும் சுட்டிக்காட்ட ஒரு சில நாட்டுப்புறப்பாடல்களையே தம் கருத்துக்கு வலிமை சேர்க்கக் கையாண்டுள்ளார்.

“அரிசி முளைபோட்டு அரண்மனையும் சுத்திவந்தா

அரிசி மணமணக்கும் அரண்மனையும் பூ மணக்கும்”12

என்று கணவன் மனைவியைப் புகழ்வதாகவும்

“சங்கு மணியடிக்கும்

சர்க்காரு என் தொரையே

சார்ந்திருக்கும் போலீசாரே

சர்க்காரு வக்கீலே – நான்

தந்ததை வாங்கிட்டு – என்

சவத்தையும் விட்டுடுங்கோ

குண்டு மனியடிக்கும்

கோட்டாரு என் தொரையே – நான்

கொடுத்ததை வாங்கிட்டு – என்

கொளந்தையை விட்டுடுங்கோ”13

என்று அரசின் நிலையை எடுத்துக்காட்டுவதுமாக இப்பாடல்கள் அமைத்துள்ளன.

மின்னணு ஊடகங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் பங்கு

     மின்னணு ஊடகங்களாகிய தொலைக்காட்சியிலும் சரி, வானொலியிலும் சரி நாட்டுப்புறப் பாடல்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பப்படுவது மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் மேடை நிகழ்வுகளாகவும் கலை நிகழ்ச்சிகளாகவும் ஒளிபரப்பப்படுகின்றன. தைப்பொங்கல் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களும் கலைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கொல்லங்குடி கருப்பாயி, விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், நளாயினி போன்றவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து ஊடகங்களின்வழி அப்பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றுள்ளனர். அவர்களுடைய பாடல்கள் பதிவுசெய்யப்பட்டு பதிவுச்சுருள் நாடாவாகவும் கிராமபோன் தட்டுகளாகவும் குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. முழு எழுத்தறிவு பெற்ற நாடாகத் திகழவேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ‘அறிவொளி இயக்கம்’ என்றதொரு இயக்கம் அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அதனை மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தவை நாட்டுப்புறப் பாடல்களே. பல்வேறு கிராமப்புறப் பகுதிகளுக்குச் சென்று மக்களைக் கவரும் வகையில் நாட்டுப்புறப்பாடலைப் பாடி இவ்வியக்கத்தில் சேரச் செய்தனர். இச்செய்தியை அறிமுகம் செய்த வானொலியும் கூட பழமொழி, விடுகதைகள் போன்றவற்றோடே நாட்டுப்புறப் பாடல்களையும் ஒலிபரப்பியது.

மேலும் வானொலியில் நாட்டுப்புறப்பாடலுக்கென ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சியில் ஒரு விழுக்காடு பங்கு பெற்றுள்ளது குறிப்பிடப்படுவதாகும். “இப்பாடல்கள் பல திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டு ஒலிப்பதிவும் செய்யப்பட்டன. அவற்றை வெளியிட அனுமதி தந்த அந்நிலையத்தாருக்கும் எனது நன்றி”14 என்ற திரு.செ. அன்னகாமு அவர்களின் கூற்றிலிருந்தும், “வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவையும் வானொலி கருத்தரங்கு ஆகியவற்றில் பேசப்பட்டவையுமே நாட்டுப்புற மண்ணும் மக்களும் என்னும் நூலில் இடம்பெற்றன.”15 என்று கே.ஏ. குணசேகரன் அவர்களின் கூற்றிலிருந்தும் வானொலியில் நாட்டுப்புறப்பாடல்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன என்பதை அறிய முடிகிறது.

