தொல்காப்பியம் உருவானதன் பின்புலம்

தமிழ் இலக்கண வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த பனுவலாகவும், தொன்மைத் தன்மை உடைய பனுவலாகவும் இன்றுவரை நிலைபெற்றிருப்பது தொல்காப்பியமாகும்.தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்னதான தரவுகள் என்பது இன்று முழுமையற்ற தன்மையில் இருக்கக்கூடிய நிலையில் தொல்காப்பியம் யாருக்காக எழுதப்பட்டது? எதற்காக எழுதப்பட்டது? என்ற கேள்வியைப் பலரும் முன்னிலைப்படுத்தி அது குறித்த விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

வரலாற்றுப் பார்வையுடனும், மொழியையும் இலக்கியங்களையும் பன்முகத் தளங்களில் ஆராய்ந்தும் எழுதப்பட்டுள்ள தொல்காப்பியம் ஒரு நீண்ட காலத் தமிழ்ச் சமூகத்தின் ஆவணம் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. தொல்காப்பியர் வகுத்தளித்த பல இலக்கணக் கூறுகளுக்குத் தரவுகளையும் சான்றுகளையும் தேடித் தேடி ஓய்ந்துபோன உரையாசிரியர்தம் கூற்றுகளின் வழியே தொல்காப்பியத்தின் தொன்மையை மதிப்பிட்டறிந்து கொள்ளமுடியும்.

இன்றைக்குத் தொகுக்கப்பட்டு நம் கையில் கிடைக்கின்ற பாட்டும் தொகையுமான பனுவல்களைக் கடந்து ஒரு மாபெரும் இலக்கிய இலக்கணப் பரப்பை நுண்ணிதின் மதிப்பிட்டறிந்து தமது தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் வகுத்தளித்துள்ளார் என்பதை அவரின் இலக்கண உருவாக்க முறையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரும் தொல்காப்பியத்திற்குப் பின்னரும் வரலாற்றில் மறைந்து போன இலக்கண நூல்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இத்தனை நூல்களும் மறைந்து போனதற்குக் காரணங்கள் பலவாக இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை காலம் கடந்து வந்ததற்கும் காரணங்கள் பல உண்டு. தொல்காப்பியத்தின் தொடர்ச்சியான பயணங்களையும் அப்பயணங்களின் வழியாக அந்நூல் அச்சுவாகனமேறிய வரலாற்றையும் பல படிநிலைகளில் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொல்காப்பியத்தைப் பின்பற்றிய வழிநூலாசிரியர்கள்

தமிழ் இலக்கண வரலாற்றில் முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மரபில் தொல்காப்பியம் அகத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட வழிநூல் என்று கூறப்பட்டது. அகத்தியம் இன்றுவரை கிடைக்காத நூலாக இருப்பதாலும் தொல்காப்பியத்திற்கு முன்னர்த் தோன்றிய வேறுபல நூல்கள் பற்றிய தரவுகளை அறிய இயலாததாலும் தொல்காப்பியமே இன்று நமக்கு முதல்நூலாக விளங்குகின்றது. இத்தன்மையில் இருக்கக்கூடிய தொல்காப்பியத்தின் வழிநூல்களாக இன்று ஏராளமானவற்றைச் சுட்டமுடியும். தொல்காப்பியத்திலிருந்து மாற்று மரபை முன்வைத்த இலக்கண ஆசிரியர்கள்கூட தொல்காப்பியரின் இலக்கணக் கூறுகளைப் பல இடங்களில் உள்வாங்கியே தமது இலக்கண நூல்களை உருவாக்கியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இத்தகைய வழிநூலாசிரியர்களே தொல்காப்பிய வாசிப்பு மரபில் முதன்மை இடம்பெறத்தக்கவர்கள் என்பதைச் சுட்டிச்சொல்ல முடியும்.

தொல்காப்பியம் தமிழ் மொழியின் அமைப்பையும், தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியலையும் செறிவான தன்மைக்குள் முழுமையாகப் பிரதிபலித்ததால் பின்வந்த இலக்கணிகள் பெரும்பாலும் தொல்காப்பிய இலக்கணத்தை அடியொற்றியே தமது இலக்கண நூல்களை வகுத்தனர். இறையனார் களவியல், நன்னூல், நேமிநாதம், இலக்கணவிளக்கம் முதலிய இலக்கண நூல்கள் தொல்காப்பியரின் இலக்கணத்தைப் பெரிதும் தழுவியவை. வேறுபிற இலக்கண நூல்கள் தொல்காப்பியரின் கருத்தை அடியொற்றியவை. இவ்விலக்கண நூலாசிரியர்கள் தொல்காப்பியத்தை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தியவர்களில் முக்கியமானவர்கள்.

வழிநூலாசிரியர்கள் தொல்காப்பியரின் கருத்துகளை அப்படியே தழுவிக் காலமாற்றத்திற்கேற்றவாறு சிற்சிலவற்றை உள்நுழைத்துத் தமது நூல்களை உருவாக்கியும், தொல்காப்பியரின் இயல்களைத் தனி நூலாக்கியும், அவரின் கருத்துகளைப் பின்பற்றியும் தமது இலக்கண நூல்களை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண உரையாசிரியர்கள்

இலக்கண வழிநூல்களைப் போலவே இலக்கண உரைகளும் தொல்காப்பிய வாசிப்பில் முக்கிய இடம்பெறுகின்றன. இறையனார் களவியல் உரையாசிரியர் தமது உரையில் மூன்று சங்கங்கள் குறித்துக் கூறுமிடத்துத் தொல்காப்பியத்தை இடைச்சங்க நூலாகவும் கடைச்சங்க நூலாகவும் குறிப்பிடுவதோடு தொல்காப்பியரைப் பல நிலைகளில் மேற்கோள் காட்டித் தமது உரையினை வகுத்துச் சென்றுள்ளார்.

யாப்பருங்கல நூலாசிரியர் காக்கைபாடினியத்தை முதல்நூலாகக் கொண்டு தமது நூலை எழுதியிருந்தாலும் அதற்கு உரை எழுதிய விருத்தியுரையாசிரியர் தொல்காப்பியரின் நூற்பாக்களையும், அவரின் யாப்பியல் கொள்கைகளையும் தமது உரையினுள் அதிகம் பின்பற்றியுள்ளார். இவர் தம் உரையினுள் தொல்காப்பிய நூற்பாக்களையே எண்ணிக்கையளவில் அதிகளவு பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உரையின் மூலம் இன்றைய நிலையிலிருந்து நோக்கும் போது தொல்காப்பிய காலத்திற்குப் பிறகு இடைக்காலத்தில் வாசிப்புக் குன்றியிருந்த தொல்காப்பிய வாசிப்பின் எழுச்சியை இவரின் உரைமூலமே அறியமுடிகிறது. இவரது உரையைப் பின்பற்றி எழுதப்பட்டிருந்த யாப்பருங்கலக்காரிகை உரையும் தொல்காப்பியப் பயன்பாட்டை முன்னிலைப்படுத்துகிறது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள்

யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை அவற்றிற்கு எழுந்த உரைகள் என்பதைத் தொடர்ந்து தொல்காப்பியத்திற்கான இளம்பூரணர் உரை கிடைக்கின்றது. தமிழ் இலக்கண நூல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகளைப் பெற்றவை (19ஆம் நூற்றாண்டிற்கு முன் வரை) தொல்காப்பியமும், நன்னூலுமே ஆகும். தொல்காப்பியம் அதிக உரைகளைப் பெற்றதற்கு அது வரலாற்றில் பெற்ற இடம், நன்னூல் அதிக உரைகளைப் பெற்றதற்கு அது பாடம் சொல்லல் முறையில் பெற்ற இடமுமே ஆகும்.

தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்டுக் கிடைக்கக்கூடிய உரைகளில் முதல் உரையாக இன்று இருப்பது இளம்பூரணர் உரையே. இவ்வுரையைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் வரை சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர், பெயரறியப்படாத உரைகாரர் ஆகியோரின் உரைகள் கிடைக்கின்றன. இந்த ஏழு உரையாசிரியர்களும் தொல்காப்பிய வாசிப்பு மரபில் இன்றியமையாத இடம்பெறக்கூடியவர்கள்.

வழிநூலாசிரியர்கள், பிற இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் ஆகியோரைத் தொடர்ந்து வரக்கூடிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் தொல்காப்பிய நிலைபேற்றில் குறிப்பிடத்தக்கவர்கள். ஆய்வு நிலையிலும் வரலாற்று நிலையிலும் சமூகவியல் நிலையிலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ள இவர்களின் உரைகள் ஒரு காலகட்டத்தின் தொல்காப்பிய வாசிப்பு மரபின் பன்முகத்தளங்களை முன்னிறுத்துகின்றன.

இவர்கள் அனைவரும் மாறுபட்ட விளக்கங்களை அளித்தும் ஒருவரை ஒருவர் மறுத்தும் தமது உரைகளை வகுத்திருந்த போதிலும் தொல்காப்பியரின் இலக்கண உருவாக்க முறையை எவ்விடத்திலும் கேள்விக்குட்படுத்தவில்லை. தொல்காப்பியத்திற்குப் பிறகு வளர்ச்சிபெற்ற பிற்கால மரபுகளைத் தொல்காப்பியத்தின் கருத்துகளோடு வைத்து விவாதிப்பதோடு அவற்றை விலக்கியும் நீக்கியுமே சென்றுள்ளனர்.

