செவ்விலக்கிய நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகைக்குப் பல பதிப்புக்களும் உரைகளும் வெளிவந்துள்ளன. அதேபோல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருப்பத்தோராம் நூற்றாண்டு வரையிலும் அந்நூல் குறித்துக் கட்டுரைகளும், நூல்களும் பல எழுதப்பட்டுள்ளன. நூல்களின் அமைப்பு நிலைகளுக்கேற்ப அவற்றினை அறிமுக நூல்களாகவும், விளக்கவியல் நூல்களாகவும், இரசனைசார் நூல்களாகவும், திறனாய்வு நூல்களாகவும் வகைப்படுத்தலாம். அவ்வகையில்  ஆ.மணி என்பவர் ‘குறுந்தொகைத் திறனுரைகள்’ எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது எவ்வகை நூல் என்பதனை அறிமுகப்படுத்தி, மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மதிப்பீடு விளக்கம்

மதிப்பீடு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Evaluation’ ‘Evaluate’ எனும் பொருளைக் கூகுள் மொழிபெயர்ப்புத் தருகின்றது. யுனிவர்சல் டீலக்ஸ் டிக்ஸனரி ‘Evaluate’ எனும் பொருளைத் தருகின்றது(பக்.618).

மதிப்பீட்டின் அவசியத்தைத் தி.சு. நடராசன் “இலக்கியத்தின் செல்நெறியை அடையாளங் காட்டுகின்ற விமரிசன ரீதியான மதிப்பீடு (Critical Evaluation) இலக்கியத்திற்கு அடிப்படையானதொரு தேவை” (2016:31) என்கின்றார்.

ஆகவே மதிப்பீடு என்பது ஒரு நூலின் தன்மைகளை எடுத்துரைத்து அதன் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி விளக்குவதாகும்.

நூல் அறிமுகம்

இந்நூல் 2005 மார்ச்சில் முதல் பதிப்பாகக் கெங்குவார்பட்டித் தமிழன்னை ஆய்வகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. இதனுள் குறுந்தொகையை மட்டும் மையப்படுத்திப் பதினைந்து ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. பல்வேறு கல்லூரிகள், தமிழ் மன்றங்கள் முதலியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்கும்வண்ணம் இந்நூலாசிரியரால் (அதுநாள்வரை) 37 ஆய்வுக்கட்டுரைகள்  எழுதப்பெற்றுள்ளன. அவற்றுள் குறுந்தொகைநூலை மையமிட்டு எழுதப்பெற்றுள்ள பதினைந்து கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. இதனைப் பதிப்புப் பின்புல உரை,

குறுந்தொகைத் திறனுரைகள் என்ற இந்நூல் இந்நூலாசிரியரது முனைவர் பட்ட ஆய்வின் இரண்டாம் ஆண்டு(1999,சூன்) முதல் எழுதப்பட்ட 37 ஆய்வுரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட 15 கட்டுரைகளின் தொகுப்பாகும். அக்கட்டுரைகள் அவை நூல்களில் வெளிவந்த கால அடிப்படையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டுரை மதுரைத் தியாகராசர் கல்லூரியில் படிக்கப்பெற்ற கருத்தரங்கக் கட்டுரை ஆகும். ஆய்வு என்ற நிலையில் இவ்வுரையே இந்நூலாசிரியரின் முதல் உரைப் பொழிவாகும் (2005:8)

என்று குறிப்பிட்டுள்ளது.

பதினைந்து கட்டுரைகளின் போக்குகள்

‘தி.சௌ.  அரங்கனாரின் குறுந்தொகை உரைத்திறன்’ எனும் கட்டுரை அவரது உரைத்தன்மைகளை எடுத்து விளக்குகின்றது. முதல் உரை கிடைக்கப்பெறாத சூழலில் அரங்கனாரின் உரையே குறுந்தொகைக்கு எழுந்த முதல் உரைப் பதிப்பாகும் என்பதை அவரது உரைப்பதிப்பில் உள்ள முத்துரத்ந முதலியாரது முகவுரையை மேற்கோளாகக் காட்டி விளக்கியுள்ளது. அரங்கனாரது வாழ்க்கைப் பகுதியும் பதிப்புப் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றுள்ளன. அப்பதிப்பு மூன்று பகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுத் திணை வகுத்துக் கூறுதல், புலவர் பெயர், பாடலின் பொருள், அகராதிப் பொருள் அளித்தல், சிறப்புப் பொருள் அளித்தல், உள்ளுறை, இறைச்சி விளக்கம், மெய்ப்பாடு, பயன்கூறல், சுவடிகளின் நிலையைச் சுட்டுதல், கூன் பெற்ற பாடலைச் சுட்டுதல் என்று உரைத்திறன் ஆராயப்பட்டுள்ளது.

