கொங்கு மணம் கமழும் கோவையில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைச்சாலையில், நொய்யல் ஆற்றின் தென்கரையில் எம்பெருமான் பட்டீசுவரர் – பச்சைநாயகி குடிகொண்டு அருள் வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது பேரூர். ‘பிறவா நெறி’ என்றும் ‘மேலைச் சிதம்பரம்’ என்றும் போற்றப்படும் இவ்வூரில் சிவநெறியும், பக்திநெறியும் நிறைந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புப்பெற்ற பேரூர் கோவையிலிருந்து சிறுவாணி, பூண்டி செல்லும் சாலையில் சுமார் 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வூரில் செந்தமிழ்க் கல்லூரியாகத் தொடங்கப்பெற்று கலை அறிவியல் கல்லூரியாக வளர்ந்துள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நூலகமாகச் செயல்பட்டுவரும் ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தின் உயர்தனிச் சிறப்பினை அடையாளப்படுத்துவதாய் இக்கட்டுரை அமைகிறது.

செந்தமிழ்க்கல்லூரிஉருவாக்கம்

தமிழ்மொழி மீது மாறாப் பற்றுக் கொண்ட தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் கொங்கு நகரமாம் பேரூர்த் தலத்தில் செம்மொழித் தமிழின் வளம் பெருக்கவும், சமயநிலை உயரவும் செந்தமிழுக்கென தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியைப் பேரூராதீனத்தில் 24.05.1953இல் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குன்றக்குடி அடிகளாரால் தொடங்கப்பெற்றது என்றும், அறியாமை இருளை அகற்றும் கல்வி என்னும் பெருஞ்செல்வத்தை ஏழை எளிய மாணவர்களும் பெற்று வளர உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பெருமகனார் இக்கல்லூரியைத் தொடங்கினார்.

சிதம்பர அடிகள் நூலக உருவாக்கம்

பேரூராதினத்தில் தவத்திரு சாந்தலிங்கர் சைவத் திருமடத்தைத் தொடங்கிய காலம் (1914 – 1915) முதற்கொண்டே சிதம்பர அடிகள் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. அதன் பின்பு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தமது அறிவுத் தேடலுக்கு வேண்டிய நூல்களை விலை கொடுத்து வாங்காமல் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தைக் கல்லூரியுடன் இணைக்க எண்ணினர். அதன் விழைவாக 1958ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைக்க, அன்றைய தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ‘கர்மவீரர் காமராசர்’ அவர்களை அழைத்து திறந்து வைத்துள்ளனர். இதனைக் கல்லூரியின் நுழைவு வாயிலில் பதிக்கப்பெற்றுள்ள அடையாளக் கல்வெட்டுவழி அறிமுடிகிறது.

நூலகத்தில் படிக்கின்ற சூழல்

பசுமை சூழ்ந்த தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருக்கும் தோப்பும், சாந்தலிங்கப் பெருமான் ஜீவசமாதிமீது எம்பெருமான் லிங்கத் திருமேனி  பதிக்கப்பெற்றிருக்கும் திருக்கோயிலுடன் இனிய அமைதியான சூழ்நிலையில் நல்ல காற்றோட்டமான இடத்தில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரிக்குள் சிதம்பர அடிகள் நூலகம் சுமார் 2700 சதுர அடிப்பரப்பில் அமைந்துள்ளது.

நூற்சேர்க்கையும் அன்பளிப்பும்

எழுமாத்தூர் வேலம்பாளையம் புலவர் இரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் என்னும் சான்றோர் தமிழ்கூறும் நல்லுலக மக்களாம் தமிழறிஞர் பெருமக்களுக்கு என்றென்றும் பயன்படவேண்டும் என்ற நல்நோக்கத்தோடு 1960ஆம் ஆண்டு தமிழ்க் கல்லூரி நூலகத்திற்கு 1700-க்கும் மேற்பட்ட பழமையான தமிழ் நூல்களையும், தான் தொகுத்த 350-க்கும் மேலான பழைய ஓலைச்சுவடிகளையும் அன்பளிப்பாக வழங்கினார். இவற்றைக் கொண்டு விரிவுபடுத்தப்பட்ட இந்நூலகம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி நீடு நிலைத்து விளங்கி இன்றளவும் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகின்றது.

