இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிறிகும் மிகமிகத் தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாகும். எட்டுத்தொகை  நூல்களெல்லான்றாகிய புறநானூற்றிற் காலத்தால் மிகப் பழைய பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொற்பொருளமைதியினை ஆராயுங்கால் இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் சங்கத் தொகை நூல்களெல்லாவற்றிறிகும் காலத்தால் முற்பட்டதென்பது நன்கு புலனாம்.

கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவர்களுள் முதற்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. செங்குட்டுவனென்னும் சேரமன்னன், கண்ணகியார்க்குத் திருவுருவமைத்துக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலஞ் செய்த நாளில், இலங்கை வேந்தனாகிய கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியாரை வழிபட்டு வரம்பெற்றுச் சென்றான் எனச் செங்குட்டுவற்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்ற் குறிப்பிட்டுள்ளார். எனவே இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது தெளிவாதல் காணலாம் (திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (கி.பி.250-600) பக்கம் 2, 3). இளங்கோவடிகளும், அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களும் தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அவ்வாறே எடுத்தாண்டுள்ளார்கள். ஆகவே திருக்குறளாசிரியர் திருவள்ளுவனார் காலம் கி.மு. முதல் நூற்றாண்டெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

தொல்காப்பியத்தை யடியொற்றியது திருக்குறள்

தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூலினை வரம்பாகக் கொண்டே ஆசிரியர்  திருவள்ளுவனார் உலகப் பொதுமறையாகிய திருக்குறளை இயற்றியுள்ளார். “அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருள்“ எனவருந் தொல்காப்பிய சூத்திரம், அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றுமே உலகிற் கருத்தக்க பொருள்கள் என வரையறுத்துக் கூறுகின்றது. இவ்வரையறையினை யடிப்படையாக்க் கொண்டே திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் என முப்பாலாகத் திருக்குறளை வகுத்தமைத்துள்ளார். அறத்தினாற் பொருள் செய்து அப்பொருளால் இன்பம் நுகர்தலே இவ்வுலக வாழ்வின் பயன் என்பது பண்டைத் தமிழாசிரியர் கொள்கையாகும். இம் முப்பொருளின் வேறாக வீடு என்பதொரு பொருள் நான்காவதாக வுளதெனக் கொண்டு புருஷார்த்தம் நான்கென்பர் வடநூலார். அவ்வடமொழி மரபினைப் பின்பற்றாது அற முதலாகிய மும்முதற் பொருளென்னும் தொல்காப்பிய மரபே திருவள்ளுவராற் போற்றி ஏற்றுக்கொள்ளப் பெற்றதாகும்.

தொல்காப்பியர் வாய்மொழியினை அவ்வாறே எடுத்தாண்ட பகுதிகளும் திருக்குறளிற் காணப்படுகின்றன. ’எழுத்தெனப்படுப அகரமுதல் னகரவிறுவாய்’ எனத் தொல்காப்பியனார் தமது நூலைத் தொடங்கியுள்ளார். அகரமுதல வெழுத்தெல்லாம் எனத் தொடங்கிக் கூடி முயங்கப்பெறின் என னகர விறுவாய்த் திருக்குறளை முடித்தார் திருவள்ளுவர். நிலந்தீ நீர்வளி விசும்போடைந்துங் கலந்த மயக்கம் உலகம் என்றார் தொல்காப்பியர். சுவையொளி யுறோசை நாற்றமென் றைந்தின், வகைதெரிவான் கட்டேயுலகு என்றார் திருவள்ளுவர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப என வருந் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி யமைற்த்தே நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி  காட்டிவிடும் என வருந் திருக்குறளாகும். பெருங்காஞ்சி யென்னுந் துறையினை விளக்க்க் கருதிய  தொல்காப்பியனார், மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என அதன் இயல்பினைப் புலப்படுத்தியுள்ளார். மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சி என இத்தொடருக்கு இளம்புரணர் பொருள் கூறுவர். ஒருவராலும் விலக்குதற்கரிய கூற்றம் வருமென அறிவுறுத்தலைப் பெருமை யென்ற சொல்லாற் குறிப்பிடுதல் தொல்காப்பியர் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக்கருத்தினை நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும், பெருமை யுடைத்திவ் வுலகு என்ற திருக்குறளால் திருவள்ளுவர் விளக்குகின்றார். இந்நிலையாமையே உலகின் மிக்கதாதல் பற்றிப் பெருமை யெனப்பட்டது என்பர் பரிமேழகர். மாற்றருங் கூற்ற முண்மை தெரிந்தோர் பெருமிதமின்றி யடங்கியொழுகுவராதலின் அவ்வொழுக்க முடையார் வாய்மொழியைப் பெருமை யென்றா ரெனினும் அமையும். மாற்றருங்கூற்றம் என்னுந் தொல்காப்பியத் தொடர் பொருளைக் கூற்றங் குதித்தலுங் கைகூடும், என்ற தொடரில் எதிர்மறையும்மையால் திருவள்ளுவர் குறிப்பாக உணரவைத்தமை ஈண்டு நினைத்தற் குரியதாம். அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி எனவருந் தொல்காப்பியத் தொடர் பொருளை அருளென்னும் அன்பீன் குழவி எனவருந் திருக்குறள் இனிது புலப்படுத்துவதாகும். தான் கூற வெடுத்துக்கொண்ட பொருளைப் பிறர் உணரும் வாயிலறிந்து உணர்த்தவல்லனாயின் இச்சொல் இப்பொருளையுடையது எனத் தான் கூறக் கருதிய பொருள் திரிபின்றி இனிது விளங்கும் என்பதனை,

பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின்

என்ற சூத்திரத்திலும், சொற்பொருளை உணர்த்தும் கேட்போரது உணர்ச்சிவாயில் உணர்வினைப் பற்றுக்கோடாகவுடையது என்பதனை உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே என்ற சூத்திரத்தாலும் தொல்காப்பியர் விளக்குவார். தான் கருதியன அரிய பொருளாயினும் பிறர்க்கு எளிதிற் புலனாக எமுத்துரைக்கும் ஆற்றலும், பிறர் கூறுவன உணர்தற்கரியனவாயினும் அவற்றை எளியவாகக் கேட்டுணரும் ஆற்றலும் அறிவின் இரு திறன்களென்பது, மேற்கூறிய இரு சூத்திரங்களின் கருத்தாகும். இவ்விரு சூத்திரங்களின் கருத்தினையும் ஆசிரியர் திருவள்ளுவனார் பொருளவாகச் செலச்சொல்லித்தான் பிறர்வாய், நுண் பொருள் காண்பதறிவு என அறிவினது இலக்கணம் கூறும் வழி எடுத்தாண்டுள்ளார். இதுகாறும் எடுத்துக்காட்டியவாற்றால் ஆசிரியர் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள், தொல் காப்பியக் கருத்துக்களையும் சொற்றொடர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றமை நன்கு புலனாதல் காணலாம்.

(தொடரும்…)

க.வெள்ளைவாரணனார்

மேனாள் தலைவர்

தமிழ்த் துறை

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்