நமக்குக் கிடைக்கப்பெறும் அகப்புறச் சான்றுகளின் வழியாகப் பண்டுதொட்டு நம் தமிழ்ச்சமூக வரலாறு மீட்டெடுக்கப்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதானது சிற்றிதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் மட்டுமே சுருங்கிப் போனதொரு பேருண்மை. வரலாறு என்பதும் வரலாறெழுதுதல் என்பதும் கீழிருந்து மேலெழுதல் என்ற தருக்கவடிவினதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதே இன்றைய வரலாற்று மறுவாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. அகழ அகழக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பேழைகளை, தொல்லெழுத்துச் சான்றுகளை வெளிக்கொணர விடாமல்  அருங்காட்சியகங்களின்  தனியறைகளில் பூட்டிவைத்து நுண்அரசியல் செய்யும் இக்கட்டான சூழலில் பரந்துவிரிந்து கிடக்கும் தமிழிலக்கியச் சான்றுகளை இன்னும் சரிவரத் தூசு தட்டாமல் இருப்பது இந்த நிமிடம் வரை நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். பண்டுதொட்டு இங்கிருந்த வரலாற்றுத் தொல்லெச்சங்களை மறைத்து எல்லாவற்றையும் தங்களுக்கானதாக அடையாளப்படுத்திப் புராண இதிகாசக் கருத்தாக்கங்களை இந்நிலத்திற்கான ஆதி வரலாறென நம்பவைத்த வரலாற்று மோசடியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை.  அவ்வகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்ற செவ்விலக்கியப் பிரதிகளை மையமிட்டுப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் எழுந்த உரைகளினூடாக அமைந்த பாட, உரை வேறுபாடுகளின் நுண்ணரசியலை அடையாளப்படுத்தி வரலாற்றுக் குறிப்புகளை மீட்டெடுப்புச் செய்வது இவ்வாய்வுரையின் நோக்கம். இவ்வாய்வுரைக்கு நற்றிணையின் முதற்பதிப்பான பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரையும் 1966, 1968களில் எழுந்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரையும் முதன்மையாகக் கொள்ளப் பெறுகின்றன. நற்றிணையின் 75, 77 ஆகிய இரு பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வெல்லையாக அமைகின்றன.

கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்

          பச்சூன் பெய்த பகழி (நற்.75 : 6-7)

என்ற பாடத்தை ஏற்றுக்கொண்ட பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ‘வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பினைப்போல’ என உரை கொள்கின்றார். இப்பாடத்திற்கும் உரைக்கும் மாற்றாக,

கோடைப் பொருநன் கோட்டுமா தொலைச்சிய

          பண்ணி எய்த பகழி (நற்.75 : 6-7)

என்ற பாடத்தை ஏற்றுக்கொண்ட ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை ‘கோடைமலைப் பொருநனாகிய கடியன் நெடுவேட்டுவனது உயர்ந்த கொம்புகளையுடைய யானையைக் கொல்லுதற்குப் பண்ணி என்பவன் எய்த அம்பு போல’ என உரை கொள்கின்றார்.

இவ்விரு பாடவேறுபாடுகளினாலும் அதனாலெழுந்த உரை வேறுபாடுகளினாலும் வரலாற்றுக் குறிப்பொன்று அறியப் பெறுகின்றது. தமிழ்ச்செவ்விலக்கியப் பனுவல்களில் அமைந்த உவமைகளில் வரலாற்றுக் குறிப்புகளை அளித்தல் என்பது தமிழ்ச்செவ்விலக்கியப் பண்பென்று கொண்டாலும் பிழையில்லை. அவ்வளவிற்கு மிகுதியான வரலாற்றுக் குறிப்புகளைப் பெற்றுள்ளவை தமிழ்ச்செவ்வியல் பனுவல்கள். ஆனால் பல வரலாற்றுக் குறிப்புகளைத் தொல்லியல் சான்றுகளோடும் பிற இலக்கியச் சான்றுகளோடும் முறையாகத் தொடர்புபடுத்திக் காணும் திறமின்மையினால் அவற்றை வேறு சிலர் தங்களுக்குச் சாதகமான முறையில் திரித்துக் கொள்கின்றனர். நற்றிணையின் முதற்பதிப்பாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் மேற்குறித்த இவ்வரலாற்றுக் குறிப்பமைந்த பாடத்தை ஏற்காமைக்கு என்ன காரணம் எனப் புலனாகவில்லை.  ஆனால் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை  இவ்வரலாற்றினைத் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளமையோடு தமிழரல்லாத பிறர் இவ்வரலாற்றை எவ்வாறெல்லாம் திரித்து எழுதியுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். வரலாற்று மீட்டுருவாக்கம் செய்யப்பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் இவ்வுரைக்குறிப்பு மிக முக்கியமானதாக  அமைகிறது. அவ்வுரைக்கருத்து பதிப்பிலுள்ளவாறே இங்கு எடுத்தளிக்கப் பெறுகின்றது.

