மசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி என்ற நூல் மசிவன் பதிப்பகம் 111\199 ஆ.கடலூர், ஆயத்தூர் (அஞ்சல்) திருக்கோவிலூர், விழுப்புரம் 605755 என்ற முகவரியிலிருந்து வெளிவந்துள்ளது. பக்.49, விலை ரூ.40.

கணினிவிடு தூது என்னும் இந்நூல் மசிவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. சிற்றிலக்கிய வளர்ச்சி பதினான்காம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதென்பர். கி.பி.16 ஆம் நூற்றாண்டில் 96 வகை சிற்றிலக்கிய வகைகள் உருவானது. இதற்கான இலக்கணமும் உருவாகியது.

தூது இரு வகைப்படும். அவை: அகத்தூது, புறத்தூது என்பன. இவற்றுள், அகத்தூது என்பது தலைவன் தலைவிக்கு அனுப்பபடும் நலம் சான்ற செயலைக் குறிக்கும். இது காதல் சார்ந்து அமைவதாகும். புறத்தூதாவது உலகப் பயன் கருதி எழுதப்பட்டது. இவற்றில் இந்நூல் அகத்தூது வகையைச் சார்ந்ததாகும்.

தூது இனிமை கருதி அழகிய மென்பொருள்களான அன்னம், மயில், கிளி, மேகம் போன்ற பொருள்களை அக்காலப் பாவலர்கள் தூதிற்குப் பயன்படுத்தினர். பின்னர் புதுமை காரணமாகப் பணம், விறலி, தமிழ் போன்ற பொருள்கள் தூது பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.

இத்தூதிலக்கிய வளர்ச்சியில் மேலும் புதுமையாக இரயில், இராக்கெட், புகையிலை போன்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு புதுமை நோக்கிலும் மிகுந்த பயன்பாடு கருதியும் மசிவன் அவர்கள் கணினிவிடு தூது எனக் கணினியைத்  தூதுவிட்டு புகழ்பெற்றுள்ளார்.

பயில்தரும் கலிவெண் பாவி னாலே

உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்

என்ற இலக்கண விளக்கத்தை ஏற்று மரபு பிசகாமல் கலிவெண்பாவிலேயே இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. 215 கண்ணிகளைக் கொண்டு பா நிறைவு பெற்றுள்ளது. இந்நூல் சில இடங்களில் கருத்துக்கள் சுருங்கித் தோன்றிடினும் தூதுமரபில் சொல்லவேண்டிய கருத்துக்கள் யாவும் வலிமை பொருந்தியனவாய் இனிமையுடன் விளங்குகிறது.

உலகம் அவசரம் உண்மை இதுதான் என்னும் அழகிய தொடக்கமும் தூதுரைத்து வா எனும் நிறைவுப் பகுதியும் அழகுணர்ச்சியுடன் அமைகிறது. இந்நூலில் கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் கூறப்பட்டுள்ளன. இவ்வுலகின் அதிவியப்பாம் மாற்றத்திற்குக் காரணம் கணினி வளர்ச்சியே ஆகும். இக்கணினி இன்று உரையாடவும் ரோபோவாகவும் செயல்படுகிறது. முன்னோர்கள் கருத்தறிய பொருள்களைத் தூதுவிட்டனர். இன்றோ கணினியில் மனிதனைப் போல் முழுமையாகக் கருத்தைத் தூதாகச் சேர்க்க முடியும். அந்த வரிசையில் கணினிவிடு தூது வெற்றியடைகிறது எனலாம்.

பயனே பலதாம் படைப்பின் கடையே எனக் கணினியின் பயனைக் கூறுகிறார். மேலும்,

வலைதளம் கூறுமுன் வான வளத்தை

கலைநயக் கோயிற் கரசிநீ

என்றும்,

முகநூல் முதலாய் முகந்தனைக் கொண்டாய்

அகத்தைக் கணினி அறிவாய்

என்றும் கணினியை அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். மற்ற தூதுப் பொருளைவிட கணினியே சிறந்த தூதுவர் எனக் கூறும் கவிஞரின் கூற்றுச் சிறப்புடையது. பெண்ணைப் பற்றிக் கூறும்போது, நம்பினால் நெஞ்சறுப்பர் நட்டாற்றில் வெள்ளமாய் என்பதை  மறுத்து,

இகழ்தெவர் கூறினும் இல்லைதாம் நம்பும்

          இகழாதே  தூய்மை இவளேதாம்

என்று தமது தலைவியை ஏற்றிக் கூறுவதோடு பெண்ணினத்தைப் போற்றும் செயல் பாராட்டுக்குரியது.

ஊர்போற்ற உன்னை உலகமும் போற்றிடப்

பேர்பெற்ற பெண்ணே பெரும்பேறே!

என்றும்

பவுந்தம் அறியாள் பழிச்சொல் புரியாள்

தவமும் அவருள் தமிழும்

என்றும் கூறும் வரிகள் போற்றத்தக்கனவாக நூலில் மிளிர்கின்றன. தூதின் செய்தியாக,

அவளில்லா இல்லம் அவனியிற் துன்பம்

கவனி அவளை கணினி – தவமாய்

முடித்தேன் எனக்காய் முகங்கொண்டே கூறும்

படித்தும் பொருளுணராப் பாவகையாம் – பாட்டில்

உரைத்தேன் அழகியின் உண்மை நிலவரம்

ஈர்த்திட வேண்டும் இயல்பாய்

என இங்கு ‘இயல்பாய்’ என்ற சொல் இந்நூலுக்கு இனிமை சேர்க்கும் எழிற்சொல் எனக் கூறலாம். இவ்வாறு  தூது இலக்கிய வரிசையில் புதுமையுடன் இடம்பெற்றுள்ள இந்நூல் இனிமை சேர்க்கிறது.

அடுத்து இந்நூலின் பிற்பகுதியில் இடம்பெற்ற அதி அந்தாதி பற்றிச் சிறிது காண்போம்.

எனக்காய் இறந்திட எத்தனித்த மங்கை

உனக்காய் எழுதா துறங்கேன்

எனத் தொடங்கும் இந்நூலின் பொருள் உண்மை உணர்வை வெளிப்படுத்துவதாக அமைகிறது. மேலும்,

அருமை மகளிர் அதிசயத்தில்

          பார்க்கும் ஒருமை மகளிர் இவளே

என்பதும் நமக்குள் வரத் தூண்டும் உணர்வை இயல்பாகத் தருகிறது. வெண்பாக்கள் அந்தாதி அமைப்பில் இனிமை சேர்க்கும் இனிய சந்தம் ஆகும். இது நம்மை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது.

… … … பொங்கும்

          கவிதை உணர்ச்சி கரையில்லா வெள்ளம்போல்

          ஆவி பிரியா உள

என்ற அழகு உவமையும் உணர்வும் நம்மை வெகுவாகக் களிக்கச் செய்கின்றன. இங்கே ஆவி என்ற நெடில் எதுகையாக அமையவில்லை. ஏப்ரல் என்ற ஆங்கிலச் சொல்லும் வேண்டற்பாலது. இனிமையுடன் சேர்க்கும் இறுதிப்பாக்கள்,

இன்றும் எனக்காய் இறங்கும் ஒரு பொருள்

என்றும் இருந்திட ஏங்கினேன்

என்ற ஏக்கப் பெமூச்சும்,

இன்னொரு பெண்ணை இனிமேஎங் கண்டிலென்

என்னிதயம் எங்கே கொடு

என்பதும் அற்புத வரிகளாம். வாழ்க கவிஞர்! தமிழ்ப் பணியாலே மேன்மை இலக்கியங்கள் பல படைக்க! என வாழ்த்தி மகிழலாம்.

தகடூர்த் தமிழ்க்கதிர்,

கிருட்டிணகிரி