நூற் பொருண்மை 

தற்போது இந்நூலகத்தில் தமிழ் இலக்கிய நூல்கள், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், கணினி அறிவியல், பொதுஅறிவு எனப் பல்துறை சார்ந்த 26,700க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவற்றுள் உள்ள தமிழ் நூல்களை இலக்கியம், இலக்கணம், நாடகம், நாவல், கவிதை, சிறுகதை, உரைநடை, சான்றோர் வரலாறு, மொழியியல், திறனாய்வு நூல்கள், தலவரலாறு, புராணங்கள், கோயிற்கலை, இசைநூல்கள், மருத்துவ நூல்கள், சமயம், தத்துவம், பயண இலக்கியம், ஆய்வுக்கோவைகள், அகராதிகள், நிகண்டுகள் எனப் பல்வேறு பொருண்மையில் DDC (Dewy Decimal Classification) என்ற வகைமையில் வரிசைப் படுத்தியுள்ளனர்.

அரிய நூல்கள்

தமிழ்மொழியின் பெருமையைப் பறைசாற்றும் அரிய, பழமையான நூல்களை இந்நூலகத்தில் ஏராளமாகக் காணமுடிகிறது. அவற்றுள் சில வருமாறு:

 • நெல்லையப்ப பிள்ளையவர்கள் அருளிச்செய்த திருநெல்வேலித் தலபுராணம் (1869)
 • மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய காசி ரகசியம் மூலமும், கா.திருச்சிற்றம்பல ஞானியவர்கள் இயற்றிய உரையுடன் (1881)
 • சரஸ்வதி மகால் வெளியிட்ட தனிப்பாடற்றிரட்டு பொழிப்புரையுடன்(1888)
 • பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்கினியருரையும் (1889)
 • தாண்டவராய முதலியார் பதிப்பில் சேந்தன் திவாகரம் மூலபாடம் (1891)
 • சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் சுப்பராயநாயகரவர்கள் பொழிப்புரையுடன் (1893)
 • ஈக்காடு இரத்தினவேலு முதலியார் இயற்றிய சிறப்புப் பெயரகராதி (1908)
 • அருணந்தி சிவாசாரியார் அருளிச்செய்த சிவஞான சித்தியார் சுபக்கம் மூலமும், மாதவச் சிவஞானயோகிகள் உரையுடன் (1914)
 • பிங்கல முனிவர் இயற்றிய பிங்கலத்தை என்னும் பிங்கல நிகண்டு மூலமும் உரையும் (1917)
 • மெய்கண்ட தேவநாயனார் அருளிச்செய்த சிவஞானபோதச் சிற்றுரை விளக்கம் பொ.முத்தையாபிள்ளை எழுதிய விளக்கத்துடன் (1918)
 • சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் (1920)
 • ஸ்ரீகாசிவாசி செந்திநாதையர் இயற்றிய சைவவேதாந்தம் (1920)
 • ஸ்ரீமதி சம்பந்த சரணாலய சுவாமிகள் அருளிச் செய்த மூலமும், மகாவித்வான் சபாபதி முதலியார் இயற்றிய பொழிப்புரையுடன் கந்தபுராணச் சுருக்கம் (இரண்டாம் பதிப்பு 1925)
 • மதுரைத் தமிழ்ச்சங்க வித்வான் மு.ரா. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பெற்ற பரங்கிரிப் பிரபந்தத் திரட்டும் குறிப்புரையும் (1927)
 • ஸ்ரீகுலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழி (1930)
 • கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி மூலமும் உரையும், உ.வே.சா. எழுதிய குறிப்புகளுடன் (1930)
 • பரஞ்சோதி முனிவர் அருளிய மதுரை யறுபத்து நான்கு திருவிளையாடற் புராணம் (1931)
 • நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழி (1933)
 • வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மகாபாரதம் ஆதிபருவம் மூலமும், ஆறுமுக நாவலரவர்கள் உரையும் (1934)
 • காசிவாசி சிவானந்த யதீத்திர சுவாமிகளால் மொழிபெயர்க்கப்பட்ட சாமவேத சங்கிதை சாயண பாடியம் இரண்டாம் பாகம் (1935)
 • ஸ்ரீசிவாக்கிய யோகிகள் அருளிச்செய்த சிவநெறிப்பிரகாசம் ஸ்ரீநந்தி சிவாக்கிரயோகிகள் இயற்றிய உரையோடு (1936)
 • டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய குறிப்புரையுடன் தொல்காப்பியம்  எழுத்ததிகாரம் (1937)
 • பாரி காதை, பாஷா கவிசேகர் ரா.இராகவையங்கார் இயற்றியது (1937)
 • சிரவணபுரம் கௌமார மடாலயம் ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள் அருளிய வெள்ளிங்கிரிதோத்திரப் பிரபந்தம் (1938)
 • மேலகரம் திரிகூடராஜப்பக் கவிஜராயர் இயற்றிய திருக்குற்றால யமக வந்தாதி, திருக்குற்றால உலா, திருக்குற்றால சிலேடை வெண்பா (1939) மெய்கண்டார் இயற்றிய மெய்கண்ட சாத்திரம் (சித்தாந்த சாத்திரம்) (1942)
 • குலசேகரப்பட்டினம் போடிபட்டி ஸ்ரீ அருணாசல சுவாமிகளின் சீடர் திருத்தேவர் பழநியப்ப கவுண்டர் இயற்றிய பரமாத்துவித சித்தாந்தம் கட்டளையும் அனன்ய ஸத்கார்ய வாதமும் (1947)
 • பன்னிருபாட்டியல் – மேற்கோள் சூத்திரங்களுடன் (1949)
 • ஸ்ரீ மறைஞானசம்பந்தநாயனார் அருளிச்செய்த சைவச்சிறு நூல்கள் முதற்பகுதி (1954)
 • திருக்குறள் விரிவுரை அறத்துப்பால் – இல்வாழ்க்கை இயல் – உரையாசிரியர் திருவாளர் திரு.வி.கலியாண சுந்தரனார் (1959)
 • கவிராசஷஸ ஸ்ரீகச்சியப்பமுனிவர் இயற்றிய பேரூர்ப்புராணம் பொழிப்புரையும் – குறிப்புரைகளுடன் (1969)
 • காக்கைபாடினியம் மூலமும் புலவர் இரா.இளங்குமரன் அவர்கள் இயற்றிய விளக்கச் சிற்றுரையும் (1974)
 • திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் (1976)
 • கவிராசஷஸ ஸ்ரீகச்சியப்பமுனிவர் இயற்றிய பேரூர்ப்புராணம் (1969)தே.கருணாகரக் கவிராயர் இயற்றிய திருவோத்தூர்ப் புராணம் (1990)
 • மாதவச் சிவஞானயோகிகள் அருளிச்செய்த சிவஞான மாபாடியம் (பதிப்பு ஆண்டு இல்லை)
 • இளங்கோவடிகள் இயற்றியருளிய சிலப்பதிகார மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் இயற்றிய உரையுடன் (பதிப்பு ஆண்டு இல்லை)

இத்தகைய அரிய நூல்களோடு உலகப் பொதுமறையாம் திருக்குறளும்   மாணவர்களின் பயன்பாட்டிற்காக நூலகத்தில் தனிநிலைப்பேழையில் (Rack) வைத்துள்ளனர். இவைகளன்றி இன்னும் ஏராளமான பழமையான நூல்கள் (குறிப்பாக தலபுராணங்கள் – 385 எண்ணிக்கைக்கு மேலும்) இடம்பெற்று நூலகத்திற்குப் பெருமை சேர்ப்பனவாக உள்ளன.

கையெழுத்துப் பிரதிகள்

கோவைக்கிழார், தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆகிய சான்றோர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் கையெழுத்துப் பிரதிகளாக இந்நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிப்பதாக அமைகின்றன.

