உரைக்களம்

இந்திய விடுதலைக்குப் பின்னர்ப் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர். இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர். தனது அரசியந்திரத்தில் நேர்ந்த தவறுக்காக உயிர் துறந்த சிலப்பதிகாரப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்று, தமது அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் செய்த விதிமீறல்களுக்குப் பொறுப்பேற்றுப் பதவியை துறந்தவர். தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஆகிய பெருமைகளுக்கு உரிய இரா. க. (ஆர்.கே.) சண்முகம் செட்டியார் (சண்முகனார்) சிலப்பதிகாரப் புகார்க்காண்டத்திற்கு உரை எழுதிய பெற்றியர். பலராலும் அறியப்படாத பதிப்பாகிய சண்முகனாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பு உணர்த்தும் தமிழுணர்ச்சியை எடுத்துக் காட்டுவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். இம்முயற்சிக்குச் சண்முகனாரின் சிலப்பதிகாரப் புகார்க்காண்ட உரை முதன்மைத் தரவாகும். சிலப்பதிகாரப் பழையவுரைகள், புத்துரைகள், ஆய்வுநூல்கள் போல்வன துணைத்தரவுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. முதற்கண் சிலப்பதிகார உரைகளின் தோற்றம்; வளர்ச்சி ஆகியவற்றை அறிவோம்.

சிலப்பதிகார உரை வரலாறு

சிலப்பதிகாரத்தின் முதல் உரையாசிரியர் அரும்பதவுரையாசிரியர் என்பர். அவருரை அரும்பதங்களுக்கும் ஒரோவிடங்களில் பொருள்கோள் கூறுதலுமாக அமைந்த உரையாகும். அரும்பதவுரையிலுள்ள சில குறிப்புக்களால் அவ்வுரைக்கு முன்னரும் வேறு பழையவுரையொன்று இருந்திருக்கலாம் என்றும், அவ்வுரை இக்காலத்தில் கிடைக்கவில்லை என்றும் கூறுவார் உ. வே. சாமிநாதையர் (2008: XI). அரும்பதவுரைக்குப் பின்னர்ப் பழங்காலத்திலேயே மற்றொரு உரையைப் பெற்றுள்ள சிறப்பு சிலப்பதிகாரத்திற்கு உண்டு. இப்பழையவுரைகள் கடின நடையில் உள்ளன என்பது ஒரு பொதுக்கருத்தாகும். இவ்வுரைகளைப் பற்றிப் புத்துரைகாரராகிய சண்முகனாரின் கருத்து வருமாறு:

” மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பித்த புத்தகம் ஒன்றை வாங்கி வெகு ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன். மனச்சோர்வு உண்டாயிற்று. பொருள் சரியாய் விளங்கவில்லை. பதங்களின் சந்தியைப் பிரித்துப் படிக்கப் போதுமான இலக்கண அறிவு எனக்கு இல்லை. அடியார்க்குநல்லார் உரையைத் திருப்பினேன். நூலைவிட உரை கடினமாய்த் தோன்றியது. மூன்று தடவை இம்மாதிரியே முயற்சி செய்தேன். ஒன்றும் பயன்படவில்லை.

          தமிழ்ப் பண்டிதர் ஒருவரை உடன் வைத்துக் கொண்டு படிப்பதென்று கடைசியாய் முடிவு செய்து, எனது நண்பர் வித்வான் அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் வீட்டிலே வந்து தங்கி நாள்தோறும் ஒரு மணி நேரம் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். இவருடன் படிக்கும்போது நூல் வெகு சுலபமாய்த் தோன்றியது. பாட்டைப் பதம் பிரித்துப் படிக்கும்போதே ஏறக்குறைய பொருள் விளங்கி விட்டது. இப்படியாகச் சிலப்பதிகாரம் முழுவதையும் படித்து முடித்தேன்” (ஆர்.கே. சண்முகம் செட்டியார் 1946: 3*).

