இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேண்தகு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கை நாடானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அந்நிய நாட்டவரின் கைக்குள் சொல்பேச்சுக் குழந்தையாகிச் சிக்கித் தவித்தது. அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் என்ன பயன்? இன்று சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி என்னும் பெயரில் உலக நாடுகளின் சதிவலைகளில் இலங்கையும் வீழ்ந்திருக்கிறது.

முப்பந்தைந்து ஆண்டு கால இலங்கையின் இனவாதப் போரினை இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் இலங்கையின் மீது பல நாடுகளின் பார்வை திரும்பியது. இலங்கை அரசுக்குப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டின. அன்று அந்த நாடுகள் கொடுப்பதற்காகத் தனது கரங்களை நீட்டவில்லை. இங்கிருக்கும் வளங்களை எடுத்துக் கொள்ளவே கரங்களை நீட்டின என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனைய உலக நாடுகள் தத்தமது நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை மையப்படுத்தி இத்தகைய சதிதிட்டங்களை நகர்த்திச் சென்றிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு இனவாதப் போரினை நிறைவுக்குக் கொண்டுவருவதே தமது குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டிருந்தது. அதனைத் தமக்குச் சாதகமாக மாற்றியமைத்துக் கொண்ட உலக நாடுகளில் சீனா ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றது.

அண்மைக்காலத்தில் சீனாவின் மேலாதிக்கம் இலங்கையில் உச்ச அளவில் இடம்பெறுவதனைக் காணலாம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சீனாவின் தந்திரோபாய செயற்றிட்ட உடன்படிக்கைகள் மூலம் கட்டியெழுப்பப்படுகின்றது. இலங்கையில் அதிகளவான முதலீடுகளைச் செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாகவே அரசியல் ராஜதந்திர உறவுகள் நிலவுகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்று அனைவராலும் பேசப்படுகின்ற விடயங்களுள் ஒன்றாக “முத்துமாலைத் திட்டம்”அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்தவகையில் சீனாவின் பாரிய பொருளாதார செயற்றிட்டங்களில் ஒன்றான முத்துமாலைத் திட்டத்தில் இலங்கையும் இணைந்து கொண்டுள்ளது. இதனால் இலங்கை நாடானது பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் நிலை மற்றும் இலங்கையின் ஆட்சி சூழ்நிலைகள் ஆகிய காரணிகளின் தாக்கங்கள் இலங்கையை சீனாவின் புதிய சில்க் சாலை திட்டத்துடன் ஒருங்கிணையச் செய்தது எனலாம். இவ்வாறான சீன செயற்றிட்டங்கள் மூலம் இலங்கை நாடானாது தனது அபிவிருத்தி பயணத்தில் நன்மை, தீமை என்கின்ற இரண்டு விடயங்களையும் விரும்பியும், விரும்பாமலும் அனுபவிக்கும் சூழ்நிலையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பட்டுப்பாதை

உலக வல்லரசாக உருவாகுவதற்கும், தன்னுடைய பொருளாதார செயற்றிட்டங்களை உலக அளவில் முன்னெடுப்பதற்கும் சீனா ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை பல நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அந்தவகையில் சீனாவின் பட்டுப் பாதை மிகவும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. பட்டுப்பாதை என்பது சீனாவின் பண்டைக்கால நாகரிகம் பற்றி மேலைநாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் ஒரு முக்கிய வழிமுறையாகும். கீழைத்தேய மற்றும் மேலைத்தேய பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தொடர்பை இணைக்கும் பாலமாக இது அழைக்கப்படுகின்றது. பண்டைய காலத்தில் முக்கிய வர்த்தகர்கள், இந்தியர்கள் மற்றும் பாக்ட்ரியன் மக்கள், பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டுவரை சொக்டியன் வர்த்தகர்களும், பின்னர் அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்களும் பட்டுப்பாதையை பயன்படுத்தினர். கண்டம் முழுவதும் இணைக்கும் வகையிலான வர்த்தக பாதைகளில் ஒர் இலாபகரமானதான சீன பட்டு வணிகம் நடைபெற்று வந்த காரணத்தினால் இப்பாதைக்கு பட்டுப்பாதை என்று பெயர் வந்தது.