இளம்பூரணரும் சேனாவரையரும்

தொல்காப்பிய உரைகளுள் கிடைப்பனவற்றுள் முதல் உரை, காலத்தால் முந்திய உரை, முழுமையான உரை, படிப்பதற்கு எளிமையான உரை என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உரையாக இளம்பூரணர் உரை காணப்படுகின்றது.இளம்பூரணர் தொல்காப்பியத்தைத் தம் சமகால வாசிப்பிற்கேற்றவாறு அணுகியிருப்பது அவரது உரையின் தனிச்சிறப்பு.

இளம்பூரணரைப் போல சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதிய வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையரும் தம் சமகால வாசிப்பின் அடிப்படையில் தொல்காப்பியத்தை அணுகித் தமது உரையினை வகுத்துள்ளார். இவரது உரை பிற உரைகளைப் பெரிதும் மறுத்து எழுதப்பட்டுள்ளது. இளம்பூரணரின் உரையை மறுத்து இவர் எழுதிய இடங்களுள் பல குறிப்பிடத்தக்கவை.

பேராசிரியர்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின்னான்கு இயல்களுக்கான பேராசிரியர் உரை, தொல்காப்பியத்தின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றுகின்றது. இறையனார் களவியல் உரைக்குப் பிறகு அவ்வுரை உருவாக்கிய சிந்தனைப் பின்புலத்தின் தொடர்ச்சியாகப் பேராசிரியர் தமது உரையினை எழுதிச் சென்றுள்ளார்.

இறையனார் களவியல் உரைகாரர் கூறும் சங்கம் பற்றிய கருத்தாக்கங்களை அவைதிக உரையாசிரியர்களான விருத்தியுரைகாரர், காரிகையுரையாசிரியர், இளம்பூரணர், பெருந்தேவனார் ஆகியோர் பெரிதும் கவனத்தில் கொள்ளாத நிலையில் பேராசிரியர் அவை சார்ந்த செய்திகளைத் தம் உரைமுழுவதும் பயன்படுத்திச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வைதிகப் பின்புலத்தை உடைய பேராசிரியர் களவியல் உரையில் இடம்பெறும் மூன்று சங்கங்களைத் தம் உரையில் பெரிதும் பதிவுசெய்வதோடு அவற்றில் தலைமைப் பனுவல்களை உருவாக்கிய அகத்தியரையும் தொல்காப்பியரையும் பலவிடங்களில் இணைத்தும் குறிப்பிட்டும் சென்றுள்ளார்.

இளம்பூரணர், சேனாவரையர் முதலியோர் தொல்காப்பியத்தைத் தம் காலத்திற்குத்தக கொண்டு வர முயற்சி மேற்கொள்ள, பேராசிரியர் தொல்காப்பியரின் காலத்திற்கு மிக அருகாமையில் சென்று அதற்கான உண்மை உரையை இனங்காண வேண்டும் எனப் பெருமளவு முயற்சி மேற்கொள்கிறார். இதனாலேயே பெரிதும் மறுப்புரையை உரையினுள் கவனப்படுத்தாது செல்லும் இலக்கண உரையாசிரியர்களுக்கு மத்தியில் தொட்ட இடங்களிலெல்லாம் நூலாசிரியர் கருத்திற்கு முரணாகச் செல்லும் பிற்காலக் கருத்தியல்களை மறுத்துத் தம் உரையினைப் பேராசிரியர் வகுத்துச் சென்றுள்ளார்.

தொல்காப்பியத்திற்கு மேற்கோள் காண்பிக்கும்போது சங்க இலக்கியங்களிலிருந்தும் சான்றோர் இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள் காட்ட வேண்டும் என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறார். இளம்பூரணர் தொல்காப்பியத்தை ஓர் இலக்கணப் பனுவல் என்ற நிலையில் அணுக பேராசிரியரோ அதை ஓர் வரலாற்றுப் பனுவல் என்ற தன்மைக்குள் கொண்டு செல்கின்றார்.

நச்சினார்க்கினியர்

பேராசிரியரைத் தொடர்ந்து தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், உரை எழுதிய தன்மையில் வெவ்வேறு நிலையைப் பின்பற்றியிருந்தாலும் பாயிர விளக்கம் தருமிடத்துப் புதியதொரு தன்மையைக் கட்டமைக்கின்றார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லப்பட்டு வந்த அகத்தியர் – தொல்காப்பியர் உறவு (இறையனார் அகப்பொருள் உரை கூறும் மூன்று சங்கங்களில் அகத்தியம், தொல்காப்பியம் இடம்பெறல் (இறையனார் அகப்பொருள்,1969:5), பல்காப்பியம் புறனடைச் சூத்திரம், பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பாயிரச் செய்திகளை அடியொற்றிப் பேராசிரியர், அகத்தியர் வழித்தோன்றிய ஆசிரியரெல்லாருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்பது(தொல்காப்பியம், மரபியல், பேராசிரியர் உரை, 1985, நூற்பா-96) என்று குறிப்பிடுகிறார்) நச்சினார்க்கினியர் பாயிர விளக்கம்வழி வேறொரு நிலையினை அடைந்தது. பனம்பாரனார் வகுத்த பாயிர மரபிலிருந்து தொல்காப்பியம் சார்ந்த உரையாடலை மாற்றுப்பாதையில் வகுத்தளிக்க முயன்றுள்ளார் நச்சினார்க்கினியர்.

இம்முயற்சி அக்காலச் சூழலையொட்டி அவர் உருவாக்கிய ஒரு கதையாடல் மரபே என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடிகிறது. இக்கதையாடல் மரபை அவர் உருவாக்குவதற்குக் காரணம் அவரின் வைதீகச் சார்பே ஆகும்.

முன்னையோர்களின் சிந்தனைப்போக்கை உள்வாங்கும் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பாயிரவுரையில் பாயிரத்திற்கான விளக்கத்தோடு அகத்தியருக்கும் தொல்காப்பியருக்குமான இணைவைக் கதை வடிவில் உருவாக்குகிறார். தமது வைதீகப் பின்புலத்தின் அடிப்படையில் தொல்காப்பியத்தின் தனித்தன்மையை நிலைநிறுத்தவும் தொல்காப்பியரைக் காலத்தின் தேவைகருதி வைதீகப் பின்புலத்தில் கட்டமைக்கவும் நச்சினார்க்கினியர் மேற்கொண்ட முயற்சிகள் அக்காலத்தில் தொல்காப்பியப் பனுவல் வைதீக அடிப்படையில் கைக்கொள்ளப்பட்ட செயல்பாட்டை முன்னிறுத்துகிறது.

நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பிறகு அவைதீகச் சமயம் முடங்கிப்போக இவர் உருவாக்கிய கதை 20ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை தொல்காப்பியர் குறித்த வரலாறாகவே நம்பப்பட்டு வந்துள்ளது. (இதை மறுத்தவர் ஒரு குழுவாகவும், ஏற்றுக்கொண்டவர் ஒரு குழுவாகவும் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர்). இதில் நச்சினார்க்கினியர் குறிப்பிடும் ஜமதக்கினி, திரணதூமாக்கினி, அகத்தியர் மனைவியை அழைத்து வந்தது, அகத்தியர் சாபம், தொல்காப்பியர் சாபம் ஆகியவை இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டும், தேவையான அளவு புறந்தள்ளப்பட்டும் வந்திருந்ததே ஒழிய  முற்றிலுமாக  அவை  நிராகரிக்கப்படவில்லை.

நச்சினார்க்கினியரின் மூன்றதிகாரங்களுக்கான (உவமவியல், மெய்ப்பாட்டியல், மரபியல் நீங்கலாக) உரைகள் தொல்காப்பிய உரை மரபிலும் வாசிப்பு மரபிலும் தனித்துவம் பெற்ற உரைகளாக நிலைபெற்றிருப்பதை அறியமுடிகிறது.

தெய்வச்சிலையாரும் பிறரும்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் தெய்வச்சிலையார் உரை கிடைக்கின்றது. சொல்லதிகாரத்தை மாற்றுக்கண் கொண்டு அணுகிய உரையாக இவருரை உள்ளது. சொல்லதிகாரத்திற்குக் கிடைக்கக்கூடிய கல்லாடர் உரையும், பெயரறியப்படாத பழைய உரையும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் அதுவும் முழுமை இல்லாமலும் கிடைக்கின்றன. இவ்வுரைகள் முன்னை உரைகளின் தொடர்ச்சியாகவும், மாற்று கருத்துகளைச் சில இடங்களில் பதிவுசெய்தும் சென்றுள்ளன.