கோடை, மதுரை மாவட்டத்திலுள்ள கோடைமலை, கோடைப் பொருநன், மதுரை மாவட்டத்தில் கோடைக்கானல் என வழங்கும் பேரூர் உள்ள பகுதியில் சங்ககாலத்தில் வாழ்ந்த பெருஞ்செல்வத் தலைவன். கடியன் நெடுவேட்டுவன் என்பது அவன் பெயர். பொருநனுக்குரிய மாமலை இப்போது பெருமாமலை, பெருமாள்மலை என மருவி வழங்குகிறது. இப்பொருநன் சங்ககாலப் புலவர் பாடும் புகழ்பெற்றவன்; பெருந்தலைச் சாத்தனார் என்ற சான்றோர், ‘‘விறற்சினம் தணிந்த விரைப்பரிப்புரவி உறுவர் செல்சார்வாகிச் செறுவர் தாளுளம் தபுத்த வாள்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருந’’ என்றும், ‘‘மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன்சிலை வேட்டுவ’’ என்றும் பாடியுள்ளார். பண்ணி என்பான் இந்நாளில் கோடைமலைக்குச் செல்லும் பெருவழியில் உள்ள பண்ணைக்காடு என்ற மூதூர்க்குரியனாய்ச் சங்க காலத்தே வாழ்ந்து சிறந்த வள்ளியோன். கோடைமலையிலிருந்து திண்டுக்கல் வரையில் தொடர்ந்து நிற்கும் மலைத்தொடர் பண்ணிக்குரியது என்பது பற்றி அது பண்ணிமலை என வழங்கிற்று; பண்ணிமலை கோடைமலையின் தொடர்ச்சியாதல் கண்ட சான்றோர்   ‘கோடைப்பொருநன் பண்ணிஎன்றும், அவன் பாண்டியர்க்குப் படைத்துணைவன் என்றும், மிக்க வள்ளன்மையும்  வேள்வி பல செய்த மேன்மையும் உடையன் என்றும் பெருஞ்சித்திரனார் கூறுகின்றார். இங்கே காட்டிய சான்றோர் இருவரும் இக்கோடை மலையை அடுத்துள்ள முதிரமலைக்குரியனாய்ச் சிறந்து விளங்கிய குமணன் என்னும் வள்ளலைப் பாடி அவன் அன்பை நேரில் பெற்றவர்களாதலால் அவர் சொற்கள் இன்றைய நாம் தடையின்றி ஏற்கத்தக்க சிறப்புடையனவாம். பண்ணி என்ற சொல்லிற்கு ஒப்பனை செய்யப் பட்டவன் என்பது பொருள். நமது தமிழகத்திற்குப் போந்த வேற்று நாட்டவர் அனைவரும் இங்குள்ள