பட்டுப் பாதை திறப்பினை நோக்கும்போது கி.மு.முதல் நூற்றாண்டில் சீனாவின் டாயுவான், பார்த்திய மற்றும் பக்திரிய நாடுகளுடனான அரசாங்க உறவு பேணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கத்தேய உலகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சாலை உருவானது. இந்தப் பட்டுப்பாதை மக்கள் பொருட்கள் மற்றும் கலாசாரத்தைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்புக் கொடுத்தது. ஐரோப்பாவில் ஆரம்ப நவீனத்தின் காரணமாக பிராந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்தன. ஆனால் பட்டுப்பாதையில் இது எதிர் தாக்கத்தை ஏற்படுத்தியது. மங்கோலியப் பேரரசின் ஒருங்கிணைப்பைத் தக்கவைக்க முடியாமல் வர்த்தகம் குறைந்தது. கொன்ஸ்தாந்துநோபிளில் ஓட்டோமன் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து 1453இல் பட்டுப்பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது. அந்நாளைய ஒட்டோமான் ஆட்சியாளர்கள் மேற்கத்திய எதிர்ப்பாளர்களாக இருந்தனர். யுரேசிய நில பாலம் சில நேரங்களில் “புதிய சில்க் சாலை” என குறிப்பிடப்படுகிறது. அதாவது சீனாவிலிருந்து பாரசீகம் வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளுக்கு நடைபெற்ற தரைவழி வர்த்தகத்தில் முக்கியமான மார்க்கம் சில்க் பாதை என்றழைக்கப்பட்டது. இது சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா, என்று நீண்டது. பட்டுப்பாதை வழியாக உள்ள ரயில் பாதையின் கடைசி இணைப்பாக, 1990 இல் சீனா மற்றும் கஐகஸ்தான் ரயில் அமைப்புக்கள் அலாட்டா கணவாயில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் காலமாற்றத்தில் பட்டுச் சாலை என்பதே மறைந்துவிட்டது. நாடுகளுக்கிடையேயான வரத்தகத்திலும் பல மாற்றங்கள் உருவாகிவிட்டன. எல்லா நாடுகளும் தங்களது பாரம்பரிய வர்த்தக முறைகளுக்கு நவீன வடிவங்களைக் கொடுத்து வருகின்றன. நாடுகளிடையே வர்த்தகம் செய்ய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதிய சந்தைகள் உருவானது என்றால் அதற்கு முன்பிருந்தே சீனா சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தில் இருந்துள்ளது. பண்டமாற்றுக் காலத்திலிருந்தே உலகம் தழுவிய வர்த்தக நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.

இப்போது சீனா இந்தப் பட்டுச்சாலை மார்க்கத்தை புதிய வடிவில் ரயில்வழிப் பாதையாக உருவாக்கியுள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடியை ஒதுக்கி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த பட்டுச் சாலை மார்க்கத்தில் சரக்கு ரயில் சேவையையும் தொடங்கிவிட்டது. சீனாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முகமாக இந்தத் திட்டத்துக்கு நவீன வடிவம் கொடுத்ததாக சீனா கூறியுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள யிவூ இன் சர்வதேச ஏற்றுமதி மையத்திலிருந்து புறப்பட்டுள்ள ரயில் கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டன் சென்றடைகிறது. சுமார் 12,000 கிலோமீற்றர் தூரத்தை 18 நாட்களில் கடந்து லண்டனை சென்றடையும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. இதில் சாதனையும் நிகழ்த்தியுள்ளது.

இலங்கையுடனான முத்துமாலைத் திட்ட உடன்படிக்கை

உலகளவில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் சீனா, தனது பொருளாதார மற்றும் வர்த்தக ஆதிக்கத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்காகவும், நிலைப்படுத்துவதற்காகவும் பல ஆண்டுகளுக்கு முன்பு “பட்டுப்பாதைத் திட்டம்” என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம், சீனாவின் பொருளாதார சந்தையுடன் பல்வேறு உலக நாடுகளை சாலை மார்க்கமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பழமையின் நவீன வடிவங்களை ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு ஏற்ப உருவாக்கி வருகின்றன. அந்தவகையில் சீனாவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதுதான் புதிய சில்க் பாதை ஆகும்.

தற்போது இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும்விதமாக “ஒரே மண்டலம், ஒரே பாதை” என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது. இத்திட்டமானது முத்துமாலைத் திட்டம், புதிய சில்க் பாதைத் திட்டம், புதிய பட்டுப்பாதைத் திட்டம் எனப் பல்வேறு பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றது. சீனாவின் பொருளாதார சந்தையை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 68 நாடுகளை சாலைகள், துறைமுகங்கள், ரயில், விமானங்கள், சர்வதேச மின்பாதை, பைப்லைன்கள் மூலம் இணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த அடிப்படைக் கட்டமைப்புக்களை ஏற்படுத்தவதற்காக சீனா ரூ.80 இலட்சம் கோடியில் பிரம்மாண்ட திட்டம் வகுத்தது. அதை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதியிலேயே அதிகம் தங்கியுள்ளது. சீனாவினுடைய ஏற்றுமதி வர்த்தகம் நடக்கும் பாதையினை “புதிய பட்டுப்பாதை” என்று அழைக்கின்றனர். ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தனது பொருளாதாரம் உலக நெருக்கடியினால் பாதிப்படையாமல் இருக்க கடல்வழி பட்டுப்பாதையை சீனா உருவாக்கியுள்ளதுடன் மத்திய ஆசியாவினுடைய ஒரு தரைவழி பட்டுப்பாதையையும் உருவாக்கியுள்ளது. இந்தவகையில் முதலாம் கட்டமாக கடல் மார்க்கமாக “முத்துமாலைத் திட்டம்” என்னும் பெயரில் தொடராகப் பல துறைமுகங்களை சீனா தன்வசப்படுத்தி அபிவிருத்தி செய்து வருகின்றது. சீனாவின் முத்துமாலை திட்டத்தில் உள்ள துறைமுகங்களில் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகமும் உள்ளடங்கியுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்ற இனமோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவை விடவும் சீனா பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளது. யுத்த வெற்றியினை இலங்கை பெற்றாலும் தற்போது சீனாவுக்கு 8 பில்லியன் டாலரை இலங்கை கடனாகக் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது (China – Sri Lanka economics affiliations). இந்தவகையில் இலங்கையின் கடன்சுமையினைக் குறைப்பதற்காக வேண்டி இவ்ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் தொடர்பிலும் சீனா அறியாமல் இல்லை. படிப்படியாகத் தன் இருப்பை இலங்கையில் நிலைப்படுத்தி அதனூடாக உயரிய இலாபத்தைப் பெற்று வல்லரசாகும் எண்ணத்துடன்தான் சீனா தனது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவுக்கு 80 வீத பங்குகளும் இலங்கைக்கு 20 வீத பங்குகளும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து சீனாவுடனான உறவுகளைப் பேணுவதில் உடன்படமாட்டேன் என அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். எனினும் 2017.07.29 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன. அதன்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனாவுக்கு 1.12 பில்லியன் டாலர் பெறுமதிக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடல் மற்றும் துறைமுகத்தையொட்டிய 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை மையப்படுத்தித் தொழிற்சாலை மண்டலம் அமைத்தல் என்பன முடிவாகியுள்ளது.