சண்முகனார் எழுதிய மேற்பகுதி சில கருத்துக்களை நமக்கு உணர்த்துகின்றது. அவை வருமாறு:

 1. சொற்களின் சந்தி பிரித்துப் படிக்க, போதுமான இலக்கண அறிவு இல்லாதபோது பாடல்களைப் படித்துப் பொருளறிவது கடினம்.
 2. பாட்டைச் சரளமாகப் படிக்கவும் இயலாத தலைமுறை முற்காலத்திலும் இருந்துள்ளது.
 3. போதிய இலக்கண அறிவில்லாதபோது நூலை விட உரையே கடினமாகத் தோன்றும்.
 4. ஒரு நூலைப் படிக்க இயலாதபோது, தமிழ்ப் பண்டிதர் ஒருவரை உடன் வைத்துப் படிப்பது முற்கால வழக்கம்.
 5. பாட்டைப் பதம் பிரித்துப் படித்தாலே பொருள் விளங்கிவிடும்.
 6. இந்திய விடுதலைக்கு முன்னர் இருந்தே தமிழ்ப் பாடல்களைச் சந்தி பிரித்துப் படிக்க இயலாத தமிழர்கள் பலர் இருந்துள்ளனர் என்பதையும், தமிழ்க் கல்வி எளிமையை நோக்கி நகரத் தொடங்கி விட்டதையும் சண்முகனாரின் உரைப்பகுதி நமக்குக் காட்டுகின்றது.

இனிச் சிலப்பதிகாரப் புத்துரைகளைக் காணலாம். சிலப்பதிகாரப் புத்துரைகாரர்களில் முதலாமவர் எனக் குறிக்கத்தக்கவர் ஸ்ரீநிவாஸ ராகவாசாரியர் (1876) ஆவர். எனினும் அவர் எழுதிய அரும்பத விளக்கம் தற்போது கிடைக்கவில்லை. அவருக்குப் பின்னர் (1880) சிலப்பதிகாரப் புகார்க் காண்டத்தைப் பதிப்பித்த தி.க. சுப்பராய செட்டியார் அடியார்க்கு நல்லார் உரை கிடைக்காத கானல்வரிக்கு மட்டும் புத்துரை எழுதிப் பதிப்பித்தார். இவ்வகையில் கிடைக்கின்ற உரைப் பதிப்புக்களுள் முதற்புத்துரையைச் செய்தவர் தி. க. சுப்பராய செட்டியார் எனலாம். எனினும் அவருரை ஒரு காதை அளவில் மட்டுமே அமைந்ததாகும். தி. க. சு. வின் பதிப்பு பழையவுரையாகிய அடியார்க்குநல்லார் உரையுடன் புத்துரையும் இணைந்து வெளிவந்த பதிப்பாகும். இதற்கடுத்த நிலையில் வெளிவந்த ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையே நூல் முழுமைக்கும் அமைந்த முதற்புத்துரையாகும். நாட்டாரின் உரை 1942 இல் வெளிவந்தது.

புலியூர்க்கேசிகன் எழுதிய எளியவுரைப் பதிப்பு 1958 இல் சென்னை, பாரி நிலையத்தால் வெளியிடப்பட்டது.  திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (கழகம்) பொ.வே.சோமசுந்தனாரின் புகார்க் காண்ட உரையை 1968 இல் வெளியிட்டது. மதுரைக்காண்ட உரை 1969 இலும், வஞ்சிக்காண்ட உரை 1970 இலும் வந்தன. மூன்றும் அடங்கிய முழுமைப் பதிப்பும் 1970 இல் வெளிவந்துள்ளது. ஸ்ரீசந்திரனின் தெளிவுரைப் பதிப்பு 1988 இலும், சிலம்பொலி செல்லப்பனின் சிலப்பதிகாரத் தெளிவுரைப் பதிப்பு 1994 இலும், வ.த.இராமசுப்பிரமணியத்தின் சிலப்பதிகாரத் தெளிவுரை 2005 இலும், புலமை வேங்கடாசலத்தின் உரை 2007 இலும், ப.சரவணனின் உரை 2008 இலும், ச.வே.சுப்பிரமணியனின் தெளிவுரை 2009 இலும் வெளிவந்துள்ளன. இவையனைத்தும் எளிமைப்படுத்திய நிலையில் அமைந்த முழுமையான தெளிவுரைகளாகும்.

தனி நிலையில் அமைந்த பகுதிநிலை உரைகளுள் முதல் உரையாக அமைவது ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் புகார்க்காண்ட உரையாகும். கலா நிலையம் கே. இராசகோபாலாச்சாரியார் கானல்வரிக்கு மட்டும் உரையெழுதி 1960 இல் வெளியிட்டுள்ளார். ச. வே. சுப்பிரமணியன் அரங்கேற்றுகாதைக்கு மட்டும் தனியே உரையெழுதி 2001 இல் வெளியிட்டுள்ளார். ச.செயப்பிரகாசம் என்பவர் சிலப்பதிகாரம் மூலமும் குறிப்புரையும் என்ற பதிப்பொன்றை 1977 இலில் வெளியிட்டுள்ளார். சிலப்பதிகாரப் பதிப்புக்களில் குறிப்புரைப் பதிப்பு இது ஒன்றே.

சண்முகனாரின் சிலப்பதிகாரப் புகார்க்காண்ட உரைப்பதிப்பு அறிமுகம்

சண்முகனாரின் உரைப்பதிப்பு 1946ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் முதன்முறையாக வெளிவந்தது. அதன்பின்னர் அந்நூல் மறுபதிப்புக் கண்டதாகத் தெரியவில்லை. 1946ஆம் ஆண்டுப் பதிப்பு ஐந்து ரூபாய் விலையில் கோவை, சிங்காநல்லூர், வசந்தா மில்ஸ் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டதாகும். கோயம்புத்தூர், புதுமலர் நிலையம் வெளியிட்ட சண்முகனாரின் உரைப்பதிப்பு, சண்முகனார் எழுதிய ஐந்து பக்க அளவிலான முகவுரை, எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய முன்னுரை ( 16 பக்கங்கள்), வி.ஆர்.ஆர். தீட்சிதர் எழுதிய மதிப்புரை (60 பக்கங்கள்), புதுமலர் நிலையத்தார் எழுதிய பதிப்புரை (1பக்கம்) ஆகிய முன்பகுதிகளைக் கொண்டதாகும்.

நூற்பகுதி புகார்க்காண்ட மூலம் (60 பக்கங்கள்), மீண்டும் மூலமும் உரையுமாக அமைந்த உரைப்பகுதி (228 பக்கங்கள்) ஆகியவற்றைக் கொண்டது. பின்னிணைப்புக்கள் எவையும் நூலில் தரப்படவில்லை.

 சண்முகனாரின் உரைப்பதிப்பு உணர்த்தும் தமிழுணர்ச்சி

சிலப்பதிகாரத்திற்குத் தாம் உரை எழுதிய நிலைக் குறித்துக் கூறும்போது, “சிலப்பதிகாரத்திற்கு உரை எழுத நேர்ந்தது என்னுடைய வாழ்க்கையில் ஒரு வேடிக்கை என்று நான் கருதுகின்றேன்” (ஆர்.கே. சண்முகம் செட்டியார் 1946: 3*) எனக் கூறும் சண்முகனார், இக்காலத்தைப் போலவே, தம் காலத்திலும் தாய்மொழியாம் தமிழுக்கு மதிப்பில்லாதிருந்த நிலையைச் சுட்டிக் காட்டுகின்றார். அவர்தம் கருத்து நாம் அறிய வேண்டிய ஒன்று. எனவே, அதனைத் தருவோம்.

”நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் தாய்மொழிக்கு மதிப்பில்லை. அந்தக் காலத்து மாணவர்களில் பெரும்பான்மையோருக்குத் தமிழ் உணர்ச்சியுமில்லை. ஆகவே, நான் சர்வகலாசாலைப் பட்டம் பெற்று வெளியேறியபோது, தமிழ்க்கல்வியைப் பொருத்தமட்டில் என் அறிவு, இருள் அடைந்திருந்த தென்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் இடையில் குருடனைப்போல் வாழ்ந்து வந்தேன்.

          பல ஆண்டுகள் கழிந்தன. மெல்ல, மெல்ல என் அறிவுக்கண்கள் திறந்தன; இருள் மாறி வெளிச்சமும் உண்டாயிற்று. நான் வாழும் நாடு தமிழ்நாடென்று உணர்ந்தேன். இது இளங்கோவடிகளும், கம்பனும் பிறந்த நாடு; ஷேக்ஸ்பியரும், மில்டனும் பிறந்த நாடல்ல! என்ரு அறிந்தேன். சுற்றிலும் பார்த்தேன். வறண்ட முட்செடிகள் என்று நான் கருதியிருந்த செடிகளில் மலர்ந்த பூக்கள் நிரைந்திருந்தன. எங்கும் நறுமணம் வீசிற்று. இதுதான் ‘தமிழின் மறுமலர்ச்சி; எங்கும் கமழும் தமிழ் மணம்’ என்று உணர்ந்தேன்” (ஆர்.கே. சண்முகம் செட்டியார் 1946: 3*). சண்முகனாரின் முகவுரைப் பகுதியைப் படிக்கும் நமக்குள், அவர் கூறுவதுபோலத் தமிழர்கள் உணர்ச்சி பெறுவது எந்நாளோ? என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

பழந்தமிழ் நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட சண்முகனார், தமிழாசிரியர் ஒருவர் உதவியுடன் சிலப்பதிகாரம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அக்காலத்தில் அவர் எழுதி வைத்த குறிப்புக்களைக் கண்ட வசந்தம் இதழின் ஆசிரியரும் சண்முகனாரின் நண்பருமாகிய திருஞான சம்பந்தம் எளிய நடையிலுள்ள சண்முகனாரின் உரையை வசந்தம் இதழில் வெளியிடத் தூண்டினார். அதன் விளைவாகச் சண்முகனாரின் உரை வசந்தம் இதழில் திங்கள்தோறும் வெளிவந்தது. புகார்க்காண்ட உரை முற்றுப் பெற்றதும், திருஞானசம்பந்தம் அவ்வுரைப் பகுதிகளைத் தொகுத்து நூலாக்கத் தூண்டினார். அத்தூண்டுதலே இவ்வுரை வெளியீட்டிற்குக் காரணம் என்பதைத் தாம் எழுதிய முகவுரைப் பகுதியில் (ஆர். கே. சண்முகம் செட்டியார் 1946: 4-5*) குறித்துள்ள பாங்கு அறியத்தக்கது.

சிலப்பதிகாரத்தைக் கற்று முடித்த பின்னர்த் தம் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளைச் சண்முகனார் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். அப்பகுதி வருமாறு: “நூலைப் படிக்கப் படிக்க என் உள்ளத்தில் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து எழுந்தன. உலகின் பன்மொழிகளில் தோன்றிய சிறந்த பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்றல்லவா என்று அறிந்து மகிழ்ந்தேன். நம் தமிழ் முன்னோர் நமக்குத் தந்த இப்பெருங் செல்வத்தை இத்தனை காலம் அறியாமலும் அனுபவிக்காமலும் இருந்து விட்டோமே என்று துக்கப்பட்டேன்” (ஆர். கே. சண்முகம் செட்டியார் 1946: 4*). இப்பகுதியைக் காணுந்தோறும் இன்னும் எத்தனை தமிழர், தமிழ்ச்செல்வங்களின் பெருமை அறியாமல் இருக்கின்றனரே என்று நம்முடைய உள்ளமும் துக்கத்தில் ஆழ்வதைத் தவிர்க்க இயலவில்லை.

தமிழ் மக்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் தாய்மொழிப் பற்று வேரூன்றி நிலைக்கவேண்டு மென்றால், பழந்தமிழ் நூல்களைக் கொஞ்சமாவது ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்” (ஆர். கே. சண்முகம் செட்டியார் 1946: 5*) என்ற கருத்து தாய்மொழிப் பற்று நம் உள்ளத்தில் வேரூன்ற உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.