குறுந்தொகையின் முதற்பதிப்புத் தற்போது சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்வழி மீள்அச்சுச் செய்யப்பட்டுள்ளது.

குறுந்தொகை குறுகிய பாடல்களின் தொகைநூல் எனும் கருத்தை மறுஆய்வு செய்யும் போக்கில் எழுதப்பட்டுள்ளது, ‘குறுந்தொகை குறுகிய பாடல்களின் தொகைதானா?’ எனும் கட்டுரை. குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய இரு நூல்களின் பாடல் அடிகள் ஒப்புமை செய்யப்பட்டுள்ளது. குறுந்தொகையில் நான்கு அடிகளைக் கொண்ட பாடல்கள் முப்பத்தெட்டு, ஐங்குறுநூற்றுள் மூன்று அடிகளைக்கொண்ட பாடல்கள் ஐம்பத்து இரண்டு. ஆகவே, ஐங்குறுநூற்றிற்கே குறுகிய பாடல்களின் தொகைநூல் என்பது ஏற்புடையதாகும். குறுந்தொகைக்கு

1. உரிநானூறு (உரிப்பொருளால் சிறந்த நானூறு பாடல்களின் தொகை) 2.அகவல்நானூறு (அகவற்பாவிலமைந்த நானூறு பாடல்களின் தொகை) 3.நறுந்தொகை நானூறு (நல்ல குறுந்தொகை என்பதன் பொருளை உள்வாங்கி அமைந்த தலைப்பு) ஆகிய பெயர்களைச் சுட்டலாம் (2005:27)

எனும் பரிந்துரை எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.

‘குறுந்தொகைப் பதிப்பு வரலாறு’ எனும் கட்டுரை குறுந்தொகைப் பதிப்புக்களை ஆண்டுகள் அடிப்படையில் வரிசையாக அறிமுகப்படுத்துகின்றது.  அவ்வறிமுகத்தில் 1915-இல் தி.சௌ.அரங்கனாரின் உரைப் பதிப்புத் தொடங்கி 1999-இல் வர்த்தமானன் பதிப்பகத்தின்வழி வெளியான இரா.பிரேமாவின் குறுந்தொகை உரை வரையான தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு பதிப்புக் குறித்த ஒரு சிறு விளக்கங்களையும் தந்துள்ளது.

இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியில்

முழுமை நிலையில் அமைந்த இப்பதிப்புக்களைத் தவிர, தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு மு.வ.வின் குறுந்தொகை விருந்து, குறுந்தொகைச் செல்வம், கொங்குதேர் வாழ்க்கை, சுருளியாண்டிப் பாவலர் எழுதிய குறுந்தொகை விருந்து, மு.ரா. பெருமாளின் எளிய சொற்களில் இனிய குறுந்தொகை ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன (2005: 33)

எனும் கருத்து உள்ளது. இவற்றுள் மு.வ.வின் குறுந்தொகைச் செல்வம், கொங்குதேர் வாழ்க்கை ஆகிய இருநூல்களையும் உரைப் பதிப்பு நூல்களாகக் கருத முடியாது. குறுந்தொகைச் செல்வம் எனும் நூலிலுள்ள அவரது எழுத்துரையானது குறுந்தொகைப் பாக்களைக் கதையமைப்பு நிலை, உலக நிகழ்வுகள், உணர்ச்சிப் போக்கு ஆகியவற்றோடு இணைக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

குறுந்தொகையில் தலைவன் கூற்றாக வரும் இரண்டாம் பாடலில் உள்ள சிவன்-தருமி தொடர்புடைய கதைகள் ஏற்புடைத்தன்று என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்ட திறனாய்வு நூலே ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனும் நூலாகும். அது திறனாய்வு நூல் என்பதனை

காதலியின் கூந்தல் மணத்துக்கு நிகர் இல்லை என்ற காதலன் பாராட்டையே தும்பியை நோக்கிய வினாவாக மாற்றி அமைக்கின்றார் புலவர் இறையனார். தலைவன், தலைவி, தும்பி, வினா இவை எல்லாம் புலவரின் கற்பனை, இந்தக்காதல் உணர்வு மட்டும் என்றும் உள்ளது. ஆதலின் இது உள்ளது புனைந்த கற்பனையாகும்.