அத்துடன் மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் சீனாவிடம் 69.55 சதவீத பங்குகளும், இலங்கை அரசிடம் 30.45 சதவீத பங்குகளும் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை சீன அரச நிறுவனமானது Merchant Port Holdingsக்கு வழங்க முன்வந்துள்ளது. 09.12.2017 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை முறைப்படி சீனாவிடம் ஒப்படைத்தது. இதேவேளை பாகிஸ்தானுடன் இணைந்து சி.பி.இ.சி எனப்படும் சீன – பாகிஸ்தான் பொருளாதார பாதையை, சீனா உருவாக்கி வருகிறது. பாகிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் ஊடாக இந்த பாதை அமைக்கப்படுகின்றது.

சீனாவின் நோக்கம்

புதிய பட்டுப்பாதை திட்டம் சீன தேசத்திற்கு புத்துயிரூட்டும் என்பதில் அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்ப்போடு செயற்படுகின்றது. 2049 ஆம் ஆண்டிற்குள் பழைய பட்டுப் பாதை சகாப்தத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் சீன அதிபர் விதித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், சீனாவினுடைய பங்களிப்பு இலங்கையில் அதிகரித்துச் செல்வதற்கு இலங்கை சீனாவை சார்ந்து நிற்பது மட்டுமன்றி, சீனாவும் இலங்கையை சார்ந்து நிற்கின்றமையும் காரணம் என்றே குறிப்பிட வேண்டும்.

சீனாவில் அமைக்கப்பட்டுள்ள இப்பட்டுப்பாதையானது பல நாடுகளுக்கூடாக ஊடறுத்துச் செல்கிறது. இதனடிப்படையில் இப்பாதையின் வழியே இலங்கையின் அமைவிடம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்ற நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தன்னுடைய கவனத்தினைச் செலுத்தியுள்ளது. அதாவது பட்டுப்பாதையின் வழியே அம்பாந்தோட்டை துறைமுகம் காணப்படுவதால் ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் இது முக்கியப்படுத்தப்படுகின்றது. இத்துறைமுகமானது பொருளாதார தொடர்பகளுக்கு ஏதுவாகவும், கப்பல்களை தரித்து வைக்கும் இடமாகவும் சீன அரசினால் பார்க்கப்படுகின்றது.

1995ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையில் சீனா தனது மசகு எண்ணெய்க்கான கேள்வியை இரண்டுமடங்காக அதிகரித்தது. 2020ஆம் ஆண்டளவில் இது மேலும் இரண்டு மடங்காக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சீனா தனது கைத்தொழில் முயற்சிக்காக நாள் ஒன்றுக்கு 7.3மில்லியன் பரல் எண்ணெயினை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே எதிர்வு கூறலாகும். 2015ஆம் ஆண்டில் சீனா தனது மொத்த எண்ணெய் தேவையில் 70 சதவீதமானவற்றை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் இருந்து கடல்வழிப் போக்குவரத்து மூலமாகவே இறக்குமதி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கடல்வழிப் போக்குவரத்தினைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புடன் சீனா செயல்படுகிறது (China – Sri Lanka economics affiliations).

இவ்வாறான எதிர்பார்க்கையே முத்துமாலைத் தொடர் தந்திரோபாயத்தின் உருவாக்கத்துக்கு அடித்தளமாக அமைந்தது. இதனால் அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் முத்துமாலைத் திட்டமானது எதிர்காலத்தில் இந்துமகா சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா நடத்தப்போகும் பாரிய அரசியல் ராஜதந்திர மற்றும் பொருளாதார ஆதிக்கத்துக்கான எடுகோளாக அமையலாம்.

முத்துமாலைத் திட்டத்தின் சாதக விளைவுகள்

சீனாவின் முத்துமாலைத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. சீனாவின் இச்செயற்றிட்டத்தின் மூலம் பல நன்மைகளைப் பெறமுடியும். அந்தவகையில் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் பாரிய செயற்றிட்டங்கள் நாட்டின் பொருளாதார செயலாற்றுகைக்கு உதவுவதாகக் காணப்படும். எனவேதான் முத்துமாலைத் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை. இவ்வேலைத்திட்டத்தினால் பாரியளவு முதலீடு நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையானது முதலீடு தொடர்பான சகல நன்மைகளையும் நாட்டிற்கும், நாட்டு மக்கள் எல்லோருக்கும் பெற்றுக்கொடுக்கும். மேலும் ஏனைய நாடுகளும் இலங்கை மீது முதலீடு செய்வதற்கு முன்வருவதுடன் இலங்கையில் முதலீடு மேற்கொள்வது தொடர்பான ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.

