நாவல் என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் நவீனம் என்றும் பொருள். ஆயின், வட்டார நாவல்கள் என்பதையும் ஒரு வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது. வட்டாரம் – ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். மனிதன் உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்றான். அவனுக்கும் பிறிதொரு இடத்தில் வாழுகின்ற மனிதனுக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, வட்டாரத்தைப் பழந்தமிழ் மக்கள் ஐந்து நிலப் பாகுபாடுகளாகப் பிரித்து பார்த்தனா் எனலாம்.

கொங்கு வட்டார நாவல் ஆசிரியா்களில் சூரியகாந்தன் முக்கியமானவா். இவா் அமரா் அகிலன் நினைவு நாள்  விருது, இலக்கியச் சிந்தனை விருது, இயலக்கிய வீதி விருது மற்றும் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இவரின் இயற்பெயா் திரு.மா.மருதாசலம். இவா் கோவை மாவட்டம் பேரூா் வட்டம் இராமசெட்டிப்பாளையத்தில் மாரப்ப கவுண்டருக்கும், சின்னம்மாளுக்கும் மகனாகப் (17.07.1955) பிறந்தார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என்ற பன்முகபடைப்பாளுமை கொண்டவர். இது மட்டுமல்லாது கோவை வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகவும், தாய் வார இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.   இவர் தோ்ந்தெடுத்த களங்கள் பெரும்பாலும் ஊர்ப்புறங்களாகவே அமைந்தன. எனவே, அங்கு வாழும் மக்கள் வேளாண்மைத் தொழில் புரியும் மக்களையும், மண்ணையும் எழுதினார்; எழுதிக் கொண்டும் வருகின்றார்.

இவா்தம் மானாவாரி மனிதா்கள்  என்ற நாவலில் வேலம்பாளையத்து மக்களையும், அந்த மக்கள் படும் வேதனைகளையும், அதற்கு  அவா்கள் தேடும் தீா்வையும் களமாகக் கொண்டு படைத்து இருக்கிறார். இந்நாவலில் இடம்பெறும் பெரியசாமி எனும் பாத்திரப்படைப்புக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளார்.  இவா்கள்தம் வாழ்க்கைப் போராட்டமே மானாவாரி மனிதர்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மழை பொய்த்த காலத்தில் நிலத்தை விற்க முயல்கின்றான் பெரியசாமியின் மகன் .  இதைக் கேள்வியுற்ற பெரியசாமி நிலத்தை விற்பதைத் தடுக்கிறார்.  இதன் மூலம் கிராம மக்கள் மண்மீதும், விவசாயத்தின் மீதும், தொழில் மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டினை அறியமுடிகிறது.

இந்த நாவலின் முதன்மைப் பாத்திரப்படைப்பான பழனியம்மாள் சகோதரர்களுக்கு இடையே சொத்துப் பிரச்சனை ஏற்பட்ட போது தந்தையிடம் பேசிச் சொத்தை அவா்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பரிந்துரை செய்கிறாள்.  தாய், தந்தையைத் தனது சகோதரர்கள் கை விட்ட நிலையில் அவா்களுக்கு என்ன மகள் இல்லையா? என்று சொல்லிப்  பெற்றோர்களைக் கடைசி வரை காப்பாற்றுகிறாள்.  தன்னுடைய கணவன் விபத்தில் காலை இழந்த போதும் மனம் தளராமல் கறவை மாட்டை விற்றுச் செயற்கைக் காலை அவனுக்குப் பொருத்தித் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக விளங்குகிறாள். பழனியம்மாளின் பார்வை குடும்பத்துடன் நின்றுவிடவில்லை. ஊரில் கடும் தண்ணீா்ப் பிரச்சனை ஏற்படுகிறது.  அந்தப்  பிரச்சனைக்கு ஊா் மக்களை ஒன்று திரட்டிப் போராட்டம் நடத்தித் தீா்வு காண்கிறாள். பெண்கள் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பதற்கு இப்பாத்திரப்படைப்பே சான்று.  பெண்கள் நாட்டின் கண்கள், மக்களை இயக்கும் சக்தி என்றெல்லாம் பெண்களைப் பற்றி முற்போக்குக் கருத்தியல்கள் நிலவுகின்றன. அதற்குப்  பழனியம்மாள் பாத்திரப்படைப்பு மிகப்பொருத்தம். இப்படைப்பு அன்பான சகோதரியாகவும், அன்பான மகளாகவும், அன்பான தாயாகவும், அன்பான மனைவியாகவும், சமூக அக்கறை கொண்ட பெண்ணாகவும்  வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராமத்து முன் மாதிரியாக பழனியம்மாள் என்ற கதாப்பாத்திரத்தைப் படைத்து  மக்கள் மனத்தில் உலவச் செய்துள்ளார் ஆசிரியா். இப்படைப்பு மூலம்  பெண்கள் தோல்வி அடையும் போது துவளாமலும், பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாமலும் அதை எதிர்த்துப் போராடுகின்ற குணத்தைக் கொள்ள வேண்டும் என்று மானாவாரி மனிதர்கள்‘ நாவல் மூலம்  அறிவுறுத்துகின்றார் ஆசிரியர்.

துணைநின்றது

சூர்யகாந்தன்,1999, மானவாரி மனிதர்கள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

..காயத்ரி

உதவிப் பேராசிரியா்

தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லு}ரி

கோவை -28