இடப்பெயர், பொருட்பெயர், தெய்வப்பெயர் ஆகிய பலவற்றைத் தமது மொழியில் எழுதும் போது அவற்றின் தமிழ்ப்பெயர்களை அப்படியே தங்கள் மொழியொலிக்கேற்ப எழுதிக்கொள்ளும் இயல்புடையர்; அதனால் அவர்கள் நூல்களைக்காணும் போது நமக்கும் அவர்கட்கும் இருந்த தொடர்பை நாம் அறிவது எளிதாகிறது. ஆனால் வடமொழியாளர்பால் இந்த நற்பண்பு காணப்படுகிறதில்லை; தமிழ்ப்பெயர்களை உருத்தெரியாதபடி மொழிபெயர்த்துக் கொள்வர். முதுகுன்றத்தை விருத்தாசலம் என மாற்றுவதும், தமிழ் முத்தினை முக்தம் எனத் திரிப்பதும், கயற்கண்ணியை மீனாட்சி எனப் பெயர்ப்பதும் அவர்களின் இயல்பு; இதனோடு நில்லாமல் சிலகாலம் கழித்ததும், கயற்கண்ணி என்ற பெயர் மீனாட்சி யென்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பென்றும், முதுகுன்று என்பது விருத்தாசலம் என்னும் வடசொல்லின் தமிழ்ப்பெயர்ப்பு என்றும் நாகூசாது பொய் கூறி, மக்களை மயக்கும் செயலும் அவர்கள்பாலுண்டு; இச்செயலால் வடமொழி நூல்களில் உள்ள வேற்றுமொழிக் கருத்துக்களைப் பகுத்துக் காண்பது அருமையாய்ப் போகவே, பழந்தமிழ் நூற்கருத்துக்கள் பலவும் வடமொழியிலிருந்து கொள்ளப்பட்டன  என வேற்றவர்க்கு விளம்பி வடமொழியே தமிழ் முதலிய மொழிகட்குத் தாய்மொழி எனப் பொய்ப்பறை சாற்றலாயினர்; உண்மை தெரியாத மக்கள் அவர் கூறுவனவற்றை மெய்யெனெவே கருதுவாராயினர். இவ்வியல்பால் பண்ணியினது மலையாகிய பண்ணிமலையை ‘‘வராகமலை’’ என மொழிபெயர்த்துரைத்தனர்இன்று பலரும் அதனை வராகமலை யெனவே கூறுகின்றார்கள். கோடைப்பொருநனது கோட்டுமாவைப் பண்ணியென்பான் தொலைத்த வரலாறு பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. கோட்டுமா, யானை ‘‘கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே’’ எனப் பிறரும் கூறுதல் காண்க (ஔவை சு.பக்.294-295).

