பாடசாலைகளில் சில மாணவர்கள், சாதாரண மாணவர்களைவிட உடல், உள, மனவெழுச்சிப் பண்புகளிலும் நடத்தைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடு உடையவர்களாகக் காணப்படுவர். இவர்களுக்கு விசேட வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும். இவ்வேறுபாடுகள் பிறவியிலிருந்தோ அல்லது காலப்போக்கில் சில பருவங்களிலோ வெளிப்படலாம். நோய், விபத்து, சமூகம், சூழல் ஆகிய காரணிகளாலும் குறைபாடுகள் ஏற்படலாம். சில பிள்ளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளையும் அவதானிக்கலாம்.

சில மாணவர்கள் சாதாரண மாணவர்களிலும் பார்க்க மிக உயர்வான ஆற்றல்கள், உளத்திறன்கள் ஆகிய மீத்திறன், ஆக்கத்திறன் பெற்றவர்களாகவும் காணப்படுவர். இவ்வாறான விசேட தன்மைகளும், தேவைகளும் உள்ள பிள்ளைகளைப் பெற்றோர், ஆசிரியர், ஆலோசகர் ஆகியோர் இனங்கண்டு, அவர்களுக்குப் பொருத்தமான விசேட வழிகாட்டல் ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வேறுபாடுகள் அதிகூடிய அளவில் காணப்படின், இவர்களைத் தனிப்பட்ட வகுப்புகளில் அல்லது அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனிப்பாடசாலைகளில் கற்பிக்கலாம். ஓரளவு வேறுபாடுள்ள பிள்ளைகளைச் சாதாரண பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுமாறு வழமையான வகுப்பில் வைத்துக் கற்பிப்பது விரும்பத்தக்கது.

விசேட தேவைகள் உள்ள மாணவர்களும் மற்றவர்களைப் போல சமூக வாழ்க்கையில் திருப்திகரமாகப் பங்குகொண்டு பயனுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டுமெனச் சர்வதேசப் பிரகடனங்கள், உரிமைச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, பாடசாலை இவர்களுக்கு விசேட கவனிப்பு வழங்கக் கடமைப்பட்டுள்ளது. விசேட உதவி தேவைப்படுவோரைப் பின்வருமாறு வகுக்கலாம்

 • மீத்திறனுடைய பிள்ளைகள்
 • ஆக்கத்திறனுடைய பிள்ளைகள்
 • உடற்குறைபாடுடைய பிள்ளைகள்
 • உளக்குறைபாடுடைய பிள்ளைகள்
 • கற்றலில் பின்தங்கிய, மெல்லக் கற்கும், கற்றல் இடர்பாடு உடைய பிள்ளைகள்
 • பொருத்தப்பாடற்ற நடத்தையுடைய பிள்ளைகள்
 • நெறிபிறழ்ந்த இளங்குற்றவாளிகள்

மீத்திறனுடைய பிள்ளைகள்

நுண்மதியின் கணிப்பின்படி நு.ஈ 140 இற்கு மேல் பெற்றுள்ளவர்கள் மீத்திறன் உடையோரென ரெர்மன் வகுத்துள்ளார். இவரின் கருத்து மீத்திறனையும் ஆக்கத்திறனையும் வேறுபிரித்துக் காட்டத் தவறிவிட்டதால், கில்போட் (புரடைகழசன்) என்பவர் ஆக்கத்திறன் நுண்மதியின் ஒரு தனிப்பட்ட கூறு என்பதை விளக்கியுள்ளார். மீத்திறன் பெற்றவர்கள் யாவரும் ஆக்கத்திறன் உடையோரெனக் கருத முடியாது என்பது மக்கினஸ்என்பவரது கருத்து.  அவர் சிந்தனையைக் குவிசிந்தனை, விரிசிந்தனை என வகுத்து, குவிசிந்தனையுடையோர் மீத்திறன் உடையோர் எனவும், ஆக்கத்திறனுடையோர் விரிசிந்தனையுடையோர் எனவும் கூறினார்.

மீத்திறனுடைய மாணவர் நுண்மதிச் சோதனையில் நு.ஈ.140 இற்கு மேல் பெறுவர். பொதுவாகப் பாடஅடைவில் மேல்மட்டத்தில் காணப்படுவர். கிரகித்தல், பகுத்தல், தொகுத்தல் ஆகிய உள ஆற்றலில் மேம்பாடு தர்க்கரீதியாகச் சிந்தித்தல், பிரச்சினை விடுவித்தல் ஆகியவற்றில் விசேடதிறன் பெற்றிருப்பர். மீத்திறனுடையோர் கல்விசார் ஏட்டுப்படிப்பில் மிகுந்த திறமை உடையவராயினும், படைப்பாற்றல் சார்ந்த ஆக்கத்திறன் அற்றவர்களாகக் காணப்படுவர்.

ஆக்கத்திறனுடைய பிள்ளைகள்

ஆக்கத்திறனுடையோர் தனித்துவம் மிக்கோராவர். அபூர்வமான ஆக்கற் செயற்பாடுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கலை, இசை, இலக்கியம் போன்ற துறைகளில் விசித்திரமான தனித்துவம் வாய்ந்த படைப்புக்களை ஆக்கும் திறமை பெற்றவர்கள். ஆக்கத்திறன் சோதனையில் சிறப்புப்பேறு பெறுதல் குறிப்பிட்ட உளச்சார்புச் சோதனைகளில் சிறப்புப்பேறு பெறுதல், விரிசிந்தனை, நெகிழ்ச்சிசிந்தனை பெற்றிருத்தல், புதியன புனைதலில் ஆர்வம், படைப்பாற்றல் பெற்றிருத்தல், துருவி ஆராய்தலில் விருப்பம், செயற்பாடுகளில் நீடித்த ஆர்வமும் ஈடுபாடும், சுதந்திரமாகச் செயற்படுவதில் விருப்பம் ஆகிய பண்புகளை ஆக்கத்திறனுடையோர் கொண்டிருப்பர். இவர்களின் விளையாட்டிலும் செயல்களிலும் பெற்றோரும் ஆசிரியரும் ஆக்கத்திறன் வெளிப்பாட்டை அவதானிக்கலாம்.