திரைப்படங்களின் வருகைக்குப் பின்னர் நாட்டுப்புறப்பாடல்கள் அருகிவிட்டன எனலாம். இப்பாடல்களை அழிப்பதில் இராட்சசபலம் பெற்றிருப்பது திரைப்படப்பாடல்களே16 என்கிறார் ஆறு.அழகப்பன். மேலும் கிராமத்து மக்கள் தம் ஊர்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் நடக்கும் திரைப்படங்களைக் காண ஆரம்பித்ததாலும் அவை சுலபமாகபொழுதுபோக்காக அவர்களுக்கு இருந்தமையாலும் அம்மக்கள் தங்களுக்கு உரித்தான நாட்டுப்புறப்பாடல்கள், நாடகங்கள், விளையாட்டுக்கள் மற்றும் நாட்டுப்புறத்திற்குரிய நடைமுறைகள் இவற்றில் ஈடுபாடில்லாது போய்விட்டார்கள்17 என்கிறார் அகர்நாத் பீகால். ஆக, திரைப்படப் பாடல்களினால் நாட்டுப்புறப்பாடல்கள் அழிந்து விட்டன என்கின்றனர் அறிஞர்கள். அழிவிற்குக் காரணமான திரைப்படப்பாடல்களே அதன் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன எனலாம். அதாவது நாட்டுப்புறப்பாடல்கள் இனிமை, எளிமை, இசைநயம் மிக்கனவாக உள்ளன. எனவே இந்நாட்டுப்புறப் பாடல்களைப் பின்பற்றியோ அதன் சாயலிலோ பல பாடல்களைப் படைத்துத் திரைப்படங்களில் ஒலிக்கச் செய்கின்றனர்.

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சு போகுமுன்னு

      எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

      காராம் பசுவோட்டிவாராண்டி தாய்மாமன்18 என்ற திரைப்படப்பாடல் வரிகள் நாட்டுப்புறப் பாடலின் சாயல் பெற்றதே.

பாடறியேன் படிப்பறியேன்

      பள்ளிக்கூடம் தானறியேன்19

என்ற பாடல் நாட்டுப்புற அவையடக்கப்பாடலே.

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்

      கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்20

என்பன போன்ற வரிகள் நாட்டுப்புறப்பாடல் வரிகளே. இவையெல்லாம் ஒரு காலத்தில் நம் முன்னோர்க்கும் முன்னோர் பாடி வந்த பாடல்களே. காற்றில் மிதந்து வந்து நம் செவிகளில் நிறைக்கின்றன. இந்நிலையில் பார்க்கப்போனால் நாட்டுப்புறப் பாடல்கள் வளர்ந்து வந்துள்ள நிலையினை ஓரளவு காணமுடிகிறது. திரைத்துறையில் ஒலிக்கும் ‘கானாப்பாடல்கள் முழுக்க முழுக்க நாட்டுப்புறப் பாடல்களே என்பதை மறுக்க முடியாது.

விளம்பரங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம்

விளம்பரம் இல்லாது வியாபாரம் இல்லை என்ற நிலையில் உள்ளது இன்றைய உலகம். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவ்விளம்பரங்களில் கூட நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

ஆத்தோரம் கொடிகளாம் அரும்பரும்பா வெத்திலையாம்

      போட்டா செவக்குதில்ல பொன்மயிலே உன் மயக்கம்21

என்ற தெம்மாங்குப் பாடலை ஒலிபரப்பி அத்துடன் உன் மயக்கமல்ல கும்பகோணம் ஏ.ஆர்.பாக்குத்தூள் என்று பாக்கு விளம்பரத்திற்கு நாட்டுப்புறப்பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1994 ஆம் ஆண்டு வெளிவந்த விளம்பரத்தில்

கைவீசம்மா கைவீசு

      கடைக்குப் போகலாம் கைவீசு

      மிட்டாய் வாங்கலாம் கைவீசு

      மெதுவாய்த் தின்னலாம் கைவீசு22

என்ற குழந்தைப் பாடலைப்போலவே

கைவீசம்மா கைவீசு

      கடைக்குப் போகலாம் கைவீசு

      உஜாலா வாங்கலாம் கைவீசு

      வெள்ளைச் சட்டையில் ஒளிவீசு23

என்ற சொட்டுநீலம் விளம்பரம் எல்லா இடங்களிலும் ஒளி, ஒலித்ததை இங்கு நினைவுகொள்வோம்.