ஓலைச்சுவடிகள்

பெரும்பங்கு ஓலைச் சுவடிகளைக் கொங்குநாட்டு உ.வே.சா. என்று அழைக்கக் கூடிய புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களும், மற்ற அன்பர்களும் வழங்கியுள்ளனர். அவைகளாவன: இலக்கியம், இலக்கணம், சங்க இலக்கியம், புராணங்கள் (பெரியபுராணம்), சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், இசைநூல்கள், மருத்துவம், நிகண்டு,  சோதிடம், மாந்திரிகம், சித்தாந்த சாத்திரங்கள், மகாபாரதம் கன்னடச் சுவடியும் பெயர் தெரியாத வேறொரு கன்னடச் சுவடியும், சாலங்கராம பரீஷக்ரந்தமு (170, 171), சாலிங்கிராம பரீசைஷ நூல் (169) என்று எழுதப்பெற்ற தெலுங்குச் சுவடியும் என்பன போன்ற பொருண்மைகளில் 407 ஓலைச் சுவடிகளை இந்நூலகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தைகைய தனிச்சிறப்புப்பெற்ற ஓலைச்சுவடிகளைத் தனி அறையில் தனிப்பட்ட மரப்பேழைகளில் வைத்துக் கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகின்றனர்.

தமிழறிஞர் தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் தொகுத்து வைத்திருந்த சுவடித்தொகுப்பினின்றும்தான் பஞ்ச மரபு என்னும் நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் நூலாக வெளிவராத ஓலைச்சுவடிகளும் காணக்கிடக்கின்றன.

இசைநூல்கள்

யாழ்நூல், உத்திரகாமிக ஆகமம், கோபாலகிருஷ்ண பாரதியார்இயற்றிய தமிழிசைப் பாடல்கள் (1955), நந்திகேசுவரார் இயற்றிய அபிநய தர்ப்பணம் (1957), எம்.ஜி.குப்புசாமி இயற்றிய சங்கீத தாளராகமாலை (1965) என்பன போன்ற இசைநூல்களும் இந்நூலகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அகராதிகள்

லெக்சிகன், பவுண்டர், எதுகை அகராதி, சதுரகராதி, சங்கஇலக்கியச் சொல்லடைவு, விண்வெளி அகராதி, கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலி, ஆட்சிச்சொல் அகராதி, ஆசிரிய நிகண்டு, தமிழ் அகரமுதலி, அறிவியல் களஞ்சியம், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், செந்தமிழ் சொற்பிறப்பியல், பேரகரமுதலி, அருங்கலைச்சொல் அகரமுதலி, சைவ சமயக் கலைக் களஞ்சியம், தமிழிசைக் களஞ்சியம் எனப்பல அகராதிகள் மாணவர்களின் தேடல்களுக்கு உதவியாக இருக்கின்றன.

நூலகத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள இதழ்கள்

இந்நூலகத்தில் நூல்கள் தவிர பல்வேறு நாளிதழ்களும், அன்புநெறி, அன்பொளி, அறிவியல் ஒளி, ஆய்வுக் களஞ்சியம், அமைதியும் ஆரோக்கியமும், ஆத்மஜோதி, கலைக்கதிர், காலச்சுவடு, மெய்கண்டார், நட்பு, நமது நம்பிக்கை, சிவசாந்தலிங்கர், சுற்றுச்சூழல் புதியகல்வி, திருச்சிற்றம்பலம், தன்னம்பிக்கை, தமிழ்ப்பணி, தமிழர் பெருமை, தமிழர் திருநெறி, உழவாரம், விஞ்ஞானச்சுடர், வளரும் தமிழகம் என 50-க்கும் மேற்பட்ட மாத இதழ்களும், சுதேசி, தெய்வ முரசு ஞானதீபம், திலகவதியார் திருவருள் ஆதினச் செய்திமடல், சிவனருள், Hinduism Today போன்ற இதழ்களும், புதிய தலைமுறை, கலைமகள் ஆகிய வார இதழ்களும் இந்நூலகத்திற்கு வருகை தருகின்றன.