ஆக்கத்திறன் சார்பான பண்புகளை இனங்காண்பதற்குப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  உயிரியலாளர், பௌதிக விஞ்ஞானிகள்,  உளவியலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்து, ஆக்கத்திறன் சார்பான சில பண்புகளை இனங்கண்டார். மெக்கினன் என்பவர் கணித நிபுணர்கள், கட்டிடக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரில் காணப்படும் ஆக்கத்திறன் பண்புகளை ஆராய்ந்தார். கெட்சலும் ஜக்சனும் ஆக்கத்திறன்  பெற்றுள்ள இளம்பராயத்தினரில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் முக்கியமான சில ஆக்கத்திறன் பண்புகள் இனங்காணப்பட்டன, அவை பின்வருமாறு :

 • குழந்தைப் பருவத்திலேயே உயர் நு.ஈ பெற்றிருத்தல்.
 • சுதந்திரமான உளப்போக்கு, சுதந்திரமாகத் தொழிற்படுதல்.
 • வகுப்பு மாணவருடன் நெருங்கிப் பழகாமல் தனித்திருத்தல்.
 • சுயநலமான போக்கு.
 • பலவகையான ஆர்வங்களையும் ஆற்றல்களையும் பெற்றிருத்தல்.
 • புதிய அனுபவங்களைத் திறந்த மனதுடன் அணுகுதல்.
 • நெகிழ்ச்சித் தன்மை.
 • கவின்கலை இரசனையுணர்வு பெற்றிருத்தல், அழகியற் கலையில் ஈடுபடுதல்.

லீடன் என்பவர் மாணவர்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆக்கத்திறன் சார்பான சில பண்புகளை இனங்கண்டுள்ளார். அவையாவன:

 • துருவி ஆராயும் சிந்தனைப்போக்கு சம்பவங்கள் ஏன், எப்படி நடைபெறுகிறதென்று ஆராய்தல், பலவகையான வினாக்களைக் கேட்டல் மேல்வாரியான விடைகளில் திருப்தியடையாமை.
 • உயர்மட்ட தர்க்கரீதியான சிந்தனைளூ எண்ணக்கருக்களை, விளக்கங்களை, சம்பவங்களைத் தொடர்புபடுத்தல்.
 • தொடங்கிய செயல்களைப் பூர்த்திசெய்து வெற்றிகாணும் வரையான நீடித்த முயற்சிளூ கவனத்தை ஒருமுகமாகக் குவித்து வேலைகளில் ஈடுபடல்.
 • அதிவேகமாகச் சிந்தித்தல், புதிய கருத்துக்களுக்கு உடனடியாகத் துலங்குதல்.
 • வேகமாகவும் இலகுவாகவும் கற்றல்.
 • சிறந்த ஞாபகசக்தி.
 • விரிவான சொற்களஞ்சியம் பெற்றிருத்தல்.
 • கூர்மையாக அவதானித்தல்.
 • விரிவான கற்பனாசக்தி.
 • விரிசிந்தனை ஆற்றல்.
 • சுதந்திரமாகத் தொழிற்பட்டு, புதியனவற்றில் ஈடுபடுதலில் விருப்பம்.

ஆக்கத்திறன் பெற்ற மாணவர்களை வழிகாட்டல் :

மிகச்சில மாணவர்களே மீத்திறனை அல்லது ஆக்கத்திறனைப் பெற்றிருப்பர். இவர்களில் காணப்படும் உள்ளார்ந்த திறன்களுக்குப் பரம்பரை ஒரு காரணமாகக் கொள்ளப்படுகின்றது. அதனை உச்சநிலைக்கு விருத்தி செய்வதற்குப் பாடசாலையில் விசேட வழிகாட்டல் ஆலோசனை அவசியம். ஆதிக்க மனப்பான்மையும் நுண்மதியும் குறைந்த ஆசிரியர்கள் அநேகமாக இம்மாணவர்களை மட்டந்தட்டி அடக்கி வைப்பார்கள். இதனால் இவர்களின் திறன் விருத்தியடையாமல் மொட்டிலேயே கருகிவிடச் சந்தர்ப்பம் உண்டு. அத்துடன் இவர்களின் விசேட திறன்கள் விரயமாகி, அவற்றால் சமூகம் அடையக்கூடிய நன்மைகள் இழக்கப்பட்டுவிடும். இவர்களின் திறன் பிழையான வழிகளில் திசை திருப்பப்பட்டால் அழிவுக்கும் காரணமாக அமையலாம். எனவே, ஆசிரியர்கள் இவர்களுக்கு விசேட வழிகாட்டல், கணிப்பு, மதிப்பு, அங்கீகாரம், ஊக்கல் ஆகியன வழங்குவது அவசியம். ஆக்கத்திறனுடையயோர் குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்டுச் சகபாடிகளுடன் ஒத்துழைப்பதில் இடர்பாடு உடையவர்களாகக் காணப்படுவர். அவர்களை மற்றவர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியாதாகையால் மனவெழுச்சிச் சிக்கல், சமூகப் பொருத்தப்பாடின்னை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படாமல் தடுப்பதற்கு வழிகாட்டல் ஆலோசனை அவசியம்.

சில்வியா அஸ்டன் (ளுடஎலைய யுளவழn) என்பவர் ‘பிள்ளையின் உள்ளமாகிய ஊற்றிலிருந்து வெளிப்படும் ஆக்கத்திறன் வெளிப்பாட்டுத் துவாரத்தைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் ஆசிரியர் காரணமாகச் செயற்பட முடியும்’ என, ஆக்கத்திறன் உடையோரைப் பற்றிக் கூறிய கூற்று ஆசிரியரின் சிந்தனைக்குரியது. மீத்திறனுடைய, ஆக்கத்திறனுடைய மாணவர்களைச் சாதாரண வகுப்புக்களில் வைத்துக் கற்பிக்கும் போது அவர்களுக்குப் படிப்பில் சலிப்பு ஏற்படலாம். மேலைநாடுகள் சிலவற்றில் இவர்களுக்கெனத் தனிப்பட்ட பாடசாலைகளும் உண்டு அல்லது சாதாரண பாடசாலைகளில் இவர்களுக்கெனத் தனிப்பட்ட வகுப்புகளை நடாத்துவார்கள்.

இலங்கைப் பாடசாலைகளில் இவர்களுக்கெனத் தனிப்பட்ட கல்விமுறை அமையவில்லை. எனினும், விசேட செழுமையான பாடவிதானம் அமைத்து, விடய ஆழத்தையும் கற்பித்தல் முறையையும் மேம்படுத்தலாம்.

