தொகைநூல்கள் அகம், புறம் என்னும் பொருணெறி மரபு பற்றிப் பல்வேறு நல்லிசைப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதியேயாகும். தொகைநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் கொண்டு 402 பாடல்களை உள்ளடக்கிய நூலாகும். ஐந்திணைகளை உள்ளடக்கிய இந்நூலில், முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்கள், மலர்கள் பற்றிய பதிவுகளைப் பற்றி விளக்கியுரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

மரங்களும் மலர்களும்

வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மை பெறுவது மர இனமாகும். பொதுவாக மர இனம் அதன்கண் அமைந்திருக்கும் உள்ளீட்டைக் கொண்டே வரையறுக்கப்படுகின்றது. பதினைந்திலிருந்து இருபது அடி வரை வளர்வதையே மரம் என்று தாவரவியலாளர் கூறுவர்.

குறுந்தொகை – முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்களான பிடவு, காயா, குருந்து, கொன்றை முதலிய மரங்கள் மிகவும் உயரமற்றுக் குறுமரங்களாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் முல்லை நிலத்தில் உள்ள மரங்களின் மலர்கள், தலைவனின் கார்கால வரவினை உணர்த்துவதற்கும் முல்லைநிலக் காட்டின் அழகினை வெளிக்காட்டும் வகையிலும் ஆயர்கள் அம்மரத்திலுள்ள பூக்களைக் கொய்து தலையில் சூடிக் கொள்வதாகவும் படைக்கப்பெற்றுள்ளன.

கொன்றை

பூவால் பெயர்பெற்ற மரங்களில் கொன்றை முதன்மையானதாகும். இதன் பூக்கள் பொன்னிறத்தில் மாலைகள் தொடுத்தாற்போல் சரம்சரமாகத் தோன்றும். குறுந்தொகையில் கொன்றை 5 இடங்களில் (21, 66, 148, 183, 233) காணப்படுகின்றது.

வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு

            பொன்செய் புனையிழை காட்டிய மகளிர்

            கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை

            கானங் காரெனக் கூறினும்

            யானோ தேறேன் அவர்பொய்வழங் கலரே          (குறுந்.21)

என வரும் பாடலில், மகளிர் பொன்னாற் செய்த தலையணிகளை இடையிடையே கூந்தலில் அணிந்தாற்போலக் கொன்றை மரத்தின் தழையிடையே நீண்ட பூங்கொத்துக்கள் தோன்றும். தலைவர் கார்ப்பருவத் தொடக்கத்தே வினைமுடித்து மீண்டு வருவேன் என்று கூறிப் பிரிந்தார். அவர் வாராமையாலேயே இது கார்ப்பருவம் அன்று. ஏனெனில், தலைவர் பொய் கூறமாட்டார் எனத் தலைவி தோழியிடம் உரைத்துத் தலைவினின் பிரிவை ஆற்றியிருக்கின்றாள். இச்செய்தியின்மூலம் கொன்றை கார்ப்பருவத்தில் மலர்ந்து தலைவனின் வரவை உணர்த்தப் பயன்படுத்தப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

காயாபூவை மரம்

பூவால் பெயர்பெற்ற மரங்களில் காயா மரமும் ஒன்று. இப்பூவானது முல்லை நிலத்தின் செந்நிலப் பெருவெளியிலும் சில நேரங்களில் குறிஞ்சியிலும் பூக்கும் இயல்புடையது. கார்காலத்தில் மலரும் இதன் பூக்கள் காலையில் மலர்ந்து இரவில் உதிரும் தன்மையுடையன. காயா என்னும் பெயரினையுடைய இப்பூவினை ‘பூவை’ எனும் பெயரிலும் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும் ‘பூவைநிலை’ எனும் துறை குறிப்பிடப்பெற்றுள்ளது.

தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்          (தொல்.புறத்.5:10)

இதற்கு உரை வகுத்த இளம்பூரணர், பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல் நாடெல்லை காடாதலின் அக்காட்டினைக் கடந்து செல்வோர் அப்பூவைக் கண்டு கூறுதல் உன்னைக் கண்டு கூறினாற்போல என்று கூறுகின்றார்.

குறுந்தொகை – முல்லைத்திணையில் காயா மரம் பற்றிய செய்தி ஒரு பாடலில் (183) இடம்பெற்றுள்ளது.