கி.பி. 11ஆம் நூற்றாண்டுத் தொடங்கி கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கின்ற தொல்காப்பிய உரைகள் அனைத்தும் இடைக்காலத் தொல்காப்பிய வாசிப்பு வரலாற்றின் பன்முகங்களை அடையாளப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய உரையாசிரியர்கள்

தொல்காப்பிய உரையாசிரியர்கள் தவிர்ந்த பிற உரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களைத் தமது உரைகளில் மேற்கோள் காட்டுவது போன்று சங்கஇலக்கியம் முதலான இலக்கிய நூல்களுக்கு உரைஎழுதிய இலக்கிய உரையாசிரியர்கள் தமது உரைகளிலும் தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டிச் செல்கின்றனர். இவர்களின் உரை வழியாகவும் அக்காலத்தில் இருந்த தொல்காப்பிய வாசிப்புத் தளத்தினை அறியமுடிகிறது.

இவ்விலக்கிய உரையாசிரியர்கள் மேற்கோள் என்ற பின்புலத்தில் தொல்காப்பியத்தைப் பயன்படுத்த நச்சினார்க்கினியரோ பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி முதலான இலக்கிய நூல்கள் தொல்காப்பியரின் சிந்தனையை அடியொற்றியே உருவாக்கப்பட்ட நூல்கள் என்று வாதிடுகிறார்.

இத்தொடர்நிலைச்செய்யுள் தேவர்செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும், தொல்காப்பிய முமாதலானும், முந்துநூல்கண்டு முறைப்பட வெண்ணி… என்றதனால் அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பியமாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையாலும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கணம் என்றுணர்க (சீவகசிந்தாமணி. பா.1. நச்.).

தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைக்கு நூலாகலின் அவர் சூத்திரப்பொருளாகத் துறை வேண்டும் என்றுணர்க (புறத். நூ. 35, நச்.).

என்ற கூற்றுகளின் வழியாக அறியமுடிகிறது. இக்கூற்றுகள் தொல்காப்பியத்திற்கும் அக்காலங்களில் தோன்றிய இலக்கிய நூல்களுக்கும் இடையே உள்ள உறவைப் பிணைத்து நிற்பதை அறியமுடிகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் தொல்காப்பியம்

தொல்காப்பிய வாசிப்பு வழிநூலாசிரியர்கள் தொடங்கி நச்சினார்க்கினியர் காலம் வரை மிக வீரியத்தோடு செயல்பட்டு வந்துள்ளதை அறியமுடிகிறது. நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பிறகும் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பும் தொல்காப்பிய வாசிப்பிற்குச் சில இலக்கண நூல்கள், சிவஞானமுனிவர் பாயிர உரை முதலியவற்றைத் தவிர வேறு பிற சான்றுகளைக் காட்டமுடியவில்லை. வேறு பிற சான்றுகள் என்றால் தொல்காப்பியம் முழுவதற்குமோ அல்லது அதிகாரங்களுக்கோ தனித்த உரைகள் எவையும் இக்காலங்களில் எழுதப்படவில்லை என்பதே ஆகும்.

இக்காலகட்டத்தில் சங்க இலக்கியப் பனுவல்கள் புறக்கணிக்கப்பட்டதால் *(சுவாமிநாத தேசிகர் அவர்கள்  இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டணத்துப் பிள்ளையார் பாடல் முதலிய இலக்கியங்களையும் ஓர் பொருளாக எண்ணாது நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன்கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஓர் பொருளாக எண்ணி வாணாள் கழிப்பர். அவர் இவைகள் இருக்கவே அவைகளை விரும்புதல் என்னெனின், பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது, வேறு பலவற்றை விரும்புதல் அவரது இயற்கை: என்று தமது இலக்கணக் கொத்து நூலில் எழுதியுள்ளார்) தொல்காப்பிய வாசிப்பும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொல்காப்பியக் கல்வி இருந்த நிலையை சி.வை.தாமோதரம்பிள்ளை தம் பொருளதிகாரப் (1885) பதிப்புரையில் பதிவுசெய்கின்றார்.

சென்னப்பட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின்எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லையென்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலுந் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடை யரானபோது பிறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச்செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்பமுதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனாலும், அது காரணமாக அவருக்குத் தொல்காப்பிய வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமையானும், பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம் (ப. தாமரைக்கண்ணன், சி.வை.தா. பதிப்புரைகளின் தொகுப்பு, ப. 144).

இக்கூற்றின் வழியாகத் தொல்காப்பிய வாசிப்பு மரபில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் தொடர்ச்சி பெற்றிருந்ததையும் பொருளதிகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. இக்காலகட்டத்தில் எழுத்து, சொல்லிலும் கூட நன்னூலும், இலக்கண விளக்கமுமே முதன்மை பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை சுவடி வழியாகப் பயணம் மேற்கொண்டு வந்த தொல்காப்பிய வாசிப்பு மரபின் பல்நிலைப்பட்ட தன்மைகளை அறிந்துகொள்ள முடிகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புச்சூழல்

தமிழில் தோன்றிய பல்வேறு மரபிலக்கணங்கள், இலக்கியங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் அச்சில் வெளிவரத் தொடங்கின. இந்தத் தொடக்க காலத்தில் பக்தி இலக்கியம், நீதி இலக்கியம், பிற்கால இலக்கண நூல்கள் முதலான நூல்களே பெரிதும் பதிப்பிக்கப்பட்டனவே தவிர தமிழின் தொன்மை இலக்கண இலக்கியங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

புதிய கல்விமுறை, ஆங்கிலேயர்கள் அந்தந்த மாநில மொழியைக் கற்றல், சம்பள உயர்வு, அச்சுக்கூடங்களின் வழியான புதிய வியாபாரம், பின்தள்ளப்பட்ட தொல் இலக்கண, இலக்கியங்களின் வாசிப்புமுறைமை இவை அனைத்தும் பழைய நூல்களை அச்சிலேற்றாமல் போயின.

இலக்கண நூல்களில் தொல்காப்பியமே காலத்தால் முந்தைய நூலாக இருந்தாலும் அச்சில் நிலைபெற்ற முதல் இலக்கண நூல் நன்னூலே ஆகும். அச்சில் நிலைபெற்றதோடு மட்டுமல்லாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதிக புதிய உரைகளையும், பதிப்புகளையும் பெற்ற நூலும் நன்னூலே.

நன்னூல் அச்சிடப்பட்டு 12 ஆண்டுகள் கழித்துத்தான் தொல்காப்பியம் முதன்முதலாக அச்சில் நிலைபெற்றது. அதுவும் முழுமை இல்லை, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரைதான் முதன்முதல் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியம் முதல் பதிப்பு (1847)

காலம் காலமாகச் சுவடிகளிலும் கல்வியாளர்கள், மாணவர்கள் மனப்பாடத் தன்மையிலும் பயணித்து வந்த தொல்காப்பியம் 1847ஆம் ஆண்டுதான் அச்சில் நிலைபெற்றது. அதுவும் முழுமை இல்லை. தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் உரை மட்டுமே முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

தொல்காப்பியம் முதன்முதல் அச்சில் நிலைபெற்றபோது நச்சினார்க்கினியர் உருவாக்கிய பாயிர மரபின் வழியே அதன் முகப்புப் பக்கம் வடிவமைக்கப்பட்டது. முகவுரை எழுதப்படவில்லை, சுவடியிலிருந்தவாறே உரைநடைத்தன்மையில் பதிப்பிக்கப்பட்டது. பார்த்துப் பதிப்பிக்கப்பட்ட சுவடிகள் பற்றிய விவரங்கள் இல்லை, முகப்புப் பக்கம்தான் முகவுரையாகத் தகவல்களை அளிக்கிறது. முதல் பதிப்பு இன்றைய நிலையில் ஒரு வரலாற்றுப் பதிப்பாக மட்டுமே உள்ளது. பயன்பாட்டுப் பதிப்பாக இல்லை. இப்பதிப்பை வெளியிட்ட மழைவை மகாலிங்கையர் அக்காலத்தில் சிறந்த தமிழ்ப்புலவர். யுனிவர்சிட்டியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதர். பல நூல்களைப் பதிப்பித்ததோடு சில நூல்களையும் எழுதியவர். அக்காலத்தைய வித்துவான்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவரால் இப்பதிப்புப் பதிப்பிக்கப்பட்டதாக முகப்புப் பக்கம் குறிப்பிடுகின்றது.

தொல்காப்பிய முதல் முழுமைப் பதிப்பு ( 1858)

மழைவை மகாலிங்கையர் பதிப்பைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கழித்துத்தான் தொல்காப்பியத்திற்கு முழுமையான பதிப்பு வெளிவருகிறது. இப்பதிப்பு முதல் மூலப்பதிப்பு, முதல் முழுமைப்பதிப்பு, முதல் ஒப்பீட்டுப்பதிப்பு என அனைத்துச் சிறப்புகளையும் பெற்ற பதிப்பாக அமைகின்றது. இப்பதிப்பை உருவாக்கியர் இ.சாமுவேல்பிள்ளை என்பவர், இப்பதிப்பு உருவாக்கத்திற்குத் துணைநின்றவர் வால்டர் ஜாயீஸ்.