முத்துமாலைச் செயற்றிட்டம் என்பது நீண்ட கால வலுவுள்ள ஒரு செயற்றிட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை நாட்டவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புக்களை இவ் செயற்றிட்டம் உருவாக்கிக் கொடுக்கும். எனவே வேலையின்மை குறையவும், தனிநபர்களினுடைய வருமானங்கள் அதிகரிக்கவும், தனிநபர்களின் ஆற்றல்கள் விருத்தியடையவும் வழிவகுக்கும். நவீன உற்பத்தியின் விஷேட பண்புகளான தொழிற்பிரிப்பு, சிறப்புத்தேர்ச்சி என்பனவும் சிறந்த முறையில் உருவாவதற்கு வழிவகுக்கும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு புதுப்பொலிவுடன் தனது வேலைதிட்டங்களை முன்னெடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் புதிய தொழில் முறைகளை அறிமுகம் செய்வதன்மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் நிலை தோன்றலாம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யலாம். சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்வது என்பது ஒவ்வொரு நாட்டினதும் பலத்திற்கு துணை புரியும். இவ்வாறான பாரிய நீண்ட கால உடன்படிக்கைகள் மூலம் சீனாவுடன் இலங்கை நாடானது மிக நீண்டதொரு நட்புறவை பேண வழிவகுக்கும். இதன் மூலம் சீன – இலங்கை நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளில் விரிவாக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் பாரிய சர்வதேச வர்த்தக செயற்பாடுகள் விரிவாக்கம் அடைய வழிவகுக்கும்.

இலங்கையில் இடம்பெற்ற நீண்டகால இனவாத போரினால் ஆக்கபூர்வமான விடயங்களைவிட அழிவின்பால் பெற்றுக்கொண்டவைகளே ஏராளம். எனவே இத்தகைய ஒரு சூழ்நிலையில் நாட்டினைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற குறிக்கோளோடு அரசாங்கம் செயற்பட்டிருந்தாலும் பாரிய அளவில் முதலீடுகளை வழங்க எந்த நாடுகளும் முன்வரவில்லை. இத்தகைய ஒரு நிலையில்தான் சீனா பல நிதி உதவிகளையும், கடன்களையும் இலங்கைக்கு வழங்கியது. எனவே நாட்டின் கடன் சுமை அதிகரித்தது. சீனாவுக்கு இலங்கை கடன் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. எனவேதான் இவ் முத்துமாலைத் திட்டம் இலங்கையின் கடன் சுமையினைக் குறைப்பதற்கான ஒரு வழிவகை எனக் கருதி இலங்கை அரசாங்கம் சீனாவோடு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. எனவே முத்துமாலை உடன்படிக்கை இலங்கையின் கடன்சுமைக்கு ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை நாடானது என்னதான் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக இருந்தாலும்கூட சில விடயங்களில் அது உயர்வடைவது என்பது இயலாத காரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் கால ஓட்டத்தில் சில விடயங்கள் மாறித்தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையில் இலங்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற முத்துமாலை செயற்றிட்டம், உலக நாடுகளின் தரவரிசையில் இலங்கையும் ஒரு நல்ல நிலையினை பெற்றுக்கொள்ள ஒரு சூழலை ஏற்படுத்தலாம். மேலும் தடையற்ற ஒரு பொருளாதார உருவாக்கத்திற்கு இவ் உடன்படிக்கை உதவுவதாகவும் காணப்படும். எனவே முத்துமாலை உடன்படிக்கை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி உடன்படிக்கையாக மட்டுமன்றி பல வழிகளிலும் நாட்டுக்கு நன்மையினை வழங்குவதாக காணப்படுகின்றது.

முத்துமாலைத் திட்டத்தின் பாதக விளைவுகள்

சீன முத்துமாலைத் திட்டமானது பல்வேறுபட்ட நன்மைகளைப் பெற்றுத்தருவதாக இருந்தாலும் கூட மறுபுறம் அதன் பாதகமான தாக்க விளைவுகள் என்பது மிக மோசமானதாகவே காணப்படுகின்றன. பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அண்டிய பிரதேசங்கள் பல உள்ளடக்கப்படுவதனால் அந்த பிரதேசங்களை தமது சொந்த இடங்களாகக் கொண்ட மக்களது காணிகள் அரசினால் சூறையாடப்படுகின்றன. எனவே அங்கு வாழும் மக்களின் இறைமை மீது அரசு வலுக்கட்டாயமாகத் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் சீனத் தொழிலாளர்கள் இலங்கைக்குப் படிப்படியாக வரும் நிலை ஏற்படலாம். இந்நிலையில் சீனத் தொழிலாளர்கள் இலங்கை நாட்டிலே தங்கியிருப்பதுடன் அம்பாந்தோட்டை பிரதேசம் சிறிய சீன நாடாக உருவாகலாம். சீன தொழிலாளிகள் தமது குடியேற்றங்களை இங்கு அமைத்துக் கொண்டால் சங்கிலித் தொடர் போல பல பிரச்சினைகள் நாட்டில் ஏற்படலாம். சீனர்களின் பண்பாடு, மொழி, தொழில்கள் ஆகியன இலங்கை நாட்டின் சுதேச மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தினை உண்டாக்கும். எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஏற்படும் மாறுதல்கள் பல வன்முறைகளைத் தூண்டிவிடும். இருமொழி கொண்ட நாடு மும்மொழியால் பிளவுபடும் நிலை தோன்றலாம்.