ஆக்கத்திறன் விருத்தியை ஊக்குவிப்பதற்கு பின்வரும் வகுப்பறைச் செயற்பாடுகளை அமைக்கலாம் :

 • வினாக்களை ஆசிரியரிடம் கேட்பதற்கு மாணவர்களை ஊக்குவிக்கலாம்.
 • மாணவர் புதிய கருத்துக்களை முன்வைக்கும்பொழுது ஆசிரியர் அவற்றை கலந்துரையாடி, அவற்றுக்குப் பெறுமதி உண்டென்பதை ஏற்றுக்கொள்ளல்.
 • விரிசிந்தனையை ஊக்குவித்தல்.
 • செயற்றிட்டங்கள், ஒப்படைகள் ஆகிய சுயகற்றல் செயற்பாடுகளை ஊக்குவித்தல்.
 • பலவகையான நூல்களை வாசிப்பதற்கு ஊக்கமளித்தல்
 • சிந்தனைக் கிளறல் தனிமையாகவும், குழுவாகவும் நடைமுறைப்படுத்தல்.
 • வழமையான பாடங்களுக்கு மேலதிகமாக ஆர்வத்தையூட்டி விடயங்களைக் கலந்துரையாடல்.
 • மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாடுகளுக்கு கணிப்பைக் கொடுத்தல்.
 • இவர்களை வளமான பாடசாலையில் அனுமதித்தல்.
 • புலமைப்பரிசு வழங்கல்.
 • விரைவான வகுப்பேற்றல்.

உடற் குறைபாடுடைய பிள்ளைகள்

பார்வை, கேள்வி, பேச்சு, அங்கங்கள், உடலியக்கம் ஆகியவற்றில் குறைபாடு உடையவர்கள், உடற்குறைபாடுடையோர் எனப்படுவர். பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர், வலது குறைந்தோர் ஆகியோருக்கெனத் தனிப்பட்ட பாடசாலைகள் உள்ளன. ஓரளவு உடற் குறைபாடுடையோர்களே சாதாரண பாடசாலைகளில் கல்விபயில்வர். அவர்களுக்கென இங்கு விசேட உதவி வழங்கப்பட வேண்டும்.

பார்வைக்குறைபாடு உடையோரை இனங்காணல் :

வாசிக்கும் போது புத்தகங்களைக் கண்ணுக்கு மிக அண்மையில் அல்லது தூரத்தில் வைத்து வாசித்தால் கண்சிவத்தல், கண்வீக்கமடைதல், கண்ணில் நீர் வடிதல், கண்கூசுதல், அடிக்கடி தலைவலி ஏற்படுதல் ஆகியவற்றை அவதானித்து இவர்களை இனங்காணலாம்.

கேள்விக்குறைபாடு உடையோரை இனங்காணல் :

ஒலி பேதங்களைக் கிரகித்துக் கொள்ள முடியாமை தவறுதலாக விடயங்களை விளங்குதல் மிகச் சத்தமான குரலில் பேசுதல் பிழையான உச்சரிப்பு கல்வியில் பின்தங்குதல் தனிமையாக ஒதுங்கியிருத்தல் பகற்கனவு காணுதல் ஆகியவற்றை அவதானிக்கலாம்.

இக்குறைபாடுடைய மாணவர்களை ஆசிரியர் ஆரம்பத்திலேயே இனங்காணல் அவசியம். அவ்வாறு இனங்காணப்பட்ட குறைபாடுகள் சிலமருத்துவ சிகிச்சையுடன் பரிகாரம் காணக்கூடியனவாக இருக்கலாம். சில குறைபாடுகளின் பாதிப்பும் தீவிரமும் மூக்குக்கண்ணாடி, செவிப்புலச்சாதனம், சக்கர நாற்காலி போன்றவற்றால் ஓரளவு குறைக்கப்படலாம். இவற்றை மாணவர் பெற்றுக்கொள்வதற்குப் பாடசாலையின் வழிகாட்டல் தேவைப்படும். வகுப்பறையில் இவர்கள் தமது குறைபாடுகளால் பாதிக்கப்படாமல் இயன்றளவு விசேட வசதிகளையும் கவனிப்பையும் வழங்க ஆசிரியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் கட்புலன் செவிப்புலன் குறைபாடுடையோரை வகுப்பின் முன்வரிசையில் அமரும்படி செய்தல், இயக்கக் குறைபாடு உடையோருக்கு வசதியான ஆசனங்களை வழங்குதல் போன்றவை பயனுள்ளன.

உடல் குறைபாடுடையவர்களின் ஆளுமைச் சமநிலை சீர்குலைவதற்கு வாய்ப்புண்டு. இவர்களை மற்ற மாணவர்கள் இகழாமல் ஏற்றுக்கொள்ளவும், சமூகப் பொருத்தப்பாடு காணவும், தன்னம்பிக்கையை விருத்தி செய்யவும் ஆலோசனை தேவை. இக்குறைபாட்டின் காரணமாக இவர்கள் கல்வியில் பின்தங்கியவராகக் காணப்படின் அதற்கென விசேட வழிகாட்டலும் தேவைப்படும்.

பேச்சுக் குறைபாடு :

சொற்களைத் திருத்தமாக உச்சரிக்க முடியாமைளூ ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் திக்கித்திக்கிக் கூறுதல்ளூ பேச்சை ஆரம்பிக்க முடியாமல் திணறுதல்ள திக்குதல்ள மிக மெதுவாகப் பேசுதல் போன்றவை பேச்சுக் குறைபாடுகளாகும். இத்துடன் முகஞ்சுழித்தல், கண்சிமிட்டுதல் ஆகியனவும் பேசும்போது ஏற்படலாம்.

பேச்சுடன் தொண்டை, குரல்வளை, நாக்கு, உதடு, பிரிமென்தகடு ஆகியவை தொடர்புள்ளன. இவ்வுறுப்புகளில் உடலியல் ரீதியான குறைகளும் பேச்சுக் குறைபாட்டுக்குக் காரணமாக அமையலாம். எனினும் மனவெழுச்சிக் காரணங்களே பேச்சுக் குறைபாட்டைப் பெருமளவில் ஏற்படுத்துகின்றன எனக் கருதப்படுகிறது. திக்கு வாய்க்கு முக்கிய காரணம் தொண்டை, குரல்வளை, பிரிமென்தகடு ஆகியவற்றிலுள்ள தசைநார்கள் இறுக்கமடைவதே. இயல்பாகவே மனப்பதட்டம் உள்ள குழந்தைகளில் பேச்சுக் குறைபாடுகள் ஏற்படலாம். அவர்கள் கோபம், கவலை, பதட்டம் போன்ற உணர்ச்சிகளால் தூண்டப்படும் போது திக்குதல் மேலும் அதிகரிக்கும்.