நன்னூலே பாடத்திட்டத்திற்காகப் பெரிதும் அச்சிடப்பட்ட காலகட்டத்தில் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒப்பிட்டு இவர் அச்சிட்டதற்கான காரணம் நூல் எழுதக்கூடிய புதியவர்கள் இவை இரண்டையும் கற்று நூலெழுத வேண்டும் என்பதற்காக என்று முகப்புப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. சாமுவேல்பிள்ளை உருவாக்கிய இந்த ஒப்பீட்டுப் பதிப்பில் தொல்காப்பிய எழுத்ததிகாரம் – நன்னூல் எழுத்ததிகாரம், தொல்காப்பியச் சொல்லதிகாரம் – நன்னூல் சொல்லதிகாரம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பதிப்பித்ததோடு இறுதியாக அதுவரை பதிப்பிக்கப்படாத பொருளதிகாரத்தை  அனைவரும் அறியவேண்டிப் பதிப்பித்துள்ளார்.

இவர் முன்னுரை எழுதியிருந்தாலும் அம்முன்னுரையில் நச்சினார்க்கினியர் எழுதிய பாயிரக்கதையும், நன்னூலின் பாயிர விளக்கமும்தான் இடம்பெற்றுள்ளது. வேறு செய்திகள் இடம்பெறவில்லை. இளம்பூரணர் உரைப்படி மொத்த நூற்பாத்தொகை 1595, நச்சினார்க்கினியர்,  பேராசிரியர் இருவரின் ஒத்த கணக்குப்படி 1610 எனவும் எண்ணிக்கையை அறியமுடிகிறது. இவர்களின் பதிப்பில் இடம்பெற்றுள்ள நூற்பாக்கள்தான் சாமுவேல்பிள்ளை பதிப்பிலும் உள்ளன. ஆனால் எண்ணிக்கையோ 1583. சாமுவேல் பிள்ளையோ தொல்காப்பியச் சொல்லதிகாரத்திலும், பொருளதிகாரத்திலும் பலநூற்பாக்களை முன் நூற்பாக்களோடு சேர்த்தே பதிப்பித்துள்ளார். குறிப்பாகச் சொல்லதிகார உரியியலில் 99 நூற்பாக்களை 72ஆக ஒன்றுடன் இரண்டு மூன்று நூற்பாக்களையெல்லாம் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.

நூற்பா எண்ணிக்கை தரப்பட்ட முறையை நோக்கும்போது சாமுவேல் பிள்ளையிடம் பல்வேறு வகையான உரைச்சுவடிகள் இருந்திருக்கும். அதைக் கொண்டே அவர் இத்தகையதொரு பதிப்பினை உருவாக்கியுள்ளார் என்பதை ஊகித்தறிய முடிகிறது. ஆனால் சுவடிகள் குறித்த விவரங்களைச் சாமுவேல்பிள்ளை தமது பதிப்பில் எங்கும் பதிவுசெய்யவில்லை. நூற்பாக்கள் அடிஅமைப்பில் வகுக்கப்படாமல் அப்படியே பத்திஅமைப்பிலேயே அச்சிடப்பட்டுள்ளன. ஓர் அடிக்கு இருசீர் எனச் சந்தி பிரிக்கப்படாமல்       உள்ளதோடு ஓர் அடி முடிந்து அடுத்த அடி  தொடங்குவதைப் பகுத்துக்காட்டக் காற்புள்ளி இடப்பட்டுள்ளது.

பாடவேறுபாடுகள் தருவது குறித்த சிந்தனை மேலெழும்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சாமுவேல்பிள்ளையின் இப்பதிப்பில் பாடவேறுபாடு தந்திருப்பது போற்றுதற்குரியது. பாடவேறுபாடுகளை அடியில் தராமல் நூற்பாவின் இடையிலும், இறுதியிலும் பதிப்பாசிரியர் தந்துள்ளார். தொல்காப்பிய – நன்னூல் எழுத்ததிகாரத்திலும், சொல்லதிகாரத்திலும் ஆங்காங்கே சில பாடவேறுபாடுகள் இடம்பெற்றிருப்பினும் பொருளதிகாரத்தில் தான் எண்ணிலடங்காப் பாடவேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன.

இப்பதிப்பில் தொல்காப்பியம், நன்னூல் தவிர்த்துப் பிற இலக்கணப் பனுவல்களான இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என இன்னும் பல இலக்கணப் பனுவல்களும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளன. இலக்கணக்கொத்து (1886), இலக்கண விளக்கம் (1889) முதலிய நூல்கள் அச்சாகாத காலத்தில் அவற்றின் சுவடிகளைப் பயன்படுத்தி அதிலிருந்து பல்வேறு செய்திகள் இப்பதிப்பில் இடம்பெற்றிருப்பது இதன் தனிச்சிறப்பு.

தமிழ்மொழி இடம்பெற்ற அதே அளவில் ஆங்கில மொழியும் இடம்பெற்றுள்ளதோடு, வடமொழி மற்றும் தெலுங்குமொழி எழுத்துகளும், செய்திகளும் இப்பதிப்பில் உள்ளன.

தாம் வாழ்ந்த காலத்திற்கு முன்னர் வாழ்ந்த அறிஞர் பலரையும் நூல் முழுதும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுச் செல்வதோடு அவர்கள் செய்த பணிகளையும் நினைவுகூர்ந்து செல்வது பதிப்பாசிரியரின் நேர்மையைக் காட்டுகிறது.

 

ஒரே ஆண்டு, மூன்று பதிப்புகள் ( 1868)

சாமுவேல்பிள்ளை பதிப்பிற்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து ஒரே ஆண்டில் மூன்று பதிப்புகள் வெளிவந்தன. தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையத்திற்கு இரண்டு பதிப்புகளும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணத்திற்கு ஒரு பதிப்பும் ஆகும்.

இரண்டுமாத இடைவெளியில் சொல்லதிகாரச் சேனாவரையத்தை ஆறுமுகநாவலர் பரிசோதித்து சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பித்த பதிப்பும், கோமளபுரம் இராசகோபாலபிள்ளை பதிப்பித்த பதிப்பும் என இரண்டு பதிப்புகள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் ஒரே உரையாசிரியர் எழுதிய உரைக்கு இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டதற்கு ஆறுமுகநாவலருக்கும், வள்ளலாரின் சீடர்களுக்கும் இடையிலான போட்டியே காரணம் என்று சி.கணபதிப்பிள்ளை ஈழகேசரியில் (1950) விரிவானதொரு கட்டுரையை எழுதியுள்ளார்.

இதே ஆண்டில் எழுத்ததிகாரம் இளம்பூரணத்தைத் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் வெளியிட்ட பதிப்பு இளம்பூரணர் உரையை முதன்முதலாக அச்சுவடிவில் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பதிப்பு ஆகும். இம்மூன்று பதிப்புகளுக்கும் முன்னதாகச் சிவஞானமுனிவர் எழுதிய தொல்காப்பியச் சூத்திர விருத்தி 1866ஆம் ஆண்டு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885)

மேற்கூறிய மூன்று பதிப்புகள் வெளிவந்த பின்னர் 17 ஆண்டுகள் கழித்து சி.வை.தாமோதரம்பிள்ளை மீண்டும் தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்து வெளியிடுகின்றார்.

இப்பதிப்பு நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பு என்று சி.வை.தா.வால் பதிப்பிக்கப்பட்டாலும் முன் ஐந்து இயல்கள் மட்டுமே நச்சினார்க்கினியருடையது என்றும் பின்னான்கியல்கள் பேராசிரியருடையது என்று செந்தமிழ் இதழில் எழுதி நிரூபித்தவர் ரா.ராகவையங்கார் அவர்களே. இப்பதிப்பில் இவ்வகையான குழப்பம் இருப்பினும் முதல்முறையாக முறையான முன்னுரை எழுதப்பட்ட தொல்காப்பியப் பதிப்பாக இப்பதிப்பையே சுட்டமுடிகிறது.

சி.வை.தாமோதரம்பிள்ளை இப்பதிப்பு முன்னுரையில் அக்காலத்தில் தொல்காப்பியப் பதிப்பு உருவாக்கம் குறித்து விரிவான நிலையில் பதிவுசெய்துள்ளார்.

அங்ஙனமாயின் இவரினும் வல்லோராய் இன்னும் அநேக வழுக்கள் குறையப் பிரசுரஞ் செய்யத்தக்க வித்துவான்கள் இலரேவெனின், உளராயின் ஏன் செய்திலரென விடுக்க. பல பெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிடவிரும்பியதும், முயன்றதும், இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதுந், தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான் இதனை அச்சிடிற்றம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலாற் பண்டிதர் கவிராஜபண்டிதர் மஹாவித்துவான் புலவரென்றின பெரும் பட்டச் சுமையைத் தலைமேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்குரிமை பூண்டு நிற்கும் என்போலியரே இதிற் கையிடுவது பேரவசியமாயிற்று (ப. தாமரைக்கண்ணன், சி.வை.தா.பதிப்புரைகளின் தொகுப்பு, ப. 147).