கதையின்படி இப்பாட்டு, பாண்டிமாதேவியின் கூந்தலின் மணத்தைக் குறித்து எழுந்த ஆராய்ச்சியாகின்றது. செயகுன்றில் பாண்டியன் துணையோடு இருந்தபோது அவன் உள்ளத்தில் எழுந்த ஐயம், தருமி பொற்கிழியை விரும்பிப் பாட்டைக் கொணர்தல், சங்கப் புலவர்களில் சிறந்த புலவர் நக்கீரனார் பாட்டைக் குற்றங்கூறல் முதலியன யாவும் அந்த ஆராய்ச்சியை ஒட்டி அமைந்த கற்பனைகள்; இல்லது புனைந்த கற்பனைகள் (1954:30)

எனும் பகுதிகள் உணர்த்துகின்றன.

அதேபோல் மு.ரா. பெருமாள் முதலியார் கவிதை நிலையில் எழுதிய நூலே எளிய சொற்களில் இனிய குறுந்தொகை எனும் நூலாகும்.

ஆகவே இந்நூல்களை உரைநூல்களாகவோ, பதிப்பு நூல்களாகவோ கருத முடியாது.

குறுந்தொகைத் திணை வேறுபாடுகள்’ எனும் கட்டுரை தி.சௌ. அரங்கனார், மர்ரே எஸ்.இராசம், புலியூர்க் கேசிகன், சாமி.சிதம்பரனார், மு.சண்முகம் பிள்ளை ஆகியோரது பதிப்புக்களிலுள்ள குறுந்தொகைப் பாடல் திணைகளை வகைதொகை செய்து, திணை வேறுபடுமிடங்களை விளக்கியுள்ளது. பாடலுக்குரிய திணையைக் குறிக்கும் நிலை ஆராயப்பட்டுள்ளது. இப்பதிப்புக்களுள் திணை அமைப்பில் 17 பாடல்கள் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டதைக் குறிப்பிடுகின்றது. திணை வகைப்பாடு, திணைவேறுபடுமிடங்கள் அட்டவணையில் அளிக்கப்பெற்றுள்ளது.

சமுதாய மதிப்பை உணர்த்துவதற்கு ‘உள்ளுறை’ எனும் உத்தியானது சங்கப் புலவர்களால் கையாளப்பட்டுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டும் நோக்கில் ‘உள்ளுறையும் சமுதாயச் சீர்திருத்த விழுமியமும் என்ற கட்டுரை உள்ளது. குறுந்தொகையில் காணப்படும்  உள்ளுறைப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் துணையாகத் தி.சௌ.அரங்கனார் உள்ளுறை இருப்பதாக எழுதியுள்ள 18 பாடல்களை ஆராயும் போக்கில் அமைந்துள்ளது. அவ்வுள்ளுறைப் பாடல்கள் தலைவன் பரத்தமை நாடிச் சென்றபோதும் களவிற்குப் பின் திருமணத்தைத் தள்ளிப்போட்டபோதும், உடன்போக்கின்போதும் ஆகிய மூன்று நிலைகளில் அமைகின்றன.

பரத்தமை நாட்டம், களவுக்கால நீட்டிப்பு ஆகியவை சமுதாயத்தில் நிலவும் குற்றங்களாகும். அக்குற்றங்களை நாகரிகமான முறையிலும் மறைமுகமான முறையிலும் உணர்த்தவே புலவர்களால் உள்ளுறை உத்தி பயன்படுத்தப் பெற்றுள்ளது எனும் கருத்து முன்வைக்கப்பெற்றுள்ளது.

ஆயினும், உள்ளுறைக்குக் கட்டுரையில் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் போல் சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் விழுமியத்திற்கும் சிறு சிறு விளக்கங்கள் தந்திருக்கலாம்.