திக்குவாய் நூற்றுக்குத் தொண்ணூறு வீதம் இரண்டு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரம்பமாகின்றது. திக்குவாய் ஆரம்பமாவதற்குத் தூண்டியாக அமையக்கூடிய காரணிகள் பின்வருமாறு:

 • குழந்தைப் பருவத்தில் தாயைப் பிரிவது.
 • நெருங்கிய உறவினர் ஒருவர் இறப்பது.
 • அந்நிய சூழ்நிலைக்கு இடம்பெயர்தல்.
 • குழந்தைகளை தீவிர தண்டனை, துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு உட்படுத்தல்.

குழந்தைக்கு ஒரு சகோதரர் பிறக்கும் போது இக்குழந்தைக்கு முன்பு கிடைத்துவந்த கவனிப்பு, அன்பு ஆகியவை பெற்றோரால் புதிய சசோதரருக்குக் கொடுக்கப்படுவதை உணரும்போது அக்குழந்தைக்கு பொறாமை ஏற்படுகின்றது. இப்பொறாமை உணர்வைப் புதிய சகோதரரிடம் காட்டாமல், பெற்றோரின் கவனிப்பைத் தன்னிடம் ஈர்ப்பதற்காகத் தான் பேசும்போது திக்கித்திக்கிப் பேசுகின்றது. இதற்குப் பரிகாரமாகப் பெற்றோர் இப்பிள்ளை மீது காட்டும் அன்பு, கரிசனை ஆகியன குறையவில்லை என்பதைப் பல வகையில் உணரச் செய்வதேயாகும்.

 • இயற்கையிலேயே இடது கைப்பழக்கம் உடையவராக இருந்தால், குழந்தை பேச ஆரம்பிக்கும் காலத்தில் அவரைக் கண்டித்து வலது கைப் பழக்கத்துக்கு மாற்ற முற்படுதல்.

திக்குவாய் பெரும்பாலும் இரண்டு நிலைகளில் ஆரம்பமாகிறது. குழந்தைப் பேசத் தொடங்கும்போது ஒரு சொல்லின் முற்பகுதியை உதாரணமாக, ‘அ…அ…அம்மா’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறது. இது குழந்தையின் மழலைப் பேச்சேயன்றிக் குறைபாடு அல்ல. சில பெற்றோர் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகைப்படுத்தி, குழந்தை பேச்சுக் குறைபாடுள்ளது என எண்ணி, குழந்தையின் பேச்சைத் திருத்த முற்படுகிறார்கள். இதனை அவதானிக்காததுபோல் இருந்து விட்டால் அதன் பேச்சு தானாகவே திருந்திவிடும். பெற்றோர் பதட்டப்பட்டுத் திருத்த முற்படும் போது தன் பேச்சிலுள்ள இயற்கையான குறைபாட்டைப் பற்றிக் குழந்தை தன்னுணர்வு பெறுகின்றது.

இத்தன்னுணர்வு இரண்டாம் நிலைக்கு இட்டுச்செல்லுகிறது. பேசும் பொழுது குழந்தை தனக்குக் குறைபாடு உள்ளதென உணர்ந்தபடியால், அதற்குப் பயம், பதட்டம் ஏற்படுகின்றது. தன் முயற்சியால் அதனைத் திருத்த முற்படுகின்றது. இதனால் தொண்டை, குரல்வளை, பிரிமென்தகடு தெறிவினை காரணமாக இறுகித் திக்குவாய் ஏற்படுகின்றது. ஆகவே முதல்நிலையில் குழந்தையைத் திருத்த முற்படக்கூடாது.

முன்பள்ளிப் பாடசாலை, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சகபாடிகள் ஆகியோர் குழந்தையைப் பயமுறுத்தல், துன்புறுத்தல், தண்டித்தல் ஆகியனவும் திக்குவாய்க்குக் காரணமாக அமையலாம். குழந்தையின் மனதில் சஞ்சலம், பயம், பொறாமை ஆகிய உணர்வுகள் ஏற்பட்டுவிட்டால், அதனை நிவர்த்தி செய்வதற்கு முயற்சியெடுக்க வேண்டும். அவசியமேற்பட்டால், பேச்சுப் பரிகாரியிடம் உதவி பெறல் இக்குறைபாட்டை நீக்குவதில் பயனளிக்கும்.

உடல் அங்கவீனம் :

பிறவியிலோ அல்லது நோய், விபத்து ஆகியவற்றாலோ உடலில் அங்கவீனம் அல்லது உடலமைப்பில் விகாரம் ஏற்படலாம். சாதாரணமாகப் பாடசாலைகளில் இவ்வாறான பிள்ளைகளைக் காணலாம். இவ்வங்கவீனத்தால் இவர்களின் உளத்திறன் பாதிப்படையாமல், மனவெழுச்சி பாதிக்கப்படாமல் வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும். சகமாணவர்கள் இவர்களைத் தனிமைப்படுதல், இகழ்தல் ஆகியன ஏற்படாமல் ஆசிரியர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். வைத்திய சிகிச்சை பெறவும், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் போன்ற சாதனங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவியளித்தல் பயனுள்ளது. வகுப்பில் இவர்களது ஆசனங்களை இவர்கள் இயங்குவதற்கு வசதியாக அமைத்தல் வேண்டும்.

உளக்குறைபாடுடையோர்

பிள்ளைகளில் நுண்மதி மிகத் தாழ்மட்டத்தில் காணப்படின் அவர்கள் உளக்குறைபாடுடையோர் எனக் கருதப்படுவர். அவர்களைப் பின்வருமாறு வகுக்கலாம் :

நு.ஈ 25 இற்குக் கீழ் உள்ளோர் – தீவிர உளக்குறைபாடுடையோர், இவர்கள் சாதாரண பாடசாலைகளில் காணப்படமாட்டார்கள். தங்கள் சொந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மற்றவர்களின் உதவியை இவர்கள் நாடி நிற்பர். இவர்களின் சிந்தனை மனவெழுச்சி முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும்.

நு.ஈ 25-55 வரை உள்ளவர்கள் – உளப் பிற்போக்கு உடையவர்கள். இவர்களும் சாதாரண பாடசாலைகளில் காணப்படமாட்டார்கள். விசேட பாடசாலைகளில் இவர்களுக்கு ஓரளவு பயிற்சி அளிக்கலாம்.