பஞ்சகாவியம், பஞ்சலக்கியம் அகநானூறு புறநானூறு நற்றிணை கலித்தொகை குறுந் தொகை திணைமரபு செய்யுட்டொகை கல்லாடம் பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு பரிபாடல் தகடூர்யாத்திரை பெருந்தேவனார் பாரதம் பதினெண்கீழ்க்கணக்கு வெண்பாமாலையொன்று இன்னோரன்ன இலக்கியங்களும் புறப்பொருட் பன்னிருபடலம் வையாபிகம் வாய்ப்பியம் அவினயம் காக்கைபாடினியம் நற்றத்தம் வாமனம் பல்காயம் பல்காப்பியமென்று இன்னோரன்ன இலக்கணங்களும் முற்றக்கற்று வல்லோரே இந்நூலைப் பரிசோதித்தற்கு அருகராவர். அப்படிச் சிறந்துள்ளோர் தற்காலத்திலரென்பது யான் கூறவேண்டியதில்லை (ப. தாமரைக்கண்ணன், சி.வை.தா.பதிப்புரைகளின் தொகுப்பு, ப. 148).

இக்கூற்றுகள் தவிர்த்து வேறு பல இடங்களிலும் அவரின் பதிவுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புச்சூழலை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பதிப்பில்தான்   பதிப்பிக்கப் பயன்படுத்திய சுவடிகளின் விவரங்களும், அச்சுவடிகள் யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களும் முதன்முதல் பதிவுசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பதிப்பைப் பதிப்பிக்கப் பன்னிரண்டு சுவடிகள் இருந்தும் ஒரே ஒரு சுவடியில் கூட பேராசிரியர் உரை என்ற குறிப்பு இல்லையா? அல்லது சுவடிகளைப் பிரதி செய்தவர்கள் பேராசிரியர் உரையை நச்சினார்க்கினியர் உரையாகவே பிரதி செய்தார்களா? என்ற பல்வேறு கேள்விகள் இப்பதிப்பைப் பார்க்கும்போது எழுகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு நச்சினார்க்கினியர் உரை பரவலான வாசிப்பைப் பெற்றதால் இந்தச் சிக்கல் எழுந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்பதிப்பே சி.வை.தாமோதரம்பிள்ளை சங்க இலக்கியத்தில் முதன்முதலாகக் கலித்தொகையைப் பதிப்பிப்பதற்குக் காரணமாய் இருந்தது என்றே கூறலாம்.

சி.வை.தா.வின் இரு பதிப்புகள் (1891, 1892)

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பிற்குப் பின் சி.வை.தாமோதரம்பிள்ளை மழைவை மகாலிங்கையர் பதிப்பித்து வெளியிட்ட எழுத்ததிகார நச்சினார்க்கினியத்தை மீண்டும் பதிப்பித்து (1891) வெளியிடுகிறார்.

பிறர் பதிப்பித்ததைப் பதிப்பிக்காத சி.வை.தா. இப்பதிப்பை மறுபதிப்பு செய்வதற்குச் சில காரணங்களைச் சொல்கிறார் (மகாலிங்கையர் பதிப்பு தற்போது கிடைக்காததாலும், நச்சினார்க்கினியர் உரைப் பதிப்புகளின் முழுமை வேண்டியும் மறுபதிப்புச் செய்ததாகக் குறிப்பிடுகிறார்). மழைவை மகாலிங்கையர் பதிப்பித்த பதிப்பிலிருந்து இந்தப் பதிப்பு இன்னும் செம்மைப்படுத்தப்பட்ட பதிப்பாக வருகிறது, அதோடு மேலும் சில சுவடிகளைப் பயன்படுத்தி இப்பதிப்பை வெளியிடுகிறார். நூற்பா அமைப்பில் நூற்பாக்களும், உரை வேறோர் எழுத்தாலும் அச்சடிக்கப்பட்டதோடு பதிப்புரையிலும் இது குறித்துச் சுட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தொல்காப்பியச் சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரையையும் முதன்முதலாகப் பதிப்பித்துத் (1892) தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். சி.வை.தா.வின் இப்பதிப்பு எழுத்ததிகாரம் பதிப்பிக்கப்பட்ட அதே முறைமையிலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தில் விரிவான பதிப்புரை எழுதிய சி.வை.தா. இவ்விரு பதிப்புகளிலும் சுருக்கமாகவே எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்

எழுத்துக்கு இளம்பூரணம், சொல்லுக்குச் சேனாவரையம், பொருள் முதல் ஐந்து இயல்களுக்கு நச்சினார்க்கினியம், பின்னான்கியல்களுக்குப் பேராசிரியம் என்ற வாசிப்புப் பாரம்பரியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புச் சூழலில் இவை அனைத்தும் பதிப்பாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மரபில் சொல்லப்பட்டாலும் நச்சினார்க்கினியர் உரை முழுவதுமாக அச்சாகியிருப்பது கவனத்தில் (செய்யுளியல் தவிர) கொள்ளத்தக்கது.

அதற்குக் காரணம் இறுதியாக எழுதப்பட்ட பழைய உரை, பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வைதீக சமயம் மேலோங்கிய தன்மை, அவைதீக சமயங்கள் அறிவுத்தளத்தில் தங்களின் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டமை போன்ற காரணங்களால் நச்சினார்க்கினியர் உரை தொடர்ந்து வாசிப்பில் இருந்தமை ஆகியவையே ஆகும்.

நச்சினார்க்கினியருரையே பிற்காலத்தது. பூரணமாகவும் விரிவாகவும் உள்ளதும் பெரும்பாலும் ஓதிவரப் பெற்றதும் அஃதொன்றே (ப.தாமரைக்கண்ணன், சி.வை.தா. பதிப்புரைகளின் தொகுப்பு, ப. 143).

என்னும் கூற்று இதை உறுதி செய்கிறது. மழைவை மகாலிங்கையர் பதிப்பில் சுவடியிலிருந்தவாறே பதிப்பிக்கப்பட்ட பதிப்பு இறுதியாக சி.வை.தா. பதிப்பில் பல்வேறு மாற்றங்களை அடைந்தது குறிப்பிடத்தக்கது. பல பதிப்பாசிரியர்கள் தொல்காப்பியப் பதிப்புகளில் ஆர்வம் காட்டாத சமயத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை மூன்றதிகாரங்களையும் பதிப்பித்து வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள்

சி.வை.தா.வின் பதிப்பிற்குப் (1892) பிறகு 23ஆண்டுகள் கழித்துத்தான் தொல்காப்பியத்திற்குப் பழைய உரைகளோடு கூடிய பதிப்புகள் வெளிவருகின்றன. அரசஞ்சண்முகனாரின் பாயிர விருத்தி, அதற்கு வெளிவந்த பாயிரவிருத்தி மறுப்பு தவிர வேறு எவையும் இக்காலத்தில் வெளியிடப்படவில்லை.

1916, 1917ஆம் ஆண்டுகளில் பவானந்தம் பிள்ளை சி.வை.தா. பதிப்பித்த பொருளதிகாரத்தை (1885) நான்கு பாகங்களாக வெளியிடுகின்றார். பேராசிரியரின் பின்னான்கு இயல்களை நச்சினார்க்கினியர் உரை என்று பதிப்பித்த சி.வை.தா.வின் பதிப்பிலிருந்து இப்பதிப்பு மாறுபடுகிறது. முதல் இரண்டு பாகங்கள் நச்சினார்க்கினியரின் முன் ஐந்தியல்கள், பின்னிரண்டு பாகங்கள் பேராசிரியரின் பின்னான்கு இயல்கள். பேராசிரியர் உரை முதன்முதலாக அவரது பெயரால் இப்பதிப்பிலேயே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பதிப்பு முறைமைகளோடு பதிப்பிக்கப்பட்ட (நூற்பா பாடவேறுபாடுகள், அடிக்குறிப்புகள், உரைப்பாட வேறுபாடுகள், மேற்கோள் பாடல்கள் பாடவேறுபாடுகள், பாடல் எண்கள் முதல் முறையாக) இப்பதிப்பில் ஒருபாகத்தில் கூட முன்னுரை எழுதப்படாததால் இப்பதிப்பு எந்தெந்தச் சுவடிகளின் அடிப்படையில் பதிப்பிக்கப்பட்டது என்பதை அறியமுடியவில்லை.

இப்பதிப்பைத் தொடர்ந்து ரா.ராகவையங்கார்  1917ஆம் ஆண்டு நச்சினார்க்கினியர் உரையில் கிடைத்த செய்யுளியலை (பிற மூன்றியல்களுக்கான உரை இன்றுவரை கிடைக்கவில்லை) மட்டும் பதிப்பிக்கிறார். அதுவரை பதிப்பிக்கப்படாத இளம்பூரணர் செய்யுளியல் உரையை ஆங்காங்கே இப்பதிப்பில் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

சங்க இலக்கியங்கள் பதிப்பானதற்குப் பின் தொல்காப்பியப் பதிப்புகள்

1887ஆம் ஆண்டு கலித்தொகைப் பதிப்பில் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு 1918ஆம் ஆண்டு நிறைவை அடைகிறது. இக்காலகட்டம் வரை தொல்காப்பியப் பதிப்பில் ஒரு தேக்கநிலை இருந்தது. இதற்குப் பிறகுதான் தொல்காப்பியத்திற்கு ஏராளமான பதிப்புகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கநூல் முதலியவற்றை ஆராய்ந்து பண்டைத்தமிழ் மக்களின் வழக்க ஒழுக்கங்களை உண்மையுற அறிதல் வேண்டும், என்னும் அவா அறிஞர் உள்ளத்தில் தோன்றி, அதன் பயனாக இந்நாளில் சிற்சில ஆராய்ச்சி நூல்கள் தோன்றுவன ஆயின. ஆகவே தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் பத்துப்பாட்டு முதலிய இலக்கியங்களையும் படித்துத் தேர்தல் வேண்டும் என்னும் நோக்கம் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிளைத்திருக்கின்றது (கா.நமச்சிவாய முதலியார், தொல்காப்பிய மூலம், 1922)

சங்க இலக்கியங்கள் முழுவதும் அச்சிடப்பட்டதால் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பதிப்பிப்பதில் பதிப்பாசிரியர்களுக்கு இருந்த சிக்கல் நீங்கியது. இதனால் 1920ஆம் ஆண்டுத்x தொடங்கி எண்ணிக்கையிலும், பதிப்பு முறையிலும் பல்வேறு மாற்றங்கள் தொல்காப்பியப் பதிப்புகளில் நிகழத் தொடங்கின.