          இவ்வுரைக்கருத்து பாடலில் அமைந்த தொல்வரலாற்றைத் தெளிவு படுத்துவதாக அமைகின்றது எனக் கூறுவதைக் காட்டிலும் வரலாறு பொதிந்த பாடத்தை ஔவை சு.துரைசாமிப்பிள்ளை தெரிவு செய்து நற்றிணையைப் பதிப்பித்துள்ளார் எனக் கருதுதலே பொருத்தமானதாகும். பாடலில் அமைந்த வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுதல் என்பதும் அதனைப் பிற சான்றுகளோடு ஒப்பிட்டு வரலாற்றுத் தொடர்ச்சியினை நிறுவுதல் என்பதும் ஓர் ஆய்வுப்பண்பாடு. அதனை மிகுந்த கவனத்துடன் செய்துள்ளார் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை. அதேநேரத்தில் தான் சார்ந்திருந்த தனித்தமிழியக்கப் பின்புல வெளிப்பாடான சமற்கிருத எதிர்ப்பினையும் காணமுடிகின்றது. ஆக, பாடத்தேர்வு என்பது சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியனவற்றை ஒப்பிடுதல் என்பதளவிலும் குறிப்பிட்ட பாடம் சங்க இலக்கியங்களின் பிறவிடங்களில் பெரும்பான்மை பயின்று வருகின்றது என்ற வரையரையோடும்  நில்லாமல் வரலாற்றுப் பின்புலத்தைத் தக்க சான்றுகளோடு தொடர்புபடுத்திக் காணுதல் என்பதிலும் முன்னிற்கின்றது. இதன் மூலமாக வரலாறு மாற்றுக்கண்ணோட்டத்தோடும் மறுவாசிப்போடும் நுணுகி ஆராயப்பெறுதல் வேண்டும் என்பது உணரப்பெறுகின்றது. பண்டுதொட்டு இங்கு வழங்கப்பெறும் ஊர்ப்பெயர்களும் இடப்பெயர்களும் வரலாற்று அடிப்படையிலானவை என்பதை உணருவதோடு சங்க இலக்கியப் பிரதிகளில் அமைந்த பாடங்களும் பாடவேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பெறுதல் வேண்டும் என்பதும் அறியப்பெறுகின்றது. ஒவ்வொரு சங்க இலக்கியப் பிரதிகளுக்குள்ளும் மிகுதியான பாடவேறுபாடுகள் உரைவேறுபாடுகள் அமைந்துள்ளமையால் அவையனைத்தும் வரலாற்றுப் பின்புலத்தோடும் காரணகாரியத் தொடர்புகளோடும் உற்று நோக்கப்பெறுதல் வேண்டுமென்பதோடு பிரதிக்கு வெளியே அமைந்த சான்றுகளையும் நுணுகியாராய்தல் வேண்டும் என்ற கருத்தும் மேலெழுகின்றது. இவ்வகையிலான வரலாற்றெழுதுதலில் பாட, உரைவேறுபாடுகள் முன்னிற்கின்றன. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை குறிக்கும் பண்ணி என்ற மன்னனின் வரலாற்றினைக் கொங்குச் சேரர்கள் ஆண்ட பகுதிகளான ஈரோடு, கோயமுத்தூர் பகுதிகளில் அமைந்த ஊர்ப்பெயர்களோடு ஒப்பிட்டு நோக்க முடியும். இன்றும் கொங்குப்பகுதிகளில் பண்ணிமடை, பண்ணியூர் முதலான ஊர்ப்பெயர்கள் வழங்கப்பெற்று வருகின்றன. கோடைப் பொருநன் ஆண்ட கோடைமலையும் பண்ணி என்பவன் ஆண்ட பண்ணி மலையும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன. கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணியூர், பண்ணி மடை முதலியனவும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் அமைந்த ஊர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. பண்ணி என்பதைப் பேச்சு வழக்கில் பன்னி (பன்றி) என்றாக்கி, பிறகு நாகரிகப்படுத்தம் என்ற பெயரில் வராகமலை எனச் சமற்கிருதமயமாக்கம் செய்யப் பெற்ற வரலாற்று மோசடியை இப்பாடவேறுபாட்டின்வழி நாம் அடையாளம் காணவில்லையெனில் தவறான வரலாறே வழங்கப்பெற்று வந்திருக்கும். பொருநனுக்குரிய மலை பெருமாள்மலை எனத் திரிக்கப்பெற்றதும் அவ்வாறானதேயாகும். இவ்வாறாக ஊர்ப்பெயர்களில் அமைந்த சமற்கிருதமயமாக்கலை ஆய்வுசெய்யத் தொடங்குவோமேயானால் அதுவொரு மிகப்பெரிய ஆய்வுக்களம் என்பது பெறப்படும்.