‘யாரு மில்லைத் தானே கள்வன்’ (குறுந்-25) என்று தொடங்கும் பாடலின் முதலடி இறுதிச் சீரிலுள்ள சொல்லை ‘கள்வன்’, ‘களவன்’ ஆகிய இருநிலைகளில் உரையாசிரியர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் பொருத்தமான சொல்லைக் கண்டறிவதே ‘கள்வனா? களவனா’ எனும் கட்டுரையாகும். கள்வன், களவன் ஆகிய இருசொற்களுக்குமான பொருள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சங்கப் பாக்களில் கள்வன் எனும் சொல் பதினைந்து இடங்களிலும், தலைவன் தன் இயல்பிலிருந்து மாறுபடுகின்றபோது கடியப்படும் சூழல்களில் வந்துள்ளதையும் கள்வன் எனும் சொல் தலைவனைக் குறிக்கும் நோக்கில் இல்லாததையும் உரிய சான்றுகளுடன் சுட்டியுள்ளது இக்கட்டுரை.

சங்கப்பாக்களின் மரபையொட்டிப் பார்க்கின்றபொழுது கள்வன் எனும் சொல்லே குறுந்தொகை 25-ஆம் பாடலின் முதலடி நான்காம் சீரில் வரும் என்று விளக்கப் பெற்றுள்ளது.

குறுந்தொகையில் பதினான்கு பாடல்களில் போர் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதை எடுத்துரைப்பது ‘குறுந்தொகையில் போரியல் செய்திகள்’ எனும் கட்டுரையாகும். இவற்றுள் அதிகமாக ஆறு பாடல்களைப் பாடியவர் பரணர் ஆவார் எனும் தகவல் உள்ளது. அகப்பாடல்களில் புறச்செய்திகள் வந்துள்ளதால் ‘அகப்புறம்’ என்ற இலக்கணப்பகுப்பு வளர்ச்சிபெறுவதற்கு இதனை முன்னோடியாகக் கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.

குறுந்தொகையிலுள்ள புறம் பற்றிய பதினான்கு பாடல்களுமே குறுநில மன்னர்களின் போர்ச்செய்திகளைச் சொல்லுகின்றன. பெருநில மன்னர்கள் பற்றிச் சொல்லவில்லை என்பதையும் அகப்பாடலில் புறச்செய்திகளைப் புலவர்கள் கூறுவதற்குக் காரணம் என்பதையும் கண்டறிய வேண்டும் என்பதையும் இக்கட்டுரை பேசுகின்றது.

‘சோ.அருணாசல தேசிகரின் குறுந்தொகைப் பதிப்பு நெறிகள்’ என்ற கட்டுரையில் 1933இல் வெளிவந்துள்ள அவரது பதிப்பு நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1933இல் அவர் குறுந்தொகை மூலத்தை மட்டும் பதிப்பித்தார் எனும் கருத்துச் சரி, 1937இல் தேசிகர் குறுந்தொகையை உரையுடன் வெளியிட்டார் எனும் கருத்துத் தவறு என்பது தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவரது பதிப்புநெறிகளாகத் திணையைத் தலைப்பாகத் தருதல், குறுந்தொகைப் பாடல், துறை, புலவர், பெயர், பின்னிணைப்புக்கள் ஆகியவை காணப்படுவதையும் குறித்துள்ளது.

‘கூதளி’ என்ற தாவரத்தைச் செடி என்பதா, கொடி என்பதா, மரம் என்பதா என்பதில் உரையாசிரியர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிட்டுச் சரியான பொருளைக் குறிப்பதே ‘கூதளி செடியா? கொடியா? மரமா?’ எனும் கட்டுரை. சங்கப்பாடல்களில் பன்னிரண்டு இடங்களில் கூதளி எனும் சொல் வந்துள்ளதைக் கட்டுரை குறிக்கின்றது. கூதளியைத் தி. சௌ.அ., ந.மு.வே., ஆர். வேங்கடாசலம், சாமி.சிதம்பரனார், மு.ச. முதலியோர் செடி என்றும் உ.வே.சா. செடி, மரம் என்று கூறியதையும், ரா.இரா., பொ.வே.சோ முதலியோர் கொடி என்று கூறியதையும், பி.எல்.சாமி செடி என்றும் கொடி என்றும் கூறியதையும் பெ.சீனிவாசன் கொடி என்று கூறியதையும் சுட்டிக்காட்டி அவ்வாறு நான்கு வகைக் கருத்தாக்கங்களுள் கொடி என்று கருதுவதே பொருத்தமுடையதாகும் என்கின்றது இக்கட்டுரை. இதற்கு அரணாகக் குறுந்தொகை 60 ஆம் பாடலும் அகநானூறு 255 ஆம் பாடலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