1920 – 1940வரை வெளிவந்த பதிப்புகள்

இக்காலகட்டத்தில் 25 பதிப்புகள் வெளிவந்தன. இவற்றில் எல்லா வகையான பதிப்புகளும் அடங்கும். தொல்காப்பியத்திற்குச் சிறந்த மூலப்பதிப்புகள் (புன்னைவனநாத முதலியார், கா.நமச்சிவாய முதலியார்) இக்காலகட்டத்திலேயே வெளிவந்தன. நூற்பாவிற்குத் தலைப்புகள் இம் மூலப்பதிப்புகளிலேயே முதன்முறையாக இடம்பெற்றன. நூற்பா எண்ணிக்கைகள் வரையறை செய்யப்பட்டன. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் இக்காலத்திலேயே தம் தொல்காப்பியப் பதிப்புப் (தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம்  சொல்லதிகாரம் சேனாவரையர் உரை) பணியைத் தொடங்கியது.

தொல்காப்பியச் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை (1927), தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை (1929), தொல்காப்பியப் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை (1921 – 1935) ஆகியவை முதன்முதலாக இக்காலத்திலேயே சுவடிகளிலிருந்து அச்சிலேற்றப்பட்டன. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியால் புத்துரை எழுதப்பட்டதும் இக்காலகட்டமே.

கா.நமச்சிவாயமுதலியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, எஸ்.கனகசபாபதிப்பிள்ளை வையாபுரிப்பிள்ளை, வே.துரைசாமி ஐயர், ம.நா.சோமசுந்தரம்பிள்ளை, ரா.வேங்கடாசலம், தி.த.கனகசுந்தரம் பிள்ளை, நா.பொன்னையா, சி.கணேசையர் ஆகியோர் இக்காலத்தில் குறிப்பிடத்தக்க பதிப்பாசிரியர்கள்.

தொல்காப்பியத்திற்கு முன்னரே வெளிவந்த பல பதிப்புகள் இக்காலத்தில் பலநிலைகளில் செழுமை பெற்றன.       பல்வேறு சுவடிகளின் வழியாகப் பாடங்கள் திருத்தங்கள் பெறல், முன் பின்னான இணைப்புகள் பலவற்றைப் பெறல், அடிக்குறிப்புகள், விளக்கங்கள் இடம்பெறல், மேற்கோள் பாடல்களின் விவரங்களை அளித்தல் முதலானவை ஆகும். சி.வை. தாமோதரம்பிள்ளைக்குப் பிறகு இலங்கையிலிருந்து சி.கணேசையரால் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியமும், தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையமும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுச் செம்மைப்படுத்தப்பட்டது இக்காலத்திலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுத முற்பட்டு இளம்பூரணர் உரையைப் படித்தபின் அம்முயற்சியைக் கைவிட்டு அதைப் பதிப்பிக்க முற்பட்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணத்தையும் தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணத்தையும் பதிப்பித்து வெளியிடுகின்றார். இப்பதிப்பை வெளிக்கொணர வையாபுரிப் பிள்ளையின்  உதவியை நாடுவதோடு அவரின் உழைப்பையும் வெளிப்படையாகப் பதிவுசெய்கின்றார்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் இளம்பூரணத்திற்கு ஒரே ஒரு ஏடு  மட்டுமே இருந்தது. அவ்வேட்டில் சில நூற்பாக்களுக்கு இளம்பூரணர் உரை இல்லை, வ.உ.சி. அவர்கள் அவ்விடங்களில் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி உரை எழுதிச் சேர்க்கின்றார். இதை வேறுபடுத்திக்காட்ட அவ்விடங்கள் பகர அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருந்தன. பின்னால் பதிப்பித்தவர்கள் அந்தப் பகர அடைப்புக்குறிகளை நீக்கிவிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது

இக்காலகட்டத்தில் வெளிவந்த அனைத்துப் பதிப்புகளிலும் விரிவாகவோ, சுருக்கமாகவோ பதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன.

 

 

1940 -1970வரை வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகள்

இக்காலகட்டத்தில் 49 பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றில் எல்லா வகையான பதிப்புகளும் (மூலப்பதிப்புகள், பழைய உரைப் பதிப்புகள், புத்துரைப் பதிப்புகள், திருத்தப் பதிப்புகள், ஒப்பீட்டுப் பதிப்புகள், மொழிபெயர்ப்புப் பதிப்புகள்) அடங்கும்.

இக்காலகட்டத்தில் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஏராளமான பதிப்புகளை வெளியிட்டது. தொல்காப்பியத்தைப் பரவலாகக் கிடைக்கச் செய்ததில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியத்திற்கு அதுவரை வெளிவராத கல்லாடனார், பெயரறியப்படாத உரைகாரர் பதிப்புகள் (1964) இக்காலகட்டத்தில் வெளிவந்திருப்பது சுட்டத்தக்கது.

மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை, சி.கணேசையர், கு.சுந்தரமூர்த்தி, இராம.கோவிந்தசாமிப்பிள்ளை, அடிகளாசிரியர் ஆகியோர் இக்காலகட்டப் பதிப்பாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மர்ரே வெளியிட்ட மூலப்பதிப்பு (1960), தொல்காப்பியச் சொல்லதிகாரம் உரைக்கோவை ஆகியவை தனித்து அடையாளப்படுத்தப்பட வேண்டிய பதிப்புகள். விரிவான ஆராய்ச்சி முன்னுரை, உரையாசிரியர்கள் வரலாறு, பொருளடைவுகள், பதிப்புகளை உருவாக்குவதில் செய்நேர்த்தி, பல்வேறு உரைகளை ஒப்பிட்டுக்காட்டல் முதலானவை இக்கால கட்டத்தின் பதிப்பு வளர்ச்சிகள்.

1970முதல் இன்று வரை வெளிவந்த பதிப்புகள்

இக்காலகட்டத்தில் எண்ணிலடங்காப் பதிப்புகள் வெளிவந்தன. உரைவளப் பதிப்புகள் இக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவந்தன. உரைவளப் பதிப்புகளை வெளியிட்டதில் கல்வி நிறுவனங்களின் (உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை காமராசர் பல்கலைகழகம்) பங்களிப்பு அளப்பரியது.

தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை தொல்காப்பியப் பதிப்புகளை வெளியிட்ட கல்விநிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், அடிகளாசிரியர், ஆ.சிவலிங்கனார், க.வெள்ளைவாரணனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

திராவிட மொழியியற் கழகம் 1996இல் வெளியிட்ட தொல்காப்பிய  மூலப்பதிப்பு அதுவரை கிடைத்த எல்லாத் தொல்காப்பியச் சுவடிகளையும், தொல்காப்பியப் பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்ட பதிப்பாக உள்ளது.

சுவடிகளிலிருந்து பார்த்துப் பதிப்பிக்கப்படும் முறை குறைந்து உரைகளுக்கான விளக்கப் பதிப்புகளே இக்காலத்தில் அதிகம் வெளிவந்தன. பெரும்பாலும் கல்வி நிறுவனங்களை மையமிட்டே ஏராளமான பதிப்புகள் வெளியிடப்பட்டன. இதனால் பதிப்புகளின் தரம் என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. ஏராளமான புத்துரைகள் எழுதப்பட்டன.

 

தொல்காப்பியப் பதிப்புரைகள்

1885ஆம் ஆண்டு தொடங்கி தொல்காப்பியப் பதிப்புகளில் இடம்பெற்றுள்ள பதிப்பு முகவுரைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் பல்வேறு செய்திகளையும் படிநிலை வளர்ச்சிகளையும் அறியமுடிகின்றது. தொல்காப்பியப் பதிப்பின் வளர்ச்சியையும் ஆய்வின் வளர்ச்சியையும் இந்தப் பதிப்புரைகளே முன்னிலைப்படுத்தி நிற்கின்றன.

 • அகத்தியர் – தொல்காப்பியர் கதை.
 • தொல்காப்பியர் சமயம் மற்றும் காலம்.
 • தொல்காப்பிய நூலின் அமைப்பு முறை.
 • தொல்காப்பிய உரையாசிரியர்கள்.
 • பதிப்புகள் உருவானதன் சூழல்.
 • அவற்றை பதிப்பிக்கப் பதிப்பாசிரியர்கள் மேற்கொண்ட செயல்பாடுகள்.
 • பதிப்பு உருவாக்கத்திற்குத் துணைநின்றோரின் உதவிகள்.
 • தமக்கு முன் வெளிவந்த பதிப்புகள்.
 • பதிப்பிற்குப் பயன்படுத்திய சுவடிகள் பற்றிய விவரங்கள்.

எனப் பலவகையான தரவுகளை அளிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றன.

1847 தொடங்கி 2005 வரை வெளிவந்த பதிப்புகளின் எண்ணிக்கை

 • தொல்காப்பியம் மூலம்             – எட்டுப் பதிப்புகள்
 • நச்சினார்க்கினியம் – எழுத்ததிகாரம் –  எட்டுப் பதிப்புகள்
 • சொல்லதிகாரம்             – ஐந்து பதிப்புகள்
 • பொருளதிகாரம்(முன் ஐந்தியல்கள்) –  எட்டுப் பதிப்புகள்,

செய்யுளியல் – இரண்டு

 • இளம்பூரணம், எழுத்ததிகாரம்                  – ஏழு பதிப்புகள்

சொல்லதிகாரம்                     – ஆறு பதிப்புகள்

பொருளதிகாரம்                                  – பத்துப் பதிப்புகள்

 • சேனாவரையம் சொல்லதிகாரம்                         – ஒன்பது பதிப்புகள்
 • தெய்வச்சிலையார் சொல்லதிகாரம்           – மூன்று பதிப்புகள்
 • கல்லாடம், பழைய உரை சொல்லதிகாரம்         – மூன்று பதிப்புகள்
 • பேராசிரியம் பொருளதிகாரம்           – ஏழு பதிப்புகள்

(பா. மதுகேஸ்வரனின் தொல்காப்பியப் பதிப்பு வரலாறு நூலை அடிப்படையாக வைத்தே இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது)

தொல்காப்பியத்திற்குப் பதிப்புகள் அதிகம் தோன்றக் காரணம்

1847ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை தொல்காப்பியத்திற்கு ஏராளமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு பதிப்புகள் ஏராளமாக வெளிவருவதற்குப் பின்வரும் காரணங்களை வரிசைப்படுத்த முடியும்.

 • அளவில் பெரிய நூல், உரைகளோடு அச்சிடும்போது ஒவ்வோர் அதிகாரத்திற்கும் தனித்தனியே அச்சிடவேண்டிய காரணம்.
 • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகள் இருந்தமை.
 • பாயிர உரைகள் தோன்றி அவற்றிற்கான பதிப்புகளை வெளியிடல்.
 • மூலம் மட்டும் கொண்ட மூலபாடப் பதிப்புகள் தோன்றியமை.
 • புத்துரைகள் அதிகம் எழுதப்பட்டதால் அதற்கான பதிப்புகள் வெளிவந்தமை.
 • ஒப்பிட்டு ஆராயும் பதிப்புகள் அதிகம் எழுந்தமை.
 • மொழிபெயர்ப்புப் பதிப்புகள் அதிகம் வந்தமை.
 • கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றமை.
 • உரைவளப் பதிப்புகளைத் தனித்தனியே கொண்டுவந்தமை.

தொல்காப்பியப் பதிப்புகளில் பயன்பாட்டு நோக்கில் குறிப்பிடத்தக்க பதிப்புகள்

தொல்காப்பியத்திற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த பதிப்புகளின் பட்டியல் இங்குத் தரப்படவில்லை. அவை பயன்பாட்டுப் பதிப்புகள் என்பதைக் கடந்து வரலாற்றுநிலைப்பட்ட பதிப்புகளாகவே விளங்குகின்றன. எனவே இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்தபதிப்புகளில் தெரிவுசெய்யப்பட்ட பதிப்புகளே இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 1) (அகத்திணையியல், புறத்திணையியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை, 1916.
 2. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 2) (களவியல், கற்பியல், பொருளியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1916.
 3. தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 3) (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917.
 4. தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 4) (செய்யுளியல், மரபியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917.
 5. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை, ரா.ராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1917.
 6. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், பகுதி – க, (அகத்திணையியல், புறத்திணையியல்), நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920.
 7. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், அகத்திணையியலும், புறத்திணையியலும், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிரம்பூர், சென்னை, 1921.
 8. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், நமச்சிவாய முதலியார், ஸி. குமார சாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922.
 9. தொல்காப்பியம் மூலம் (கருத்து, பாடபேதக்குறிப்பு முதலியவற்றுடன்), பி.சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி.என்.சிதம்பரமுதலியார் அன் கோ. மதுரை, 1922.
 10. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, கழகப்பதிப்பு, 1923.
 11. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையோடும் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும், கழகப்பதிப்பு, 1923.
 12. தொல்காப்பியம் பொருளதிகாரம் (மூலம்), கா. நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924.
 13. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், 1927.
 14. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் பதவுரை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, அகஸ்தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், 1928.
 15. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, ரா.வேங்கடாசலம், கரந்தைத் தமிழ்ச்சங்கம்,1929.
 16. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (களவியல், கற்பியல், பொருளியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1933.
 17. தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் (நச்சினார்க்கினியர் உரை), இது எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப்பிரதியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு ம.நா.சோமசுந்தரம்பிள்ளை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை சாது அச்சுக்கூடம், 1934.
 18. தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம் பாகம் (பேராசிரியம்), இது வே.துரைசாமி ஐயரவர்களால் ஏட்டுப்பிரதியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து திருத்தப்பட்டு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை சாது அச்சுக் கூடம், 1935.
 19. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1935.
 20. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் முழுவதும் வ.உ.சிதம்பரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1935.
 21. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1937.
 22. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1938.
 23. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, பவானந்தர் கழகம், சென்னை, 1941.
 24. தொல்காப்பியம் மூலம், தி.சு.பாலசுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புகள், கழகம், 1943.
 25. தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1943.
 26. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, புலவர் ஞா.தேவநேயப் பாவாணர் அடிக்குறிப்புடன், கழகம், 1944.
 27. தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1948.
 28. தொல்காப்பியம் (மூலம்) பதிப்பாசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பரிசோதித்து வெளியிடப்பெற்றது, எஸ்.ராஜம், மர்ரே வெளியீடு, சென்னை, 1960.
 29. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பித்தவர் இராம.கோவிந்தசாமி பிள்ளை, தஞ்சை சரசுவதி மகால் நிர்வாகக் குழுவினருக்காக எஸ்.கோபாலனால் வெளியிடப்பட்டது.
 30. தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை முதற்பாகம் (கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு) ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ.சுப்பிர மணியன், அருள் அச்சகம், பாளையங்கோட்டை, 1963.
 31. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், கு.சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கவுரையுடன், கழகம், 1964.
 32. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, ஆராய்ந்து விளக்கக்குறிப்புகளுடன், அச்சிட்டார், அடிகளாசிரியர், கும்பகோணம் காவேரி கலர் அச்சுக்கூடம், 1969.
 33. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் (விளக்கவுரையுடன்), கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.
 34. தொல்காப்பியம் சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்நாடு அரசு, 1971.
 35. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1981.
 36. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.
 37. தொல்காப்பியம் பொருளதிகாரம் பிற்பகுதி (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்), பேராசிரியர் உரை, (குறிப்புரையுடன்) கு. சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1985.
 38. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்உரை, தொகுதி 1,2, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986.
 39. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1988.
 40. தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.

இத்தெரிவு செய்யப்பட்ட பட்டியல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட உரைகளின் பதிப்புகள், பெரும்பாலும் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், பதிப்புகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், ஆராய்ச்சிப் பதிப்புகள், முதல் பதிப்புகள் என்ற பல்வேறு அடிப்படைகளில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்திற்கு வெளிவந்த புத்துரைப் பதிப்புகள் (அரசஞ் சண்முகனார், பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி, நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடராஜூலு ரெட்டியார், புலியூர்க் கேசிகன், புலவர் குழந்தை, ச.பாலசுந்தரனார் என இன்னும் பலர் செய்த உரைகளோடு கூடிய பதிப்புகள்), உரைவளப் பதிப்புகள்   (மு.அருணாசலம் பிள்ளை, ஆ.சிவலிங்கனார், க.வெள்ளை வாரணன், கே.பகவதி), ஒப்பீட்டுப் பதிப்புகள் (க.வெள்ளைவாரணன், ச.வே.சுப்பிரமணியன், க.ப. அறவாணன், ரா.சீனிவாசன்) ஆங்கில மொழிபெயர்ப்புகள், மறுபதிப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் இங்கு அளிக்கப்படவில்லை.

இப்பதிப்புகளைப் பின்வருமாறும் வகைப்படுத்தலாம்.

மூலப்பதிப்பு

மர்ரே பதிப்பு (1960), திராவிட மொழியியற் கழகம் வெளியிட்ட (1996) பதிப்பு.

உரைப்பதிப்புகள்

நச்சினார்க்கினியர்:

எழுத்ததிகாரம் – சி.கணேசையர் (1937), கு.சுந்தரமூர்த்தி (1965), இராம.கோவிந்தசாமிப்பிள்ளை (1967)

சொல்லதிகாரம் – மே.வீ.வே. (1941), கு.சுந்தரமூர்த்தி (1952), இராம.கோவிந்தசாமிப் பிள்ளை (1962)

பொருளதிகாரம் (முன் ஐந்தியல்கள்) –  எஸ்.கனகசபாபதிப்பிள்ளை (1934), சி.கணேசையர் (1948), செய்யுளியல் – ரா.ராகவையங்கார் (1917)

பேராசிரியர்:

பொருளதிகாரம் (பின்னான்கு இயல்கள்) – எஸ்.கனகசபாபதிப்பிள்ளை (1935), கணேசையர் (1943)

இளம்பூரணர்:

எழுத்ததிகாரம் – அடிகளாசிரியர் (1969), கு.சுந்தரமூர்த்தி (1969)

சொல்லதிகாரம் – கா.நமச்சிவாயமுதலியார், கு.சுந்தரமூர்த்தி( 1963), அடிகளாசிரியர் (1988)

பொருளதிகாரம் – வ.உ.சி.(1935), மு.சண்முகம்பிள்ளை (மறுபதிப்பு 1995, 1996)

சேனாவரையர் :

சொல்லதிகாரம் – சி.கணேசையர் (1938), கு.சுந்தரமூர்த்தி(1966)

தெய்வச்சிலையார்:

சொல்லதிகாரம் – கு.சுந்தரமூர்த்தி ( 1963)

கல்லாடம், பெயரறியப்படாத உரை :

சொல்லதிகாரம் – தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ( 1971)

தொல்காப்பியத்திற்கு வெளிவந்த பதிப்புகள் குறித்து விரிவான விவரங்களை அறிந்துகொள்ள பின்வரும் நூல்கள், கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கும்,

 1. சண்முகம்பிள்ளை, மு., தொல்காப்பியப் பதிப்புகள், (பக்.1-70), தமிழாய்வு தொகுதி-8, சென்னைப் பல்கலைக்கழகம், 1978.
 2. மெய்யப்பன், ச., தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பியச் சிந்தனைகள், அண்ணாமலை நகர், 1978, ப-ம்.
 3. கிருட்டிணமூர்த்தி, கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990.
 4. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1992.
 5. மதுகேசுவரன், பா., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008.
 6. தொல்காப்பியம், சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும், பதிப்பாசிரியர், ச.சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.

நிறைவாக

 • தொல்காப்பியப் பதிப்புகளை இன்றைய நிலையிலிருந்து நோக்கும்போது சில முடிவுகளைப் பெறமுடிகின்றது. 1847ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஏராளமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. இப்பதிப்புகளின் படிநிலை வளர்ச்சி என்பது பலநிலைகளில் அமைந்து காணப்படுகிறது.
 • தொடக்க காலங்களில் நூற்பாவும் உரையும் தனித்தனியே பிரிக்கப்படாமல், நூற்பா அமைப்பில் கூட தரப்படாமல், முகவுரை எழுதப்படாமல், முன்பின் இணைப்புகள் தரப்படாமல், அடிக்குறிப்புகள், பாட வேறுபாடுகள், விளக்கக்குறிப்புகள் தரப்படாமல், மேற்கோள் பாடல்கள், பாடல் அமைப்பில் இல்லாமல், நூற்பாவிற்குத் தலைப்புகள் தரப்படாமல் இருந்த தொல்காப்பியப் பதிப்புகள் படிப்படியாகப் பல்வேறு தன்மைகளை உள்ளடக்கி வெளிவரத் தொடங்கின.
 • ஒவ்வொரு பழைய உரைக்கும் வெவ்வேறு பதிப்பாசிரியர்களால் பல பதிப்புகள் வெளியிடப்பட்டன. இப்பதிப்புகள் ஏதோ ஒரு வகையில் செம்மைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தன. காலம் செல்லச் செல்ல பதிப்புகள் ஒருவித வளர்ச்சியை நோக்கி நகராமல் சில தேக்க நிலைகளை அடைந்தன.
 • தொடக்க காலத்தில் வெளிவந்த பதிப்புகள் இன்று வரலாற்று நிலைப்பட்ட பதிப்புகளாக உள்ளனவே தவிர அவை பயன்பாட்டுப் பதிப்புகளாக இல்லை. இதனாலேயே தொல்காப்பியத்திற்கு ஏராளமான பதிப்புகள் வெளிவந்தும் அவற்றில் எந்தெந்த உரையாசிரியர் உரைக்கு எந்தெந்தப் பதிப்புகளைப் பயன்படுத்தலாம் என்பதில் ஆய்வாளர்களிடையே பல முரண்கள் காணப்படுகின்றன.
 • சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை தொடக்க காலங்களில் வெளிவந்த உ.வே.சாமிநாதையர் உள்ளிட்ட பதிப்பாசிரியர்களின் பதிப்புகளில் பெரும்பாலானவை இன்றைய நிலையிலும் பயன்பாட்டுப் பதிப்புக்களாக உள்ளன. உ.வே.சா. அவர்கள் தாம் வெளியிட்ட பதிப்புகளைக் கிடைக்கின்ற சுவடிகளின் அடிப்படையில் திரும்பத் திரும்பத் திருத்தம் செய்துகொண்டே இருந்தார். விரிவான முகவுரை, பயன்படுத்தப்பட்ட சுவடிகளின் விரிவான பட்டியல், அந்தப் பாடல்கள் பிற உரைகளில் பதிவுபெற்றுள்ள இடங்கள், அடிக்குறிப்புகள், பாடவேறுபாடுகள் எனப் பல்நிலைப்பட்ட தகவல்களோடு அவரின் பதிப்பு அமைந்ததால் இன்றும் ஆய்வாளர்கள் உ.வே.சா.வின் பதிப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
 • ஆனால் தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தை அச்சில் கொண்டு வரவேண்டும் என்று உழைப்பைச் செலுத்தினார்களே தவிர அப்பதிப்பு எவ்வெவ்வகையில் எல்லாம் செம்மைப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை என்பதைச் சிலரின் பதிப்புகள் முன்வைக்கின்றன.
 • தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களுள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் உ.வே.சா. போன்று தாம் பதிப்பித்த பதிப்பை மீண்டும் மீண்டும் செம்மைப்படுத்திப் பார்க்கவில்லை. விரிவான முகவுரைகள் கூட அவர்களது பதிப்பில் இடம்பெறவில்லை. பல முகவுரைகள் மிகச் சுருக்கமாகவும், கடமைக்காக எழுதப்பட்டவையாகவுமே உள்ளன. தாம் பதிப்பிக்கப் பயன்படுத்திய சுவடிகளின் விவரங்கள், அவை யார்? யாரிடமிருந்து, எந்தெந்த? ஊரிலிருந்து பெறப்பட்டன என்ற எந்த விவரங்களையும் (ஒரு சிலரைத் தவிர) அளிக்கவில்லை.
 • இவ்வாறு தொல்காப்பியப் பதிப்புகளின் நிலை இருந்தாலும் இன்றைய நிலையில் பயன்பாட்டுக்கு உரிய பதிப்புகளாக எஸ்.கனகசபாபதிப் பிள்ளை, மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை, சி.கணேசையர், அடிகளாசிரியர், கு.சுந்தரமூர்த்தி ஆகியோரின் உரைப்பதிப்புகளும், ஆ.சிவலிங்கனார், க.வெள்ளைவாரணனார் ஆகியோரின் உரைவளப் பதிப்புகளும் பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்ட மூலப்பதிப்பும் குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்றன. இப்பதிப்புகள் ஆய்வாளர்களின் ஆய்விற்குப் பயன்படத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தவிர்ந்த வேறு பல பதிப்புகள் கல்விநிறுவனங்களின் பாடத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பதிப்புகளாகவே உள்ளன.
 • ஒப்பீட்டு நோக்கில் பார்க்கும்போதுதான் தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களின் பதிப்புகளை இவ்வகையில் மதிப்பிட முடிகிறதே தவிர தனித்த நிலையில் நோக்கும் போது அவர்களின் பணி பாராட்டிற்குரியது. 1847 ஆம் ஆண்டு ஒரு இலக்கணப் பனுவல் என்ற தன்மையில் பதிப்பிக்கப்பட்ட தொல்காப்பியம் இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழரின் அடையாளமாக, தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இங்கு மாற்றம்பெற்றது. இவ்விடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை இங்குப் பலர் உருவாக்கியிருந்த போதிலும் அவர்களில் முதன்மை இடம்பெறக் கூடியவர்களாகப் பதிப்பாசிரியர்களே உள்ளனர் என்பதை இத்தருணத்தில் சுட்டிச்சொல்லியே ஆக வேண்டும்.

முனைவர் பா. ஜெய்கணேஷ் (இளமாறன்)

தமிழ்த் துறைத்தலைவர்,

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்

எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகம்,

காட்டங்குளத்தூர்

ilamarantamil@gmail.com