மலையமா ஊர்ந்துபோகி புலையன்    (நற்.77)

என்ற பாடத்தைக் கொண்ட பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ‘மலை போன்ற யானை மீதேறி’ என  உரை கொண்டுள்ளார். இப்பாடத்தை ஏற்றுக்கொண்ட புலியூர்க்கேசிகன் ‘மலையமான் தன் குதிரை மீது அமர்ந்தானாகச் சென்று’ என உரை கொண்டுள்ளார். பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் கொண்ட பாடத்திற்கும் உரைக்கும் மாற்றாக ஔவை சு.துரைசாமிப்பிள்ளை பின்வரும் பாடத்தையும் உரையினையும் ஏற்கின்றார்.

மலையன் மாவூர்ந்து போகி புலையன் (நற்.77) ­-  ‘தேர்வண் மலையன் என்பான் தன் களிற்றின் மேல் இவர்ந்து போய்’.

பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தன் பதிப்பிலமைந்த பாடப்பட்டோர் வரலாற்றுப் பகுதியிலும் நற்றிணையின் பிறிவிடங்களிலும் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றினைத் தெளிவான சான்றுகளுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றார். அக்கருத்து வருமாறு:

இவன் அரசாளும் நாளில் ஆரியர் பெரும் படையோடு வடக்கிலிருந்து தமிழ்நாடு புகுந்து திருக்கோவலூரை முற்றினார். அது கண்ட காரி அஞ்சாது எதிர்த்துப் போர் செய்ய அவர் ஆற்றாராய்ப் பின்வாங்கி ஓடலாயினர். ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையன் தொருவேற் கோடியாங்கு’(நற்.170)

இவ்வாறு இவன் வெற்றி மேன்மேலெய்தக் கண்ட தகடூர் அதிகமானெடுமானஞ்சி படையொடு வந்து கோவலூரை முற்றிக் காரியைத் தோற்கச் செய்து ஓட்டிவிட்டு இவனது நாட்டினைக் கைப்பற்றிக்கொண்டான். தோற்றோடிய காரி பெருஞ்சேரலிரும்பொறையை யடைந்து அவன் கருத்துப்படிக் கொல்லிமலையை யாண்ட  வல்வில்லோரியைப் போரிலே கொன்று அவ்வோரியினது நாட்டைச் சேரலாதனுக்குக் கொடுத்துவிட்டு அவனை அஞ்சிமேற் அஞ்சியைக் கொன்று போக்கி அவன் கைப்பற்றியிருந்த கோவலூர் நாட்டைக் காரியிடம் கொடுத்தான். அவன் அதனைப் பெற்று முன்பு போல் ஆண்டிருந்தான்.

மேற்கூறிய வரலாற்றின் மீதிப்பகுதியைப் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அஞ்சி என்ற மன்னனுடைய வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது விரிவாகக் கூறுகின்றார் (காண்க.பக்.83-84 பாடப்பட்டோர் வரலாறு). இவ்வளவு வரலாற்றையும் தெளிவாக விளக்கும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய பாடத்தைத் தெரிவு செய்யாமை வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஔவை சு.துரைசாமிப்பிள்ளையும் புலியூர்க்கேசிகனும் மலையமானின் வரலாற்றினைத் தெளிவாக்கியிருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பாடத்திலும் உரைக்கருத்திலும் கருத்துவேறுபாடு அமைந்துள்ளது. ஔவை சு.துரைசாமிப்பிள்ளையின் சிறப்பு விளக்கப்பகுதி வருமாறு:

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருத காலத்தில், போரைக் கடைபோகச் செய்யமாட்டாது சோழன் தளர்ச்சியுற்றானாக, தேர்வண் மலையன் சோழற்குத் துணையாய்க் களிறூர்ந்து சென்று இரும்பொறையின் அருங்குறும்பை அழித்துச் சோழற்கு வெற்றி தந்த செய்தி ஈண்டுக் குறிக்கப்படுகின்றது. தேர்வண் மலையன் தென்பெண்ணைக் கரையிலுள்ள திருக்கோவலூரில் இருந்து அதனைச் சூழவிருந்த நாட்டைக் காவல் புரிந்த குறுநில மன்னன்; அவனது நாட்டை மலாடு என்றும் , அவனை மலாடர் கோமான் என்றும் கூறுவர். மலையன் நாடு மலாடு என மருவிற்றென்பர். அவன் வழிவந்தோர் மலையமான்கள் எனப்பட்டு  இடைக்காலச் சோழர் பாண்டியர் காலத்தும் இருந்து மறைந்தனர்; அவர்களிற் பிற்காலத்தோர் கிளியூர் மலையமான்கள் எனப்பட்டமை அத்திருக்கோவலூர்ப் பகுதியில் காணப்படும் கல்வெட்டுகளால் தெரிகிறது. மேலே குறித்த போரின்கண் மலையமான் கொற்றத்தை வியந்த சான்றோர், அவனைச் சோழமன்னன்வெலீ இயோன் இவன்எனவும், தோல்வி எய்திய சேரமான், ‘விரைந்து வந்து சமரம் தாங்கிய வல்வேல் மலைய னல்லனாயினான், நல்லமர் கடத்தல் எளிதுமன் (நமக்கெனத் தோற்றோன் தானும் நிற்கூறும்மே) எனவும் புகழ்ந்துள்ளனர்.