நு.ஈ 55-75 வரை உள்ளவர்கள் – ஓரளவு உளக்குறைபாடு உடையவர்கள். ஆரம்பப் பாடசாலைகளில் விசேட கற்பித்தல் முறைகள் மூலம் இவர்களுக்கு அடிப்படைக்கல்வி கற்பிக்கப்படலாம்.

உளக்குறைபாடுடையோர் சுயபொருத்தப்பாடு, சமூக பொருத்தப்பாடு ஆகியவற்றைப் பெறவும், கைவேலை சார்பான தொழில்களில் பயிற்சி பெறவும் வழிகாட்டப்பட வேண்டும்.

கற்றலில் பின்தங்கியோரும் மெல்லக் கற்போரும்

கற்றலில் பின்தங்கல், மெல்லக் கற்றல் ஆகிய இரு சொற்றொடர்களும் நெருங்கிய தொடர்புடையன. பெரும்பாலும் இவை ஒன்றையே குறிக்கலாம். பின்தங்கியநிலை மாணவரின் வயதுக்கேற்ற வகுப்பு நியமத்தைக் குறிக்கின்றது. ஒரு பிள்ளை தனது வயதுக்குரிய வகுப்பு நியமத்திலும் தாழ்வான வகுப்பில் காணப்படில், அவர் கற்றலில் பின்தங்கியவர் எனப்படுவார். கற்றலில் குiபாடுடையோர் மெதுவாக அல்லது தாமதித்துக் கற்போர் எனக் கருதப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் நுண்மதி ஈவின் அடிப்படையில் இவர்கள் இனங்காணப்பட்டனர். 1969ஆம் ஆண்டின் பின்னர் கல்விசார் பின்தங்கிய நிலையை மீள்வரையறை செய்தனர். பாட அடைவுகளின் தகுதி நிலமையில் ஒரு மாணவன்  ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துக்குரிய மட்டத்தை அடையத் தவறுவானாயின், ஒரு வகுப்பு அல்லது பல பாடங்களில் அல்லது ஒரு பாடத்தில் குறைவாக இருந்தால், அவன் பின்தங்கியவன் எனக் கருதப்படுகின்றான்.

பின்தங்கிய நிலைக்கான காரணிகள் :

 • வீட்டுச்சூழல் தொடர்பான காரணிகள்
 • பாடசாலை தொடர்பான காரணிகள்
 • தனியாள் தொடர்பான காரணிகள்

வீட்டுச் சூழல் தொடர்பான காரணிகள் பின்வருமாறு :

 • பெற்றோரின் தாழ்ந்த பொருளாதார நிலை, சேரி வாழ்வு, இட வசதிக் குறைவு போன்றவை.
 • பாடசாலை நேரங்களில் பிள்ளைகளை வேலைகளில் ஈடுபடுத்தல்.
 • பிளவுபட்ட குடும்பங்கள், பெற்றோர் நீண்டகாலம் வீட்டில் இல்லாமை.
 • பெற்றோரின் கல்வித்தரக் குறைவு, அறியாமை.
 • சீரற்ற குடும்ப உறவுகளால் மனவெழுச்சித் தாக்கங்கள் ஏற்படுதல்.
 • பிள்ளைகளின் படிப்பில் கரிசனைக்கொள்ளாமல், படிப்பைப்பற்றிய எதிர் மனப்பாங்கு, ஒழுங்காகப் பாடசாலைக்கு அனுப்பாமை.

பாடசாலை தொடர்பான காரணிகள் பின்வருமாறு :

 • பொருத்தமற்ற பாடசாலைப் பாடவிதானம்.
 • பிழையான கற்பித்தல் முறை, மாணவரின் தனியாள் வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாமல் ஆசிரியர் கற்பித்தல்.
 • ஆசிரியர் மாணவர் தொடர்புகளில் முரண்பாடுகள்.
 • அளவுக்கதிகமான கற்றல் சுமை.
 • கற்றலில் ஆர்வமற்ற சகபாடிகளின் குழு அங்கத்துவம்.
 • தடையற்ற வகுப்பேற்றம்.
 • அடிக்கடி பாடசாலையை மாற்றுதல்.

தனியாள் தொடர்பான காரணிகள் பின்வருமாறு :

 • நுண்மதிக் குறைவு.
 • உடல், உளக் குறைபாடுகள்.
 • போசாக்குக் குறைபாடு, உடல் ஆரோக்கியமின்மை, நோய்.
 • முதிர்ச்சிக்கு முன்கற்றலை ஆரம்பித்தல்.
 • மனவெழுச்சிச் சிக்கல்கள்.

கற்பித்தல் பரிகார முறைகள்

கற்றலில் பின்தங்கியோர், மெல்லக் கற்போர் ஆகியோருக்கு விசேட முறைகளைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம். அவையாவன :

 • தொடர்ச்சியாகப் பலமணி நேரம் கற்பிக்காமல் சிறிய பாடவேளைகளாகப் பிரித்துக் கற்பித்தல்.
 • பாடத்தைச் சிறுசிறு அலகுகளாகப் பிரித்துக் கற்பித்தல்.
 • கற்றதை நன்கு உறுதிப்படுத்துவதற்காக மிகையாகக் கற்றல், மீண்டும் மீண்டும் கற்று அதிக பயிற்சிகள் செய்தல்.
 • செயற்பாடுகள் மூலம் கற்றல்.
 • கட்புல சாதனங்களைப் பயன்படுத்திக் கற்பித்தல்.
 • ஒவ்வொரு கற்றல்படியின் பின்பும், மீளவலியுறுத்தலின் பொருட்டு வெகுமதி, பொருளாதார அடையாளக் கட்டளைகள் ஆகியவற்றை வழங்குதல்.
 • கற்றலில் சிறிய முன்னேற்றம் அடைந்தபோதும் அதிக அளவில் ஊக்கல் பாராட்டுகள் வழங்குதல்.
 • சுய எண்ணக்கரு மட்டத்தை மேம்படுத்தித் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்.
 • விரைவாகக் கற்பதை விட திருத்தமாகக் கற்பதில் கவனஞ் செலுத்தல்.
 • பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர் விசேட கவனஞ்செலுத்தல்.
 • ஆசிரியர் மேலதிக விசேட வகுப்புக்களை நடத்துதல்.