இந்த ஒப்பந்தமானது இலங்கையினுடைய இறையாண்மையைப் பாதிக்கின்றது. இத்தகைய ஒரு நிலை வெளிப்படையாகவே தென்படுகின்றது. இலங்கை நாட்டுக்குச் சொந்தமான வளம் சீனாவிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் அந்நியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தினால் உள்நாட்டு உற்பத்திகள் பாதிக்கும் நிலை தோன்றலாம். இன்று உலக நாடுகள் அனைத்திலும் சீனாவின் உற்பத்திளை வாங்கமுடியும். அந்த அளவிற்கு சீனா தனது வர்த்தக ஆதிக்கத்தை அனைத்து இடங்களிலும் நிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு இவ் உடன்படிக்கை மூலம் பாரிய நன்மை கிடைத்துள்ளது. தனது வர்த்தக செயற்றிட்டங்களை மேலும் சீனா விரிவுபடுத்திக் கொள்ளும். எனவே இதனால் உள்நாட்டு உற்பத்திகள் பாதிக்கப்படும்.

பாரிய திட்டமாகக் காணப்படும் முத்துமாலைத் திட்டமானது அதிகளவான இலாபத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இத்தகைய இலாபம் முழுவதும் இலங்கைக்குச் சொந்தமானது அன்று. ஏறக்குறைய 30 சதவீதமான இலாபமே இலங்கை அரசுக்குச் சொந்தமானதாகும். எனவே இலாபத்தில் முக்கால் பங்கு சீனாவுக்குக் கொண்டு செல்லப்படும். எனவே நாட்டின் வெளிநாட்டுக்கு அனுப்பும் தேறிய முதன்மை வருமானம் அதிகரிப்பதுடன், நாட்டின் வெளிநாட்டு தேறிய முதன்மை வருமானம் குறைவடையும் நிலை தோன்றலாம். இது ஒட்டுமொத்த ரீதியாகப் பார்க்கும்பொழுது நாட்டினுடைய மொத்த தேசிய உற்பத்தியினைக் குறைவடையச் செய்யும். இலங்கையில் புவியியல் பௌதீக அமைப்பை முற்றாக இத்திட்டம் மாற்றியமைக்கும் என்றே கூறவேண்டும். அது மாத்திரமின்றி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுவது உள்ளக ரீதியாக அரசாங்கத்துடன் விரிசலை ஏற்படுத்துவது போலவே சீனாவுடனான இவ்வுறவானது இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் நிலவும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

புதிய பட்டுப்பாதை திட்டமானது இலங்கையில் மாத்திரமின்றி அமெரிக்கா – ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் செயற்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தி வருவதன் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் சுமூகமற்ற சூழலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இத்தன்மையானது இலங்கையின் அரசியல் செயற்பாட்டிலும் தாக்கத்தினைச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. அதாவது யுத்த காலப்பகுதியில் சீனாவுடனான நெருங்கிய உறவு பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் உறவில் இருந்தும் விலகுவதற்கும், இலங்கைக்கு வழங்கி வந்த பொருளாதார மற்றும் ஆயுத ரீதியான உதவிகளை அந்நாடுகள் குறைத்துக் கொள்வதற்கும் பிரதான காரணம் சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தியமையாகும்.

யுத்தகாலப் பகுதியில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிரானதொரு வெளிநாட்டுக் கொள்கையினை இலங்கை கடைப்பிடித்தமையானது யுத்த முடிவினைத் தொடர்ந்து இந்நாடுகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பமாக அமைந்தது. இதன் விளைவே இந்நாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள், கடன் உதவிகள் மற்றும் முதலீடுகள் என்பன தடை செய்யப்பட்டன. இந்நிலையானது யுத்தத்துக்கு பின்னர் இடம்பெறக்கூடிய தேச அபிவிருத்திக்குத் தடையாக அமைந்தது. மேலும் போர்க்குற்றங்களைக் காரணம் காட்டியே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதனையடுத்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் இலங்கைக்குக் கொடுக்கும் உதவியில் 29சதவீதம் அதாவது 11மில்லியன் டாலரை அமெரிக்கா குறைத்துக் கொண்டது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள துறைமுக ஒப்பந்தமானது ஏனைய நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதுடன் உள்நாட்டிலும் பல்வேறு தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. இவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டமைக்கு இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நெருங்கிய உறவே மூல காரணமாகும். சீனாவினுடைய இம் முத்துமாலைத் திட்டத்தில் இலங்கை அரசும் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் சதித்திட்டங்களுக்குள் இலங்கையர்கள் கூலிகளாக மாற்றப்பட்டுத் தங்கிவாழும் நிலைக்குத் தள்ளப்படுவர். குறைந்தளவான ஊழியத்தில் தமது ஆற்றலை வீணடிக்கும் நிலை உருவாக்கப்படும். எனவே இலங்கையில் ஊழியத்தினுடைய கூலிமட்டம் பாதிக்கப்படும். சீனாவின் ஆதிக்கம் இத்திட்டத்தின் மூலம் வலுப்பெற்றுள்ளதுடன் இதனைக் காரணம் காட்டி வேறு பாரிய திட்டங்களையும் சீனா தனது சதிவலையில் பின்னலாம். இதில் இலங்கையும் மீனாய்ச் சிக்கிக் கொள்ளலாம். இந்நிலை சீனாவின் காலுக்குக்கீழ் இலங்கை வாழ்வதற்கு ஏற்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிடும். அதாவது இலங்கை சீனாவுக்கு அடிமையாகிவிடும். சீனாவினை நம்பியிருக்க வேண்டிய நிலை தற்போது காணப்பட்டாலும் கூட இந்நிலை மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

