மக்கள் தம் வாழ்வியலுக்குத் தேவையான விழுமியக் கருத்துக்களைச் செவ்விய சொற்களால் கூறுவது இலக்கியமாகும். இச்சொற்றொடரை இலக்கு + இயம் எனப் பிரித்து, சொல்லாலும் பொருளாலும் செம்மை பெற்றொளிரும் நூல் எனப் பொருள் கொள்ள வேண்டும். ‘இலக்கு’ என்பது நோக்கு, கொள்கை எனப் பொருள்படும். இயம் என்பது ‘தன்மை’ அல்லது ‘பண்பு’ எனப் பொருள்படும். அவ்வகையில், ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மொழிப்படைப்பே அட்டப் பிரபந்தம்.

இவ்விலக்கியம் அழகுற அணிகளைப் பயில வைத்து ஆயிரம் எண்ணங்களை அடுக்கடுக்காய் அடுக்கிச் சென்று கருத்து உருவாக்கத்தில் திருவரங்கனின் பெருமைகளைக் கூறிச் செல்கிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள அணிநயத்தினை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். தண்டியலங்காரம் அணிகளை முப்பத்தைந்து வகையாகக் கூறுகின்றது. அவற்றுள் உவமை, திரிபு, மடக்கு முதலிய அணிகள் அட்டப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளமையை காணலாம்.

அட்டப் பிரபந்தம்

அழகிய மணவாளதாசர் எனப்படும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பு இந்நூலாகும். இந்நூலின் சிறப்பினை உணர்த்தவும், ஆசிரியரின் தமிழ்ப் புலமையை உணர்த்தவும் எழுந்ததாகும்.

இந்நூலின் செய்யுள் தொகை 751, புறம்பாகவுள்ளவை சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் 8 , அவையடக்கம் முதலியனவாக உள்ளவை 22, பிற்சேர்க்கைப் பாடல்கள் 9. ஆக, நூலுக்குப் புறம்பாக உள்ள 39 செய்யுட்கள் சேர்ந்தால் 790 ஆகும்.

உவமையணி

ஒருவன் தான் கூறக் கருதிய பொருளை அதனோடு ஒப்புமையுடைய மற்றொரு பொருளோடு இயைபுபடுத்திக் கூறுவது உவமையணியாகும்.

பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

            ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்து

            ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை

என்று தண்டியலங்காரம் உவமைக்கு இலக்கணம் கூறுகின்றது.

அட்டப்பிரபந்தத்தில் உவமைநயம்

திருவரங்கநாதரைப் புகழ்ந்து பாடியுள்ள அட்டப்பிரபந்தத்தில் அடி முதல் முடி வரையுள்ள உறுப்புகளுக்குப் பல உவமைகள் கொண்டு வருணிக்கப்பட்டுள்ளது. திருவரங்கநாதரின் அங்கங்களை மிகுதியாகத் தாமரை மலருக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் கலம்பக மாலையில் அதிகமாகவும் அந்தாதியிலும் ஊசலிலும் சிலவாகவும் வருணிக்கப்பெற்றுள்ளது.

திருமுகம்

திருமாலின் திருமுகத்தை முழுநிலவு போன்றுள்ளது எனவும் திருமுடியுள் கரிய மயிர்முடியும் அதில் அணிந்துள்ள மலர்மாலைகளில் மொய்க்கின்ற வண்டுகள் அசைந்தாடவும் பூரணசந்திரன் போன்ற திருமுக மண்டலத்தில் சிறுத்து அரும்புகின்ற வியர்வை நீரும் காதணிகளும் அசைந்தாடவும் ஊசல் ஆடுவீர் எனப் பொருள்படும்படி,

முடித்தலத்தில் கருங்குழலும் கரும்பும் ஆட

            முகமதியில் குறுசேர்வும் குழையும் ஆட

            குடித்தலத்தில் அரைநாணும் கலையும் ஆட

            காவிரிசூழ் அரங்கேசர் ஆடிற் றூசல்

என்று அரங்கனின் திருமுகம் பூரணசந்திரனுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது.

திருக்கண்கள்

அடியோர்கள் கொணர்ந்த திருத்துழாய் மாலை அணிந்தவனே! கண்கள் தாமரை மலர்போல் அமையப் பெற்றவரே! என்று திருவரங்கனின் திருக்கண்கள் தாமரைமலரை ஒத்திருப்பதாக உவமை கூறப்பட்டுள்ளது.

தாரா கனமண் ணந்தவந் நாளன்பர் சாத்துந் துழாய்த்

            தாரா கணம்புயம் போலரங் காதல மேழுங்குமா

            தாரா கணமங்கை யாயும்பர் தூவிய தண்மலர்வீழ்

            தாரா கணமுநில் லாகாற்றிற் சூழ்வளந்தா னொக்குமே   (சீரங்கநாயகர் ஊசல்)

எனும் பாடல் இக்கருத்தை வெளிப்படுத்துகின்றது.

திருவாய்

திருவரங்கநாதரின் திருவாயினைப் பெரும்பாலும் பவளத்திற்கு ஒப்புமையாக்கிக் கூறப்பெற்றுள்ளது. இதனை,

வாழும் மௌலித் துழாய்மணமும்

                        மகரக் குழைதோய் விழிஅருளும்

            மலர்ந்த பவளத் திருநகையும்

                        மார்பில் அணிந்த மணிச்சுடரும்

            தாழும் முளரித் திருநாபித்

                        தடத்துள் அடங்கும் அனைத்துயிரும்

            சரண கமலத்து உமைகேள்வன்

                        சடையில் புனலும் காணேனால்             (திருவரங்கத்துக் கலம்பகம்)

தெய்வத்தன்மை பொருந்திய திருமுடியில் சூடிய திருத்துழாய் மாலையின் நறுமணத்தையும் திருக்கண்ணின் திருவருளையும் பவளம் போலச் சிவந்த திருவாய்மலரில் அழகிய புன்சிரிப்பையும் காண்கின்றேன் என்று திருவாய் பவளத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

திருவரங்கத்து மாலையில் கண்ணபிரானின் பெருமையைச் சொல்லும் அவர் பூமியையும் திசைகளையும் கடலையும் மலைகளையும் தன் வாயினுள்ளே காட்டிய திருவாயானது செவ்வாம்பல் மலர் போன்று உள்ளது என வர்ணிக்கப்பட்டுள்ளது.

பண்டு விழுங்கிய பாரும் திசையும் பனிக்கடலும்

            சண்ட நெடுங்கிரித் தானம் எல்லாம் சண்பகாடவிமேல்

            மண்டு பெரும்புனல் சூழரங் கேசர்தம் வாய்மலருள்

            கண்டு மருவினள் சீர்நந்த கோபர்தம் காதலியே               (திருவரங்கத்து மாலை)

என்பது அப்பாடல்.

திருநாபி

திருமாலின் திருநாபியில் தோன்றியவர் பிரம்மன். அந்தத் திருநாபியைப் பற்றி,

பூமரு பொங்கர் புடைசூழ் அரங்கர் பொலங்கழலால்

            பாமரு மூவுலகும் கொண்டபோது பழிப்புஇல் பெருங்

            காமரு மோலிச் சிகாமணி ஆகிக் கவுத்துவமாய்த்

            தேமரு நாளிஅம் தாமரை ஆனது செஞ்சுடரே                   (திருவரங்கத்து மாலை)

எனப் பாடப்பெற்றுள்ளது. பொலிவு பொருந்திய  மலர்கள் நிறைந்த சோலைகள் கொண்ட திருவரங்கம் எனத் திருவரங்கத்தை வர்ணிக்கும் இப்பாடலில் தேன் பொருந்திய தாமரை மலர் போன்ற திருநாபி என வருணிக்கப்பட்டுள்ளது.

திருமேனி

திருவரங்கநாதரின் திருமேனி காளமேகத்திற்கு ஒப்பாகக் கூறப்பெற்றுள்ளது. இதனை உணர்த்தும் பாடல் பின்வருமாறு:

ஞாலத் திகிரி முதுநிர்த்திகிரி நடாத்தும் இந்தக்

            காலத் திகிரி முதலான யாவும்கடல்கடைந்த

            நீலத் திகிரி அனையார் அரங்கர் நிறைந்த செங்கைக்

            கோலத் திகிரி தலைநாளில் கொண்ட கோவலங்களே    (திருவரங்கத்து மாலை)

திரிபு

திரிப என்பது முதல் எழுத்துத் தவிர இரண்டு முதலிய சில எழுத்துக்கள் ஒன்றி நிற்கப் பொருள் வேறுபட்டு வருவது ஆகும்.

புயம்நான்கு உடையயானை பொன்னரங்கத் தானை

            ஆயனாம் திருவுந்தி யானை வியனாம்

            புரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டீர்

            நரகதிக்குக் காணாமல் நான்                       (திருவரங்கத்துக் கலம்பகம்)

பின்னிரண்டு அடிகளில் முதலெழுத்து மட்டும் வேறுபட்டு 2,3 முதலிய சில எழுத்துக்கள் ஒன்றுபட்டு நிற்கப் பொருள் வேறுபட்டு வருவது திரிபு எனும் சொல்லணியாகும்.

மடக்கு

          மடங்கி வரும் தன்மை கொண்டதால் மடக்கு என்பது காரணப் பெயராகும். வந்த சொல் மீண்டும் வருதலே மடங்கி வருதல் எனப்படும்.

எழுத்தின் கூட்டம் இடைபிறிது இன்றியும்

            பெயர்த்துவேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே

என்று தண்டியலங்காரம் இதற்கு வரையறை தருகின்றது.

எழுத்துக்களின் கூட்டம் பிற எழுத்தானும் சொல்லானும் இடைவிட்டும் இடைவிடாது பின்னும் வந்து வேறு பொருள் தரும். அவ்வாறு பொருள் தருவது மடக்கு என்னும் அணியாகும்.

வேலை உலகிற் பிறக்கும் வேலை ஒழித்தோம் இல்லை

            மாலை அரங்கேசனைநாம் மாலையிலும் காலையிலும்

            உன்னிநைந் தோம்இல்லை உடலெடுத்த அன்றுமுதல்

            என்னினைந் தோம்நெஞ்சே இருந்து                      (திருவரங்கத்துக் கலம்பகம்)

வேலை, மாலை எனும் சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து வேறுபடு பொருள் தந்தமையால் இப்பாடலில் மடக்கு இடம்பெற்றுள்ளது.

 தொகுப்புரை

உருவமாய், உருவகமாய் என்றும் மாறாத இயல்புடைய திருவரங்கநாதனைப் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அழகுற வருணித்துள்ளார். திருவரங்கநாதனின் பெருமைகளை அணிநயத்துடன் சிறப்புற உவமை, திரிபு, மடக்கு போன்ற அணிகளின்வழி ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ள திறம் அட்டப்பிரபந்தத்தில் சிறப்புடையதாக அமைந்துள்ளது.

துணைநின்றவை

  • கமலக்கண்ணன் இரா.வ.(உரை.), 2007(மு.ப.), அட்டப் பிரபந்தம் மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
  • ……………………………,(உரை.), 2009, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
  • சீதாராமன் மா., நாளும் ஒரு நாலாயிரம், நர்மதா பதிப்பகம், சென்னை.
  • வேந்தன் க.கோ., 2000, சைவமும் வைணவமும், சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை.

முனைவர் மீ. கோமதி

தமிழ் – உதவிப் பேராசிரியர்

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி

மண்ணச்சநல்லூர்

திருச்சிராப்பள்ளி.

mgomathi278@gmail.com