நாட்டுப்புறப் பாடல்களின் போக்கு

நாகரீகம் வளர்ந்த இன்றைய நிலையில் கிராமப்புற மக்கள் அனைவரும் நகரப்புற மக்களைப்போல் மாறி வருகின்றனர். போக்குவரத்து, மின்சாரம் தொலைபேசி, ஊடகங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, இணையம் எனப் பல வசதிகளும் மிகுந்து கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன.

கிராமங்கள் அனைத்தும் நகரங்களாக மாறிவரும் சூழலில் கிராமப்புறக் கலைகளில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் அருகி வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இருவர் கொள்ளும் காதலை விட உடன்பிறந்தார் கொள்ளும் வாஞ்சையை விட ஏன் உலகமளக்கும் அருளினையும் விட பிள்ளைப்பாசமே ஆழமானது. வலிமை மிக்கது. உணச்சிமயமானது. இத்தகைய தாயும் சேயுமென்ற உறவுப்பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு24 ‘மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி’ என்று கண்ணனை மனதுக்குள் தொட்டிலிலிட்டுத் தாலாட்டினார் பெரியாழ்வார். இன்று குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் துயிலச் செய்யும் பழக்கமே வழக்கொழிந்து வரும் நிலையில் தாலாட்டுப் பாடும் தாய்மார்கள் மிகக் குறைவே.

அடுத்ததாக நாட்டுப்புறப் பாடல்களில் பக்திப்பாடல் என்றொரு வகையுண்டு என்பதே மக்களிடத்து மறைந்து விட்டது. பக்தி இலக்கிய வருகையும் புதுப்புது நாட்டுப்புற பக்திப்பாடல்கள் தோன்றாமையுமே இதற்குக் காரணம் என்கின்றனர் அறிஞர்கள். தெய்வ நம்பிக்கைப்பாடல்களும், இன்பமான காலங்களில் இறைவனை மறந்துவிடுவது போல் பரபரப்பான உலகப் போக்கினால் மறக்கப்பட்டு அருகிப் போய்விட்டன25 என்கிறார் திரு ஆறு. அழகப்பன் அவர்கள்.

சொல்லியழுதால் சோகம் விட்டுப்போகுமென்ற நிலையில் இறந்தவர் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடுக்கியும் அழுபவர்களை ஆற்றுவிக்கவும் ஒப்பாரி பாடப்பட்டது. மின்மயான வருகைக்குப்பின் மக்கள் ஒப்பாரிக்கு நேரம் ஒதுக்குவதில்லை. இயந்திரங்களின் பயன்பாட்டிற்குப் பின்னர் தொழிற்பாடல்களும் மக்கள் மத்தியில் வழக்கொழிந்து போனது.

இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நாட்டுப்புறப் பாடல்கள் மக்களால் பாடப்படும் நிலை அருகிவிட்டதே தவிர ஊடகங்களின் வாயிலாக கலைஞர்களாலும் கவிஞர்களாலும் இன்றளவும் பெரும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம்.

ஆராரோஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ

      தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ

      … … … …

      தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே

      ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே

      ஆராரோஆரிராரோஆராரோஆரிராரோ

      ஆராரோஆரிராரோஆராரோஆரிராரோ26

என்ற சிறுத்தை பட தாலாட்டுப் பாடல் வரிகளும் ‘என்று தணியும்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற

அய்யய்யோ பாவிகளா அட அரசழிஞ்சு போவீகளா

      கைவீச்ச சாமிகளா கண்ணவிஞ்சு போனீகளா

      பந்தக்கால் மூங்கில்களே பாடைக்கு சாட்சிகளா

      எம்மக்கா எட்டுக்கால் தேர் ஏற எரிவெட்டி சேர்த்தீர்களா27

என்ற இரா.தனிக்கொடியின் உருக்கமான ஒப்பாரிப்பாடலும் நாட்டுப்புறப்பாடல்கள் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கான ஒரு சில உதாரணங்களாகும்.