சீனா தனது முத்துமாலை செயற்றிட்டத்தில் பாரிய தொழிற்சாலைகளை நிறுவும் போது தொழிற்சாலைக் கழிவுகள் உரிய முறையில் நீக்கப்படாவிட்டால் தொற்று நோய்களும் சூழல் மாசடைவும் ஏற்படும். இதனால் நாட்டு மக்கள் பாதிப்படைவது மட்டுமல்லாமல் அரசாங்கமும் மக்களின் சுகாதார நிலைமைகளின் கீழ் வருடாந்தம் ஒதுக்குகின்ற செலவீனங்களும் அதிகரிக்கும் நிலை தோன்றலாம். அதனை ஈடுசெய்யும் வகையில் வருமானம் கிடைக்காத நிலையில் அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் மிக  மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் சீனா மெல்லமெல்ல இலங்கையின் அரசியல் விடயங்களுக்குள் தலையினை நுழைத்துக் கொள்ளும் நிலையும் உருவாகலாம்.

தற்போது இலங்கையின் பாதுகாப்பு என்பதும் சிறிதும் உத்தரவாதமின்மை கொண்டதாகவே காணப்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக கடற்கரை பிரதேசம் சீனாவின் பிடியில் இருக்கும்போது இலங்கை எவ்வகையில் பிற நாட்டின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும்? அரசாங்கம் எந்தவகையில் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும்? என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கேள்வியாக இருக்கின்றது. பல வகைகளிலும் இலங்கையின் இறைமையில் இத்திட்டம் குறுக்கீடு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

முத்துமாலைத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஆதிக்கமானது உலக மக்கள் தொகையில் 60சதவீதத்தையும் அதாவது 450கோடி மக்களையும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும் சீனா தன்வசப்படுத்திவிடும். இதன்மூலம் வர்த்தக ரீதியாக உலகளவில் சீனா மிகப்பெரிய பொருளாதார பலம்மிக்க நாடாக மாறும். இவ்வாறானதொரு ஒப்பந்தமானது இலங்கை அரசாங்கம் காலம்காலமாகச் சீனாவின் ஆதிக்கத்தின்கீழ்ச் செயற்படுவதற்கு வழிவகுத்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும். கடலாதிக்கப் பாதையில் இலங்கை சீனாவின் தந்திரோபாய பங்காளியாக்கப்பட்டுள்ளமையும் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயமாகத்தான் உள்ளது.

இலங்கை அரசின் வினைத்திறனற்ற செயற்பாடுகள்

நாட்டின் ஆட்சி ஒரு குறிப்பிட்ட குழுவிடமே காணப்படுகிறது. நாட்டின் நன்மை கருதிச் சில தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் அரசாங்கத்திடமே உள்ளது. இலங்கை அரசு சீனாவின் வலைக்குள் வீழ்ந்திருக்கிறது, இதனால் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளக் காத்திருக்கும் மோசமான விளைவுகளின் எதிர்வுகூறல்களையும் திட்டமிடமுடியாத நிலையில் இலங்கை அரசின் செயற்றிறன் மறைந்து போய்விட்டதா? கண்ணுக்கு முன் நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகிறது என்பதை அறிந்திருந்தும் அதற்குக் குரல் கொடுப்பவர்களும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நிலையில் உள்ள அதிகாரம் படைத்தவர்களும் ஆழ்ந்த மௌனத்தில் இருக்கின்றார்கள்.

இலங்கை நாட்டினுடைய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தபோது விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளைச் செய்து வருகின்றது எனவும், இலங்கையில் சீனா செலுத்தும் ஆதிக்கத்தால் இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் நாட்டின் ஒரு உயரிய அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டு நாட்டு மக்கள் மீது அக்கறையற்றவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் செயற்படுவதனால் இறுதியில் சீனாவின் ஆதிக்கத்தில் முழுமையாக அடங்கிப் போகப் போவது இதுவரை காலமும் பாதுகாத்து வந்த சுதந்திரம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

மகிந்த ராஜபக்சே ஆட்சியில் சீனாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் தொடர்பிலும் புதிய அரசாங்கம் ஆய்வு நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. சீனாவின் கட்டுமான வேலைத் திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள செலவுகள் தொடர்பில் சுயாதீனமான கணக்காய்வு நிறுவனங்களைக் கொண்டு ஆய்வு நடத்தவுள்ளதாக கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான புதிய துணை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார். குறிப்பாக 1.5பில்லியன் டாலர் பெறுமதியில் துறைமுக கட்டுமானத்துக்காக சீன நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட இருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகைய கருத்துக்கள் புதிய ஒரு நல்ல தீர்வினைப் பெற வழிவகுக்கும் என்ற நம்பிக்கையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக இருந்தாலும் இத்தகைய அரசாங்கத்தின் கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் பேச்சுக்களாகவேதான் பதியப்படுகின்றன. புதிய ஆட்சிக்கு வந்த அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவின் முத்துமாலைத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தாலும் அது வெறும் வாய்வார்த்தையாகவே போய்விட்டது. இலங்கையில் நிரந்தர அமைதியின்மையும், அரசியல் ஸ்திரத்தன்மையும் இருப்பதாலேயே சீனா இலங்கையில் முதலீடு செய்கின்றது. இதனை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ள மறுக்கின்றது.