சென்ற நாட்ட கொன்றைஅம் பசுவீ

நம்போல் பசக்கும் காலை தம்போல்

சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகோட்டு

இரலை மானையும் காண்பர்கொல் நமரே

புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை

மென்மயில் எருத்தின் தோன்றும்

கான வைப்பின் புன்புலத் தானே    (குறுந்.183)

என வரும் பாடலில், மழைமுகம் காணாது பொலிவழிந்திருந்த காயா மரத்தின் மலர்கள், மழை பெய்த காரணத்தால் மயிலின் கழுத்தைப் போல் பொலிவுற்றுத் தோன்றும். இக்கார்காலத்தில் கலைமான் பிணையைத் தழுவிக் கொண்டிருக்கும் காட்சியைக் காணும் நம் தலைவர் விரைந்து வந்துவிடுவார் எனத் தலைவி தோழியிடம் கூறி ஆற்றியிருக்கின்றாள். இதன்மூலம் காயா கார்காலத்தில் மலரக்கூடியது என்பது தெரிகின்றது. இதனை,

கருதனைக் காயா கணமயில் அவிழ          (சிறுபாண்.165)

எனும் சிறுபாணாற்றுப்படைப் பாடலடியின் மூலமும் அறியலாம்.

பிடவம்

பிடவம் முல்லைநிலத்தில் வளரக்கூடிய ஒரு குறுமரமாகும். குறுந்தொகை இதனை ‘பிடவு’ என்கிறது. குளிர்ச்சி பொருந்திய முல்லைநிலக் காடுகளில் செழித்து வளரக்கூடிய பிடவமரத்தின் மலர்கள் கார்காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும். இதனுடைய மலர் வெண்மை நிறத்துடன், கொத்தாக மலரும் இயல்புடையதாகும். பிடவ மலரைப் பற்றித் தொல்காப்பியர்,

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்        (தொல்.உயிர்.27)

எனும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார். பிடவமரத்தை நாட்டார்வழக்கில் ‘புடன்’ என அழைப்பதாகப் பி.எல். சாமி குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் பிடவமரத்தை யாமரத்தோடு இணைத்துக் குறிப்பிட்டுள்ளார். குறுந்தொகை – முல்லைத்திணையில் பிடவம் பற்றிய குறிப்பு ஒரு பாடலில்(251) காணப்பெறுகின்றது.

மடவ வாழி மஞ்ஞை மாஇனம்

கால மாரி பெய்தென அதன்எதிர்

ஆலலும் ஆலின பிடவும் பூத்தன

கார்அன்று இகுளை தீர்கநின் படரே

கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்

புதுநீர் கொளீஇய உகுத்தரும்

நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே           (குறுந்.251)

எனும் பாடலடிகளில் சென்ற காலத்துப் பெய்யாது எஞ்சி நின்ற மழை இப்பொழுது பெய்கிறது. மழை பொழிய மயில் ஆடுவதும் பிடவம் பூப்பதும் அவற்றிற்குரிய இயல்புகளாகும். பருவம் மாறி மழை பெய்கிறது. ஆகையால் இது கார்காலம் அன்று எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கின்றாள். இதனைக் கூர்ந்து நோக்குமிடத்து, கார்காலத்தில் பிடவம் பூக்கும் என்பதை அறிய முடிகின்றது.

 குருந்தம்

குருந்த மரம் புனத்திலும் சுரத்திலும் பொழிலிலும் வளரக்கூடிய ஒரு சிறுமரமாகும். குவிந்த இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படும். சங்க இலக்கியத்தில் இம்மலரினைக் குறிக்க, குரா, குரவு, குருந்தம் எனும் சொல்லாட்சிகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. குருந்து என்பது புனஎலுமிச்சை வகையைச் சார்ந்தது என்பதை,

புனஎலு மிச்சை குருந்தெனப் புகலுவர்      (பிங்.2777)

எனும் பிங்கல நிகண்டுக் குறிப்பின்வழி அறியலாம். இத்தகு சிறப்பைப் பெற்ற குருந்தம் குறுந்தொகை – முல்லைத்திணையில் ஓரிடத்தில் (148) இடம்பெற்றுள்ளது.

காசின் அன்ன போதுஈன் கொன்றை

குருந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்

கார்அன்று என்றி ஆயின்

கனவோ மற்றுஇது வினவுவல் யானே      (குறுந்.148)

எனும் பாடலில் தலைவி தோழியிடம், பேரரும்பை வெளிப்டுத்தும் கொன்றை மரம் குருந்த மரத்தோடு சேர்ந்து சுழலும் இந்தக் காலத்தையும் கார்காலம் அன்று என்று நீ கூறுவாயாயின், இப்படித் தோன்றுவது எல்லாம் கனவுதானா என நான் கேட்கின்றேன், பதில் கூறுவாயாக என்கிறாள். இதனை நோக்குமிடத்து, குருந்தமரம் தலைவனின் வரவை உணர்த்துவதற்குக் காற்றில் ஆடியது என்பது புலனாகின்றது.

முல்லை

சங்க அகப்பாடல்களில் மகளிரின் கற்புநெறியானது வெண்மை நிறமுடைய முல்லைப்பூவோடு தொடர்புபடுத்தியே பேசப்பெற்றுள்ளது. இதனை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்           (சிறுபாண்.3)

முல்லை சான்ற கற்பின்

            மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே    (நற்.142)

என்பன போன்ற குறிப்புகளால் உய்த்துணரலாம்.

காடும் காடு சார்ந்த நிலப்பகுதியையும் உடைய முல்லை நிலத்தில் முதன்மை பெற்று விளங்குவது முல்லைப்பூ. இதன் மலர் வெண்மை நிறத்திலும் கொடி பசுமை நிறத்திலும் இலை கூட்டு இலையாகவும் வளரும் இயல்புடையது. இம்முல்லைப்பூப் பற்றிய குறிப்பானது குறுந்தொகை – முல்லைத்திணையில் 11 பாடல்களில் (126, 162, 182, 188, 193, 221, 234, 275, 323, 358, 387) காணப்பெறுகின்றது.

அவரோ வாரார் முல்லையும் பூத்தன

பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய

பாலொடு வந்து கூழொடு பெயரும்

ஆடுடை இடைமகன் சென்னிச்

சூடிய எல்லாம் சிறுபசு முகையே    (குறுந்.221)

எனும் பாடலில், தலைவி தோழியிடம், முல்லையும் பூத்தன, பறியோலை உடைய கையினரான இடையர்கள் ஆடுகள் உள்ள மந்தையில் குட்டிகளை விட்டுவிட்டு அவர் இல்லத்திற்குப் பாலொடு வந்து தமக்கு உணவான கூழைப் பெற்று மீண்டு செல்லுகின்ற ஆடுகளை உடைய இடையன் தன் தலையில் சூடிக் கொண்டது சிறுமுல்லை அரும்புகளை எனக் கூறுகின்றாள்.

இப்பாடலின்மூலம் முல்லைப்பூப் பூத்தல் கார்காலத்தின் அறிகுறி என்பதனை அறிய முடிகின்றது. மேலும், மகளிர் மட்டுமின்றி ஆடவரும் முல்லைப்பூவைச் சூடினர் என்பதனை அறிய முடிகின்றது.

தொகுப்புரை

  • குறுந்தொகை – முல்லைத்திணைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள மரங்கள், மலர்கள் அனைத்தும் தலைவன் – தலைவியின் அகவாழ்க்கையை எடுத்துக்காட்டப் பயன்படும் சிறந்த குறியீடுகளாக அமைவதை அறிய முடிகின்றது.
  • முல்லை நிலத்தில் பிடவம், கொன்றை, காயா முதலிய குறுமரங்கள் காணப்பட்டதனைக் குறுந்தொகைப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
  • மணத்தால் பெயர் பெற்ற கார்கால மலர்களில் பிடவமும், நிறத்தால் பெயர் பெற்ற காயாமலரும் தலைவனின் வரவைத் தலைவிக்கு உணர்த்துவதையும், வெண்மை நிறமுடைய முல்லைப்பூவானது மகளிரின் கற்பின் தூய்மையை உணர்த்துவதையும் குறுந்தொகை முல்லைத்திணைப் பாடல்கள் சுட்டி நிற்கின்றன.
  • சங்ககாலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்துள்ளனர் என்பதனையும் குறுந்தொகை – முல்லைப்பாடல்கள்வழி அறிய முடிகின்றது.

துணைநின்றவை

  • ஆனந்தம் வி.வி.வி., (ஆ.வி.இ.), மக்கள் வாழ்வில் மரங்கள், வளவன் வெளியீடு, சென்னை.
  • சாமி பி.எல்., 1973, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
  • சாமிநாதையர் உ.வே.(உரை.), 1973(மு.ப.), குறுந்தொகை, உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
  • இலம்போதரன் சு.(பதி.), 2005 (இ.ப.), பிங்கல நிகண்டு, வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை.
  • ……………………., 1974(ஆ.ப.), தொல்காப்பியம்பொருளதிகாரம்இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

இரா. பிரசன்னா

தமிழ் – முனைவர் பட்ட ஆய்வாளர்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி – 24.

meenuthangam2226@gmail.com