கற்றலில் இடர்ப்பாடுடையோர்

கற்றல் இடர்ப்பாடுடைய மாணவர்கள் ஆரம்பக் கல்விநிலையில் வாசித்தல், எழுதுதல், எண் ஆகியவற்றைக் கற்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குவர். இதற்கு இவர்களின்; நுண்மதிக்குறைவு காரணமல்ல. இக்குறைபாடுகளில் சில பின்வருமாறு :

 • எழுதுதல் வாசித்தல் குலைவு
 • எண்சார் குறைவு
 • கவனித்தல் குறைபாட்டுக் கோளாறு
 • கவனித்தல் குறைபாடு, அதீத செயற்பாடு கோளாறு

எழுதுதல் வாசித்தல் குலைவு :

எழுதுதல் – வாசித்தல் குலைவின்போது எழுத்துக்களை இணைத்து சரியாக வாசிக்கமுடியாமல் முன்பின்னாக மாற்றி ஒலிப்பர். அதேபோல் எழுத்துக்களையும் முன்பின்னாக மாற்றி எழுதுவர். ஒலிக்கு உரிய சரியான எழுத்துக்களைக் கோவைப்படுத்தி வாசிக்க, எழுத இடர்படுவர்.

எண்சார் குலைவு :

எண்சார் குலைவும் மேற்கூறியது போல் இலக்கங்களை பிழையாக மாறிஎழுதுவர். மனதில் 12 என நினைத்து 21 என எழுதுவர். அதேபோல் நேர், மறை ஆகியவற்றை விளங்குவதில் குழப்பநிலை அடைவர்.

சிலர் இயக்கம் சார்பான குழப்பநிலையையும் பெற்றிருப்பர். பார்வையுடன் கைகளை இணைத்து வேலைகளில் ஈடுபடுவதில் தடுமாற்றமடைவர். உ-ம் : ஆடைகளில் பொத்தான பூட்டுதல், காலணி அணிதல் ஆகிய செயல்களில் இடர்படுவர்.

மேற்கூறிய குலைவுகள் யாவும் மாணவர்களில் மிகக்குறைந்த மட்டத்திலிருந்து தீவிர மட்டம் வரை காணப்படும்.  இவ்விடர்பாடுகளுக்குப் பரம்பரை அலகே காரணியாகக் கூறப்படுகின்றது.

கவனித்தல் குறைபாட்டுக் கோளாறு

இக்குறைபாடு உடையோரில் பின்வரும் நடத்தைகளை அவதானிக்கலாம்.

 • கற்றலிலும் மற்றைய செயற்பாடுகளிலும் கவனத்தைத் தொடர்ந்து குறுகிய நேரத்திற்கேனும் வைத்துக்கொள்ள முடியாமை.
 • சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஒரு விடயத்தில் நிலைநிறுத்த முடியாமை. இத்தன்மையினால், கற்றலிலும் இடர்பாடு ஏற்படுகின்றது.
 • செயல்களில் அளவுக்கதிகமான அவசரம், திடீர் விசைத் தூண்டல் அல்லது உந்தல் ஏற்படுதல்.
 • ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதில் குழப்பநிலை.

கவனித்தல் குறைபாடு, அதீத செயற்பாட்டுக் கோளாறு – ADHD:

இக்குறைபாடு உடையோரில் ADDஇல் கூறிய நடத்தைகள் மேலும் அதீத நிலையில் காணப்படும். அவர்களில் மேலும் பின்வரும் நடத்தைகளையும் அவதானிக்கலாம்.

 • தொடர்ச்சியான அமைதியின்மை, ஒரு இடத்தில் சில நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருக்க முடியாமை, எப்பொழுதும் உடலை கைகால்களை ஆட்டி அசைத்தல்.
 • ஒரு செயற்பாடு முடியுமுன் வேறோன்றை ஆரம்பித்தல்.
 • மற்றவர்கள் பேசும் போது நடுவில் குறுக்கிடல்.
 • சொல்வதைப் பொறுமையாகச் செவிமடுக்காமை.
 • தனது முறை வருமுன் இடையில் முன்னுக்குப் புகுதல்.
 • ஆபத்தான செய்கைகளில் முன்யோசனையின்றி ஈடுபடுதல்.

ஆரம்பப் பாடசாலைகளில் மேற்கூறிய நடத்தைகளை ஆசிரியர் மாணவரின் துடினத்தனம் என நினைக்கலாம். இந்நடத்தைகள் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு மேல் காணப்படின், கற்றலில் இடர்பாடுகள் உடையவர்கள் எனக்கொள்ளலாம். இந்நடத்தைகளின் தீவிரம் தணிந்துபோகாமல் பதினைந்து வயதுக்கு மேலும் தொடர்ச்சியாகவும் காணப்படின், இவர்களின் மைய நரம்புத்தொகுதி, பக்க நரம்புத்தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக ஊகிக்கலாம். இவர்களை நரம்பியல் மருத்துவரிடம் சிபார்சு செய்தல் அவசியமானது. ஏற்படுவதற்குக் காரணம் மூளை பிறப்புக்கு முன் அல்லது பிரசவத்தின் போது அல்லது நோய்கள், மருந்துகள், விபத்துக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டமையே. பொதுவாக இந்நடத்தைகள் மூளை தொடர்பாகச் சுரக்கப்படும் ஓமோனின் குறைபாட்டினால் ஏற்படுகின்றது எனக் கருதப்படுகிறது.

இவ்விடர்ப்பாடுகள் உடையோரை ஆசிரியர், பெற்றோர் தண்டிப்பதால் பிரச்சினை மேலும் கூடுதலாவதுடன், ஆளுமை, மனவெழுச்சி ஆகியவற்றில் தாக்கமும் ஏற்படும். இவர்களுடன் பொறுமையுடனும் அனுதாபத்துடனும் பழக வேண்டும். இவர்களுக்கு விசேட கற்பித்தல் முறைகள், வழிகாட்டல் ஆலோசனை ஆகியன இத்துறையில் விசேட பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கும் சிபார்சு செய்யப்பட வேண்டும்.

பொருத்தப்பாடற்ற நடத்தையுடைய பிள்ளைகள்

மனவெழுச்சி, சமூகத் தொடர்புகள் ஆகியன தொடர்பாகப் பொருத்தப்பாடற்ற பிரச்சினைக்குரிய நடத்தை உடையவர்கள் இதனுள் அடங்குவர். நியம நடத்தை எதுவென்பதை சமூகமே தீர்மானிக்கின்றது. நியமம், நியமமற்ற நடத்தைகள் ஆகியன கலாசாரம், காலம், வயது, சந்தர்ப்பம் ஆகியவற்றைப் பொறுத்துச் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியவை. பொருத்தப்பாடு என்பது ஒருவருக்கும் அவரது சூழலுக்கும் இடையேயுள்ள இசைவாக்கத்தைக் குறிக்கும்.

