உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதனே உச்சம். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவே உச்சம். அறிவு வளரவளர மனிதன் வளர்கிறான். மனிதன் வளரவளர அறிவு வளர்ச்சியடைகிறது. அறிவு வளர்ச்சிக்கு உலகின் அனைத்து மனித இனங்களும் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளன. உலகின் ஒவ்வொரு பெருநிலப்பரப்பும் (நாடு) ஒரு குறிப்பிட்ட அறிவு வயப்பட்டதாக, ஒரு குறிப்பிட்ட சிந்தனையைத் தன் வாழிடத்திற்கு ஏற்ப வளர்த்தெடுத்துள்ளது. இந்நிலையில் இன்றைய இந்தியா என்ற பண்டைச் சிந்து நிலவெளிப்பரப்பில் ஆன்மீகத்தை முன்னிறுத்திய அறிவு அதாவது மெய்ஞ்ஞான விஞ்ஞானம் என்ற அறிவுத்துறை வளர்ந்துள்ளது. இதில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக்கத்தைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கவிஞர் வெள்ளியங் காட்டான் சிறுகுறிப்பு

கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி. பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம் வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சிலகாலம் கோவையிலிருந்து வெளிவந்த நவஇந்தியா இதழில் மெய்ப்புத்திருத்துநராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்றுக் கன்னடப்படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1991 – இல் தனது 87ஆம் வயதில் காலமானார்.

இவர் வைதீகத்தின் ஒரு தத்துவப் பிரிவான அத்துவிதச் சிந்தனையை முன்னிறுத்தி ஆன்மீகத்தின்வழிப் பொதுவுடைமையை வலியுறுத்தும் சிந்தனையாளர்களுள் ஒருவர். மேலும் இவர் சித்தர்களின், குறிப்பாகத் திருமூலர் வழிச் சைவசமயம் மற்றும் சிவனை முன்னிறுத்தும் சிந்தனையாளர்.

 

 

பல கடவுள் வழிபாடும் ஓரிறைக் கோட்பாடும்

மனிதன் என்று சிந்தித்தானோ அன்றே வழிபாடும் தோன்றிவிட்டது. மனிதன் தனக்குப் பயனுடையவைகளையும், பயத்தை ஏற்படுத்துபவைகளையும், குல முன்னோரையும் வழிபட்டு வந்தான். இந்நிலையில் சிந்தனை வளர்ச்சியின் விளைவாகவும், பேரரசு உருவாக்கத்தின் விளைவாகவும் ஒரே உலகம், ஒரே அரசன், ஒரே கடவுள் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பெருநிலமும் (நாடு) ஒரு குறிப்பிட்ட கடவுளை முன்னிறுத்தியது.

“பலகடவுள் கொள்கையிலிருந்து ஒரு கடவுள் கொள்கைக்கு முன்னேறியதை அடையாளப்படுத்தும் கட்டங்கள் இருந்தது என்பதற்குத் தலைமைக் கடவுள் கோட்பாடு ஒரு சான்றாக உள்ளது. மேலும் வேதகால ஆரிய இனத்தினரின் சமயம் பலகடவுள் சமயமாக இருந்தது என்ற பொதுவான கருத்திற்கு அப்பால் கடவுள் கருத்தில் அபிவிருத்தி இருந்தது அல்லது தனி முதல் கடவுள் எண்ணக் கருவை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் எனக் கருதலாம். இதற்காக “இருப்பது ஒரே ஒரு உண்மைதான் ஞானியர் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வேதப்பாடலை இங்குச் சுட்டிக்காட்டலாம். எனினும் முழுமுதல் கடவுள் சார்பான வழிபாட்டு அமைப்புக்களில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியிருந்தன” என்கிறார் எம்.எஸ்.எம்.அனஸ் (2006:73,4).

அத்துவிதத்தின் அடிப்படை

கடவுள் ஒருவனே அவனே பிரம்மன். அதுவே உண்மை, அதுவே சத்தியம் அனைத்தின் உட்பொருளாக இருப்பது அதுவே. அனைத்தின் இயக்கமாக இருப்பதும் அதுவே. எனவே எவன் பிரம்மத்தை நேசிக்கிறானோ, எவன் பிரம்மத்தை ஒளியுடையதாக்குகிறானோ அவனே பிரம்மமாகிறான். அவனே கடவுளாகிறான். ஏனெனில் பிரம்மம் உனக்குள் உள்ளது, புறத்தே இல்லை. இந்த உலகத்தில் உள்ள அனைத்தின் உட்பொருளாக இருப்பது பிரம்மம். இந்த உலகமே பிரம்மத்தால் ஆனது என்ற ஒற்றைக் கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தக்கூடியது அத்துவிதம்.

பிரம்மம் விளக்கம்

கவிஞர் வெள்ளியங்காட்டான் உபதேசத்தின் வழியும், திருமந்திரத்தின் வழியும் பிரம்மத்திற்கான விளக்கத்தைக் கொடுக்கிறார். “ஓம்பிரம்மம்” ‘ஓம்’ எனும் இந்த ஒரு எழுத்துதான் பிரம்மம் என்கிறது உபநிசத்து (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி – 2:478).

‘ஓம்’ எனும் எழுத்தின் பொருளை உபநிசத்து நமக்கு மேலும் விவரித்து விளக்குகிறது. அதுவே நான், அதுவே ஆத்மா, அதுவே சுகம் மற்றும் அதுவே பிரணவம், சக்தி, பிரம்மம், கடவுள், தெய்வம் எனப்பல்வேறு பெயர்களை இட்டு வழங்கும் பரம் என்றும் கூறுகிறது (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2 :478).

“பிரம்மம் – கடவுள் தன்னந்தனியாக, தனி ஒன்றாக வானிலோ, மண்ணிலோ இருக்கவில்லை. அது பொருளோடு ஒன்றியுள்ளது. நான், நீ, அவன், அது, அவை எனும் ஒவ்வொரு சடப் பொருளிலும் ஒன்றியுள்ளது. எனவே, உன்னிடமுள்ள அந்த ஆத்மாவை நீ உன் அறிவைக் கொண்டு உணர்ந்துகொள். உன் தெய்வத்தை நீ ஆராதனைசெய், போற்று. சுருங்கக் கூறின் உன்னை நீ போற்று உன்னைப் பிறர் தூற்ற என்றும் இடம் கொடாதே உனக்கு நீயே சாட்சியாக இரு என்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி–2:478) என்பதன் மூலம் பிரம்மம் உன் ஆத்மாவில் உள்ளது. அதை அறிவைக் கொண்டே அறியமுடியும், அதை அறிந்து உன்னை வளர்க்கப் பயன்படுத்து. ஆனால் தவறாகப் பயன்படுத்தி மக்களுக்குக் கெடுதல் விளைவித்து உன்னைத் தூற்றும் நிலையை ஏற்படுத்தி விடாதே என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

“எதை நீ உன் கண்ணால் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் உன் கண்கள் பார்க்கப்படுகின்றதோ, அது பிரம்மம் என்று அறி. எதை ‘இது பிரம்மம்’ என்று சுட்டிக்காட்டி உபாசிக்கிறதோ அது பிரம்மம் அன்று என்கிறது. மேலும் ஓர் உபநிஷத்“ என்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி–2:479) அனைத்திலும் உட்பொருளாக இருப்பது பிரம்மம் அதனை உணர முடியுமே தவிர கற்பிக்க, கற்க முடியாது என்பதனை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

பிரம்மத்தின் வடிவம்

பிரம்மத்தின் தன்மைகளை உபநிசத்தின்வழி முன்வைத்த கவிஞர் வெள்ளியங்காட்டான் பிரம்மத்தின் வடிவத்தை வரையறுக்கிறார். “அந்தம் பிரம்மம் மனோவடிவமாயுள்ளது. உயிரை உடலாய்க் கொண்டுள்ளது. சத்தியமே சங்கல்பம் -குறிக்கோள், ஆகாசம் போலும் அதுவே ஆத்மா – பிரம்மம்”. ‘பிரம்மம்’ எது; எது வாக்கால் விளக்கப்பெறாதோ, ஆனால் வாக்கு எதனால் விளக்கப்பெறுமோ அதுவே பிரம்மம் என்று நீ அறி. எதை இது பிரம்மம் என்று உபாசிக்கிறார்களோ அது பிரம்மம் அன்று என்கிறது’ கோனோபநிஷத்து.

‘எதை ஒருவன் மனதால் உணருவதில்லையோ, ஆனால் மனது எதனால் உணரப்பெறும் என்று கூறுகிறார்களோ அதுவே பிரம்மம் என்று நீ அறி எதை அது பிரம்மம் என்று உபாசிக்கிறார்களோ அது பிரம்மமன்று’.

‘எதை ஒருவன் கண்ணால் பார்ப்பதில்லையோ ஆனால் எதனால் கண்கள் பார்க்கப்படுகிறதோ அதுவே பிரம்மம் என்று நீ அறி. ‘எதை இது பிரம்மம் என்று உபாசிக்கிறார்களோ அது பிரம்மமன்று’ (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி – 2:508)            என்ற உபநிஷத்து வரிகளின் மூலம் வாக்கால் விளக்கப் பெறாதது. ஆனால் வாக்கை இயக்குவது, மனதால் உணர முடியாதது. ஆனால் மனம் ஒன்றை உணரக் காரணமாக இருப்பது கண்ணால் பார்க்க இயலாதது. ஆனால் கண் பார்ப்பதற்குக் காரணமாக இருப்பது, பிரம்மம் என்று பிரம்மத்தின் வடிவத்தை வரையறுக்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான்.

அறிவே பிரம்மம்

பிரம்மத்தைப் பல்வேறு நிலைகளில் விளக்கும் கவிஞர் வெள்ளியங்காட்டான் இறுதியாக அறிவே பிரம்மம் என்கிறார். மேற்கண்ட உபநிஷத்துக்களின் கூற்றுப்படி அனைத்தின் உட்பொருளாக இருந்து, உயிரை இயக்குவது அனைத்தையும் அறியவைப்பது, இயங்கவைப்பது. இதனை “நாம் ஒரு பொருளை அறிவதற்கு முன்னரே, அப்பொருள் அறிவாற்றலாக விளங்கும் பிரம்மத்தால் வெளிப்படுத்தப்பட்ட நிலையில்தான் அமைந்திருக்கிறது. இது நமக்குத் தெரிவதில்லை. நம் உணர்விற்கும், பொருளுக்கும் தொடர்பு ஏற்பட்டவுடன் இதுவரையிலும் தெரியாத ஒன்று நமக்குத் தெரிய வகைபிறக்கிறது. இதனால் பண்டத்தை அறிகிறோம் ‘நான் பாண்டத்தை அறிகிறேன்’ நான் பாண்டத்தை அறியவில்லை என்கிற இவ்விரு கூற்றுகளும் பிரமத்தை அடிப்படையாகக் கொண்டே பிறக்கின்றன என்கிறார் மகாதேவன் (அத்துவித தத்துவம்:20).

ஓர் உயிரியின் அறிவாக இருந்து இயக்குவதே பிரம்மம் என்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான். பிரம்மத்தின் உறைவிடமாக ஆத்மாவைக் குறிப்பிடுகிறார். ஆத்மாவின் தன்மையைப் பற்றி “ஆத்மா என்பது கண்ணைப் போல எந்தப் பொருளின் மீது சத்தியத் தன்மையும், நித்தியத் தன்மையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ, அந்தப் பொருளை ஆத்மாவானது அறிவினால் பற்றிக்கொள்கிறது, அறிந்து கொள்கிறது. அந்த ஆத்மாவே அறிவுமயமாக விளங்குகிறது. பிறப்பு, இறப்பு என்கிற அந்தகாரத்தினால் சூழப்பட்ட பொருள்களின்மீது அந்த ஆத்மா நாட்டஞ் செலுத்துமானால் அந்தப் பொருள்கள் மங்கலாகவே அதற்குப்படுகின்றன. அப்பொழுது அதற்கு அந்த ஆத்மாவுக்கு அபிப்பிராயம் என்பதுதான் உண்டே தவிர அறிவு இல்லையென்று ஏற்படுகிறது. இந்த அபிப்பிராயமும் அடிக்கடி மாறுபாட்டைகிறது” என்கிறார் சாக்ரடீஸ் (2005:223).

இதன் மூலம் அறியும் தன்மை கொண்டது ஆத்மா. அதுவே சத்தியம் என்பதன் மூலம் அதுவே கவிஞர் வெள்ளியங்காட்டான் குறிப்பிடும் பிரம்மம் என்பதும்; அதன்வழி அந்த அறிவை நேர்படுத்தினால் உலகம் நேர்படும். அதற்கு ஆத்மாவை நேர்படுத்த வேண்டும், சத்தியத்தின்படி வாழ வேண்டும் என்ற கருத்து வெளிப்படுகிறது.

சத்தியமே பிரம்மம்

பிரம்மத்தின் பல்வேறு நிலைகளில் ஒன்றாகவும் அதன் நோக்கமாகச் சத்தியத்தைக் குறிப்பிடுகின்றார் கவிஞர் வெள்ளியங்காட்டான் “உபநிஷத்து நமக்குச் சுட்டிக்காட்டும் பிரம்மம் ‘அகம் பிரம்மாஸ்மி’ – நானே பிரம்மமாயுள்ளேன்’ என்பதாகும்; இது தன்னையறிந்த நிலை: ஒவ்வாருவரும் சத்தியத்தை அறிந்து வாழ்க்கையில் மேற்கொண்டொழுகத் தூண்டும்நிலை உலகில் அமைதியும் ஆனந்தமும் நின்று நிலவச் செய்யும் தெய்விகநிலை என்றும் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள்தொகுதி –1:387)

“எப்படிப் பார்த்தாலும் சத்தியம்தான் பிரம்மம் என்பது உபநிஷத்துக்களின் முடிந்தமுடிபு” (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:505) என்ற வரிகள் மூலம் சத்தியமே பிரம்மம் என்பதை வலியுறுத்துகிறார்.

சிவனே பிரம்மம்

அனைத்தின் உட்பொருளாக உள்ள அறிவே பிரம்மமென்றும், சத்தியமே பிரம்மமென்றும் எடுத்துரைக்கும் கவிஞர் வெள்ளியங்காட்டான் சிவமே பிரம்மமென்றும் அறிவே சிவன், சத்தியமே சிவனென்றும் கூறுகிறார்.

“ருதம் – விவகார உண்மை: உலகில் காணும் ஒழுங்கும் அழகும்: சத்தியம் – உலகின் ஒழுங்குக்கும் அழகுக்கும் அடிப்படையான பரமாத்திக உண்மை. இதனையே ‘சத்தியம் சிவம்சுந்தரம்’ என்றும் குறிப்பிடுவர் ஆன்றோர் என்கிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –1:387)

அறிவைச் சிவனென்று விளக்கும் கவிஞர் திருமந்திரப் பாடலை மேற்கோளிடுகிறார்.

சிந்தைய தென்னன் சிவனென்ன வேறில்லை

          சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்

          சிந்தை தெரியத் தெரியவல்லார் கட்குச்

          சிந்தையி னுள்ளே சிவனிருந்தா னன்றே

                                      (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:507)

என்ற அடிகளின் மூலம் சிந்தையே, அறிவே சிவன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

சிவனே பிரம்மம்

பிரம்ம தத்துவத்தை விளக்கும் இராகுல சங்கிருத்தியாயன் “சைவ உபநிஷத் தானஸ்வே தாஸ்வர உபநிஷதம் பிரம்மம் என்றால் தனது இஷ்ட தேவதையான ‘சிவன்’ என்று பொருள் சொல்லுகிறார் (1985:65).

அதன் வழியில் கவிஞர் வெள்ளியங்காட்டான் “ஈசனும் நீயும் வேறு வேறல்ல, தேனும் இனிமையும் வேறாகாதது போல என்று தெரிவிக்கிறார் திருமூலர் என்று கூறுகிறார் (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:543).

அனைத்தின் உட்பொருளாக இருப்பது பிரம்மம் என்று கூறும் கவிஞர் வெள்ளியங்காட்டான் எங்கும் உட்பொருளாக பிரம்மமாக இருப்பது ஈசனே என் கிறார். உபநிஷத்துக்கள்வழி

இங்கேபார் தெய்வமதோ அங்கேபார் தெய்வமென

          எங்கே பார்த்தெய்த இயம்பிடினும் எங்கும்

          இருப்ப துருவன்றி யீச னஃதன்றென்

          றுரைப்ப துபநி சத்து      (கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:63)

என்ற உபநிஷத்து அடிகள்வழி அனைத்திலும் இருப்பது ஈசன் என்கிறார். இதன்வழி அனைத்தின் உட்பொருளாக இருந்து அனைத்தையும் இயக்குவதே சிவம் என்ற கூற்றை வெளிப்படுத்துகிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான்.

தொகுப்புரை

  • உலகையே ஒரு குடைக்குள் கொண்டு வரவேண்டும். இனத்தால் மனிதன் வேறுபட்டாலும் ஒன்றே குலம் என்ற கோட்பாடு தோற்றம் பெற்ற காலத்தில் பலகடவுள்முறை ஒழிந்து ஓரிறைக் கோட்பாடு தோற்றம் பெற்றது. அது அத்துவித தத்துவமாக வடிவம் பெற்றது.
  • பிரம்மம் என்றால் அனைத்தின் உட்பொருளாக இருப்பது உலகத்தில் உள்ள அனைத்தும் பிரம்மத்தால் இயக்கப்படுகிறது. அதுவே பிரம்மம், அதுவே உண்மை, அதுவே சத்தியம், அதுவே அறிவு. எனவே அறிவை ஒளிபெறச் செய்தால் நீ கடவுளாவாய், நீ பிரம்மமாவாய் அதன் மூலம் நான்; கடவுள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்.
  • நாம் உண்மையாக சத்தியவானாக வாழ்ந்தால் நாமே கடவுள். அந்தச் சத்தியம், பிரம்மம், உண்மை, அறிவு நமக்குள்ளிருக்கிறது.
  • எனவே உனக்குள் இருக்கும் கடவுளை, பிரம்மத்தை வெளியே தேடி வாழ்க்கையை வீணாக்காமல் உனக்குள் தேடு அதன் மூலம் நீயே பிரம்மமாகலாம், கடவுளாகலாம். அத்தகைய பிரம்மமே சிவன், ஈசன். எனவே நீ ஈசனையடைய அறிவை வளர்த்தெடு, சிந்தனையை வளர்த்தெடு என்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான்.

துணைநின்றன

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் தொகுதி –2:63

.ஜோசப் இருதயராஜ்,

பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,

பெரியார் உயராய்வு மையம்,

பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி – 620 024.

u.puratchitamizhan83@gmail.com