நொய்யல் ஆற்றின் வளம் கொழிக்க வேளாண் செழித்த ஊராக விளங்கிய கோயம்புத்தூர் இன்று தமிழகத்தின் முதன்மையான தொழில் நகரமாக (சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம்) விளங்கி வருகின்றது. கல்வி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்து பெருகி வரும் இவ்வூரில் பழுமரம் நாடும் பறவைகள் போல மக்கள் வந்து குடியேறுகின்றனர். இத்தகு சிறப்புமிக்க கோயம்புத்தூரில் நோக்கத்தாலும், தோற்றக் காரணத்தாலும் ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் சிறப்புடன் விளங்குகிறது வாரியார் நூல் நிலையம்.

அமைவிடம்

கோவையிலிருந்து மருதமலை செல்லும் சாலையில் வடவள்ளி அருள்மிகு காட்டுவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் வெளிப்புறக் கீழ்த்தளத்தில் இவ்வாரியார் நூல்நிலையம் அமைந்துள்ளது.

நூலகத்தின் தோற்றம்

அருள்மிகு காட்டுவிநாயகர் அறக்கட்டளையானது அப்பகுதி மக்களுக்குத் தமிழர் பண்பாடு, இசை, நடனம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறது. இவ்அறக்கட்டளையின் செயலர் முனைவர் அ.பழனிச்சாமி அவர்களின் எண்ணங்களுக்குக் கொடுத்த செயல்வடிவம் தான் வாரியார் நூல் நிலையம். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் திறக்கப்பட்ட இந்நூலகம் வாசிப்பை ஊக்குவிப்பதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு வழிகோலுவதாய் அமைந்துள்ளது.

முதன்மை நோக்கம்

“நூலளவே யாகும் நுண்ணறிவு” என்னும் ஔவையாரின் வாக்கிற்கிணங்க அதிக நூல்களைக் கற்பதன் மூலமே ஒருவர் நுண்ணறிவு உடையவராய்த் திகழமுடியும். அவ்வகையில் அதிக இளைஞர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும், அதன்மூலம் சமுதாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதனை முதன்மை நோக்கமாய்க் கொண்டு  இந்நூலகம் செயல்பட்டு வருகிறது.

அறக்கட்டளையின் செயலர் முனைவர் அ.பழனிச்சாமி அவர்கள், நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்களே இந்தச் சமூகத்தை வழிநடத்தப் போகிறவர்கள். எனவே இளைஞர்களை நெறிப்படுத்தும் நல்ல நூல்களை வாசிக்கத்  தூண்டுவதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு வித்திடலாம் என்பதால் இளைஞர்களுக்காக மட்டுமே இந்நூலகம் உருவாக்கப்பட்டது என்கிறார்.

 

நூல்கள் விவரம்

இந்நூலகத்தில் அறக்கட்டளையின் சார்பில் வாங்கப்பட்ட நூல்களுடன், சமூக ஆர்வலர்கள் பலரும் அன்பளிப்பாக வழங்கிய நூல்களும் சேர்த்துத் தற்போது 2453 நூல்கள் உள்ளன. அவற்றில் மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், திரு.வி.க., கிருபானந்த வாரியார் முதலியோரது அறம்சார் நூல்களுடன் ஸ்ரீமத் பகவத் கீதை, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், திருவருட்பா, பெரியபுராணம் உள்ளிட்ட ஏராளமான சமயம்சார் நூல்களும் காணப்படுகின்றன. கல்கியின் அலைஓசை, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் உள்ளிட்ட பல்வேறு நாவல் இலக்கியங்களுடன், நீதிக்கதைகள், முல்லா கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய சிறுவர் இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.

சர்.சி.வி.ராமன், திலகர், கௌதம புத்தர், சுபாஷ் சந்திபோஸ், வல்லபாய்படேல், முதலியோரது வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களும்; அரிச்சந்திர புராணம், சிவபுராணம், விஷ்ணு புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பாகவத  புராணம் முதலிய புராண நூல்களும் உள்ள இந்நூலகத்தில் வால்மீகி ராமாயணம், ஸ்ரீராமாயணம், ஆனந்த ராமாயணம், கம்ப ராமாயணம் முதலிய இராமாயண நூல்களும் காணப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பலரது சிறந்த ஆங்கில நூல்கள் பலவும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

அரிய நூல்கள்

இந்நூலகத்தில் காணப்படும் சில அரிய நூல்கள் குறித்த விவரம் வருமாறு:

 • 1923 – ஸ்ரீராமாயணம், ஸ்ரீ.அ.வீ.நரஸிம்ஹாசாரியராவ், வெங்கடேஸ்வர் அண்டு கம்பெனி, ஆனந்த அச்சுக்கூடம், சென்னை.
 • 1931 – திருவிளையாடற் புராணம், இராய.சொ.(பதி.), மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வெளியீடு, மதுரை.
 • 1932 – தனிப்பாடல் திரட்டு, இராமசாமி நாயுடு (உ.ஆ.)
 • 1933 – ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகள், மதராஸ் லா ஜர்னல் ஆபிஸ், மயிலாப்பூர்.
 • 1941 – ஸ்ரீராமாயணம் சுந்தரகாண்டம், ஆர். வெங்கடேஸ்வர் அண்டு கம்பெனி.
 • 1945 – ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், தேசியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்.
 • 1944 – ரமண நூற்திரட்டு, திருவண்ணாமலை, ஸ்ரீரமணாச்ரமம், ஸர்வாதிகாரி நிரஞ்ஜனானந்த சுவாமிகளால் பிரசுரிக்கப்பட்டது.
 • 1958 – அழிவற்ற காதல், பர்ல் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், பம்பாய்.
 • 1955 – லிங்கன், சங்கப்பலகை, சின்ன அண்ணாமலை பதிப்பகம், தியாகராய நகர், சென்னை.
 • 1961 – ஆத்ம போதம், ஸ்ரீவாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம்.
 • 1964 – திருவாசகம், திருவாடுதுறை ஆதீனம்.
 • 1968 – இந்து தர்மம், செய்வீக வாழ்க்கைச் சங்கம், சிவானந்தா யோகாசன சாலை, இராசிபுரம், சேலம்.
 • 1969 – திருக்குறள் அழகும் சிறப்பும்
 • 1970 – விவேக சிந்தாமணி, இரத்தின நாயகர் சன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது.
 • 1972 (மூன்றாம் பதிப்பு) – நாடகக்கலை, பாரி நிலையம், சென்னை.
 • 1973 – திருவிளையாடற் புராணம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை.
 • 1986 – மகர நெடுங்குழைக் காதல் பிள்ளைத் தமிழ், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
 • பதினோராந் திருமுறை (ஆண்டு விவரம் இல்லை) -, கன்னியப்ப முதலியார், சென்னை சி.டி.குரூஸ் மலைச்சாலையிலிருக்கும் அத்நீயம் அன்ட் டெலிநியூஸ் பிரான்ஸ் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
 • பெரியபுராணம் (ஆண்டு விவரம் இல்லை) -, சென்னைஇரத்தின நாயகர் சன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
 • திருவிளையாடற் புராணம் (ஆண்டு விவரம் இல்லை) – திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

இதழ்களும் இதழ்த் தொகுப்புகளும்

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, தினமலர், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களும் துக்ளக், தன்னம்பிக்கை முதலிய வார இதழ்களும் வாசகர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் இந்நூலகத்தில் தர்மச்சக்கரம் (1952 முதல்), பாகவத தர்மம் (1981), காமகோடி (1992), கல்கி (1963) முதலிய பழைய இதழ்த் தொகுப்புகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வேலை நேரம்

மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்நூலகம் வாசகர் பயன்பாட்டிற்காய்ச் செயல்பட்டு வருகிறது. வார விடுமுறையாக ஞாயிறு அன்று (ஒரு நாள் மட்டும்) நூலகத்திற்கு விடுமுறை.

வாசகரும் உறுப்பினரும்

பெருகிவரும் தொழில், நாகரிக வளர்ச்சியால் நூல்கள் வாசிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் நூலகத்தின் மதிப்பினை அறிந்து பயன்படுத்தும் நூலக வாசகர்களின் எண்ணிக்கையும் தேய்பிறையாகிவிட்டது. இத்தகு சூழ்நிலையிலும் இந்நூலகத்தின் சிறப்பினை அறிந்த, இங்குள்ள நூல்களின் தரத்தினை உணர்ந்த வாசகர்கள் நாள்தோறும் குறைந்தது பதினைந்து பேர் இந்நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடக்க காலத்தில் 25 ரூபாய் மட்டுமே சந்தாத் தொகையாகப் பெற்றுக் கொண்டு  நூலக உறுப்பினராகச் சேர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரிய நூல்களைத் திருப்பித் தராமல் செல்லும் வாசகர்களைக் குறைக்கும் நோக்கில் 250 ரூபாய் சந்தாத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சந்தாத் தொகை நாளிதழ்கள், சிற்றிதழ்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப் பெறுகின்றது.

நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டு மக்களின் முழுப்பயன்பாடு இன்றிக் கிடக்கும் இந்நூலகத்தில் உள்ள நூல்களைத் தரம் பிரித்து, வகைமைப்படுத்தி அடுக்குவதற்கும், பராமரிப்பதற்கும் விரும்பிச் சேவை செய்யும் நோக்குடைய இளைஞர்கள் முன் வரவேண்டும் என விரும்புவதாகக் கூறிய முனைவர் அ. பழனியப்பன் அவர்கள் நூலகப் பயன்பாடு குறைந்து வருவது குறித்த தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன்வாரியார் நூலகத்தை வளப்படுத்தவும், வாசகர் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், ஏராளமான புதிய நூல்களை வாங்கவும் ஆலோசனை வழங்குவீர்களாயின் அவற்றை ஏற்றுச் செயல்படுத்தத் தயாராய் இருக்கிறோம் என்கிறார்.

நன்றிக்குரியோர்

 1. முனைவர் .பழனியப்பன் , செயலர், அருள்மிகு காட்டு விநாயகர் அறக்கட்டளை.
 2. முனைவர் சேசாத்ரி , வாசகர், வாரியார் நூல் நிலையம்.

மணி.தமிழரசன்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் – 28