முடிவுரை

பெருகி வரும் இலக்கியங்களில் நாட்டுப்புற இயலும் ஒன்றாகும். நாட்டுப்புற இயல் வகையில் நாட்டுப்புறப்பாடல்கள் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. என்றோ ஒருநாள் மொழி தோன்றியது முதல் தனது களைப்பைப் போக்கிக்கொள்ளவும் போழுதைப்போக்கவும் வேலைப்பளுவை மறக்கவும் இப்பாடல்கள் பாடப்பட்டு வந்தன. பின்னர் பல ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு நாட்டுப்புறப்பாடல்கள் ஏட்டில் எழுதாக்கவிதைகள், காற்றுலே மிதந்து வந்த கவிதைகள், வாய்மொழிப்பாட்டு, நாடோடிப்பாட்டு, FOLK SONGS என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தது. இன்னும் பல ஆய்வாளர்களிடையே ஆய்வுப் பொருளாகவும் எடுத்தாளப்படுகின்றன. கிராம மக்களுக்கே சொந்தமாக இருந்த நாட்டுப்புறப் பாடல்களை அக்கிராமங்களுக்கெல்லாம் சென்று அவை பற்றிய பலதரப்பட்ட கருத்துக்களையும் சேகரித்து உலகிற்குத் தருகிறார்கள் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள். இந்நிலையில் நாட்டுப்புறப்பாடல்கள் பழையன களைந்து புதியன புகுத்தித் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, விளம்பரம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மூலம் இன்றுவரையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

சான்றெண் விளக்கம்

 1. “The traditional beliefs, legends and customs, current among the common people; the study of these popular Autiquities or popular literature” – A new English Dictionary P.330
 2. தமிழண்ணல், காதல் வாழ்வு, ப. 13
 3. சதாசிவ ஐயர், மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு, ப. XXXVI
 4. செ. அன்னகாமு, ஏட்டில் எழுதாக் கவிதைகள், ப. VIII
 5. கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப. 6
 6. டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப, 27
 7. தமிழண்ணல், காதல் வாழ்வு, ப. 10
 8. தமிழண்ணல், தாலாட்டு, ப. 12
 9. டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப, 42
 10. தமிழ் அகராதி, ப. 6
 11. டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப, 495
 12. மங்கையர் மலர், ஜனவரி 1995
 13. மேலது.
 14. செ. அன்னகாமு, ஏட்டில் எழுதாக் கவிதைகள், ப. IV
 15. கே. ஏ. குணசேகரன், நாட்டுப்புற மண்ணும் மக்களும், ப. 3
 16. ஆறு. அழகப்பன், நாட்டுப்புறப் பாடல் திறனாய்வு, ப. 257
 17. மேலது., ப. 261
 18. கவிஞர் வைரமுத்து, கிழக்குச்சீமையிலே (திரைப்படம்).
 19. கவிஞர் வைரமுத்து, சிந்துபைரவி (திரைப்படம்).
 20. கவிஞர் வைரமுத்து, பம்பாய் (திரைப்படம்).
 21. சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, 139
 22. தி. நடராசன், நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள்,ப. 111
 23. திருநெல்வேலி வானொலி நிலையம் ஒலிபரப்பியது, ஜனவரி
 24. ஆறு. அழகப்பன், நாட்டுப்புறப் பாடல் திறனாய்வு, ப. 17
 25. மேலது., ப. 260
 26. கவிஞர் அறிவுமதி சிறுத்தை (திரைப்படம்).
 27. கவிஞர் இரா. தனிக்கொடி, என்று தணியும் (ஆவணப் படம்).

முனைவர் இரா.சி. சுந்தரமயில்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

பூ.சா.கோ.அர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

பீளமேடு, கோவை – 641004.