மலையன் களிறு ஊர்ந்து இரும்பொறையின் களிறுகளைக் கொன்று குவித்தமையின் மலையன் மாவூர்ந்து போகி என்றார். மா குதிரையுமாம். ஆயினும்குன்றத்தன்ன களிறு பெயரக் கடந்தட்டு வென்றோன்என்று மேற்காட்டிய புறப்பாட்டே கூறுதல் காண்க (பக்.302-303).

என விரிவான வரலாற்றுப் பின்புலத்தோடும் தொல்லியல் சான்றுகளோடும் எடுத்துக் காட்டி நிறுவியுள்ளார். புலியூர்க்கேசிகன் ‘மலையமான் தன்குதிரை மேல் அமர்ந்து சென்று’ என உரை கொண்டுள்ளார். மலையமானின் குதிரை பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியங்களில் உண்டு.

காரிக்குதிரை காரியொடு (சிறுபாண்.95,110)

என இலக்கியச் சான்றிலும் மலையமானின் முத்திரை குதிரை என்பது தொல்லியல் சான்றிலும் கிடைத்துள்ளது. நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி மலையமானின் நாணயங்கள் சிலவற்றைக் கண்டறிந்துள்ளார். அந்நாணயத்தின் ஒருபுறம் குதிரை முத்திரையும் மறுபுறம் மலையமானின் மார்புருவத் தோற்றமும் பொறிக்கப் பெற்றுள்ளது. கூடுதல் தரவாகக் குதிரையின் முகத்திற்கு மேலே மலையமான்எனத் தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்துகளில் எழுதப் பெற்றுள்ளது. சில நாணயங்களில் குதிரை உருவமும் மறுபுறத்தில் இரண்டு மலைகளின் நடுவே ஆறு ஒன்று இறங்கிவரும் தோற்றமும் காணப்பெறுகின்றன. நாணயங்களில் காணப்பெறும் இரு மலைகளின்  தோற்றத்தை இரா.கிருஷ்ணமூர்த்தி மலையமான் எனக் கொள்கின்றார். மலையமான் தனது யானைப்படை கொண்டு சோழர்க்கு உதவியிருந்தாலும் அவனது ஊர்தியும் முத்திரையும் குதிரை என்பது சான்றுகளின்வழித் தெளிவாக அறியப்பெறுகின்றது. இங்கு ஔவை சு.துரைசாமிப்பிள்ளையின் பாடமும் உரையும் பொருத்தமானதாக அமைந்திருந்தாலும்  புலியூர்க்கேசிகனின் உரை மேற்கூறிய சான்றுகளுக்குப் பொருத்தமானதாக அமைகிறது. புலியூர்க்கேசிகன் தனது நூலாக்கத்திற்குப் பயன்கொள்ளப்பெற்ற பதிப்புகள் குறித்து  முகவுரையில் குறித்திருப்பினும் இவ்வுரைத் தேர்விற்கு எப்பதிப்பின் பாடத்தையும் உரையினையும் சான்றாதாரமாகக்  கொள்கின்றார் என அறிய இயலவில்லை.

