நூற்றி எட்டுத் திருத்தலங்கள் சென்று நொந்து திரிந்தாலும் பெறக் கிடைக்காத ஆத்மதிருப்தியை நான்கு சுவர் கொண்ட ஒரு நூலகத்தால் தரமுடியும். ஆனால், இக்கரைக் குளுமையை விட்டுவிட்டு அக்கரைக் கானலைத் தேடி அலைவதையே வாடிக்கையாக / வேடிக்கையாகக் கொண்ட இனம் நம் தமிழினம். நூலகங்களைச் செங்கல்லும் சிமெண்ட் கலவையும் கலந்த கட்டிடங்களாகப் பார்க்கும் மனநிலையே இன்று நம்மில் பலரிடம் மேலோங்கியுள்ளது. மாறாக, எலும்புகளும் தசைகளும் இரண்டறக் கலந்துநிற்கும் இறவா உடலே நூலகம்; உடலின், உயிரின் அடிப்படை அலகான செல்களே நூலகத்து நூல்கள் எனும் மனநிலை உயிர்த்தெழும்போது நூலகப் பயன்பாடு மேலோங்கும். நூலகப் பயன்பாட்டை மேலோங்கச் செய்யும் சமூகமே செழுமை பெறும்.

நூலகமும் நூல்களும் ஒரு நல்நண்பன், நல்ஆசான், நல்வழிகாட்டி என்பனவற்றைத் தாண்டி, அடுத்த தலைமுறையினர் அமைதியாய் வாழவேண்டி நாம் அவர்க்கு விட்டுச் செல்லும் அசையா / அசையும் சொத்துக்கள் எனும் அடையாளத்தையும் பெறுகின்றன.

ஓர் இனத்தை அழிப்பதற்கு அவ்வின மக்களின்மீது போர் தொடுத்து அவர்களது உயிரைப் பறிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவ்வினத்தாரது அறிவுசார் புழங்குபொருளான நூல்களடங்கிய நூலகத்தைப் பயன்படுத்த விடாது தடுத்தாலே போதுமானது. இத்தகைய (திட்டமிட்ட) அறிவுசார் இனஅழிப்பு வேலையே 1.6.1981இல் யாழ்ப்பாண நூலக எரிப்பாக அரங்கேறியது. ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையான அவலம் இருபதாம் நூற்றாண்டில் உலகில் வேறெந்த இனத்திலும் நிகழ்ந்திருக்காது.

நூல்களை, நூலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினால் தான் அழிப்பா? இன்று இருக்கின்ற நூல்களை, நூலகங்களைப் பயன்படுத்தாமல், பராமரிப்புச் செய்யாமல் இருப்பதும், நூலக அமைவிடங்களைப் பற்றி அறியாமல் இருப்பதும் ஒருவகையில் அழிப்புத் தானே!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் நூலகங்களைப் பற்றிய அடைவுநூல்கள் மிகமிகக் குறைவு என உறுதிபடக் கூறமுடியும். பார்வைக்குக் கிட்டியவரை, தமிழகத்து நூலகங்கள் பற்றி இதுவரை மூன்று தொகுப்புநூல்கள் வெளிவந்துள்ளன. அவை,

  1. மறைமலையடிகள் நூல்நிலைய 20-ஆம் ஆண்டு நிறைவுவிழா மலர் (4.11.1979 – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்)
  2. சென்னை நூலகங்கள் (2009 – பாரதி புத்தகாலயம், சென்னை)
  3. தென்னக நூலகங்கள் (2013 – காவ்யா பதிப்பகம், சென்னை)

[கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘புதிய புத்தகம் பேசுது’ மாத இதழானது ‘புத்தகம் சூழ்ந்த வீடு எனும் பெயரில் இல்லநூலகம் அமைத்திருப்போரின் தன்அனுபவத்தைக் குறுங்கட்டுரையாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்].

அவ்வகையில், இந்நன்முயற்சிகளை அடியொற்றி ‘இனம்’ (www.inamtamil.com) தமிழகத்திலுள்ள அறியப்படாத / அறியப்பட வேண்டிய நூலகங்கள் குறித்த தொகுப்புமுயற்சியை மேற்கொண்டு ‘அடையாளம்’ எனும் பெயரில் ஒவ்வொரு இதழிலும் வெளியிடத் தீர்மானித்துள்ளது. அறிஞர் பெருமக்களும் ஆசான்களும் ஆய்வுநண்பர்களும் ஆர்வலர்களும் ஊக்கமளித்து உதவுமாறு வேண்டுகிறோம்.

ஊர்கூடித் தேரிழுப்போம் வாருங்கள்!

பதிப்பாசிரியர்.