இலக்கியம் என்பது மனிதன் தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் கற்பனைகளையும் சமூகத்திற்குக் கடத்தப் பயன்படும் ஓா் ஊடகம். சமுதாயத்தின் நிலைப்பாடுகளையும் அதன் பல்வேறு அங்கங்களையும் அதன் நிறுவனங்களையும் அதன் மரபுகளையும் சித்திரிப்பதும் விமா்சனம் செய்வதும் தொன்றுதொட்டு இலக்கியங்களில் பல வடிவங்களில் காணப்பட்டு வருகிறது.

இலக்கியம் என்றும் வெறும் வெட்ட வெளியிலிருந்து பிறப்பதில்லை. குறிப்பிட்ட சமுதாயச் சூழலில்தான் அது பிறக்கிறது. அவ்வாறு தோன்றும் இலக்கியம் ஒரு சமுதாய அமைப்பில் இயங்குகிறது, ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்கிறது.  ஒரு படைப்பாளியின் சமுதாய நோக்கம், தேவை முதலியன அவனுடைய இலக்கியத்தில் வெளிப்படுகின்றன. காலந்தோறும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள் ஒவ்வொரு  காலக் கட்டத்திலும்  ஒவ்வொரு   வகையான போக்கில் வளா்ந்தன.

எந்தக் கவிஞனும் தன் கால சகநிலையைப் பிரதிபலிப்பது போலவே, அதனைத் தன் போக்கில் மறுபடைப்புச் செய்யவும் செய்கிறான். ஒரு படைப்பாளன் உருவாவதற்கு ஒரு பின்புலம் காரணமாக அமைவது போல இலக்கியப் படைப்புத் தோன்றுவதற்கும் ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல் காரணமாக அமைகிறது. பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

ஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கின்ற இலக்கியம் அந்த சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ புலப்படுத்துகின்றது. இங்கே வேதநாயகம் பிள்ளை எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் அரசியல் பின்புலத்தை ஆய்வதே    நோக்கமாகும்.

வேதநாயகம்  பிள்ளையின்  சா்வ  சமய சமசரக்  கீர்த்தனைகள்

இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலையே கீா்த்தனைப் பாடல்களாகும். கீா்த்தனைப் பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும். இவற்றை எடுப்பு, தொடுப்பு, படுப்பு என்ற பெயா்களிலும் அழைப்பர். இத்தகைய கீர்த்தனைப் பாடல்களைச் சமரச நோக்கோடு பாடியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார். தான் பாடிய இசைப் பாடல்களுக்குச் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’என்று பெயரிட்டழைத்தார். இதில் 192  கீா்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  இந்நூலின் பெயருக்கு ஏற்ப, கீா்த்தனைப் பாடல்களில் எந்த மதத்தினையும் எந்தக் தெய்வத்தையும் சுட்டாதவாறு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையியல் இசைப்பாடல்களாகப்  அமைத்திருப்பது   சிறப்பிலும் சிறப்பாகும்.

இவர் 1878–ல் “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” என்னும் கீர்த்தனைப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார்.  இவர் காலத்திற்கு முன்பெல்லாம் கீர்த்தனைகள் என்பது இறைவன் புகழைப் பாடுபவைகளாகும். கீர்த்தனைகள் என்ற சொல்லின் பொருளே இறைவன் கீர்த்தியைச் சொல்வது. ஆனால் இத் தொகுப்பே முதன்முதல் உலகினருக்கு நல்ல நீதியைப் புகட்டவதற்கு என்று எழுந்ததாகும். இவர் உத்தியோக சங்கடம், கோள், லஞ்சம், மகளுக்கும் மகனுக்கும் புத்திமதி, பெண்பார்த்தல், கணவனுக்குக் கீழ்ப்படிதல், மைத்துனன் பரிகாசம் முதலிய பாடுபொருள்களில் கீர்த்தனைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

அரசியல்

சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. நாட்டின் தன்மை, ஆட்சியின் இயல்பு ஆகியவற்றின் நிலைகளை எடுத்துக் கூறுவது அரசியலேயாகும்.  அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை. அரசியல் ஒரு சமூகத்துள் வாழும் மக்களின் செயல்களின் நிலையை எடுத்துக்காட்டும்.

19 -ம் நூற்றாண்டு வரையிலான தமிழக அரசியல்

கி.மு 500 முதல் கி.பி 500 வரை தொல்பழங்குடி மரபாக தமிழகம் வளர்ச்சியுற்றது. கி.பி.5 முதல் 9-ம் நூற்றாண்டுகள் வரை நில உரிமையாளரின் கீழ், அவர்கள் சொல்படி வாழும் மக்கள் கொண்ட சமூகமாக புதிய நிலைகள் தோன்றின எனக் கருதப்படுகிறது.. தொல்காப்பிய, சங்க இலக்கிய சமயச் சார்பற்ற மரபு சைவ, வைணவம் ஆட்சிக்கு வந்தபின் மதம் விதித்த மரபாக மாற்றப்படுகிறது. சமண, பௌத்தம் சார்ந்த தமிழகம்  வைதிக, பிராமணீய ஆதிக்கத்தை எதிர் கொள்கிறது. 9 முதல் 12 -ம் நூற்றாண்டுகளில் சோழா்களின் பிரமாண்டமான கட்டும் கலை உருபெறுகிறது. தஞ்சைப் பெரியகோவில் அதற்கு எடுத்துக்காட்டு. சாதாரண மக்கள் அரசகுடிக் கோவில், நிலம், மடம் சார்ந்து வாழத்து வருகின்றனா்.   12-ம் நூற்றாண்டு முதல் முகலாயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கா் காலம் தொடங்கி, குட்டி அரசுகள், பாளையக்காரா்கள் என உருவாகி, வட்டாரம்  சார்ந்த குறுநில மன்னர்கள் தோன்றிய காலம். விக்டோரிய மகாராணியின் நிர்வாகச் சீா்படுத்தல் நிறுவியதற்குப் பின், இதுவரை இல்லாத எழுத்தறிவைப் பெற்ற குறிப்பிட்ட பகுதி பார்ப்பனர்களும், குறிப்பிட்ட பகுதி பண்டிதர்களும் அரசு வட்டாரத்தில் இடம் பெற்றனா்.  சித்த வைத்தியா், கணக்குப்பிள்ளை என்ற கிராமப்புற அமைப்பு இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் தலைகீழ் மாற்றமாகத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உருவாகின. பின்னா் கல்விக்கூடங்கள் உருவாகின. அதனைத் தொடர்ந்து கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. புது எழுத்தறிவு முறை ஒடுக்கப்பட்டோருக்கும் சாத்தியமானது. கல்வி எழுத்தறிவு கொடுத்தலோடு கிறிஸ்தவத்துக்கு சமயப் பிரச்சார நோக்கம் இருப்பினும், அவர்கள் அளித்த கல்விமுறை    சமூகத்தின் முகத்தையே  மாற்றியது.

1840-களில்தான் ஏழைக் குடும்பத்து மாணவர்கள் கல்வி பெறமுடிந்தது. பல்கலைக்கழகங்கள் உருவாக புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ‘சதி’ என்ற உடன்கட்டைக்குத் தடை, பலி கொடுக்கத் தடை என்பதாக மனிதனை மனிதன் மதிக்கும் சட்டங்கள், எல்லோரும் அச்சிடலாம், பத்திரிகை நடத்தலாம் என்பதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. எழுத்தறிவு பெற்றவா்களிடையே பத்திரிக்கை, புத்தகம் வாசிப்புப் பழக்கமும், பண்பும் வளா்ந்து பத்திரிக்கைத் துறையாக பரிணமித்தது. சிறுசிறு பகுதிகளில் வாழ்ந்த மனிதா்கள் ஜனநாயம் என்ற புதிய கருத்தாக்கத்துக்கு ஆட்பட்டனா். இப்படியே 40, 50 ஆண்டுகள் கடந்தன. சமூக ஆதிக்க சாதியினர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பயின்றனர். ஐரோப்பிய புத்தொளி அறிவின் மரபு மேலோங்கியது. இதை நமது மரபாக வளா்தெடுக்க முயற்சிகளும் தோன்றியதோடு அதற்கான சூழலும் நிலவியது.

வேதநாயகம் பிள்ளை காலத்து அரசியல் நிலை

1639-ல் ஆங்கிலேயா்கள் மதராஸில் (சென்னை) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. தமிழ்நாட்டுச் சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவா்களைப் பிரித்தாண்டு அவா்களில் மேல் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினா். ஆங்கிலேயா் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளா்களில் கணிசமானோர் இறந்தனா்.

ஐரோப்பிய நாடுகளின் பாதிரிமார் நமது மொழி, மொழிக் குடும்பம்  பற்றி ஆய்வுகளில் தோய்ந்தனா். ஓலைச்சுவடியாக வாசித்தவா்களை லட்சக்கணக்கில் அச்சிட்ட பிரதிகளைப் படிக்க வைப்பவா்களாக மாற்றியது. நமது மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

1823-ல் சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் பிறந்த இராமலிங்கம் 1858 வரை சென்னையிலும், பின்னா் வடலூரிலும் சென்று 1867-ல் சத்திய தருமச்சாலை எனும் மடத்தை நிறுவினார். அவரது இயக்கம் சைவ மரபு என்று சொல்லப்பட்டாலும், சாதிக்கொடுமையைக் கண்டித்தது.  அவரது “அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை” சைவ மதத்தின் இன்னொரு கட்டமைப்பாக மாறியது.

தென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் பரபரப்பான முறையில் தனது இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் மாயூரத்தில் அமைதியான முறையில் தனது எழுத்துக்களின் மூலம் சமூக – சீா்திருத்தப் பிரச்சாரம் செய்துவந்தார்  வேதநாயகம் பிள்ளை. இராமலிங்கர் பிறப்பால் சைவர், இவரோ கிறிஸ்தவர். இராமலிங்கர் முறையான கல்வி கற்காது இயல்பாய்க் கவிஞர் ஆனவர். இவரோ மேனாட்டுக் கல்வி கற்றவா்.  அவர் சந்நியாசி, இவரோ சம்சாரி. அதிலும் முன்சீப் (நீதிபதி) என்கிற அரசு உத்யோகஸ்தா். இப்படி இரு வேறு உலகத்தாராயினும் மனித நேயத்திலும், சகோதரத்துவத்திலும் இருவரும் ஒன்றுபட்டு நின்றனர்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1850 முதல் 1900 வரையிலான அரையாண்டு காலக்கட்டம் மாபெரும் மாறுதல்களுக்குள் கடந்து சென்ற வருடங்களாகும்.  ஐரோப்பியரின் வரவால் கல்வி முறைகளில் மாறுதல் ஏற்பட்ட காரணத்தின் விளைவாக குறிப்பிட்ட சதவிகித தமிழ் மக்களால் சிறந்த கல்வி முறையினைப் பெறவும் ஏன் ஆங்கில மொழியும் ஆங்கில மொழிவழி வழிக் கல்வி பெறவும் தருணம் அமையப்பெற்றவர்களும் உண்டு. சமுதாயச் செல்வாக்கினாலும் பண பலத்தினாலும் சமயம் சார்ந்த தொண்டர்களின் உதவியினாலும் ஆங்காங்கே குறிப்பிட்ட குறைந்த சதவீத தமிழர்களால் உயர்கல்வி பெறவும் அரசியலில் ஆங்கிலேயருக்கு நிகராக உயர் அதிகாரம் பெறவும் வாய்ப்பும் பெற்றிருந்தனர்.

வேதநாயகரின் காலத்தில் குறிப்பாக மேனாட்டவரே உயர் பதவி வகித்திருந்தும் சில சட்டங்கள் தளர்த்தப்பட்டதால் தமிழர்களுக்கும் உயர்பதவி கிடைக்கப்பெறவே மேனாட்டுக் கல்வியிலும் தமிழ்ப் புலமையும் பெற்ற வேதநாயகம் பிள்ளை முதலில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தின் பணிமனையில் நியமிக்கப்பட்டு> பின் கி.பி. 1850-ம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நேர்மையும் திறமையும் மிக்க வேதநாயகர் சட்டங்களின் நுணுக்கங்களையும் சிக்கலான தீர்ப்புகளையும் பொதுமக்கள் அறிய வேண்டும் என உணர்ந்து ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை ‘சித்தாந்த சங்கிரகம்’என்ற பெயரில் 1862-ம்; ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.

சென்னையில் 1801-ல் தலைமை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. 1803-ல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்கு குற்ற விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டது. நிலம், நிலவரி, நூற்றுக்கணக்கான பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், சாத்திரங்கள்> சூத்திரங்கள் ஆகியவற்றின் கீழ்க் குற்றங்களும் சொத்துரிமை வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தன.

சர்வ சமய சமரச கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்

வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் நீதிபதிகள் பலா் முறைகேடர்களாக நடந்துள்ளனா். இலஞ்சம், ஊழலும் அவர்கள் இடையே நிரம்பி மலிந்து கிடந்துள்ளன. இலஞ்சப் பழக்கத்தை அறவே வெறுத்தவா் அந்த வெறுப்பின் எதிரொலியினாலேயே வெளிவந்த பாடல்  வரிகள் இவை:

ஒரு காசாகிலும் வாங்குதல் துரோகம்

       ஊர் கொள்ளையடிக்கவே உனக்குத்தியோகம்       (ச.ச.ச.கீ- 174-4) 

என்று இலஞ்சம் வாங்குவதை வன்மையாகக் கண்டித்து வேதநாயகர் இகழ்ந்தார். நியாதிபதிகளில் சிலா் நீதிமன்றத்துக்குப் போகின்ற நேரம் ஒரே தன்மையில் இருக்காது. ஒருநாள் மாலையிலும் மறுநாள் நடுப்பகலிலும் வேறோர் நாள் மாலையிலும் செல்வது அவர்கள் வழக்கம். கட்சிக்காரா்கள் அதனால் எந்த நேரத்தில் தாங்கள் நீதிமன்றத்திற்குப் போவது என்று புரியாமல், தெரியாமல் அவதிப்பட்டார்கள்.  அவர் வருவார் என்ற வழக்காளி காத்திருந்தால் அவரோ கட்சிக்காரர் இல்லாத நேரத்திலே தோன்றி கட்சிக்காரர்  ஆஜராகவில்லை என்று வழக்கைத் தள்ளி வந்தார். ஆஜராகுகிறவா்களின் வழக்கையோ விசாரிப்பதில்லை.

இவர் காலத்தில் தமிழ்நாட்டில் மராத்தியரின் சூறையாடலும் சொத்து வரிக்கொடுமையும் பாளையக்காரரின் சுரண்டலும் ஊருக்கு ஒரு  குலத்துக்கு ஒரு நீதி என்ற முறைகேடும் நிலவியது. திருச்சி மாவட்ட நீதி மன்றத்திலே குற்ற வழக்குகள் விசாரணை நடக்கும் போது வேதநாயகர் நீதிபதி அருகே அமர்ந்து காசியார் வாக்குக் கொடுப்பது வழக்கமாகும்.  முஸ்லீம் ஆட்சி நடைபெறும் போது அதே காசியர்கள் நீதி வழங்கிடும் முறை இருந்தது. முன்பு நடந்த முஸ்லீம் ஆட்சிகளின் வழக்கம் போலவே ஆங்கில நீதிபதிகள் அருகே காசியார்கள் அமர்ந்து நியாய வழக்கிலே உதவி செய்வார்கள்.

பல வழக்குகளில் நீதிபதியின் கருத்துக்கு முரணாகக் காசியார் கருத்து இருந்தது. அவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதியின் ஒப்புதலுக்கு முன்வைத்தார் வேதநாயகம். இக்காலகட்டத்தில் ஆங்கிலேய நீதிபதிகளின் தவறான குற்றச்சாட்டுகளுக்கும் தீய பெயருக்கும் துன்பத்தின் மேல் துன்பமும் வேலையிழப்பும் நோய்வாய்பட்டும் பொய்யுரைகளுக்கும் இடையில் அவதிப்பட்டுள்ளார். எனவே “நியாயபரிபாலனஞ் செய்ய வரம் வேண்டும்” என்ற தலைப்பில் பாடிய பாடல்களில் சில வரிகள்,

நானே பொதுநீதி தானே செலுத்திட நல்வரம்  அருள்கோனே

சகல உயிர்களும் என் தன்னுயிர் போல் பாராட்டிச்

சிட்ட பரிபாலனனெனு முடிசூட்டித்

தீயர்மொழிபுகாமற் செவிவழிபூட்டிக்  கொட்டஞ் சேய்துட்டர்

       கண்ணில் விரலை விட்டாபடிக்கூட எனப்பெயர் கதறும்படி மாட்டி

        (ச.ச.ச.கீ-162)

தான் நீதிபதியாக இருந்த காலத்தில் பல்வேறு தரப்பட்ட துர்வழக்காளிகளைச் சந்தித்திட, அவர்களைக் குறித்ததாகப் பாடப்பெற்ற பாடல்கள் வரிகள்,

இந்த வழக்குக்கெல்லாம் நாம்தானா – கோர்ட்டில்

   வந்தவன் எல்லாம் நமக் கெஜமானா

தந்தை துன்மார்க்கஞ் செய்து கெட்டானால் – பிள்ளை

  தாரங்களைத் தெருவில் விட்டானாம்

 முந்த அதிகக்கடன் பட்டானாம் – நிலம்

    முழுதுந் துர்விநியோகம் இட்டானாம்

                                             (ச.ச.ச.கீ- 163)      

 கோட்சொல்லும் உத்தியோகஸ்தரைப் பற்றிய பாடல் வரிகள்>

எரிகிற வீட்டில் பிடுங்குவ துலாபம்

என்று சொல்வார் அந்த வண்ணமே

பெரிய கோட்சொல்லி நம் உத்தியோகத்தைப்

பிடுங்குவதிவர் எண்ணமே                  (ச.ச.ச.கீ-167)

 அதிகாரிகளின் அதிகார தா்பார்

அதிகார தா்பார் நடந்த வேதநாயகா் காலத்தில் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆட்சியை எதிர்த்து எழுதியவா் இவா் ஒருவா்தான். வரம்பு மீறிய அதிகாரிகளைக் கேலிசெய்து பரிகாசத்துக்குள்ளாக்கினார். குத்தலாகக் கூறி அவர்கள் நேர்மையைத் தூண்டிட முற்பட்டார். உத்தியோகஸ்தா்களை குறித்து இவா் எழுதியக் கேலி, கிண்டல், பரியாசங்கள் தமிழிலே மிக உயர்ந்த அங்கதங்கள்.

இந்தியாவில் 1885-ம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை தோன்றவில்லை. இந்நிலையில் நெறி தவறிய நீதிபதிகளை நையாண்டி செய்தும் கண்டித்தும், எழுதவும் எச்சரிக்கை செய்தவர் நமது வேதநாயகம் பிள்ளை ஒருவரே. எடுத்துக்காட்டாகச் சில பாடலடிகள்,

முரட்டுமார்க்கம் சென்றிழைகிறாய் – அணு

       முனையின் உள்ளும் நீ நுழைகிறாய் – இந்த

 

       புரட்டெல்லாம் எங்கே படித்துக் கொண்டனை

       பொருளைத் தந்தவன் அருளை மறந்து

பொருளுக்கே உபசாரம் – செய்யும்

மருளர் போல் அற்பப் பொருளை விரும்பி

வான்பரன் உபகாரன் – தன்னை

மறந்தாய் – என்னைத் துறந்தாய் பொன்னைச்

சிறந்தாய் – பன்னை பறந்தாய்                                                (ச.ச.ச.கீ.159)

முடிவுரை

அரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கு அன்று மக்களுக்கே. ஆனால் வேதநாயகர், தன் காலத்தின் ஒழுங்கற்ற அரசியல் நிலையை அறிந்து, சீர்பொருந்த தன் உள்ளக் குமுரலாக மனதில் எழும் சிந்தனைகளைக் இங்ஙனம் கீர்த்தனைப் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவதும் அரசியலே என்பது இதன் மூலம் புலனாகிறது.

துணைநூற்பட்டியல்

  1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை – சா்வ சமய சமரசக் கீர்த்தனைகள்,

திருமகள் விலாச  அச்சகம்,

சென்னை – 1

1878.

  1. கலைமணி. என். வி. புலவர்   – மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

சிவகாசி புக் பப்ளிகேஷன்ஸ்,

160, பெரிய தெரு, திருவல்லிக்கேணி,

சென்னை – 5

2009.

  1. சரளா இராசகோபாலன். முனைவர் – வேதநாயகரும் பெண்மையும்,

ஒளிப் பதிப்பகம்,

63, ரங்காச்சாரி சாலை,

சென்னை – 18

1985.

  1. கே.கே.பிள்ளை. டாக்டர்.        – தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

சென்னை- 13

2009.

  1. மம்மது. நா           – தமிழிசைப் பேரகராதி,

இன்னிசை அறக்கட்டளை,

மதுரை

2010.

  1. சுந்தரம். வீ.ப.கா. முனைவர் – தமிழிசைக் கலைக்களஞ்சியம்

(தொகுதி 1-4)

பாரதிதாசன் பல்கலைக் கழகம்,

திருச்சிராப்பள்ளி

2006.

ஆ. ஷைலா ஹெலின்

முனைவர் பட்ட ஆய்வாளர்

பல்கலைக்கழகக் கல்லூரி

பாளயம், திருவனந்தபுரம்

கேரளா.

shylras@gmail.com