பிள்ளைகளில் காணப்படும் பொருத்தப்பாடற்ற நடத்தையை இங்குக் கவனிப்போம். இவர்களை மூன்று பிரிவுகளாக வகுத்து ஆராயலாம்.

(1)நியம நடத்தையிலிருந்து ஓரளவு விலகிய நடத்தை உடையவர்கள்.

(2)சாதாரண, அசாதாரண நடத்தைகளுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளோர்.

(3)அசாதாரண நடத்தைத் தீவிர ஆளுமைச் சீர்குலைவு உடையோர்.

மேற்கூறிய முதலிரு பிரிவிலும் உள்ளவர்களைப் பாடசாலைகளில் காணலாம். அவர்கள் பொருத்தப்பாடற்ற நடத்தையுடையவர்கள் எனக் குறிப்பிடப்படுவர். மூன்றாம் பிரிவில் குறிக்கப்பட்டுள்ள ஆளுமைச் சீர்குலைவுடையோரை சாதாரண பாடசாலைகளில் அபூர்வமாக காணலாம்.

முதலிரு பிரிவுகளில் அடங்கும் மாணவர்களில் காணப்படும் அறிகுறிகள் பின்வருவன:

உடலியல் சார்ந்தவை : அமைதியின்மை, உடலில்நோய் அற்ற வேளைகளிலும் வாந்தியெடுத்தல், உணவு சமிபாடடையாமை, அடிக்கடி தலையிடி ஏற்படுதல், முகஞ்சுழித்தல் ஆகியன.

நடத்தை சார்ந்தவை : பிறருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்தல், எடுத்ததற்கெல்லாம் பொய் பேசுதல், களவு செய்தல், சொல்வதற்கெதிராக வேண்டுமென்றே செய்தல், அடம்பிடித்தல், தீவிரமான வெருட்சி, அதிகரித்த உணர்ச்சி நிலைகள், காரணமற்ற பயங்கள், தாழ்வுச் சிக்கல், ஆதிக்கத்தன்மையான நேர்முக அல்லது மறைமுக எதிர்ப்புச் செயல்களில் ஈடுபடுதல், தம்மிலும் நலியோர் சிறுபிள்ளைகள் அங்கவீனர் வயோதிபர் ஆகியோரைத் துன்புறுத்துதல், பிராணிகளை வதைத்தல், தணிமையை விரும்பி வகுப்பில் ஒதுங்கியிருத்தல் ஆகியன. இத்தகைய நடத்தைகள் சில அத்தியாயம் 3இல் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

மாணவரின் வன்செயல்கள் : வன்செயல்கள் மூவகைப்படும். அவையாவன, நேரான வன்செயல், மறைமுக வன்செயல், இடம்பெயர்ந்த வன்செயல் ஆகியனவாகும். இவ்வன்முறைகள் பல வடிவங்களில் மாணவர்-மாணவர்களுக்கிடையில், மாணவர்-ஆசிரியருக்கிடையில், மாணவர்-அதிகாரிகளுக்கிடையில் பல மட்டங்களில் காணப்படுவனவாகும். பொதுவாக கட்டிளமைப்பருவத்தில் இத்தகைய மாணவரில் புகைப்பிடித்தல், மதுவருந்துதல், போதைப்பொருள் பாவனை, முறையற்ற பாலியல் நடத்தை, குழுச்சண்டைகளில் ஈடுபடுதல், பாடசாலை உடைமைகள் பிறரின் உடைமைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்தல், தகாத வார்த்தைகளைப் பேசுதல், பகிடிவதையில் ஈடுபடுதல், ஆசிரியர் கற்பிக்க முடியாதவகையில் தொல்லை கொடுத்தல் ஆகிய நடத்தைகளும் காணப்படலாம்.

தனிமை நாடல் : சில மாணவர்கள் வகுப்பில், பொதுவாகப் பின் ஆசனங்களில் பிறருடன் சேராது ஒதுங்கித் தனிமையாக இருப்பதை அவதானிக்கலாம். இவர்கள் மற்றவர்களுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் தனிமையாக இருப்பதால், ஆசிரியர்களுக்கு இவர்களால் எவ்வித தொல்லைகளும் ஏற்படாததால், அவர்கள் மீது கரிசனை எடுக்காமல் விட்டுவிடுகின்றார்கள். இவர்கள் இவ்வாறு மற்றவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாமலும் சேர்ந்து விளையாடாமலும் இருப்பதற்கு காரணம் மனமுறிவு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கே ஆகும். தனிமை விரும்பும் நடத்தையைச் சீராக்கம் செய்யாவிடில், அது நீடித்துத் தொடர்ந்து பிற்காலத்தில் உளக்கோளாறாக விருத்தியடையலாம். ஆரம்பத்திலேயே இவர்கள் இனங்காணப்பட்டு வழிகாட்டல் ஆலோசனை வழங்குவது நற்பலனை அளிக்கும்.

பொருத்தப்பாடின்மையை ஏற்படுத்தும் காரணிகள் : பொருத்தப்பாடின்மை ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம். அவையாவன உடலியற் காரணிகள், உளக்குறைபாடு, சூழற் காரணிகள் ஆகியனவாகும். உடலியற் காரணிகளாவன உடல் குறைபாடு, விகாரமான தோற்றம் அதிக உயரம், அதிக பருமன் ஆகியனவாகும். உளக்காரணிகளாவன நுண்மதிக் குறைவு, உளத் தேவைகளைத் திருப்திகரமாகப் பெறமுடியாமல் ஏற்படும் மனமுறிவு, விரக்தி, உளத்தாக்கம் ஆகியவையாகும். குடும்பம், பாடசாலை, சமூகம், ஆகியவற்றினிடையேயான தொடர்புகள் திருப்திகரமாக இல்லாமை, தேவைகள் பூர்த்திசெய்யப்படாமை என்பன சூழற்காரணிகளாகும்.

பொருத்தப்பாடற்ற பிள்ளைகள் அதீத உணர்ச்சிவசப்படுதல், பயந்து பின்வாங்கும் சுபாவம், தாழ்வுச்சிக்கல், கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் ஆளுமைச் சீர்கேடுகளுக்கு உள்ளாகின்றனர். பொருத்தப்பாடின்மை ஆரம்பத்திலேயே சீராக்கம் செய்யப்படாவிடில் நெறிபிறழ்வும் ஏற்படலாம்.