குறுந்தொகையில் ஐந்து பாடல்கள் (குறுந் 8, 80, 164, 364, 370) பரத்தை  கூற்றுக்குரியனவாக உள்ளன என்பதனை விளக்குவதே ‘குறுந்தொகைப் பரத்தையர் கூற்றுப் பாடல்கள்’ எனும் கட்டுரை. முதல் பகுதியில் பரத்தையருக்கான சொல் விளக்கம் ஆராயப்பட்டுள்ளது. பரத்தையர் கூற்றிலுள்ள ஐந்து பாடல்களும் புலப்படுத்தும் உணர்வு நிலைகளும் சொல்லப்பட்டுள்ளன. ஏக்கம், பெருமிதம், நகைச்சுவை உணர்வு, பக்குவநிலை, அன்புநிலை, அச்சநிலை ஆகியவை பரத்தையரிடம் இருக்கின்றன என்பது கட்டுரையின் சாராம்சம்.

‘ஔவை, வெள்ளிவீதி அகப்பாடல்கள்’ எனும் இக்கட்டுரை குறுந்தொகையிலுள்ள ஔவையாரது பதினைந்து பாடல்களையும் வெள்ளிவீதியாரது எட்டுப் பாடல்களையும் இணைத்து இருபத்து மூன்று பாடல்களின் மையத்தை அலசி ஆராய்கின்றது. இவ்விருவரது பாடல்களின் பொருண்மைகள் பிரிவுக்காலத் தலைவி, தலைவனின் உள்ளப் புலம்பல், அறத்தொடு நிற்றல், பரத்தையின் எண்ணச் செருக்கு, செவிலியின் வருத்தம் ஆகியவை இருப்பதைத் தெரிவிக்கின்றது.

வெள்ளிவீதியார், ஔவையார் இருவரும் சமகாலத்தவர்; இவர்களது காதல் வாழ்வு சிறப்பாக அமையவில்லை; இருவரும் சங்க இலக்கியச் செய்யுள் மரபிலிருந்து நெகிழ்ச்சி பெற்றவர்கள் ஆகிய கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் பாடல்களை ஆராய்ந்ததோடு நிற்காமல், பாடல் இயற்றியவர்கள் வாழ்க்கைப் பின்புலமும் ஆராயப்பட்டுள்ளமை குறிக்கத்தக்கதாகும்.

தி.சௌ.அ., உ.வே.சா., ரா.இரா., ஆகியோரது பதிப்புக்களில் காணலாகும் பாடவேறுபாடுகளை வகைப்படுத்தி, எண்ணிக்கை அடிப்படையில் அவற்றுள் சில பாடவேறுபாடுகளை எடுத்துக்காட்டி உரைப்பது ‘குறுந்தொகைப் பாட வேறுபாடுகள்’ எனும் கட்டுரை. இம்மூவரது பாடவேறுபாடுகளும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்மூவர்களுள் ரா. இரா.வின் பதிப்பு மிகுதியான பாடவேறுபாடுகளைக் கொண்டுள்ளது என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

குறுந்தொகையின் ஆளுமையை விளக்கியுரைப்பது ‘குறுந்தொகையின் பல்துறை ஆளுமை’ எனும் கட்டுரை. குறுந்தொகையின் ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனும் இரண்டாம் பாடலில் வரும் சிவன்-தருமிக்காகப் பொற்கிழி பெற்றுத் தந்த கதை முதன்முதலாகக் கல்லாடத்தில் ஆளப்பட்டுள்ளது என்பதும் பின்னர் வந்த திருவாலவாயுடையார் புராணம்,  கடம்பவன புராணம், திருவிளையாடல் புராணம், சீகாளத்திப் புராணம், பாண்டிக்கோவை, தமிழ் விடுதூது, தமிழ் நாவலர் சரிதை ஆகிய நூல்களில் வழிமொழியப்பட்டுள்ளது என்பதும் கூறப்பட்டுள்ளது. அப்பாடல் உரைகளில் அதிகமான முறை எடுத்து விளக்கப்பட்டுள்ளது.

உரையாசிரியர்களால் 716 இடங்களில் குறுந்தொகைப் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் நச்சினார்க்கினியர் மிகுதியாக 208 பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.

பாரதிதாசன், மு.ரா.பெருமாள்முதலியார் கவிதை நிலையில் குறுந்தொகைப் பாக்களை விளக்கியுள்ளனர்.

குறுந். 40-ம் பாடலின் தாக்கம் புதுக்கவிதைகள், திரைப்படங்களில் பயின்று வந்துள்ளது. குறுந்தொகை ஆய்வுகள், நூல்கள், கட்டுரைகள் ஆகியவைகள் மூலம் ‘குறுந்தொகை ஆய்வடங்கல்’ வெளியிட வேண்டும் எனும் கருத்து நூலாசிரியரால் முன்வைக்கப்பெற்றுள்ளது.

‘குறுந்தொகை – முதல் தொகை நூலா?’ எனும் கட்டுரை குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு ஆகிய மூன்று நூல்களுள் முதல் தொகை நூல் எது என்பதை ஆராய்ந்துள்ளது. குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு பற்றிய அறிமுகம் உள்ளது. ‘குறுந்தொகைதான் முதல் தொகை நூல்’ எனும் உ.வே.சாவின் கருத்து மேலாய்வு செய்யப்பெற்றுள்ளது.

‘நல்’ என்ற அடைமொழி உள்ளதால் ‘நற்றிணைதான் முதல் தொகைநூல்’ எனும் செல்வநாயகத்தின் கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறைந்த அடிகளையுடைய செய்யுட்களைத் தொகுப்பவர்கள் முதலில் ஐங்குறுநூற்றையே தொகுத்திருக்க வேண்டும் என்று கட்டுரை எடுத்துரைத்தாலும் அதனை முதல் தொகை நூலாகக் கருதுவதற்கும் சில தடைகள் இருப்பதும் உணர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் ‘திட்டமிடுதல்’ நோக்கில் ஐங்குறுநூறு முதல் தொகை நூலாகலாம் என்று முடிவு தரப்பட்டுள்ளது.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு எனும் கருத்தும் செயற்கை மணம் உண்டு எனும் கருத்தும் ஆய்வாளர்களிடையே நிலவி வருகின்றன. அவற்றுள் பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் இல்லை; செயற்கை மணமே உள்ளது என்று கூறியுள்ள கட்டுரையே ‘கூந்தலுக்கு மணம் உண்டா?’ என்ற கட்டுரை. இதன்பொருட்டுச் சங்க இலக்கியப் பாடலடிகள் எடுத்துக்காட்டப்பட்டு, அதிலும் குறிப்பாகக் குறுந்தொகையில் ‘கூந்தல்’ என்ற பொருளிலுள்ள சொற்கள் முப்பது இடங்களில் உள்ளதையும்  குறிப்பிட்டுள்ளது. நிறைவுப்பகுதியில்

முல்லை போன்ற மலர்களாலும் அகில், ஆரம் போன்றவற்றின் நறும்புகையாலும், கதுப்பெண்ணெய் முதலியன தடவுவதாலுமே கூந்தல் நறுமணம் பெறுகின்றது என்ற உண்மையை உணர்த்துகின்றன (2005:106)

என்றும் கூறப்பட்டுள்ளது.