”எல்லாப் பழந்தமிழ் இலக்கியங்களும் எளிய உரையுடன், ‘பொதுமக்கள் பதிப்பாக ஒன்று போன்ற ரூபத்தில் (Uniform Editions) வெளியாக வேண்டுமென்று எனக்கு வெகுநாளாய் ஆசை உண்டு. இந்தப் பணியை நிறைவேற்றத் தமிழ் அறிஞர்களும், பெரியோர்களும் முன்வந்தால், அது தமிழ்மொழிக்குச் சிறந்த தொண்டாகும்” (ஆர். கே. சண்முகம் செட்டியார் 1946: 6*) எனத் தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணியைச் சுட்டிக்காட்டுகின்றார் சண்முகனார். தமிழில் இதுபோன்ற முயற்சிகள் சில நடைபெற்றதுபோலத் தோன்றினாலும், அவ்வுரைகளைச் சண்முகனார் உரையோடு ஒப்பிடும்போது எளிமை என்ற பெயரில் வெளிவந்தபோதிலும், பாடலின் பொருளைச் சரியாக உணர்த்துவனவா? என்பது மேலும் சிந்தித்தற்குரியது.

”நாம் பெற்ற கல்விச்செல்வத்தைப் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்போதுதான் நம் இன்பம் பூர்த்தியடைகின்றது. இந்த எண்ணத்துடன், நான் அடைந்த ‘சிலம்புச்’ செல்வத்தை எல்லா நண்பர்களுக்கும் பங்கீடு செய்து மகிழ்ச்சி அடைகின்றேன்” (ஆர். கே. சண்முகம் செட்டியார் 1946: 7*) என்ற சண்முகனாரின் பேருள்ளம் போற்றத்தக்கது.

 முடிபுகள்

 1. தனது அரசியந்திரத்தில் நேர்ந்த தவறுக்காக உயிர் துறந்த சிலப்பதிகாரப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்று, தமது அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் செய்த விதிமீறல்களுக்குப் பொறுப்பேற்றுப் பதவியை துறந்தவர் சண்முகனார்.
 2. இந்திய விடுதலைக்கு முன்னர் இருந்தே தமிழ்ப் பாடல்களைச் சந்தி பிரித்துப் படிக்க இயலாத தமிழர்கள் பலர் இருந்துள்ளனர் என்பதையும், தமிழ்க் கல்வி எளிமையை நோக்கி நகரத் தொடங்கி விட்டதையும் சண்முகனாரின் உரைப்பகுதி நமக்குக் காட்டுகின்றது.
 3. தனி நிலையில் அமைந்த பகுதிநிலை உரைகளுள் முதல் உரையாக அமைவது ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் புகார்க்காண்ட உரையாகும்.
 4. சண்முகனார் உரைப்பதிப்பு உணர்த்தும் தமிழுணர்ச்சி இக்காலத் தமிழருக்கும் இன்றியமையாத தேவை என்பதை மறுக்க இயலாது.

துணைநூல்கள்

 1. சண்முகம் செட்டியார். ஆர்.கே. (உரைஆ.). 1946. சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம். கோயம்புத்தூர்: புதுமலர் நிலையம்.
 2. சாமிநாதையர். உ.வே. (பதி.ஆ.). 2008 (11ஆம் பதிப்பு). சிலப்பதிகாரம். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.
 3. மணி.ஆ. 2010. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
 4. //ta.wikipedia.org/wiki/ஆர்.கே._சண்முகம் செட்டியார். பார்த்தநாள்: 18.10.2016.
 5. //tamil.thehindu.com/tamilnadu/சுதந்திர-இந்தியாவின்-முதல்-நிதியமைச்சரின் – சிலை-திறப்பு/article6184822.ece. பார்த்தநாள்: 18.10.2016.

முனைவர் ஆ.மணி

துணைப்பேராசிரியர் – தமிழ்,

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,

புதுச்சேரி – 605 003,

பேச: 9443927141, manikurunthogai@gmail.com