பரிந்துரைகள்

சீனாவுடனான இலங்கையின் முத்துமாலை உடன்படிக்கையானது 99ஆண்டுகால நீண்ட உடன்படிக்கையாகும். இவ்உடன்படிக்கையினை மேற்கொள்வதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இலங்கை அரசாங்கம் அறியாமல் இல்லை. மக்கள் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்த போதிலும் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இலாபம், கடன் சுமை ஆகிய காரணங்களைக் கூறியே இறுதியில் ஒப்பந்தத்தையும் முடித்துக் கொண்டுள்ளது. இலங்கை அரசு இந்த முத்துமாலை உடன்படிக்கையினை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் மற்றும் கால அவகாசங்களைக் கொண்டிருந்த போதிலும் அது தொடர்பில் எந்தவகையான முயற்சிகளுக்கும் அரசாங்கம் முனையவில்லை என்பதுதான் உண்மை.

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை எவ்வாறு தன்னுடைய மிகப்பெரிய தவற்றைத் திருத்திக் கொள்ள முடியும்? உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் அரசாங்கம் எத்தகைய அமைதியைப் பேணியதோ அதே அமைதியை மக்கள் இத்திட்டத்தினால் பிரச்சினைகளை அனுபவிக்கும் போதும் வெளிப்படுத்துமானால் அது அரசாங்கத்தின் மோசமான நிலையினை வெளிப்படுத்துவதோடு நாட்டின் அழிவிற்கும் அது வழிவகுத்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆழம் அறிந்தே இலங்கை அரசாங்கம் காலை விட்டுள்ளது. இதனால் நாட்டின் நிம்மதி சீர்குலையும் என்பதில் ஐயமில்லை. எனவே இனி வரும் காலங்களில் அரசாங்கம் தனது தவற்றினை உணர்ந்து நாட்டுக்கு ஏற்படும் பாரிய சவால்களினை எவ்விதம் தீர்க்கலாம் என ஆலோசனை செய்ய வேண்டும்.

இதற்காக ஒரு திறமை வாய்ந்த ஆலோசனைக் குழு ஒன்றை அரசாங்கம் நியமிப்பதுடன், அந்த குழுவில் நிர்ணயிக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினர்களும் நாட்டின் மக்கள் மீதும், நாட்டின் மீதும் பற்றுக் கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும். முத்துமாலைத் திட்டத்தினால் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுமானால் அது குறித்து சீனாவின் முத்துமாலைத் திட்ட உடன்படிக்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவதற்கும், மக்கள் பாதிப்படையாத வகையில் சீன அரசு மாற்று நடவடிக்கைகளைப் பேணவும் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் அம்பாந்தோட்டை கடற்கரை பிரதேசத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் காணிகளை அரசாங்கம் தவறான முறையில் பயன்படுத்த முயலக்கூடாது. மக்களின் சொந்த விருப்பத்தின் பேரில் அவற்றை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டுமே தவிர வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றக் கூடாது. அவர்களின் சொந்த விருப்பின் பேரில் காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டாலும் அதற்கு ஈடான நட்ட ஈடுகளை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கை முறை பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சீனாவில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அவ்வாறு சீன தொழிலாளிகள் இங்கு வருகை தந்தாலும் கூட அவர்கள் இங்கு குடியேற்றங்களை அமைக்க முற்றாக தடை விதிக்க வேண்டும்.  முத்துமாலைத்திட்ட தொழிச்சாலைகளில் எமது நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த முறையில் ஊழியம் வழங்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்படுதல் வேண்டும். நாட்டு மக்களின் பண்பாடுகள், கலாசாரம் ஆகியனவற்றுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் அரசு சிறந்த நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட அரசு சீனாவிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அம்பாந்தோட்டை நிலப்பரப்பின் ஆக்கத் தன்மையினைப் பாதிக்குமானால் அதற்கு முழு பொறுப்பினையும், மாற்றீடான வழிவகையினையும் வழங்கும் பொறுப்பு சீன அரசினையே சாரும் என்பதை எடுத்துக் கூறுதல் வேண்டும். அதுமட்டுமல்லாது உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத நிலையினை அரசு உறுதி செய்தல் வேண்டும். மேலும் இலங்கையின் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக அரசாங்கம் கடற்கரைப் பிரதேச பாதுகாப்பினைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

உண்மையில் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் இருந்து முற்றாக ஒழித்துவிடமுடியாது. ஏனெனில் இலங்கை நாட்டு அரசாங்கத்தின் பொருளாதாரம் இன்று சீனாவினை நம்பியே இருக்கின்றது. இந்த நிலையில் சீனாவை எதிர்க்கும் நிலை உருவானால் அது நாட்டின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. சீனாவின் முத்துமாலைத் திட்ட உடன்படிக்கையானது சட்டவலுவுள்ள ஒரு உடன்படிக்கையாகும். எனவே இதில் இருந்து மீள்வதற்கான உபாயங்களை அரசு சிந்திக்க வேண்டும். உடன்படிக்கைதானே என ஏளனமாக விட்டுவிடக் கூடாது. இலங்கை அரசு ஒரு நூற்றாண்டுக்குரிய இலங்கையின் வளத்தினையும் எதிர்கால சந்ததியின் சுதந்திரத்தையும் சீன நாட்டிற்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது என்பதை உணர வேண்டும்.

இலங்கை அரசாங்கம் சீனாவுடன் பல உடன்படிக்கைகளை செய்துள்ளது. அனைத்து உடன்படிக்கைகளையும் முற்றாக அகற்ற முடியாது. அதிலும் குறிப்பாக சட்ட வலுவுள்ள எந்த உடன்பாட்டையும் ரத்து செய்ய முடியாது. எனவே சட்ட வலுவற்ற உடன்படிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் நீக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இத்தகைய அரசின் அதிரடியான நடவடிக்கையானது ஏனைய உடன்படிக்கைகளுக்குத் தயாராகும் சீனாவிற்குப் பதிலடி கொடுப்பதோடு, முத்து மாலைத்திட்டம் வலுவிழந்து நாடு நன்மையடைய வாய்ப்பு உருவாகும்.

நீண்டகாலத் திட்டங்கள், முதலீடுகளுடனும், கடன்களுடனும் இலங்கை சீனாவுடன் தொடர்புபட்டுள்ளதால் இது குறுகிய காலத்திற்காக்க் கட்டியெழுப்பப்பட்ட திட்டம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சீனாவின் பொருளாதார செயற்றிட்டங்கள் இலங்கை நாட்டினைப் பொறுத்தவரையில் நீண்டகால வலுக் கொண்டதாகக் காணப்படுகின்றது. எனவே இனிவரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமாயினும் இதுகுறித்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். சீனாவின் எந்தவொரு நீண்டகாலச் செயற்றிட்டங்களுக்கும் தலைவணங்கக் கூடாது. அவற்றை ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

இலங்கையில் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணன் குற்றம் சாட்டியிருந்தார். இதனைக் கருத்திற்கொண்டு இரு நாடுகளும் உறவினைப் பேணுவது நன்று. அத்துடன் ஏனைய நட்பு நாடுகளுடனும் இலங்கை சுமுகமான முறையில் உறவினைப் பேணுவது, இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் இருந்து கிடைக்கும் அழுத்தத்தை வகைசெய்ய உதவலாம்.

முடிவுரை

இந்துமகா சமுத்திரத் தீவில் பல்வேறு சிறப்பம்சங்களினைக் கொண்ட ஒரு தீவாக இலங்கை காணப்படுகின்றது. நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நாடாக விளங்குகின்றது. இலங்கைக்கு ஆபத்து என்பது இயற்கையினால் உண்டானால் அதைத் தடுப்பதற்கு வழிகள் இல்லை. ஆனால் ஒரு நாட்டினால் அடிமைப்படுகின்றோம், ஆபத்து வரும் என அறிந்திருந்தும் குழந்தைத்தனமாக பாரிய அந்நிய நாட்டு உடன்படிக்கைகளுக்கு கைச்சாத்திடுவது தற்போதைய நிலையில் சாதாரண ஒரு நிலையாக தெரியலாம். காலமாற்றத்தில் ஆட்சிகள் மாறிப் போகலாம். நாட்டின் எண்ணங்களும் மாறிப் போகலாம். நாடுகளுக்கிடையிலான உறவுகளும் உடைந்து போகலாம். இந்நிலையில் இலங்கையுடனான உடன்படிக்கை, நாடுகளின் உறவில் விரிசல் ஏற்படும் நிலையில் இலங்கையின் நிலை என்னவாகும்? சாதாரண ஒரு உடன்படிக்கை நிகழ்கால சந்ததி கொண்ட சமூகத்தை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினையும் பிற நாட்டிற்கு அடிமைப்படுத்த வரையப்பட்ட காகிதமாகிவிடும்.

நாட்டின் நன்மை கருதிய ரீதியில் ஒரு தீர்மானம் ஒன்று எடுக்க முனைகின்றபோது தற்காலச் சூழ்நிலையினை மட்டும் கருத்திற்கொள்ளாது எதிர்கால சமூகம் எத்தகைய பாதிப்பினை எதிர்கொள்ளும் என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். காலமாற்றத்தில் ஏற்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த எதிர்வுகூறலை மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் இத்தகைய எந்தவொரு பாரிய நீண்டகால உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் சற்றுத் தீர்மானம் எடுத்துச் செயற்பட வேண்டும்.

அறிந்தும் அறியாமலும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுவிட்டது. இதனால் இலங்கை மக்கள் நன்மைகளை அடைந்து கொள்ள முடியுமானாலும் அதனைவிட பல மடங்கு தீமைகளை அடைந்து கொள்ளும் சூழலும் காணப்படுகின்றது. எனவே முத்துமாலைத் திட்டத்தினால் மக்களுக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 99வருட காலப்பகுதியில் பல ஆட்சி மாற்றங்கள் உருவாகும். எனவே ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமாயினும் முத்துமாலைத் திட்டத்தினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க மறந்துவிடக் கூடாது. இனிவரும் காலங்களில் நாட்டிற்கு எந்தவகையிலும் தீமை பயக்காத புதிய பொருளாதார செயற்றிட்டங்களை அரசாங்கம் உருவாக்கிக் கொள்வதுடன் அதன்மூலம் கிடைக்கும் நன்மை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

துணைநின்றவை

செல்வி. வினாயகமூர்த்தி – வசந்தா

கலைமாணி மாணவர்

பொருளியல் துறை

கலைகலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை

இலங்கை.

nirovasa2919@gmail.com