ஆய்வேடுகள்

ஆய்வேட்டிற்கென்றே தனியாக ஒரு பகுதி உள்ளது. இதில் இளநிலை, முதுநிலை ஆய்வை நிறைவு செய்தவர்களின் ஆய்வேடுகள் தனிநிலைப் பேழையில் வைத்துப் பாதுகாத்து வருவதோடு ஆய்வாளர்கள் பார்வையிடவும், பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கின்றனர்.

நூலகத்தின் விதிகள்

தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்களும், பல்வேறு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களும் துறைத்தலைவரிடம் அனுமதிக்கடிதம் பெற்று வந்து இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தவிரவும், பிற கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவர்கள் அரிய தமிழ் நூல்களைப் பார்க்க/படிக்க வேண்டும், குறிப்பெடுக்க வேண்டும் என்ற நோக்கில் வருகின்றவர்களுக்கும் அனுமதி வழங்குகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நூலகத்திற்கு வந்து பயனடைந்து செல்கின்றனர்.

பிறர்பயன்பாடுகள்

கல்லூரியில் பயில்கின்ற மாணவர்கள் தவிர ஊர்ப்பொதுமக்களும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் அறிமுகத்தோடு நூல்களை வார இறுதி நாட்களில் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்துவர அனுமதி அளிக்கின்றனர். இந்நூல்களைக் கணினியில் பதிவுசெய்தும், நூலகப் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டும் வழங்குகின்றனர்.

நூலகத்தின் சிறப்பியல்புகளும் செயல்பாடுகளும்

 • நூலகத்தின் சிறப்புகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்துப் பல்வேறு செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள செய்திகளையும், புகைப்படங்களையும் கோப்பில் சேகரித்து வைத்தல்.
 • அரிய நூல்களை வருடி (Scan) செய்து கணினியில் பதிவுசெய்து பாதுகாத்து வருதல்
 • பாண்டிச்சேரி – பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் கல்வெட்டியல் / தொல்லியல்துறை சார்ந்த திரு.பாபு என்பவரின் துணையுடன் ஓலைச்சுவடிகளை வருடி (Scan) செய்து அவற்றை மென்தகட்டில் (CD) பதிவேற்றம் செய்து நூலகத்தில் வைத்துப் பராமரித்து வருதல்
 • சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.நசன் அவர்களின் துணையோடுcom என்னும் இணைய இதழின் மூலம் இந்நூலத்திற்கு வரக்கூடிய புதிய நூல்களை இணையத்தில் அறிமுகப்படுத்துதல்.
 • NET, SET, TNPSC, VAO போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இத்தேர்வில் வெற்றிபெற்றுப் பணியில் இருப்பவர்களை அழைத்து வந்து பயிற்சி வகுப்புகளை நடத்தச் செய்தல்.
 • மேலும் இக்கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்குரிய அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த AV காணொளிக்காட்சிக்கென்று நூலகத்தில் ஓர்அறையை ஒதுக்கியுள்ளமை
 • மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாகக் கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம் போன்ற படைப்பிலக்கியங்களைப் பெற்று, அவற்றுள் சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து நூலகத்தின் அறிக்கைப் பலகையில் students corner என்ற பகுதியில் வெளியிடுதல்.
 • கண் பார்வை இல்லாத ஒரு மாணவருக்கு நூலகர் திருமதி சா.அபிராமி பாடங்களைக் கற்றுக் கொடுக்கவும், தேர்வு எழுதவும் உதவி செய்து வருதல்.

என்பன போன்ற செயல்பாடுகளுடன் இந்நூலகம் திகழ்கின்றது.

கண்காட்சி

கல்லூரி நிர்வாகத்தின் உறுதுணையோடு நூலகத்தில் தேசிய அளவிலான தொல்லியல் கண்காட்சியை 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் நடத்தினர். இக்கண்காட்சியைக் கோவை, ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களும், தொல்லியல் நிபுணர்களும், மொரிசியா, மலேசியா ஆகிய வெளிநாட்டு மக்களும் கண்டு பயனடைந்தனர்.

திருமடத்துடன் இணைந்து நூலகத்தின் பணிகள்   

மலேசியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா, மொரிசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தமிழகம் வரக்கூடிய வெளிநாடு வாழ் மக்கள் இங்குள்ள சாந்தலிங்கப் பெருமான் திருமடத்தின் சிறப்புக்களைக் கேள்வியுற்று இங்கு வருகின்றனர். அவ்வாறு வருவோர்யாவரும்  ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும், பழமையான நூல்களையும் கண்டு மகிழ்கின்றனர்.

நூல் வெளியீடு

பேரூராதீனம் தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் திருமடத்தின் சார்பாக ‘குமார தேவர்’ என்னும் பதிப்பகம் கல்லூரிக்குள் செயல்பட்டு வருகின்றது. இப்பதிப்பகத்தின்வழி கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத வுந்தியார் என்பன போன்று சுமார் 200-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.

தடம்பதித்த சான்றோர்கள்

பேரூராதீனத்தில் உள்ள சிதம்பர அடிகள் நூலகத்திற்குச் சான்றோர் பெருமக்கள் பலர் சொற்பொழிகள் நிகழ்த்துவதற்காகவும், வேள்விகளில் பங்கேற்பதற்காகவும் வருகை தந்துள்ளனர். இவர்களின் வரவால் திருமடமும், நூலகமும் புகழ்பெற்று நிற்கின்றது. அச்சான்றோர்களில் சிலரின் பெயர்கள் வருமாறு: பாரதக் குடியரசுத் துணைத்தலைவர் திரு.பி.டி.ஜாட்டி, முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானி சந்திராயன், குன்றக்குடி அடிகளார், மறைமலையடிகளார், தவத்திரு சுந்தரசுவாமிகள், மாணிக்க சுவாமிகள், தவத்திரு ஊரன் அடிகள், தவத்திரு பொன்னம்பல அடிகள், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், சிவக்கவிமணி வி.கே. சுப்பிரமணிய முதலியார், சோமசுந்தர பாரதியார், சுந்தானந்த பாரதியார், வ.உ.சிதம்பரனார், சொல்லின் செல்வர் சுகிசிவம், கவிஞர் காந்திதாசன் என இவர்களைப்போல் இன்னும் ஏராளமான சான்றோர்கள் இத்தமிழ் தலத்தில் தடம் பதித்துள்ளனர்.

பணியாளர்கள் விவரம்

இந்நூலகத்தில் திருமதி சா.அபிராமி அவர்கள் நூலகராகவும், திருமதி எஸ்.கலைவாணி, திரு.ஆர்.காளியப்பன் ஆகியோர் உதவியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

வேலைநேரம்

அரசு விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமை தவிர அனைத்துக் கல்லூரி வேலை நாட்களிலும் காலை 9.15 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது.

பேருந்து வசதிகள்

கோவை காந்திபுரத்திலிருந்து 59, 59A, 14, S14, S17ஆகிய எண்களையும், டவுன்ஹாலிருந்து 02, S3, S4, 54, 39B, 34 ஆகிய எண்களையும் கொண்ட பேருந்துகள் தமிழ்க்கல்லூரி வழியாகச் (பேருந்து நிறுத்தம் – தமிழ்க்கல்லூரி) செல்கின்றன.

கூடுதல் தகவல்களுக்கு

செல்பேசி எண்         :            8015012316

மின்னஞ்சல் முகவரி :           tsanoolagam@gmail.com

வலைதள முகவரி     :           www.tamiledu.co.in, //www.tamiledu.co.on

நன்றிக்குரியோர்

          தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் (பேரூர் ஆதீனம்).

          தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் (முதல்வர்).

          முனைவர் செல்லத்தாள் அவர்கள் (பேராசிரியர்).

முனைவர் திருநாவுக்கரசு அவர்கள் (உதவிப்பேராசிரியர்).

          திருமதி சா.அபிராமி அவர்கள் (நூலகர்).