முடிவுகள்

 1. பல்வேறு கல்லூரிகள், தமிழ்மன்றங்கள் முதலியவற்றின் வழியாக நடைபெற்ற கருத்தரங்கங்களில் வெளியாகியுள்ள 37 ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து குறுந்தொகைக்குரிய பதினைந்து கட்டுரைகள் நூலாசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூல் வடிவம் பெற்றுள்ளது.
 2. இந்நூலிலுள்ள கட்டுரைகளின் போக்கு இது ‘திறனாய்வு வகையைச் சார்ந்த நூல்” என்பதை உணர்த்துகின்றது.
 3. இப்பதினைந்து கட்டுரைகள் எழுதப்பட்டுள்ள நிலைகளுக்கேற்ப அவற்றினை 1. உரை, பதிப்புக்கட்டுரைகள் 2. திணை வேறுபாடு, பாடவேறுபாட்டுக் கட்டுரைகள் 3. இலக்கியக் கொள்கைசார் கட்டுரைகள் 4. பாடலின் அமைப்பு, தொகுப்பு, புலவர்களது உணர்வுசார் கட்டுரைகள் 5. தனிப்பாடல், ஆளுமை விளக்கக் கட்டுரைகள என வகைப்படுத்தலாம். இதன் மூலம் ‘குறுந்தொகையின் பன்முகத்திறன் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
 4. தி.சௌ.அ.வின் குறுந்தொகை உரைத்திறன், சோ. அருணாசலதேசிகரின் குறுந்தொகைப் பதிப்பு நெறிகள் ஆகிய கட்டுரைகள் உரை, பதிப்புக்களின் நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டும் நிலையில் உள்ளன. ‘குறுந்தொகைப் பதிப்பு வரலாறு’ எனும் கட்டுரை குறுந்தொகைப் பதிப்புத் தொடர்புடைய முதன்மைத் தகவல்களைத் தந்துள்ளது.
 5. மு.வ.வின் கொங்குதேர் வாழ்க்கை, குறுந்தொகைச் செல்வம், மு.ரா. பெருமாள் முதலியாரின் ‘எளிய சொற்களில் இனிய குறுந்தொகை’ ஆகிய நூல்கள் பதிப்பு நூல்கள் ஆகா.
 6. சமுதாயத்தில் காணலாகும் குற்றங்களை நாகரிமாக உணர்த்துவதற்காகவே புலவர்கள் தம் பாடல்களில் உள்ளுறை உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர் எனும் நூலாசிரியரின் கருத்துச் சிந்திக்கத்தக்கது.
 7. திணைவேறுபாடு, பாடவேறுபாடு, உரைவேறுபாடு ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் மூலம் குறுந்தொகைக்குப் பாட, திணை வேறுபாடுகள் நீக்கப்பட்டு மரபு சார்ந்த அறிவியல் தன்மையோடு கூடிய செம்மாந்த உரைப்பதிப்பு வெளிவரவேண்டும் என்னும் கருத்து நூலாசிரியரால் வலியுறுத்தப் பெற்றுள்ளது.
 8. குறுந்தொகையின் ஆளுமை விளக்கக்கட்டுரை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அதில் ‘குறுந்தொகை ஆய்வடங்கல்’ தயாரிக்க வேண்டும் எனும் நூலாசிரியரின் கருத்துக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

பார்வை நூல்கள்

 • அருணாசல தேசிகர் சோ. (பதி.), 1933, குறுந்தொகை மூலம். சென்னை: பி.என். அச்சகம்.
 • அறவேந்தன் இரா. 2010, பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள். காரைக்குடி: தாயறம்.
 • இராகவையங்கார். ரா. (உரை.), 1947, குறுந்தொகை விளக்கம். சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
 • ……..,(உரை.), குறுந்தொகை விளக்கம். சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
 • …….., (உரை.), குறுந்தொகை விளக்கம். சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
 • சாமிநாதையர் உ.வே. (உரை.), குறுந்தொகை. சென்னை: கேஸரி அச்சுக்கூடம்.
 • …….., (உரை.), குறுந்தொகை. சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
 • திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் (உரை.), குறுந்தொகை மூலமும் புத்துரையும். வேலூர்: வித்யாரத்னாகர அச்சுக்கூடம்.
 • சௌரிப்பெருமான் அரங்கனார். தி. (உரை.), குறுந்தொகை மூலமும் புத்துரையும் (மீள் அச்சு). சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
 • சோமசுந்தரனார். பொ.வே. (உரை.), ஐங்குறுநூறு, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.
 • பெருமாள் முதலியார். மு.ரா. 1985. எளிய சொற்களில் இனிய குறுந்தொகை. சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.
 • நடராசன். தி.சு. 2016. திறனாய்வுக் கொள்கைகளும் அணுகுமுறைகளும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட்.,
 • மணி. ஆ. 2005. குறுந்தொகைத் திறனுரைகள். தேனி, கெங்குவார்பட்டி: தமிழன்னை ஆய்வகம்.
 • ராஜகணபதி கா. 2016, பேராசிரியர் ஆ.மணியின் வாழ்க்கை வரலாறு. சென்னை: கலைஞன் பதிப்பகம்.
 • வரதராசன் மு. 1954. கொங்குதேர் வாழ்க்கை. சென்னை: பாரிநிலையம்.
 • ……., குறுந்தொகைச் செல்வம். சென்னை: பாரிநிலையம்.
 • ……, குறுந்தொகை விருந்து. சென்னை: தாயக வெளியீடு.
 • UNIVERSAL DELUXE DICTIONARY. Coimbatore: Deluxe Publishers.
 • Google Translate – APP – Access on 19.01.2018.

கா.ராஜகணபதி

முனைவர் பட்ட ஆய்வாளர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைநகர்.