ஆக, ஒரு சமூகத்தின் வரலாற்றெழுதுதலில்  சங்க இலக்கியப் பிரதிகள், பாட உரைவேறுபாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் என்னவென்பதும் பாட உரைவேறுபாடுகளை முன்வைத்து நாம் செய்யவேண்டிய ஆய்வுக்களங்கள் இன்னும் எவ்வளவு உள்ளன என்பதும் இவ்வாய்வுரையின் வழிப் பெறப்படுகின்றது. மேலும் நற்றிணையின் பதிப்பாசிரியர்கள் தங்கள் பதிப்பிற்கு முதன்மையாகக் கொண்ட சுவடிகள், ஏனைய சுவடிகளைப் புறந்தள்ளியமைக்கான காரணங்கள், அதிலமைந்த பாடங்களின் தெரிவுமுறைமை ஆகியன விரிவான விவாதத்திற்கும் ஆய்விற்கும் உரியன. இவ்வாய்வுத்தேடல் பாடத்தெரிவு முறைமையில் இயற்கையாகவே சில கேள்விகளை முன்னெழுப்புகின்றன. மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றுப் பின்புலத்தை விரித்தும் தேவையான இடங்களில் இணைத்தும் விரிவாகத் தன் பதிப்பில் பேசும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் நற்றிணையின் 75ஆம் பாடலில் அமைந்த மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றைப் பேசாமைக்கு என்ன காரணம்? மலையமானின் வரலாற்றுக் குறிப்பமைந்த பாடத்தையும் சுவடியையும் ஏற்காமைக்குக் காரணம் என்ன? ஒருவேளை நாராயணசாமி ஐயருக்கு வரலாற்றுக் குறிப்பமைந்த அச்சுவடி கிடைக்கவில்லையா? பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயருக்குக் கிடைக்காத சுவடி ஔவை சு.துரைசாமிப் பிள்ளைக்குக் கிடைத்ததன் பின்னணி யாது? ஔவை சு.துரைசாமிப்பிள்ளை தனக்குப் புதியதாகக் கிடைத்தது எனக் குறிக்கும் டொம்மிச்சேரி கருப்பையா தேவர் ஏடு, புதுப்பட்டி சிவ.முத்தையா செட்டியார் ஏடு ஆகியனவற்றில் மலையமானின் வரலாறு குறித்த பாடம் அமைந்திருப்பின் நற்றிணையின் தொலைந்துபோன 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் பிற்பகுதியும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயரின் முதற்பதிப்பிலுள்ளவாறே விடுபட்டும் குறைப்பாடலாகவும் அமைந்திருப்பது மிகுந்த ஐயத்தை ஏற்படுத்துவனவாக அமைகின்றது. அப்படியென்றால் ஔவை சு.துரைசாமிப்பிள்ளைக்குக் கிடைத்த ஏடு பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தம் பதிப்பிற்குப் பயன்கொண்ட மூல ஏட்டின் வழி ஏடா? வழி ஏடாக அமைந்திருப்பின் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றைப் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர்  குறிக்காமல் விட்டுச் செல்வதற்கு என்ன காரணம்? இப்படியான பல கேள்விகள் நற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக நம்  முன்னே விரிகின்றன.

துணை நின்றவை

*கிருஷ்ணமூர்த்தி இரா., 2005 (ம.ப.), சங்ககாலச் சேரநாணயங்கள் கண்டுபிடிப்பு சில வரலாற்றுச் செய்திகள், கார்னெட் பப்ளிகேஷன், சென்னை.

*கிருஷ்ணமூர்த்தி இரா., 2010 (ம.ப.), சங்ககால மலையமான் நாணயங்கள், கார்னெட் பப்ளிகேஷன், சென்னை.

*துரைசாமிப்பிள்ளை சு., 1966 (மு.ப.), நற்றிணை மூலமும் விளக்கவுரையும், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

*நாராயணசாமி ஐயர் அ., 1915 (மு.ப.), எட்டுத்தொகையுளொன்றாகிய நற்றிணை, சைவவித்யாநுபாலனயந்திரசாலை, சென்னை.

*புலியூர்க்கேசிகன், 1967 (மு.ப.), நற்றிணை, பாரிநிலையம், சென்னை.

*விநாயகமூர்த்தி அ., 1995 (மு.ப.), மூலபாட ஆய்வியல், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

முனைவர் க.பாலாஜி,

தமிழ்-உதவிப்பேராசிரியர்,

மொழிப்புலம்,

கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி,

கோவைப்புதூர்,

கோயம்புத்தூர்-641 042.