நெறிபிறழ்ந்த இளங்குற்றவாளிகள்

நீதித்துறையின் தண்டனைக்குரிய செயல்களில் ஈடுபடும் பிள்ளைகள் நெறிபிறழ்நத இளங்குற்றவாளிகள் எனப்படுவர். 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வன்முறைகள், களவு, போதைப்பொருள் விற்பனை, பாலியல் குற்றங்கள், கொலை போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் பாடசாலையிலிருந்து நீக்கி, தனிப்பட்ட பராமரிப்பு இல்லங்களில் காவலில் வைக்கப்படுவர்.

நெறிபிறழ்வுக்குரிய காரணங்களை அறிவதற்குப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேர்ட் என்பவர் தமது ஆய்வின் அடிப்படையில் பின்வரும் முக்கிய காரணிகளை இனங்கண்டு அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நிரற்படுத்தியுள்ளார்.

 • வீட்டில் ஒழுங்கான கட்டுப்பாடுகள் இல்லமைளூ தீவிரமாக கட்டுப்பாடுகள் விதித்தல் அல்லது அளவுக்கதிகமான சுதந்திரம் கட்டுப்பாட்டில் உறுதியின்மைளூ பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறையின்மை.
 • குழந்தைப் பருவத்தில் உளவியல் தேவைகள் பூர்த்தியடையாமல் மனமுறிவு, மனவெழுச்சிச் சீர்குலைவு ஆகியன ஏற்படல்.
 • அதிதமான இயல்பூக்கங்களைப் பெற்றிருத்தல். உதாரணமாக போர் ஊக்கம், பால் ஊக்கம், திருட்டூக்கம் போன்றவை.
 • குடும்ப வரலாற்றில் குற்றம் புரிந்தோர் காணப்படல். தகப்பன் தாய் தமையன் மாமன் போன்றோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் நடத்தையைப் பிள்ளைகள் முன்மாதிரியாகக் கற்றுக் கொள்ளுதல்.
 • குறைந்த நுண்மதியும், கல்வியில் பிற்போக்கும் காணப்படல், இதற்குக் காரணம் ஒரு மாணவன் பாடசாலைவேளைகளில் தனது திறமையைக் காட்டிப் பிறரது கணிப்பையும் மதிப்பையும் பெற முடியாத போது வேறு வழிகளில் இவற்றைப் பெற முயலுகிறான். குழுக்களின் கணிப்பைப் பெறும்பொருட்டுச் சமூகவிரோத செயல்களில் ஈடுபடலாம்.

பேர்ட் கூறிய காரணிகளுக்கு மேலதிகமாக வேறு சில முக்கிய காரணிகளையும் போள்பி என்பவரின் ஆய்வு எடுத்துக்காட்டுகின்றது. அவரது ஆய்வின்படி, நெறிபிறழ்வுக்கு முக்கிய காரணங்களாவன :

 • ஒரு குழந்தை தனது முதல் ஐந்து வருடங்களுக்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழ்தல்.
 • பெற்றோரால் புறக்கணிக்கப்படல்.
 • பெற்றோரின் வறுமை, தொழிலின்மை, ஒழுக்கச் சீர்கேடுகள்.
 • நகரங்களுக்கு இடம்பெயர்தல், கேசரிகள் போன்ற சனநெருக்கமான பகுதிகளில் குடியிருத்தல்.

ஆரம்ப நிலையிலேயே நெறிபிறழ்வு ஏற்படாமல் தடுப்பதற்குப் பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை பயனுள்ளது. பிள்ளைகளின் தன்னம்பிக்கைளை வளர்ப்பதற்குப் பாடசாலைகள் சகல வசதிகளையும் அமைத்துக் கொடுத்தல் வேண்டும். மேலும் இவ்விடயத்தில் சமூக நலன் கருதும் தாபனங்கள், சமயம் சார்ந்த நிறுவனங்கள், இளைஞர் மன்றங்கள், காவல் நிலையங்கள் போன்றவற்றுடன் பாடசாலை தொடர்புகொண்டு மாணவரிடத்தில் நல்ல சமூக ஒழுக்க விழுமியங்களையும், சுயகட்டுப்பாடுகளையும் விருத்திசெய்ய முயற்சியெடுக்க வேண்டும். இவ்வாறாக விசேட தேவையுடைய பிள்ளைகளது வாழ்கைமுறைகளும் , பல்வேறு இன்னல்களும் எதிர்நோக்கும் வேளை விசேட தேவையுடையோரிற்கு ஏற்ற வழிகாட்டல் வழங்கப்படும்போது அவர்களது வாழ்க்கை வளம் பெறும் எனலாம்.

துணைநின்றவை

நூல்கள்

 • மகேசன் .கே ,2010 ,விசேட கல்வியும் ஆலோசனை வழங்கலும், ஹீரா அச்சகம், மட்டக்களப்பு.
 • முத்துலிங்கம் .ச, 2002, கல்வியும் உளவியலும், லங்கா புக் டிப்போட்.
 • விமலா .கி, 2003, வழிகாட்டலும் ஆலோசனைகளும் ,கே.எஸ்.யூ.கிராபிக்ஸ், ராஜகிரி.

சஞ்சிகைகள்

 • அரசரத்தினம் பூ.க., 2007 ‘ பிள்ளைகளை எப்படி அணுக வேண்டும் ,அகவிழி.
 • கேதீஸ்வரன் .க,2010, கல்வி ,கல்வி மாணிச்சங்கம், கிழக்குப்பல்கலைக்கழகம், மட்டக்களப்பு.
 • சந்திரசேகரம் .ப, 2004, செவித்திறன் குறைவானோருக்குக் கற்பித்தல், அகவிழி.
 • ஜெயராசா சபா, 2004, ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர், அகவிழி.
 • ஜெயராசா சபா, 2006 ,சமூக உளவியல் நோக்கில் அந்நியமாதல், அகவிழி.
 • ஜெயராசா சபா, 2008, கற்றல் தொடர்பான இடர்களை எதிர்கொள்வோர், அகவிழி.

 

யேசுஐயா டிலானி

உதவி விரிவுரையாளர்

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை

dilanijesuiyah@gmail.com

&

மொகமட் கனீபா சபீதா பானு

கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை