கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்ட வளாகம், கீழ்த்திசைச் சுவடியியல் நூலகமானது இந்தியாவில் உள்ள சுவடியியல் நூலகங்களில் 65,000க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளைக் கொண்ட முதன்மையான நூலகம் என்ற பெருமையைக் கொண்டது. இப்பெருமைக்கு முதன்மைக் காரணமாக அமையக்கூடியவர்கள் திருவிதாங்கூர் அரச குடும்பங்களும், அவர்களால் இத்துறையில் நியமிக்கப்பெற்ற பொறுப்பாளர்களும், இயக்குநர்களுமே ஆவர். இத்துறையின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாகவே இக்கட்டுரை அமைகின்றது.

துறை வரலாறு

திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் கலை மற்றும் இலக்கிய வளர்ச்சியில் சிறந்து விளங்கினர். 1903இல் அரசராக இருந்த ஸ்ரீமூலம் திருநாள் அவர்கள் வடமொழியில் பண்டிதரான T.கணபதி சாஸ்திரி அவர்களைச் சுவடிகளைப் பதிப்பிக்க நியமித்ததோடு, 1908இல் ‘வடமொழிப் பொறுப்பாளர் நிறுவனம்’ எனும் தனி நிறுவனத்திற்கு முதல் பொறுப்பாளராகவும் பணியமர்த்தினார். இவர் எண்பத்து ஏழிற்கும் மேற்பட்ட நூற்களைப் பதிப்பித்துள்ளார்.

இவர் 1924இல் பதிப்பித்த பாஷ நாடகத்திற்காக ‘மகாமகோ பாத்தியாய’ எனும் பட்டமும், ஜெர்மனியில் உள்ள டுபிங்கன் பல்கலைக்கழகம் ‘முனைவர்’ பட்டமும் அளித்துச் சிறப்பித்தன. இதே ஆண்டு ‘மலையாளப் பொறுப்பாளர் நிறுவனம்’ தொடங்கப்பட்டு, முதல் பொறுப்பாளராக உள்@ர் S. பரமேஸ்வரன் ஐயர் பணியமர்த்தப்பட்டார். இவர் பல்வேறு சுவடிகளை ஆராய்ந்து எழுதிய மலையாள இலக்கிய வரலாற்றுக் கையெழுத்துப் பிரதிகள் இன்றளவும் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

1938இல் இந்த இரண்டு நிறுவனங்களும் கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ‘கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1966இல் ‘கீழ்த்திசைச் சுவடியியல் நூலகம் மற்றும் ஆய்வு நிறுவனம்’ என்ற பெயரையும் பெற்றது. இறுதியாக கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம் வளாகத்தில் 1982இல் அரண்மனை வடிவில் கட்டப்பட்ட இந்நூலகத்திற்குச் சுவடிகள் கொண்டு வரப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து 1982இல் இத்துறையின் இயக்குநராகப் பணியாற்றிய இராகவன் பிள்ளை அவர்களின் முயற்சியால் வடமொழி முனைவர்பட்டப் படிப்பும், பின் தமிழ் முனைவர் பட்டப்படிப்பும், மலையாள முனைவர் பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டன.

சுவடிகளின் பொருண்மை வகைப்பாடு

இங்கு வேதம், மந்திரம், இலக்கணம், தந்திரம், மருத்துவம், ஜோதிடம், புராணம், சங்கீதம் போன்ற பொருண்மைகளில் ஓலைச்சுவடிகளும், காகிதச் சுவடிகளும் காணப்படுகின்றன.

எழுத்து முறைகள்

மேற்கண்ட பொருண்மைகளில் அமைந்த ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் வட்டெழுத்து, கோலெழுத்து,  மலையாண்மா, தேவநாகரி, நந்தி நாகரி, அரபிக், பர்மிஷ், கிரந்த எழுத்து, நேவாரி, ஆங்கிலம் முதலான எழுத்து முறைகளில் எழுதப்பட்டுள்ளன.

மொழி

தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், பர்மிஷ், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் முதலான மொழிகளில் எழுதப்பெற்ற ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் இங்குக் காணப்படுகின்றன.

எழுதுபொருட்கள்

ஓலை, செப்பேடு, துணி, பேப்பரஸ், பு+ர்ஜபத்ரம், அகருமரத்தோல், யானைக்கொம்பு, கையால் செய்யப்பட்ட காகிதங்கள், பழங்கால எழுதுபொருட்கள் போன்றவை இங்குக் காணப்படுகின்றன.

இதழ்கள்

இத்துறையில் ஆண்டுதோறும் ‘Journal of Manuscript Studies’ எனும் ஆங்கில மற்றும் சமஸ்கிருத இதழும், ‘பிராஜீன கைரளி’ எனும் மலையாள இதழும் வெளிவருகின்றன. இவை பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இதழ்களாகும்.

பராமரிப்பு

     இங்குள்ள ஓலைச்சுவடிகள் இரண்டு முறைகளில் பராமரிக்கப்படுகின்றன. ஒன்று பாரம்பரிய முறை, மற்றொன்று நவீன முறை.

     பாரம்பரிய முறை

கட்டிவைக்கப்பட்ட சுவடிகளை அவிழ்த்து, பொடி நீக்கி, கற்பு+ரப்புல் எண்ணெய் தேய்க்கப்படுகிறது. மற்றும் கற்பு+ரப்புல் எண்ணெய்யும் ஐசோபுரொபைலும் சரிவிகிதத்தில் எடுத்துத் தேய்க்கும் முறையையும் பின்பற்றுவதோடு, சுவடிக்கட்டுகள் இருக்கும் அறைகளில் சிவப்பு துணியில் கற்பு+ரம் சேர்த்துக் கட்டிவைக்கப்படுகிறது. காகிதச் சுவடிகளுக்கு இடையே பாம்பின் தோல் வைத்திருப்பதால் அவை நீண்ட நாள் அழிந்து போகாமல் இருக்கின்றன.

     நவீனமுறை

     ஓலைச்சுவடிகளை மின்படிவங்களாகச் சேகரிக்கும் முறை விரைவில் பின்பற்றப் பெறவுள்ளது.

அரியவகைச் சுவடிகள்

 • இத்துறையில் 611 ஓலைகளைக் கொண்ட தமிழ்ச்சுவடியான ‘கந்தபுராணம்’ அதிக ஓலைகளைக் கொண்ட சுவடி எனும் பெயர் பெருகின்றது.
 • எண்ணிக்கையில் ஆறு ஓலைகளை மட்டுமே கொண்ட வைத்தியச் சுவடி மிகவும் சிறிய சுவடி எனும் பெயர் பெறுகின்றது.
 • 67 செ.மீ உடைய ‘ஜாதக பல விசேஷ நிரூபணம்’ மிகவும் நீளம் கூடிய சுவடியாகும்.
 • AD 1521இல் மலையாள மொழியின் முதல் வடிவமான ஆரிய எழுத்தில் எழுதப்பட்ட ‘தெய்வாகமம் பாஷ’ எனும் சுவடியே மிகப் பழமையானது.
 • AD 1390இல் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட சாமவேதத்தின் ஒரு பகுதியான யாகத்தைக் குறிப்பிடும் ‘ஊக கானம்’ எனும் பெயரிலான சுவடி காகிதச் சுவடிகளில் மிகவும் பழமையானது.
 • மகாராஷ்டிராவில் இருந்து கிடைக்கப்பெற்ற 300 ஆண்டுகாலப் பழமையான ‘சித்திர மகாபாரதம்’ காகிதச் சுவடியானது, மகாபாரதக் கதையை மராட்டி மொழியில் விளக்குகின்றது. இச்சுவடியில் தங்கமுலாம் பு+சப்பெற்றுள்ளது.
 • AD1522இல் எழுதப்பட்ட ‘அத்யாத்ம இராமாயணம்’ எனும் சுவடியானது இராமாயணக் கதையை 98 ஓலைகளில் 318 வரைபடங்களாக விளக்குகின்றது. இதனை அவ்வாறே புத்தக வடிவமாக்கியவர் விஜயன் ஆவார்.
 • ‘இந்தோனேஷியன் சித்திர இராமாயணம்’ இராமாயணக் கதையை இந்தோனேஷியன் மொழியில் ஆங்கில எழுத்துப் பயன்படுத்திப் படங்களுடன் விவரிக்கின்றது.
 • ‘சிவலிங்காங்க சாசனம்’ எனும் தந்திர சுவடியில் இரண்டு ஓலைகளை ஒட்டிவைத்தால் மட்டுமே பொருள் புரியும் வண்ணம் படம் வரையப்பட்டுள்ளது.
 • கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை மடத்திலிருந்து கிடைக்கப் பெற்ற ‘ஆர்ய மஞ்சுஸ்ரீ மூலகல்பம்’ எனும் புத்தமதச் சுவடியானது, ‘சீதாளம்’ எனும் ஓலையில் ‘நேவாரி’ எழுத்துமுறையைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
 • திருவிதாங்கூரின் அரசராக இருந்த ஸ்ரீமூலம்திருநாள் அவர்களின் ‘சங்கீத நூல்கள்’ இங்கு உள்ளன.
 • ‘சாமுத்திரிகா லக்ஷணம்’ எனும் தமிழ்ச்சுவடியைப் படியெடுத்தவர் ஓலையின் ஒரு பக்கம் ‘முப்பது’ வரிகள் வருமாறு எழுதியுள்ளார். இதனை நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மட்டுமே வாசிக்க முடியும்.
 • ‘அக்ஷரப்ரஷ்ணம்’ எனும் ஜோதிடச் சுவடியின் ஒரு பக்கம் இராமாயணப் பாடல் வரிகளும், அதன் மறுபுறம் அச்சுவடியின் ஓலையைத் தேர்ந்தெடுப்போரின் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • பல காகிதச் சுவடிகளில், இலைச்சாறு போன்ற இயற்கையாகக் கிடைக்கக் கூடிய நிறம் பயன்படுத்திக் குதிரைகள், பகவத்கீதை படங்கள் போன்றவை வரையப்பட்டுள்ளன.
 • சுவடி எழுதுவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓலைகளின் இருபுறமும் மரப்பலகைகள் வைத்துக் கட்டப்படும். இவற்றிற்கு மாறாக யானைக் கொம்புகளில் திருமாலின் உருவம் மற்றும் இயற்கை நிறப்பு+ச்சுச் செய்த சுவடிகளும் இங்குக் காணப்படுகின்றன.
 • AD 1770இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறமடத்தின் குடும்ப விவரங்கள் எழுதப்பட்ட செப்பேடுகள் இங்குக் காணப்படுகின்றன.
 • AD 1674இல் வட்டெழுத்தில் எழுதப்பெற்ற ‘இராம சரிதம்’ என்னும் சுவடியானது மலையாள மொழிக்குச் செம்மொழித் தகுதி கிடைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
 • ஓலைச்சுவடிகளை வட்டமாக வெட்டி ருத்திராட்சம் போல நூலில்கட்டி வடிவமைக்கப்பட்ட சுவடியில் ‘தேவி மகாத்மீயம்’ 11ஆவது பகுதி எழுதப்பட்டுள்ளது.

வெளியீடுகள்

இத்துறையின் பதிப்புகள் அனைத்தும் Trivandrum Sanskrit Series, Trivandrum Malayalam Series, Trivandrum Tamil Series மூலம் வெளிவருகின்றன.

வடமொழிப் பதிப்புகள்

 • அத்வைத சாதக – T.பாஸ்கரன்
 • இராமாத்யுதயம் – P.விசாலாக்ஷி
 • பு+ர்வபாரதம் சம்பு, முஷிகவம்ச – K.இராகவன் பிள்ளை

தமிழ்ப் பதிப்புகள்

 • இராமாயணத் திருப்புகழ், நன்னூல் புதுவுரை, கீதாசாரத் தாலாட்டு – ஓ.பத்மகுமாரி

மலையாளப் பதிப்புகள்

 • பாடகதாமாலிகா –  சாம்
 • வாதில்துறபாட்டுகள் – P.K.சுமதிக்குட்டி
 • கோபால லீலாமிர்தம் கம்ச பாட்டு – K.G.ஸ்ரீலேகா
 • நளசரிதம் மணிப்பிரவாளம் – M.ஸைனபா
 • மருந்துகளும் யோகங்களும் – ரஜனி S

அட்டவணைகள்

          இங்குள்ள சுவடிகள் அனைத்தும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.

வடமொழி

     வடமொழிச் சுவடி அட்டவணை – Vol : 1 – 7

தமிழ்

தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை : 1-3 பத்மநாபன் தம்பி,                       மற்றும் ஓ.பத்மகுமாரி

தமிழ்ச் சுவடிப் பெயர்கள் -ஓ.பத்மகுமாரி

மலையாளம்

மலையாளச் சுவடி விளக்க அட்டவணை – Vol : 1

மலையாள அட்டவணை – 1

இத்துறையில் பதிப்பிக்கக் கூடிய நூல்கள், இதழ்கள் மற்றும் ஓலைச்சுவடி அட்டவணைகள் கேரளப் பல்கலைக்கழகத்தின் பதிப்பியல் துறையில் கிடைக்கும்.

சுவடியியல் விருப்பப் பாடம்

பிற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தமது விருப்பப் பாடமாகச் சுவடியியலைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கும் சுவடியியல் துறையின் முன்முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் வட்டெழுத்து, கிரந்த எழுத்து, தமிழ், மலையாளம், பிராமி முதலான எழுத்து முறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

கையெழுத்துப் பிரதிகள்

வடமொழி மற்றும் மலையாள மொழிகளில் சிறந்த கவிஞர்களாகக் கருதப்படுகின்ற கணபதி சாஸ்திரிகள், உள்@ர்  S.பரமேஸ்வரய்யர், வள்ளத்தோள் நாராயண மேனோன், குட்டிக்கிருஷ்ணனார், T.கோவிந்தபிள்ளை, கேரளவர்மா வலியகோயித் தம்புரான், சர்தார் K.M. பணிக்கர் ஆகியோர் படைப்பின் கையெழுத்துப் பிரதிகளும், தமிழ்ப் புதின ஆசிரியரான அ.மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ புதினத்தின் கையெழுத்துப் பிரதிகளும் இங்கு காணப்படுகின்றன.

விருதுகள்

 • இந்திய அரசால் 2007இல் ‘ஆர்யமஞ்சு ஸ்ரீ மூலகல்பம்’ எனும் சுவடிக்காக ‘vijnananidhi’ பட்டம் கிடைத்துள்ளது.
 • Bhashakkoru Dollar – K.G. ஸ்ரீலேகா அவர்களுக்கு சிறந்த நெறியாளர் விருது.
 • Malayalabhasha Parishath – M.சைனபா அவர்களுக்கு ‘சி.வி. இராமன் பிள்ளை’ நினைவு விருது.
 • Bhashakkoru Dollar – ஸஜினா, மாயா.K.S. ஆகியோர்க்குச் சிறந்த ஆய்வேட்டிற்கான விருது.

நிறைவுரை

           நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகச் சுவடிகள் பல்வேறு அரண்மனைகள், குடும்பவீடுகள், தனிநபர் போன்றோர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட  ஆவணங்கள் ஆகும். இத்துறையில் உள்ளோர் இன்றளவும் சுவடி சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வுகளையும் பல்வேறு இடங்களுக்குச் சென்று செய்து வருகின்றனர்.

துணைநின்றவை

 1. Journal of Manuscript Studies – Vol : XXXI and XXXII
 2. Thalakshara -2018 – M.சைனபா

VIJI.P

Research Scholar

Ori & Mss Library

University of Kerala

09496411153, 08281471857

vijimarayoor@gmail.com